இலங்கையில் சிவன் வழிபாடு நடந்ததாகக் கூறப்படும் தமிழர் பகுதியில் பௌத்த அடையாளங்களை வைக்க முயற்சி

இலங்கையில் சிவன் வழிபாடு நடந்ததாகக் கூறப்படும் தமிழர் பகுதியில் பௌத்த அடையாளங்களை வைக்க முயற்சி – பின்னணி என்ன?
  • மப்றூக்
  • பிபிசி தமிழுக்காக

இலங்கை குருந்தூர் மலை

இலங்கை முல்லைத்தீவு மாவட்டம் குமுழமுனை பிரதேசத்தில் ஆதி சிவன் வழிபாடுகள் நடந்து வந்த குருந்தூர் மலையில், பௌத்த அடையாளங்களை வைப்பதற்கு பௌத்த பிக்குகள் முயற்சித்தனர். இதை அந்தப் பிரதேச தமிழ் மக்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்வராஜா கஜேந்திரன், வினோ நோகராதலிங்கம் உள்ளிட்டோர் தடுத்து நிறுத்தினர்.

இலங்கை குருந்தூர் மலைப்பகுதியில் பண்டைய காலத்தில் தமிழ் மன்னர்களின் அரண்மனைகள் இருந்ததாக கூறப்படுகிறது. 1932ஆம் ஆண்டு வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் குறித்த பகுதி, தொல்பொருள் இடமாக பிரகடனப்படுத்தப்பட்டது.

இங்கு ஆதி சிவன் சைவ வழிபாடுகள் நடந்ததாக சான்றுகள் உள்ளன என்கிறார், நேற்று முன்தினம் பௌத்த பிக்குகளின் முயற்சிக்கு எதிர்ப்பினை வெளியிட்ட, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன்.உள்நாட்டு ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னர், குறித்த இடத்தில் பௌத்த பிக்குகள் ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் ஈடுபட முயற்சித்தனர். இதனால் அந்தப் பகுதியில் வழிபாடுகளில் ஈடுபட்டுவந்த தமிழ் மக்களுக்கும், பௌத்த பிக்குகளுக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டன.

நீதிமன்றம் உத்தரவிட்டும் அத்து மீறல்

இலங்கை குருந்தூர் மலை போராட்டம்
படக்குறிப்பு,போராட்டம் நடத்திய தமிழர்கள்

இந்தப் பின்னணியில் 2018ஆம் ஆண்டு இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக அந்தப் பகுதியிலுள்ள தமிழ் மக்கள் – முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தனர். இதனையடுத்து அந்தப் பகுதியில் எந்தவிதக் கட்டுமான வேலைகளையும் மேற்கொள்ளக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டது.

அங்கிருந்த தமிழர்களுக்குரிய அடையாளங்களை அகற்றி விட்டு, பௌத்தர்கள் அங்கு கட்டுமானங்களை மேற்கொள்ள முயற்சித்தமை காரணமாகவே, இந்த உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்ததாக கஜேந்திரன் எம்.பி கூறினார்.

இவ்வாறிருக்க 2021 டிசம்பர் காலப்பகுதியில் அங்கு தொல்பொருள் திணைக்களத்தினர் அகழ்வுப் பணியொன்றை மேற்கொண்டனர். அதனால் அங்கு வெளியார் யாரும் செல்ல முடியாதிருந்தது.

“இந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி அந்த இடத்தில் பழைய தோற்றப்பாட்டைக் கொண்ட பௌத்த தாது கோபுரம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டது” என்கிறார் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன்.

தற்போது நடந்தது என்ன ?
இலங்கை குருந்தூர் மலை போராட்டம்

அவ்வாறு அமைக்கப்பட்ட தாது கோபுரத்தில் கலசங்களை அமைத்து, புத்தர் சிலைகளை வைப்பதற்காகவே 13ம் தேதி அங்கு பெருமளவிலான பௌத்த பிக்குகள் வந்திருந்தனர். ஆனால், அந்த முயற்சிக்கு அந்தப் பகுதியிலுள்ள தமிழ் மக்கள் திரண்டு வந்து, தமது எதிர்ப்புக்களை வெளிப்படுத்தினர்.

ஜூன் 13ம் தேதி காலை 8.00 மணி முதல் பிற்பகல் 3.30 மணிவரை, இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு மக்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியவாறு அங்கு இருந்தனர்.

“குருந்தூர் மலை பிரதேசம் தொல்பொருள் இடமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, அந்த இடம் அப்படியே வைத்துப் பாதுகாக்கப்பட வேண்டுமே தவிர, அங்கு புதிய கட்டுமானங்கள் எதனையும் மேற்கொள்ள முடியாது. ஆனால், தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளரும், அந்தத் திணைக்களம் சார்ந்தோரும் – முழுவதுமாக பௌத்த பிக்குகளுக்கு சார்பாகவும், வரலாற்றைத் திரிபுபடுத்தும் வகையிலும் அங்கே புராதன தாதுகோபுரம் ஒன்று இருந்ததைப் போன்ற தோற்றப்பாடொன்றினைக் காட்ட முற்படுகின்றனர்” என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் பிபிசி தமிழிடம் கூறினார்.

இப்போது ஏன் இந்த முயற்சி?
இலங்கை குருந்தூர் மலை போராட்டம்

தேவையற்ற விதத்தில் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையில் இன, மத முறுகலை ஏற்படுத்தும் நோக்குடன் இன்றைய ஆட்சியாளர்கள் மேற்கொள்ளும் ஒரு முயற்சியாகவே தாம் இதைப் பார்ப்பதாக கஜேந்திரன் தெரிவித்தார். சிங்கள மக்களிடையே தமது செல்வாக்கினை உயர்த்தும் எண்ணத்துடன் தமிழர் மற்றும் முஸ்லிம் பிரதேசங்களில் இவ்வாறான காரியங்களை ஆட்சியாளர்கள் மேற்கொள்வதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

குருந்தூர் மலை விடயத்தில் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை மீறி அங்கு கட்டுமான வேலைகள் நடப்பதற்கு தமிழ் மக்கள் நேற்றைய தினம் எதிர்ப்பை வெளியிட்டபோது, அவர்களில் மூன்று இளைஞர்களைப் பொலிஸார் பிடித்து மிக மோசமாக தாக்கியதாகவும், பின்னர் சில மணி நேரங்களின் பின்னர் அவர்களை விடுவித்ததாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் இதன்போது மேலும் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் கே. விமலநாதனை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டு பேசிய போது; இது தொடர்பில் தனக்கு அறிவிக்கப்படவில்லை என்றும், நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று நடைமுறையில் இருக்கும் போது, அங்கு நிர்மாண வேலைகள் எதுவும் செய்ய முடியாது என்றும் கூறினார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-61813449

About editor 3122 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply