குவேனியின் சாபம் தொடர்ந்து இராசபக்ச குடும்பத்தைத் துரத்துகிறது!

குவேனியின் சாபம் தொடர்ந்து இராசபக்ச குடும்பத்தைத் துரத்துகிறது!

நக்கீரன்

மகா கவி பாரதியாரின் அற்புதமான பாட்டுக்களில் ஒன்று கண்ணன் பாட்டு. அதில் பத்தாவது பாட்டு  கண்ணன் என் காதலன் ஆகும்.

நாலு வயித்தியரும் – இனிமேல்
நம்புதற் கில்லை யென்றார்;
பாலத்துச் சோசியனும் – கிரகம்
படுத்து மென்று விட்டான். …

இந்தப் பாடலில் பாரதியார்  கண்ணனைக் காதலனாகவும் தன்னைக் காதலியாகவும் உருவகித்து காதலர்க்குப் பிரிவால் பிரிவினால் ஏற்படும் வேதனையை வெளிப்படுத்துகிறார்.

நாலு வயித்தியரும் – இனிமேல் நம்புதற் கில்லை யென்றார்; பாலத்துச் சோசியனும் – கிரகம் படுத்து மென்று விட்டான் என்பது கடனில் மூழ்கி தத்தளிக்கும்  இன்றைய இலங்கைக்குப் பொருந்தும். இலங்கை ஒரு தோற்றுப் போன நாடு, ஒண்டாடியாகிவிட்ட நாடு, உருப்படாத நாடு, தீவிர மருத்தவப் பிரிவில் (ICU) மூச்சுவிடத் திணறிக் கொண்டு இருக்கும் நாடு எனப் பொருளாதார நிபுணர்கள் சொல்கிறார்கள். ஆனால் நாட்டை ஆளும் இராசபக்ச குடும்பத்தினர், குறிப்பாக சனாதிபதி கோட்டாபய இராசபக்ச நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் நாட்டின் இன்றைய பரிதாபமான நிலைக்குத் தான் பொறுப்பல்ல என்றும் அரசாங்கத்தின் கைகளையும் மீறிக் காரியங்கள்  நடப்பதாகச் சொல்கிறார். அவர்  தனது உரையில் –

Gallery

(1) வருடாந்த கடன் தவணை மற்றும் பிணை முறி கொடுப்பனவுகளை செலுத்தும் முறைமை தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். அதனோடு இணைந்து செயற்படப் போகிறோம்.

(2)  மக்களின் நாளாந்த வாழ்க்கைக்கான அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடு மற்றும் விலை அதிகரிப்பு தொடர்பில் நாம் அறிந்துள்ளோம். எரிவாயு தட்டுப்பாடு, எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் மின்சார துண்டிப்பு தொடர்பிலும் நன்கு அறிந்துள்ளேன்.

(3) கடந்த 2 மாதங்களில் மக்கள் எதிர்நோக்கிய சிக்கல்கள் தொடர்பில் வருத்தமடைகின்றேன். அது தொடர்பில் செய்ய முடியுமான அனைத்தையும் நாம் செய்த போதிலும், எமது கட்டுப்பாட்டை மீறி நிலைமை மோசமடைந்தள்ளது. நான் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கான பொறுப்பை நான் ஏற்பேன்.

(4) மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்குக்  கடுமையான தீர்மானங்களை மேற்கொள்கிறேன். அதற்கு உதவுவதற்காக தேசிய பொருளாதார பேரவையும் அதற்கு ஆதரவு வழங்குவதற்காக ஆலோசனை சபையும் நியமிக்கப்பட்டுள்ளது.

(5) எனவே, மக்களுக்காக நாம் மேற்கொள்ளும் தீர்மானங்கள்மீது நம்பிக்கை வைக்குமாறு மக்களிடம் கோரிக்கை விடுவிக்கிறேன்.

(6) தற்போதைய நெருக்கடி நிலை இலங்கைக்கு மாத்திரம் ஏற்படவில்லை. முழு உலகமும் எதிர்பார்க்காத அளவு சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளன.

Sri Lanka gets urgent loan from India amid fuel crisis - La Prensa Latina  Media

கோட்டாபய இராசபக்ச சனாதிபதியாகப் பதவியேற்று இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டன. மகிந்த இராசபக்ச பிரதமராக பதவியேற்றும்  இரண்டாட்டுக்கு மேலாகி விட்டது. இந்த இரண்டாண்டு காலத்தில் இராசபக்ச அரசு நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பி இருக்கலாம். அது செய்யப்படவில்லை. மாறாக இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்துக்குப் பின்னர் அது வரலாறு காணாத பொருளாதாரப் பின்னடைவைச் சந்தித்துள்ளது. இராசபக்ச அரசு 2019 இல் பதவிக்கு வந்தபோது வெளிநாட்டு நாணய இருப்பு அ.டெலர் 7.5 பில்லியனாக இருந்தது. இப்போது அது அ.டொலர் 2.5 பில்லியனாக குறைந்துவிட்டது.

வெளிநாட்டில் இருந்து எரிபொருளோடு கொழும்புத்துறைமுகத்துக்குக்   கப்பல்கள் வருகின்றன. ஆனால் அந்த  எரிபொருளுக்கு கொடுக்க வேண்டிய கொடுப்பனவு கொடுக்கப்படாததால் எரிபொருளை இறக்க முடியாது இருக்கிறது. காரணம் கொடுப்பதற்கு  அரசிடம் அ.டொலர்  கையிருப்பு  இல்லை. இதனால் பெட்ரல், டீசல் இரண்டுக்கும் நாடு முழுதும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் விவசாயம், போக்குவரத்து, கட்டிட நிர்மானம் போன்றவை கடுமையாகப்  பாதிக்கப்பட்டுள்ளதன.

“தற்போதைய நெருக்கடி நிலை இலங்கைக்கு மாத்திரம் ஏற்படவில்லை. முழு உலகமும் எதிர்பார்க்காத அளவு சிக்கலை  எதிர்நோக்கியுள்ளன. கோவிட் தொற்று, உக்கிரேன் போர் இரண்டும் பொருளாதாரத்தை பாதித்துவிட்டது என்கிறார். இவை நொண்டிச் சாட்டுக்கள். கோவிட் தொற்றால் முழுப்பொருளாதாரமும் படுத்துவிட்டது என்பது உண்மையல்ல. சுற்றுலாத்துறை மட்டும் பாதிக்கப்பட்டுள்ளது.

ஆனால்  சனாதிபதி இராசபக்ச சடுதியாக செயற்கை இரசாயன பசளைக்கு  இறக்குமதி தடை விதித்தது மகாபோக நெல்விளைச்சலைப் பாதியாகக்  குறைத்துவிட்டது. இயற்கை விவசாய பாவனை வரவேற்க வேண்டிய  மாற்றம்தான். ஆனால் அந்த மாற்றத்துக்கு விவசாயிகளுக்குக் கால அவகாசம் அளித்திருக்க வேண்டும்.

சனாதிபதி கோட்டபாய இராசபக்ச ஆற்றிய உரையினை அடுத்து நாடாளுமன்ற உறுப்பினரும் பொருளாதார நிபுணருமான ஹர்ஷ டி சில்வா காரசாரமான கேள்விக்  கணைகளைத்  தொடுத்துள்ளார்.

நெருக்கடி நிலையை ஏற்கனவே அடையாளம் கண்டுவிட்டதாக கூறுவது உண்மையானல் அதைத் தீர்ப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை ஏன் எடுக்கவில்லை? . இந்த நெருக்கடியை  முன்பே அடையாளம் கண்டதாக கூறுவது சரியானால் அரசியல் பிரபலத்தை பெறுவதற்காக பாரிய தொழில் நிறுவனங்களின் வரிகளைக் குறைத்து  அதன் மூலம்  ரூபா 600 பில்லியன் வரி வருவாய் ஏன் இழந்தீர்கள்?

உலகிலேயே மிகக் குறைந்த அரசாங்க வருமானம் கொண்ட நாடான இலங்கையில் அரச வருமானம் பாரியளவில் வீழ்ச்சியடைந்தமையே நெருக்கடியின் தொடக்கம்.   உருபாய் மதிப்பு வீழ்ச்சியால் ஏற்றுமதி வருமானம் அதிகரிக்கும், அதன் மூலம் வர்த்தக பற்றாக்குறையைக் குறைக்கலாம் என்றால் – சனாதிபதி கோட்டாபய  முன்கூட்டியே அறிந்திருந்தால் – உருபாயின் மதிப்பை செயற்கையாக கட்டுப்படுத்துவதற்கு ஆலோசனை வழங்கியது ஏன்? இதன் விளைவாக நாடு சுமார் 4 பில்லியன் அ.டொலர் வருவாயை இழந்துள்ளது. உரூபாயின் பெறுமதியைக் பாதுகாப்பதற்காக சுமார் 1.5 பில்லியன் டொலர்கள் பாழடிக்கப்பட்டுவிட்டது என்பதே இதன் பொருள்.  மேலும், உரூபாயின் செயற்கையான கட்டுப்பாட்டின் காரணமாக நாடு அண்ணளவாக  2.5 பில்லியன் அ. டொலர் வெளிநாட்டு நாணயத்தை இழந்துள்ளது. அதனால் வெளிநாட்டு நாணய  நெருக்கடி நீடிக்கிறது என்பதுதான் உண்மை.

இந்த நேரத்தில் நாட்டிற்காக மக்கள் மின்சாரம் மற்றும் எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துமாறு சனாதிபதி கோட்டாபய கேட்டுள்ளார்.  மக்கள் எரிபொருளை சிக்கனமாகப் பயன்படுத்துவதற்கு கூட எரிபொருளை கண்டுபிடிக்க முடியவில்லை. மறுபுறம்,  நெருப்பு விலையில் எரிபொருள் வாங்கும் மக்கள் அதனை வீணடிப்பதாக நினைப்பது தவறு.

“முழுமையான நாடு என்ற அடிப்படையில் எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்தினால் பொருளாதாரம் சரிந்து விடும். கடன்களை மீளச் செலுத்துவதற்கான வழிமுறையை உருவாக்க சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள். அது நல்ல விடயம்தான். ஆனால் கேள்வி என்னவென்றால், நெருக்கடியை முன்கூட்டியே அறிந்திருந்தால்  பன்னாட்டு நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்த ஏன் இவ்வளவு கால தாமதம்?

பொருளாதார நிபுணர்கள் 18 மாதங்களுக்கு முன்னரே நாடு இவ்வாறானதொரு நெருக்கடிக்குள் தள்ளப்படும் எனவும் பன்னாட்டு  நாணய நிதியத்துடன் கலந்தாலோசித்து தீர்வுகள் காணப்பட வேண்டும் என்றும் கூறியிருந்தனர். இன்று நீங்கள் எடுக்கப்போகும் தீர்மானம் அன்றே எடுக்கப்பட்டிருந்தால், மக்கள் இப்படி ஒரு நிலைமைக்கு முகம் கொடுக்க வேண்டியிருக்காது சனாதிபதி அவர்களே” என அவர் பதிவிட்டுள்ளார்.

என்னைக் கேட்டால் இலங்கையின் இன்றைய ஒட்டாண்டி நிலைக்கான அத்திவாரம் பிரதமர் டி.எஸ். சேனநாயக்கா காலம் முதல் தொடர்ந்து வருகிறது. அவர்தான் தமிழ்ப் பிரதிநிதிகளுக்கு பொய்யான வாக்குறுதிகளை அளித்து – அவர்களை நம்பவைத்து – பின்னர் அவர்களது கழுத்தை அறுத்தார். சோல்பரி அரசியலமைப்பின் மூலம் ஒற்றையாட்சிக்கு அடிகோலினார். அரசியல் அதிகாரம் என்றென்றும் பெரும்பான்மை சிங்களவர்களது கையில் இருப்பதற்கு வழிகோலினார்.

1945 ஒக்தோபரில்  தமிழ் உறுப்பினர்கள் அனைவரும்  வெள்ளை அறிக்கையில் உள்ளடக்கிய சோல்பரி அரசியலமைப்பை ஏற்றுக்கொள்வதாக சட்டசபையில்  ஒருமனதாக வாக்களித்ததைத் தொடர்ந்து டி.எஸ். சேனநாயக்கா தமிழ் மற்றும் பிற சிறுபான்மை சமூகங்களுக்கு பின்வரும் உறுதியான வாக்குறுதியை அளித்தார்.


“நீங்கள் இலண்டனில் இருந்து ஆளப்படுவதை விரும்புகிறீர்களா அல்லது, இலங்கை, இலங்கையரால் ஆளப்படுவதை விரும்புகிறீர்களா? இலங்கை தேசிய காங்கிரஸ் சார்பாகவும் (1919 இல் சேர் பொன்னம்பலம் அருணாசலம் அவர்களால் உருவாக்கப்பட்டது) மற்றும் எனது சார்பாகவும், சிறுபான்மை சமூகங்களுக்கு ஒரு சுதந்திர இலங்கையில் எங்களினால் (சிங்களப் பெரும்பான்மையினரால்) உங்களுக்கு தீங்கு எதுவும் ஏற்படும் என்ற பயம் எதுவும் தேவையில்லை என்று நான் நேர்மையோடு உறுதியளிக்கிறேன். ”

இலங்கை சுதந்திரம் பெற்ற உடன்படிக்கையின் மை காய்வதற்கு முன்னரே டி.எஸ். சேனநாயக்கா தமிழர்களது கழுத்துக்கு கத்தி வைக்கத் தொடங்கினார். இலங்கைக் குடியுரிமைச் சட்டம் இல. 18,  20 ஓகஸ்ட் 1948 இல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. 1948 நொவெம்பர் 15 அன்று சட்டமானது.  பிரித்தானியாவிடமிருந்து இலங்கை சுதந்திரம் பெற்ற 285 நாட்களுக்குப் பிறகு  700,000  (11%)  இலட்சம் மலையகத் தமிழ்மக்களது  குடியுரிமை பறிக்கப்பட்டு  நாடற்றவர்களாக ஆக்கப்பட்டனர்.

இறுதியாக, 1949 இலங்கை (நாடாளுமன்றத் தேர்தல்கள்) திருத்தம் நிறைவேற்றப்பட்டது. அதன் கீழ் குடிமக்கள் மட்டுமே வாக்களிக்க முடியும். இதனால் 1947 இல் நடந்த நாடாளுமன்றத் தோதலில் 7 தொகுதிகளில் வெற்றிபெற்ற மலைநாட்டுத் தமிழர்கள் 1952 இல் இடம் பெற்ற தேர்தலில் ஒரு தொகுதியில்தன்னும்

 வெல்ல முடியவில்லை. Friendship With All, Enmity With None”: An Assessment of Sri Lanka's  Foreign Policy In The Times of DS Senanayake and Maithripala Sirisena –  dbsjeyaraj.com

டி.எஸ். சேனநாயக்கா பிரதமராக இருந்த போதுதான் பட்டிப்பளை (கல் ஓயா) குடியேற்றத்திட்டம், அல்லை – கந்தளாய் போன்ற பாரிய திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் தொடங்கப்பட்டன. இதனால் கிழக்கு மாகாணத்தில் 1946 இல் சிங்களவர்களுடைய குடித்தொகை  23,456 (8.4%)  ஆக இருந்தது. இது 2012 இல் 354,772 (22.87%) அதிகரித்துவிட்டது. இதே காலப்பகுதியில்  தமிழர்களது குடித்தொகை  136,059 (48.75% ) இல் இருந்து 575,936 ஆக உயர்ந்தது ஆனால் விழுக்காடு 37.12% ஆகச் சரிந்துவிட்டது! அடுத்த குடித்தொகைக் கணிப்பீட்டில் இந்த விழுக்காடு மேலும் குறையக் கூடிய சாத்தியம் இருக்கிறது.

1946 இருந்து மக்கள், குறிப்பாக இலங்கைத் தமிழர் இன, மொழி அடிப்படையில் ஒதுக்கப்பட்டு வருகிறார்கள்.  அவர்கள் தங்களது பாரம்பரிய வாழ்விடங்களை இழந்து வருகிறார்கள். கிழக்கு மாகாணத்தில் தொடங்கிய திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் இப்போது வடக்கையும் விழுங்கத்  தொடங்கியுள்ளது. மணலாறு (வெலி ஓயா)போன்ற குடியேற்றத் திட்டங்கள் மூலம் முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்கள்  சிங்கள மயப்படுத்துப்பட்டு வருகின்றன. 

Pirapaharan: Vol.2, Chap.23 Manal Aru Becomes Weli Oya – Ilankai Tamil  Sangam

இலங்கையை ஆட்சி செய்த சிங்கள – பவுத்த ஆட்சியாளர்கள் தங்கள் மதத்தையும் மொழியையும் வளர்த்தார்களேயொழிய முழு நாட்டையும் வளர்க்க முயற்சிக்கவில்லை. தமிழர்களது அழிவில்தான் சிங்கள மக்களது செல்வச் செழிப்பு இருக்கிறது என்ற கோட்பாடு இருந்து வந்தது. ஆனால்  அது இன்று பொய்த்துவிட்டது. முற்பகல் செய்த வினை பிற்பகல் வந்து சூழ்ந்துள்ளது. குவேனி போட்ட “சாபம்” (CURSE) சிங்கள – பவுத்தர்களைத் மொடர்ந்து துரத்துகிறது.  இதனை விரிவாக  பார்ப்போம். (வளரும்)

About editor 3192 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply