ஞாயிறு நிலா மறைப்பு ஒரு இயற்கை நிகழ்வாகும் !

ஞாயிறு நிலா மறைப்பு ஒரு இயற்கை நிகழ்வாகும் !

நக்கீரன்

நாளை ஞாயிறு மறைப்பு (சூரிய கிரகணம்) இடம் பெறவுள்ளது. இந்த ஆண்டு (2022) நடைபெறும் முதல் ஞாயிறு மறைப்பு இதுவாகும். ஞாயிறு மறைப்பு என்பது இயற்கையான நிகழ்வு. சில பழங்கால மற்றும் நவீன கலாச்சாரங்களில், ஞாயிறு மறைப்பு இயற்கைக்கு அப்பாற்பட்டது அல்லது கெட்ட சகுனங்களாக கருதப்படுகின்றன. கிமு 4ஆம் நூற்றாண்டிலேயே வானியலாளர்கள்  ஞாயிறு மறைப்பு  அல்லது நிலா மறைப்பு சீனாவில் தொடங்கியது. இப்போது இந்த மறைப்புக்கள் இடம்பெறும் காலத்தையும் நேரத்தையும்  நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்க முந்தியே  வானியலாளர்கள்  துல்லியத்துடன் கணித்து விடுகிறார்கள்.

மறைப்பு (eclipse) என்ற சொல் பெரும்பாலும் நிலாவின் நிழல் பூமியின் மேற்பரப்பைத் தாண்டும் போது நிகழும் ஞாயிறு மறைப்பையோ  நிலா புவியின்  நிழலினுள் செல்லும் போது ஏற்படும் நிலா மறைப்பையோ விளக்கப்  பயன்படுத்தப்படுகிறது. 

ஓர் ஆண்டில் ஞாயிறு மறைப்பு  இரண்டு  முதல் நான்கு இடம்பெறுகின்றன.  ஆனால் கிரகணத்தின் பாதையில் உள்ளவர்கள் மட்டுமே அதைப் பார்க்க முடியும். ஞாயிறு மறைப்பு எதனால் ஏற்படுகிறது? இராகு என்ற பாம்பு  சூரியனைக் கவ்வுகிறது, அதனால் பூமியில் இருள் தோன்றுகிறது. இந்த மறைப்பு  நீடிக்கும் நேரத்தில்  சமையல் செய்து சாப்பிடக் கூடாது. கர்ப்பிணிப் பெண்கள் வீட்டைவிட்டு வெளியே வரக் கூடாது எனச் சோதிடர்கள் பயமுறுத்துகிறார்கள். அது மட்டுமல்ல சோதிடர்கள் எந்த நட்சத்திரகாரர்களுக்குக்  கேடு, எந்த இராசிக்காரர்களுக்கு  தோசம் என விலாவாரியாக பலன் சொல்வார்கள். சோதிடர்கள், பஞ்சாங்கக்காரர்களை குறை சொல்ல முடியாது. வழி வழியாக வரும் கற்பனைக் கதைகளின் அடிப்படையில் இப்படியான பலன்களைச்  சொல்கிறார்கள். இவை மூடநம்பிக்கையின் அடிப்படையில்  சொல்லப்படுபவை. இப்படியான மூடநம்பிக்கைகளை மக்கள்   நிராகரிக்க வேண்டும்.

கிரகணத்தால் திடீர் மாற்றம் வருமாம் ...! யாருக்கு தெரியுமா..?
ஞாயிறு மறைப்பு

கோயில்கள் கூட கிரகணத்தின் தாக்கத்தில் இருந்து தப்ப கதவுகளைக்  பல மணி நேரம் மூடிவிடுவார்கள். திருப்பதி கோயில் கதவுகள் நாளை 12 மணித்தியாலத்துக்கு சாத்தப்பட்டிருக்கும். திருப்பதி கோயில் கதவுகள் சாத்தப்படும்போது மற்றக் கோயில்கள் பற்றிச்  சொல்லத்தேவையில்லை. ஒரேயொரு விதிவிலக்கு. திருவண்ணாமலை கோயில் மட்டும் விதிவிலக்கு. இந்தக் கோயிலின் கதவுகள் மூடப்படுவதில்லை.  தீராத நோய்களை தீர்த்து அருளும் கடவுளர்களை விட  ஞாயிறை விழுங்கும் இந்த இராகுவுக்கு அதிக ஆற்றல் இருப்பதாக நம்புகிறார்கள்.

எமது முன்னோர்க்கு  அண்டத்தில் காணப்படும் கோள்கள், நட்சத்திரங்கள் பற்றிய அறிவு இருக்கவில்லை. அவைகள் தெய்வாம்சம் உடைய தெய்வங்கள் என நினைத்தார்கள். நமது முன்னோர்கள் மட்டுமல்ல மற்ற நாடுகளிலும் இதே மாதிரித்தான் நினைத்தார்கள். உண்மைகளைக் கண்டறிய பல நுறு ஆண்டுகள் சென்றன.

ஞாயிறு மறைப்பு

ஞாயிறு மறைப்பு அல்லது நிலா மறைப்பு  ஏன் ஏற்படுகிறது?  எப்போது ஏற்படுகிறது?  என்ற வானியல் அறிவு பண்டைய காலத்தில் வாழ்ந்த மக்களுக்குத்  தெரிந்திருக்கவில்லை. எங்களது புவி ஒரு கோள், அது தன்னைத்தானே 24 மணித்தியாலத்துக்கு ஒருமுறை சுற்றும் அதேவேளை தோராயமாக  150 மில்லியன் கிலோமீட்டர் தூரத்தில் காணப்படும் சூரியனையும் சுற்றிவருகிறது என்பது தெரிந்திருக்கவில்லை. அதற்கான காலம் தோராயமாக 365.24 நாட்கள் என்பதும் சரியாகத் தெரிந்திருக்கவில்லை.

ஞாயிறு  மறைப்பு  (Solar eclipse) என்பது  ஞாயிறு, நிலவு, புவி இந்த மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும் போது ஏற்படுகிறது. ஞாயிறுக்கும் புவிக்கும் இடையில் நிலா வரும் போது அது ஞாயிறை மறைக்கிறது. அப்போது நிலாவின்  நிழல் புவியின் மீது விழும் போது ஞாயிறு மறைப்பு ஏற்படுகிறது.  இது ஞாயிறு   புவிக்கு இடையே நிலவு சரியாக ஒரே நேர்க்கோட்டில் வரும் போது மட்டுமே ஏற்படும். எனவே புதுநிலவு நாளில்  (அமாவாசை)  மட்டுமே ஞாயிறு மறைப்பு நிகழ்கிறது. ஞாயிறு வெளிச்சத்தை நிலவு முழுமையாக மறைக்கும் போது முழுமையான ஞாயிறு மறைப்பும் பகுதியளவாக மறைக்கும் போது பகுதி மற்றும் வளைய மறைப்புகளும் ஏற்படுகின்றன.

ஞாயிறு மறைப்பு

நிலவு புவியைச் சுற்றும் வட்டப்பாதை சுமார் ஐந்து பாகைகள் அளவுக்கு சாய்வாக இருக்கிறது. எனவே ஞாயிறு மறைப்பு நாளைத் தவிர மற்ற நாள்களில் பெரும்பாலும் நிலவின் நிழல் புவியின் மீது விழுவதில்லை.

ஞாயிறு மறைப்பின் போது நிலவின் நிழல் புவியின் ஒரு சில பகுதிகளில் மட்டுமே விழுவதால் மற்ற இடங்களில் அதைக் காண இயலாமல் போகிறது. அப்போது புவி இருக்கும் நிலையைப் பொறுத்து ஞாயிறு மறைப்பு எந்தெந்த இடங்களில் தென்படும் என்பதைக் கணிக்க இயலும்.

  • முழுமையான ஞாயிறு மறைப்பு– நிலவின் கருநிழல் புவியின் மீது பதியும் போது ஏற்படுகிறது. இந்நிகழ்வின் போது ஞாயிறு தகடு முழுமையாக மறைக்கப்படும்.
  • வளையக் ஞாயிறு மறைப்பு- நிலவின் எதிர்நிழல் புவியின் மீீது பதியும் போது ஏற்படுகிறது. இந்நிகழ்வின் போது ஞாயிறு தகட்டின் நடுப்பகுதி மறைக்கப்பட்டு ஒரு வளையம் போன்று காட்சியளிக்கும்.
  • கலப்பு ஞாயிறு மறைப்பு– இவ்வகை மறைப்பானது புவியில் இருந்து காணும் இடத்தைப் பொறுத்து முழுமையான ஞாயிறு மறைப்பாகவோ அல்லது வலய ஞாயிறு மறைப்பாகவோ காட்சியளிக்கும். இது மிகவும் அரிதாக ஏற்படும்.
  • பகுதி ஞாயிறு மறைப்பு– நிலவின் புறநிழல் புவியின் மீது பதியும் போது ஏற்படுகிறது. இந்நிகழ்வின் போது ஞாயிறு தகட்டின் ஒரு பகுதி மறைக்கப்படும்.
நிலா மறைப்பு

ஒக்தோபர் 25, 2022  செவ்வாய் கிழமை மாலை 04.29 மணி முதல் 5.42 வரை சூரிய கிரகணம் நிகழ உள்ளது. இந்த சூரிய கிரகணத்தை இந்தியாவின் பல பகுதிகளில் பார்க்க முடியும்.  ஐரோப்பா,  மேற்கு சைபீரியா, மத்திய ஆசியா, மேற்கு ஆசியா, தெற்காசியா மற்றும் ஆப்பிரிக்காவின் வடகிழக்கிலும்  பார்க்கலாம்.

நிலா மறைப்பு

நிலவு மறைப்பு அல்லது சந்திர கிரகணம் (lunar eclipse) என்பது ஞாயிறு ஒளியால் ஏற்படும் புவியின் நிழலிற்குள் நிலவு கடந்து செல்லும் போது நிகழ்கிறது. ஆண்டில் 2 முதல் 4 நிலா மறைப்பு இடம்பெறுகிறது. 2002 இல் 3 ம் 2020 இல் நான்கும் இடம்பெற்றன.

நிலா மறைப்பு  ஞாயிறுபுவி மற்றும் நிலவு ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும் போது மட்டுமே சாத்தியமாகிறது. எனவே ஒரு முழுநிலவு (பௌர்ணமி) நாளில் மட்டுமே நிலவு மறைப்பு நிகழ்கிறது. நிலவின் இடம் மற்றும் அதன் சுற்றுப் பாதையைப் பொறுத்து நிலவு மறைப்பின் வகையும் அது நீடிக்கும் கால அளவும் வேறுபடும்.

Total lunar eclipse, 16 May 2022 | BBC Sky at Night Magazine
நிலா மறைப்பு

முழுமையான நிலவு மறைப்பின் போது, நிலவின் மீது விழும் ஞாயிறு ஒளியை புவி முற்றிலும் தடுக்கிறது. அப்போது, ஞாயிறு வெளிச்சத்தின் மிகச் சிறிய அளவு புவியின் வளிமண்டலம் வழியாக ஒளிவிலகல் அடைந்து நிலவின் மீது படுகிறது. மேலும் புவியின் வளிமண்டலத்தில் உள்ள தூசு ஞாயிறு ஒளியைச் சிதறடிக்கிறது. இதனால்  ஒளிச்சிதறல் ஏற்பட்டு நிலவு சிவப்பு நிற ஒளியில் தோற்றமளிக்கும். எனவே இது குருதி நிலவு என்றும் அழைக்கப்படுகிறது.

உலகில் குறிப்பிட்ட சில பகுதிகளில் இருந்து மட்டுமே பார்க்க முடியக்கூடிய ஞாயிறு மறைப்பு போலல்லாமல், புவியில் இரவு நேரமாய் இருக்கும் எந்தப் பகுதியில் இருந்தும் நிலவு மறைப்பைக் காண முடியும். சில நொடிகள் வரை மட்டுமே நீடிக்கும் முழு ஞாயிறு மறைப்பைப் போலில்லாமல் நிலவு மறைப்பு சில மணிநேரங்கள் வரை நீடிக்கும். மேலும் ஞாயிறு மறைப்பு போலில்லாமல் நிலவு மறைப்பை எந்தவொரு பாதுகாப்புக் கருவிகளும் இன்றி வெறும் கண்களால் காண இயலும்.

How Do You Tell the Difference Between Total, Annular, Solar, and Lunar  Eclipses? | Britannica
நிலா மறைப்பு

2022 ஆம் ஆண்டின் முதல் முழு நிலா மறைப்பு  மே 15-16 அன்று நிகழ்ந்தது.  அமெரிக்கா, அண்டார்டிகா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் கிழக்கு பசிபிக் பகுதிகளிலிருந்து இதனைப் பார்க்க முடிந்தது. .

2022 ஆம் ஆண்டின் இரண்டாவது நிலா மறைப்பு  நொவம்பர் 8 ஆம் தேதி நிகழும். ஆசியா, அவுஸ்திரேலியா, வட அமெரிக்கா, வடக்கு மற்றும் கிழக்கு ஐரோப்பாவின் சில பகுதிகள் மற்றும் தென் அமெரிக்காவின் பெரும்பாலான பகுதிகளில் தெரியும்.

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply