பொன்னியின் செல்வன் கதைச் சுருக்கம் – பாகம் 1
- முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பிபிசி தமிழ்
24 செப்டெம்பர் 2022
(இது கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ மூலக் கதையின் சுருக்கம்.)
எழுத்தாளரும் பத்திரிகையாளருமான கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவல் கல்கி வார இதழில் 1950ஆம் ஆண்டில் துவங்கி சுமார் ஐந்தாண்டுகள் தொடராக வெளிவந்த ஒரு பிரம்மாண்டமான படைப்பு. புது வெள்ளம், சுழல்காற்று, கொலைவாள், மணிமகுடம், தியாக சிகரம் என 5 பாகங்களையும் 300க்கும் மேற்பட்ட அத்தியாயங்களையும் கொண்டது. கல்கி இதழில் 1950 அக்டோபர் 29ஆம் தேதி இந்தத் தொடர் துவங்கியது.
இந்த நாவலில் மொத்தம் 55 பாத்திரங்கள். அதில் குறிப்பிடத்தக்க பாத்திரங்கள் 37. பத்தாம் நூற்றாண்டில் இந்தியாவின் மிக வலுவான பேரரசுகளில் ஒன்றாக விளங்கிய பிற்காலச் சோழர்களின் வரலாற்றைச் சுற்றிப் பின்னப்பட்ட கற்பனைக் கதையே ‘பொன்னியின் செல்வன்.’
இந்த பிரம்மாண்டமான படைப்பை தமிழில் திரைப்படமாக உருவாக்க எம்.ஜி.ஆர். உள்பட பலரும் முயன்றுள்ளனர். ஆனால், அவை எதும் வெற்றிபெறாத நிலையில், தற்போது லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகவிருக்கிறது பொன்னியின் செல்வன். வரும் செப்டம்பர் 30ஆம் தேதி இந்தப் படத்தின் முதல் பாகம் வெளியாகிறது.விளம்பரம்
இந்த பிரம்மாண்டமான படைப்பின் கதைச் சுருக்கத்தை 3 பாகங்களில் இங்கே படிக்கலாம். இது முதல் பாகம்.
கதைச் சுருக்கம்
கி.பி. 980வாக்கில் சோழ சாம்ராஜ்யம் குமரி முனையிலிருந்து வடபெண்ணைக் கரை வரை பரவியிருந்தது. சுந்தர சோழர் என்று அழைக்கப்பட்ட இரண்டாம் பராந்தகச் சோழன் அந்த நாட்டை ஆண்டு வந்தார். கும்பகோணத்திற்கு அருகில் இருந்த பழையாறை பல ஆண்டுகளாக சோழ நாட்டின் தலைநகராக இருந்த நிலையில், சுந்தரசோழரின் காலத்தில் தஞ்சாவூர் தலைநகரமாக மாற்றப்பட்டிருந்தது.
- “எம்.ஜி.ஆர் ‘பொன்னியின் செல்வன்’ கதையில் அவரது கதாபாத்திரம் இதுதான்”- இயக்குநர் அஜய் பிரதீப் பேட்டி!
- பொன்னியின் செல்வன் பட டிரெய்லர் – 33 குறிப்புகளில் மொத்த படமும்
- பெரிய பழுவேட்டரையர் மீது ரஜினிக்கு ஆர்வம்
சுந்தரசோழ சக்கரவர்த்திக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் இருந்தனர். மூத்த மகன் ஆதித்த கரிகாலன். இரண்டாவதாக குந்தவையும் கடைசியாக அருள்மொழி வர்மனும் பிறந்திருந்தனர். இந்த அருள்மொழி வர்மனே வரலாற்றில் ராஜராஜசோழன் எனப் புகழ்பெற்றிருந்த மன்னன்.
சுந்தரசோழ சக்கரவர்த்தி சில நாட்களாக நோய்வாய்ப்பட்டு, நடக்க முடியாமலும் பிரயாணம் செய்ய முடியாத நிலையிலும் இருந்தார். அண்ணன் தம்பிகளான பெரிய பழுவேட்டரையரும் சிறிய பழுவேட்டரையர் காலாந்தக கண்டரும் அப்போது பெரும் அதிகாரம் படைத்தவர்களாக இருந்தார்கள். சோழநாட்டின் பொக்கிஷம், வரி விதிக்கும் அதிகாரம் ஆகியவை பெரிய பழுவேட்டரையரிடம் இருந்தன. தஞ்சைக் கோட்டையின் காவல், சிறிய பழுவேட்டரையர் வசம் இருந்தது.
மூத்த மகன் ஆதித்த கரிகாலனுக்கு இளவரசுப் பட்டம் சூட்டப்பட்டிருந்தது. அவர் வடதிசைப் படையின் அதிபதியாக காஞ்சிபுரத்தில் தங்கியிருந்தார். தென்திசைப் படையின் மாதண்ட நாயகராக அருள்மொழி வர்மன் இலங்கைக்குச் சென்று போர் புரிந்துகொண்டிருந்தார்.
அருள்மொழி வர்மன் குழந்தையாக இருந்தபோது, பெற்றோருடன் காவிரியில் படகில் சென்றுகொண்டிருந்தபோது, தவறி ஆற்றில் விழுந்துவிட்டான். அவனை ஒரு பெண் தண்ணீரிலிருந்து எடுத்துக் காப்பாற்றிவிட்டு மறைந்துபோனாள். அவள் யார் என்பது தெரியவில்லை. காவிரி அம்மனே அவனைக் காப்பாற்றியதாகக் கருதி, அருள்மொழி வர்மனை பொன்னியின் செல்வன் என மக்கள் அழைத்து வந்தனர்.
சோழர்களின் தலைநகரம் தஞ்சைக்கு மாறிவிட்டாலும், குந்தவையும் வேறு பல சோழ அரச குடும்பப் பெண்மணிகளும் பழையாறை நகரிலேயே தங்கியிருந்தனர்.
இதற்கிடையில், சுந்தர சோழருக்கும் அவருடைய மகன்களுக்கும் எதிராக மிகப் பெரிய சதி நடப்பதாக நாடு முழுவதும் செய்திகள் பரவின. இந்த சதியின் மையமாக இருந்தவர் மதுராந்தகச் சோழன் சுந்தரசோழரின் பெரிய தந்தையான கண்டாராதித்த சோழனின் மகன்தான் இந்த மதுராந்தகன். சில காலம் முன்புவரை சிவபக்தியில் திளைத்திருந்த அவர், சின்னப் பழுவேட்டரையரின் மகளைத் திருமணம் செய்துகொண்டதிலிருந்து மன மாற்றம் அடைந்திருந்தார். சுந்தர சோழருக்குப் பிறகு மதுராந்தகரை சிம்மாசனத்தில் அமர்த்த வேண்டுமென்பது மேலே குறிப்பிட்ட சதிகாரர்களின் நோக்கமாக இருந்தது.
காஞ்சிபுரத்தில் இருந்த பட்டத்து இளவரசனுக்கு இந்தச் செய்திகள் அரசல்புரசலாகத் தெரிந்ததும் தனது தந்தையை பழுவேட்டரையர்களின் ஆதிக்கத்திலிருந்து மீட்டு, காஞ்சிபுரத்திற்குக் கொண்டுவர விரும்பினார். தான் புதிதாகக் கட்டியிருக்கும் பொன் மாளிகைக்கு வந்து சில காலம் சுந்தரசோழர் தங்கியிருக்க வேண்டும் என ஓலை ஒன்றை எழுதி, தனது நம்பிக்கைக்கு உரிய வல்லவரையன் வந்தியத்தேவன் என்ற வீரனிடம் கொடுத்தனுப்பினார்.
- கல்கி கிருஷ்ணமூர்த்தி: பொன்னியின் செல்வன் எழுத்தாளரின் பன்முகத் தன்மை
- ‘பொன்னியின் செல்வன்’ மணிரத்னம் வசமானது – எம்.ஜி.ஆருக்கு சாத்தியப்படாதது ஏன்?
ஆதித்த கரிகாலன் தனது இளம் வயதில் நந்தினி என்ற அர்ச்சகர் வீட்டுப் பெண்ணைக் காதலித்தார். ஆனால் அது தகாத காதல் என கண்டாராதித்தரின் மனைவியும் ஆதித்தனின் பாட்டியுமான செம்பியன் மாதேவி அவனிடம் சொன்னார். ஆனால், ஆதித்தனால் நந்தினியை மறக்க முடியவில்லை. இந்த நிலையில், 60 வயதைக் கடந்த பெரிய பழுவேட்டரையர் நந்தினியைத் திருமணம் செய்துகொண்டார்.
இதையடுத்து, நந்தினி பழுவூர் அரண்மனையின் சர்வாதிகாரியானார். யாரையும் தன் வழிக்குக் கொண்டுவரும் வசீகர சக்தி அவளிடம் இருந்தது. ஒரு முறை, ஆதித்த கரிகாலனிடம் பேசும்போது, சுந்தர சோழரை சிறையில் அடைத்துவிட்டு, பெரிய பழுவேட்டரையரைக் கொன்றுவிட்டு தன்னை மணந்துகொள்ளும்படி கேட்டாள் நந்தினி. இதற்கு ஆதித்தன் மறுத்துவிட்டாலும், அதற்குப் பிறகு அவனுக்கு தஞ்சாவூருக்குச் செல்வதென்றாலே பயமாக இருந்தது.
ஆதித்த கரிகாலனின் ஓலையை எடுத்துக்கொண்டுவந்த வந்தியத்தேவன், கடம்பூர் சம்புவரையர் மாளிகையில் தங்கியிருந்தபோது பழுவேட்டரையர் உள்ளிட்ட சோழ நாட்டுப் பிரமுகர்களின் சதியைப் பற்றித் தெரிந்துகொண்டான். அதன் பிறகு, தஞ்சாவூர் சென்று நந்தினியைச் சந்தித்து முத்திரை மோதிரத்தைப் பெற்றான். அதைப் பயன்படுத்தி சுந்தரசோழரைச் சந்தித்து ஓலையை அளித்தான்.
இதற்குப் பிறகு, பழுவேட்டரையர்கள் அவனைக் கைதுசெய்ய முயற்சித்தபோதிலும் அதிலிருந்து தப்பிய வந்தியத்தேவன், பழையாறையைச் சென்றடைந்தான். குந்தவையைச் சந்தித்து ஆதித்த கரிகாலன் கொடுத்த ஒலையைக் கொடுத்தான். அந்த சந்திப்பிலேயே குந்தவையிடம் உள்ளத்தைப் பறிகொடுத்தான். பிறகு குந்தவை கேட்டுக்கொண்டபடி, அருள்மொழி வர்மனைச் சந்திக்க இலங்கைக்குச் சென்றான்.
“ராஜ்யத்திற்குப் பேரபாயம் வந்திருக்கிறது. உடனே புறப்பட்டு வா” என ஒரு ஒலையை எழுதி அவனிடம் கொடுத்து அனுப்பினாள் குந்தவை. அதை எடுத்துக்கொண்டு வந்தியத்தேவன் இலங்கைக்குப் புறப்பட்டான்.
வந்தியத்தேவன் தன்னுடைய பயணத்தின்போது, ஆழ்வார்க்கடியான் என்ற வீர வைணவனைச் சந்தித்தான். அவன் நாடெங்கும் சென்று தகவல் சேகரிப்பது தெரிந்தாலும், யாருடைய சார்பில் பணியாற்றுகிறான் என்பது தெரியவில்லை. இதனால், அவனிடம் ஜாக்கிரதையாக இருந்தான் வந்தியத்தேவன்.
இதற்கிடையில் ஆதித்த கரிகாலனின் உள்ளம் குழம்பிப் போயிருந்தது. வந்தியத்தேவன் என்னவானான் என்ற தகவலும் தெரியவில்லை. தன்னுடைய தம்பிக்கு இளவரசுப் பட்டம் கட்டிவிட்டு, வெளிநாடுகளுக்குச் சென்று போர் தொடுத்து வெற்றிகளை ஈட்ட விரும்பினான் ஆதித்த கரிகாலன். இதனால், அருள்மொழி வர்மனை வரவழைக்க தன்னுடைய நண்பனான பல்லவ குல பார்த்திபேந்திரனை இலங்கைக்கு அனுப்பினான் ஆதித்த கரிகாலன்.
கோடிக்கரை சென்ற வந்தியத்தேவன், அங்கிருந்த பூங்குழலி என்ற பெண்ணின் உதவியால் இலங்கையை அடைந்து, அருமொழி வர்மனைச் சந்தித்து குந்தவை கொடுத்த ஓலையைக் கொடுத்தான். அருள்மொழி வர்மனும் வந்தியத்தேவனும் நெருக்கமான நண்பர்களாயினர்.
அப்போது இலங்கையில் தான் கண்டறிந்த சில அதிசயமான விவரங்களை அருள்மொழிவர்மன் வந்தியத்தேவனுக்குச் சொன்னார். அதாவது, சுந்தரசோழர் பட்டத்து இளவரசராவதற்கு முன்பாக இலங்கையை அடுத்த பூதத் தீவில் சில காலம் தங்க நேர்ந்தது. அங்கே அவரைத் தாக்கவந்த கரடியிடமிருந்து ஒரு பெண் காப்பாற்றுகிறாள். வாய்பேசவோ, கேட்கவோ இயலாத அந்தப் பெண்ணைக் காதலிக்கும் சுந்தர சோழர், சில காலம் அவளுடன் வாழ்கிறார். பிறகு அவளைப் பிரிந்து நாடு திரும்புகிறார்.
அந்த வாய்பேச முடியாத பெண்தான், பொன்னி நதியிலிருந்து அருள்மொழி வர்மனைக் காப்பாற்றியவள். இலங்கையிலும்கூட மேலும் பல அபாயங்களில் இருந்து அருள்மொழி வர்மனைக் காப்பாற்றுகிறாள் அந்தப் பெண். அந்தப் பெண்ணுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தது குறித்தும் அந்தக் குழந்தைகள் யார் என்பது குறித்தும் அருள்மொழி வர்மனுக்கு சில யூகங்கள் இருக்கின்றன. இதையெல்லாம் தன் தந்தையைச் சந்தித்து சொல்ல விரும்புகிறார் அருள்மொழிவர்மன்.
இதற்கிடையில், ஆதித்த கரிகாலன் அனுப்பிய பார்த்திபேந்திரனும் இலங்கையை வந்தடைந்து அருள்மொழிவர்மனைச் சந்திக்கிறான். தஞ்சாவூருக்கோ, பழையாறைக்கோ செல்லாமல் காஞ்சிபுரத்திற்கு வரும்படி சொல்கிறான் பார்த்திபேந்திரன்.
இதற்கிடையில், அருள்மொழிவர்மனைக் கைதுசெய்து அழைத்துப் போவதற்காக பழுவேட்டரையர்கள் இரண்டு கப்பல்களை அனுப்பியிருப்பதாக பூங்குழலி சொல்கிறாள். இதையடுத்து தானே அவர்களிடம் சென்று சரணடையப் போவதாகச் சொல்லிச் செல்கிறார் அருள்மொழி வர்மன். ஆனால், அந்தக் கப்பல்களில் ஒன்று மூழ்கிவிடுகிறது. இன்னொரு கப்பலை அரேபியர்கள் சிலர் கைப்பற்றுகின்றனர். அரேபியர்கள் கைப்பற்றிய கப்பலில்தான் இளவரசர் அருள்மொழிவர்மன் இருப்பதாகக் கருதிய வந்தியத்தேவன் அந்தக் கப்பலில் ஏறுகிறான்.
ஆனால், அதே கப்பலில் ஏறும் பாண்டியநாட்டு ஆபத்துதவி ரவிதாஸனும் அவனுடைய தோழனும் அரேபியர்களைக் கொன்றுவிட்டு, வந்தியத்தேவனை கப்பலிலேயே கட்டிப்போட்டுவிட்டு, படகில் தப்பிச் செல்கிறார்கள். வந்தியத்தேவனை மீட்பதற்காக பார்த்திபேந்திரனுடன் அந்தக் கப்பலை பின் தொடர்ந்து செல்கிறார் அருள்மொழி வர்மன்.
இதற்கிடையில் வந்தியத்தேவன் இருக்கும் கப்பலை இடி தாக்கி, தீப்பிடிக்கிறது. இதையடுத்து, அவனை ஒரு படகில் சென்று காப்பாற்றுகிறார் அருள்மொழிவர்மன். ஆனால், இருவருமே கடல்கொந்தளிப்பில் சிக்கிக் கொள்கிறார்கள். அவர்களை அடுத்த நாள் காலையில் பூங்குழலி காப்பாற்றுகிறாள்.
பொன்னியின் செல்வன்: கதைச் சுருக்கம் – பாகம் 2
- முரளிதரன் காசி விஸ்வநாதன்
- பிபிசி தமிழ்
25 செப்டெம்பர் 2022
(இது கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ மூலக் கதையின் சுருக்கம்.)
எழுத்தாளரும் பத்திரிகையாளருமான கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவல் கல்கி வார இதழில் 1950ஆம் ஆண்டில் துவங்கி சுமார் ஐந்தாண்டுகள் தொடராக வெளிவந்த ஒரு பிரம்மாண்டமான படைப்பு. புது வெள்ளம், சுழல்காற்று, கொலைவாள், மணிமகுடம், தியாக சிகரம் என 5 பாகங்களையும் 300க்கும் மேற்பட்ட அத்தியாயங்களையும் கொண்டது. கல்கி இதழில் 1950 அக்டோபர் 29ஆம் தேதி இந்தத் தொடர் துவங்கியது.
இலங்கையிலிருந்து அருள்மொழிவர்மனை அழைத்துவர பழுவேட்டரையர் அனுப்பிய கப்பல்களில் ஒன்று கரைதட்டிவிட, மற்றொன்று புயலில் சிக்குகிறது. அந்தக் கப்பலில் இருந்து ஒரு படகில் அருள்மொழி வர்மனும் வந்தியத்தேவனும் தப்புகிறார்கள். கடலில் தத்தளித்த அவர்களை பூங்குழலி காப்பாற்றுகிறாள் என்பதை கடந்த பாகத்தில் பார்த்தோம். தொடர்ந்து என்ன நடக்கிறது என்பதைப் பார்க்கலாம்.
துறைமுகப்பட்டினமான நாகப்பட்டனத்திற்கு இளவரசன் அருள்மொழிவர்மன் வந்துசேர்ந்தால், அவரை வரவேற்று அழைத்துக் கொண்டு தஞ்சாவூருக்குச் செல்லலாம் என நினைத்து பெரிய பழுவேட்டரையரும் நந்தினியும் வந்திருந்தனர். ஆனால், புயல் வீசியதால் தான் அனுப்பிய கப்பல்கள் என்ன ஆனதோ எனத் திகைத்து நின்றுகொண்டிருந்தார்.விளம்பரம்
அப்போது வேறொரு கப்பலில் வந்த பார்த்திபேந்திரன் ஒரு படகு மூலம் கரைக்கு வந்து இறங்கி, பழுவேட்டரையரை சந்தித்து கப்பல்களுக்கு நேர்ந்த கதியை விவரித்தான். இளவரசனின் கதியும் வந்தியத்தேவனின் கதியும் தெரியவில்லை என்றான் பார்த்திபேந்திரன். இதைக் கேட்ட பழுவேட்டரையர் மனம் கலங்கிப்போனார்.
- பொன்னியின் செல்வன் கதைச் சுருக்கம் – பாகம் 1
- பொன்னியின் செல்வன் பட டிரெய்லர் – 33 குறிப்புகளில் மொத்த படமும்
இந்த நேரத்தில், நந்தினியை சந்தித்த பார்த்திபேந்திரன் அவள் அழகில் சொக்கிப் போனான். பார்த்திபேந்திரனிடம் பேசிய நந்தினி, ஆதித்த கரிகாலனை எப்படியாவது கடம்பூருக்கு வரவழைக்க வேண்டுமென்றாள். அவனை அங்கே வரவழைத்து, சம்புவரையர் மகளை அவனுக்குத் திருமனம் செய்துகொடுத்துவிடலாம் என்றும் சோழப் பேரரசை அதற்குப் பிறகு, இரண்டாகப் பிரித்து ஆதித்த கரிகாலனுக்கும் மதுராந்தகனுக்கும் கொடுத்துவிடலாம் என்றும் சொன்னாள். அதற்கு பார்த்திபேந்திரன் ஒப்புக்கொண்டான்.
இதற்கிடையில் பூங்குழலியின் படகில் வந்தியத்தேவனும் அருள்மொழி வர்மனும் வேறு பாதையில் கோடிக்கரை வந்தனா். இளவரசருக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டதால், குந்தவை சொல்லி அனுப்பியபடி நாகப்பட்டனம் சூடாமணி விகாரைக்கு கொண்டு சென்றனர். இளவரசருக்கு நாகப்பட்டனம் சூடாமணி விகாரையின் தலைமை பிக்குவே சிகிச்சை அளித்தார்.
இதற்குப் பிறகு வந்தியத்தேவன் குந்தவையைப் பார்ப்பதற்காக பழையாறையை நோக்கிச் சென்றான். அப்படிப் போகும் வழியில் சிலர் அவனை மடக்கி நந்தினியின் முன்பாக நிறுத்தினார்கள். நந்தினி அவனிடம் கொடுத்த முத்திரை மோதிரத்தை திரும்பக் கேட்டாள். அதனை இலங்கையில் தளபதி பறித்துக்கொண்டுவிட்டதாகச் சொன்னான் வந்தியத்தேவன்.
இதையடுத்து, இலங்கையில் வந்தியத்தேவன் சந்தித்த வாய்பேச முடியாத பெண்மணியான மந்தாகினியை மீண்டும் எங்காவது பார்த்தால் தன்னிடம் கூட்டிவர வேண்டுமென வந்தியத்தேவனிடம் சொன்னாள் நந்தினி. மேலும், கந்தமாறனை முதுகில் குத்த உத்தரவிட்டது பழுவேட்டரையர் என்பதையும் சொன்னாள். இதற்குப் பிறகு, வந்தியத்தேவன் தன்னிடம்தான் முத்திரை மோதிரம் இருப்பதாகச் சொன்னான். ஆனால், அந்த மோதிரத்தை அவனையே வைத்துக்கொள்ளச் சொன்ன நந்தினி, மீண்டும் அவனை கடத்தப்பட்ட இடத்திலேயே இறக்கிவிடும்படி வீரர்களிடம் சொன்னாள்.
அங்கிருந்து பழையாறையை வந்தடைந்த வந்தியத்தேவன், எப்படி கோட்டைக்குள் புகுவது என்று யோசித்தான். அப்போது மதுராந்தகர் ரதத்தில் வந்து கொண்டிருந்தார். அவரிடம் தன்னை ஒரு ஜோசியக்காரன் என்று அறிமுகப்படுத்திக்கொண்ட வந்தியத்தேவன், அவர் மூலமாகவே கோட்டைக்குள் புகுந்தான்.
பிறகு ஆழ்வார்க்கடியானுடன் சேர்ந்து குந்தவையை சந்தித்த வந்தியத்தேவன், சூடாமணி விகாரையில் அருள்மொழிவர்மன் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவரை பூங்குழலியும் சேந்தன் அமுதனும் கவனித்துக் கொள்வதாகவும் தெரிவித்தான்.
இதற்கிடையில் மக்கள் அரண்மனை முன்பாகக் கூடி அருள்மொழி வர்மன் இறந்திருக்கலாம் எனக் கூச்சலிட்டார்கள். ஆனால், செம்பியன் மாதேவியும் குந்தவையும் அவர் காப்பாற்றப்பட்டிருக்கக்கூடும் என்பதைத் தெரிவித்தார்கள். கூட்டத்திலிருந்த வந்தியத்தேவனை கண்ட வைத்தியரின் மகன், ‘ஒற்றன்’ என்று குற்றம்சாட்டவும் இருவரும் சண்டைபோட ஆரம்பித்தார்கள். இதைக் கண்ட அநிருத்தர், இருவரையும் கைதுசெய்ய உத்தரவிட்டார்.
இதற்கிடையில் மதுராந்தகரைச் சந்தித்த அவரது தாய் செம்பியன் மாதேவி, அவனை சிவபக்தராக வளர்க்கவே தானும் அவருடைய தந்தையும் ஆசைப்பட்டதாகவும் பழுவேட்டரையர் அவருடைய மனதை மாற்றிவிட்டதாகவும் கூறினார். ஆனால், இதை மதுராந்தகர் கேட்கவிரும்பவில்லை. தாயையே தகாத வார்த்தைகளால் பேசிவிட்டு வெளியேறினார்.YouTube பதிவை கடந்து செல்ல, 1காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்
குந்தவையும் அநிருத்தரும் சந்தித்துப் பேசிய பிறகு, வந்தியத்தேவனை ஆதித்த கரிகாலனிடம் அனுப்பி, அவன் கடம்பூருக்கு வராமல் தடுக்க வேண்டும் என்று சொன்னார் அநிருத்தர். சிறையிலிருந்த வந்தியத்தேவனை சந்தித்த குந்தவை, அவனைக் காதலிப்பதாகத் தெரிவித்தாள். பிறகு ஆதித்த கரிகாலனை சந்தித்து, அவனுடனேயே இருக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டாள்.
அடுத்த நாள் அநிருத்தர் கொடுத்த ஓலையை எடுத்துக்கொண்டு, ஆழ்வார்க்கடி யானுடன் சேர்ந்து காஞ்சிபுரத்திற்குப் புறப்பட்டான் வந்தியத்தேவன். போகும் வழியில் குடந்தை ஜோதிடர் வீட்டில் வானதியைச் சந்தித்தான் வந்தியத்தேவன். அவள் தனது தாத்தாவைப் பார்க்கப்போவதாக குந்தவையிடம் சொல்லிவிட்டுப் புறப்பட்டிருந்தான். வந்தியத்தேவனைப் பார்த்த அவள், தான் பௌத்த மதத்திற்கு மாற விரும்புவதாகவும் தன்னை நாகப்பட்டனம் சூடாமணி விஹாரையில் சேர்ப்பிக்கும்படியும் கோரினாள் வானதி. ஆனால், தான் முக்கியமான வேலையாகச் சொல்லி அதை மறுத்துவிட்டான் வந்தியத்தேவன். இதற்குப் பிறகு அநிருத்தரின் ஆட்கள் அவளது பயணத்தைத் தடுத்து, மீண்டும் அவளைக் குந்தவையிடம் சேர்ப்பித்தனர்.
இந்தக் களேபரத்தில் வந்தியத்தேவனும் ஆழ்வார்க்கடியானும் பிரிந்துவிட, அமாவாசை இருட்டில் ஒரு மண்டபத்தைச் சென்றடைந்தான் வந்தியத்தேவன். அந்த மண்டபத்திற்குள் ஒரு குழந்தை இருந்தது. அந்தக் குழந்தையோடு அவன் பேசிக்கொண்டிருந்தபோது ரவிதாசன் உள்ளிட்ட சதிகாரர்கள் அங்கே வந்துவிட்டனர். அவர்கள் வந்தியத்தேவனைப் பிடித்து கட்டிப்போட்டார்கள். சிறிது நேரத்தில் நந்தினியும் அங்கே வந்து சேர்ந்தாள். அந்தச் சிறுவனுக்கு பாண்டிய இளவரசனாக பட்டாபிஷேகம் நடந்தது. இவையெல்லாம் முடிந்த பிறகு, வந்தியத்தேவனை கொல்லாமல் விட்டுவிடலாம் என்று சொன்னாள் நந்தினி.
அவர்கள் புறப்பட்ட பிறகு ஆழ்வார்க்கடியான் வந்து வந்தியத்தேவனை விடுவித்தான்.
இதற்கிடையில் வானதியும் குந்தவையும் நாகப்பட்டனம் சென்று இளவரசனைச் சந்தித்தனர். இலங்கையில் உள்ள வாய்பேச முடியாத பெண்ணை தஞ்சைக்கு எப்படியாவது அழைத்துவர வேண்டுமென இளவரசனிடம் கூறினாள் குந்தவை. நந்தினியை வைத்து சுந்தரசோழரை எப்படி பயமுறுத்திவருகிறார்கள் என்பதையும் விவரித்தாள். பழுவேட்டரையர்களும் சில சிற்றரசர்களும் சேர்ந்துகொண்டு செய்துவரும் சதி பற்றியும் கூறினாள்.
காஞ்சிபுரத்திலிருந்து கந்தமாறன், பார்த்திபேந்திரனுடன் ஆதித்த கரிகாலன் கடம்பூரை நோக்கிப் புறப்பட்டான். ஆதித்த கரிகாலன் புறப்பட்டது தெரியாமல் காஞ்சிபுரத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்த ஆழ்வார்க்கடியானும் வந்தியத்தேவனும் கடம்பூர் பக்கமிருந்த ஐய்யனார் கோவிலில் தங்கினார்கள். அங்கிருந்த மண் யானைக்குக் கீழிருந்த சுரங்கத்தின் வழியாக கடம்பூர் அரண்மனைக்குள் சென்ற வந்தியத்தேவன், கந்தமாறனின் சகோதரி மணிமேகலையின் உதவியால், அரண்மனையின் மேல்மாடத்தைச் சென்றடைந்தான்.
அன்று இரவு ஆதித்த கரிகாலனும் கந்தமாறனும் அங்கே வருவதாக மணிமேகலை சொன்னாள். விரைவிலேயே வந்தியத்தேவனுடன் ஆழ்வார்க்கடியான் வந்து இணைந்துகொண்டான். பிறகு, அரண்மனைக்கு வெளியில் சென்று, ஆதித்த கரிகாலனைச் சந்தித்து அவனுடன் சேர்ந்துகொண்டான் வந்தியத்தேவன்.
பிறகு அரண்மனைக்கு வந்த ஆதித்த கரிகாலன், அங்கிருந்த அனைவரிடமும் குத்தலாகவே பேசினான். கந்தமாறனை தன் நண்பன் வந்தியத்தேவன் கத்தியால் குத்தவில்லை என்றும் சொன்னான். இதற்கிடையில், நந்தினியைச் சந்தித்த மணிமேகலை, தனக்கு வந்தியத்தேவன் மேல்தான் விருப்பம் என்றும் ஆனால், தன்னை ஆதித்த கரிகாலனுக்கு திருமணம் செய்து வைக்கப்போகிறார்கள் என்றும் கூறினாள்.
கோடிக்கரையில் சேந்தன் அமுதனும் பூங்குழலியும் பேசிக்கொண்டிருந்தார்கள். பூங்குழலியைக் காதலிப்பதாக சேந்தன் அமுதன் சொன்னான். அதை அவள் ஏற்கவில்லை. அந்தத் தருணத்தில் மந்தாகினி அங்கு வந்தாள். ஆனால் இவர்கள் அவளை அழைத்ததும் ஓடத் துவங்கினாள். சிறிது நேரத்தில் அவளை வேறு யாரோ சிலர் மடக்கிப் பிடித்து, பல்லாக்கில் வைத்து தஞ்சைக்கு அழைத்துச் செல்லத் துவங்கினர்.YouTube பதிவை கடந்து செல்ல, 2காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்
YouTube பதிவின் முடிவு, 2
இந்த விவகாரம் குறித்து சக்கரவர்த்தியிடம் முறையிடலாம் என்று முடிவுசெய்த பூங்குழலியும் சேந்தன் அமுதனும் தஞ்சையை நோக்கிப் புறப்பட்டனர். வழியில் மழையின் காரணமாக பல்லாக்கு நின்றபோது, அந்த வழியாக வந்த பூங்குழலி சேந்தன் அமுதனும் வந்தனர். மந்தாகினிக்குப் பதிலாக பூங்குழலி பல்லக்கில் ஏறிக்கொண்டாள். மந்தாகினியை சேந்தன் அமுதன் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.
தஞ்சை அரண்மனையில் பல்லக்கில் வந்தது பூங்குழலி என்பதை அறிந்த அநிருத்த பிரம்மராயர் ஆச்சரியமடைந்தார். மந்தாகினி தனக்கு அத்தை என்பதை விளக்கினாள் பூங்குழலி. பிறகு, மந்தாகினியைக் காட்டுவதாகக் கூறி ஆழ்வார்க்கடியானை சேந்தன் அமுதன் வீட்டிற்கு அழைத்துச் சென்றாள் பூங்குழலி.
அவர்கள் சென்ற பிறகு, அங்கிருந்த குந்தவையிடம், தான் செய்த தவறுகளை ஒப்புக்கொண்டார் அநிருத்த பிரம்மராயர். “தன் மகன்களுக்கு ஆபத்துவரும் என்பதால்தான் மதுராந்தகருக்கு பட்டம் கட்ட விரும்புகிறா் சக்ரவர்த்தி. அவரிடம் ஒருமுறை அருள்மொழி வர்மனைக் காட்டிவிட்டாள் அவருடைய அச்சம் தீர்ந்துவிடும்” என்றாள் குந்தவை. அதேபோல, “தானும் மந்தாகினி உயிரோடு இருப்பதை சக்ரவர்த்தியிடம் தெரிவித்துவிட்டால் அவருடைய பயம் தீர்ந்துவிடும் என நினைத்ததாகவும் ஆனால், அதனை பூங்குழலி கெடுத்துவிட்டதாகவும்” குற்றம் சுமத்தினார் அநிருத்த பிரம்மராயர்.
அப்போது அங்கு வந்த பூங்குழலியும் ஆழ்வார்க்கடியனும், மந்தாகினியை கோட்டைக்கு அழைத்துவந்தபோது, கூட்டத்தோடு கலந்து காணாமல்போய்விட்டதாகத் தெரிவித்தனர். அந்தக் கூட்டத்தில் ரவிதாஸனைப் பார்த்துவிட்ட மந்தாகினி அவனால் ஏதாவது தீய காரியம் நடக்கக்கூடும் என்பதால் அவனைப் பின்தொடர்ந்தாள்.
அவனும் ரவிதாஸனும் ஒரு நிலவறை மூலமாக சுந்தர சோழரின் படுக்கை அறையை சென்றடைந்தார்கள். மூன்று நாட்கள் அந்த நிலவரையிலேயே காத்திருந்து, பிறகு வேல் எறிந்து சுந்தரசோழரைக் கொல்ல வேண்டுமென்றான் ரவிதாஸன். பிறகு சோமன் சாம்பவனை அங்கே விட்டுவிட்டு அவன் சென்றுவிட்டான்.
- பெரிய பழுவேட்டரையர் மீது ரஜினிக்கு ஆர்வம்
- “எம்.ஜி.ஆர் ‘பொன்னியின் செல்வன்’ கதையில் அவரது கதாபாத்திரம் இதுதான்”- இயக்குநர் அஜய் பிரதீப் பேட்டி!
இதையெல்லாம் கவனித்த மந்தாகினி, இருள் சூழ்ந்ததும் சோமன் சாம்பவனை பயமுறுத்தி விரட்டிவிட்டு, அவர்கள் சென்ற நிலவறை வழியாகவே சுந்தர சோழரின் படுக்கை அறையைச் சென்றடைந்தாள். அப்போது அங்கே பூங்குழலி, அநிருத்தர் ஆகியோர் இருந்தனர். அநிருத்தர் சக்கரவர்த்தியிடம் எல்லா உண்மையையும் சொன்னார். அருள்மொழிவர்மன் பத்திரமாக இருப்பதை பூங்குழலி தெரிவித்தாள். பிறகு எல்லோரும் அங்கிருந்து சென்ற பிறகு, மந்தாகினி அங்கே வந்தாள்.
அவளைப் பார்த்ததும் அருகில் இருந்த உலோகப் பொருள் ஒன்றை அவள் மீது எறிந்தார். அவள் கத்திய சத்தம் கேட்டதும் அனைவரும் ஓடிவந்தார்கள். அப்போது குந்தவை, அவள்தான் மந்தாகினி என்றும் அவள் சாகவில்லையென்றும் கூறினாள்.
இதற்கிடையில், நந்தினி சில மந்திரவாதிகளைச் சந்திப்பதைப் பற்றியும் ஒரு சிறுவனை பாண்டிய இளவரசனாக மகுடாபிஷேகம் செய்ததைப் பற்றியும் அநிருத்தர் சொன்னார். நந்தினி மன்னருடைய மகளாகக்கூட இருக்கலாம் என்றும் சொன்னார்.
மந்தாகினி உயிருடன் இருந்தது மன்னருக்கு நிம்மதியை அளித்தது. ஆனால், மந்தாகினி தூங்கவில்லை. அன்று இரவு, பூங்குழலியும் மந்தாகியினியும் புறப்பட்டு சுரங்கத்தை அடைந்தனர். காலையில், அவர்களைக் காணாமல் மற்றவர்கள் தேடினர்.
இதற்கிடையில் கடம்பூரில் ஆதித்த கரிகாலன் தொடர்ந்து குதர்க்கமாகவே பேசிவந்தான். பிறகு ராஜ்யத்தை மதுராந்தகனுக்கே கொடுத்துவிடுவதாகவும் தான் படையெடுத்துச் செல்ல பொருளுதவி செய்தால் போதுமென்றும் சொன்னான். அதற்கு மன்னரைக் கேட்க வேண்டும் என பழுவேட்டரையர் சொன்னதும், அவரைக் கேட்டா அருள்மொழிவர்மனை சிறைப்பிடித்து வர ஆள் அனுப்பினீர்கள் என்று கேட்டான்.
இதற்குப் பிறகு தான் தஞ்சைக்குத் திரும்புவதாகச் சொன்னார் பழுவேட்டரையர். ஆனால், பழுவேட்டரையரை இழிவாகப் பேசியதற்காக தான் கடம்பூரிலேயே தங்கியிருந்து ஆதித்த கரிகாலனை பழிவாங்க விரும்புவதாகச் சொன்னாள் நந்தினி. பிறகு பழுவேட்டரையர் தஞ்சைக்குப் புறப்பட்டார்.
பிறகு ஆதித்த கரிகாலன், வந்தியத்தேவன், பார்த்திபேந்திரன், கந்தமாறன் ஆகியோர் வேட்டைக்குச் சென்றனர். அப்போது ஆற்றில் ஒரு படகில் நந்தினியும் மணிமேகலையும் இருப்பதைப் பார்த்தனர். ஆதித்த கரிகாலன் நந்தினியைச் சந்தித்து, அவள் தன்னுடைய சகோதரி என்றான். அவள் அதை ஏற்கவில்லை. அடுத்த நாள் நள்ளிரவு தன்னை அந்தப்புரத்தில் சந்திக்க வேண்டுமென வந்தியத்தேவனிடம் சொன்னாள் நந்தினி.
பொன்னியின் செல்வன் கதைச் சுருக்கம் – பாகம் – 3
- முரளிதரன் காசி விஸ்வநாதன்
- பிபிசி தமிழ்
26 செப்டெம்பர் 2022
(இது கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ மூலக் கதையின் சுருக்கம்.)
எழுத்தாளரும் பத்திரிகையாளருமான கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவல் கல்கி வார இதழில் 1950ஆம் ஆண்டில் துவங்கி சுமார் ஐந்தாண்டுகள் தொடராக வெளிவந்த ஒரு பிரம்மாண்டமான படைப்பு. புது வெள்ளம், சுழல்காற்று, கொலைவாள், மணிமகுடம், தியாக சிகரம் என 5 பாகங்களையும் 300க்கும் மேற்பட்ட அத்தியாயங்களையும் கொண்டது. கல்கி இதழில் 1950 அக்டோபர் 29ஆம் தேதி இந்தத் தொடர் துவங்கியது.
ஐந்து பாகங்களைக் கொண்ட பொன்னியின் செல்வன் நாவலின் கதைச் சுருக்கத்தை மூன்று பகுதிகளாக பிபிசி வெளியிடுகிறது. முதல் பகுதியில் முதலிரண்டு பாகங்களின் சுருக்கமும் இரண்டாவது பகுதியில் 3வது, 4வது பாகங்களின் சுருக்கமும் இந்த மூன்றாவது பகுதியில், ஐந்தாவது பாகத்தின் சுருக்கத்தையும் படிக்கலாம்.
இதற்கு முந்தைய இரண்டாவது பகுதியில், ஆதித்த கரிகாலன் கடம்பூர் அரண்மனைக்கு வந்துவிட்டதையும் அங்கே அனைவரிடமும் குத்தலாகப் பேசிக்கொண்டிருந்தான் என்பதையும் பார்த்தோம். மதுராந்தகனை அழைத்துவர பழுவேட்டரையர் தஞ்சாவூருக்குப் புறப்பட்டார். அன்று இரவு தன்னை வந்து சந்திக்கும்படி வந்தியத்தேவனிடம் நந்தினி கேட்டுக்கொண்டாள் என்பதோடு கதைச் சுருக்கத்தின் இரண்டாவது பகுதி நிறைவடைந்தது.
இதற்கிடையில் நாகப்பட்டனம் சூடாமணி விஹாரையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த அருள்மொழி வர்மனும் தலைமை பிக்குவும் நிறைய விஷயங்களைப் பற்றி விவாதித்தார்கள். தனக்கு உடல் நலம் சரியாகிவிட்டதால், தான் தஞ்சாவூருக்குப் போய் தனது தந்தை சுந்தரசோழரைப் பார்க்க விரும்புவதாகச் சொன்னார் அருள்மொழி வர்மர்.
ஆனால், அவர் அங்கு தங்கியிருக்கும் விஷயம் வெளியில் பரவியதால், மக்கள் விஹாரைக்கு முன்பாக வெளியில் குவிந்துவிட்டார்கள். இளவரசரைப் பார்க்க வேண்டுமனக் கூச்சலிட்டார்கள். ஆகவே அருள்மொழி வர்மர் அங்கிருந்து சென்றுவிடுவதென்றும், அவர் சென்ற பிறகு யாராவது ஒருவரை உள்ளே அழைத்து வந்து காண்பிக்கலாம் எனவும் முடிவுசெய்யப்பட்டது. அந்தத் திட்டப்படி, கூட்டத்தில் இருந்த பூங்குழலியின் அண்ணன் முருகய்யன் உள்ளே அழைத்துவரப்பட்டான்.
அவன் இளவரசரை அங்கிருந்து, சிறிது தூரத்தில் இருந்த ஆனை மங்கலத்துக்கு விஹாரையின் பின்பக்கத்தில் இருந்த படகுத் துறை வழியாக, படகில் அழைத்துச் சென்றான். சிறிது தூரம் சென்றவுடன், கடுமையான புயல் வீசியதில் சூடாமணி விகாரை நீரில் மூழ்குவதைப் பார்த்த அருள்மொழிவர்மர், திரும்பவும் அங்கே சென்று தலைமை பிக்குவை படகில் மீட்டுக்கொண்டு ஆனைமங்கலம் அரண்மனைக்கு வந்தார்.
அங்கே மழைக்காக பெரிய அளவில் மக்கள் கூட்டமும் ஒதுங்கியிருந்தது. மழை நின்ற பிறகு, ஒரு வியாபாரியின் வேடத்தில் இளவரசரும் முருகய்யனும் வெளியில்புறப்பட்டார்கள். அவர்களை வழியில் பார்த்த முருகய்யனின் மனைவி ராக்கம்மாள், இளவரசரை அடையாளம் கண்டுகொண்டு, கத்தினாள். இதையடுத்து அவர் நாகப்பட்டனம் மக்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்டு ஒரு நாள் கழித்தார். பிறகு தனது வேஷத்தை கலைத்துவிட்டு யானை மேல் ஏறி தஞ்சாவூருக்குச் சென்றார்.
புயல் அடித்துக்கொண்டிருந்த நாளில்தான் கடம்பூரிலிருந்து தஞ்சாவூருக்குப் புறப்பட்டார் பழுவேட்டரையர். தஞ்சாவூருக்குச் சென்று மதுராந்தகனை அழைத்துவரும்படி, நந்தினிதான் அவரை அனுப்பியிருந்தாள். அந்த சமயத்தில் கந்தமாறன், ஆதித்த கரிகாலன், வந்தியத்தேவன் என மூன்று இளைஞர்களுக்கு மத்தியில் நந்தினியை விட்டுவந்தது அவருக்கு ஏற்புடையதாக இல்லை. நந்தினி தொடர்பாக பல சந்தேகங்கள் அவருக்கு தோன்றியபடி இருந்தன. இவையெல்லாம் யோசித்தபடி கொள்ளிடத்தைக் கடப்பதற்கு படகில் பயணித்தார் பழுவேட்டரையர்.
படகு கரையை நெருங்கும் சமயம் அதனருகில் ஒரு மரம் விழுந்ததால், சட்டெனக் கவிழ்ந்தது. படகில் இருந்த மற்ற வீரர்கள் உஷார் நிலையில் இருந்ததால், நீந்திக் கரையேறினர். ஆனால், பழுவேட்டரையர் எதையோ யோசித்தபடி இருந்ததால் உடனடியாக கரையேற முடியவில்லை. ஒரு கட்டையைப் பிடித்துக்கொண்டு மிதந்த அவர், இரவுக்குப் பிறகு ஏதோ ஓர் இடத்தில் கரையேறி, அருகில் இருந்த துர்க்கை கோவிலை அடைந்து அங்கிருந்த பிரசாதங்களை சாப்பிட்டுவிட்டு களைப்பில் தூங்கிப் போனார்.
நந்தினியை நம்ப வேண்டாமென துர்க்கை சொல்வதைப் போல அவருக்குக் கனவு வந்தது. அடுத்த நாள் காலையில் எழுந்து பார்த்தபோதும் கோவிலைச் சுற்றி வெள்ளம் ஓடிக்கொண்டிருந்தது. அந்த இடம் திருப்புறம்பியம் என்பது அவருக்குப் புரிந்தது. அன்று இரவில் அந்த மண்டபத்தைவிட்டு அவர் வெளியேற நினைத்த போது, யாரோ ‘ரவிதாஸா’ என்று அழைக்கும் குரல் கேட்டது. பழுவேட்டரையருக்கு நந்தினியைத் தேடிவரும் மந்திரவாதியின் நினைவுவந்தது. உடனே, அவனைப் பற்றித் தெரிந்துகொள்ள மண்டபத்தின் முன்பு மயங்கிக் கிடப்பதைப் போல படுத்துக்கொண்டார். வந்தவன் தேவராளன் என்பது பழுவேட்டரையருக்குத் தெரிந்தது. கோவிலுக்குள் வந்த தேவராளன், பழுவேட்டரையர் அங்கு கிடப்பதைப் பார்த்து பயந்துபோய், அங்கிருந்து ஓடிவிட்டான்.
பழுவேட்டரையரும் அவனைப் பின்தொடர்ந்து ஓடினார். முடிவில் பிருதிவீபதியின் பள்ளிப்படை கோவிலை சென்றடைந்தார். அங்கே தேவராளனும் ரவிதாஸனும் பேசிக்கொண்டிருந்தார்கள். அடுத்த நாள் சுந்தர சோழனின் இரண்டு மகன்களும் செத்துப் போவார்கள் என்று தேவராளனிடம் சொன்னான் ரவிதாஸன்.
தேவராளனாக இருந்தவன், சில காலத்திற்கு முன்பாக அரண்மனையில் வேலை பார்த்து தன்னால் வேலையிலிருந்து நீக்கப்பட்ட பரமேஸ்வரன் என்பது பழுவேட்டரையருக்குத் தெரிந்தது. அவர்கள் இருவரும் பேசிக் கொண்டதிலிருந்து பல விஷயங்கள் அவருக்குப் புரியவந்தன. அதாவது, தஞ்சாவூருக்கு இளவரசர் யானை மீது வந்துகொண்டிருப்பதாகவும் வரும் வழியில் பாகனை மாற்றிவிட்டு, அருள்மொழி வர்மனைக் கொல்லத் திட்டமிட்டிருப்பதாகவும் அவர்கள் பேசிக்கொண்டார்கள். சுந்தர சோழர் உள்ள அரண்மனையின் நிலவறையில் காத்திருக்கும் சோமன் சாம்பவன் வேலை எறிந்து சுந்தர சோழரை கொல்வான் என்றும் கூறினார்கள்.
மேலும், வீரபாண்டியன் இறப்பதற்கு முன்பாக பழுவூர் ராணியைத் தனது பட்ட மகிஷியாக்கிக் கொண்டதையும் பாண்டிய குமாரன் கையிலிருந்து வீரவாளைப் பெற்றுக்கொண்டதையும் ரவிதாஸன் நினைவுகூர்ந்தான்.
ஆதித்த கரிகாலனைக் கொன்றுவிட்டு, பழியை வந்தியத்தேவன் மீது போடுவதற்கு நந்தினி திட்டமிட்டிருப்பதையும் விளக்கினான். இவற்றையெல்லாம் தெரிந்துகொண்ட பழுவேட்டரையர், ரவிதாஸனையும் தேவராளனையும் பிடித்து தனது கைகளாலேயே இறுக்கிக் கொல்ல முயன்றார். ஆனால், அவர்கள் அவர் மீது பாழடைந்த மண்டபத்தை தள்ளிவிட்டுவிட்டு, தப்பிச் சென்றார்கள்.
நினைவிழந்து கிடந்த பழுவேட்டரையர் கண்விழித்துப் பார்த்தபோது வானத்தில் தூமகேது, மறைவதைப் பார்த்தார். அன்று திட்டமிடப்பட்டிருக்கும் கொலைகளைத் தடுத்து நிறுத்த வேண்டுமெனக் கருதினார். ஆகவே தட்டுத்தடுமாறி நடந்து சென்று குடந்தை ஜோதிடர் வீட்டை அடைந்தார். ஜோதிடரின் வீட்டில் குந்தவையும் வானதியும் இருந்தனர்.
தஞ்சைக்கு வரும் அருள்மொழி வர்மனை பழையாறையிலேயே தடுத்து நிறுத்துவதற்காகப் புறப்பட்ட குந்தவையும் வானதியும், ஜோதிடரைச் சந்தித்து ஆலோசனை கேட்க அங்கு வந்திருந்தனர். அவர்களிடம், அன்று நடக்கவிருந்த சதித் திட்டங்களையெல்லாம் விளக்கிவிட்டு, குந்தவை வந்த ரதத்தை எடுத்துக்கொண்டு தான் கடம்பூருக்குச் செல்லவிருப்பதாகச் சொன்னார் பழுவேட்டரையர். அங்கே சென்று நந்தினியைக் கொல்லப்போவதாகவும் சொன்னார்.
ஆனால், நந்தினி தங்கள் சகோதரி என்றும் அவளைக் கொல்ல வேண்டாமென்றும் குந்தவை கேட்டுக்கொண்டாள். பிறகு, தான் தஞ்சைக்கே திரும்பி காரியங்களைக் கவனிப்பதாகச் சொன்னாள் குந்தவை. பழுவேட்டரையர் சென்ற சிறிது நேரத்திற்குப் பிறகு ஆழ்வார்க்கடியான் ஜோதிடர் வீட்டிற்குள் நுழைந்தான்.
வானதியை அருள்மொழி வர்மனுக்கு திருமணம் செய்துவைப்பதோடு, அவனுக்குப் பட்டம் சூட்ட வேண்டுமென வலியுறுத்தியும் பழுவேட்டரையர்களை பதவிநீக்கம் செய்ய வேண்டுமெனக் கோரியும் தென்திசைத் தளபதி பூதி விக்கிரமகேசரி தஞ்சைக் கோட்டையை முற்றுகையிட வந்துகொண்டிருப்பதாக ஆழ்வார்க்கடியான் சொன்னான். மேலும் திருக்கோவலூர் மலையமானும் படையுடன் வந்து கொண்டிருப்பதாகத் தெரிவித்தான்.
- பொன்னியின் செல்வன் பட டிரெய்லர் – 33 குறிப்புகளில் மொத்த படமும்
- பெரிய பழுவேட்டரையர் மீது ரஜினிக்கு ஆர்வம்
அந்த நேரத்தில் பூங்குழலியும் அங்கே வந்தாள். தனது அத்தை சுரங்க நிலவறையில் சக்கரவர்த்தியை பாதுகாப்பதற்காக ஒளிந்துகொண்டிருப்பதாகத் தெரிவித்தாள். அந்த நேரத்தில் அருகில் இருந்த ஆற்றின் வெள்ளம் குடந்தை ஜோதிடரின் குடிசையை நெருங்கவே, எல்லோரும் அருகில் உள்ள கோவில் மண்டபத்தில் ஏறிக்கொண்டார்கள். வானதி மட்டும் கீழே சீக்கிக் கொண்டாள். பிறகு, அந்தப் பக்கம் மிதந்துவந்த குடந்தை ஜோதிடரின் கூரை மீது வானதி ஏறிக் கொண்டாள். அவளைக் காப்பாற்ற பூங்குழலி படகில் சென்றாள்.
இதற்கிடையில் இளவரசர் அருள்மொழி வர்மனைக் கொல்ல யானைப் பாகன் மூலம் திட்டமிடப்பட்டிருந்தது அவருக்குத் தெரிந்துவிட்டது. அந்தப் பாகனை விரட்டிவிட்டு அவரே பாகனைப் போல யானையைச் செலுத்த ஆரம்பித்தார். செல்லும் வழியில் வெள்ளத்தில் மாட்டிக்கொண்டிருந்த பூங்குழலியையும் வானதியையும் காப்பாற்றி, நடந்த விஷயங்களையெல்லாம் கேட்டறிந்தார் அருள்மொழி வர்மர்.
அந்த நேரத்தில் கொடும்பாளூர்த் தலைமைக்கு உட்பட்ட பராந்தகச் சோழப் பெரும் படையும், தென்பாண்டிய நாட்டிலிருந்த தெரிஞ்ச கைக்கோளர் பெரும் படையும், ஈழத்துப்போரில் ஈடுபட்டிருந்த அரிஞ்சய சோழப் பெரும் படையும் தஞ்சையை நோக்கி வந்து கொண்டிருந்தன. இதையடுத்து தஞ்சைக் கோட்டையின் கதவுகளை மூட சின்னப் பழுவேட்டரையர் உத்தரவிட்டார். அடுத்ததாக என்னசெய்வதென்று கோட்டைக்கு பூதி விக்கிரமகேசரி ஆலோசித்துக் கொண்டிருந்தபோது, யானை மீது வானதியும் பூங்குழலியும் வந்தனர். யானைப் பாகனாக வந்த அருள்மொழிவர்மனை அவருக்கு அடையாளம் தெரியவில்லை.
தான் சக்ரவர்த்திக்கு குந்தவையிடமிருந்து செய்தி கொண்டுவந்திருப்பதாக வானதி சொன்னாள். அருள்மொழி வர்மனுக்கு என்ன ஆனது என்பது பற்றி தனக்குத் தெரியும் என்றாலும் அதைப் பற்றி தான் சொல்ல முடியாது என்றும் கூறினாள். சக்கரவர்த்தியை சந்திக்க தன்னை உள்ளே அனுமதிக்க வேண்டுமென்றும் தெரிவித்தாள். இதையடுத்து “நாளை பகல் பொழுதுக்குள் தாங்கள் சக்கரவர்த்தியைத் தரிசிக்க முடியவில்லையென்றால், கோட்டையைத் தகர்ப்போம்” என சின்ன பழுவேட்டரையரிடம் சொல்லுமாறுகூறி வானதியை அனுப்பிவைத்தார் விக்கிரமகேசரி.
வானதி வந்திருக்கும் செய்தி தெரிந்ததும், கோட்டைக் கதவுகளைத் திறந்து யானையை உள்ளே அனுமதிக்கச் சொன்னார் சின்னப் பழுவேட்டரையர். பிறகு வானதி, பெரிய பழுவேட்டரையர் குடந்தை ஜோதிடர் வீட்டில் தங்களிடம் சொன்ன தகவல்களை அவரிடம் தெரிவித்தாள். சிறிது நேரத்தில், யானைப் பாகன் வேடத்தில் வந்தது அருள்மொழிவர்மன்தான் என்பதும் சின்னப் பழுவேட்டரையரான காலாந்தக கண்டருக்குப் புரிந்தது. பிறகு சக்கரவர்த்தியைப் பார்க்க அவர்கள் சென்றனர்.
சக்கரவர்த்தியைப் பார்க்கப் போகாமல், வெளியிலேயே நின்றுவிட்ட பூங்குழலி சின்னப் பழுவேட்டரையரிடம், பொக்கிஷ நிலவறையில் யாராவது ஒளிந்துகொண்டிருக்கலாம் என்று கூறினாள். அப்படி யாராவது இருந்தால் தேடிப் பார்க்கலாம் என்று சின்னப் பழுவேட்டரையரும் பூங்குழலியும் சென்றார். அந்த நேரத்தில் சுந்தர சோழர் இருந்த அந்தப்புர அறையில், ஒரு பெண் கத்தும் விபரீதமான சத்தம் கேட்டது. பூங்குழலி அந்தப்புரத்திற்குள் ஓடிப் போய் பார்த்தபோது, சுந்தரசோழர் அருள்மொழி வர்மனின் கையைப் பிடித்தபடி பேசிக்கொண்டிருந்தார். அப்போது மந்தாகினி தேவி திடீரென அவர்களுக்கு முன்வந்து நின்றாள். சுந்தரசோழரை கொல்ல வீசப்பட்ட வேல், அவள் மீது பாய்ந்தது. சுந்தரசோழரின் மடியில் படுத்தபடி உயிர்நீத்தாள் மந்தாகினி.
கடம்பூர் அரண்மனையில் இருந்த நந்தினி மிகுந்த பரபரப்புடன் இருந்தாள். பெரிய பழுவேட்டரையரின் படகு மூழ்கிய செய்தி தெரிந்தபோதும் கலக்கமடையாமல் இருந்தாள். ஆதித்த கரிகாலன் உன்மத்தம் பிடித்த நிலையில் இருந்தான். நண்பர்கள் யாரையும் நம்பவில்லை. வந்தியத்தேவனை அன்று முழுவதும் தன் முகத்திலேயே விழிக்காதே என்று கூறிவிட்டான்.
- பொன்னியின் செல்வன் படத்தை முன்பே எடுக்காமல் போனது நல்லது: இயக்குநர் மணிரத்னம்
- கல்கி கிருஷ்ணமூர்த்தி: பொன்னியின் செல்வன் எழுத்தாளரின் பன்முகத் தன்மை
இதற்குப் பிறகு வந்தியத்தேவனை சந்தித்த கந்தமாறனின் சகோதரி மணிமேகலை, வந்தியத்தேவன் கடம்பூரைவிட்டு உடனடியாக வெளியேறும்படியும் இல்லாவிட்டால் ஆபத்து ஏற்படுமென்றும் சொன்னாள். ஆனால், அதை அவன் ஏற்கவில்லை. பிறகு, கடம்பூர் மாளிகையின் வேட்டை மண்டபத்திற்குள் யாரோ இருப்பதாகத் தெரிவதாகவும் உள்ளே சென்று பார்க்கலாம் என்றும்கூறி மணிமேகலையும் வந்தியத்தேவனும் உள்ளே சென்றனர்.
அந்த மண்டபத்திற்குள் வந்த ரவிதாஸனும் வேறு சிலரும் சேர்ந்து வந்தியத்தேவனையும் மணிமேகலையையும் கட்டிப்போட்டனர். ஆனால், அவர்கள் தங்களை விடுவித்துக் கொண்டனர். அப்போது அங்கு வந்த நந்தினி, விரைவில் ஆதித்த கரிகாலன் இங்கே வரவிருப்பதாகவும் அதற்குள் இந்த இடத்தைவிட்டுச் சென்றுவிடும்படியும் கூறினாள். வந்தியத்தேவன் நந்தினியிடம், ஆதித்த கரிகாலன் நந்தினியின் சகோதரன் என்று சொன்னான்.
இதற்குள் கந்தமாறனும் ஆதித்த கரிகாலனும் வரும் ஓசை கேட்டது. அவர்கள் வந்ததும் வந்தியத்தேவன் திரைச்சீலைக்குப் பின் ஒளிந்துகொண்டான். மணிமேகலையும் கந்தமாறனும் அந்த இடத்தைவிட்டு வெளியேறினர். தன்னைக் கொன்றுவிடும்படி கரிகாலன் நந்தினியிடம் சொன்னான். இதையெல்லாம் மறைவில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த வந்தியத்தேவனை ஒரு காளாமுக உருவம் கழுத்தை நெறித்தது. அவன் மயங்கிக் கீழே விழுந்தான்.
அந்தக் காளாமுகன் கத்தியைத் தூக்கி எறியவும் ஆதித்த கரிகாலன் மாண்டு கீழே விழுந்தான். மயக்கம் தெளிந்து எழுந்த வந்தியத்தேவன் ஆதித்த கரிகாலனின் உடலை எடுத்துக் கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்த சம்புவரையரும் கந்தமாறனும் வந்தியத்தேவன்தான் கொலைகாரன் எனக் குற்றம்சாட்டினர். கந்தமாறன் அவனைக் கொல்லப்போனபோது, அதனைத் தடுத்த சம்புவரையர் வந்தியத்தேவனை ஒரு கட்டிலின் காலில் கட்டிவைத்துவிட்டு அறையைவிட்டு வெளியேறினார்.
எப்படியோ அதிலிருந்து வந்தியத்தேவன் விடுவித்துக்கொண்டபோது, அந்த அறையில் தீ பரவியது. இதையடுத்து ஆதித்த கரிகாலனின் உடலை அங்கிருந்து மீட்ட வந்தியத்தேவன், கோட்டையைத் தகர்த்துக்கொண்டு உள்ளே நுழைந்த மலையமானிடம் அந்த உடலை ஒப்படைத்தான். உடல் தஞ்சைக்குக் கொண்டுபோகப்பட்டது. வந்தியத்தேவன் சிறையில் அடைக்கப்பட்டான்.
உண்மையான கொலைகாரர்களைத் தேடிவந்த ஆழ்வார்க்கடியான், நந்தினியும் அவளது கூட்டாளிகளும் பச்சை மலை அடிவாரத்திற்குப் போகும் செய்தி அறிந்து அங்கு புறப்பட்டான். மந்தாகினியின் மரணத்திற்குப் பழிவாங்க ஆழ்வார்க்கடியானுடன் பூங்குழலியும் சேர்ந்துகொண்டாள். அவர்கள் அங்கே போய்ச் சேர்ந்தபோது ஒரு குகையில் காளமுகன் தோற்றத்தில் பெரிய பழுவேட்டரையர் இருப்பதைப் பார்த்தார்கள்.
அப்போதுதான் உண்மையில் என்ன நடந்தது என்பது அவர்களுக்குத் தெரியவந்தது. அதாவது, காளாமுகன் தோற்றத்தில் சம்புவரையர் அரண்மனைக்கு வந்த பழுவேட்டரையர், வேட்டை அறையில் ஒளிந்திருந்தபடி நந்தினியைக் கொல்ல விரும்பினார். அவளை நோக்கிக் கத்தியை எறிந்தார். அது ஆதித்த கரிகாலனைக் கொன்றுவிட்டது. இதைத் தெரிந்துகொண்ட ஆழ்வார்க்கடியான் அங்கிருந்து புறப்பட்டான்.
அந்த நேரத்தில், சின்னப்பழுவேட்டரையரும் கந்தமாறனும் படைகளுடன் அங்கே வந்தனர். நந்தினி அங்கிருந்து தப்பிச் சென்றாள்.
தஞ்சாவூரில் ஆதித்த கரிகாலனின் இறுதி ஊர்வலம் நடந்தது. அப்போது, மதுராந்தகன் குறித்த உண்மைத் தகவலை செம்பியன் மாதேவி அவனிடம் தெரிவித்தாள். அதைக் கேட்டு அதிர்ந்துபோனான்.
இதற்கிடையில், குழப்பத்தில் இருந்த குந்தவையை வந்து சந்தித்த மணிமேகலை, தான்தான் ஆதித்த கரிகாலனைக் கொன்றவள் என்றாள். ஆதித்த கரிகாலன் குந்தவைக்கு எழுதிய ஒலை ஒன்றையும் கொடுத்தாள். அதில், ஆதித்த கரிகாலன் “வந்தியத்தேவன் எந்தக் குற்றமும் செய்யவில்லை. நன்றாகப் பாதுகாத்தான். கடம்பூரில் தனக்கு ஏதாவது நேர்ந்துவிட்டால், அது என் விதிதான்” என்று எழுதியிருந்தான்.
அங்கு வந்த அருள்மொழி வர்மன் குந்தவையுடன் பேசியபோது, நந்தினியும் மதுராந்தகனும் மந்தாகினியின் பிள்ளைகள் என்று தெரிந்தாலும் அவர்கள் சுந்தரசோழனின் குழந்தைகள் இல்லை என்றும் தெரிந்தது. இதனால், மதுராந்தகனுக்கு ராஜ்யத்தைக் கொடுக்கக்கூடாது என்றாள் குந்தவை. இதற்கிடையில், பாதாளச் சிறையில் இருக்கும் வந்தியத்தேவனை விடுவிக்க புறப்பட்ட அருள்மொழி வர்மனைத் தடுத்து நிறுத்தினார்கள் மலையமானும் பெரிய வேளாரும். இதற்கிடையில், சின்னப் பழுவேட்டரையரின் கோட்டைத் தளபதி பதவி பறிக்கப்பட்டது. பெரிய வேளாரிடம் அந்தப் பதவி ஒப்படைக்கப்பட்டது.
பிறகு எல்லோரும் பாதாளச் சிறையில் போய் வந்தியத்தேவனைச் சந்தித்து, ஆதித்த கரிகாலனின் மரணம் பற்றிக் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம் என நினைத்தார்கள். ஆனால், அங்கே போனபோது வந்தியத்தேவனும் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பைத்தியக்காரன் ஒருவனும் தப்பித்துப் போயிருந்தார்கள். அவர்களுக்குப் பதிலாக வைத்தியர் மகன் பினாகபாணி அங்கே கட்டப்பட்டிருந்தான். அவனை விடுவித்தார்கள்.
சிறையிலிருந்து தப்பிய வந்தியத்தேவனும் பைத்தியக்காரனும் சேந்தன் அமுதனின் வீட்டிற்குப் போனார்கள். அதற்குள் அங்கு வந்து சேர்ந்திருந்த பினாகபாணி, சேந்தன் அமுதனை கொல்ல நினைத்து அவன் மீது வேலை எறிய முயன்றான். ஆனால், அதை வந்தியத்தேவன் தடுக்கவே, அவனைக் குத்திவிட்டு ஓடிவிட்டான் பினாகபாணி. பூங்குழலியும் சேந்தன் அமுதனும் வந்தியத்தேவனை குடிசைக்குள் தூக்கிச் சென்று சிகிச்சை அளித்தார்கள்.
தப்பிச்சென்ற வந்தியத்தேவனைப் பிடிக்க கந்தமாறனும் பினாகபாணியும் சில வீரர்களும் சென்றார்கள். அவர்கள் ஒரு ஆற்றை மூங்கில் பாலத்தின் மூலம் கடக்க முயன்றபோது, கயிற்றை அவிழ்த்துவிட்டான் ஒளிந்திருந்த பைத்தியக்காரன். அனைவரும் ஆற்றில் விழுந்தார்கள். ஆற்றில் விழுந்த பினாகபாணியை கருத்திருமன் கத்தியால் குத்தக்கொன்றான்.
பூங்குழலியின் குடிசைக்குச் சென்ற ஆழ்வார்க்கடியான், சேந்தன் அமுதன் மதுராந்தகனின் உடைகளை அணிந்துகொண்டு அவனைப்போல நடிக்க வேண்டுமென்றும் இல்லாவிட்டால் குழப்பம் ஏற்படுமென்றும் தெரிவித்தான். முதலில் மறுத்த சேந்தன் அமுதன், பிறகு அதற்கு ஒப்புக்கொண்டான். யானை மீது அமர்ந்து சேந்தன் அமுதனும் சிவிகைக்குள் வந்தியத்தேவனும் இருந்தபடி, அநிருத்தரின் மாளிகையை சென்று அடைந்தார்கள்.
இதற்கிடையில் சுந்தர சோழர் சின்னப் பழுவேட்டரையருக்கு மீண்டும் கோட்டைத் தளபதி பதவியைத் தர உத்தரவிட்டார்.
இதற்குப் பிறகு சேந்தன் அமுதன்தான் செம்பியன் மாதேவியின் உண்மையான மகன் என்றுகூறி சக்கரவர்த்தி முன்பு நிறுத்தினார்கள். தான் வளர்த்த மகன் உண்மையில் அரச குடும்பத்தவன் இல்லை என்பதால்தான் அவனுக்கு பட்டம் கட்டுவதை எதிர்த்ததாக செம்பியன் மாதேவி தெரிவித்தார்.காணொளிக் குறிப்பு,
பொன்னியின் செல்வன் கதைச்சுருக்கம் – பாகம் 1
அரண்மனையில் சிகிச்சையில் இருந்த வந்தியத்தேவனை அருள்மொழி வர்மன் சந்தித்தார். அவரிடம் நடந்ததையெல்லாம் கூறிய வந்தியத்தேவன், காளாமுகர் உருவத்தில் வந்தது பெரிய பழுவேட்டரையர்தான் என்ற சந்தேகம் தனக்கு இருப்பதாகக் கூறினான்.
இதற்குப் பிறகு சுந்தரசோழர் மந்திராலோசனைக் கூட்டத்தை நடத்தினார். அதில் கலந்துகொண்ட பெரிய பழுவேட்டரையர் பல விஷயங்களை விளக்கினார். காளாமுக வேஷம் போட்டு நந்தினியின் அறைக்குச் சென்றதாகவும் நந்தினி மீது வீசிய கத்தி ஆதித்தன் மேல் பட்டு அவன் இறந்துவிட்டதாகவும் அதனால் ஆதித்தன் கொலைக்கு தானே காரணம் என்று சொல்லிவிட்டு தன்னை மாய்த்துக்கொள்ளப்போவதாகச் சொன்னார். அதை அருள்மொழிவர்மன் தடுத்தார்.
அப்போது ஆதித்தனைக் கொன்ற கத்தியால் தன்னைத்தானே குத்திக்கொண்டார் பெரிய பழுவேட்டரையர். சாவதற்கு முன்பாக, அருள்மொழிவர்மருக்கு முடிசூட்ட வேண்டுமெனக் கூறிவிட்டு இறந்தார் பழுவேட்டரையர்.
இதற்கு சில நாட்களுக்குப் பிறகு வந்தியத்தேவன், கந்தமாறன், பார்த்திபேந்திரன் ஆகியோர் நண்பர்களானார்கள். பார்த்திபேந்திரனுக்கு வடதிசை மாதண்ட நாயகர் பதவி அளிக்கப்பட்டது. தைமாதம் பிறந்ததும் அருள்மொழி வர்மனுக்கு பட்டம் சூட்ட ஏற்பாடாகியிருந்தது. புதிய மதுராந்தகனான சேந்தன் அமுதனுக்கும் பூங்குழலிக்கும் எளிய முறையில் திருமணமும் நடந்து முடிந்தது.
முடிசூட்டும் தினத்தன்று, தன் தலையில் சூட்டவிருந்த மகுடத்தை மதுராந்தகன் தலையில் சூட்டினார் அருள்மொழிவர்மர். இதையடுத்து உத்தமசோழன் என்ற பெயரில் மன்னனானான் சேந்தன் அமுதன்.
செம்பியன் மாதேவி வளர்த்த பழைய மதுராந்தகன், “அமரபுஜங்கள் நெடுஞ்செழியன்” என்ற பெயரில் பாண்டிய நாட்டு ஆபத்துதவிகளோடு சேர்ந்து செயல்பட்டான். அருள்மொழி வர்மனுக்கும் வானதிக்கும் திருமணம் நடைபெற்றது.
இதற்குப் பிறகு, உடல்நலம் குன்றியிருந்த மணிமேகலையை சென்று வந்தியத்தேவன் பார்த்தான். அவனுடைய மடியிலேயே உயிர் துறந்தாள் மணிமேகலை.
பொன்னியின் செல்வன் கதை இதோடு நிறைவடைந்தது.
இதற்குப் பிறகு நாவல் தொடர்பான சில சந்தேகங்களுக்கு கல்கி விளக்கமளித்திருந்தார்.
1. குந்தவையும் வந்தியத்தேவனும் மணம் செய்து கொள்கிறார்கள். தஞ்சைப் பெரிய கோவிலில் உள்ள கல்வேட்டு ஒன்றில், “இராஜ ராஜ தேவரின் திருத்தமக்கையார், வல்லவரையர் வந்தியத்தேவரின் மகாதேவியார், ஆழ்வார் பராந்தகர் குந்தவையார்” என்று பொறிக்கப்பட்டுள்ளது.
2. உத்தம சோழருக்குப் பட்டம் கட்டிப் பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு அவர் இறந்ததும், அருள்மொவி வர்மர் சிங்காதனம் ஏறுகிறார். ‘இராஜ ராஜ சோழன்’ என்ற பட்டத்துடன் சோழ நாட்டை ஆள்கிறார்.
3. பழைய மதுராந்தகன் அமரபுஜங்கன் நெடுஞ்செழியன் ஆபத்துதவிகளின் தூண்டுதலாலும் ஈழ மன்னன், சேரமன்னன் உதவிகொண்டும் பாண்டிய நாட்டைக் கவர்ந்து முடிசூட்டிக் கொள்ள முயல்கிறான். ராஜராஜ சோழன் பதவியேற்றதும் அமரபுஜங்கன் நெடுஞ்செழியனைப் போரில் வெல்கிறார்.
4. திருப்புறம்பயம் காட்டில் முடிசூட்டப்பட்ட இளம் பாண்டியனும் பிற்காலத்தில் ராஜேந்திர சோழனால் போரில் முறியடிக்கப் படுகிறான்.
5. வானதியும் அருள்மொழி வர்மனும் திருமணம் செய்து கொள்கிறார்கள். அவர்களுக்குப் பிறந்த மகனே ராஜேந்திரச் சோழன் என்ற பெயரில் புகழ்பெறுகிறான்.
6. சுந்தர சோழர் காஞ்சிபுரம் பொன்மாளிகையில் மூன்று ஆண்டு காலம் வசித்துவிட்டு அங்கேயே உயிர் துறந்து ‘பொன்மாளிகைத்துஞ்சிய தேவர்’ என்று பெயர் பெறுகிறார். (https://www.bbc.com/tamil/arts-and-culture-63030657)
பொன்னியின் செல்வன்: பழுவேட்டரையர்கள் யார்? அவர்கள் ஆண்ட நாடு இப்போது எங்கே, எப்படி உள்ளது?
- முரளிதரன் காசி விஸ்வநாதன்
- பிபிசி தமிழ்
27 செப்டெம்பர் 2022
பொன்னியின் செல்வன் நாவலின் முக்கியக் கதாபாத்திரங்களாக வரும் பழுவேட்டரையர்கள் யார்? அவர்கள் ஆண்ட நாடு இப்போது தமிழ்நாட்டில் எங்கே இருக்கிறது? பிபிசி தமிழின் ஒரு நேரடி விசிட்.
கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவலில் வந்தியத்தேவன், அருள்மொழி வர்மன் என்ற இரு கதாநாயக பாத்திரங்களுக்கு இணையாக முக்கியத்துவம் பெறும் இரண்டு பாத்திரங்கள் பழுவேட்டரையரின் பாத்திரங்கள்தான். சின்னப் பழுவேட்டரையர், பெரிய பழுவேட்டரையர் என இந்த பாத்திரங்கள் நாவலில் குறிப்பிடப்படுகின்றன.
பழுவேட்டரையர் என்ற சிற்றரச வம்சத்தினர், நீண்ட காலமாகவே சோழ வம்சத்தினருக்கு யுத்தங்களில் துணையாக இருந்ததாக கல்கி தனது நாவலில் குறிப்பிடுகிறார். பிற்காலச் சோழ வம்சத்தைத் துவக்கிவைத்த விஜயாலயச் சோழன் திருப்புறம்பியத்தில் போரிட்டபோது, அவருக்குத் தோள் கொடுத்துத் தூக்கிச் சென்றவராக ஒரு பழுவேட்டரையர் கல்கியால் குறிப்பிடப்படுகிறார்.
விஜயாலயச் சோழனுக்கு அடுத்த வந்த ஆதித்த சோழன், முடிசூட்டும்போது தலையில் கிரீடத்தை வைத்துப் பட்டாபிஷேகம் செய்வித்தவர் ஒரு பழுவேட்டரையர். அந்த ஆதித்த சோழன் யானை மீது பாய்ந்து பல்லவ மன்னனான அபராஜிதவர்மனைக் கொன்றபோது ஆதித்தன் பாய்வதற்கு வசதியாக முதுகும் தோளும் கொடுத்தவர் ஒரு பழுவேட்டரையர் என்கிறார் கல்கி.
- பொன்னியின் செல்வன் கதைச் சுருக்கம் – பாகம் 1
- பொன்னியின் செல்வன்: கதைச் சுருக்கம் – பாகம் 2
- பொன்னியின் செல்வன் கதைச் சுருக்கம் – பாகம் – 3
அதேபோல, பராந்தக சக்கரவர்த்தி நடத்திய பல போர்களில் முன்னணியில் புலிக் கொடியை எடுத்துச் சென்றவர்களாகவும் அரிஞ்சய சோழருக்கும் சுந்தர சோழருக்கும் வீரத் தொண்டுகள் புரிந்து உதவியவர்களாகவும் பழுவேட்டரையர்கள் பொன்னியின் செல்வனில் குறிப்பிடப்படுகின்றனர்.
இவர்கள் சோழ வம்சத்தோடு நெருங்கிய திருமண உறவும் கொண்டிருந்தனர். பழுவேட்டரையர் ஒருவரின் மகளை பராந்தகச் சோழன் திருமணம் செய்திருக்கிறார். அதேபோல, ராஜராஜ சோழனுக்கு முன்பிருந்த உத்தம சோழனும் பழுவேட்டரையர் ஒருவரின் மகளை மணந்திருக்கிறார்.
பொன்னியின் செல்வனில் சுந்தர சோழரின் ஆட்சிக் காலத்தில் இரு பழுவேட்டரையர்கள் ஆதிக்கம் செலுத்துபவர்களாகக் குறிப்பிடப் படுகின்றனர். ஒருவர் பெரிய பழுவேட்டரையர் எனப்படும் கண்டன் அமுதனார்.
இவர் சோழ நாட்டுத் தனாதிகாரியாகவும் சுங்க வரி விதிக்கும் அதிகாரம் கொண்டவராகவும் இருந்தார். வயது முதிர்ந்த காலத்தில் நந்தினி தேவியை திருமணம் செய்து கொண்டு தனது இளைய ராணியாக்கியதாக நாவல் கூறுகிறது.
அடுத்தவர், காலாந்தகக் கண்டர் எனப்படும் சின்ன பழுவேட்டரையர். இவர் தஞ்சாவூர் கோட்டையின் தளபதியாக இருந்தார். தஞ்சை அரண்மனை பொக்கிஷமும், தானிய அறையும் அவரது கட்டுப்பாட்டில் இருந்தது. பாதாளச் சிறை ஒன்றையும் தஞ்சை கோட்டையிருந்து வெளியே செல்லும் பாதாளச் சுரங்கத்தினையும் அவர் நிர்வகித்து வந்தார் என்கிறது நாவல்.
ஆனால், உண்மையில் பழுவேட்டரையர்கள் எனப்படும் சிற்றரசர்கள் யார்? அவர்கள் எந்தப் பகுதியை ஆட்சி செய்து வந்தனர்?
பழுவேட்டரையர்களைப் பற்றி அறிய அன்பில் செப்பேடுகளும் பழுவூரில் உள்ள கோவில்களில் இருந்து கிடைக்கும் ஆதித்த சோழன் காலத்து கல்வெட்டுகளும் உதவுகின்றன. இந்தக் கல்வெட்டுகள் பெருமளவு பழுவூரிலும் வேறு சில லால்குடி, திருப்பழனம், திருவையாறு பகுதிகளிலும் காணப்படுகின்றன.
இந்தப் பழுவேட்டரையர்கள் முதலாம் ஆதித்த சோழனின் காலம் முதல் முதலாம் இராஜேந்திர சோழன் காலம் வரையில் தற்போதைய அரியலூர் மாவட்டத்தின் ஒரு பகுதியினை பழுவூர் நாடு என்ற பெயரில் சிற்றரசர்களாக இருந்து ஆட்சி செய்து வந்திருக்கின்றனர்.
- கல்கி கிருஷ்ணமூர்த்தி: பொன்னியின் செல்வன் எழுத்தாளரின் பன்முகத் தன்மை
- பொன்னியின் செல்வன் பட டிரெய்லர் – 33 குறிப்புகளில் மொத்த படமும்
- பெரிய பழுவேட்டரையர் மீது ரஜினிக்கு ஆர்வம்
தற்போது இந்தப் பழுவூர் நாடு, அரியலூரின் மையப்பகுதியிலிருந்து சுமார் 15 கி.மீ. தூரம் தெற்கிலும் திருச்சியிலிருந்து ஜெயங்கொண்டம் செல்லும் சாலையில் சுமார் 54 கி.மீ. தூரத்திலும் மேலப் பழுவூர், கீழையூர், கீழப்பழுவூர் என மூன்று சிறு பகுதிகளாக அமைந்திருக்கிறது. சுமார் 150 ஆண்டுகளுக்கும் மேல் சோழப் பேரரசில் செல்வாக்குடன் விளங்கிய பழுவேட்டரையர்களின் அரண்மனை, மாளிகை எனக் குறிப்படக்கூடிய எதுவும் இந்தப் பகுதியில் தற்போது இல்லை.
ஆனால், பழுவேட்டரையர்கள் ஆதிக்கம் செலுத்திய காலத்தில் கட்டப்பட்ட கோவில்கள் இங்கு காணப்படுகின்றன. பிற்காலச் சோழர்கள் காலத்து கோவில் கட்டடக் கலைக்கு இந்தக் கோவில்கள் மிகச் சிறந்த உதாரணமாக இருக்கின்றன.
கீழப்பழுவூரின் பிரதானமான பகுதியில் ஆலந்துறையார் கோயில் அமைந்திருக்கிறது. இந்தக் கோவிலின் சுவர்களில் இருந்து இருபத்து மூன்று சோழர் கால கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டுள்ளன. இரண்டு நாழி அரிசிக்கு இரண்டு மா நிலம் தரப்பட்டது, திருமஞ்சனத்திற்கு 50 காசு தானம் தரப்பட்டது, நிலக்கிரயம், விளக்குதானம், நித்திய படிதானம், செப்புப் பத்திர தானம், விளக்குக்காக இரண்டு கழஞ்சு தானம் ஆகிய செய்திகளை இந்தக் கல்வெட்டுகள் தருகின்றன.
இந்தக் கோவில் ஆறாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோவிலாகக் கருதப்படுகிறது. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்தரால் இந்தக் கோவில் பாடப்பட்டிருக்கிறது. ஆனால், அவருடைய காலத்தில் செங்கலால் கட்டப்பட்டிருந்த இந்தக் கோவில் மறவன் கண்டன் பழுவேட்டரையரால் 9ஆம் நூற்றாண்டில் கற்கோவிலாக மாற்றப்பட்டிருக்கிறது.
கருவறையைச் சுற்றிலும் உள்ள தேவகோட்டத்தில் அமைந்திருக்கும் சிற்பங்கள் பிற்காலச் சோழர் கால கோவில் கட்டடக் கலைக்கு மிகச் சிறந்த உதாரணமாக விளங்குகின்றன.
இதற்கு அருகிலேயே வலதுபுறத்தில் சிதிலமடைந்த நிலையில், மறவனீஸ்வரர் கோவில் காணப்படுகிறது. இதுவும் 9 – 10ஆம் நூற்றாண்டுக் கோவில் கட்டுமானத்தைச் சேர்ந்தது. அந்தக் கோவிலுக்குள் ஒரு லிங்கத் திருமேனி இருக்கிறது. கோவிலின் சுற்றுச் சுவர்களில் பல சிற்பங்களைப் பார்க்க முடிகிறது. முற்காலச் சோழர் காலத்து கல்வெட்டுகளும் இங்கே கிடைக்கின்றன. இதுவும் பழுவேட்டரையர்களால் கட்டப்பட்ட கோவில்தான்.
அங்கிருந்து சிறிது தூரத்தில் அமைந்திருக்கிறது கீழையூர். இங்குள்ள இரட்டைக் கோவில்கள் பழுவூர் அரசர்கள் காலத்து கட்டடக் கலைக்கு துல்லியமான சாட்சியாக விளங்குகின்றன. அவனி கந்தர்வ ஈஸ்வர க்ருஹம் என அழைக்கப்படும் இந்த இரட்டைக் கோவில்கள், ஆதித்த சோழன் காலத்தில் அவனி கர்ந்தர்பன் என்ற பட்டம் சூட்டப்பட்ட பழுவேட்டரையர்களால் கட்டப்பட்டிருக்கிறது.
இவருக்கு கங்க மார்த்தாண்டன், கலியுக நிர்மூலன், மறவன் மாளதளன், அரையகள் அரைவுளி போன்ற பட்டங்களும் இவருக்கு இருந்தன. ஆதித்த சோழனின் காலத்தில் இருந்த குமரன் மறவன்தான் இந்தப் பழுவேட்டரையர் எனக் கருதப்படுகிறது.
இந்த வளாகத்திற்குள் உள்ள இரண்டு கோவில்களில் தென்புறம் உள்ள கோவில் தென் வாயில் ஸ்ரீ கோவில் என்றும் வடபுறம் உள்ள கோவில் வடவாயில் ஸ்ரீ கோவில் என்றும் அழைக்கப்படுகின்றன.
இந்தக் கோவிலில் ஆறு பழுவேட்டரையர்களின் பெயர்கள் குறிப்பிடப்படுகின்றன.
1. மகரிஷி வம்சத்து க்ஷத்ரியன் பொதுகன் பெருமான் டரையன் குமரன் மறவன், 2. பொய்கை குறுவிடத்து வெட்டக்குடி வடுகன் மாதவன் பழுவேட்டரையன் குமரன் மறவன், 3. அடிகள் பழுவேட்டரையன் கண்டன் மறவன், 4. அடிகள் பழவேட்டரையன் மறவன் கண்டன், 5. அடிகள் பழவேட்டரையன் கண்டன் சுந்தரசோழன், 6. அடிகள் பழவேட்டரையன் கைக்கோள மாதேவன் ரணமுகராமன் ஆகியோரின் பெயர்கள் இங்குள்ள கல்வெட்டுகளில் காணப்படுகின்றன.
இதில் மறவன் கண்டனுக்கு சத்ரு பயங்கரன், கண்டன் சுந்தரசோழன், கண்டன் மறவன் என மூன்று மகன்கள் இருந்தனர். அவர்களில் இருவர்தான் பொன்னியின் செல்வன் நாவலில் வரும் கண்டன் அமுதன் மற்றும் காலாந்தக கண்டன் பழுவேட்டரையர்களாக இருக்கலாம் எனச் சிலர் கருதுகின்றனர்.
ஆதித்த சோழன் காலத்திலிருந்து ராஜராஜ சோழனின் காலம் வரை சோழப் பேரரசில் மிகுந்த செல்வாக்குடன் இருந்த பழுவேட்டரையர்கள் திடீரென காணாமல் போயினர். ராஜராஜசோழரின் காந்தளூர்ச் சாலை யுத்தம், ராஜேந்திர சோழனின் கேரள படையெடுப்பு ஆகியவற்றுக்குப் பிறகு இவர்களின் பெயர்கள் எந்தக் கல்வெட்டிலும் காணப்படவில்லை.
சுமார் 150 ஆண்டு காலம் சோழப் பேரரசில் மிகுந்த செல்வாக்குடன் விளங்கிய பழுவேட்டரையர் வம்சம் பிறகு என்ன ஆனது என்று தெரியாவிட்டாலும் தஞ்சை பெரிய கோவிலுக்கு முன்பாகவே இவர்கள் கட்டிய கோவில்கள் இப்போதும் அவர்களது கலை மற்றும் பண்பாட்டு ஆர்வத்தை உணர்த்திக் கொண்டிருக்கின்றன.
காணொளிக் குறிப்பு,
பொன்னியின் செல்வன் படத்தை முன்பே எடுக்காமல் போனது நல்லது: இயக்குநர் மணிரத்னம்
Leave a Reply
You must be logged in to post a comment.