கூட்டமைப்பு புலிகள் உருவாக்கியதா?
டி.பி.எஸ்.ஜெயராஜ்
தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பது இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு இலங்கைத் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான அரசியல் வடிவமாகும். கடந்த ஒரு வாரத்தில் அல்லது அதற்கு மேற்பட்ட காலங்களில் தமிழ் அரசியல் பரப்பில் மேலெழுந்த கேள்வி என்னவென்றால், விடுதலைப் புலிகளால் 2001 ல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதா என்பதுதான்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செய்தித் தொடர்பாளரும் முன்னாள் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனின் ”சமுத்திதாவுடனான உண்மை”என்ற தொலைக்காட்சி நேர்காணல் நிகழ்ச்சியின் விளைவாக சுமந்திரனுக்கு எதிராக ஏராளமான விமர்சனங்கள் எழுந்தன.
கடந்த காலங்களில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளித்திருக்கவில்லையென்று வழக்கறிஞர்-அரசியல்வாதி மீண்டும் வலியுறுத்தி யிருந்தநிலையில் அவரை இலக்கு வைத்ததாக ‘ தோற்றுவிக்கப்பட்ட விசனம்’ அமைந்திருக்கிறது.
இந்த சுமந்திரன் எதிர்ப்பு அரசியல் புயலில் முன்னிலைப் படுத்தப்பட்ட சுவாரசியமான அம்சங்களில் ஒன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பூர்விகம் பற்றியதாகும். சமுத்திதா சமரவிக்ரம தனது’ விரோத ‘தன்மையான கேள்விகள் மூலம் தமிழ் கூட்டமைப்பு புலிகளின் உருவாக்கம் என்பது பற்றி தொடர்ந்து கதைத்து கொண்டிருந்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்குரார்ப்பண கூட்டத்திற்கு விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமை தாங்கினார் என்று அவர் குற்றம் சாட்டினார். சுமந்திரன் குற்றச்சாட்டுகளை அமைதியாக கண்ணியத்துடன் மறுத்தார். 2001 ல் விடுதலை புலிகளால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்படவில்லை என்ற உண்மையை அவர் வலியுறுத்தினார். இது தமிழ் அரசியலுக்குள் சுமந்திரன் எதிர்ப்பு சக்திகளுக்கு மேலும் கருவிகளை வழங்கியது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உண்மையில் புலிகள் தலைவரால் உருவாக்கப் பட்டதொன்று என்று அவர்கள் கூறத் தொடங்கினர். வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிறுவப்பட்டது என்றும் எனவே சுமந்திரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினராக இருப்பதால் புலிகளை ஆதரித்தார் என்றும் வலியுறுத்தி வந்தனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புலிகளால் உருவாக்கப்படவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ராஜவரோதயம் சம்பந்தன் தொடர்ந்து கூறிவந்தாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விமர்சிப்பவர்கள் அது புலிகளின் உருவாக்கம் என்று தொடர்ந்து குற்றம் சாட்டுகின்றனர்.
சி.வி. விக்னேஸ்வரன், அனந்தி சசிதரன், எம்.கே.சிவாஜிலிங்கம், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் கஜேந்திரன் போன்ற சில தமிழ்தேசியக்கூட்டமைப்பு – எதிர்ப்பு கடும் போக்காளர்கள் “புலிப்பாட்டு” பாடுகிறார்கள் என்பதால், இந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல்வாதிகளும் “புலி” போஸ் கொடுக்கிறார்கள்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புலிகளால் உருவாக்கப்பட்டது என்று சொல்வதன் மூலம், அவர்கள் தங்கள் அரசியல் போட்டியாளர்களை விட அதிகமாக மதிப்பெண் பெற முடியும் என்று நினைக்கிறார்கள் (பிழையானது). புலிகளின் சந்ததியினர் எனக் கூறும் பல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆட்கள் 2001 ல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவானபோது இருந்திருக்கவில்லை.அப்படியானால் உண்மை என்ன?
மக்கள் நம்பிக்கைக்கு மாறாக ஆரம்பத்தில் தமிழ் கூட்டமைப்பு ஒரு புலி உருவாக்கம் அல்ல. இது விடுதலைப் புலிகளின் முன்னெச்சரிக்கையுணர்வுடனான மறைமுக ஆதரவுடன் சுயாதீனமாக உருவாக்கப்பட்டது. அதன் பிறகு விடுதலைப்புலிகள் அமைப்பு அதனை கட்டுப்படுத்தியது. எனவே இந்த பின்னணியில் நான் எனது முன்னைய ஆக்கங்களின் உதவியுடன் – தமிழ் தேசிய கூட்டமைப்பு எவ்வாறு இருந்தது என்பதிலும்-அதாவது 2001 ஆம் ஆண்டில் எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பது பற்றியும் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்குவதில் புலிகள் ஆற்றிய பங்களிப்பு குறித்தும் கவனம் செலுத்த விரும்புகிறேன்.
இன்றியமையாத தேவை காரணமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு 2001 இல் உருவாக்கப்பட்டது. இலங்கை அரசு மற்றும் அதன் ஆயுதப்படைகளுக்கு எதிரான தனது இராணுவ நடவடிக்கைகளை விடுதலை புலிகள் தொடர்ந்து முன்னெடுத்தனர் . சில தமிழ் அரசியல் அமைப்புகள் ஆட்சிகளுடன் தங்களை இணைத்துக் கொண்டாலும், புலிகள் சாராத அரசியல் கட்சிகள் பல கிடைக்கக்கூடிய வரையறுக்கப்பட்ட அரசியல் இடத்திற்குள் ஜனநாயக அரசியலில் ஈடுபட முயற்சித்தன. எவ்வாறாயினும், அவர்கள் புலிகள் மற்றும் அரசாங்க ஆதரவுடைய துணை இராணுவ அமைப்புகளிடமிருந்து அச்சுறுத்தல்களையும் ஆபத்தையும் எதிர்கொண்டனர்.
மேலும், தமிழ் தேசியவாதத்தை ஆதரிக்கும் இந்த கட்சிகள் தங்களுக்குள் நம்பிக்கையற்ற முறையில் பிளவுபட்டன.எனவே வாக்குகள் பிளவுபட்டு,பாராளுமன்ற பிரதிநிதித்துவம் துண்டிக்கப்பட்டது .ஐ. தே. க., சுதந்திர கட்சி போன்ற பெரிய கட்சிகளும் தங்களது தமிழ் நட்பு அணிகளுடன் படிப்படியாக களமிறங்கிக் கொண்டிருந்தன.
தமிழர்கள் பலர் அதிக வாக்குகளைப் பெறுவதற்கும் தமிழ் தேசியவாத சக்திகளுக்கு போதுமான பிரதிநிதித்துவத்தைப் பெறுவதற்கும் அரசியல் ஒற்றுமை அவசியம் என்று உணரத் தொடங்கினர்.
அக்டோபர் 10 2000 தேர்தல்
அக்டோபர் 10, 2000 பாராளுமன்றத் தேர்தல்தான் எச்சரிக்கை மணியோசையை . எழுப்பிய முக்கியமான காரணி. வடகிழக்கு முடிவுகள் பொதுவாக தமிழர்களுக்கும் குறிப்பாக சில தமிழ் கட்சிகளுக்கும் அதிர்வலைகளை அனுப்பின.
அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த திருகோணமலை மாவட்டத்தில் ஆர்.சம்பந்தன் உட்பட எந்தவொரு தமிழ் பிரதிநிதியும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. மட்டக்களப்பில் தமிழர் விடுதலை கூட்டணியில் இரண்டு தமிழர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டனர். அந்த நேரத்தில் தமிழர் விடுதலை கூட்டணியானது தமிழரசுக்கட்சி மற்றும் தமிழ் காங்கிரஸின் சில முன்னாள் உறுப்பினர்களைக் கொண்டிருந்தது.
ஆளும் பொதுஜன முன்னணியிலிருந்து (பிஏ) மற்றொரு தமிழர் ஒருவர் மட்டக்களப்பில் வெற்றிபெற்றிருந்தார். 2000 வாக்கெடுப்பில் அம்பாறை மாவட்டத்தில் ஈபிடிபியின் ஆதரவுடன் ஒரு தமிழர் சுயேச்சையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆறு இடங்களைக் கொண்ட வன்னி மாவட்டத்தில் இரண்டு சிங்களம் (பொதுஜன முன்னணியிலும் ஐ.தே . க .விலும்) மற்றும் ஒரு முஸ்லீம் எம்.பியும் . தமிழீழ விடுதலை அமைப்பிலிருந்து (டெலோ) மூன்று தமிழ் எம்.பி.க்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
ஒன்பது இடங்களைக் கொண்ட யாழ்ப்பாணத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈபிடிபி) போனஸ் இருக்கை உட்பட நான்கு இடங்களைப் பெற்றிருந்தது. தமிழர் விடுதலை கூட்டணிக்கு மூன்று ஆசனங்கள் கிடைத்தது. தமிழ் காங்கிரசுக்கு ஒன்று கிடைத்தது. ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒன்று கிடைத்தது. 48 ஆண்டுகளுக்குப் பிறகு யாழ்ப்பாணத்தில் ஐ. தே. க .வென்றது.
1952 ஆம் ஆண்டில் சேர் பொன்னம்பலம் இ ராமநாதனின் மருமகன் சுப்பையாபிள்ளை நடேசன் வெற்றி பெற்றிருந்தார். தியாகராஜா மகேஸ்வரன் இப்போது வென்றிருக்கிறார். எந்தவொரு தமிழ் கட்சியும் ஒரு தேசிய பட்டியல் இடத்தைபெற தேவைப்பட்ட வாக்குகளைப் பெறவில்லை. 2000 ஆம் ஆண்டில் வட,கிழக்கில் தமிழர்கள் குறைந்தளவே பிரதிநிதித்துவப் படுத்தப்பட்டனர். மேலும் சிங்கள தேசிய கட்சிகள் ஆதிக்கம் செலுத்தியதுடன், அரசாங்கத்துடன் இணைந்த ஈபிடிபி போன்ற தமிழ் கட்சிகளும் சிறப்பாக செயல்பட்டன.
அரசு சாரா தமிழ் அரசியல் கட்சி தோல்விக்கான காரணங்களில் ஒற்றுமையின்மை, தமிழ் வாக்குகள் சிதறுண்டமை மற்றும் ஊக்கமளிக்கும் அரசியல் நிகழ்ச்சி நிரல் இல்லாதமையாகும். கிழக்கு பல்கலைக்கழக கருத்தரங்குநிலைமையின் தீவிரத்தன்மை இனரீதியாக கிட்டத்தட்ட ஒரேவிதமான வடக்கைக் காட்டிலும் வேறுபட்ட கிழக்கில் அதிகளவுக்கு உணரப்பட்டது.
கிழக்கு பல்கலைக்கழகத்தில் நிலைமையை ஆய்வு செய்யும் கருத்தரங்கொன்று நடைபெற்றது. இதற்கு கட்டுரையாளர் தர்மலிங்கம் சிவராம் அல்லது தாரகி தலைமை தாங்கினார். பல கல்வியாளர்கள், ஊடகவியலாளர்கள், ஆசிரியர்கள், தொழில் வல்லுநர்கள், சமூக சேவையாளர்கள், இளங்கலை பட்டதாரிகள் மற்றும் அரசியல் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் எதிர்க்கட்சியில் உள்ள பல்வேறு தமிழ் அரசியல் கட்சிகள் ஒரு குடை யின் கீழ் ஒன்றுபட்டு வாக்குகள் சிதைவதைத் தடுக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. அத்தகைய அமைப்பு புலிகளுக்கு பரவலாக ஆதரவளிக்க வேண்டும் என்றும் உணரப்பட்டது. இந்த நடவடிக்கைக்கு விடுதலைப் புலிகளின் ஒப்புதல் பெறப்பட வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.
இந்த பணியைச் செயல்படுத்த ஒருங்கிணைப்பதற்காக மூன்று கூட்டு தலைமைகளை கொண்ட ஒரு வழிநடத்தல் குழு அமைக்கப்பட்டது. இந்த பணி மூன்று அம்சங்களைக் கொண்டிருந்தது. முதலில் புலிகளின் ஒப்புதல் மற்றும் மறைமுக ஆதரவு. இது எதிர்க்கட்சியில் உள்ள தமிழ் அரசியல்வாதிகளை படுகொலை செய்யாதென்ற பாதுகாப்புக்கு உத்தரவாதம். அதற்கு ஈடாக இந்த தமிழ் கட்சிகள் விடுதலைப்புலிகளின் முக்கியத்துவத்தை ஒப்புக் கொள்ள வேண்டும் மற்றும் எந்தவொரு பேச்சுவார்த்தை களிலும் தமிழர்களின் ஏக பிரதிநிதியாக அதனை அங்கீகரிக்க வேண்டும். இரண்டாவதாக, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்), தமிழீழ மக்கள் விடுதலை அமைப்பு (புளொட் ) மற்றும் டெலோ போன்ற போராட்ட வரலாற்றைக் கொண்ட அரசியல் கட்சிகள் தாங்கள் ஆயுதங்களை கீழே போடுவதாகவும் புலிகளை வேட்டையாடுவதில் அரசுடன் ஒத்துழைக்காது என்றும் அறிவிக்க வேண்டியிருந்தது. .
ரஸீக் குழு (ஈபிஆர்எல்எப்) மோகன் குழு (புளொட் ) மற்றும் ரஞ்சன் குழு (டெலோ) போன்ற அவர்களுடன் இணைக்கப்பட்ட பாரா-இராணுவ அமைப்புகளுடனான தொடர்புகளையும் அவர்கள் துண்டிக்க வேண்டியிருந்தது. அனைவரும் கிழக்கில் இருந்தனர்.
மூன்றாவதாக, தமிழர் விடுதலை கூட்டணி மற்றும் தமிழ் காங்கிரஸ் போன்ற மிதவாத கட்சிகள் முன்னாள் போராளி குழுக்களுடன் ஒரு பொதுவான முன்னணியில் இணைந்து செயல்பட ஒப்புக்கொள்ள வேண்டியிருந்தது. முன்னாள் போராளி குழுக்களின் கைகள் கறைபட்டுள்ளதாக உணர்ந்ததால் அந்த இரு கட்சிகளும் தயக்கம் காட்டின. தவிர தமிழர் விடுதலை கூட்டணி ‘ஆயுதம் தரிக்காத ஜனநாயகத்திற்காக’ நின்றது. தமிழ் காங்கிரசுக்கும் சமஸ்டி கட்சி- தமிழர் விடுதலைக்கூட்டணிக்கும் இடையிலான போட்டியின் நீண்ட, சிக்கலான வரலாறு இருந்தது.
கரிகாலன் உத்தியோகப்பற்றற்ற விதத்தில் ஈடுபட்டிருந்தார். வன்னியில் உள்ள புலிகள் பேச்சுவார்த்தை செயல்பாட்டில் நேரடியாக ஈடுபடவில்லை. ஆனால் மட்டக்களப்பு – அம்பாறைக்கான முன்னாள் புலி அரசியல்துறை பொறுப்பாளர் கரிகாலன் ஆதரவளித்தார். மற்றும் உத்தியோகப்பற்றற்ற முறையில் ஈடுபட்டார். புலிகளால் படுகொலை செய்யப்பட்ட ஆரையம்பதி பிரதேச சபையின் டெலோ தலைவரான “ராபர்ட்” (இந்த ராபர்ட் 2002 இல் யாழ்ப்பாணத்தில் கொல்லப்பட்ட ஈ.பி.ஆர்.எல்.எப் “ராபர்ட்” அல்ல ). இதன் விளைவாக பேச்சுவார்த்தைகளில் இருந்து வெளியேற டெலோ விரும்பியதால் இந்த படுகொலை ஒரு பெரிய பின்னடைவாக அமைந்தது. எவ்வாறாயினும், இந்த குழு அதன் முயற்சிகளை தொடர்ந்து முன்னெடுத்தது. கிழக்கில் விடுதலைப்புலிகளின் . கிழக்கு பிராந்திய இராணுவத் தளபதி விநாயகமூர்த்தி முரளி.தரன் அல்லது கருணா இருந்தார்.
உளவுத்துறை பிரிவுக்கும் அரசியல் பிரிவுக்கும் இடையிலான தொடர்பு இடைவெளி காரணமாக படுகொலை ஒரு “தவறு” என்று புலிகள் விளக்கினர். இதையடுத்து டெலோ மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப் இன் முன்னணி நபர்கள் கரிகாலனை ரகசியமாக சந்தித்து விடயங்களைப் பற்றி விவாதித்தனர். உத்தரவாதங்கள் பெறப்பட்டன.
அதேபோல் சில தமிழர் விடுதலை கூட்டணி ஆளுமைகளும் புலிகளின் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடினார்கள். ஆரம்பத்தில் இரண்டு இடக்குகள் இருந்தன.
தர்மலிங்கம் சித்தார்த்தன் தலைமையிலான புளொட் ஒற்றுமைக்கு தயாராக இருந்தது. ஆனால் வவுனியாவில் (புளொட் கோட்டையாக) உள்ள புளொட் பணியாளர்கள் டெலோவுடன் (வவுனியாவிலும் வலுவாக) இணைந்திருக்க விரும்பவில்லை. அதேபோல் டெலோ உயர்மட்டமும் புளொட் உடன் ஒன்றிணைவதற்கு தயக்கம் காட்டியது. இறுதியாக புளொட் அல்லது அதன் அரசியல் கட்சியான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி விலகியது.
இரண்டாவதாக, தமிழ் காங்கிரஸ் இலங்கைத் தமிழரசுக்கட்சி மற்றும் அதன் வழித்தோன்றிய தமிழர் விடுதலை கூட்டணி மீது கொண்டிருந்த நீண்டகால விரோதப் போக்காகும். தமிழர் விடுதலை கூட்டணியின் சூரியனுக்கு பதிலாக அனைத்து கட்சிகளும் தமிழ் காங்கிரஸின் சின்னத்தின் கீழ் ஒன்றிணைந்து போட்டியிட வேண்டும் என்று தமிழ் காங்கிரஸ் விரும்பியது.
குமார் பொன்னம்பலம் ஜனவரி 2000 அன்று கொல்லப்பட்டதால் டாக்டர் யோகலட்சுமி பொன்னம்பலம் . அவரது இல்லத்தில் நீடித்த கலந்துரையாடல்களுக்குப் பிறகு அவர் சூரிய சின்னத்தின் கீழ் ஒன்றுபட்டு போட்டியிட சம்மதித்தார். தமிழர் விடுதலை கூட்டணியின் சில முக்கியஸ்தர்களும் தயக்கம் காட்டியபோதும் காங்கிரஸ் மற்றும் பிற முன்னாள் போராளி குழுக்களுடன் ஒன்றுபட படிப்படியாக அவர்கள் இணங்கினர். இரு சமாந்தர நெறிகள்இந்த விவாதங்கள் தொடர்ந்தபோதும், இரண்டு இணையான நடவடிக்கைகளும் நடந்து கொண்டிருந்தன.
ஒன்று, இதுவரை கேள்விப்படாத சங்கிலியன் படை குளக்கோட்டன் படை மற்றும் பண்டார வன்னியன் படை போன்றவற்றின் துண்டுப்பிரசுரங்கள் மற்றும் அறிக்கைகள் திடீர் நிகழ்வாக காணப்பட்டது. பிராந்திய ஆட்சியாளர்களான யாழ்ப்பாணத்து சங்கிலி மன்னன், திருகோணமலை குளக்கோட்டன், அடங்காப்பற்று தலைமைக்காரன் பண்டார வன்னியன் ஆகியோரை குறிப்பிடுவதாக இவை காணப்பட்டன.
இந்த துண்டுப்பிரசுரங்கள் மற்றும் அறிக்கைகள் அனைத்தும் தமிழ் ஒற்றுமையை வலியுறுத்தியதுடன், தண்டனை நடவடிக்கைக்கு ஒத்துழைக்காதவர்களை அச்சுறுத்துவதாகவும் அமைந்திருந்தது. அவர்களுக்கு தமிழ் செய்தித்தாள்களில் பரவலான இடம் வழங்கப்பட்டது. ஒட்டுமொத்த தமிழ்தரப்புகள் மத்தியில் ஒற்றுமையைக் கொண்டுவர கொழும்பை தளமாகக் கொண்ட சில முக்கிய தமிழர்களின் மத்தியிலான அர்த்தமுள்ள முயற்சிகள் மற்றொரு இணையான நடவடிக்கையாகும்.
முன்னணி வர்த்தகர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் சமூக சேவையாளர்களை இந்த தமிழர்கள் கொண்டிருந்தனர். அவர்களில் சிலர் ஒற்றுமைக்காக பாடுபடும் மட்டக்களப்பு நண்பர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர். கொழும்பை தளமாக கொண்ட ”தமிழர்களின் முயற்சிகள்’ ஒற்றுமை பேச்சுவார்த்தையில் முக்கிய பங்கு வகித்தன.
இறுதிக் கட்டங்களில் வன்னியில் உள்ள புலிகள் நேரடியாக பேச்சுக்களில் ஈடுபட்டனர். தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ் காங்கிரஸ், டெலோ மற்றும் ஈ .பி.ஆர் .எல் .எப் . இன் சில தலைவர்கள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தமிழர் விடுதலைக்கூட்டணி சூரியன் சின்னத்தின் கீழ் ஒன்றுபட்டு போட்டியிட வலியுறுத்தினர். விடுதலை புலிகள் விவகாரம் பேச்சுவார்த்தை நடத்தும் கட்சிகள் வெற்றிகரமான முறையில் முடிவுக்கு வருவதற்கு அணிதிரட்டிக் கொள்வதாக அமைந்தது. தமிழ் தேசியக் கூட்டமைப்புதமிழர் விடுதலைக் கூட்டணி,தமிழ் காங்கிரஸ், டெலோ மற்றும் ஈ .பி.ஆர் .எல் .எப் இடையே ஒரு கூட்டணி “தமிழ் தேசியக் கூட்டமைப்பு” அல்லது ‘தமிழ் தேசிய கூட்டணி’ என அழைக்கப்படும் ஒரு கூட்டணியை உருவாக்க தீர்மானம் எட்டப்பட்டது.
தமிழர் விடுதலைக்கூட்டணி சின்னத்தின் கீழ் தமிழ் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடும். ஒவ்வொரு கட்சிக்கும் வெவ்வேறு தேர்தல் பிரிவுகளில் வேட்பாளர்களைப் பிரிக்கும் திட்டமும் ஒப்புக் கொள்ளப்பட்டது. இந்தஆரம்ப கூட்டம் கொழும்பில் தொழிலதிபர் வி.ஆர். வடிவேற்கரசன் இல்லத்தில் இடம்பெற்றது.
அக்டோபர் 22, 2001 தேதியிட்ட ஒரு பத்திரிகை அறிக்கையின் மூலம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உருவாக்கம் அறிவிக்கப்பட்டது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாவதைக் குறிக்கும் வகையில் அக்டோபர் 22, 2001 அன்று வெளியிடப்பட்ட பத்திரிகை அறிக்கையில் தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் நான்கு பேர்கள் கையெழுத்திட்டனர்.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (தமிழீழ விடுதலை அமைப்பு (டெலோ) மற்றும் ஈழம் மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எஃப்) ஆகியவற்றை சேர்ந்தவர்கள் கையெழுத்திட்டனர்.
ஆர்.சம்பந்தன் ( தமிழர் விடுதலை கூட்டணி ),என்.குமரகுருபரன் (அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ) என்.ஸ்ரீகாந்தா (டெலோ) மற்றும் கே.பிரேமச்சந்திரன் (ஈ.பி.ஆர்.எல்.எஃப்). ஆகியோர் கைச்சாத்திட்டிருந்தனர்.
பத்திரிகை அறிக்கையில் நான்கு முக்கிய அம்சங்கள் இருந்தன. அவை தமிழ் தேசிய கூட்டமைப்புக்கான விதிகளாக இருந்தன. பொதுத் தேர்தலில் ஒவ்வொரு நான்கு கட்சிகளுக்கும் வேட்பாளர் பட்டியல்களில் இடங்கள் எவ்வாறு ஒதுக்கப்பட வேண்டும் என்பது பற்றிய ஏற்பாடு பின்வருமாறு:
யாழ்ப்பாணம்- தமிழர் விடுதலை கூட்டணி – 7; தமிழ் காங்கிரஸ் -3; டெலோ-1; ஈ. பி . ஆர் .எல் .எப் .-1
வன்னி – தமிழர் விடுதலை கூட்டணி -3; தமிழ் காங்கிரஸ் 1: டெலோ- 4: -ஈ. பி . ஆர் .எல் .எப் 1மட்டக்களப்பு- தமிழர் விடுதலை கூட்டணி – 5: -தமிழ் காங்கிரஸ் 1: டெலோ -2; -ஈ. பி . ஆர் .எல் .எப் 1
திருகோணமலை- தமிழர் விடுதலை கூட்டணி -3: தமிழ் காங்கிரஸ் -1:டெலோ -2:-ஈ. பி . ஆர் .எல் .எப் -0அம்பாறை -தமிழர் விடுதலை கூட்டணி -5: தமிழ் காங்கிரஸ் -1;டெலோ-1: -ஈ. பி . ஆர் .எல் .எப் -0
இரண்டாவதுஅம்சம் தேசிய பட்டியல் எம்.பி. முன்னுரிமையின் வரிசை தமிழர் விடுதலை கூட்டணி, தமிழ் காங்கிரஸ் , டெலோ , ஈ. பி . ஆர் .எல் .எப் ஆகும். பெறப்பட்ட வாக்குகளின் அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு தேசிய பட்டியல் எம்.பி.க்கு உரிமை பெற்றிருந்தால், அது முதலில் தமிழர் விடுதலை கூட்டணி வேட்பாளருக்குச் செல்லும். இரண்டாவது எம்.பி.க்கு உரிமை இருந்தால், அதுதமிழ் காங்கிரஸ் வேட்பாளருக்கு இருக்கும்.
மூன்றாவது விடயம் என்னவென்றால், கட்சிகள் ஒருவருக்கொருவர் பகிரங்கமாக தாக்குவதையோ அல்லது விமர்சிப்பதையோ தவிர்க்க வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக பிரசாரத்தில் ஈடுபடவோ அல்லது எதிர் பிரசாரத்தில் ஈடுபடவோ கூடாது என்பது குறித்து தேர்தல் பிரசாரத்தின்போது சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும்.
நான்காவது விடயம் -தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள் மோதல்கள் மற்றும் பிரச்சினைகள் பற்றியதாகும். இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்பட்டால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இந்த விஷயத்தை தங்களுக்குள் அமைதியான முறையில் விவாதித்து பெரும்பான்மை வாக்களிப்பின் மூலம் இணக்கமான தீர்வை எட்ட வேண்டும். அது முடியாவிட்டால், சிக்கலைத் தீர்க்க உதவும் வெளிப்புற அனுசரணையாளர் குழுவின் சேவைகளைப் பெற்றுக்கொள்வதாகும்.
ஆறு உறுப்பினர் அனுசரணையாளர் குழு“அனுசரணையாளர் குழு” பின்வரும் ஆறு உறுப்பினர்களைக் கொண்டது:
1. வி . கைலாசபிள்ளை 2.கந்தையா நீலகண்டன் 3.வி.ஆர்.வடிவேற்கரசன் 4.நிமலன் கார்த்திகேயன் 5. எஸ்.தியாகராஜா 6. கே.ஜெயபாலசிங்கம்கொழும்பை தளமாகக் கொண்ட தமிழ் சமூகத்தின் மரியாதைக்குரிய உறுப்பினர்களான . அவர்கள் முக்கியமாக தொழில் வல்லுநர்கள் அல்லது வெற்றிகரமான வணிக தொழில் முனைவோராக விளங்கினர்.
அச்சமயம் தமிழர் விடுதலை கூட்டணியின் பொருளாளராக இருந்த தியாகராஜாவைத் தவிர அவர்கள் எந்த அரசியல் கட்சியையும் சேர்ந்தவர்கள் அல்ல. இத்தகைய சூழ்நிலையில்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு கட்சி யாப்பு அல்லது கட்டமைப்பு இல்லாமல் ஒரு தளர்வான உருவாக்கமாக தோற்றம் பெற்றது.
2001 டிசெம்பர் 5 இல் பாராளுமன்ற தேர்தல் இடம்பற்ற போதுதான் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஞானஸ்தானத்தை பெற்றுக்கொண்டது.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது அறிக்கையில் இன மோதலுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வலியுறுத்தியதுடன், (தமிழீழ விடுதலைப் புலிகள்) இதுபோன்ற பேச்சுவார்த்தைகளில் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் என்றும் வலியுறுத்தினர்.தேசிய கூட்டமைப்புக்கு புலிகளின் வெளிப்படையான ஆதரவு இல்லை.
தேர்தல் பிரசாரம் நடந்து கொண்டிருந்தபோது, புலிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வெளிப்படையாக ஆதரிக்கவில்லை. இதற்குக் காரணம் புலிகளுக்கு கூட இந்த புதிய மாற்றம் சங்கடமாக இருந்தது.
தமிழ் மக்களை விடுவிப்பதற்கான ஒரே வழி ஆயுதப் போராட்டம் என்று புலிகள் நம்பினர் மற்றும் பாராளுமன்ற பாதையை நிராகரித்தனர். புலிகள் பல ஆண்டுகளாக பிரதிநிதி ஜனநாயகத்தை விமர்சித்தனர் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பல தமிழ் பிரதிநிதிகளை துரோகிகள் என்று குற்றம் சாட்டினர். கடந்த காலங்களில் புலிகள் பல முக்கிய தமிழ் எம்.பி.க்களை படுகொலை செய்திருந்தனர்.
இப்போது முதன்முறையாக புலிகள் தேர்தலில் ஒரு தமிழ் அரசியல் குழுவை மறைமுகமாக ஆதரித்தனர் . வன்னியை தளமாகக் கொண்ட புலித் தலைமை அதன் கிழக்கு அரசியல் பொறுப்பாளர் கரிகாலனை கடினமான ஆரம்ப வேலையை செய்ய அனுமதிக்க இதுமுக்கிய காரணமாகும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் இந்த நடவடிக்கையை எதிர்க்கவில்லை என்று உறுதியளிப்பதற்காக வன்னி தலைமை இறுதி கட்டங்களில் மட்டுமே வந்தது.
பணியை வெளிமட்டத்திற்கு கொடுத்தல்எவ்வாறு இருந்தாலும் தங்களை பாராளுமன்ற ஜனநாயகத்துடன் அடையாளம் காண் பதற்கான இந்தத் தயக்கம் புலிகள் ஒரு முக்கிய குழுவிற்கு ஒரு தமிழ் கூட்டமைப்பை உருவாக்கும் பணியை “வெளிமட்ட “குழுவிற்குகொடுப்பதற்கு காரணமாக இருந்தது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்குவதில் ஒரு பங்கைக் கொண்டிருந்த இந்த மட்டக்களப்பு ஊடகவியலாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் பலரும் பின்னர் அரசின் உளவுத்துறை இயந்திரத்துடன் இணைந்த பாரா இராணுவப் படைகளால் கொல்லப்பட்டனர் என்பது கவனிக்கத்தக்கது.
பிரதான புலிகள் மற்றும் கருணா-பிள்ளையான் கூட்டு தலைமையிலான பிரிந்த பிரிவினருக்கு இடையிலான சண்டையின் போது சிலர் கொல்லப்பட்டனர். சம்பந்தப்பட்ட ஒரு சில பத்திரிகையாளர்கள் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக போட்டியிட்டு எம்.பியானார்கள். ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்ட பல ஊடகவியலாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் நாட்டை விட்டு வெளியேறி பிற்காலத்தில் வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்தனர்.
புலிகள் இல்லாமல் தேர்தல் பிரசாரம் 2001 தேர்தல் பிரசாரம் இவ்வாறு புலிகள் பங்கேற்பின்றி நடத்தப்பட்டது. புலிகள் தமது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் தேர்தல் பிரசாரக் கூட்டங்களை நடத்த அனுமதிக்க மறுத்து விட்டனர். ஆனால், அதன் கட்டுப்பாட்டில் உள்ள பிராந்தியங்களில் உள்ள தமிழ் வாக்காளர்களை வாக்களிப்பதை விடுதலைப் புலிகள் தடுக்கவில்லை. “எல்லை” பகுதிகளில் அமைக்கப்பட்ட கொத்தணி சாவடிகளில் வாக்களிக்க அவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.இருப்பினும் இந்த நிலைமை குறித்து ஆயுதப்படைகள் அதிருப்தி அடைந்தன. புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளைச் சேர்ந்த வாக்காளர்களை “குறுக்குவழியில்” வாக்களிக்க அவர்கள் அனுமதிக்கவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களுக்கு கிடைத்த மிகப் பெரிய நன்மை என்னவென்றால், அவர்கள் புலிகளுக்கு அஞ்சாமல் பிரசாரம் செய்யலாம். ஆனால் இந்த முறை ஆபத்து வடக்கில் உள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியிலிருந்து (ஈபிடிபி) வந்தது.
2001 தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது, தமிழர் விடுதலை கூட்டணியின் சூரிய சின்னத்தின் கீழ் தமிழ் தேசிய கூட்டமைப்பு சிறப்பாக செயல்பட்டது. யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒன்பது இடங்களில் ஆறு இடங்களைப் பெற்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் ஆனந்தசங்கரி, சேனதிராஜா, ரவீராஜ் (தமிழர் விடுதலை கூட்டணி) கஜேந்திரகுமார் பொன்னம்பலம், விநாயகமூர்த்தி (காங்கிரஸ் ),எம்.கே.சிவாஜிலிங்கம் (டெலோ) ஆகியோர் தேர்ந்தெடுக்கப் பட்டனர்.
ஈபிடிபிக்கு இரண்டு இடங்களும், ஐ. தே. க . வின் மகேஸ்வரனும் வெற்றி பெற்றனர்.வன்னியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆறு இடங்களில் மூன்று இடங்களைப் பெற்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பாக அடைக்கலநாதன் (செல்வம்) ராஜா.குகனேஸ்வரன் (டெலோ) மற்றும் சிவசக்தி ஆனந்தன் (ஈ.பி.ஆர்.எல்.எஃப்) ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
கிழக்கில் ஆர்.சம்பந்தன் திருகோணமலை மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அம்பாறை மாவட்டத்தில் சந்திரநேரு அரியநாயகம் வெற்றி பெற்றார். இருவரும் தமிழர் விடுதலை கூட்டணியைச் சேர்ந்தவர்கள். மட்டக்களப்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்குக்கு மூன்று இடங்கள் கிடைத்தன. தங்கவடிவேல் அல்லது “லண்டன் முருகன்’ (டெலோ) கிருஷ்ணபிள்ளை அல்லது “வெள்ளிமலை ” (தமிழ் காங்கிரஸ்) மற்றும் ஜோசப் பரராஜசிங்கம் (தமிழர் விடுதலை கூட்டணி ) ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
பெறப்பட்ட வாக்குகளின் பலத்தின் அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு தேசிய பட்டியல் இடத்திற்கும் உரிமை பெற்றது. மூத்த அரசியல்வாதியும் தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவருமான முருகேசு சிவசிதம்பரம் பரிந்துரைக்கப்பட்டார். தமிழர் விடுதலை கூட்டணியின் அடையாளத்தின் கீழ் உள்ள தமிழ்த்தேசிய கூட்டமைப்பு 2001 இல் பதினான்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் ஒரு நியமிக்கப்பட்ட எம்.பி.யைக் கொண்டிருந்தது. இந்த பதினைந்து பேர்களில் தமிழர் விடுதலை கூட்டணி க்கு ஏழு, டெலோவுக்கு நான்கு, தமிழ் காங்கிரஸ் மூன்று மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எஃப் ஒன்று இருந்தது.
2001 ஆம் ஆண்டில் தமிழர் விடுதலை கூட்டணி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மிகப் பெரிய கட்சியாக இருந்தது. தமிழர்களின் கணிசமான பிரிவினரிடையே பெரும் செல்வாக்கைப் பெற்றது என்பது தெளிவாகத் தெரிந்தது. தமிழ் கட்சிகளின் “ஒற்றுமை” தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் அனுகூலங்களை அறுவடை செய்ததாகத் தெரிகிறது.
2001 ஆம் ஆண்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறு உருவானது என்பதற்கான கதை இதுதான். புலிகள் இந்த செயற்பாட்டை மறைமுகமாக ஆதரித்த போதிலும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் உருவாக்கத்தில் நேரடி பங்களிப்பு இல்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பு தேர்தல்களில் வெற்றியை சுவைத்த பின்னர், தமிழ் தேசிய கூட்டமைப்பின் மெதுவாக செல்லும் புலிமயமாக்கல் தொடங்கியது. படிப்படியாக விடுதலைப் புலிகள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை அதன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர் . இந்த விடயங்கள் எவ்வாறு வந்தன என்பது மற்றொரு சந்தர்ப்பத்தில் விரிவாக விவரிக்க வேண்டிய ஒரு கதை.
https://thinakkural.lk/article/43793
Leave a Reply
You must be logged in to post a comment.