கச்சதீவு உடன்படிக்கை இரண்டு நாடுகளுக்கு இடையே எழுதப்பட்ட உடன்படிக்கை

கச்சதீவு உடன்படிக்கை இரண்டு நாடுகளுக்கு இடையே எழுதப்பட்ட உடன்படிக்கை

 நக்கீரன்

வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிவிட்டது என்பார்கள். பொதுவாக பிடிவாதக்காரர்களுக்கு இந்தப்  பழமொழியைக் கூறுவோம். கடந்த மே 27 இல் தமிழ்நாட்டில் பல திட்டங்களைத் தொடக்கி வைக்க வருகை தந்த  இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி கலந்து கொண்ட தமிழகத்து மேடையிலும் ஒலித்தது, இது இலங்கை, இந்திய அரசியலை மேலும் பரபரப்பாக்கியுள்ளது.

கச்சதீவு – Nakkeran
கச்சதீவு

இந்தியப் பிரதமர் முன்னிலையில் உரையாற்றிய தமிழக முதல்வர் திரு.மு.க. ஸ்டாலின்  “தமிழக மீனவர்கள் எதிர்நோக்கும் முக்கியமான சிக்கலுக்கு தீர்வு காண, கச்சத்தீவை மீட்க வேண்டும், தமிழக மீனவர்கள் பாரம்பரிய மீன்பிடி வலயங்களில் தங்களின் உரிமைகளைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க இதுவே சரியான தருணம். இதைப் பற்றிப் பிரதமருக்கு (மோடி) நினைவூட்ட கடமைப்பட்டிருக்கிறேன். கச்சதீவு மீண்டும் இந்தியாவின் கட்டுப்பாட்டில் வருவதே இலங்கை – இந்திய மீனவர்களின் தொடர் சிக்கலுக்குத்  தீர்வாக அமையும். இதுவே தமிழக மீனவ மக்களின் ஒன்றிய அரசிடமான கோரிக்கை” என  பிரதமர் மோடியிடம் பகிரங்க வேண்டுகோள் விடுத்தார். 

தமிழக முதல்வரின் இந்தக் கோரிக்கைக்கு பிரதமர் மோடி எந்தப்  பதிலும் அளிக்கா விட்டாலும் பிரதமர் தமிழகத்தை விட்டுச்  சென்ற பின்னர் சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த பாஜக தமிழ் மாநிலத் தலைவர் அண்ணாமலை தமிழகத்தின் திமுக  அரசையும் முதல்வர் ஸ்டாலினையும் கடும் வார்த்தைகளால் விமர்சித்து கச்சதீவு மீட்பு விவகாரத்தை இலங்கை மக்களின் நலன் காக்கும் மத்திய பாஜக அரசே பார்த்துக் கொள்ளும் எனவும் இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிடும் தகுதி அதற்கு இல்லை எனப் பேசியது லிவகாரத்தை மேலும் சூடுபிடிக்க வைத்துள்ளார்.

கச்சதீவு இராமேசுவரத்திற்கு வட கிழக்கே, 12 மைல் தொலைவில்  இருக்கிறது. முந்தைய காலத்தில் இராமநாதபுரம் சேதுபதி  அரசின் கட்டுப்பாட்டில் இருந்த 8 தீவுகளில் கச்ச தீவும் ஒன்றாகும். ஜமீன் ஒழிப்புக்கு முன்னர், இராமநாதபுர அரசர் இத்தீவை தனி ஆட்களுக்கு குத்தகைக்கு விட்டுக் கொண்டிருந்தார். இந்தத் தீவின் பரப்பளவு 285.20 ஏக்கர் ஆகும். இந்தத் தீவு  இராமநாதபுரம் வட்டத்தில் உள்ள தீவு என்று குத்தகை ஆவணம் குறிக்கிறது. இவையெல்லாம், கச்சத்தீவு மீது இந்தியாவுக்கு உள்ள உரிமைகளுக்குச்  சான்றாக விளங்கின.

1956 இல் இந்திய அரசு, தன் கடல் ஆதிக்க எல்லைக் கோட்டை, 3 கடல் மைல்களிலிருந்து (ஒரு கடல் மைல் என்பது, 1.15 மைல் அல்லது 1.863 கிமீ) 6 கடல் மைல்களாக விரிவுபடுத்தியது. இது போன்ற போட்டி அறிவிப்பை இலங்கை அரசும் வெளியிட்டது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான சிக்கல் வலுவடைந்தது.    1973 இல்  அன்றைய பிரதமர் இந்திரா காந்தி  இலங்கை சென்றார். பின், இரு நாட்டு அதிகாரிகளும் கூடிப் பேசினர். 1974 இல்,  இலங்கைப் பிரதமர், சிறிமாவோ பண்டாரநாயகா இந்தியா சென்றார். கச்சதீவை இலங்கைக்குக் கையளிக்கும் ஒரு பன்னாட்டு உடன்பாடு  பிரதமர் இந்திரா காந்தியும் இலங்கைப் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவும் இடையில் கைச்சாத்தானது.

பலர் நினைப்பதைப்போல இலங்கை கேட்டவுடன் கச்சதீவு ஒன்றும் இலவசமாகக் கொடுக்கப்படவில்லை. இந்த உடன்பாட்டிற்குப்  பின் மிகப்பெரிய இராசதந்திர நகர்வுள் உள்ளன. 1971 ஆம் ஆண்டு இந்தியா-  பாகிஸ்தான் போரின் போது, இந்தியாவின் அண்டை நாடான இலங்கை பாகிஸ்தான் விமானங்கள் இலங்கையில் தரையிறங்கவும் எரிபொருள் நிரப்பிக்கொள்ள அனுமதித்தது.

அந்தப் போரில் இந்தியா பாகிஸ்தானைத் தோற்கடித்து வங்காளதேசம் தனிநாடாக  உருவாக இந்திரா காந்தி வழிகோலினார்.  இருப்பினும் இலங்கையின் பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாடு இந்தியாவின் வெளிநாட்டு உறவில் மிகப்பெரிய அடியாக இருந்தது. ஏனெனில் நாட்டின் கிழக்கே சீனா, மேற்கே பாகிஸ்தான், தெற்கே இலங்கை, வடக்கே நேப்பாளம் என அனைத்து நாடுகளுமே எதிரிகளாக இருப்பது நல்லதல்ல என்பதை இந்தியா உணர்ந்திருந்தது. எனவே தான் இலங்கைக்கு கச்சதீவை இலவசமாக அளித்து இலங்கை உடனான உறவைப்  புதுப்பித்துக்கொள்ள இந்தியா தயாரானது. இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியும் – இலங்கைப் பிரதமர் சிறிமாவோ பண்டார நாயக்கவும் இணைந்து இந்த கச்சதீவு  உடன்படிக்கையில்  கையெழுத்திட்டதின் பின்னணி இதுதான்.

விடுதலைப் புலிகள்  காலத்தில், இலங்கை அரசாங்கம்  பாதுகாப்பைக் காரணம் காட்டி இலங்கை மீனவர்கள் கடலில் சுதந்திரமாக மீன் பிடிப்பதை வெகுவாகக்  கட்டுப்படுத்தியது. ஆனால் மே 2009 குப் பின்னர், இலங்கை தனது பாக்கு நீரிணையைப் பாதுகாக்கத் தொடங்கியது.  பாக்கு நீரிணை (Palk Strait) என்பது  தமிழ்நாடு மாநிலத்தையும் இலங்கைத் தீவின் யாழ்ப்பாணக் குடாநாட்டையும் பிரிக்கும் ஒரு நீரிணையாகும். இது வடகிழக்கே வங்காள விரிகுடாவை, தென்மேற்கே பாக்கு விரிகுடாவுடன் இணைக்கிறது. இந்நீரிணை 53 முதல் 82 கிலோமீட்டர்கள் (33 முதல் 51 மைல்கள்) அகலமானது.

மே 2009 இல் போர் முடிவடைந்ததையடுத்து, இலங்கை மீனவர்கள் மீண்டும் பாக்கு வளைகுடாவில் தங்கள் தொழிலைத் தொடங்கி இழந்த கடலை மீட்டனர்.இதுதான்  தமிழக – வட இலங்கை மீனவர்களுக்கு இடையே சிக்கலைத் தோற்றுவித்துள்ளது.  இலங்கைக்கு கச்சதீவை கையளித்ததில் இருந்தே தமிழக மீனவர்கள் நெருக்கடிகளை சந்திக்கத் தொடங்கினர்.  1974 ஆம் ஆண்டு இரு நாடுகள் இடையில் செய்துகொள்ளப்பட்ட உடன் படிக்கையை அடுத்து  1976 இல் கொண்டுவரப்பட்ட கடல் எல்லை உடன்படிக்கை தமிழக மீனவர்களை  மேலும் நெருக்கடிக்குள் தள்ளியது. இதில் நெருக்கடி இந்தியாவுக்குத்தான்.

பாக்கு நீரினை, மன்னார் வளைகுடா மற்றும் வங்காள விரிகுடாவென  சர்வதேச கடல் எல்லைகளாக பிரிக்கப்பட்ட  பின்னர் தமிழக மீனவர்களுக்கு கொடுக்கப்பட்ட உரிமம் பறிக்கப்பட்டதாக இலங்கை அறிவித்தது. அதில் இருந்து எல்லை தாண்டிய மீன்பிடி முழுமையாகத் தடுக்கப்பட்டது. இது தான் இன்றுவரை இலங்கை மற்றும் தமிழக  மீனவர்களுக்கு ஒரு தீராத தலைவலியாக இருந்து வருகின்றது. போர்க் காலத்தில் தமிழக மீனவர்களுக்கு  எந்தவித சிக்கலும் இருக்கவில்லை, இலங்கை மீனவர்கள் வடக்கு கடல் எல்லையில் மீன்பிடிக்கத்  தடுக்கப்பட்ட போது இந்திய மீனவர்கள் சுதந்திரமாக செயற்பட்டனர். 

 1983 ஆம் ஆண்டிற்கு முன்னர் இலங்கையின் மீன்பிடித்துறையில் முக்கிய   மூன்று இடங்களில் வடக்கு மாகாணம் ஒன்றாகக் காணப்பட்டது, இந்தக் காலகட்டத்தில் ஆண்டொன்றிற்கு 48,000 மீட்ரிக் தொன் மீன்கள் பிடிக்கப்பட்ன. எனினும் 2002 ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை வெறுமனே 2 ஆயிரம் மீட்ரிக் தொன் ஆகக்   குறைந்து விட்டது.  

கச்சதீவு திருவிழா ஆரம்பம்!! - நியூஸ் தமிழ்

தமிழக – வட இலங்கை மீனவர்கள் சிக்கலைத் தீர்த்து வைக்க  2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் மொத்தமாக ஆறு கட்டமாக பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன, கடந்த  நல்லாட்சி அரசாங்கத்தில் மாத்திரம் ஐந்து கட்ட பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டன, ஆனால்பேச்சுவார்த்தைகள் அனைத்துமே அரச மட்டத்தில்  வெற்றிகரமாக முடிந்தாலும் நடைமுறை யதார்த்தம் அவ்வாறான சாதகமான விளைவுகளை வெளிப்படுத்தவில்லை.  இறுதியாக 2017 ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட இரு தரப்பு பேச்சுவார்த்தைகளின் போதும் இரு நாடுகளின் அரச தரப்பில் பொது இணக்கப்பாடு எட்டப்பட்டது, இதில் இந்திய மீனவர்களின் மீன்பிடி முறைமையில் மாற்றங்களை செய்வதாகவும் குறிப்பாக இழுவைப்படகுகள் மூலமாக மீன்பிடியில் ஈடுபடுவதை தடுக்க இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதாகவும் வாக்குறுதிகளை  வழங்கியிருந்தனர். அதுமட்டுமல்ல, கடல் எல்லைப்  பாதுகாப்பை இந்தியா வலுப்படுத்துவதாகவும், மீனவர்களின் படகுகளைக்  கண்காணிக்க நவீன ரேடார் வகையான இயந்திரங்களை பொருத்துவதாகவும் இந்தியா கூறியது.  எனினும் வாக்குறுதிகள் அரச மட்ட பேச்சுவார்த்தைகளுடன் நின்றுவிட்டது.  மீனவர்கள் அதனை நடைமுறைப் படுத்தவில்லை. 

2017 ஆம் ஆண்டு இணக்கப்பாடு எட்டப்பட்ட பின்னர் எல்லை தாண்டிய  450  மீளவர்கள்  இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டனர், 2018 இல்  156,  2019 இல் 210, 2020 இல் 74, 2021 இல்159 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஓகஸ்ட் 2014 இல், மோடி அரசாங்கம் மத்தியில் பதவியேற்ற சில மாதங்களுக்குப் பிறகு, அப்போதைய சட்ட மா அதிபர் முகுல் உரோகத்கி உச்ச நீதிமன்றத்தில், போரின் மூலம் மட்டுமே கச்சத்தீவை இந்தியா திரும்பப் பெற முடியும் என்றும், அது நடைமுறையில் சாத்தியம் இல்லை என்றும் கூறினார். இரு நாடுகளும் UNCLOS (கடல் சட்டம் மீதான UN மாநாடு) 70  உடன்பாடுகளை அறிவித்ததால், ஒருதலைப்பட்சமாக திரும்பப் பெறுவது சாத்தியமில்லை.   எதிர்காலத்தில் இலங்கையில் உள்ள எந்த அரசாங்கமும் இந்தியாவிற்குக் கச்சதீவை  திருப்பிக் கொடுக்கும் என்று எதிர்பார்க்க முடியாது என்றார்.

கச்சதீவு அருகே மீன்பிடித்த 21 தமிழக மீனவர்கள் கைது - விசைப்படகுகளை பறிமுதல்  செய்த இலங்கை கடற்படை | Sri Lankan Navy Arrest 21 TN Fishermen Near  Katchatheevu - Tamil Oneindia

1960 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அனுமதி பெறாமல் இந்தியப்  பகுதிகளை தாரைவார்ப்பது செல்லாது என்று அளிக்கப்பட்ட தீர்ப்பினை இந்த கச்சதீவு உடன்படிக்கை  மீறுவதாகவும் எனவே கச்சதீவினை மீட்க வேண்டும் என அதிமுக சார்பில்  அன்றைய முதலமைச்சர் செல்வி  ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.

உச்சநீதிமன்றம் உத்தரவிட்டால் மத்திய அரசு கச்சதீவினை மீட்க முயலலாம். ஆனால் அது இன்றைய ஆபத்தான உலக சூழ்நிலையில் இந்தியாவின் அண்டை நாடுகளுடனான நட்புறவில் கடுமையான விரிசலை உண்டாக்கும். ஏற்கனவே சீனாவும் பாகிஸ்தானும் இலங்கையுடன் நெருங்கிவரும் இந்த நேரத்தில் கட்சதீவு மீட்பு என்பது பல சிக்கல்களை உண்டாக்கும். எனவே இந்திய ஒன்றிய அரசு உச்சநீதிமன்றத்தில் இந்தச் சிக்கல்  வெளியுறவுக் கொள்கையில் சிக்கல்கனைகளை உண்டாக்கும் என்று தெரிவித்தால் அதை மீறி உச்சநீதிமன்றம் உத்தரவிட மறுக்கும் என்பதே உண்மையாகும். அதாவது  இப்போதுள்ள   சூழ்நிலையில் கச்சதீவை மீட்பது என்பது முடியாத காரியம் ஆகும். வேண்டுமென்றால் இலங்கையுடன் பேசி இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவதை இனிமேலாவது தடுக்கலாம்.

கச்சதீவு உடன்படிக்கை இரண்டு நாடுகளுக்கு இடையே எழுதப்பட்ட பன்னாட்டு  உடன்படிக்கை ஆகும். அதனை  ஒரு தலைப்பட்சமாக இந்தியா முறித்துக் கொள்ளப் பன்னாட்டு சட்டம் இடம் கொடுக்காது. (கனடா உதயன் 7-7-2022)

About editor 3020 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply