HTML clipboard
மொந்தையும் பழசு, கள்ளும் பழசு!
நக்கீரன்
புதிய மொந்தையில் பழைய கள் ( “Old Wine in a New Bottle”) என ஒரு பழமொழி உண்டு. அதாவது முட்டி புதிது கள் பழசு என்று பொருள். இலங்கையில் உருவாக்கப்பட்ட ‘புதிய’ அமைச்சரவை பழைய முகங்களால் நிரப்பப்பட்டுள்ளன என விமர்ச்சிக்கப்படுகிறது. என்னைக்
கேட்டால் மொந்தையும் பழசு, கள்ளும் பழசு என்பேன்.
பிரதமர் இரணில் தலைமையில் 21 அமைச்சர்களைக் கொண்ட அமைச்வரவை உருவாக்கப்பட்டுள்ளது. அதில் இடம் பெற்றவர்கள் கடந்த ஆட்சிகளின் போது அமைச்சராக இருந்த பழைய முகங்கள்தான். இந்த 21 25 ஆக உயரவுள்ளது.
அமைச்சரவையில் கல்வி, திறமை இரண்டுக்கும் முதல் இடங்கொடுத்து பல புதிய முகங்கள் இடம்பெறும் என்ற மக்களின் எதிர்பார்ப்பு மழுங்கடிக்கப்பட்டுள்ளது. வயது வந்த குரங்குக்கு புதிய வித்தைகளைக் கற்பித்துக் கொடுக்க முடியாது என்பதைத்தான் இது காட்டுகிறது.
தில் சோகம் என்னவென்றால் குதிரை வியாபாரத்தின் மூலம் எதிரணியில் இருந்த நா.உறுப்பினர்களை வலை வீசிப் பிடித்து அவர்களுக்கு அமைச்சுப் பதவிகள்கொடுத்துள்ளார்கள். இது சனாதிபதி கோட்டாபய மற்றும் பிரதமர் இரணிலும் முன்னர்மகிந்த இராசபக்ச விளையாடிய அரசியல் விளை யாட்டைத்தான் விளையாடுகிறார்கள்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் முக்கிய பதவிகளில் இருந்த இரண்டு நா. உறுப்பினர்கள்அமைச்சர்களாக மே 23 அன்று நியமனம் பெற்றுள்ளார்கள். இந்த இருவரில் நிமால் டிசில்வா மற்றும் மகிந்த அமரவீர சிறிலங்கா கட்சியின் மூத்த துணைத் தலைவர்கள் ஆவர். புதிதாக அமைக்கப்படும் அமைச்சரவையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி நா.உறுப்பினர்கள்
அமைச்சர் பதவி எதையும் ஏற்பதில்லை எனத் தீர்மானிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கட்சி தாவிய இந்த இருவர் மீதும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என கட்சித் தலைவர் மைத்திரிபால சிறிசேனா அறிவித்துள்ளார். இது வெறும் கண்துடைப்பு. காரணம் சிறிலங்கா சுதந்திரக் கட்சி வேட்பாளர்கள் சிறிலங்கா பொதுசன முன்னணியின் மொட்டுச் சின்னத்தில் நின்றுதான் தேர்தலில் வெற்றிபெற்றார்கள். சட்டப்படி இவர்களுக்கு எதிரான கட்சித் தாவல் குற்றச்சாட்டு பொருந்தி வராது.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து நிமால் டி சில்வாவும் மகிந்த அமரவீராவும் கட்சிக் கட்டுப்பாட்டை மீறி அமைச்சர் பதவிகளை எடுத்தது போலவே ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் இருந்தும் அக் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஹரின் பெர்னாந்துவும் மற்றும் மனுஷ நாணயக்காரவும் அதே பாணியில் வேலி பாய்ந்து அமைச்சரவையில் இடம் பிடித்துள்ளார். இந்த இருவரும் நேற்றுவரை இராசபக்ச குடும்ப அரசியலுக்கு எதிராக – குறிப்பாக கோட்டாபயவுக்கு எதிராக – மேடைகளில் இராசபக்சா குடும்பத்தை மிகக் கடுமையாக விமர்ச்சித்து முழக்கம் இட்டவர்கள்.
இப்படிக் குதிரை வியாபாரம் மூலம் கட்சி தாவியவர்களில் சிறிலங்கா முஸ்லிம் கட்சியைச் சேர்ந்த நசீர் அகமதுவும் ஒருவர். இவர் 2020 நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாகப் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு முதல் தடவையாகத் தெரிவு செய்யப்பட்டவர். இப்போது புதிய அமைச்சரவையில் சுற்றுச்சூழல் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த மே 9 இல் நாடு முழுதும் 80 க்கும் அதிகமான அரசியல்வாதிகளின் வீடுகள் கலகக்காரர்களால் எரியூட்டப்பட்டன. ஏறாவூரில் இருந்த இவரது வீடும் எரியூட்டப்பட்டது.
நா.உறுப்பினர்களின் கட்சித்தாவல் இத்தோடு நிற்கப் போவதில்லை. முப்பதற்கும் மேலான இராசாங்க அமைச்சர்களை நியமிக்கும் போது மேலும் பலர் கட்சி தாவுவார்கள் என எதிர்பார்க்கலாம். மீன்கள் எப்படி தண்ணீரில் இல்லாவிட்டால் வாழமாட்டாது இறந்து போகுமோ அது போல சில அரசியல்வாதிகள் அமைச்சர் பதவி இல்லாமல் உயிர் வாழமாட்டார்கள். பிறவிப் பயன் எடுத்தது அமைச்சர் பதவி பெறுவதற்வே என்பது அவர்களது கோட்பாடு.
இப்படி வெட்கம் துக்கம் எதுவுமின்றி அமைச்சர் பதவிகளுக்குஆசைப்பட்டு கட்சி தாவுகிறவர்கள் அதனை நியாயப்படுத்த நாட்டைப் பொருளாதார நெருக்கடியில் இருந்து காப்பாற்றவே அமைச்சர் பதவிகளை ஏற்றுக் கொண்டோம் என வியாக்கியானம் வேறு கொடுக்கிறார்கள்.
மகிந்த இராசபக்ச 1977 இல் நாடாளுமன்றத்துக்குத் தெரிவானவர். அதன்பின் கடந்த 50 ஆண்டுகளில் அமைச்சர், பிரதமர் இருமுறை சனாதிபதி ஆகவும் ஆட்சிக் கட்டிலில் இருந்தவர். பல பல்கலைக்கழகங்கள் அவருக்கு பல முனைவர் பட்டங்கள் வழங்கியுள்ளன. அதில் ஒன்று உருசிய மக்கள் நட்புறவுப் பல்கலைக்கழகம் 2010 பெப்ரவரி 6 இல் உலக அமைதிக்கான பங்களிப்பு மற்றும் பயங்கரவாதத்தை தோற்கடிப்பதில் சிறந்த வெற்றி பெற்றமைக்காகவும் மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கியது.
“முன்னாள் பிரதமர் மகிந்த இராசபக்ச, இலங்கையின் சனாதிபதியாக இருமுறை பதவி வகித்த பின்னர் ஓய்வு பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறியதன் விளைவாகவே தற்போதைய நிலைமைக்கு மகிந்த இராசபக்ச முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 50 ஆண்டுகால அவரது சிறப்பான அரசியல் சாதனைகள் மற்றும் பயணம் தற்போது தொலைந்து போயுள்ளது. அரசியலில் நுழைவது மற்றும் அதில் ஈடுபடுவது சரிதான். ஆனால் சரியான நேரத்தில் அதிலிருந்து விலகவும் கற்றுக்கொள்ள வேண்டும். நாம் அதிகாரம் மற்றும் அரசியல் பதவிகளுக்கு பேராசைப் பட்டால் இன்று நாம் காணும் இத்தகைய விளைவுகளை எதிர்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை” என்று மகிந்த இராசபக்ச அவர்களின் அண்ணன் சாமல் இராசபக்ச நாடாளுமன்றத்தில் பேசும் போது சுட்டிக்காட்டியுள்ளார்.
புதிய அமைச்சரவை அமைப்பது தொடர்பாக இலங்கை வழக்கறிஞர்கள் சங்கம் சனாதிபதி கோட்டாபய அவர்களுக்கு 13 அம்ச யோசனைகளை முன்வைத்தது தெரிந்ததே. மொத்த அமைச்சரர்களின் எண்ணிக்கை 15 ஆக இருக்க வேண்டும். அரசியல் சட்ட திருத்தம் 20 திருத்தப் படவேண்டும். பிரதமர் பதவிக்கு எல்லாக் கட்சிகளது நம்பிக்கையைப் பெற்றவராக இருக்க வேண்டும். பதினைந்து நிபுணர்கள் கொண்ட ஒரு ஆலோசனை சபை. நிறைவேற்று அதிகாரம் படைத்த சனாதிபதி பதவி 15 மாதங்களில் ஒழிக்கப்பட வேண்டும் என்பதே அந்த யோசனைகளாகும்.
“நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றப்பட்டாலும் இல்லாவிட்டாலும் தேசிய அரசாங்கத்தை அமைக்க நாங்கள் முன்மொழிகிறோம். நாட்டின் பொருளாதார நிலை குறித்துப் பலருக்கு சரியான புரிதல் இல்லை. எனவே, இந்த யோசனைகளை விரைவில் நிறைவேற்ற வேண்டும். அரசியல் உறுதித்தன்மை இல்லாமல் பொருளாதார உறுதித்தன்மையை உருவாக்க வழி இல்லை. இந்நாட்டு மக்கள் தங்களுக்கு உள்ள சிக்கல்களுக்காக நியாயமான வழியில் போராடுகிறார்கள். அரசியலமைப்பின் கட்டமைப்பிற்குள் நடைமுறைப்படுத்தக் கூடிய ஒரு வேலைத்திட்டத்தை நாங்கள் முன்மொழிகிறோம். இந்தச் சிக்கலின் தீவிரத்தை அனைவரும் புரிந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். இறுதியில் இந்நாட்டு மக்களின் நலனுக்காக ஏதாவது செய்ய வேண்டும். இனி எந்த மக்களையும் ஆதரவற்றவர்களாக ஆக்க முடியாது” என இலங்கை வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் பீரீஸ் பேசியிருக்கிறார். ஆனால் ஆளும் கட்சி அரசியல்வாதிகள் அதனைக் காதில் போட்டுக்கொள்ள மறுக்கிறார்கள்.
வண. மகாநாயக்க தேரர்கள் மற்றும் மகா சங்கத்தினர் சார்பாக ஒலகன்வத்த சந்திரசிறி பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்தார்.
(1) மந்திரிசபையைக் கலைத்தல்
(2) பொதுத் தேர்தல் நடைபெறும்வரை இடைக்கால அனைத்துக் கட்சி நிர்வாகம்
(3) இடைக்கால நிர்வாகத்திற்கு ஆலோசனை வழங்க ஒரு நிபுணர் குழு
(4) நாடாளுமன்றத்தில் எட்டப்பட்ட கருத்தொற்றுமையின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட தேசியக் கொள்கையைப் பின்பற்றுவதற்கு இடைக்கால அனைத்துக் கட்சி நிர்வாகம்
(5) ஒப்புக்கொள்ளப்பட்ட முன்மொழிவுகளைப் பற்றி பொதுமக்களுக்குக் கற்பித்தல், மற்றும்
(6) இடைக்கால நிர்வாகத்தால் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு சனாதிபதி கட்டுப்பட வேண்டும்.
ஆனால் நடைமுறையில் வழக்கறிஞர் சங்கத்தின் 13 அம்ச யோசனைகளையோ அல்லது மகாசங்கம் சமர்ப்பித்த முன்மொழிவுகளையோ கோட்டாபய – இரணில் அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. இலங்கை வழக்கறிஞர் சங்கமோ அல்லது மகா சங்கமோ சனாதிபதி கோட்டாபய இராசபக்ச உடனடியளாகப் பதவி துறக்க வேண்டும் என்று கேட்கவில்லை. அவரது நிறைவேற்று அதிகாரத்தை அகற்றினால் போதும் என அவை நினைக்கின்றன.
ஆனால் நிறைவேற்று அதிகாரம் படைத்த சனாதிபதி கோட்டாபய பதவியைத் துறந்து வீட்டுக்குப் போக வேண்டும் என்பதே மக்களது கோரிக்கையாக இருக்கிறது. முக்கியமாக காலிமுகத் திடலில் போராடும் போராட்டக்காரர்களது கோரிக்கையாக இருக்கிறது.
வி.புலிகளைத் தோற்கடித்தார் என்ற ஒற்றைக் காரணத்துக்கு ஆகவே சனாதிபதி தேர்தலில் சிங்கள – பவுத்த மக்கள் அவருக்கு வாக்குகளை அள்ளிப் போட்டு அவரை நாட்டின் சனாதிபதியாக அமர வைத்தார்கள். ஆனால் போரை வெல்வது வேறு நாட்டை ஆளுவது வேறு. முன்னதற்கு ஆட்பலமும் ஆயுதபலமும் இருந்தால் போதும். ஆனால் நாட்டை ஆளுவதற்கு சில சிறப்பான தகைமைகள் வேண்டும். இயற்றல், ஈட்டல், காத்தல், வகுத்தல் போன்ற கடமைகள் மன்னனுக்கு இருக்க வேண்டும்.. இவை இருந்தால் மட்டும் போதாது. அவற்றைச் செயல்படுத்துவதில் தான் ஒரு மன்னனின் திறன் அமைந்திருக்கிறது என்று குறிப்பிடுகிறார் வள்ளுவர். மேலும் கொடை வழங்குவதிலும், இரக்கம் காட்டுவதிலும், செங்கோல் செலுத்துவதிலும், குடிகளைப் பாதுகாத்தலிலும் ஒரு மன்னன் தன்செயல் திறனைக் காட்ட வேண்டும். அவ்வாறு செயல்திறனைக்காட்டுகின்றவன் அரசர்களிடையே ஒளிதரும் விளக்காகத் திகழ்வான் என்கிறார் வள்ளுவர்.
கோட்டாபய இராசபக்ச அவர்களது இரண்டரை ஆண்டு கால ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் அதல பாதாளத்துக்குள் தள்ளப்பட்டு விட்டது. அதற்கு முக்கிய காரணம் அவர் எடுத்த தவறான முடிவுகள். இரசாயன உரத்தின் இறக்குமதிக்கு தடை விதித்தது பெரும்போக நெல்விளைச்சலை பாதியாகக் குறைத்து விட்டது. சனாதிபதியின் நோக்கம் நல்லது. ஆனால் இயற்கை வேளாண்மையை படிப்படியாக நடைமுறைப்படுத்தியிருக்க வேண்டும். 2019 இல் வட் வரி 15 இல் இருந்து 8 ஆகக் குறைக்கப்பட்டது. ஐந்து இலட்சம் வரியிறுப்பாளர்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டது. 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சுமார் 1,550,000 வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 2020 இல் 1,036,000 ஆகவும், 2021 இல் 412,000 ஆகவும் குறைந்துள்ளது. இவற்றால் ஆண்டு தோறும் ரூபா 600 பில்லியன் வரியிழப்பு ஏற்பட்டு வரப்போகிறது.
உத்தியோகபூர்வ மதிப்பீடுகளின்படி, இலங்கையின் வெளிநாட்டுக் கையிருப்பு 2019 யூன் மாதம் $8,864 மில்லியனாக இருந்தது. 2022 சனவரியில் $2,361
மில்லியனாகக் குறைந்து இன்று ஒரு மில்லியனாக வீழ்ச்சி கண்டுள்ளது. இது ஒருநாள் இறக்குமதிக்கும் போதாது.
நாட்டில் அத்தியாவசியப் பொருட்களான வாகன எரிபொருள், சமயல் எரிபொருள், மண்ணெண்ணை போன்றவற்றுக்கு நாட்கணக்கில் மக்கள் வரிசையில் தவம் இருக்கிறார்கள். மண்ணெண்ணை இல்லாததால் மீனவர்கள் தொழில் செய்ய முடியாமல் பட்டினி கிடக்கிறார்கள்.
அதே சமயம் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் விஷம் போல் ஏறுகிறது. காலையில் ஒருவிலை அடுத்த நாள் இரவு முதல் இன்னொரு விலையாக இருக்கிறது. உணவுப் பொருட்களின் விலை 46.6% அதிகரித்துள்ளது. வாகன எரிபொருள் 95 ஒரு லிட்டர் ரூபா 373 இல் இருந்து இந்த மாதம் ரூபா 450 ஆக உயர்ந்துள்ளது. வாகன எரிபொருள் 92 ரூபா 338 இல் இருந்து 420 ஆக உயர்ந்துள்ளது. டீசல் 289 இல் இருந்து ரூபா 400 ஆகவும் சுப்பர் டீசல் 329 இல் இருந்து 448 ஆக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக தொடர்வண்டி மற்றும் இபோச பயணக் கட்டணங்கள் அதிகரித்துள்ளது. இதனால் அரசாங்கம் வெளியிட்ட தரவுகளின்படி கடந்த மார்ச் மாதத்தில் 21.5% இருந்த பணவீக்கம் ஏப்ரில் மாதத்தில் 33.8% ஆக எகிறியுள்ளது.
“நான் பதவி விலக மாட்டேன். என்னைப் பதவி விலகுமாறு சனாதிபதி கேட்கவும் மாட்டார்” என மகிந்த இராசபக்ச கடைசிவரை அழுங்குப் பிடியாக பதவியில் ஒட்டிக் கொண்டிருந்தார். ஆனால் நாடு முழுதும் வெகுண்டெழுந்த மக்களின் எதிர்ப்புக் காரணமாக தனது பிடிவாதத்தை கைவிட்டுப் பதவி துறந்தார். அது போல சனாதிபதி கோட்டாபய அவர்களும் மக்கள் கழுத்தைப் பிடித்துத் தள்ளுமட்டும் சனாதிபதி பதவியில் இருந்து விலகப் போவதில்லை என அடம் பிடிக்கிறார். இப்போது விலகினால் மரியாதையோடு விலகலாம். இல்லையேல் மகிந்த இராசபக்ச போல அவமானப்பட்டுப் பதவியைத் துறக்க நேரிடும். அவர் பதவியில் இருக்கு மட்டும் பொருளாதார நெருக்கடிக்குள் மட்டும் அல்ல பொருளாதார நெருக்கடிக்குள் இருந்தும் இலங்கையைக் காப்பாற்ற முடியாது. (Canada Uthayan-June 03, 2022)
Leave a Reply
You must be logged in to post a comment.