சோதிடத்தில் அயனாம்சம் என்றால் என்ன? அது ஜாதக கணிதத்தை எவ்வாறு பாதிக்கிறது?

சோதிடத்தில் அயனாம்சம் என்றால் என்ன? அது ஜாதக கணிதத்தை எவ்வாறு பாதிக்கிறது? அதன் வானியல் தொடர்பு என்ன?

திருவாலி சடகோபன் ஸ்ரீநிவாஸன்

சோதிடத்தில் அயனாம்சம் என்றால் என்ன? அது ஜாதக கணிதத்தை எவ்வாறு பாதிக்கிறது? அதன் வானியல் தொடர்பு என்ன?

முன்னுரை:
மிக அருமையான ஒரு கேள்வி. சோதிடத்தோடு நிற்காமல் வானியலைப் பற்றியும் கேட்டது அதிலும் சிறப்பு. ஆனால் இந்த கேள்வியின் ஆழத்தை சிலர் புரிந்து கொள்ளவில்லை. சரி, அது கூட ஒரு பிரச்சனை இல்லை. இதெல்லாம் ஒரு கேள்வியா என்பது போல பகடியாய் பதிலளிப்பதை என்ன சொல்வது? (இந்த பதில் தற்போது மறைக்கப்பட்டுள்ளது என நினைக்கிறேன்.) இவ்வாறு செய்வது அவர்களின் அறியாமையை தான் அம்பலப்படுத்துகிறது.

சுருக்கமான பதில்

அயனாம்சம் என்பது பூமியின் அச்சு பிறழ்ச்சியை அளக்கும் ஒரு தொகை. பூமியின் அச்சு ஒரே திசையை நோக்கி இல்லாமல் சற்று பிறழும். இதனை axial precession என்று கூறுவர். இந்த பிறழ்ச்சியின் விளைவாக பூமியின் அச்சு 26,000 ஆண்டுகளுக்கு ஒரு முறை சுழல்கிறது.

இதன் காரணமாக வானத்தில் விண்மீன்களின் திசை மாறுபடுகிறது, பூமியில் பருவநிலை மாற்றங்களும் ஏற்படுகிறது. ஜாதக கணிப்பை அயனாம்சம் பெரிதாக பாதிப்பதில்லை. ஏனெனில் இதன் விளைவுகளை தெளிவாக உணர குறைந்தபட்சம் 72 ஆண்டுகள் ஆகும்.

இதுவே சுருக்கமான விளக்கம். இது போதுமானது என நினைத்தால் படிப்பதை இத்துடன் நிறுத்திக் கொள்ளலாம். இதைப்பற்றி இன்னும் அதிக விளக்கம் தேவைப்பட்டால் தொடர்ந்து படிக்கவும்.

விளக்கமான பதில்

அயனம் என்ற சொல்லிற்கு நகர்வு, பயணம் என பல அர்த்தங்கள் உண்டு. ஆனால் இந்த இடத்தில் இதை solstice என புரிந்து கொள்வதே தகும். அடுத்ததாக, சோதிடத்தில் அம்சம் என்ற சொல்லிற்கு கோணம் (angle) என்று பொருள். ஆகையால் அயனாம்சம் என்பது அயனங்களுக்கு இடையேயான கோணம்/ பாகை (angle between solstices). ஆனால் இந்த விளக்கத்தினால் எந்த வித தெளிவும் பலருக்கு கிடைக்காது. ஏனெனில் இந்த விளக்கத்தை புரிந்து கொள்வதற்கு முன்பு அடிப்படையாக சில பல விஷயங்கள் தெரிந்திருப்பது அவசியம். அவற்றை முதலில் விளக்குகிறேன். எனவே சம்மந்தமில்லாமல் பல விஷயங்கள் சொல்லப்பட்டதாக தோன்றலாம். மிக நீளமான பதிலும் கூட. இருப்பினும் பொறுமையாக படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நட்சத்திரங்கள் (Fixed star background)

உண்மையில் எல்லா நட்சத்திரங்களும் நகர்ந்து கொண்டே தான் இருக்கிறது. அப்படியானால் இது என்ன fixed star?பூமியிலிருந்து பல ஒளியாண்டுகள் தூரத்தில் இருப்பதால் இந்த விண்மீன்கள் நகர்வது எளிதில் புலப்படுவதில்லை. எனவே இவை நகரவில்லை என்று அனுமானித்துக் கொண்டு, இந்த விண்மீன்களின் சார்பில் நாம் வானியல் நிகழ்வுகளை வரையறுப்பது வழக்கம். இதன் அடிப்படையில் தான் 12 ராசி, 27 நட்சத்திரம் என்றெல்லாம் கூறுகிறோம். இதைப்பற்றி மேலும் தகவல்கள் இந்த பதிலில் காணலாம்.

அயனம் (solstice) என்றால் என்ன?

முன்பு சொன்னது போல, அயனம் என்றால் நகர்வு என்று பொருள். எதன் நகர்வு? சூரியனின் நகர்வு. சூரியன் கிழக்கில் உதிக்கிறது என்று நாம் பொதுவாக சொல்வதுண்டு. ஆனால் உண்மை என்னவென்றால் சூரியன் ஒவ்வொரு நாளும் சரியே கிழக்கு திசையில் உதிப்பதில்லை. சில சமயங்களில் வடகிழக்கிலும் சில சமயங்களில் தென்கிழக்கிலும் உதிக்கிறது. தை மாத தொடக்கத்தில் அதிகபட்ச தெற்கு திசையில் சூரியன் உதிக்கும். அதிலிருந்து சூரியன் ஒவ்வொரு நாளும் வடக்கு நோக்கி நகரும். இவ்வாறு ஆடி மாதம் வரை நகர்ந்து அதிகபட்ச வடக்கு எல்லையை அடையும். இந்த ஆறு மாத காலத்துக்கு உத்தராயணம் என்று பெயர். அதன் பின்னர் ஆடி மாதம் தொடங்கி தை மாதம் வரை சூரியன் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி நகரும். இந்த ஆறு மாதங்களுக்கு தட்சிணாயனம் என்று பெயர். எனவே தான் தை 1 உத்தராயண புண்ணியகாலம், ஆடி 1 தட்சிணாயன புண்ணியகாலம் என்றும் அழைக்கப்படுகின்றன. இந்த இரு நாட்கள் தான் ஆங்கிலத்தில் solstice என்று அழைக்கப்படுகிறது (இதில் ஒரு முரண்பாடு உள்ளது இதைப் பற்றி பின்னர் விளக்குகிறேன்). சூரியன் வடகோடியில் இருக்கும் நாள் (ஆடி 1) பூமியின் வட அரைக்கோளத்தில் summer solstice. இந்த நாளில் தான் அந்த வருடத்தின் மிக நீண்ட பகல் பொழுதை கொண்ட நாளாக விளங்கும். இதற்கு மாறாக தை 1 அன்று பூமியின் வட அரைக்கோளத்தில் ஆண்டின் மிகச் சிறிய பகல் பொழுதை கொண்ட நாளான winter solstice இடம்பெறும்.

ஆகையால்,

ஆடி 1 →தட்சிணாயனம் →summer solstice

தை 1 →உத்தராயணம் →winter solstice

இந்த இரு நாட்களை பொதுப்படையாக solstice என்றும் அயனம் என்றும் குறிப்பிடலாம்.

அயனம் — solstice என்ன முரண்பாடு?

தை 1 மற்றும் ஆடி 1 என்று இரண்டு நாட்களை solstice என்று குறிப்பிடலாம் என்று முன்னர் கூறியிருந்தேன். அப்படியெனில் இந்த நாட்களின் ஆங்கில தேதி Jan 14 மற்றும் July 16 என்று தான் இருக்க வேண்டும். ஆனால் அறிவியல் பூர்வமாக Dec 22 மற்றும் Jun 21 தான் solstice என்று சொல்லப்படுகிறது.

ஏன் இத்தகைய முரண்பாடு? இதற்குக் காரணம் axial precession என்று சொல்லப்படும் அச்சு பிறழ்ச்சி தான். இதை precession of equinox என்றும் அழைப்பது வழக்கம். மேலும் அயனாம்சம் என்பதையே கூட equinox கொண்டு விளக்குவது தான் பிரபலம். இந்த பதிலில் உள்ளது போல் solstice மூலம் பொதுவாக விளக்கப்படுவதில்லை என்பதை கவனிக்கவும்.

அச்சுப் பிறழ்ச்சி என்றால் என்ன?

பூமி சுழலும்போது அதனுடைய சுழற்சி அச்சு ஒரே இடத்தில் நிலையாக இருப்பதில்லை. ஒரு பம்பரம் சுற்றும் போது அதன் அச்சு திரிவது போல் தான் பூமியின் சுழற்சியும் உள்ளது. இதை விளக்கும் விதத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள படம் அமைந்துள்ளது.

இந்த படத்தில் உள்ளது போல பூமியின் அச்சு திரிகிறது. மேலே காண்பிக்கப் பட்டுள்ள வெள்ளை வட்டம் தான் அச்சு திரியும் பாதை. இந்தப் பாதையில் பூமியின் அச்சு ஒருமுறை சுழன்று (திரிந்து) வருவதற்கு சுமார் 26,000 ஆண்டுகள் ஆகும். ஆகையால் விண்வெளியில் பூமி தனது அச்சில் தினமும் ஒரு முறை சுற்றுவது, சூரியனைச் சுற்றி வருடத்திற்கு ஒரு முறை வலம் வருவது என்பதுடன் இத்தகைய ஒரு சுழற்சியையும் மேற்கொள்கிறது. இதுதான் அச்சப் பிறழ்ச்சி/ axial precession என்று அழைக்கப்படுகிறது. இந்த அச்சுப் பிறழ்ச்சி எவ்வாறு ஏற்படுகிறது என்பதை நியூட்டனின் ஈர்ப்பு விசை கோட்பாட்டின் மூலம் நிறுவ முடியும்.

அச்சு பிறழ்ச்சிக்கும் அயனத்துக்கும் என்ன தொடர்பு?
பூமியின் அச்சு 26,000 வருடங்களுக்கு ஒரு முறை சுழல்கிறது என்று மேலே பார்த்தோம். இதை மாற்றி கணக்கிட்டால் ஒரு வருடத்திற்கு பூமியின் அச்சு 50 வினாடிகள் என்ற விகிதத்தில் சுழல்கிறது என்பது விளங்கும். (இங்கு வினாடி என்பது கால அளவு அல்ல கோண அளவு. 1 டிகிரி = 60 நிமிடங்கள் = 3600 வினாடிகள்). அடுத்ததாக, ஒரு குறிப்பிட்ட வருடத்தில் எப்போது உத்தராயணம் தொடங்குகிறது என்பது பூமி அச்சின் நிலையை சார்ந்தது (இது எவ்வாறு என்பது ஒரு தனி பதிவாக விளக்கும் அளவிற்கு மிகப்பெரிய கதை). எனவே இந்த வருடம் தை 1 அன்று துல்லியமாக நண்பகல் 12 மணிக்கு உத்தராயணம் (அதாவது winter solstice) தொடங்குகிறது என வைத்துக் கொள்வோம். அடுத்த வருடம் தை 1 அன்று சில நிமிடங்களுக்கு முன்பாகவே உத்தராயணம் தொடங்கிவிடும். ஏனெனில் இந்த ஒரு வருட காலத்தில் பூமியின் அச்சு 50 வினாடிகள் சுழன்று முன்பிருந்த நிலையில் இருந்து பெயர்ந்துவிட்டது அல்லவா? இப்படி ஒவ்வொரு வருடமாக ஒரு சில நிமிடங்களுக்கு முன்பாகவே உத்தராயணம் தொடங்குவது ஒரு கட்டத்தில் தை 1 என்பதற்கு ஒரு நாள் முன்பாக மார்கழி 29 அன்றே உத்தராயணம் (winter solstice) தொடங்கிவிடும். இதற்கு கிட்டத்தட்ட 72 ஆண்டுகள் பிடிக்கும். இவ்வாறு காலத்தின் போக்கில் உத்தராயணம் தொடங்கும் நாள் (winter solstice) இன்னும் இன்னும் முன்பாகவே தொடங்கிவிடும்.

Winter solstice – தை 1 vs Dec 22 – எது சரி?
ஏறக்குறைய 1700 ஆண்டுகளுக்கு முன்பு (~300 CE) தை 1 அன்று தான் உத்தராயணம் தொடங்கியதாக தெரிகிறது. ஆனால் அதிலிருந்து தொடங்கி இன்றுவரை உத்தராயணம் (winter solstice) முன்பு நோக்கி நகர்ந்து இன்றளவில் Dec 22 வரை வந்துள்ளது. ஆயினும் நாம் பண்டைய மரபின்படி தை 1 அன்றே உத்தராயணம் தொடங்குவதாக கொள்கிறோம். இதனால் தான் முன்னர் கூறிய அந்த முரண்பாடு ஏற்பட்டது. நியாயப்படி இன்றைய வானியலுக்கு ஏற்ப உத்தராயணம் முன்பாகவே (Dec 22) வந்துவிட்டதாக கொள்ள வேண்டும். ஆனால் பூனைக்கு யார் மணி கட்டுவது என்பது போல இது சீண்டப்படாமல் அப்படியே இருக்கிறது. ஆகையால் தை 1 அன்று winter solstice என்பது முற்காலத்தில் தான் சரி. இன்று அது தவறு.

அயனாம்சம் என்றால் என்ன?
அயனாம்சம் என்பது அச்சுப் பிறழ்ச்சியை அளக்கும் ஒரு தொகை. எவ்வாறு அளக்கப்படும் என்பதை பார்ப்போம். ஏறக்குறைய 300 CE (துல்லியமாக சொல்லவேண்டுமெனில் 285 CE) என்ற ஆண்டில் தை 1 அன்று உத்தராயணம் தொடங்கியது என பார்த்தோம். மேலும் வருடம்தோறும் பூமியின் அச்சு 50 வினாடிகள் சுழல்கிறது என்றும் நாம் அறிவோம். ஆக இந்த 285 CE என்ற ஆண்டினை ஒரு அடையாளமாக (reference) வைத்துக் கொண்டு அதிலிருந்து ஒவ்வொரு வருடமும் பூமியின் அச்சு எவ்வளவு சுழல்கிறது என்று கணக்கிட்டால் அயனங்கள் எப்போது தொடங்குகின்றன என்பதை துல்லியமாகக் கணிக்க முடியும். இவ்வாறு கணக்கிடப்படுவது தான் அயனாம்சம்.

இப்போது அயனாம்சம் என்றால் இரு அயனங்களுக்கு இடையேயான கோணம் என்பதை நினைவில் கொள்ளவும். கோணம் என்றால் 0° கோடு வேண்டும் அல்லவா? இந்த அயனாம்சம் என்பதன் 0° கோடு 285 CE என்ற ஆண்டில் உள்ளதாக கொள்ளப்படுகிறது. இதைத்தொடர்ந்து ஒவ்வொரு நாளும் வருடத்திற்கு 50 வினாடிகள் என்ற விகிதத்தில் அயனாம்சம் கூடிக்கொண்டே சென்று, இன்றைய (19 ஜனவரி 2021) நிலையின் படி அயனாம்சம் 24° 9′ 2″ என்று கணிக்கப்பட்டுள்ளது. எந்த ஆண்டினை அடையாளமாகக் கொண்டு அயனாம்சத்தை வரையறுக்க வேண்டும் என்பதைப் பொறுத்து பல அயனாம்ச அளவீடுகள் உள்ளன. அதில் பிரபலமாக பின்பற்றப்படும் லகிரி (Lahiri) அயனாம்சம் தான் 285 CE என்ற ஆண்டில் தொடங்குகிறது.

அயனாம்சம் ஜாதக கணிதத்தை எவ்வாறு பாதிக்கிறது?

ஜாதக கணிதத்தை அயனாம்சம் பெரிதாக பாதிப்பதில்லை. அதாவது எந்தெந்த கிரகங்கள் எந்தெந்த ராசியில் சஞ்சரிக்கின்றன என்பதில் அயனாம்சம் எந்தவொரு மாற்றத்தையும் ஏற்படுத்தாது. ஆனால் விண்மீன் கூட்டங்கள் வானத்தில் தோன்றும் நேரம், திசை ஆகியவை அயனாம்சத்தை பொறுத்து வேறுபடும். இதனால் ஜாதகத்தில் லக்னம் கணிப்பது அயனாம்சத்தைச் சார்ந்திருக்கும். இதுமட்டுமின்றி பஞ்சாங்கம் கணிப்பதிலும் அயனாம்சம் பெரும் பங்கு வகிக்கும். ஏனெனில் சூரிய உதயம் சூரிய அஸ்தமனம் போன்றவை அயனங்களை பொறுத்து மாறுபடும். உத்தராயணத்தில் பகல்பொழுது நீண்டிருக்கும். தட்சிணாயனத்தில் இரவுப்போது நீண்டிருக்கும்.

எனவே இதைச் சரியாகக் கணிக்க அயனாம்சம் தேவைப்படும். அதற்கடுத்து, ஒரு வருடம் எப்போது தொடங்குகிறது என்பதில் கூட இரு கருத்துகள் உள்ளன. Vernal equinox என்று சொல்லப்படும் நாள் தான் புதிய வருடத்தின் தொடக்கம் என்று ஒரு கருத்து உண்டு. இதை சாயன முறை என்று சொல்வார்கள். இதற்கு மாறாக நிராயன முறை என இன்னொன்று உள்ளது. இதன்படி சூரியன் மேஷ ராசியில் நுழைவது தான் புத்தாண்டு. இந்த இரண்டு முறைகளுக்கும் இடையேயான தொடர்பு அயனாம்சம் தான். இந்த பதில் நிராயன முறையை பின்பற்றி எழுதப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அயனாம்சமும் வானியலும்

வானத்தில் விண்மீன்கள் எப்போது உதிக்கின்றன எப்போது மறைகின்றன என்பது நாளுக்கு நாள் மாறுபடும். இவற்றின் உதய அஸ்தமன நேரம் கூட அயனங்களைச் சார்ந்ததே. அதனால் அயனாம்சத்தைக் கொண்டு இவற்றின் உதய அஸ்தமனங்களைச் சரியாகக் கணிக்கலாம். மேலும், விண்மீன்கள் உதயமாகும் திசை பொதுவாக மாறாது. அதாவது ஒரு விண்மீன் கிழக்கு திசையில் உதிக்கிறது என்றால், அது ஆண்டு முழுவதும் அதே கிழக்கு திசையில் தான் உதயமாகும். ஆனால் இதே போல வரப்போகும் வருடங்களிலும் கிழக்கில் தான் உதிக்குமா எனக் கேட்டால், இல்லை என்பதே பதில். இன்றளவில் கிழக்கு திசையில் உதிக்கும் ஒரு விண்மீன் வருங்காலத்தில் வடகிழக்கிலோ அல்லது தென்கிழக்கில் தான் உதிக்கும். இதற்கு காரணம் அச்சுப் பிறழ்ச்சி தான். இந்த விண்மீன் எந்த அளவிற்கு வடக்கு/தெற்கு நோக்கி நகர்கிறது என்பதை அயனாம்சம் கொண்டு கணிக்கலாம்.

அயனாம்சமும் வானிலையும்

அச்சுப் பிறழ்ச்சி காரணமாக பல வானிலை மாற்றங்களும் ஏற்படுகின்றன. முன்பே கூறியது போல உத்தராயண காலம் தட்சணாயன காலம் இவையெல்லாம் அச்சுப் பிறழ்ச்சியினால் மாறுபடுகின்றன. ஆனால் பகல் நீண்டு இருக்கும் உத்தராயண காலத்தில் தான் வசந்த காலம் கோடை காலம் போன்ற பருவங்கள் உள்ளன. தட்சிணாயனத்தில் மழைக்காலம் குளிர்காலம் போன்ற பருவங்கள் உள்ளன. ஆனால் அச்சுப் பிறழ்ச்சியின் காரணமாக அயனங்கள் மாறுகின்றன. அப்படியானால் பருவ நிலைகளும் மாறுதலுக்கு உட்படும் அல்லவா? இது ஒரு முக்கியமான விளைவு.

மேலே உள்ள படத்தின் அனைத்து பருவநிலைகளும் ஒரு சுழற்சிக்கு உட்படுகின்றன. இன்னும் 7,000 வருடங்களுக்கு பின், வைகாசி என்றால் வெயிலடிக்கும் என இன்று இருக்கும் நிலை மாறி வைகாசி எனில் மழை பொழியும். இன்னும் 13,000 ஆண்டுகள் கழித்துப் பார்த்தால் வைகாசியில் குளிரடிக்கும். இன்றிலிருந்து 26,000 ஆண்டுகள் கழித்து தான் மீண்டும் வைகாசியில் வெயில் அடிக்கும்.

இது தான் அயனாம்சம் என்பதன் முழுமையான விளக்கம். இயன்றவரை எளிதாக விளக்க முயன்றேன். எனினும் இவ்வளவு தான் முடிந்தது.

ttps://ta.quora.com/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-

படவிநயம்: கூகுள் & விக்கிப்பீடியா

About editor 3046 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply