சிங்கள பெரும்பான்மையினப் பிரதேசங்களாக வடக்கு, கிழக்கையும் மாற்றும் சூழ்ச்சித் திட்டம்

சிங்கள பெரும்பான்மையினப் பிரதேசங்களாக வடக்கு, கிழக்கையும் மாற்றும் சூழ்ச்சித் திட்டம்

ஜெனிவா கூட்டத் தொடருக்கு சம்பந்தன் எழுதிய கடிதத்தில் விவரிப்பு

வடக்கு, கிழக்கு மாகாணங்களை சிங்கள பெரும்பான்மையினப் பிரதேசங்களாக முனைப்புடன் மாற்றியமைக்கும் திட்டத்தையே இலங்கை அரசு நோக்ககக் கொண்டு செயற்பட்டு வருகின்றது.

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸி லில் பிரதிநிதித்துவம் வகிக்கும் 47 உறுப்பு நாடுகளின் தூதரங்களின் தூதரகத் தலைவர்களுக்கும் தாம் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வரும் மார்ச் மாதம் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் 49 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை விவகாரம் ஆய்வுக்கு எடுக்கப்படவிருக்கையில், 31 ஜனவரி 2022 திகதியிட்டு சம்பந்தன் அனுப்பிவைத்த கடிதத்திலேயே இவ்விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

அக்கடிதத்தில் மேலும் கூறப்பட்டவை வருமாறு:-

46 / 1 தீர்மானத்தின் ஏற்பாடுகளுக்கமைய மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகரினால் மேற்கொள்ளப் படும் எழுத்துமூல விளக்கத்திற்குப் பின்னர் இலங்கையின் நிலைமை ஆராயப்படும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத் தொடருக்கான ஒரு முன்னோடியாக இலங்கை நாடாளுமன்றத்திலிருக்கும் மிகப் பெரிய தமிழ் அரசியல் கட்சியின் (தமிழ்த் தேசிய கூட்டமைப்பு) தலைவர் என்ற வகையில் நான் இதனை உங்களுக்கு எழுதுகின்றேன்.

2009ஆம் ஆண்டு மே மாதம் இலங்கையில் ஆயுதம் தாங்கிய இன மோதல் முடிவுற்ற ஒரு வாரத்தினுள் 2009 மே 23 ஆம் திகதி ஐ.நா. செயலாளர் நாயகத்தின் இலங்கைக்கான விஜயத்தின் முடிவில் இலங்கை அரசாங்கத்தினாலும் ஐக்கிய நாடுகளினாலும் ஏனைய பல விடயங்களோடு கூடவே பின்வருமாறு கூறும் ஒரு கூட்டறிக்கை விடுக்கப்பட்டது.

சர்வதேச மனித உரிமைகள் நியமங்களுக்கும் இலங்கையின் சர்வதேச கடப்பாடுகளுக்கும் அமைவாக, மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்குமான தனது வலுவான கடப்பாட்டை இலங்கை மீளவலியுறுத்தியது. சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமைகள் சட்டத்தின் மீறல்களை கையாள்வதற்கான ஒரு பொறுப்புக் கூறல் நடைமுறையின் முக்கியத்து- வத்தை செயலாளர் நாயகம் கோடிட்டுக் காட்டினார். மேற்காணும் அப்பிரச்சினைகளைக் கையாண்டு தீர்ப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

மேற்காணும் கடப்பாடுகளை கையாண்டுத் தீர்ப்பதற்கு எதுவிதகாத்திரபூர்வமான நடவடிக்கைகளையும் இலங்கை கடந்த பன்னிரெண்டு (12) வருடங்களில் மேற்கொள்ளவில்லை. இதற்கு இடைப்பட்ட காலத்தில் ஐ.நா மனித உரிமைகள் பேரவை 2021 மாரச் மாதம் நிறைவேற்றிய 46/1 தீர்மானத்தோடு, ஏழுதீர்மானங்களை இதுவரையில் நிறைவேற்றியுள்ளது. இதனிடையே இலங்கை பெருமளவுக்கு அமுல் படுத்தப்படாத பல்வேறு கடப்பாட்டு அறிக்கைகளை விடுத்துள்ளது.

பொறுப்புக் கூறல் விடயத்தைக் கையாண்டு தீர்க் காதுவிட்டதற்கு மேலதிகமாக, இலங்கை அரசாங்கமானது  இராணுவமயப்படுத்தல், சிவில் சமூக மற்றும் ஊடகத் துறையினர் மற்றும், குடும்ப உறுப்பினர்கள் அத்துடன், தமது உயிரிழந்த உறவுகளை நினைவுகூரும் ஏனையவர்கள் ஆகி யோரைப் புதிதாகக்கைது செய்வதோடு கூடவே அரசியல் கைதிகளை கால வரையறையற்று தடுத்து வைத்திருத்தல் பல்வேறு அரசாங்க திணைக்களங்களின் செயல்பாடுகள் மூலமாக இடம்பெயர்ந்த தமிழ் மக்களை அவர்தம் காணிகளில் மீளக் குடியேற விடாது தடுத்தல், பாரம் பரிய கூட்டு காணி உரிமைகளையும் கால்நடைகளின் மேய்ச்சல் உரிமைகளையும் மறுத்தல், அரசியல் மற்றும் சிவில் சமூக செயற்பாடுகளை கண்காணித் தலை தீவிரப்படுத்தல் ஆகியன அடங்கலாக இலங்கைத் தமிழர்களை அடக்கி ஒடுக்கும் ஒரு நிகழ்ச்சித் திட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

தமிழ் மக்களை அவர் தம் பாரம்பரிய வாழ்விடங்களிலிருந்து விரட்டியடிப்பதற்கு மேலதிகமாக, தொல்லியல் அகழ்வாரய்ச்சிகள், வன விலங்கு பாதுகாப்பு மற்றும் வனப் பாதுகாப்பு எனும் போர்வையில் தற்போது நடைபெற்று வரும் காணிச் சூறையாடல்தான் தமிழ் மக்கள் எதிர்நோக்குகின்ற மிகவும் பாரதூரமான ஆபத்தாகும்.

பிரதேச எல்லைகளை மீள் வரையறை செய்தல் மற்றும் எதிர்காலத்தில் தமிழர் பிரச்சினையின் எந்த ஒரு தீர்வையும் அர்த்தமற்றதாக்கும் வண்ணம் வரலாற்று ரீதியான தமிழ் பேசும் பகுதிகளை சிங்களக் குடியேற்றாளர்களைக் கொண்டு குடியேற்றல் நிகழ்ச்சித் திட்டமொன்றில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. இந்த நிச்சயமற்ற நிலைமையில், தமிழ் மக்கள் தமது பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு நாட்டை விட்டுச் சென்று வெளி நாடுகளில் தஞ்சம் நாடுகின்றனர்.

இலங்கை அரசாங்கத்தின் இச் செயற்பாடுகள், தமிழ் மக்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களை தமது வரலாற்று ரீதியான வாழ்விடப் பிரதேசங்களாகக் கொண்டு, ஐக்கிய, பிரிபடாத இலங்கையினுள் வாழ்ந்துவரும் ஒரு மக்கள் குழுமத்தினர் என்று உள்நாட்டிலும் சர்வதேச ரீதியாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள எண்ணக்கருவை தோற்கடித்து, அதன் மூலம் வடக்கு, கிழக்கு மாகாணங்களை ஒரு சிங்கள பெரும்பான்மையின பிரதேசங்களாக முனைப்புடன் மாற்றியமைக்கும் எண்ணம் கொண்டவையாகும்.

46/1 ஆம் இலக்க தீர்மானம் தொடர்பான இலங்கை அரசாங்கத்தின் கடப்பாடுகள் தொடர்பாக அதன் செயலாற்றுகையை மதிப்பிடுமுகமாக ஐ.நா மனித உரிமைகள் பேரவை 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கூடுகின்ற போது, மீறல்கள் பற்றிய குற்றச்சாட்டுக் களை விசாரிப்பதற்கான தனது கடப்பாடுகளில் இலங்கை அரசாங்கம் தவறிவிட்டதென்பதையும் அம் மீறல்கள் மீண்டும் நிகழாதிருப்பதை உறுதிப்படுத்துவதற்கான ஒரே உறுதியான வழியாக தமிழ்த் தேசியப் பிரச்சினையைக் கையாண்டு தீர்ப்பதற்கு அது எவ்விதநடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என்பதையும் தெளிவாக எடுத்துரைக்குமாறு உறுப்பு நாடுகளை நான் வலியுறுத்துகிறேன்.

கலந்துரையாடல் தொடர்களில் உங்கள் கருத்துக்களை முன்வைத்து, பொறுப்புக்கூறல் மற்றும் தமிழர் தேசிய பிரச்சினையைத் தீர்த்து வைத்தல் ஆகியன தொடர்பாக இலங்கை அரசாங்கத்தின் கடப்பாடுகளுக்கு இயைந்தொழுகுமாறு அதனை வலியுறுத்துமாறும், இலங்கையில் உள்ள தமிழ் மக்களாகிய நாங்கள் ஒரு ஐக்கிய மற்றும் பிரிபடாத இலங்கைக்குள் எமது வரலாற்று ரீதியான வாழ்விடப் பிரதேசமாகிய வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சுய மரியாதையோடும் கண்ணியத்தோடும் பாதுகாப்புடனும் வாழ்வதை உறுதிப்படுத்து முகமாக இலங்கை அரசாங்கத்தை அதன் அனைத்து வாக்குறுதிகளுக்கும் அமைவாக சரியான திசையில் நகர்வதற்கு தூண்டும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் தமிழ் மக்கள் உங்களைக் கேட்டுக்கொள்கின்றனர் என்று உள்ளது.

About editor 3016 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply