பண்டையத் தமிழர் கண்ட நாண்மீன், கோள்மீன்க

பண்டையத் தமிழர் கண்ட நாண்மீன், கோள்மீன்கள்
முனைவர் கா. தமிழ்ச்செல்வன்

இரண்டாயிரம் ஆண்டுகளின் வளர்ச்சி இருபது ஆண்டுகளின் வளர்ச்சி என்றால் அது மிகையாகாது. அதற்குக் காரணம் அறிவியல். அறிவியல் இல்லையென்றால் இன்று உலகமே இல்லை என்ற அளவிற்கு அறிவியலின் கண்டுபிடிப்புகளும், அதன் பயன்பாடுகளும் மனிதனை வியக்கச் செய்து கொண்டிருக்கின்றன. இப்படிப்பட்ட அறிவியல் உலகின் முன்னோடியாகப் பண்டையத் தமிழர்கள் இருந்துள்ளனர். நாகரீக உலகின் முன்னோடியாகவும், வானியல் ஆராய்ச்சியில் பன்னெடுங்காலமாகவும் தமிழர்கள் சிறந்து விளங்கியுள்ளனர். தமிழர்களின் வானநூல் ஜோதிடம் கண்டு உலகப் பேரறிஞர் பலர் பாராட்டி வியந்துள்ளனர். அந்த வகையில் பண்டையத் தமிழரின் கணிய அறிவை ஆராயும் நோக்கில் பண்டையத் தமிழர்கள் கண்ட நாள்மீன் கோள்மீன்கள் குறித்த புலமையைக் காண்போம்.

கணியர்

வானியல் அடிப்படையில், சோதிடத்தில் சிறந்தவர்களை அறிவன், கணியன், கணி என அழைக்கப்பட்டனர். கணியன் பூங்குன்றனார், பக்குடுக்கை நன்கணியார். கணிமேதாவியார் போன்றோர் சோதிடத்தில் சிறந்துள்ளனர். அரண்மனையில் பெருங்கணிகர் இருந்துள்ளதை சிலப்பதிகாரம் கூறியுள்ளது. நாழிகை வட்டில் கொண்டு காலத்தைக் கணிப்போர் நாழிகைக் கணக்கர் என்றும் அழைத்தனர்.

வானியல் அளவுகள்

தொல்காப்பியத்திலும் சங்க நூல்களிலும் காணப்படும் வானியற் செய்திகள் உருப்பெறுவதற்குப் பல்லாயிரமாண்டுகள் பிடித்திருக்கலாம். ஆரியரோடு தமிழர் உறவு கொள்வதற்கு முன்னரே வானியலில் தமிழர் முன்னேறி யிருந்தனர். சிறந்து விளங்கினர். தமிழகத்து உழவர்கள் சூரியன், திங்கள் இயக்கத்தைக் கொண்டு பருவக்காலங்களைக் கணக்கிட்டு அறிந்திருந்தனர். வியாழன் இராசி வட்டத்தைச் சுற்றி வந்தால் அறுபது ஆண்டுகள் என்று கணித்துக் கூறியுள்ளனர். 12ஆண்டுகள் ஒரு மாமாங்கம் என்றும் வரையறை செய்தனர். சமய விழாக்களின் காலம் சூரிய, சந்திரமான முறைக்கும் இடையே ஏற்படும் கால வேறுபாட்டை ஒட்டியே வேறுபடுத்தினர்.

தமிழர்கள் ஓராண்டினை ஆறு பெரும்பொழுதாகப் பிரித்துக் கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என்று வரிசைப்படுத்தினர். பருவத்திற்கு இரண்டு மாதமாக ஆவணி, புரட்டாசியில் தொடங்கி ஆறு பருவத்திற்கும் மாதங்கள் கூறியுள்ளனர். ஆண்டுகளைப் பிரித்தார் போல நாட்களையும் ஆறாகப் பிரித்து வைகறை, யாமம், நண்பகல், எற்பாடு, மாலை, யாமம் என்று கூறி சிறுபொழுது என வகைப்படுத்தினர். ஒரு நாளைக்கு 24 மணி நேரம் என்பதை 60 நாழிகை என்று கணக்கிட்டனர். ஒரு நாழிகைக்கு 24 நிமிடங்கள் என்றும் பிரித்துப் பாகுபாடு செய்து கணித்தனர்.

திங்கள் பெயர்கள்

சங்க இலக்கியத்தில் எல்லாத் திங்களின் பெயர்களும் இடம்பெறவில்லை. எனினும், சிலத் திங்களின் பெயர்கள் மட்டும் இடம் பெற்றுள்ளன. தைத் திங்கள் பல இடங்களில் கூறப்பட்டுள்ளது.

தைத் திங்கள் தண்கயம் படியும் பெருந்தோட் குறுமகள் என்பது காண்க.

பதிற்றுப்பத்தில் மாசித்திங்கள் இடம் பெறுகின்றது. (பதிற்.59)

புறம் 229-ல் பங்குனி இடம்பெறுகிறது.

கார்த்திகை நட்சத்திரம் பல இடங்களில் இடம் பெற்றாலும் திங்கள் பெயராகச் சங்க நூல்களில் பேசப்படவில்லை. எனினும் களவழி நாற்பது(17) கார் நாற்பது (26) ஆகியவை குறிப்பிட்டுள்ளன. தொல்காப்பியர், இகர வீற்றுப்புணர்ச்சி ஐகார வீற்றுப்புணர்ச்சி ஆகியவற்றில் மட்டுமே “திங்களும் நாளும் முந்து கிளந்தன்ன” என்று பேசுவது காணலாம். எல்லாத் திங்கட் பெயரும் இவ்விரு எழுத்திலே முடிவது கொண்டு காண்கையில் அவர் காலம் முதல் இன்று வரை திங்கட் பெயர்கள் வழங்குவன என அறியலாம். ஞாயிற்றைக் கொண்டு கணக்கிடும் முறை கி.பி. 7-ஆம் நூற்றாண்டில் வராகமித்ரரால் கொண்டு வரப்பட்டது. திங்களின் வளர்ச்சி, தேய்வுகொண்டு கணக்கிடும் முறை பழையது எனவேதான் மாதத்தைத் திங்கள் என்று தமிழர் அழைத்துள்ளனர்.

நாண்மீன் கோள்மீன்கள்

தாமே ஒளிவிடக்கூடிய மீன்கள் நாண் மீன் எனப்படும். ஞாயிறு கோளிடமிருந்து ஒளிபெற்று ஒளிர்வன கோள்மீன்கள் எனப்படும். ஞாயிற்றின் ஒளியைக்கொண்டு ஒளிர்வன திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி என்பனவாகும். இராகு, கேது இராக் கோள்கள் அல்லது நிழற்கோள்கள் எனப்படும்.

மண்ணும் ஒரு கோள், அதனால் அது ஞாயிற்றைச் சுற்றி வருதலாலும், அதன் சுழற்சியைக் கணக்கிட அதற்கு நேர் எதிரிலிருக்கும் ஞாயிற்றின் போக்குக் கணக்கிடப் பெறுகிறது. ஆகையால் திங்களாகிய கோள்மீன், ஒவ்வொரு நாளும் நிற்கும் நிலையே நாண்மீன். அது ஞாயிற்றோடு சேர்வதும், பிரிந்து எதிர்ப்பக்கம் சேர்வதும் நிகழ்கையில் அதன் ஒளி நாளுக்கு நாள் வளர்ந்து முழு வட்டமாகும். இதனை,

மாக விசும்பின் வெண்டிங்கள்
மூவைந்தாள் முறை முற்ற – என்பதன் வழி (புறம் -100)
அறியலாம்.

வளர்கையில் பதினைந்து நிலைகளையடைவது போலவே தேய்கையிலும் பதினைந்து நிலையை அடைகிறது.

எட்டாம் நாள் பிறை நிலவு எண்ணுட்டிங்கள் (புறம்:118)

என்று குறிக்கப்படும். ஒளிபொருந்திய முழுப்பக்கமும் தெரியும் மதி உவாமதி ஆகும். மன்னனின் வெண்கொற்றக்குடைக்கு உவவுமதி உவமையாகக் கூறப்பட்டுள்ளது.

உவவுமதி உருவின் ஓங்கல் வெண்குடை (புறம்:3)

முழுமதி நாளில் சூரியனும் திங்களும் எதிரெதிராக நிற்கும். திங்கள் தோன்றும் போது கதிர் மறையும். இதனை,

உவவுத்தலை வந்த டிபருநாள் அமையத்து
இருசுடர் தம்முன் நோக்கி யொருசுடர்
புன்கண் மாலை மலைமறைந் தாங்கு (புறம்:65)

நாள்மீன், கோள்மீன் பற்றிப் பலக் குறிப்புக்கள் கிடைக்கின்றன. அகன்ற மன்றத்தில் ஆட்டுக்கிடாய்களும் சிவலைப் பறவைகளும் விளையாடும் காட்சி நீலவானில் நாள்மீனும், கோள்மீனும் பரவியதுபோல் இருந்ததாம்.

நீனிற விசும்பின் வலனோர்பு திரிதரு
நாண்மீன் விராய, கோண்மீன் போல
மலர்தலை மன்றத்து…
… … … … …
மேழகத் தகரொடு சீவல்விளை யாட
 (பட்டி.67-77)

ஒருவர் பிறக்கும் நாளில் விண்ணில் திங்கள் இருந்த இடத்திலிருந்த மீனே நாள்மீன் ஆகும். ஒருவர் பிறந்த பொழுது ஆட்சி பெற்றிருந்த நாள் மீனின் அடிப்படையில் அவரவர் நன்மையும் தீமையும் அமையும் என்பது சோதிட நூலின் செய்தியாகும்.

மாங்குடிகிழார் பாண்டியன் நெடுஞ்செழியனை வாழ்த்தும் பொழுது,

நின்று நிலை இயர்நின் நாண்மீன் நில்லாது
படாஅச் செலீயர் நின் பகைவர்மீனே (புறம் 24)

என்று பாடுகிறார்.

விண்மீன்கள், கோள்களின் நிறம், வடிவம் பற்றித் சங்ககாலத் தமிழர்கள் நன்கு தெரிந்திருந்தனர். வெண்மை நிறமுடையதை வெள்ளியென்றும், செந்நிறமுடையதைச் செவ்வாய் என்றும் பெயர் வைத்து அழைத்துள்ளனர். அனுடத்தை முடப்பனை என்றும் புனர்பூசத்தைக் கயம்(குளம்) என்றும், கூடலூர்கிழார் குறித்துள்ளார்.(புறம் 229)

“அதிதிநாள் கழை யாவணமேரி புனர்தங் கரும்பிவை புனர் பூசமாகும் என்பது பிங்கலந்தைச் சூத்திரமாகும்” (புறம் 229 ஐயர் பதிப்பு)
வெள்ளிமீனின் தோற்றமும் மழைக்குறிப்பும்
வெள்ளிமீன் விடியற்காலத்தில் தோன்றுவது, விடியற் காலத்தில் திங்கள் ஒளி மறைய வெள்ளி விளங்கிற்று (புறம் 398) என்று கூறுவதில் காணலாம். மேலும் வெள்ளிமீன் வடக்குத்திசை விட்டுத் தெற்குத் திசைக்குப் போகுமாயின் வற்கடம் தோன்றும் எனப்பட்டறிவால் அறிந்து கூறியுள்ளனர்.

வெள்ளித் தோன்றப் புள்ளுக்குரலியம்ப (புறம் 385)

வசையில்புகழ் வயங்கு வெண்மீன்
திசைதிரிந்து தெற்கேகினும் (பட்டி.1-2)

காவிரி நீர்சுரந்தூட்டும் என்றார் உருத்திரங்கண்ணனார். மழைக்கோள் தெற்கில் எழுந்தால் மழை உண்மையில் பொழியும் என்பதை பதிற்றுப்பத்து உரைக்கிறது.

வறிது வடக் கிறைஞ்சிய சீர்சால் வெள்ளி
பயங்கெழு பொழுதோ டாநியம் நிற்ப
 (பதிற் 24)

என்கிறது.

இதனை மள்ளனார்,

வெள்ளி தென்புலத் துறைய விளைவயல்
பள்ளம் வாழய பயனில் காலை (புறம்:338)

கூறுகிறது.

சனிமீன் புகையினும் திசைகளில் புகை தோன்றினும் தெற்கே வெள்ளி போனாலும் பாரியின் நாட்டில் மழை தவறாது பொழியும் என்று கபிலர் பாடுகிறார்.

மைம்மீன் புகையினும் தூமம் தோன்றினும்
தேன்றிசை மருங்கின் வெள்ளி யோடினும் (புறம்:117)
ஞாயிற்றின் வேறுபாடும் தீய அறிகுறியும்
ஞாயிறு வேறுபடத் தோன்றுதலும் எரிகொள்ளி விழுதலும் தீயவை நிகழ அறிகுறிகள் என்று நம்பியுள்ளனர்.

ஆலங்குகதிர்க் கனல நால்வயிற் தோன்றினும்
இலங்குகதிர் வெள்ளி தென்புலம் படரினும் (புறம்:35)

கோவூர்க்கிழார் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனுடைய எதிரிகள் அவன் படையெடுப்பால் தமக்கு அழிவு வரப்போகிறது என்பதனைத் தீயசகுனங்கள் மூலம் உணர்ந்து அஞ்சினார்.

திசையிரு நான்கும் உற்கம் முற்றவும்
பெருமரத் திலையி னெடுங்கோடு வற்றல் பற்றவும்
வெங்கதிர்க் கனலி துற்றவும் (புறம்:41)

எட்டுத்திசைகளிலும் எரிகொள்ளி விழுவதும், ஞாயிறு பல இடத்தில் தோன்றுதலும் இங்கு கூறப்பட்டன. செவ்வாய் மீன் கடல் நடுவே தோன்றும் படகின்கண் இடப்பட்ட விளக்குப் போல விளங்குவதாகப் புறப்பாட்டு ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

சேரமான் யானைக்கட்சேய்மாந்தரஞ்சேரல் இரும்பொறை இறக்கப் போகும் செய்தியைச் சில உற்பாதங்கள் மூலம் அறிந்து தாம் அஞ்சியதாகவும், அவ்வச்சம் உண்மையாகும் வண்ணம் ஏழாம் நாளில் அவன் மாய்ந்ததாகவும் புலத்துறை முற்றிய கூடலூர்கிழார் கூறுகின்றார். இவர் பாடிய புறம் 229 ஆம் பாடல் தமிழரின் வானியல் புலமைக்குச் சிறந்த சான்றாக அமைகிறது.

சனி கரிய நிறமுடையனாதலின் மைம்மீன் என்றார். சனி தனக்கு பகைவீடாகிய இடபம், சிங்கம், மீனம் ராசியில் புகுந்தால் தீங்குவரும் என்றும், சிம்மராசியில் புகுந்தால் உலகிற்குப் பெருந்தீங்கு விளையும் என்றும் கூறியுள்ளார். வானில் தூமக்கேது தோன்றினால் பெருங்கேடு உண்டாகும். இதில் தூமக்கேது என்பது இன்றைய காலத்தில் வால் நட்சதிரம் என்று கூறுவர். (புறம்:117)

சோழநாட்டின் அறிவு வளத்தினைப் பாராட்டும் உறையூர் முதுகண்ணன் சாத்தனார் சூரியனின் இயக்கமும், அவ்வியக்கத்தால் சூழப்பட்ட பார்வட்டமும் காற்று இயங்கும் திசையும் காற்று இல்லாமல் வெற்றிடமாக உள்ள ஆகாயமும் முதலானவற்றை நேரில் கண்டவர்கள் போல நாளும் இத்தகைய அளவு உடையன என்று அன்றே கூறியுள்ளனர்.

செஞ்ஞாயிற்றுச் செலவும் அஞ்ஞாயிற்றுப்
பரிப்பும் பரிப்புச் சூழ்ந்தமண் டிலமும்
வளிதிரிதரு திசையும்
வறிது நிலைஇய காயமும் என்றிவை
சென்றளந் தறிந்தனர் போல வென்றும்
இனைத்தென் பாரும் உளரே
 (புறம்:30)

இதனால் ஞாயிறு மற்றவற்றை ஈர்க்கும் ஆற்றல் உண்டு என்றும், வானில் காற்றில்லாத வெற்றிடம் உண்டென்றும் அன்றே அறிந்திருந்தனர் என்பதும் தெளிவாகிறது.

தமிழர்களின் கணியமான கோள்களின் ஆராய்ச்சியில் தாமே ஒளிவிடக்கூடிய மீன்கள் நாண் மீன் என்றும், ஞாயிறு கோளிடமிருந்து ஒளிபெற்று ஒளிர்வனக் கோள்மீன்கள் என்றும் அறிந்திருந்தனர். ஞாயிற்றின் ஒளியைக்கொண்டு ஒளிர்வன திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி என்பதையும் கூறியுள்ளனர். இராகு, கேது இராக் கோள்கள் அல்லது நிழற்கோள்கள் என்று அன்றே கண்டு கூறியது போற்றுவதற்கு உரியதாகவுள்ளது. மேலும் சூரியன், திங்களின் இயக்கங்கள் கொண்டு ஆண்டுகளைப் பிரித்துக்கூறிய முறையும், ஆண்டுகளைக் பருவங்களாகப் பிரித்துக் கூறியுள்ளதும், நாட்களை நாழிகை முறையில் கணக்கிட்டுக் கூறியுள்ளது போன்ற கருத்துக்கள், கோள்களின் திரிபால் ஏற்படும் மாற்றங்கள் எனச் சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளதை அறியும் போது பண்டையத் தமிழர்கள் நாண்மீன், கோள்மீன் குறித்து பிரித்து ஆராய்ந்தறிந்துள்ளனர் என்பது தெளிவாகிறது.

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply