13வது திருத்தம்-அமுற்படுத்தவும் இயலாது;அப்பாற் செலவும் முடியாது
தோழர் இ. தம்பையா
(கடந்த 22 வருடங்களாக வடக்கு கிழக்கிற்கு எவ்வித பயனும் இன்றி வெறும் பெயரளவினதாக இருந்து இன்று உச்ச நிலை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப் பட்டிருக்கிற 13வது திருத்தச் சட்டம் பற்றி இங்கு சற்று விரிவான விளக்கம் தரப்பட்டுள்ளது.)
13வது திருத்தம் பிறந்தது..
1987ஆம் ஆண்டு இலங்கை-இந்திய சமாதான உடன்படிக்கையை அடுத்து மாகாண சபைகட்கு அதிகாரங்களைக் கையளிக்கும் மாகாண சபை முறைமையை அமுற்படுத்தும் வகையில் கொண்டு வரப்பட்டது தான் 1978ஆம் ஆண்டின் அரசியல் அமைப்பிற்கான 13வது திருத்தச் சட்டம். அக் காலகட்டத்தில், ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்த்தன தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்திற்குப் பாராளுமன்றத்தில் ஆறில் 5/6 பெரும்பான்மை இருந்தது. அத்துடன் எல்லா ஐக்கிய தேசியக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களினதும் திகதியிடப்படாத பதவி விலகற் கடிதங்கள் ஜே.ஆரின் கைகளில் இருந்தன. அதனாற் பல விடயங்களில் அன்றைய பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜே.ஆருடன் முரண்பட்டிருந்தாலும் அவற்றுக்கு ஆதரவளிக்க வேண்டியவர்களாயினர்.
13வது திருத்தச் சட்டம் 1978ஆம் ஆண்டு அரசியலமைப்பிற்கு முரணானதா என்பதைப் பற்றி உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்களிலும் வித்தியாசம் இருந்தது. அரசியலமைப்பிற்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ முரண்பாடாக இல்லை என்பதால் அதனை சட்டமாக்குவதற்குப் பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்படுவது போதுமானதால் பொதுசன அபிப்பிராய வாக்கெடுப்பு அவசியமில்லை என்று பிரதம நீதியரசர் எஸ். சர்வானந்தா, நீதியரசர்கள் பி. கொலின் தோமி, ஈ.ஏ.டி. அத்துகோரள, எச்.டி. தம்பையா ஆகியோர் தீர்ப்பளித்திருந்தனர். நீதியரசர் ஆர்.எஸ். வனசுந்தர 13வது திருத்தம் 1978 அரசியலமைப்பிற்கு முரணானதாகையால் அது பொதுமக்கள் அபிப்பிராய வாக்கெடுப்பிற்கு விடப்பட வேண்டுமென்றும் தீர்ப்பளித்திருந்தார். அவரது நிலைப்பாட்டை ஏற்றுக் கொண்டு நீதியரசர்கள் ஓ.எஸ்.எம். செனவிரத்ன, எல்.எச்.டீ. அல்விஸ், எச்.ஏ.ஜீ.டீ. சில்வா ஆகியோர் தீர்ப்பளித்திருந்தனர். நீதியரசர் கே.ஏ.பி. ரணசிங்ஹ 13வது திருத்தச் சட்டத்தின் சில ஏற்பாடுகளுக்கு பொது மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்பு தேவை என்று தீர்ப்பளித்திருந்தார்.
எனினும் பிரதம நீதியரசர், நீதியரசர்கள் கொலின் தோமி, ஈ.ஏ.டி. அத்துகோரளை, எச்.டி. தம்பையாவுடன் கே.ஏ.பி. ரணசிங்ஹவும் ஏறக் குறைய ஒரே நிலைப்பாட்டை எடுத்திருந்தனர் என்ற அடிப்படையிலேயே, 13வது திருத்தச் சட்டத்திற்கு பொதுசன அபிப்பிராய வாக்கெடுப்புத் தேவை இல்லையென்ற நிலைப்பாட்டிற் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களில் இருவரைத் தவிரப் பிற உறுப்பினர்களின் வாக்குகளாற் சட்டமாக்கப் பட்டது. பிரதமர் பிரேமதாஸ முரண்பாடுகள் இருப்பதாகக் கூறினாலும் எதிர்க்காமல் ஆதரித்துப் பேசி ஆதரவாக வாக்களித்தார். விவசாய உணவு அமைச்சராக இருந்த காமினி ஜயசூரிய பாராளுமன்ற உறுப்புரிமையை இராஜினாமா செய்தார். சிறில் மத்யூ எதிராக வாக்களித்தார். அவ் வேளை பாராளுமன்றத்திற் தமிழர் விடுதலைக் கூட்டணியை பிரதிநிதித்துவப்படுத்த எவரும் இருக்கவில்லை. (நாட்டுப் பிரிவினைக்கு ஆதரவளிப்பதில்லை என 6வது திருத்தச் சட்டத்திற்கு இணங்கச் சத்தியம் செய்து மீண்டும் பதவிப் பிரமாணம் செய்யாதபடியால் பாராளுமன்ற உறுப்புரிமையைப் 17 உறுப்பினர்கள் இழந்திருந்தனர். செல்லையா இராஜதுரை ஏற்கனவே ஐக்கிய தேசியக் கட்சியில் அமைச்சராக இணைந்திருந்தார்).
இவ்வாறான பின்னணியிலேயே 13வது திருத்தச் சட்டம் பாராளுமன்றத்திற் சட்டமானது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அதை முழுமையாக எதிர்த்தது. மக்கள் ஐக்கிய முன்னணி உறுப்பினர் தினேஷ் குணவர்த்தனவும் எதிர்த்தார். பாராளுமன்றத்திற்கு வெளியில் ஜே.வி.பி. எதிர்த்தது.
ஜே.வி.பி. தனது இரண்டாவது (1971ற்குப் பிறகு) ஆயுத நடவடிக்கைகளை 1988, 1989, 1990இல் இலங்கை இந்திய சமாதான உடன்படிக்கைக்கும் மாகாணசபை முறைக்கும் எதிராகவே முன்னெடுத்தது. அவ் உடன்படிக்கையையும் மாகாணசபை முறையையும் ஆதரித்தவர்களைக் கொலை செய்தது. ஐக்கிய சோசலிஸ முன்னணி என்ற பெயரில் இயங்கிய இலங்கை மக்கள் கட்சி, ஸ்ரீலங்கா கம்யூனிஸ்ட் கட்சி, லங்கா சமசமாஜக் கட்சி, தேச விமுக்தி ஜனதா கட்சி, நவ சமசமாஜக் கட்சி என்பவற்றின் ஆறாயிரத்திற்கு மேற்பட்ட தலைவர்களையும் ஊழியர்களையுங் கொலை செய்ததாக அறிக்கை செய்யப்பட்டுள்ளது.
அவ்வேளை புதிய ஜனநாயக கட்சி (அன்றைய பெயர் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி – இடது), இலங்கையை இந்திய மேலாதிக்கத்திற்குள்ளடக்கிய இலங்கை-இந்திய சமாதான உடன்படிக்கையையும் இந்திய இராணுவத்தின் வருகையையும் எதிர்த்தாலும், மாகாண சபை முறை தமிழ் மக்களுக்குப் பூரண சுயாட்சியை வழங்கா விட்டாலும் அதனூடாக மேற்கொள்ள எத்தனிக்கப்பட்ட அதிகாரக் கையளிப்பை ஆதரித்தது. அதற்கு எதிராகச் செயற்பட்ட பேரினவாத சக்திகட்கு எதிரான பிரசாரங்களை மேற்கொண்டது. இருப்பினும் மாகாண சபைகளினூடாக அதிகாரப் பங்கீடு செய்யப்படவில்லை. ஆனால் அதிகாரப் பரவலாக்கலுக்கு மேலாக அதிகார கையளிப்பு செய்யப்பட்டது. (இது சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான தீர்வல்ல என்பதைக் கட்சி சுட்டிக்காட்டி நின்றது).
இலங்கை-இந்திய சமாதான உடன்படிக்கையை ஜே.ஆரும் ராஜீவ் காந்தியும் கையெழுத்திட்ட பின்னர் நடைபெற்ற இராணுவ மரியாதை அணிவகுப்பின் போது ராஜீவ் காந்தி இலங்கை கடற்படை வீரராற் தாக்கப் பட்டார். இது அவ் உடன்படிக்கைக்குக் காட்டப்பட்ட ஒர் எதிர்ப்பேயாகும் மாகாண சபை முறையைத் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் நிராகரித்ததுடன் தொடர்ந்து தனது ஆயுத நடவடிக்கைகளை முன்னெடுத்தது. அதனால் வடக்கு கிழக்கில் மாகாண சபையை நடைமுறைப்படுத்த இடமளிக்கவில்லை. விடுதலைப் புலிகள் இயக்கம் அதற்கு எதிரான ஆயுத நடவடிக்கைகளை முன்னெடுத்தது மட்டுமன்றி அதன் ஆதரவுடன் 1988ஆம் ஆண்டு பாராளுமன்றத்திற்குத் தெரிவான ஈரோஸ் அமைப்பின் 13 பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாண சபையை கலைக்கும் அதிகாரத்தை ஜனாதிபதிக்கு வழங்கும் திருத்தச் சட்டத்தை ஆதரித்து வாக்களித்தனர். அதன் விளைவாக வடக்கு-கிழக்கு மாகாண சபை கலைக்கப்படுவதற்கு வாய்ப்பு உண்டானது. அதாவது மாகாணசபை மூலச் சட்டத்தில் மாகாண சபையை ஜனாதிபதி கலைப்பதற்கான வாய்ப்பு இருக்கவில்லை.
சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தமிழ் மக்களின் சுயாட்சியை உறுதி செய்ய வேண்டுமென்று வலியுறுத்திய மாக்சிச-லெனினிச மற்றும் இடதுசாரி சக்திகள் மாகாண சபையை அங்கீகரிக்கா விட்டாலும் அதனை நிராகரித்துச் செயற்படவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் அதன் தனித் தமிழ் ஈழம் என்ற அதன் நிலைப்பாட்டை தொடர்ந்து முன்னெடுத்தபடியால் மாகாண சபைக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தது.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு எதிராக வடக்கு கிழக்கில் மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் இராணுவ நடவடிக்கைகளைத் தொடங்கியது முதல் இன்று வரை அவ்வப்போது 13வது திருத்தச் சட்டத்தைப் பூரணமாக அமுற்படுத்தப் படும் என்றும் நீண்ட காலத்தில் அத் திருத்தச் சட்டத்திற்கும் அப்பாற் சென்று ஒற்றை ஆட்சி முறைக்குள் அதிகாரத்தை மாகாணங்களுக்கு கையளிப்பதன் மூலம் அரசியல் தீர்வு காணப்படும் என்றும் அரசாங்கத் தரப்பிற் கூறப்பட்டு வந்தது.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இராணுவ ரீதியாக முறியடிக்கப்பட்ட பிறகு தேசிய இனங்களின் பிரச்சினைக்குத் தீர்வு என்ன என்பது பற்றி வாதப் பிரதிவாதங்கள் இடம் பெறுகின்றன. ஜே.வி.பி, ஹெல உறுமய, பௌத்த பிக்கு அமைப்புகளும் ஏனைய பேரினவாத அமைப்புக்களுடன் தனிநபர்களும் 13வது திருத்தச் சட்டத்தைக் கூட அமுற்படுத்தக் கூடாது என்றும் அதனை அரசியலமைப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றுங் கோரி வருகின்றனர்.
13வது திருத்தச் சட்டத்தை அமுற்படுத்தினாற் பாரிய மக்கள் போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாக தேசிய பிக்குகள் முன்னணியும் ஜே.வி.பியும் கூறுகின்றன. 13வது திருத்தச் சட்டத்தை அமுற்படுத்தினால் அரசாங்கத்திலிருந்து விலகப் போவதாக ஹெல உறுமய அறிவித்துள்ளது.
இணைந்த வடக்கு-கிழக்கு மாகாணசபை
13வது திருத்தச் சட்டத்தின் படி 9 மாகாணங்களில் வடக்கு மாகாணமும் கிழக்கு மாகாணமும் தற்காலிகமாக இணைக்கப்பட்டும். அவை நிரந்தரமாக இணைக்கப்படக் கிழக்கு மாகாணத்திற் பொது மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமெனவும் தீர்மானிக்கப் பட்டது. அதன்படி, மாகாணங்கட்குத் தேர்தல் நடத்தப்பட்டது. 19 செப்டெம்பர் 1988 மாகாண சபைகட்கான தேர்தலில் வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைந்த மாகாண சபையை ஈ.பி.ஆர்.எல்.எவ். கைப் பற்றியது. அதன் முதலமைச்சராக வரதராஜப் பெருமாள் இருந்தார்.
மாகாண சபைகளுக்கு அதிகாரங்களின் நிரலிற் தீர்மானிக்கப்பட்ட பொலிஸ், காணி அதிகாரங்களையும் மாகாண சபைகளுக்கும் மத்திய அரசாங்கத்திற்கும் பொதுவாக ஒதுக்கப்பட்ட அதிகாரங்களையும் மாகாண சபைகளுக்கு வழங்கும்படி வரதராஜப் பெருமாள் கோரிக்கை விடுத்தார்.
அப்போதைய ஜனாதிபதி பிரேமதாஸவுடன் புலிகள் இயக்கம் பேச்சு வார்த்தை நடத்திய போது ஈ.பி.ஆர்.எல்.எவ். தலைமையிலான மாகாண சபை ஆட்சிக்குப் பல விதமான இடைஞ்சல்கள் கொடுக்கப்பட்டன. இந்தியப் படைகளின் ஏற்பாட்டில் ஈ.பி.ஆர்.எல்.எவ். உட்பட சில அமைப்புகளின் உறுப்பினர்களைக் கொண்ட தமிழ் தேசிய இராணுவத்திற்கு எதிராகப் போராடவெனப் புலிகள் அமைப்பிற்கு ஜனாதிபதி பிரேமதாஸ ஆயுதங்களை வழங்கி யிருந்தார். அதனைக் கொண்டு இந்திய இராணுவத்திற்கு எதிராகவும் புலிகள் தாக்குதல் நடத்தினர். அதன் காரணமாகவும் 1990இல் மாகாண சபைகளை கலைக்கும் திருத்தச் சட்டம் ஆக்கப்பட்டதாலும் கேட்கப்பட்ட அதிகாரங்கள் கிடைக்காத படியாலும் இந்தியப் படைகள் இங்கிருந்து வெளியேறத் தொடங்கியதாலும், தன்னிச்சையான தனிநாட்டுப் பிரகடனத்தைச் செய்துவிட்டு வரதராஜப் பெருமாள் தன் 250 ஆதரவாளர்களுடன் இந்தியப் படையினரின் கப்பலில் ஏறி இந்தியாவுக்குச் சென்றார். அதன் பின் வடக்கு கிழக்கு மாகாண சபையும் கலைக்கப் பட்டது. 1991இல் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார். 1993இல் பிரேமதாஸ குண்டு வெடிப்பிற் கொல்லப்பட்டார். அதன் பின்னர் ஏனைய மாகாண சபைகட்கு 1993, 1998, 2004 ஆகிய ஆண்டுகளில் தேர்தல் நடைபெற்ற போதும் வடக்கு-கிழக்கு மாகாண சபைக்குத் தேர்தல் நடைபெறவில்லை. 1998இல் சந்திரிகா குண்டுவெடிப்பிற் படுகாயமடைந்து உயிர் தப்பினார்.
16 அக்டோபர் 2006ஆம் ஆண்டு உயர் நீதிமன்றம் வடக்கு கிழக்கு மாகாண சபை இணைப்பைப் பிரித்துத் தீர்ப்பளித்தது. இவ் இணைப்பை பிரிக்கும்படி ஜே.வி.பி. வழக்குத் தொடுத்திருந்தது. அத் தீர்ப்பைப் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா எழுதியிருந்தார். அத் தீர்ப்புடன் நீதியரசர்கள் நிஹால் ஜயசிங்க, என்.கே. உடாலகம, ஏ.ஆர்.என். பெர்ணான்டோ, ஆர்.ஏ.என்.ஜீ. அமரதுங்க ஆகியோர் உடன்பட்டிருந்தனர்.
சரத் என் சில்வா ஓய்வு பெற்ற பிறகு மாகாண சபை முறை இலங்கை போன்ற சிறிய நாட்டிற்குப் பொருத்தமில்லை என்றும் இங்கு மாவட்ட அபிவிருத்திச் சபை போன்ற அதிகாரப் பரவலாக்கலே உசிதமானது என்றும் கூறியுள்ளார்.
அதன் பின்னர் கிழக்கு மாகாணத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆதிக்கம் முறியடிக்கப்பட்ட பின்னர் கிழக்கு மாகாண சபைக்கு தேர்தல் நடைபெற்றது. அரசாங்கத்தின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்தவர்களின் அமைப்பான த.ம.வி.பு. இயக்கத்தினர் போட்டியிட்டனர். அது வெற்றிபெற்றுச் சிவசேனதுரை சந்திரகாந்தன் முதலமைச்சர் ஆனார். அவரும் பொலிஸ், காணி அதிகாரங்களைக் கிழக்கு மாகாண சபைக்கு வழங்க வேண்டுமென்று கோரியுள்ளார்.
தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையின் பக்க நியாயமென்ன எனில் மாகாண சபை தமிழ் மக்களின் தேசிய அபிலாசைகளை உறுதி செய்யும் வகையில் மாகாண சபைக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கவில்லை. அதனால் அதனை விடக் கூடிய அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்பதாகும் அதனாலேயே ஜனாதிபதி பிரேமதாஸ காலத்தில் ஸ்ரீநிவாஸன் யோசனைகள், பின்னர் மங்கள முனசிங்க யோசனைகள் முன்வைக்கப் பட்டன.
பின்னர் ஜனாதிபதி சந்திரிகா காலத்தில் 1995 ஓகஸ்ற் யோசனைகள் முன்வைக்கப் பட்டன. பின்னர் 2000ஆம் ஆண்டிற் சந்திரிகா அரசியலமைப்பிற்குத் திருத்தமாக மாகாணங்களுக்கு ஓரளவிற்கு கூடிய அதிகாரங்களைக் கொண்ட புதிய அரசியல் யாப்பு வரைவைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்றத்தில் அதனைத் தீயிட்டுக் கொளுத்தித் தோற்கடித்துத் தன் வாக்குறுதிக்கு மாறாக நடந்து கொண்டது. (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதனை எதிர்த்தது. ஜே.வி.பி.யும் ஹெல உறுமயவும் எதிர்த்தன).
2002ஆம் ஆண்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹ தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் செய்து கொண்ட உடன்படிக்கையின் பின்னர் நடைபெற்ற சமாதான முயற்சிகளின்படி சமஷ்டி முறையில் தீர்வு காண்பதென ஒஸ்லோவில் உடன்பாடு ஏற்பட்டது. பாராளுமன்றத்தைச் சந்திரிகா கலைத்ததுடன் அம் முயற்சிகள் பின்னிடைவு அடைந்தன. சந்திரிகாவின் காலத்தில் 2005ம் ஆண்டு புலிகள் அமைப்புடன் சுனாமி மீளமைப்பு நடவடிக்கைகளுக்கான சுனாமிக் கட்டமைப்பு உடன்பாடு ஏற்படுத்தப் பட்டது. அதனை எதிர்த்து ஜே.வி.பியும் ஹெல உறுமயவும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தன. அவ் வழக்குத் தீர்ப்பின்படி சுனாமிக் கட்டமைப்புச் சட்ட விரோதமானதென தீர்க்கப்பட்டது. சந்திரிகாவின் காலத்தில் அரசியல் தீர்வு காண்பதற்கான சர்வ கட்சி மாநாடு கூட்டப்பட்டு அதன் நிபுணர் குழுவின் சிபாரிசுகள் வெளியிடப்பட்டன. அதில் மாகாணங்களுக்கு கூடிய அதிகாரங்கள் சிபாரிசு செய்யப்பட்டன.
மகிந்த சிந்தனையின் கீழ்
அதன் பின்பு, ஜனாதிபதி ராஜபக்ச காலத்தில் விடுதலைப் புலிகள் அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு முறிவு ஏற்பட்ட பின்னர், இராணுவ நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு மூன்று வருடங்களுக்குப் பின்னர் புலிகள் அமைப்பு இராணுவ ரீதியாகத் தோல்வியடைந்துள்ளது.
இந் நிலையில் அரசியல் தீர்வு எதுவும் தேவை இல்லை என்பதும் இந்தியாவால் திணிக்கப்பட்ட மாகாண சபையும் தேவை இல்லை என்பதும் பேரினவாதிகளினதும் அரசாங்கத்தினுள் உள்ள இனவாதிகளினதும் பாதுகாப்புப் படையினரதும் நிலைப்பாடாகும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் நிலைப்பாட்டை அவர் தெளிவாக வெளிப்படுத்துவதில்லை.
சந்திரிகாவின் காலத்தில் அமைக்கப்பட்ட அமைச்சர் திஸ்ஸ வித்தாரண தலைமயிலான சர்வ கட்சிக் குழுவின் நிபுணர்கள் குழுவின் அறிக்கையை ஜே.வி.பி., ஹெல உறுமய என்பன எதிர்த்தன. ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஜனாதிபதிக்கும் ஏற்பட்ட முறுகலினால் அதில் ஐக்கிய தேசியக் கட்சி பங்கெடுக்கவில்லை. த.தே. கூட்டமைப்பு அதிற் கலந்து கொள்ளவில்லை.
தற்போது அரசாங்கத்தின் சமாதானச் செயலகம் கலைக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு மாத காலத்தில் திஸ்ஸ வித்தாரணவின் பணிகளும் முடிவிற்குக் கொண்டு வரப்படும். ஏன்றே நம்பப்படுகிறது. அவர் தலைமையிலான அரசியற் தீர்வு நடவடிக்கைகள் புறந்தள்ளப்பட்டு விட்டதாகத் தெரிகிறது. ஏனெனில் ஜனாதிபதி ராஜபக்ச நாட்டின் நல்லிணக்கத்திற்கும், அபிவிருத்திக்குமான சர்வகட்சிக் குழுக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார். அதில் அரசியற் தீர்வு பற்றி ஆராயப்படவில்லை. ஆனால் அதனை வைத்துக் காலத்தைக் கடத்திச் செல்லலாம் என்றே எதிர் பார்க்கப் படுகிறது. இந் நிலையில் அரசியற் தீர்வு பற்றிய ஐயப்பாடு எழுந்துள்ளது.
யுத்தத்திற்கு இந்தியா வழங்கிய ஆதரவின் போது, 13வது திருத்தச் சட்டத்தைப் பூரணமாக அமுற்படுத்துவதென்றும் அதற்கு மேலான அரசியல் தீர்வினைக் காண்பதென்றும் இலங்கை அரசாங்கத்தின் தரப்பில் வாக்குறுதி அளிக்கப் பட்டுள்ளதாகவே தெரிகிறது. 13வது திருத்தச் சட்டம் அரசியலமைப்பின் பகுதியாகும். அதனை நடைமுறைப்படுத்தப் பாராளுமன்றத்திலோ அதற்கு வெளியிலோ நெறிமுறையான தடைகள் எதுவும் இருக்க முடியாது. ஆனாற் 17வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தாமல் இருப்பது போன்று ஜனாதிபதி 13வது திருத்தச் சட்டத்தையும் நடைமுறைப் படுத்தாமல் விடலாம். அரசியலமைப்பையோ, அதன் பகுதியையோ நடைமுறைப் படுத்தாமல் இருப்பது அரசியலமைப்புத் தவறாகும்.
17வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப் படுத்தாமல் இருப்பதற்கு எதிராக ஜனாதிபதிக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்க முடியாமல் இருப்பது போன்று 13வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப் படுத்தாமல் இருப்பதற்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கக் கூடியதாக இராது. ஜனாதிபதிக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதெனில் அது அவருக்கு எதிரான குறைகேள் பிரேரணை ஆகும். அதற்குப் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை. அப்படிச் செய்வதெனிலும் யார் எப்படிச் செய்வது?
13வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்கு இருக்கும் எதிர்ப்பே அதற்கு மேலான சுயாட்சிக்கும் இருக்கும். எனவே 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதை நாம் எதிர்ப்பதற்கு இல்லையாயினும் அதிற் காலத்தை வீணடிக்காமற் சுயநிர்ணய உரிமை அடிப்படையில் தேசிய இனங்களுக்குச் சுயாட்சியை உறுதி செய்யும் அரசியற் தீர்வு பற்றிச் சிந்திப்பதே அவசியம்.
ஒற்றையாட்சிக்குட் தீர்வென்ற நிலைப்பாட்டில் இருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கைகளை எடுப்பாரா? அதற்கு அப்பால் அதகிhரங்களைப் பங்கிடும் அரசியல் தீர்விற்கு தயாராவாரா? ஏனெனில் பாராளுமன்றத்தில் அவருக்கு ஆதரவாக இருப்போர் அதனை எதிர்க்கின்றனர். ஆறாவது சக்தியான இராணுவம் எதிர்க்கிறது. பிக்குகள் எதிர்க்கின்றனர். அவருக்கும் மனமில்லை.
எல்லாவற்றுக்கும் மேலாகப், பொருளாதார ரீதியாக இந்தியாவின் ஹொங்ஹொங்காக மாற்றப்பட்டிருக்கும் இலங்கையில் இந்தியாவின் தேவைக்கு அளவான அரச நிர்வாகக் கட்டமைப்பை இந்தியா வலியுறுத்தலாம். அது 13வது திருத்தம் மட்டுமா? அவ்வாறெனில் மஹிந்த ராஜபக்ச நெருக்குதல்களுக்கு ஆளாகலாம். 13வது திருத்தத்திற்கு மேலெனின் ஜே.ஆர். காலத்திற் போன்று பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இப்போதைய அரசாங்கத்திற்கு இல்லை. தற்போதைய தேர்தல் முறையில் எதிர்காலத்திலும் அதற்கான வாய்ப்பில்லை. அது சாத்தியமில்லை.
ஜனாதிபதி, பாராளுமன்றம் போன்ற வரையறைகள் தேசிய இனங்களின் உரிமைகளை உறுதி செய்யக் கூடிய அரசியல் தீர்வை நோக்கிப் பயணிக்க இடமளிக்காது. எனவே 13வது திருத்தச் சட்டத்தை அமுற்படுத்துவது என்பதைப் பற்றி விவாதிப்பதிலேயே காலம் போகலாம்.
அரசியற் தீர்வைச் சமர்ப்பிப்பதற்குப் பொறுப்பாக இருக்கும் திஸ்ஸ வித்தாரண 13வது திருத்தச் சட்டத்தில் அதிகாரங்கள் தொடர்பாக இருக்கும் மத்திய அரசாங்கத்திற்கும், மாகாண சபைகளுக்கும் பொதுவாக இருக்கும் நிரலை நீக்கிவிட்டு அரசியற் தீர்வை முன்வைக்கும் போது பிரச்சினை எழாது என்று கூறியுள்ளார். அதாவது 13வது திருத்தச் சட்டத்தில் மாகாண சபை அதிகாரங்களின் எல்லை பற்றிய நிரல் இருக்கிறது. அது மாகாணங்களுக்குரிய விடயங்களை உள்ளடக்கியுள்ளது. இதில் மத்திய அரசாங்கம் தலையிடா விட்டாலும் பாராளுமன்றத்திற் சாதாரண பெரும்பான்மையுடன் சட்டமாக்கப் பட்டாற் தலையிடலாம்.
இவ் அதிகாரங்கள் கல்வி, சுகாதாரம், கைத்தொழில் போன்றனவற்றை உள்ளடக்கியவையாகும்.
13வது திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இன்னொரு அதிகார நிரல் மத்திய அரசாங்கத்திற்கு உரியது. அவற்றில் மாகாண சபைக்கு எவ்வித அதிகாரமுங் கிடையாது. அவற்றிற் தேசியப் பாதுகாப்பு, வெளி விவகாரம், நாணயம் போன்றன குறிப்பிடத்தக்கன.
மூன்றாவது அதிகார நிரல் மத்திய அரசாங்கத்திற்கும் மாகாண சபைக்கும் பொதுவானதாகும். அது பொலிஸ், காணி போன்றன பற்றியதாகும். இவ் விடயங்களில் மத்திய அரசாங்கமோ, மாகாண அரசாங்கமோ முடிவெடுக்கும் போது ஒன்றுடன் மற்றொன்று கலந்துரையாடி இணக்கம் கண்டு செயற்பட வேண்டும். இந்த நிரலை அகற்றிவிட்ட நிலையில் அரசியல் தீர்வு காண்பது பற்றியே தற்போது திஸ்ஸ வித்தாரண பேசுகிறார். அவ்வாறெனிற் காணி, பொலிஸ் அதிகாரங்கள் (மத்திய அரசாங்கத்தின் இணக்கப்பாட்டுடன்) மாகாண சபைகளுக்குக் கிடைக்கப் போவதில்லை. கிடைப்பது போல் இருக்கும் ஏற்பாடுகளும் உத்தேச அரசியல் தீர்வில் பறிக்கப்படலாம்.
13வது திருத்தச் சட்டம் இந்தியாவின் அழுத்தத்தினால் ஏற்படுத்தப் பட்டாலும் தற்போதைய இலங்கையின் சூழ்நிலையில் மாகாண சபைகட்குப் பொலிஸ் அதிகாரங்களை வழங்குவது உசிதமானதல்ல என்பதை இந்தியா புரிந்து கொள்ளும். அதனால் மாகாணங்கட்குப் பொலிஸ் அதிகாரங்களை வழங்குமாறு இந்தியா எவ்வித அழுத்தத்தையுங் கொடுக்காது என்று இடர் முகாமைத்துவ, மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்ஹ தெரிவித்துள்ளார். இலங்கை போன்ற சிறிய நாட்டில் மாகாணங்களுக்குப் பொலிஸ், காணி பற்றிய அதிகாரங்களை வழங்க முடியாது என்றுந் தெரிவித்துள்ளார். எனவே மாகாணங்களுக்குத் தற்போது கையளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களும் இல்லாது போகலாம்.
இதே வேளை, தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச ’13வது திருத்தச் சட்டத்தின் கீழ் மாகாணங்களுக்கு பொலிஸ், காணி அதிகாரங்களை வழங்கக் கூடாது 13வது திருத்தச் சட்டம் காலம் கடந்தது. அதனை நடைமுறைப் படுத்துவதில்லை என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வாக்குறுதி அளித்துள்ளார். அதனாலேயே நாம் அரசாங்கத்தில் இருக்கிறோம். 13வது திருத்தச் சட்டத்தை அமுற்படுத்துவது பற்றிப் பேசும் அமைச்சர்களின் வாய்களுக்கு ஜனாதிபதி பூட்டுப் போட வேண்டும். 13வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப் படுத்தினால் நாம் அரசாங்கத்தில் இருக்க மாட்டோம்” என்று தெரிவித்துள்ளார்.
இந் நிலைமையிற் தமிழ்த் தரப்புக்களின் நிலைப்பாடென்ன, தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தின் அடுத்த கட்டம் என்ன என்ற கேள்விகள் எழுவது தவிர்க்கவியலாத ஒன்றேயாகும். வரலாறு ஓரே இடத்தில் நிற்காது என்பதுடன் சில ஆதிக்க அரசியற் சக்திகளும் தலைமைகளும் விரும்புவது போன்று தவறானவற்றை ஏற்றுக் கொள்ளவும் மாட்டாது.
எமது கட்சியைப் பொறுத்த வரை ஏற்கெனவே அரசியலமைப்பில் இடம் பெற்றுள்ள பதின்மூன்றாவது திருத்தம் அதன் முழு வடிவில் நடைமுறைப்படுத்தப் படுவது இன்றைய சூழலிற் தேசிய இனப் பிரச்சனைக்குத் தீர்வு காணப் போதாதது. சுயநிர்ணய உரிமை அடிப்படையில் தேசிய இனங்களுக்கு அதிக பட்ச சுயாட்சியும் சுயாட்சி உள்ளமைப்புகள் வாயிலான நடைமுறைகளுமே அரசியல் தீர்வாக அமைய முடியும்.
01/31/2022
© 2015 – 2021 இனியொரு…. All Rights Reserved.
Leave a Reply
You must be logged in to post a comment.