தாய் தின்ற மண்ணே !!

Elambarithi Kalyanakuma

ஆழ்ந்துப் பார்த்தால் சோழர்கள் என்கிற ஒற்றைச் செய்தி இல்லாமல் இரண்டு படத்திற்கும் எந்த ஒற்றுமையும் இல்லை.

‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் ஒரு கமெர்ஷியல் படைப்பாக ஏற்படுத்திய பல உரையாடல்களில் முக்கியமான ஓரிடத்தை ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படமும் பெற்றிருந்தது. சோழர்களை மையப்படுத்திய கதைக்களம் தொடங்கி, இசை, பாடல்கள் என அனைத்திலும் இரண்டு படங்களுக்குமான ஒப்பீடு நடந்தது.

‘பொன்னியின் செல்வன்’ கதை ஒரு முற்றிலுமாக வரலாற்று ஆவணம் இல்லையென்றாலும் வரலாற்றுக்கு அருகில் நிற்கும் ஒரு புனைவு. ஆனால் ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படம் மொத்தமும் சாத்தியமே இல்லாத ஒரு கற்பனை பெட்டகம்.

தரவுகளில் சோழ ஆட்சியின் கடைசி ஆண்டாக 1279ஆம் ஆண்டு இருக்கிறது. படத்தில் வரும் கடைசி சோழ அரசனின் காலமும் 1279ஆம் ஆண்டு என்று சொல்லப்பட்டிருக்கும். சோழ இளவரசனை பாண்டியர்களிடம் இருந்து காப்பாற்ற தஞ்சையை விட்டு அயல்தேசம் தப்பிக்க வைக்கும் சோழ தேசத்தின் கடைசி அரசன் அந்த இளவரசனுக்கு துணையாக மக்களையும் அனுப்பி வைக்கிறான்.

.தஞ்சையில் நிலைமை சீரான பின்னர் தூதுவன் வருவான், அவனோடு தஞ்சை திரும்புங்கள் என்பது அவர்களுக்கான அரசன் வாக்கு.

“தூதுவன் வரும்வரை காத்திருங்கள்;
எத்தனை ஆண்டுகள் ஆயினும் சரி.”

காலம் சுழல்கிறது. உலகம் நாகரிக வளர்ச்சியில் எண்ணற்ற மாறுதல்களைக் காண்கிறது.

புலம்பெயர்ந்த சோழ மக்கள் மட்டும் அவர்களது பண்பாட்டின் தளத்திலிருந்து பிறழாது வாழ்ந்து வருகிறார்கள்.

தூதுவனுக்காகக் காத்திருக்கும் சோழத்தின் இன்றைய குடிக்கு ஒரு அரசன் இருக்கிறான்; அரசவையும் இருக்கிறது;

கேட்பாரில்லாத ஒரு நாடும் இருக்கிறது.

இவையோடு பசியும் பஞ்சமும்.

எது இல்லையென்றாலும் அவர்களுக்கு இருக்கும் ஒரே பலம் தூதுவன் வருவான், தாய் நிலமான தஞ்சை கொண்டு செல்வான் என்கிற நம்பிக்கை மட்டுமே.

அந்த நம்பிக்கையின் அடியொற்றி அவர்கள் எண்ணூறு ஆண்டுகள் கடந்து வந்துவிட்டார்கள்.

ஒரு நாள் பாண்டிய பேரரசின் வாரிசு ஒன்று தூதுவனாக வேடம் பூண்டு மன்னனை அடைகிறது. நூற்றாண்டுகள் சேமித்த வஞ்சத்தின் விளைநிலம் அந்த வருகை.

அது தெரியாத சோழ அரசன் அந்தப் பெண்ணை தூது வந்தவள் என்று நினைக்கிறான்.

அவள் மன்னனைப் பார்த்து ‘பாடுவீர்களா’ என்று கேட்கிறாள்.

//பாடுவீரோ

தேவரே!

பரணி, கலம்பகம், உலா.

ஒன்றாகிலும்.

சரி. ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சமாவது அறிவீரா? //

நிஜமான தூதுவனாக இருந்தால் இந்த கேள்வி அரசனை நோக்கி எழுந்திருக்காது, ஆனால் வந்திருப்பவள் பாண்டிய வாரிசு ஆயிற்றே.

நாடுவிட்டு ஓடி வந்து இப்படி வாழும் சோழனுக்கு தமிழ் தெரிந்திருக்கிறதா என்று அவள் செய்யும் பகடியே அந்த கேள்வி.

போரிலே ஆயிரம் யானைகளைக் கொன்று வெற்றிபெறும் மன்னனுக்குப் பாடப்பெறுவது பரணி இலக்கியம் ஆகும்.

அரசன் வீதி உலா வருவதை போற்றி புகழ்ந்து பாடுவது உலா இலக்கியம் ஆகும்.

இந்த இரண்டுமே இந்த சோழ அரசனுக்கு வாய்க்காத ஒன்று.

தெரிந்தும் அந்தக் கேள்வி கேட்கப்படுகிறது.

கலம்பகம் என்பதும் செய்யுள் இலக்கியமே.

நான்காவதாக அவள் கேட்டது ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சமாவது தெரியுமா என்பது ?

ஒரு வினைச்சொல் அதன் கடைசி எழுத்து இல்லாமல் வந்து அதனை அடுத்து வரும் பெயர்ச் சொல்லுக்கு விளக்கம் தருவதாக இருந்தால் அது ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் எனப்படும்.

எடுத்துக்காட்டு : -ஓயா கடல் (ஓயாத கடல் என்பது ஓயா கடல் என்று வழங்கப்படுகிறது)

இது கூட தெரியாத சோழ அரசனாக இருப்பான் என்பது அவளது கணக்கு,

இதற்கெல்லாம் விடையாக பாடலொன்றைப் பாடுகிறான் சோழ அரசன்.

அந்தப் பாடலில் ஒரு சுய புலம்பல், நம்பிக்கை, ஆறுதல் எல்லாமே இருக்கிறது.

பாடலைத் தொடங்குவதற்கு முன் இந்தப் பாடல் ஏன் எதற்கு என்பதை ஒரு தொகையறாவாகப் பாடுகிறான்.

“தாய் தின்ற மண்ணே
இது பிள்ளையின் கதறல்
ஒரு பேரரசன் புலம்பல்……”

தாய் மண்ணே என்று பாடாமல் தாய் தின்ற மண்ணே எனும்போது நாடற்றவனின் சோகம் தெரிகிறது.

தாயில்லாத பிள்ளையாக இந்த கதறல் தெரிந்தாலும் அதாவது தாய்நாடு இல்லாத ஒரு மனிதனின் கதறலாக இருந்தாலும் இது ஒரு அரசனின் புலம்பல்.

‘பொன்னி நதி பாக்கணுமே’ பாடலில் சோழநாட்டின் அறிமுகம் கொண்ட வரிகளில் சோழத்தின் பெருமைகளை சொல்லியிருப்பார்கள்.

அவை விளைநிலம், கலை, வீரம், தமிழ் போன்றவை.

“நீர் சத்தம் கேட்டதுமே நெல் பூத்து நிக்கும்
உளி சத்தம் கேட்டதுமே கல் பூத்து நிக்கும்
பகை சத்தம் கேட்டதுமே வில் பூத்து நிக்கும்
சோழத்தின் பெருமை கூற சொல் பூத்து நிக்கும்”

இந்தப் பாடலில் இவையெல்லாம் இல்லையே என்கிற புலம்பல் சொல்லப்படுகிறது.

‘நெல்லாடிய நிலம் எங்கே,
சொல்லாடிய அவை எங்கே,
வில்லாடிய களம் எங்கே,
கல்லாடிய சிலை எங்கே’

சோழநாடு சோறுடைத்து என்பதற்கேற்ப நெற்களஞ்சியமாக இருந்த தஞ்சையை ஆண்ட மன்னர்களின் வாரிசுக்கு இன்று நிலம் இல்லை; சமயக்குரவர்களின் நூல்களை செல்லரிக்காமல் காத்த அரசனின் வாரிசுக்கு தமிழ் காண அவை இல்லை;

கலைகளை வளர்த்தெடுத்த மாமன்னர்கள் வழி வந்த மரபினருக்கு அந்த கலையின் தேவை சொல்ல வழி இல்லை;

களம் பல கண்டு உலகையே வென்றெடுத்த பேரரசு இன்று களம் கொள்ள வழியற்று கிடக்கிறது.

இதுவரை இழந்தவற்றைச் சொல்லி புலம்பிய அரசன் அடுத்த சரணத்தில் இன்றைய நிலையைச் சொல்லி பாடுகிறான்.

“கயல் விளையாடும் வயல்வெளி தேடி காய்ந்து கழிந்தன கண்கள்,
காவிரி மலரின் கடி மணம் தேடி கருகி முடிந்தது நாசி
சிலை வடிமேவும் உளி ஒலி தேடி திருகி விழுந்தன செவிகள்
ஊன் பொதி சோற்றின் தேன் சுவை கருதி ஒட்டி உலர்ந்தது நாவும்
புலிக்கொடி பொறித்த சோழ மாந்தர்கள் எலிக்கறி பொறிப்பதுவோ..ஓ..
காற்றைக் குடிக்கும் தாவரமாகி காலம் கழிப்பது..ஓ..
மண்டை ஓடுகள் மண்டிய நாட்டை மன்னன் ஆளுவதோ”

மனித உயிர்களின் தனித்துவம் உணர்ச்சிகள்.

உணர்ச்சிகளுக்கு கண், காது, மூக்கு, வாய், மெய் என்கிற ஐம்புலன்கள் இருக்கின்றன.

இந்த ஐம்புலன்களும் இன்று எவ்வாறு துயருறுகின்றன என்று சொல்லி அழுகிறான்.

கண்கள் : – மீன்கள் துள்ளி விளையாடிய வயல்வெளிகளைக் காணத்துடித்து அது நடக்காமல் காய்ந்து கிடக்கின்றன.

மூக்கு :- காவிரிக்கரை பூத்த பூக்களின் வாசனையை நுகர முடியாமல் கருகிவிட்டது.
நாக்கு :- நல்ல மாமிச உணவின் சுவை தேடி அது கிட்டாது உலர்ந்துவிட்டது.
காது :- சிலையெடுக்கும் உளிச்சத்தம் கேட்க வழியில்லாமல் வீழ்ந்துவிட்டன.

இவையனைத்தையும் கொண்டு உருவான உடலின் நிலை ?

புலிக்கொண்டி ஏந்தி புவியாண்ட இனம் எலிக்கறி தின்று பசியாறுகிறது. வெறும் காற்றைக்குடிக்கும் தாவரம் போல உணர்ச்சியற்று வீழ்ந்து கிடக்கிறது.

(தற்கால தஞ்சைத்தரணி மக்களும் எலிக்கறி தின்றார்கள் என்பது சோக வரலாறு)

இந்த மக்களின் முதல்வனான அழுகின்ற மன்னனின் நிலை ?

போரில் வென்ற எதிரிகளின் மண்டை ஓடுகளை எண்ணிய குலத்தின் வாரிசான மன்னன் பட்டினியால் மடிந்த தன் சொந்த மக்களின் மண்டை ஓடுகளை ஆள்கிறான்.

ஆக,

சோழப் பேரரசின் தற்போதைய நிலை ?

“நொறுங்கும் உடல்கள்
பிதுங்கும் உயிர்கள்,
அழுகும் நாடு
அழுகின்ற அரசன்”

அடுத்த சரணத்தில் தூதுவன் வந்திருப்பதாக நினைத்துக்கொண்டிருக்கும் அரசன் அந்தப் பெண்ணிடம் தங்களை தாய்நாடு கொண்டு செல்ல வேண்டுகோள் வைக்கிறான்.

அதற்கு முன்னர் அவனுக்கிருக்கும் சந்தேகத்தையும் தெரியப்படுத்துகிறான்.

“பழம் தின்னும் கிளியோ ?
பிணம் தின்னும் கழுகோ ?
தூதோ ?
முன் வினை தீதோ ?
களங்களும் அதிர களிறுகள் பிளிற ,
சோழம் அழைத்து போவாயோ”

தூதுவன் வரும்போது மாரி பெய்யும் என்பதே மூப்பரின் வாக்கு. ஆனால், இவளின் விஜயம் எந்தவொரு மழையையும் கொண்டு வரவில்லை. அது அரசனுக்கு சந்தேகத்தைத் தருகிறது.

நீ பழம் தின்னும் கிளியோ இல்லை பிணம் தின்னும் கழுகோ எனக்கு தெரியாது

உண்மையில் நீ தான் தூதோ இல்லை எங்கள் முன்னோர் செய்த கெடுவினையால் வந்த தீதோ எனக்கு தெரியாது

இருப்பினும் எங்களை களங்கள் அதிர யானைகள் பிளிற தாய்மண் கூட்டிச்செல்வாயா என்று இறைஞ்சுகிறான்.

“தங்கமே!
என்னை தாய்மண்ணில் சேர்த்தால், புரவிகள் போலே புரண்டிருப்போம்
ஆயிரம் ஆண்டுகள் சேர்த்த கண்ணீரை அருவிகள் போலே அழுதிருப்போம்”

நாடு சேர்ந்தால் அழுது தீர்ப்போம் என்கிறான். ஆயிரமாண்டுகளின் சேமிப்பல்லவா.

கடைசி சரணத்தில் விண்ணப்பம் வைத்த பிறகு அதன் மூலம் பிறக்கும் நம்பிக்கை கொண்டு தேற்றல் படலம்

தஞ்சை செல்லும்வரை தன்னுடன் இருக்கும் சிலவற்றை அழாதே என்று தேற்றுகிறான்.

“தமிழர் காணும் துயரம் கண்டு, தலையை சுற்றும் கோளே அழாதே,

என்றோ ஒருநாள் விடியும் என்றோ இரவை சுமக்கும் நாளே அழாதே..”.

கோள் என்றால் மேகம் என்று பொருள். தங்கள் துயர்கண்டு தலை சுற்றும் மேகத்தை அழாதே என்கிறான்.

இத்தனை ஆண்டுகள் விடியாத இரவை சுமந்துவந்த அவனது நாட்களை அழாதே என்கிறான்.

“நூற்றாண்டுகளின் துருவை தாங்கி ,உறையில் தூங்கும் வாளே அழாதே
எந்தன் கண்ணின் கண்ணீர் கழுவ என்னோடு அழும் யாழே அழாதே…..”

களம் புகாமல் ஆயிரமாண்டுகள் துருவேறி கிடக்கும் வாளையும், தனது பாடலின் கண்ணீருக்க்கு கண்ணீர் மூலமே இசை வடிக்கும் யாழையும் அழாதே என்கிறான்.

சோழர்களின் மிகப்பெரிய பண்பாட்டு விழுமியங்கள் வீரத்தாலும் கலையாலும் சொல்லப்பட்டவை.

அதன் சாட்சிகளாகவே போர்க்கருவியான வாளையும், இசைக்கருவியான யாழையும் தேற்றுகிறான்.

மக்களை மட்டுமல்ல மகத்துவங்களையும் தேற்றுபவன்தானே அரசன்.

ஜிவி.பிரகாஷ்குமார் இசையில் வைரமுத்து எழுதி விஜய் யேசுதாஸ் பாடிய இந்தப் பாடல் இன்னும் கொண்டாடப்பட்டிருக்க வேண்டும்.

விருதுகளாலும் வாழ்த்துகளாலும் நிறைந்திருக்க வேண்டும்.

————————————————————————————————————

2000ஆம் ஆண்டு இயக்குநர் K.S.ரவிக்குமார் தயாரித்து இயக்க கமல்ஹாசனோடு ரஹ்மான் இணைந்த இரண்டாவது படம் ‘தெனாலி’. வாலி, வைரமுத்து போன்ற பெருந்தலைகள் யாரும் இல்லாமல் பிறைசூடன், அறிவுமதி, பா.விஜய், தாமரை, இளையகம்பன், கலைக்குமார் என்று ஒரே படத்திற்கு ஐந்து பாடலாசிரியர்களோடு ரஹ்மான் இணைந்து பணியாற்றிய முதல் திரைப்படம் இது. ரஹ்மான் இசையில் தாமரைக்கு பாட்டெழுத கிடைத்த முதல் வாய்ப்பு அது. இலங்கைத் தமிழராக நடித்திருந்த கமல்ஹாசனுக்கு ‘இஞ்சருங்கோ’ என்ற பல்லவியோடு தனது பாடலை எழுதினார் கவிஞர் தாமரை.

பிரமாண்டமான சூழ்நிலை எதுவும் இல்லாமல் ஒரு சாதாரண காதல்சார் பாடலாக அமைந்தது. இருந்தாலும் இலங்கையின் தமிழ் சொற்களைக் கொண்டு எழுதப்பட்ட வெகு சில பாடலில் இதுவும் ஒன்று.

இந்த முறை அது சூழலுக்கான பாடலாக அமைந்தது. இலங்கையி்லிருந்து வாழ இருப்பிடம் நாடி உயிர் பிழைக்க வந்த பெண் தமிழகத்து இளைஞன் ஒருவனை விரும்புகிறாள். இருவருக்குமான திருமணம் நிச்சயம் செய்யப்படுகிறது. அந்த சூழலில் அந்தப் பெண்ணின் தோழிகள் அவளைக் கிண்டல் செய்வது போல ஒரு கொண்டாட்டப் பாடல். பாடலினூடே புலம்பெயர்ந்து வந்த தமிழர்களின் வலி, தாய்த் தமிழகம் அன்பின் வழி தரும் நம்பிக்கை எல்லாமே சொல்லப்பட்டிருக்கும். பாடலை ஈழத்துப்பெண்ணும் அவளது தோழியரும் பாடுவது போல இருப்பதால் கூடுமானவரை அவர்களது வழக்கு சார்ந்த சொற்களையே பயன்படுத்தியிருந்தார் தாமரை.

திருமணப் பேச்சு முடிந்ததும் தோழிகள் கல்யாணியிடம் நந்தாவை எங்கு கண்டாய் என்று கேட்பது போல பாடல் துவங்கும். “கள்ளி அடி கள்ளி,எங்கே கண்டாய்?முதலில் என்ன கதச்சாய்?உண்மை எல்லாம் சொல்லு” கதையில் முதன்முதலில் நந்தாவை ஒரு பிணவறையில் பிணங்களோடு பிணமாகத்தான் பார்ப்பாள் கல்யாணி. யாருக்கும் கிட்டாத அதிசயமான ஒரு முதல் சந்திப்பு இது. இது கல்யாணியின் தோழிகளுக்குத் தெரியும். கிண்டலாய் கேட்கிறார்கள் என்று தெரிந்தும் இவளும் கிண்டலாகவே பதில் சொல்வாள்.

“சிரித்திடும் வாவி கரையோரம்,காத்து நான் கிடந்தனன்,பதிங்கி மெல்ல வந்தவன்,பகடி பகடி என்ன — போங்கடி!” ‘தாமரை மலர் சகிதம் சிற்றலைகளாக சிரித்துக்கிடக்கும் குளத்தின் கரையில் நான் இருந்தேன்; அவன் பதுங்கி பதுங்கி என்னைக் காண வந்தான்’ என்று ஏதோ பாரதி கவிதைக்கான முன்கதை போல சொல்லி விட்டு “பகடி பகடி என்ன — போங்கடி!” என்று பாடுவாள். ‘எல்லாம் தெரிஞ்சுக்கிட்டு கிண்டலா பண்றீங்க. போங்கடி’ என்று சொல்வது போன்ற வரி. “முழு நிலவு காயும் இரவில் மீன்கள் பாடும் தேன் நாடு,அங்கே இருந்து இங்கே,வாழ வந்த பெண்ணே நீ பாடு’.

தமிழ் ஈழத்தின் தென்பகுதியான மட்டக்களப்பு பகுதியை “தேன்நாடு’ என்று சொல்கிறார்கள். இன்னும் சிறப்பாக “மீன் பாடும் தேன்நாடு’ என்று அழைக்கிறார்கள். முழு நிலவு நாட்களில் குறிப்பிட்ட மீனினம் எழுப்பும் ஓசையை பாடும் மீன்களின் இசையாகக் கொண்டாடும் மக்கள் நிறைந்த ஊர். கல்யாணி மட்டக்களப்பில் இருந்து வந்தவள். நந்தாவை அவள் பிணவறையில் காண்பதற்கு காரணமும் அவள் மட்டக்களப்பு என்பதுதான். மட்டகளப்பைச் சார்ந்தவள் என்பதால்தான் அவளை பிணவறைக்கு அழைத்து செல்வார்கள்.

“நல்லூரின் வீதியெங்கும் திரிந்தோமடி,தேரின் பின்னே அலைந்தோமடி” மேலும் அவர்களின் புகழ் சொல்ல நல்லூர் தெருவும், கந்தசுவாமி கோவில் தேரும் குறிப்பிடப்படுகிறது. “நம்மை அணைக்கை ஆளில்லை,என்று கலங்கிக் கிடந்தோம் நெஞ்சுக்குள்ளே,தமிழர் தங்கம் தாம் என்னாளும்… கடலொன்று நடுவிலே, இல்லை என்று கொள்வினம்,எங்கள் நாடும் இந்த நாடும்,ஒன்றுதான், நம்மது உறவெல்லாம் நம் நாட்டில்தான்,என்றும் நினைத்தோம் தவறாகதான், இங்கும் உறவு உள்ளது, தமிழர் மனது பெரியது” யாருமே இல்லையென்ற சூழ்நிலையில் தஞ்சமடைய தாய் நிலம் தந்த தமிழர்களின் அன்பு பேசும் வரிகள்.

கடல் பிரிக்காது இருந்தால் இரண்டும் ஒரே நாடு என்கிற மனதிற்கு அரசியலும் தேவையில்லை பூலோகமும் தேவையில்லை. காரணம்“தமிழன், தமிழன்தான்” நாடு கடந்து தாய் மண்ணை விட்டு தமிழகம் வந்தாலும் இங்கு அவர்களுக்கு வழங்கப்படும் பெயர் ‘அகதி’. இங்கு படும் துயரைச் சொல்ல குழந்தையின் குரலில் “புது உடுப்புகள் கிடைக்குமா, அக்கா?” பாடலில் இந்த கேள்விக்கு பதிலாக எந்த வரிகளும் இருக்காது. மௌனமும் அதன் பிறகு மழையும் பதிலாக காட்சியில் வரும். மழையோடு பாடல் தொடரும்..

“அட உனக்கென்ன,வந்த இடத்தில் மருமகள் ஆகினாய்” கல்யாணியின் திருமணம் சார்ந்த பாடலாக இருப்பதால் அதை குறிக்கும் வரிகளும் இடையிடையே இடம்பெற்றிருக்கும். தமிழ்நாட்டு மருமகள் ஆனதால் அங்கு ஒரு அன்பு பாலம் நிறுவப்படுகிறது என்று சொல்லும் வரி.

“ஏ, புதிய பாலம் கண்ணில் தெரிகிறதே” தோழிகளின் திருமண வாழ்த்து. “எந்த களங்கம் இல்லை என்று ஆகுதே பெருகி வாழ்வாயே” கல்யாணியின் திருமணத்தால் மற்றவர்களுக்கும் ஏதேனும் நன்மை நிகழும் என்ற நம்பிக்கை “உங்கள் கைகள் இணையும் அந்த பொழுதில்,எங்கள் வாழ்கை விரியும்,மேற்கே மறைந்தாலும் கிழக்கே உதிக்கும்,அந்த கதிரின் சுடராய், எங்கள் விடியல் தெரியும்” பாடல் முழுக்க வாழ்த்தையும் வாழ்க்கையையும் கல்யாணிக்காக மட்டுமே வைத்து கல்யாணியை மையப்படுத்தி தோழிகளும், சுற்றத்தாரும் பாடுவார்கள்.

அதற்கு இறுதியாக கல்யாணி பதில் சொல்வாள். “கனவுகள் எனது என நினைத்தேன்,இன்று நான் அறிந்தனன்,இருளின் கரம் விலகுமே,உங்கள் கனவும் நனவாகுமே” மகிழ்ச்சி நிறைந்த நல்வாழ்வு எனது கனவு என்று நினைத்திருந்தேன். ஆனால், இது அனைவரின் கனவும் கூட. ஒரு நாள் கனவு நினைவாகும் என்று நம்பிக்கை தருவாள். இந்த பதிலில் நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் உள்ளங்கையின் கதகதப்போடு தன்னைச்சார்ந்தோருக்கு கடத்துவாள் கல்யாணி.

இந்தப் பாடலை எழுதிய தன்னிகரில்லா தாமரைக்கு தாலாட்டு நாள் நல்வாழ்த்துகள் ♥️

About editor 3116 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply