செய்யும் தொழிலே தெய்வம்

செய்யும் தொழிலே தெய்வம்

சுகி சிவம்

யூலை 01,2013

மகாகவி பாரதி, “தொண்டு செய்யும் அடிமை உனக்குச் சுதந்திர நினைவோடா’ என்று வெள்ளைக்கார துரை இந்தியர்களைப் பார்த்து ஏளனமாகக் கேலி பேசுவது போன்று ஒரு பாடல் பாடி இருக்கிறார். இதற்கான நாதத்தை (மெட்டு) கோபால கிருஷ்ண பாரதி பாடிய நந்தனார் சரித்திரக் கீர்த்தனையிலிருந்து கடன் வாங்கிப் பாடி இருக்கிறார். பாரதிக்கென்ன புதிய மெட்டு கிடைக்காதா? ஏன் கோபாலகிருஷ்ண பாரதிபாடிய “மாடு தின்னும் புலையா உனக்கு மார்கழித் திருநாளா?’ என்ற மெட்டிலேயே பாடலைப் பாடவேண்டும்.

வெகுநுட்பமான ஓர் அனுபவம் அதில் வெளிப்படுகிறது. நந்தனாரைப் போன்றவர்களை ஜாதியைக் காரணம் காட்டி, அடிமைகளாக்கி அவமானப்படுத்தி நம்மில் ஒரு சிலர் சந்தோஷப்பட்டனர். சொந்தச் சகோதரர்களை அசிங்கப்படுத்தி ஆனந்தப்பட்டனர். அதன் விளைவே வெள்ளைக்காரன் நம்மை அடிமைப்படுத்தியது. அதாவது, நாம் நம்மில் சிலரை அடிமைப்படுத்தி அடிமைத்தனத்தை நியாயப்படுத்தியதால், நம்மை இன்னொருவன் (வெள்ளைக்காரன்) அடிமைப் படுத்துவதையும் ஏற்றுக் கொண்டோம் சுதந்திரத்தில் நம்பிக்கை உடையவன் தானும் அடிமையாக மாட்டான், பிறரையும் தனக்கு அடிமையாக்கமாட்டான். அடிமைத்தனமே நியாயமற்றது என்று வெகுண்டெழுந்து சுதந்திரத்திற்குப் போராடுவான்.

எந்தச் சமூகம் சொந்தச் சகோதரனாகிய நந்தனை அடிமைப்படுத்தி “மாடு தின்னும் புலையா? உனக்கு மார்கழித் திருநாளா’ என்று ஏசியதோ, அந்தச் சமூகம் மாடுதின்னும் வெள்ளைக்காரனால் அடிமைப்படுத்தப்பட்டு,

தொண்டு செய்யும் அடிமை
உனக்குச் சுதந்திர நினைவோடா’

என்று எள்ளப்பட்டது என்பது பாரதியின் மனோதாபம் என்றே நான் உணருகிறேன்.

நான் மிகுந்த வேதனையோடு பதிவுசெய்கிறேன். மிருகங்களின் உடம்பிலிருந்து பிறந்த புனுகு, கோரோசனை, பால், சாணம், மூத்திரம் இவையெல்லாம் கூட கோயிலுக்குள் நுழைய நாம் அனுமதித்தோம். ஆனால், நமது மனித இனத்திலேயே ஒரு சிலரைக் கோயிலுக்கு வெளியே நிறுத்திவிட்டோம். இது மகாபாவமல்லவா? மரம் வெட்டும் கோடாலியைப் பரசுராமர் கையிலும், வேட்டையாடும் வில்லை ஸ்ரீ ராமன் கையிலும், மண்ணை உழும் கலப்பையைப் பலராமன் கையிலும், மாடு மேய்க்கும் குச்சியைக் கண்ணபெருமான் கையிலும் கொடுத்து உழைப்பின் உயர்வைக் கொண்டாடிய நம் பெருமையைச் சிலாகிப்பதா? மரம் வெட்டியவர்களையும் வேட்டையாடியவர்களையும் மண்ணை உழுதவர்களையும் மாடு மேய்த்தவர்களையும் கோயிலுக்கு வெளியே நிறுத்திய கொடுமைக்காக வருத்தப்படுவதா?

இங்கு தத்துவங்கள் எல்லாம் சரியாகத்தான் இருந்தன. ஆனால், அதை நிலை நிறுத்த வேண்டியவர்கள்தான் தவறு செய்து விட்டார்கள். தொழில் செய்பவர்களைக் காட்டிலும் அவர்கள் உழைப்பை உபயோகிப் படுத்திக் கொள்ளும் நபர்கள் அல்லது உறிஞ்சிக் கொள்ளும் நபர்கள் உயர்வானவர்கள் என்கிற கருத்துப்பிழை இங்கே கருக்கொண்டு விட்டது! நல்ல வேளை! இப்படி சமயத்தின் பெயரால் நடந்த சகல குழப்பங்களையும் நீக்கி உழைப்பின் உயர்வைத் தூக்கிப் பிடிக்க ஒரு சூரியன் தோன்றியது. ஆம்! இதற்கு உதயமான ஞானபானு தான் சுவாமி விவேகானந்தர்.

ஒருமுறை, சில பண்டிதர்கள் கூடி ஆத்மா, கடவுள் பற்றிய சந்தேகங்களையும் சர்ச்சைகளையும் சுவாமி விவேகானந்தரிடம் செய்து கொண்டிருந்தார்கள். மணிக்கணக்கான விவாதத்திற்குப் பிறகு அவரவர்க்குப் பசியும் களைப்பும் வந்ததும் பறந்து போனார்கள்.

சுவாமி தனித்து விடப்பட்டார். தொலைவிலிருந்து இந்தக் கூத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த செருப்பு தைக்கும் தொழிலாளி ஒருவர் மட்டும் வருத்தமடைந்து விவேகானந்தரை நெருங்கி, “”சுவாமி, மணிக்கணக்காக நீங்கள் பேசிக் கொண்டே இருந்தீர்களே… இப்போது கடும்பசி இருக்குமே. இவர்கள் உணவுக்கு ஏதும் ஏற்பாடு செய்திருக்கிறார்களா சுவாமி?” என்று அன்பொழுகக் கேட்டார்.

மெல்லிய புன்னகை செய்த விவேகானந்தர், “”ஆம் சகோதரா… எனக்கு மிகவும் பசிக்கிறது. ஆனால் என்ன செய்ய? அவர்கள் அது பற்றி யோசிக்கவே இல்லை… எனக்கு நீ எதுவும் உணவு தர முடியுமா?” என்றார்.

புதறிப்போன அவர், “”சுவாமி, நீங்கள் மேல் ஜாதிக்காரர்… நானோ தாழ்த்தப்பட்டவன்.. உங்களுக்கு உணவளிக்கும் தகுதி எனக்கில்லையே… நான் உங்களுக்கு உணவளித்த செய்தி தெரிய வந்தால் இந்த ஊர்க்காரர்கள் என்னைக் கொன்று கூடப் போடுவார்கள்… தயவு செய்து என்னை மன்னிக்கவும்,” என்று கைக் கூப்பினான்.

சிங்கம் போல் நிமிர்ந்து உட்கார்ந்த விவேகானந்தர், “”சகோதரா… உன்வசம் உள்ள ரொட்டிகளில் ஒரு சிறிது எனக்குப் பகிர்ந்தளிக்க வேண்டும். ஊரைப் பற்றிய பயம் வேண்டாம். அதை எதிர்கொள்ளும் சக்தி என்னிடம் இருக்கிறது,” என்று உரிமையுடன் கோரி அவனிடமிருந்து ரொட்டி (சப்பாத்திகள்) பெற்று மகிழ்வுடன் உண்டார்.

இன்னொரு முறை, அவரது பயணத்தின்போது ஹூக்கா பிடித்துக் கொண்டிருந்த ஒருவரிடம் போய், “”நானும் ஹூக்கா (புகை) பிடிக்க விரும்புகிறேன். எனக்கு நீங்கள் சிறிதளவு தயாரித்து (புகையிலை நிரப்பி) அளிக்க முடியுமா?” என்று கேட்டார். அவனும் சங்கடத்துடன், “”நீரோ மேல் ஜாதிக்காரராக தோற்றமளிக்கிறீர். நானோ ஒடுக்கப்பட்டவன். இதில் நீங்கள் புகை பிடிப்பது தவறல்லவா?” என்று கேட்டான்.

புகைபிடிக்கும் எண்ணமே இல்லாமல் ஆகிப் போனதால் அங்கிருந்து நகர்ந்த விவேகானந்தர் திரும்பி வந்து, “”இதோ பார்! புகைபிடிக்க வேண்டாம் என்ற எண்ணம் தோன்றித்தான் இங்கிருந்து புறப்பட்டேன். ஆனால், முதலில் கேட்ட நான், இப்போது வேண்டாம் என்றால் உன் ஜாதி காரணமாக நான் விலகிப் போனதாக ஆகிவிடும். இந்த உயர்வு தாழ்வுகளில் எனக்குச் சம்மதமில்லை. ஹூக்கா தயார் செய்,” என்று கேட்டுக் கொண்டு சிறிது புகைபிடித்த பின் அங்கிருந்து நகர்ந்தார்.

உழைப்பைக் கீழாக நினைத்து உழைக்கும் வர்க்கத்தைத் தாழ்வாக நினைத்த சமூகத்தின் பிடரியில் மரணஅடி கொடுத்து இந்தியாவின் உண்மை ஆன்மிகத்தை நிலை நிறுத்த வந்த மானுடச் சிங்கமாகக் கர்ஜித்தவரே சுவாமி விவேகானந்தர். உழைப்பைக் கீழாகக் கருதி தொழிலில் உயர்வு தாழ்வு கற்பித்தது உண்மையான ஆன்மிகம் அன்று. உழைப்பை நேசித்து அதன் உயர்வை ஒப்புக் கொண்டதே உண்மை ஆன்மிகம் என்று நாம் உணர வேண்டும்.

சிவபெருமானைப் பற்றி எழுதிய சாணக்கியர், எருதுகள் பூமியை உழுபவை. அதனால்தான் சிவபெருமான் அதைத் தனது வாகனமாக ஏற்றார். விவசாயத்திற்கு அடிப்படையான நீரை தன் ஜடா முடி மீதே சிவபெருமான் வைத்திருக்கிறார். அதனால், பசுவையும் எருதையும் இழிவுபடுத்தக் கூடாது என்று எழுதுகிறார். இப்படிச் சிந்தித்த சமூகத்தில் நாம் விவசாயிகளையே இழிவுபடுத்த முற்பட்டோமே? அது சரியா?

உடனே விவசாயிகளை நாம் மதித்தோம் என்பதற்கு ஆதாரமாக “சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்’ என்று திருக்குறளில் தொடங்கி, “உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனைசெய்வோம்’ என்கிற பாரதி வரிகளை ஒப்புவித்து சிலர் என்னோடு சண்டைக்கு வரலாம். ஐயா.. மாடு தின்னும் புலையா… உனக்கு மார்கழித் திருநாளா? என்கிற உழைக்காத வர்க்கத்தின் அகம்பாவம்தான், நமது வீழ்ச்சியின் மூலகாரணம் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

கோயில் திருநீறு கொடுக்கும் பத்து வயதுப் பையனைக் கூட “சாமீ’ என்று மரியாதையாக அழைக்கத் தெரிந்த நம்மவர்களுக்கு, பண்ணையில் வேலை பார்க்கும் எழுபது வயதுக் கிழவரைக் கூட “ஏய்… டேய்…’ என்று அழைக்கும் குணம் இருந்ததே… இதுசரியா? அவரையும் அவரது உழைப்பையும் வயதையும் மனதில் கொண்டு “ஐயா’ என்று அழைக்க நமக்கு மனம் வரவில்லையே! இது சரியா?
– மேலும் பேசுவோம்

https://www.dinamalar.com/aanmeegamnews_detail.asp?news_id=6000

About editor 2992 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply