இன்று இலங்கைக்குத் தேவை ஆட்சி மாற்றம் அல்ல ஆட்சிமுறைமையில் மாற்றம்!
நக்கீரன்
காலம் என்பது கறங்கு போல் சுழன்று
மேலது கீழாய் கீழது மேலாய்,
மாற்றிடும் தோற்றம் மறந்தனை போலும் (மனோன்மணியம்)
அதாவது காலம் என்பது காற்றாடி போன்றது. இன்று மேல் நிலையில் இருப்பவர்கள் நாளை கீழ் நிலைக்கு வரலாம். அதேபோல் இன்று கீழே இருப்பவர்கள் நாளை மேல்நிலைக்கு வரலாம். எதுவுமே நிரந்தரம் இல்லை. இன்று இருப்பார் நாளை இல்லை. இப்போது நடப்பது உண்மை. அடுத்த வினாடி நமக்கு என்ன நடக்கும் என்று நமக்கே தெரியாது. எதிர்காலம் ஒரு புதிர். அதனால் தான் இந்த உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. மாற்றங்கள் நம் வாழ்வில், நம்மை சுற்றியுள்ள பூமியில், பருவ மாற்றங்கள் எப்போதும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
இலங்கை அரசியலிலும் எதிர்பாராத மாற்றங்கள் மின்னல் வேகத்தில் மாறிக் கொண்டிருக்கின்றன. ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஒரு சிங்கள – பவுத்த தலைவராய் வலம் வந்து கொண்டிருந்த பிரதமர் மகிந்த இராசபக்ச தனது பதவியைத் துறந்து திருகோணமலைக் கடற்படைத் தளத்துக்கு ஓடியொளிய வேண்டி நேரிட்டது. அவர் மட்டுமல்ல அவரது குடும்பமும் சேர்ந்து ஓடியொளிந்து கொண்டது.
போர்க்காலத்தில் வெள்ளைவானில் கடத்தப்பட்டவர்களது சித்திரவதை முகாமாக இந்தத் திருகோணமலைக் கடற்படைத் தளம் விளங்கியது. இந்தக் கடற்படைத் தளத்தில்தான் கொழும்பிலும் அதன் சுற்றுப்புறத்திலும் வாழ்ந்த தமிழ் இளைஞர்கள் பதினொருவர் கப்பம் கேட்டு வெள்ளைவானில் கடத்தப்பட்டு கடுமையான சித்திரவதைக்கு உள்ளாக்கப் பட்டனர். பின்னர் கப்பம் கொடுத்த பின்னரும் அவர்கள் கொல்லப்பட்டார்கள்.
அது மட்டுமல்ல. போர் முடிந்த மே 18, 2009 மாலை விடுதலைப் புலிகளது முன்னணித் தளபதிகள், பொறுப்பாளர்கள் என ஐம்பதுக்கும் மேற்பட்ட போராளிகள் வட்டுவாகலில் இராணுவத்திடம் சரணடைந்தார்கள். அவர்களில் எழிலன், திலகர், கவிஞர் இரத்தினதுரை, பேபி சுப்பிரமணியன், பாலகுமார் என ஐம்பதுக்கும் அதிகமானவர்கள் ‘ஒரு குறுகிய விசாரணைக்கு’ என இராணுவத்தினரால் இபோச பேருந்துகளில் அழைத்துச் செல்லப்பட்டனர். அதன் பின் அவர்கள் திரும்பவில்லை. அவர்கள் எல்லோரும் இதே திருகோணமலைக் கடற்படைத் தளத்துக்கு கொண்டு செல்லப்பட்டு கொல்லப்பட்டடார்கள் என நம்பப்படுகிறது.
கொல்லப்பட்ட வி.புலிகளின் ஆவிகள் மகிந்த இராசபக்சவை நிம்மதியாகத் தூங்க விட்டிருக்காது என்பது நிச்சயம்! ஆனால் இராணுவம் தங்களிடம் விடுதலைப் புலிகள் சரண் அடையவில்லை என மறுத்து வருகிறது.
விடுதலைப் புலிகளைத் தோற்கடித்த சிங்களப் படையினரை நினைவு கூரும் மே 19 யை ‘போர் வீரர்கள் தேசிய நாளாக’ சனாதிபதியாக இருந்த மகிந்த இராசபக்ச மிகவும் தடபுடலாகக் காலிமுகத் திடலில் கொண்டாடி வந்தார். முப்படைகளின் அணிவகுப்பை மேடையில் நின்று கொண்டு சையசைத்தார். அருகில் அவரது சகோதரர் கோட்டாபய இராசபக்ச நின்று கொண்டிருந்தார். சிங்கள – பவுத்த மக்கள் வி.புலிகளைத் தோற்கடித்த மகிந்த இராசபக்சவை அனுராதபுரத்தை ஆண்ட தமிழ்மன்னன் எல்லாளனைத் (கிமு 205 – 161) தோற்கடித்த துட்டகைமுனுவுக்கு நிகராகப் போற்றினார்கள்.
ஆனால் இந்த ஆண்டு படையினரின் போர் வெற்றிக் கொண்டாட்டம் காலிமுகத் திடலில் நடைபெறவேயில்லை. நாடெங்கும் நிலவும் மக்களின் கொந்தளிப்பு அதற்கு இடம் கொடுக்கவில்லை.
நாடு பாரிய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்கும் முகம் கொடுத்துக் கொண்டிருக்கிறது. எரிபொருள், சமையல் எரிபொருள், பால் மா போன்றவற்றுக்கு நாடெங்கும் மக்கள் நீண்ட வரிசையில் நாட்கணக்கில் காத்து நிற்கின்றனர். எரிபொருள் ஏற்றிவந்த 3 வெளிநாட்டுக் கப்பல்கள் சர்வதேச கடற்பரப்பில் நங்கூரமிட்டு தரித்து நிற்கின்றன. அந்தக் கப்பல்களுக்கு செலுத்த வேண்டிய பல மில்லியன் அமெரிக்க டொலர்கள் மத்திய வங்கியிடம் இல்லாததே காரணமாகும்.
இந்த நெருக்கடிக்குள்ளும் மகிந்த இராசபக்ச போரில் மடிந்த சிங்கள இராணுவத்தினருக்கு போர் வீரர்கள் தேசிய நாளான மே 19 அன்று பத்தரைமுல்லவில் உள்ள நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தினார்.
சனாதிபதி கோட்டாபய இராசபக்ச இராணுவத்தில் உள்ள 396 அதிகாரிகள், 8,110 சிப்பாய்கள், கடற்படையில் 74 அதிகாரிகள் மற்றும் 2,010 சிப்பாய்கள், விமானப்படையில் 450 அதிகாரிகள் 3,361 சிப்பாய்கள் என மொத்தம் 920 அதிகாரிகள் மற்றும் 13 ஆயிரத்து 481 சிப்பாய்கள் என்று 17 ஆயிரத்து 407 படையினருக்குச் சம்பள உயர்வுடன் கூடிய தர உயர்வு தாராளமாக வழங்கப்பட்டுள்ளது. இதனால் மாதாந்தம் பல நூறு கோடி ரூபா செலவாகப் போகிறது. இந்த மாதம் அரச ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுக்கப் பணம் இல்லை என்றும் நோட்டுகளை அச்சிட்டுக் கொடுப்பதுதான் ஒரே வழி என்று நாட்டின் பிரதமர் இரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார். ஏற்கனவே திரில்லியன் கணக்கான ரூபாய் நோட்டுகளை அச்சிட்டு வெளியிட்டதால் நாட்டின் பணவீக்கம் அதிகரித்து வருகிறது.
அதேசமயம் காலிமுகத் திடலில் முள்ளிவாய்க்கால் 13 ஆவது நினைவேந்தல் நாள் பெரும்பான்மை சிங்கள மக்களால் உணர்வு பூர்வமாக அனுட்டிக்கப் பட்டிருக்கிறது. முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கப்பட்டது. போர் முடிந்து 13 ஆண்டுகள் ஆகின்ற நிலையில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் தவிர வேறு எந்தவொரு பகுதியிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் நடத்தப்படவில்லை. காலிமுகத்திடலில் நடந்தேறிய நினைவேந்தல் நிகழ்வு பெரும்பான்மை மக்களது மனதில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றமாகும். இது தொடர்ந்தால் இலங்கை அரசியலை ஆட்டிப்படைத்து வரும் இனவாதமும் மத அடிப்படை வாதமும் முடிவுக்கு வர வாய்ப்பு இருக்கிறது. (https://www.bbc.com/tamil/sri-lanka-61491928)
இலங்கையில் அதிகரித்து வரும் பணவீக்கத்தினால் ஏழைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பேராசிரியரான ஸ்டீவ் ஹான்கே கொழும்பு ஊடகம் ஒன்றிடம் பேசிய அவர் “நாட்டின் ஆண்டு பணவீக்கம் 21.5 விழுக்காடாகக இருந்தாலும், உண்மையான பணவீக்கம் 132 விழுக்காடு என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது அதிகாரப்பூர்வ பணவீக்க விழுக்காட்டைக் காட்டிலும் விட உண்மையான பணவீக்க விழுக்காடு 6 மடங்கு அதிகமாக உள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறு அதிகரித்த பணவீக்கம் ஒரு பொருளாதாரப் பேரழிவு என்று கூறிய பேராசிரியர், பணக்காரர்களை விட ஏழைகள் அதிகம் பாதிக்கப்படுவதுதான் இங்குள்ள உண்மையான சிக்கல் என்று எச்சரித்துள்ளார். மேலும் இவ்வாறான தொரு சூழ்நிலை இறுதியில் அரசியல் சிக்கலாக உருவாகும் எனவும் அவர் எச்சரித்துள்ளார். எவ்வாறாயினும் “இறுதியில் இலங்கையில் எல்லாம் நின்றுவிடும்” எனத் தனக்குத் தோன்றுவதாக அவர் மேலும் கூறியுள்ளார்.
ஒரு மனிதனுக்குத் துன்பங்கள் தனித்தனியாக வருவதில்லை. வரிசையாக வருகின்றன. இது நாட்டுக்கும் பொருந்தும். முதல் முறையாக இலங்கை அரசு ஏப்ரில் 18 ஆம் தேதி கடனாளிகளுக்குச் செலுத்த வேண்டிய 78 மில்லியன் டொலர் மதிப்புடைய கூப்பன்களை அளிக்க 30 நாட்கள் கெடு முடிந்த நிலையில் இலங்கை அதிகாரப் பூர்வமாக ஒட்டாண்டி ஆகியுள்ளது. மேலும் இலங்கை அரசு தோராயமாக 12.6 பில்லியன் டொலர் கொடுப்பனவை நிறுத்தி வைத்துள்ளது. 1948 இல் பிரிட்டனிடம் இருந்து சுதந்திரம் பெற்ற பிறகு இலங்கை முதல் முறையாக வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த டியாமல் ஒட்டாண்டியாகியுள்ளது.
பிந்திக் கிடைத்த செய்தியின்படி அத்தியாவசிய ருட்களை இறக்குமதி செய்வதற்கு உலக வங்கி இலங்கைக்குச் 160 மில்லியன் டொலர்களை இடைக்கால நிதியுதவியாக கொடுத்துள்ளது.
இலங்கை அரசுக்குச் சொந்தமான இரண்டு வங்கிகள் எந்த நேரமும் ஒட்டாண்டியாகப் போகலாம் என்ற செய்தி அடிபடுகிறது. இதில் ஒரு வங்கியிடம் மட்டும் அரசு ரூபா 600 பில்லியன் கடன் வாங்கியுள்ளது.
பிரதமர் விக்கிரமசிங்க அலரிமாளிகையின் ஒரு மாதச் செலவை ரூபா 120 மில்லியனில் இருந்து பாதியாக 60 மில்லியனாக குறைத்துள்ளார். இது நல்ல முடிவு. ஆனால் இதற்கும் மேலாக அமைச்சர்கள், துணை அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் போன்றோரது சம்பளமும் சலுகைகளும் குறைக்கப்பட வேண்டும்.
ஒரு அமைச்சரவை அமைச்சரின் மாதச் சம்பளமாக ரூபா 140,000 கொடுப்படுகிறது. மேலதிகமாக உத்தியோகபூர்வ குடியிருப்பு மற்றும் அலுவலகம் தனிப்பட்ட ஊழியர்களும் ஒதுக்கப்படுகிறது. ஒவ்வொரு அமைச்சரவை அமைச்சருக்கும் நான்கு வாகனங்கள் ஒதுக்கப்படுகிறது. உள்நாட்டு விமானப் பயணத்திற்காக, இலங்கை விமானப்படையின் எண். 4 (VVIP/VIP) உலங்குவானூர்தி ஒதுக்கப்படுகிறது.
அடுத்த இரண்டுமாதமும் இலங்கைக்கு நெருக்கடியான காலம் என பிரதமர் விக்கிரமசிங்க சொல்கிறார். இலங்கைக்கு இன்று தேவைப் படுவது ஆட்சி மாற்றமல்ல, புரட்சியைத் தவிர்ப்பதற்கான பரந்த பொருளாதார சீர்திருத்தங்கள் உள்ளிட்ட அமைப்புகளின் மாற்றமே என்றும் தெரிவிக்கிறார்.
யதார்த்தம் என்னவென்றால் வெறும் ஆட்களை மாற்றுவதோ அல்லது இன்னும் சில புத்திசாலிகள் அல்லது திறமையானவர்களை நியமிப்பதோ நாட்டின் பொருளாதார நிலையில் காத்திரமான மாற்றம் எதனையும் கொண்டு வரப்போவதில்லை. தன்னம்பிக்கையுடன் செயல்படும் நல்லவர்களுக்குக் கூட, சட்டத்தின் ஆட்சி மதிக்கப்படும் ஒட்டுமொத்தச் சூழல் இருக்க வேண்டும்.
பொருளாதரத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்றால் சமூக மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும். அதற்கும் மேலாக அரசியல் அமைப்பில் மாற்றம் கொண்டுவரப் படவேண்டும். இப்போதுள்ள நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதி முறைமை மாற்றப்பட வேண்டும். சட்ட திருத்தம் 20 யை ஒழித்து விட்டு மீண்டும் சட்ட திருத்தம் 19யை சட்ட திருத்தம் 21 நாடாளு மன்றத்தில் கொண்டு வரப்பட்டு மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்ற வேண்டும்.
தூர நோக்கில் ஒற்றையாட்சி அரசியல் முறைமை மாற்றப்பட்டு இணைப் பாட்சி முறைமையை நடைமுறைப்படுத்த வேண்டும். பவுத்த மதத்துக்கு அரசியல் அமைப்பில் முன்னுரிமை கொடுப்பதை மாற்றி நாடு மதசார்பற்ற நாடென்று அறிவிக்க வேண்டும். நாட்டில் உள்ள மூன்று மதங்களுக்கும் ஒத்த உரிமை அளிக்க வேண்டும். சிங்களத்திற்கும் தமிழுக்கும் உண்மையான சமத்துவம் உறுதிப்படுத்த வேண்டும்.
வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட்டு அதிகாரம் மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் பகிரப்பட வேண்டும். ஒன்றுபட்ட இலங்கையில் தமிழ்மக்கள் தங்களைத் தாங்களே ஆட்சி செய்யும் சுயாட்சி உரிமை வழங்கப்பட வேண்டும். இப்போதுள்ள தேசியக் கொடி மாற்றப்பட வேண்டும். மூவின மக்களையும் குறிக்கும் மூவர்ண கொடி ஒன்றை உருவாக்க வேண்டும். கருத்துச் சுதந்திரம் உட்பட அடிப்படை மனித உரிமைகள் அரசியல் அமைப்பில் உள்ளடக்கப்பட வேண்டும்.
நாடு சுதந்திரம் பெற்ற காலம் தொடக்கம் பதவி வெறி பிடித்த சிங்கள – பவுத்த அரசியல்வாதிகள் இனவாதத்தையும் மதவாதத்தையும் முதலீடாக வைத்தே மாறி மாறி ஆட்சியைப் பிடித்து வந்துள்ளார்கள்.
மேலே கூறியவாறு நாட்டின் அரசியலமைப்பு முற்றாக மாற்றி அமைக்கப்பட வேண்டும். தேருக்கு அச்சாணி போல நாட்டுக்கு அரசியல் அமைப்புத்தான் அச்சாணி. சகல மக்களதும் சமத்துவம் உறுதிசெய்யப்பட வேண்டும்.
காலிமுகத் திடலிலும், வீதிகளிலும் இரவு பகல் பாராது படித்த பல்கலைக் கழக மாணவர்கள் மற்றும் பொது மக்கள் முன்னெடுக்கும் போராட்டங்கள் அந்த இலக்கை நோக்கியதாக இருக்க வேண்டும். காலிமுகத் திடலில் நடந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அதன் தொடக்கமாக இருக்க வேண்டும்.
இன்று இலங்கைக்குத் தேவை ஆட்சி மாற்றம் அல்ல ஆட்சிமுறைமையில் மாற்றம்! (கனடா உதயன் -20-05-2022)
Leave a Reply
You must be logged in to post a comment.