குருந்தூர் மலையும் இனப் பிளவும்

குருந்தூர் மலையும் இனப் பிளவும்

By T. SARANYA

25 JAN, 2021 |
image

கபில்

  • கிழக்கு தொல்பொருள் முகாமைத்துவ செயலணியில் ஒரு தமிழ்ப் பிரதிநிதிக்குக் கூட இடமளிக்கத் தயாராக இல்லாத அரசாங்கம், குருந்தூர்மலை தொல்பொருள் ஆய்வில் தமிழ் தரப்பினரை இணைத்துக் கொள்ளும் என்று எதிர்பார்ப்பது முட்டாள் தனம்.
  • இலங்கைத் தீவைப் பொறுத்தவரையில் தொல்பொருள் ஆய்வு, என்பது, தமிழரின் வரலாற்றை அழிப்பதற்கான, அதற்கான தடயங்களை இல்லாமல் செய்வதற்கான  தமிழ் மக்களின் மீதான ஆக்கிரமிப்பின் ஒரு வடிவமே

முல்லைத்தீவு மாவட்டத்தில் குமுழமுனைக்கு அருகில் உள்ள குருந்தூர் மலை என்ற சிறியதொரு குன்று இப்போது, சர்ச்சைக்குரிய ஒரு இடமாக மாறியிருக்கிறது.

குருந்தூர்மலையில் தொல்பொருள் ஆய்வு என்ற பெயரில், புத்தர் சிலை வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டு, கட்டுமானப் பணிக்கான முன்னாயத்தங்கள் தொடங்கப்பட்டுள்ளமை தான் இதற்குக் காரணம்.

காலம்காலமாக தமிழ் மக்கள் வழிபாடு செய்து வந்த ஆதிசிவன் ஐயனார் ஆலயம் குருந்தூர்மலையில் உள்ளது.

அங்கு ஆண்டுதோறும் பொங்கல் வைத்து வழிபாடு நடத்துவது, அப்பிரதேச மக்களுடையதாக மரபாக இருந்து வந்துள்ளது.

இவ்வாறான இடத்தில், 2018இல் திடீரென பௌத்த பிக்கு ஒருவர் இராணுவத்தினரின் துணையுடன், புத்தர் சிலையை வைக்க முயன்ற போது தொடங்கியது பிரச்சினை.

அதற்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட இந்த விவகாரம் நீதிமன்றத்துக்குச் சென்று வழக்காக மாறியது.

குறித்த இடத்தில் புராதன விகாரை ஒன்ற இருந்தது என்று கூறிக் கொண்டு,  அந்த இடத்தில் புதிய விகாரை அமைக்க முயன்றிருந்தார் பௌத்த பிக்கு.

நீதிமன்றம் இந்த விவகாரத்தை விசாரித்து வரும் அதேவேளை, தமிழ் மக்கள் தொடர்ந்து வழிபாடு நடத்த அனுமதி அளிக்கப்பட்டதுடன், யாரும் அங்கு புதிய கட்டுமானங்களைச் செய்வதற்கும் தடைவிதிக்கப்பட்டது.

அங்கு தொல்பொருள் ஆய்வை மேற்கொள்வதாயின், யாழ்ப்பாண பல்கலைக்கழக வரலாற்றுத் துறையின் ஆய்வாளர்களுடன் இணைந்தே அதனை முன்னெடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றினால் கட்டளையிடப்பட்டது.

அதற்கு மாறாகவே, இராணுவம், தொல்பொருள் திணைக்களம் என்பன இணைந்து, குருந்தூர் மலையில் தொல்பொருள் ஆய்வு தொடங்கப்பட்டுள்ளது.

அங்கிருந்த ஆதி சிவன் ஐயனாரின், சூலம் பிடுங்கியெறியப்பட்டு, ஆலய வழிபாட்டு எச்சங்கள் அகற்றப்பட்டிருக்கின்றன.

புத்தர் சிலை வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டதுடன், கட்டுமானப் பொருட்களும் குவிக்கப்பட்டுள்ளன.

இதனை தொடங்கி வைத்திருந்தவர், வடக்கைப் பொறுத்தவரையில் அதிகம் அறிமுகமில்லாதவர். ஆனால் சிங்கள பௌத்த பேரினவாதிச் சிந்தனையாளர்களில் ஒருவர்.

முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கவின் மகனும், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக் கலைகள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சருமான விதுர விக்கிரமநாயக்கவே அவர்.

குருந்தூர்மலையில் தமிழரின் பாரம்பரிய வழிபாட்டு உரிமை மறுக்கப்படும் அதேவேளை, அங்கு சிங்கள பௌத்த அடையாளச் சின்னங்களை நிறுவும், தமிழர் பிரதேசங்களை ஆக்கிரமிக்கும் மற்றொரு முயற்சி தொடங்கப்பட்டிருக்கிறது.

போர் முடிவுக்கு வந்த பின்னர், இவ்வாறான ஆக்கிரமிப்புகள் வழமையாக மாறியிருக்கின்றன.

முல்லைத்தீவு மாவட்டத்தில், இது அதிகமாகவே நடந்து கொண்டிருக்கிறது.

செம்மலை, நீராவியடிப் பிள்ளையார் ஆலயம் ஆக்கிரமிக்கப்பட்டு விகாரை அமைக்கப்பட்டது.

நெடுங்கேணி, வெடுக்குநாரி மலையில் உள்ள சிவன் ஆலயத்தில் தமிழர்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்டு, அங்கு தொல்பொருள் ஆய்வு என்ற பெயரில் ஆக்கிரமிப்பு முயற்சிகள் நடக்கின்றன.

இப்போது குருந்தூர்மலையிலும் அதே நிலை ஏற்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் திரியாய், கன்னியா போன்ற பகுதிகளிலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் புனானையிலும் என தமிழர்களின் பாரம்பரிய ஆலயங்கள், வாழ்விடங்கள், வயல்நிலங்கள், என்பன அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றன.

புராதன விகாரை இருந்த இடங்கள் என்ற பெயரில், தொல்பொருள் ஆய்வு என்ற வடிவத்திலேயே, இந்த ஆக்கிரமிப்பு முன்னெடுக்கப்படுகிறது.

போரின் முடிவுக்குப் பிறகு, வடக்கு, கிழக்கில் புராதன விகாரைகளைத் தேடும், அங்கிங்கெல்லாம் பௌத்த விகாரைகளை இருந்தன என்று ஆதாரங்களை முன்வைப்பதில், முக்கிய கவனம்  செலுத்தப்படுகிறது.

வடக்கு, கிழக்கிற்கு வெளியே இருக்கும் பல நூறு விகாரைகள், சிதைந்தும், புனரமைக்கப்படாமலும், உரிய பராமரிப்பின்றியும், கிடக்கின்றன.

அவற்றின் மீது அக்கறை செலுத்தாத தொல்பொருள் துறையினருக்கும், அரச படையினருக்கும், பௌத்த பிக்குகளுக்கும், வடக்கு, கிழக்கும் தான் உறுத்தலாக இருக்கின்றன.

வெறும் தூண்களையும், கற்களையும் வைத்துக் கொண்டு அங்கு புராதன விகாரைகள் இருந்ததாக, புரளியைக் கிளப்பி, புதிய விகாரைகளை அமைக்கும் முயற்சிகள் நடக்கின்றன.

தொல்பொருள் ஆய்வு என்பது முக்கியமானது. மனித நாகரீகத்தின் வளர்ச்சியையும், வேரையும் அது வெளிக் கொண்டு வரும்.

ஆனால், அது வரலாற்றைத் தேடுவதாக இருந்தால், மட்டும் ஆக்கபூர்வமானது.

இலங்கைத் தீவைப் பொறுத்தவரையில் தொல்பொருள் ஆய்வு, என்பது, தமிழரின் வரலாற்றை அழிப்பதற்கான, அதற்கான தடயங்களை இல்லாமல் செய்வதற்காகவே முன்னெடுக்கப்படுகின்றது.

தமிழ் மக்களின் மீதான ஆக்கிரமிப்பின் ஒரு வடிவமாகவே இது இடம்பெறுகிறது. 

இதனை ஒரு இன அழிப்பின் வடிவமாக அடையாளப்படுத்தும் நிலை காணப்படுகிறது.

தொல்பொருள் திணைக்களமும் முழுமையாகவே சிங்கள, பௌத்த மயப்படுத்தப்பட்டு, வரலாற்றைத் திரிபுபடுத்தும், தமிழரின் வரலாற்றுப் பாரம்பரியங்களை மறைப்பதற்கான முயற்சிகளையே முன்னெடுக்கிறது.

அவ்வாறான ஒரு முயற்சி தான் குருந்தூர்மலையில் நடந்து கொண்டிருக்கிறது. 

அங்கு தொல்பொருள் ஆய்வை மேற்கொள்வதாயின், யாழ். பல்கலைக்கழக வரலாற்றுத் துறையைச் சேர்ந்தவர்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்ற நீதிமன்றத்தின் கட்டளையும் இங்கு மீறப்பட்டிருக்கின்றது.

இங்கு தொல்பொருள் ஆய்வை மேற்கொள்வதானால், தமிழ் ஆய்வாளர்களையும், சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், கோரிக்கையை முன்வைத்திருக்கிறார்.

இந்தக் கோரிக்கை தற்போதைய அரசாங்கத்தினால் கவனத்தில் கொள்ளப்படுவதற்கு வாய்ப்பே இல்லை என்பது தான் யதார்த்தம்.

ஏனென்றால், சிறுபான்மையின மக்களின் உணர்வுகளையோ, அவர்களின் மத வழக்கங்களையோ மதிக்கின்ற அல்லது பேணுகின்ற அரசாங்கமாக தற்போதைய அரசாங்கம் இல்லை.

இந்த ஒரு வருட காலப்பகுதியில் இந்த விடயம், சிறுபான்மையின மக்களால் தெளிவாக உணரப்பட்டு விட்டது. 

இங்குள்ள மக்கள் மாத்திரமன்றி வெளிநாடுகளும் அதனை உணர்ந்து கொண்டிருக்கின்றன.

ஏற்கனவே கிழக்கு தொல்பொருள் முகாமைத்துவ செயலணி என ஒன்றை, கடந்த ஜூன் மாதம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷ உருவாக்கியிருந்தார்.

அந்தச் செயலணியில் தமிழர்கள் எவரும் உள்வாங்கப்படாதமை குறித்து அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட, தமிழ் பிரதிநிதிகளால் ஜனாதிபதிக்கு சுட்டிக்காட்டப்பட்டது.

அந்தச் செயலணியின் தமிழ்ப் பிரதிநிதிகளுக்கும் இடமளிக்கப்படும் என்று வாக்குறுதி கொடுக்கப்பட்டு பல மாதங்களாகியும், அது நிறைவேற்றப்படவில்லை.

ஏனைய தமிழ்ப் பிரதிநிதிகளுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் போகட்டும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வேண்டுகோளைக் கூட, மதிக்காத நிலை தான், இந்த அரசாங்கத்தில் நீடிக்கிறது.

தொல்பொருள் முகாமைத்துவ செயலணியில் ஒரு தமிழ்ப் பிரதிநிதிக்குக் கூட இடமளிக்கத் தயாராக இல்லாத அரசாங்கம், குருந்தூர்மலை தொல்பொருள் ஆய்வில் தமிழ் தரப்பினரை இணைத்துக் கொள்ளும் என்று எதிர்பார்ப்பது முட்டாள் தனம்.

இவ்வாறான தொல்பொருள் ஆய்வுகளும், செயற்பாடுகளும் தான் நாட்டை இனரீதியாக பிளவுபடுத்தப்படுத்துகிறது.

இன ஒற்றுமை, ஐக்கியம் குறித்துப் பேசுகின்ற அரசாங்கமே, பிரிவினைவாதிகள் என்று தமிழர் தரப்பை குற்றம்சாட்டிய அரசாங்கமே, தமிழர்களை தொல்பொருள் ஆய்வு விடயத்தில் பிரித்து வைத்து விட்டு தனித்துச் செயற்படுகிறது.

இது இலங்கைத் தீவை இனரீதியாக பிளவுபடுத்தும் நிலைக்கே வழிவகுக்கும்.

இவ்வாறான நிலையில், தற்போதைய அரசாங்கம், நாட்டை ஒன்றுபடுத்த முனைகிறதா அல்லது பிளவுபடுத்த முற்படுகிறதா என்ற கேள்வியே எழுகிறது.

https://www.virakesari.lk/article/99149

About editor 3157 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply