திராவிடத்தால் வாழ்ந்தோமா இல்லை திராவிடத்தால் வீழ்ந்தோமா?

திராவிடத்தால் வாழ்ந்தோமா இல்லை திராவிடத்தால் வீழ்ந்தோமா?

கிருஷ்ணமூர்த்தி சாமிநாதன்

பதிவு: வீ.பாஸ்கர் மதிமுக

70 வதுகளுக்கு முன்பு தென்தமிழகத்தில் இது போன்ற மோசமான நிலை இருந்தது. அப்போது அரிசி சோறு என்பது தீபாவளி பொங்கல் அமாவாசை போன்ற நல்ல நாள் என சொல்லப்படும் நாள்களில் மட்டும் தான் பெரும்பாலான வீடுகளில் கிடைக்கும். மற்ற நாள்களில் காலையில் கேழ்வரகு கூழ் இரவில் கேழ்வரகு களி. அப்போது நன்றாக மழை பெய்யும். அப்படி இருந்தும் மக்கள் கஸ்டத்தில் தான் இருப்பார்கள். இப்போது போல நவீன கண்டுபிடிப்புகள் இல்லை. ஏக்கருக்கு 10 மூட்டை நெல் விளைவது அதிகம். ஆறு மாதம் மட்டும் வேலை இருக்கும் வேலை இல்லாத நாட்களில் கடன் வாங்கி சாப்பிட்ட காசுக்கு வட்டி குட்டி போட்டு களத்தில் வியையும் நெல்லை அங்கேயே பெரும்பாலும் விற்று விடுவார்கள். அப்படி வட்டிக்குக் கொடுப்தில் எனது தாயாரும் ஒருவர். கார்த்திகை மாதம் 50 ரூபாய் கொடுப்பார்கள். தை மாதம் 50 ரூபாய் கொடுத்ததோடு ஒரு மூட்டை நெல் தரவேண்டும் என்றால் மக்கள் நிலை எப்படி இருந்து இருக்கும் என பாருங்கள்.

ஒருவர் ஒரு பெட்டிக்கடை வைத்து இருப்பார். அதில் கிழங்கு பயறு என அவித்து விற்று நெல் சேர்த்து விடுவார். ஆடு மாடு என எங்களிடம் இருக்கும். சாப்பாட்டுக்கு பிரச்சனை இல்லாமல் தான் எங்களை வளர்த்தார் என்றாலும் பல குடும்பங்கள் மதியம் அந்த கூழும் இருக்காது. நாங்கள் பலரும் மாடுமேய்க்கப் போவோம் 10 பேர் போனால் அதில் ஒரு நான்கு பேர் அந்த கூழும் மதியம் இல்லாமல் வருவார்கள். பெரிய குண்டானில் ஊற்றி மொத்தமாகக் கரைத்து காட்டுக்கீரையைப் பறித்து அவித்து ஆளுக்கொரு டம்ளர் குடிப்போம்.

எங்கள் தலைமுறையோடு தமிழகத்தில் பசி என்ற வார்த்தை இல்லை. இப்போது ஒருவர் சோற்றுக்கு இல்லாமல் இருக்கார் என்றால் அவர் ஒன்றில் முட்டாள் அல்லது சோம்பேறி ஆக இருப்பார். எங்கும் வேலை உண்டு. ஒரு நாள் சம்பளம் ஒரு மாதம் போதும் என்ற அளவில் ரேசன் அரிசி வாங்கலாம். 500 ரூபாய் இருந்தால் போதும்.100 கிலோ கிடைக்கும் . அப்போது அப்படி அல்ல கிழக்கு இராமநாதபுரத்தில் வேலை கோடைகாலத்தில் இருக்காது.

பனை மரம் குட்டி மரமாக இருக்கும் போது அதன் பச்சை மட்டையை அறுத்து கைவலிக்க அதை அடித்து நச்சு நாராக்கி அதைக் காயவைத்து மாலையில் கொண்டு போய் நகரத்தில் கொடுத்து விட்டு கேழ்வரகு வாங்கி வந்து அதைத் திருகையில் திரித்து இரவு கரைத்து வைத்து காலையில் காய்ச்சினால் கொஞ்சம் நன்றாக இருக்கும். ஆனால் இரண்டு நாளைக்கு தேவைப் படும் அளவில் கூட வாங்க முடியாத நிலையில் மக்கள் இருப்பார்கள். அதனால் அப்போதே திரித்து உடனே காய்ச்சுவார்கள். காய்ச்சும் போது இரவு ஒன்பது மணி அவர் பையன் மாடு மேய்த்த அசதியில் நாங்கள் எல்லோரும் நிலவு வெளிச்சத்தில் விளையாடும் போது அவன் தூங்கி விட்டான். தூங்கியவனை அவன் தந்தை எழுப்பி கூழ் குடிக்க வா என்றது இன்றளவும் எனது மனதில் உள்ளது.

ஊர் மாடு மேய்பவர்கள் சலவை செய்பவர்கள் எல்லாம் தினமும் கஞ்சி ஊத்துங்கள் ஆத்தா என ஒரு குண்டானை எடுத்துக் கொண்டு வீடு வீடாக வருவார்கள். இப்போது நான் வசூலுக்கு போய் வீடுவீடாக நிற்கும் போது அந்த ஞாபகம் வரும். இவர்களுக்கே இல்லாத போது அவர்களுக்கு எங்கே கிடைக்கும். ஏதோ சிலர் ஊத்துவார்கள் அதை வாங்கிப் போய் அவர்கள் குடிப்பார்கள்.

கல்யாணம் போன்ற விசேஷ நாட்களில் பாவப்பட்ட இது போன்ற மக்கள் வந்து நிற்பார்கள். அவர்கள் சாப்பிட்டு முடித்த பிறகு மிச்சம் இருந்தால் இவர்களுக்குத் தருவார்கள். பந்தியில் இவர்கள் உட்கார முடியாது. கிராமத்தில் இவர்கள் யார் என்பது தெரியும் அல்லவா? அந்த காலத்தில் அப்படி தான் ஒதுக்கி வைத்து இருந்தார்கள்.

இதையெல்லாம் விட கொடுமை பல கிராமங்களில் குடிக்கத் தண்ணீர் இருக்காது. 100 வீடு கொண்ட எங்கள் கிராமத்தில் ஒரு கிணறு இருக்கும். அது கோடை காலத்தில் தண்ணீர் மிக குறைவாக கிடைக்கும். வீட்டுக்கு ஒரு பானை மட்டும் மாலை மூன்று மணிக்கு தருவார்கள் அதுவும் பட்டியல் சாதி மக்கள் எடுக்ககூடாது. அந்தக் கிணறு சாமி கிணறு அந்த மக்கள் எடுத்தால் சாமி கோவித்துக்கொள்ளும் எனப் பயமுறுத்தி வைத்து இருப்பார்கள். அதுவும் இவர்கள் இறைத்த பிறகு மிச்சம் இருந்தால் தண்ணீர் இறைத்து அவர்களுக்கு ஊத்துவார்கள். இல்லை என்றால் வெறும் பானையைத் தூக்கிக் கொண்டு கவலையோடு போவார்கள். இந்த ஒரு பானை தண்ணீர் குடிப்பதற்கு சமைப்பதற்கு மூன்று கிலோமீட்டர் போய் கொண்டு வருவார்கள். ஆடு மாடு குடிக்க துணி துவைக்க உப்புப் தண்ணீர் தாராளமாக கிடைக்கும்.

எனக்குத் தெரிந்து இந்த நிலை என்றால் அதற்கு முன்பு வந்த பஞ்சங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக செத்தார்களாம். வெள்ளைக்காரன் காலத்தில் வங்காள பஞ்சத்தில் மூன்று கோடி பேர் இருந்த வங்காளத்தில் ஒரு கோடி பேர் செத்தார்களாம். 1876 இல் பஞ்சத்தில் பசியால் நமது தென்தமிழகத்தில் 50 லட்சம் பேர் செத்தார்களாம். ஆனால் நாடு இப்போது எவ்வளவு முன்னேற்றம்? 100 வீடு கொண்ட அந்த கிராமத்தில் தாலி இருக்காது. ஏன் இட்லி பானை கூட நல்ல நாளில் ஒவ்வொரு வீடாக ஓசி வாங்குவார்கள். நெருப்பெட்டி இருக்காது. கங்கு எடுத்து பத்த வைப்பார்கள்.

இன்று அந்தக் கிராமத்தில் ஆயிரம் கண் போதாது பார்பதற்கு என்ற நிலையில் முன்னேற்றம் அடைந்துள்ளன. டாக்டர், இஞ்சினியர் என பட்டதாரிகள் 10 வீட்டில் கார். ஓலை குடிசைகள் இருந்த ஊரில் ஒரு ஓட்டு வீடு கூட இல்லை. எல்லாம் மாடி வீடு. 30 பேருக்கு மேலே அரசு வேலை. தாமிரபரணி தண்ணீர் கவலையின்றித்? தாலி இல்லாத பெண்கள் என்ற நிலை மாறி தாலி செயின் இல்லாத பெண்கள் இல்லை என்ற நிலை.

திராவிட ஆட்சியின் சாதனை எவ்வளவோ எழுதலாம். திராவிடத்தால் வாழ்ந்தோமா இல்லை திராவிடத்தால் வீழ்ந்தோமா?

22

About editor 3118 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply