தோற்ற கட்சிகள் தொகுதி உடன்பாட்டை உருவாக்கிளால் மட்டுமே அடுத்தமுறை பழமைவாதக் கட்சியை அகற்றுவது சாத்தியமாகும்!

தோற்ற கட்சிகள் தொகுதி உடன்பாட்டை உருவாக்கிளால் மட்டுமே அடுத்தமுறை பழமைவாதக் கட்சியை அகற்றுவது சாத்தியமாகும்!

 நக்கீரன்

கடந்த யூன் 02, 2022 இல் நடந்த 43 ஆவது ஒன்ரேறியோ மாகாண நாடாளுமன்றத் தேர்தலில் டக் போட் (Doug Ford) தலைமையிலுள்ள  முற்போக்கு பழமைவாதக் கட்சி அமோக வெற்றியைப் பெற்று இரண்டாவது முறையும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. அதற்கு ஒரு காரணம் ஒன்ரேறியோ வாக்காளப் பெருமக்கள்  ஏன் தொல்லை, சும்மா இருப்பதே சுகம்  என வீட்டோடு இருந்துவிட்டார்கள்.

Doug Ford's politics of indulgence - Macleans.ca

நடந்து முடிந்த தேர்தலில் (2022) ஒன்ரேறியோ மாகாணம் வரலாற்றில் மிகக் குறைந்த வாக்குப்பதிவைப் பதிவு செய்துள்ளது.  தகுதியான வாக்காளர்களில் வெறும் 44.7%வாக்காளர்களே வாக்களித்தனர். மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட 10.7 மில்லியனுக்கும் அதிகமான வாக்காளர்களில்,  வெறும் 4.8 மில்லியன் (44.7%) வாக்காளர்களே வாக்களித்துள்ளார்கள். கீழ் கொடுக்கப்பட்டுள்ள அட்டவணை 1 ஒரே பார்வையில் 2022, 2018 தேர்தல் முடிவுகளைக் காட்டுகிறது.

சென்ற தேர்தலைவிட இம்முறை பழமைவாதக் கட்சி 7 இருக்கைகளைக் கூடுதலாகப் பெற்றுள்ளது. சென்ற தேர்தலில் பழமைவாதக் கட்சி வேட்பாளர்களாக போட்டியிட்டு வெற்றிபெற்ற லோகன் கணபதி (Markham – Thornhill)  மற்றும் விஜே தணிகாசலம்  (Scarborough – Rough River)  இம்முறையும் வெற்றிவாகை சூடியுள்ளார்கள். இந்த இரண்டு தொகுதிகளிலும் கணிசமான தமிழ் வாக்காளர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

அதே சமயம் புதிய சனநாயகக் கட்சியின் பலம் 40 இல் இருந்து 31 ஆகக் குறைந்துள்ளது.  இதனை அடுத்தடுத்து மூன்று தேர்தல்களில் தோல்வியுற்ற புதிய சனநாயக கட்சியின் தலைவி  அந்திரியா கோர்வாத் (Andrea Horwath) தலைமைப் பதவியில் இருந்து விலகியுள்ளார். அவரைப் போலவே 8 இருக்கைகளைக் கைப்பற்றிய தாராளமயக் கட்சித் தலைவர் ஸ்ரிவன் டெல் டுகா (Steven Del Duca) தனது சொந்தத் தொகுதியிலேயே (Vaughan-Woodbridge) பழமைவாதக் கட்சி வேட்பாளரிடம் 6,725 வாக்குகளால் தோற்றுப் போனார். அவருக்குக் கிடைத்த வாக்குகள் 12,615 (35.1%) மட்டுமே.  தோல்வியைத் தொடர்ந்து இவரும் தனது தலைமைப் பதவியில் இருந்து விலகியுள்ளார்.    இவர் 2020  மார்ச் மாதம் நடந்த கட்சியின் தலைவர் தேர்தலில் தெரிவு செய்யப்பட்டிருந்தார். 

பொதுவாக தேர்தலில் ஒரு கட்சி தோற்றுப் போனால் தோல்விக்குப் பொறுப்பேற்று பதவி விலகுவது மேலை நாடுகளில் ஒரு

Andrea Horwath resigns as Ontario NDP leader

அரசியல் மரபாக இருந்து வருகிறது. குறைந்த பட்சம் கட்சியின் தலைமைப் பதவியை நம்பிக்கை வாக்கெடுப்பின் மூலம் உறுதி செய்து கொள்கிறார்கள். இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் இப்படியான  மரபு  பொதுவாகப் பின்பற்றப்படுவதில்லை. தோற்றாலும் தலைமைப் பதவியை விட்டுக் கொடுக்காது கெட்டியாக பிடித்து வைத்திருப்பார்கள். 

மொத்த வாக்குகளில் 40.82 %பெற்ற பழமைவாதக் கட்சி மொத்த 124 இருக்கைகளில் 83 இருக்கைகளில் (66.93 %) வென்றிருக்கிறது. உண்மையில் 40.82% பெற்ற கட்சிக்கு 51 இருக்கைகள்தான் கிடைத்திருக்க வேண்டும். அதே போல் 23.74 %வாக்குகள் பெற்ற புதிய சனநாயகக் கட்சிக்கு 19 இருக்கைகள்தான் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் அந்தக் கட்சிக்கு 31 இருக்கைகள் கிடைத்திருக்கிறது. அதே சமயம் 23.85% வாக்குகளைப் பெற்ற தாராளமயக் கட்சிக்கு  8 இருக்கைகளைத்தான் கிடைத்திருக்கிறது.  இதனால் மாகாண நாடாளுமன்றத்தில் அந்தக் கட்சி உத்தியோகபூர்வ தகைமையை இழந்துள்ளது.

புதிய சனநாயகக் கட்சி வேட்பாளர்கள் 33 தொகுதிகளில் கட்டுக்காசை இழந்துள்ளனர்.  இதில் ரொறன்ரோ பெருநகரப் பகுதியில்  மட்டும் 24 வேட்பாளர்கள் கட்டுக்காசை இழந்துள்ளார்கள். புதிய சனநாயக கட்சி ஏற்கனவே சில கட்டுமானம் மற்றும் கட்டிடத் துறையில் உள்ள தொழிற்சங்கங்களின் ஆதரவை இழந்துள்ளது.  தொழிலாளர்கள்  பெரும்பான்மையாக வாழும் Timmins, Hamilton East, Brampton East, Bramton Centre, Windsor Tecumseh ஆகிய தொகுதிகளில் பழமைவாதக் கட்சியிடம்  புதிய சனநாயகக் கட்சி தோல்வியைத் தழுவியுள்ளது.  இதே சமயம்  தாராளமயக் கட்சி கிட்டத்தட்ட பாதித் தொகுதியில்  இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. 

Ontario Liberal Leader Steven Del Duca looks to claw his party back in next  year's provincial election - The Globe and Mail

பழமைவாதக் கட்சியின் அபார வெற்றிக்குக்கு முக்கிய காரணம் ஒரு தொகுதியில் ஆகக் கூடுதலான வாக்குகள் பெறும் வேட்பாளரே வெற்றிபெற்றதாக அறிவிக்கப்படுவதுதான்.  இதனை ஆங்கிலத்தில் First past- the- post- system (FPTP) என அழைக்கிறார்கள். தமிழில் கம்பத்தை முதலில் கடந்தவர் என அழைக்கலாம். மக்களாட்சி முறைமையில் காணப்படும் பலவீனங்களில் இதுவும் ஒன்று.  1970 இல் இலங்கையில் நடந்த தேர்தலில் அதிக எண்ணிக்கை வாக்குகளையும் வாக்கு விழுக்காட்டையும் பெற்ற ஐக்கிய தேசியக் கட்சி படு தோல்வி அடைந்தது.

இல்கையில் 1970 இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்

அட்டவணை 2

கட்சிவாக்குகள்%இருக்கைகள்
ஐதேக1,892,52537.9117
எஸ்எல்எவ்பி1,839,97936.8691
எல்எல்எஸ்பி433,2248.6814
தமிழ் அரசுக் கட்சி245,7274.9213
கம்யூனிஸ்ட் கட்சி169,1993.396
தமிழ்க் காங்கிரஸ்115,5672.323
எம்இபி45,5710.090
சுயேட்சைகள்249,0064.992
மொத்தம்4,991,798 146
பதிவு செய்யப்பட்ட வாக்குகள்4,991,798  
செலுத்தப்பட்ட வாக்குகள்5,505,028  

ஆகக் கூடிய வாக்குகளையும் வாக்கு விழுக்காட்டையும் பெற்ற ஐதேக வெறுமனே 17 இருக்கைகளை மட்டும் பெற்றது. ஐதேக யைவிட சற்றுக் குறைந்த வாக்குகளையும் விழுக்காட்டையும் பெற்ற எஸ்எல்எவ்பி 91 தொகுதிகளைக் கைப்பற்றியது. இந்த முரண்பாடு காரணமாகவே 1977 இல் ஆட்சிக்கு வந்த ஜே.ஆர். ஜெயவர்த்தன முதலில் கம்பத்தைக் கடக்கும் தேர்தல் முறைமையைக் கைவிட்டு விகிதாசார தேர்தல் முறைமையை தனது 1978 இல் இயற்றிய அரசியல் யாப்பில் அறிமுகப்படுத்தினார். இந்த விகிதாசார முறைமையின் கீழ் ஐதேக க்கு அதிக இருக்கைகள் கிடைக்கும்  அதே நேரம் எந்தக் கட்சிக்கும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்காது என அவர் நம்பினார். 1977 முதல் ஆட்சியில் இருந்த ஐதேக 2004 இல் நடந்த தேர்தலில் தோற்றுப் போய்விட்டது. விகிதாசாரத் தேர்தல் முறை ஒரே கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்களிடம் விருப்பு வாக்குகளுக்கு கடுமையான போட்டியை உருவாக்குகிறது. இதனால் இரண்டு தேர்தல் முறைகளையும் கலந்து ஒரு கலப்புத்  தேர்தல் முறையைக் கொண்டுவர வேண்டும் என்ற யோசனை இருக்கிறது. 2018 இல் நடந்த உள்ளூராட்சி தேர்தலில் 60% (5032)  முதலில் கம்பத்தைக் கடந்த முறையிலும்  40% (3394)  விகிதாசார முறையிலும்  உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

2022 தேர்தல் பரப்புரையின் போது 4 முக்கிய கட்சிகளில் 3 மாகாணத்தின் தேர்தல் முறைமையை மாற்றுவதாக உறுதியளித்தன. ஆனால் பழமைவாதக் கட்சித் தலைவர் டக் போட் அதனை நிராகரித்து விட்டார். “இந்தத் தேர்தல் முறைமை  ஒரு நூற்றாண்டுக்கும்  மேலாக நடைமுறையில் உள்ளது.   அது தொடர்ந்து செயல்படும்” என்று செய்தியாளர்களிடம் கூறினார். மத்தியில் பதவியில் இருக்கும் தாராளமயக்  கட்சி  அரசும் தேர்தல் முறைமையில் சீர்திருத்தத்தம் செய்யப்படும் என வாக்குறுதி அளித்தது. ஆனால் அதனை நிறைவேற்றத் தவறிவிட்டது.

மேலே கூறியவாறு இந்தத் தேர்தலில் பெரும்பான்மை வாக்காளர்கள் (55.3%) ஏன் வாக்களிக்கவில்லை என்ற கேள்விக்குப் பலரும் பலவிதமாக பதில் இறுக்குகிறார்கள்.

முதல்  காரணம்  இந்தக் கட்சிகளுக்கு இடையே சித்தாந்த அடிப்படையில் பெரிய வேறுபாடு இல்லை. இந்தக் கட்சிகள் முதலாளித்துவ சந்தைப் பொருளாதார கோட்பாட்டைப் பின்பற்றுபவை.

இரண்டு ஒன்ரேறியோ மாகாணத்தின் பொருளாதாரம்  நிலையான பொருளாதாரம் (stable economy) ஆக இருக்கிறது.  2021 இல் பணவீக்கம் 6.9 % (கனடா 6.8%) ஆக இருந்தது.  வாகன எரிபொருள் நீங்கலாக நுகர்வோர் விலைக் குறியீடு (CPI) பெப்ரவரி மாதத்தில்  4.7% ஆக உயர்ந்தது.

வாகன எரிபொருள் சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு அதிகரித்துள்ளது. ஒரு லிட்டர் வாகன எரிபொருள் கடந்த சனவரியில் 1.50 டொலராக இருந்தது. இன்று 2.13 டொலராக அதிகரித்துள்ளது. உக்ரைன் மீதான உருசியாவின் படையெடுப்பை அடுத்து அதற்கு எதிரான பொருளாதாரத் தடைகாரணமாக எரிவாயு விலைகள் பல மாதங்களாக கணிசமாக உயர்ந்து வருகின்றன. மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மறுபுறம் கனடா பயன்படுத்தக்கூடியதை விட அதிக எண்ணெயை உற்பத்தி செய்கிறது. இதன் விளைவாக, கச்சா எண்ணெய்யின் குறிப்பிடத்தக்க நிகர ஏற்றுமதியாளராக கனடா உள்ளது. 2019 இல்  கனடா ஒரு நாளைக்கு 3.7 மில்லியன் பீப்பா கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்தது. இதில், 98% அமெரிக்காவிற்கும், மீதமுள்ள 2% அய்ரோப்பா மற்றும் ஆசியாவிற்கும் சென்றது.

இன்னொரு காரணம் முக்கிய கட்சிகளிடையே பொருளாதார, அரசியல், சமூக சிக்கல்கள் பற்றிப் பேரளவில் வேறுபாடில்லை. மேலும் மூன்றாம் உலக நாடுகளில் காணப்படும் ஊழல், பண வீக்கம், பணவிரையம், தாமதம், பொருட்களுக்குத் தட்டுப்பாடு பேரளவில் கனடாவில் இல்லை.

எது எப்படியிருப்பினும் டக் போட்  அவர்களின் ஆட்சியை அகற்ற வேண்டும் என்றால் அடுத்த நான்கு ஆண்டு காலம் காத்திருக்க வேண்டும்.

குறைந்த பட்சம் புதிய சனநாயகக் கட்சியும் தாராளமயக் கட்சியும் தொகுதி உடன்பாட்டை உருவாக்கி தேர்தலைச் சந்தித்தால் மட்டுமே பழமைவாதக் கட்சியை அகற்றுவது சாத்தியமாகும். (Canada Uthayan – 10/06/2022)

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply