ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடனான சந்திப்பின்போது பேசவேண்டிய விடயம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடனான சந்திப்பின்போது பேசவேண்டிய விடயம்
இரா.சம்பந்தன் எழுதிய கடிதத்தின் முழுவடிவம்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடனான சந்திப்பின்போது பேசவேண்டிய விடயம் பற்றி  இரா.சம்பந்தன்  எழுதிய கடிதத்தின் முழுவடிவம்
19th August 2021

 By S Thillainathan

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடனான சந்திப்பின்போது பேசவேண்டிய விடயம் என்னவென்பதை குறிப்பிட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தின் முழுவடிவம் வருமாறு,

ஆர். சம்பந்தன் பா.உ
பீ12, மகாகமசேக்கர மாவத்த,
கொழும்பு 7
தொலைபேசி: 112559787
11 ஜூன், 2021

மேதகு கோட்டாபய ராஜபக்ஷ,
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு சனாதிபதி,
சனாதிபதி செயலகம்,
கொழும்பு 1

மேதகு சனாதிபதி அவர்களே,


புதிய அரசிலமைப்பு

மேல்காணும் விடயம் தொடர்பாக 2021 ஜூன் 16 ஆம் திகதி மாலை 4.00 மணிக்கு சனாதிபதி செயலகத்தில் தாங்கள் என்னைச் சந்திக்கத் தீர்மானித்துள்ளதாக அறிவித்து தங்களது செயலாளரினால் அனுப்பப்பட்ட 2021 ஜூன் 07 திகதியிடப்பட்ட கடிதம் கிடைக்கப்பெற்றது. இலங்கைத் தமிழரசுக் கட்சித் (ITAK) தலைவர் திரு. மாவை எஸ்.சேனாதிராஜா, தமிழீழ விடுதலை இயக்கத் (TELO) தலைவர் கௌரவ செல்வம் அடைக்கலநாதன், பா.உ, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத் (PLOTE) தலைவர் கௌரவ டீ .சித்தார்த்தன் பா.உ மற்றும் கௌரவ எம்.ஏ.சுமந்திரன் பா.உ. ஆகியோரையும் என்னுடன் அச்சந்திப்பிற்கு அழைத்து வருவேன் என்று தங்களுக்கு அறியத்தர விரும்புகின்றேன். இவர்கள் அனைவரும் நான் தலைமை வகிக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களாவர் என்பதோடு, திரு. ரகு பாலச்சந்திரன் எமது செயலாளராக இருப்பார்.

புதிய அரசியலமைப்பை இயற்றுவது பற்றியதே (இச்சந்திப்பில்) எமது முதன்மையான கரிசனையாகும். புதிய அரசியலமைப்பொன்றைத் தயாரிப்பதில் மூன்று விடயங்கள் முக்கியமானவையாக அண்மைக் காலங்களில் இனங்காணப்பட்டுள்ளன.

1. நிறைவேற்று சனாதிபதி முறைமை

2. தேர்தல் தொகுதி சீர்திருத்தம்

3. தமிழ் தேசிய பிரச்சினை – தமிழ் மக்கள் உள்ளிட்ட இந்நாட்டிலுள்ள அனைத்து மக்களும் தமது இறையாண்மையை – ஆட்சி அதிகாரங்கள், அடிப்படை உரிமைகள் மற்றும் அவர்களது வாக்குரிமை – முழுமையாகப் பிரயோகிப்பதற்கு உதவும் வகையில் தேசிய பிரச்சினையை கையாளுதல். இறையாண்மை மக்களிடமே தங்கியுள்ளது என்பதோடு, அது அவர்களிடமிருந்து பிரிக்க முடியாததாகும். ஆட்சி அதிகாரங்கள் தேசிய மட்டம், பிராந்திய மட்டம் மற்றும் உள்ளுர் மட்டம் ஆகிய வேறுவேறு மட்டங்களில் மக்களால் பிரயோகிக்கப்பட வேண்டும் என்பதோடு, அவர்கள் அடிப்படை உரிமைகளை சுதந்திரமாக பிரயோகிக்கவும் தமிழ் மக்கள் அடங்கலாக இலங்கையின் அனைத்துக் குடிமக்களையும் இலங்கையின் சமனானதும் இறையாண்மை கொண்டதுமான பிரசைகளாக ஆக்கி இச் சகல மட்டங்களிலும் ஆட்சி அதிகாரங்கள் தொடர்பான ஜனநாயக தீர்மானங்களை மேற்கொள்வதற்கு அவர்கள் தமது வாக்குரிமையை சுதந்திரமாக பயன்படுத்தவும் வேண்டும்.

அரசியலமைப்பிற்கான 13 ஆவது திருத்தம் 1988 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்டது என்பதைக் குறிப்பிடுவது இச்சந்தர்ப்பத்தில் பொருத்தமானதாக இருக்கும். 1983ஆம் ஆண்டின் தமிழர் விரோத படுகொலைகளை அடுத்து, தேசிய பிரச்சினையான தமிழர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இந்தியாவின் நல்லெண்ணத்தை இலங்கை ஏற்றுக்கொண்டது.


இந்தியாவின் உதவியுடன் இலங்கை அரசாங்கத்திற்கும் ஜனநாயக ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட தமிழ்ப் பிரதிநிதிகளுக்கும், அதிலும் பிரதானமாக தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. பல ஆண்டுகள் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் பின்னர் 13ஆவது திருத்தம் 1988ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்டது. 1986ஆம் ஆண்டு ஜுலை மற்றும் ஓகஸ்ட் மாதங்களில் இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கும் (TULF) இடையே இடம்பெற்ற விரிவான பேச்சுவார்த்தைகளே 13ஆவது திருத்தத்தின் அடிப்படையாக அமைந்தன.

அது, போதுமானதல்ல என காணப்பட்டதோடு, அதிகார பரவலாக்கத்தை – ஆட்சி அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்ளல் – மேலும் அர்த்தமுள்ளதாகவும் நீடித்து நிலைக்கக்கூடியதாகவும் ஆக்குவதற்கான பல்வேறு நடைமுறைகள் அடுத்தடுத்து வந்த பல்வேறு இலங்கை அரசாங்கங்கள் மற்றும் வேறுவேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களின் கீழ் ஆரம்பிக்கப்பட்டன.

மேற்கூறப்பட்ட பேச்சுவார்த்தைகளின்போது, பல்வேறு துறைகளில் கருத்தொருமைப்பாடு எட்டப்பட்டது. இவ்விடயங்கள் அனைத்தும் பதிவுகளாகியுள்ளன. இந் நடைமுறைகளை பரிசீலிப்பது பல விடயங்களில் தரப்புகளுக்கிடையே ஏற்கெனவே இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது என்பதை தெளிவாக எடுத்துக்காட்டும். பின்வருவனவற்றை குறிப்பிடுவதற்கு நாம் விரும்புகின்றோம்.

• பதின்மூன்றாவது திருத்தம் மேலும் மேம்படுத்தப்படும் என்று ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன 1987 நொவம்பர் 7ஆம் திகதி புதுடில்லியில் இந்திய அரசாங்கத்திற்கு ஓர் உத்தரவாதத்தை வழங்கினார்.

• 1993 இல், ஜனாதிபதி ஆர். பிரேமதாசவின் ஆட்சிக் காலத்தில் இந்திய மாதிரியை அடிப்படையாகக் கொண்ட அதிகாரப் பரவலாக்கலை மங்கல முனசிங்க தெரிவுக்குழு பரிந்துரை செய்தது. ஒருங்கியை நிரல் இல்லாதொழிக்கப்பட வேண்டும் அல்லது அதிலடங்கியுள்ள பெரும்பாலான விடயங்கள் மாகாண நிரலுக்கு மாற்றப்பட வேண்டும் என்று அது ஆலோசனை வழங்கியது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைக்கும் உயர் சபை ஒன்றையும் அது முன்மொழிந்தது.


• ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஆட்சியில் 1995 மற்றும் 1997 ஆம் ஆண்டுகளில் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கான அரசாங்க முன்மொழிவுகள் மற்றும் 2000 ஆம் ஆண்டின் அரசியலமைப்புச் சட்டமூலம் ஆகியன அனைத்தும் விரிவான அதிகாரப் பரவலாக்கத்தை முன்மொழிந்ததோடு, ஒற்றையாட்சிக் கட்டமைப்பை விட்டுவிட்டன. முன்னாள் ஜனாதிபதிகளான கௌரவ மகிந்த ராஜபக்ஷ பா.உ மற்றும் கௌரவ மைத்திரிபால சிரிசேன பா.உ. அத்துடன் தற்போதைய அரசாங்கத்தின் பாகமாகவிருக்கும் இன்றைய அமைச்சர்களான கௌரவ பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் பா.உ. மற்றும் கௌரவ நிமால் சிரிபால டீ சில்வா பா.உ ஆகியோர் இம்மூன்று அரசாங்க முன்மொழிவுகளும் முன்வைக்கப்பட்டபோதும் புதிய அரசியலமைப்பு சட்டமூலம் அமைச்சரவையின் அங்கீகாரத்தோடு ஓர் அரசாங்க சட்டமூலமாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டபோதும் அமைச்சரவையில் உறுப்பினர்களாக இருந்தனர்.

• 2002 டிசெம்பரில், ஒஸ்லோ நகரில், ஓர் ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டி கட்டமைப்பொன்றின் அடிப்படையில் தமிழ் பேசும் மக்களின் வரலாற்றுரீதியான வாழ்விடப் பிரதேசங்களில் உள்ளக சுய நிர்ணய கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்த ஒரு தீர்வை ஆராய்வதற்கு இலங்கை அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமும் இணங்கின. இலங்கை அரசாங்கத் தூதுக்குழுவிற்கு கௌரவ பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ், பா.உ. தலைமை தாங்கினார்.

• 2006 இல், சனாதிபதி மகிந்த ராஜபக்ஷ புதிய அரசியலமைப்பிற்கான ஆலோசனைகளை வகுப்பதற்காக சர்வ கட்சி பிரதிநிதிகள் குழுவொன்றையும் (யுPசுஊ) பல்லின வல்லுநர் குழுவொன்றையும் நியமித்ததார். அதன் அங்குரார்ப்பணக் கூட்டத்தில், சனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பின்வரும் வார்த்தைகளில் தனது கருத்துக்களையும் அவர்களது பணியையும் விளக்கி;க் கூறினார்: ;
“பண்டாரநாயக்க – செல்வநாயகம் உடன்படிக்கையிலிருந்து தொடர்ந்து நடைபெற்று வந்த கடந்த கால முயற்சிகளை நாம் ஆராய வேண்டும் …. மக்கள் தமது சொந்தப் பிரதேசங்களில் தமது தலைவிதியை தாமே பொறுப்பேற்று, தமது அரசியல்-பொருளாதார சூழலை தாமே கட்டுப்படுத்தவேண்டும், விகிதாசார அடிப்படையில் சமனற்ற வளங்களை ஒதுக்கீடு செய்யும் மத்திய தீர்மானம் மேற்கொள்ளல் நடைமுறை குறிப்பிடத்தக்கதொரு காலமாக ஒரு பிரச்சினையாகவே இருந்து வருகிறது. மேலும், அதிகாரப் பரவலாக்கம் என்பது, மத்தியில் அளவுக்கதிகமாக தங்கியிராது, தனித்துவம், பாதுகாப்பு மற்றும் சமூகப் பொருளாதார முன்னேற்றம் ஆகியன தொடர்பான பிரச்சினைகளை கையாண்டு தீர்த்து வைக்க வேண்டும் என்பது தெளிவான உண்மையாகும்… நாம் உண்மையான இலங்கை அரசியலமைப்பு வரைச் சட்டகமொன்றை உருவாக்கும்போது, எமது நெருங்கிய அயல் நாடான இந்தியா அடங்கலாக உலகம் முழுவதும் நாம் ஆராயக்கூடிய பல உதாரணங்கள் உள்ளன..


“எந்தவொரு தீர்வும், முரண்பாட்டின் பின்னணியைக் கவனத்தில் கொண்டு நாட்டின் இறைமையை விட்டுக்கொடாது இயன்றவரை அதிகூடிய அதிகாரப் பரலாக்கத்திற்கு விரிந்து செல்லும் ஒன்றாகத் தென்பட வேண்டும்”

• சர்வ கட்சி பிரதிநிதிகள் குழு நடைமுறையில் ஈடுபட்டிருந்த பல்லின வல்லுநர் குழு தனது பிரதான அறிக்கையில் 2000 ஆம் ஆண்டின் அரசியலமைப்பு சட்டமூலத்தை ஒத்த விரிவான அதிகாரப் பகிர்வு ஏற்பாடொன்றை முன்மொழிந்தது. இதனிடையே, தலைவர் பேரசிரியர் திஸ்ஸ வித்தாரணவினால் சமர்ப்பிக்கப்பட்ட சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் இறுதி அறிக்கை ஒருங்கியை நிரலை இல்லாதொழித்தல் அடங்கலாக பதின்மூன்றாவது திருத்திற்கான முக்கிய மேம்பாடுகளை முன்வைத்தது.

• 2016இல் புதிய அரசியலமைப்பொன்றை வரையும் நோக்கத்திற்காக பாராளுமன்றத்தை ஓர் அரசியலமைப்புப் பேரவையாக மாற்றுவதற்கு ஏகமனதான திர்மானமொன்று நிறைவேற்றப்பட்டது. வழிநடத்தல் குழுவொன்றும் பல உபகுழுக்களும் நியமிக்கப்பட்டு, விரிவான கலந்துரையாடல்களின் பின்னர் நகல் அரசியலமைப்பொன்று 2019 ஜனவரி மாதம் சமர்ப்பிக்கப்பட்டது. அந்நகல் அரசியலமைப்பில் உள்ளடங்கியிருந்த அதிகாரப் பகிர்வு தொடர்பான ஏற்பாடுகளுக்கு சகல அரசியல் கட்சிகளினதும் கருத்தொருமைப்பாடு கிடைத்தது.

ஆயுத முரண்பாடு 2009 மே மாதம் முடிவுக்கு வந்தது. இந்தியாவும்; இணைத் தலைமை நாடுகள் உள்ளிட்ட சர்வதேச சமூகமும் ஆயுத மோதலை ஒரு முடிவுக்கு கொண்டுவருவதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு உதவி புரிந்தன. இதற்காக இலங்கை அரசாங்கம் ஆயுத மோதல்கள் முடிவுற்றதும் ஏற்றுக்கொள்ளத்தக்கதும் நியாயமானதுமான அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கான வாக்குறுதியை வழங்கியது. இவ்வாக்குறுதிகள் இன்னமும் நிறைவேற்றப்படாதுள்ளன.

2009 இல் ஆயுத மோதல் முடிவுற்றதைத் தொடர்ந்து, அர்த்தமுள்ளதும் நீடித்து நிலைக்கத்தக்கதுமான அதிகார பரவலாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக பதின்மூன்றாவது திருத்தத்தை அமுல்படுத்துவதற்கும் அதனை மேலும் கட்டியெழுப்புவதற்கும் ஒருசில வாக்குறுதிகளை இலங்கை அரசாங்கம் வழங்கியது:

• 2009 மே 26 ஆம் திகதி ஜனாதிபதி ராஜபக்ஷ நாட்டிற்கு வருகைதந்திருந்த ஐநா செயலாளர் நாயகம் பங்கி மூனுடன் இணைந்து ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டார்:

‘பதின்மூன்றாவது திருத்தத்தை அமுல்படுத்துவதற்கும் அத்துடன் இந் நடைமுறையை மேலும் மேம்படுத்தி இலங்கையில் நீடித்த சமாதானத்தையும் அபிவிருத்தியையும் ஏற்படுத்துமுகமாக புதிய சூழ்நிலையில் தமிழ்க் கட்சிகள் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளுடனும் விரிவானதொரு பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பதற்குமான தனது உறுதியான முடிவை சனாதிபதி ராஜபக்ஷ வெளிப்படுத்தினார்.’

• 2009 மே 27ஆம் திகதியாகிய அடுத்த நாளே ஐநா மனித உரிமைகள் பேரவை மேற்கூறப்பட்ட வாக்குறுதி உள்ளடக்கப்பட்ட தீர்மானமொன்றை பின்வருமாறு நிறைவேற்றியது:
“ஓர் இராணுவத் தீர்வை இறுதியான தீர்வாக தான் கருதவில்லை என்று இலங்கை ஜனாதிபதியினால் அண்மையில் வழங்கப்பட்ட உத்தரவாதத்தையும் அத்துடன், இலங்கையில் நிலையான சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துமுகமாக பதின்மூன்றாவது திருத்தத்தை அமுல்படுத்துவதோடுகூடிய ஓர் அரசியல் தீர்வுக்கான அவரது பற்றறுதியையும் வரவேற்று,


• இந்திய பிரதம மந்திரி கலாநிதி மன்மோஹன் சிங் இலங்கை தொடர்பாக ஓர் அறிக்கையை வெளியிட்டார். அவர் கூறுகிறார்.


“இலங்கையில் ஓர் நிலைமை காணப்படுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளை நிர்மூலமாக்கியது ஒரு நல்ல விடயம். எனினும், தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதோடு தமிழ்ப் பிரச்சினை நீங்கிவிடவில்லை. தமிழ் மக்களுக்கு நியாயபூர்வமான பிரச்சினைகள் உண்டு.

அவர்கள் தாம் இரண்டாம் தரப் பிரசைகளாக தாழ்த்தப்பட்டுள்ளதாக உணர்கின்றனர். எனவே, நாம் புதியதொரு நிறுவன மறுசீரமைப்பு முறைமையை நோக்கி நகர வேண்டுமென்றும் தமிழ் மக்கள் தாம் இலங்கையின் சமமான பிரசைகளாக இருப்பதாகவும் கண்ணியமும் சுயகௌரவமும் மிக்க ஒரு வாழ்க்கையைத் தாம் நடத்த முடியுமென்பதுமான ஓர் உணர்வைக் கொண்டிருக்க வேண்டும் என்று இலங்கை அரசாங்கத்தை இணங்க வைப்பதே எமது வலியுறுத்தலாக இருந்துவருகிறது.’

• பிரதம மந்திரி மன்மோஹன் சிங் பின்வருமாறு மேலும் குறிப்பிட்டார்:

“பதின்மூன்றாவது திருத்தத்தின்மேல் கட்டியெழுப்பப்படும் ஓர் அர்த்தபூர்வமான அதிகார பரவலாக்கல் பொதி நிலையான அரசியல் தீர்வொன்றிற்குத் தேவையான நிலைமைகளை உருவாக்கும். ஜனநாயகம், பன்மைத்துவம், சமவாய்ப்பு மற்றும் மனித உரிமைகளுக்கான மதிப்பு ஆகியவற்றிற்கு அமைய சமாதானமும் நீதியும் கௌரவமும் நிறைந்த ஒரு சூழ்நிலையில் இலங்கை மக்கள் அனைவரும் தமது வாழ்க்கையைக் கொண்டுநடத்துவதற்கு தேவையான நிலைமைகளை உருவாக்கும் ஒரு வழிமுறையாக அமையும் சகல சமூகங்களுக்கும் ஏற்றுக்கொள்ளத்தக்கதொரு அரசியல் தீர்வை ஏற்படுத்துவதற்கான தனது திடசங்கல்பத்தை இலங்கை ஜனாதிபதி மீண்டும் வலியுறுத்தினார்.

இந் நோக்கத்திற்காக, குறிப்பாக அதிகாரமளித்தலூடாக தேசிய ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் வலுப்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட உரிய அரசியலமைப்பு ஏற்பாடுகளை தொடர்ந்து அமுல்படுத்துவதற்கான தனது மன உறுதியை ஜனாதிபதி வெளிப்படுத்தினார். இச் சூழ்நிலையில், சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருடனும் விரிவானதொரு பேச்சுவார்த்தையை நடத்துவது தொடர்பான தனது எண்ணத்தை அவர் பகிர்ந்துகொண்டார். இந்தியப் பிரதமர் இலங்கையில் அனைத்து சமூகங்கள் மத்தியிலும் சமாதானத்தையும் நல்லெண்ணத்தையும் கட்டியெழுப்பும் முயற்சிகளுக்கான இந்தியாவின் ஆக்கபூர்வமான ஆதரவைத் தெரிவித்தார்”

• பிரதம மந்திரி கலாநிதி மன்மோகன் சிங் 2008 நொவெம்பரில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை சந்தித்துவிட்டு, தான் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை சந்தித்ததாகவும் அச் சந்திப்பு முழுவதும் இலங்கைத் தமிழ் மக்களின் துயரம் மீதே முழுக் கவனத்தையும் செலுத்தியதாகவும் ராஜ்ய சபையில் கூறினார்:

‘நாங்கள் மிகவும் கவலையுற்றுள்ளோம். இலங்கைத் தமிழர்களின் நலம் குறித்து எமக்கு நியாயபூர்வமான கரிசனைகள் உண்டு என்றும் அது இந்தியாவுடனான இலங்கையின் உறவுகள் மீது ஒரு தாக்கத்தைக் கொண்டுள்ளது என்றும் நான் ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கு விளக்கிக் கூறினேன்.’

அதிகாரப் பரவலாக்கல் பொதியின் கீழ் தமிழ் மக்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்வதற்கான நிலைமைகளைக் கொழும்பு உருவாக்க வேண்டும் என்றும் பிரதம் மந்திரி மன்மோகன் சிங் ஜனாதிபதி ராஜபக்சவுக்கு அறிவித்தார். அது, பிரதம மந்திரி மன்மோகன் சிங் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் சந்திப்பொன்றை நடத்தியதன் பின்னர், விடுத்த ஓர் அறிக்கையாகும்.

•இவ்வாக்குறுதி பின்னர் 2011 மே மாதம் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் கௌரவ ஜீ. எல்.பீரிஸ் புதுடில்லிக்கு விஜயம் செய்தபோது மீண்டும் அளிக்கப்பட்டது. இந்திய வெளியுறவு அமைச்சருடன் இணைந்து விடுக்கப்பட்ட ஒரு கூட்டறிக்கை பின்வருமாறு குறிப்பிட்டது:

“……இலங்கையின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையே நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளில் துரிதமானதும் உறுதியானதுமான முன்னேற்றத்தை உறுதிப்படுத்துவதற்கான தனது அரசாங்கத்தின் கடப்பாட்டை உறுதிப்படுத்தினார். 13 ஆவது திருத்தத்தின் மீது கட்டியெழுப்பப்படும் ஓர் அதிகாரப் பரவலாக்கல் பொதியானது அத்தகைய நல்லிணக்கத்திற்குத் தேவையான நிலைமைகளை உருவாக்குவதற்கு பங்களிப்புச் செய்யும்….”

• இவ் வாக்குறுதி 2012 ஜனவரி மாதம் கொழும்பில் மீண்டும் ஒரு முறை வலியுறுத்தப்பட்டது. இலங்கைக்கு வருகை தந்த இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் கௌரவ எஸ். எம். கிருஸ்ணா ஜனாதிபதி ராஜபக்சவைச் சந்தித்த பின்னர், அமைச்சர் ஜீ. எல். பீரிசுடன் இணைந்து பத்திரிகையாளர் மாநாடொன்றில் பேசியபோது பின்வருமாறு குறிப்பிட்டார்:

“அர்த்தமுள்ள அதிகாரப் பரவலாக்கத்தை எய்தும் வண்ணம் இலங்கை அரசியலமைப்பிற்கான 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுலாக்குதல் மற்றும் அதன் மீது மேலும் கட்டியெழுப்புதல் ஆகியவற்றை நோக்கி நகர்வதற்கான தனது கடப்பாட்டை பல சந்தர்ப்பங்களில் இலங்கை அரசாங்கம் எமக்குத் தெரிவித்துள்ளது. பேச்சுவார்த்தை நடைமுறைக்கான துரிதமானதும் ஆக்கபூர்வமானதுமான அணுகுமுறையொன்றை நாம் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றோம்”

• ஐரோப்பிய ஒன்றியம், நோர்வே, ஜப்பான் மற்றும் ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகள் அடங்கிய இணைத் தலைமை நாடுகள் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்துவதில் இலங்கை அரசாங்கத்திற்கு உதவியளித்தன. தமிழீழ விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதற்கும் அவை இலங்கைக்கு உதவின. 2006 மே மாதம் 30ஆம் திகதி இலங்கையில் அரசியல் தீர்வு பற்றி இணைத் தலைமை நாடுகள் பின்வருமாறு குறிப்பிட்டன.

“முஸ்லிம்கள் அடங்கலாக அனைத்து இலங்கையர்களினதும் உரிமைகளை மேம்படுத்தும் புதிய ஆட்சி முறைமையொன்றைக் கொண்டுவருவதற்காக தீவிரமான அரசியல் மாற்றங்களை செய்வதற்கு தான் தயாராக உள்ளதென்பதை அது (இலங்கை அரசாங்கம்) வெளிக்காட்ட வேண்டும். அத்தகைய முயற்சிகளுக்கு சர்வதேச சமூகம் உறுதுணை புரியும். அத்தகைய நடவடிக்கைகளை எடுக்கத் தவறுவது சர்வதேச ஆதரவைக் குறைத்துவிடும்.

இணைத்தலைமை நாடுகள் மேலும் கூறின:
“இலங்கையின் தமிழ் மற்றும் முஸ்;லிம் மக்களுக்கு போதுமானளவில் கவனஞ் செலுத்தித் தீர்க்கப்படாத நியாயமானதும் பெருமளவிலானதுமான பிரச்சினைகள் உண்டு”

• தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் திரு. ரிச்சட் பௌச்சர் 2006 ஜூன் 1 ஆம் திகதி இலங்கைக்கான தனது விஜயமொன்றின்போது பின்வருமாறு கூறினார்:

“ஓர் எதிர்கால இலங்கையின் தமிழ் மற்றும் முஸ்;லிம் மக்களுக்கு அவர்தம் நியாயமான பிரச்சினைகள் தீர்க்கப்படுவதும் அவர்களது பதுகாப்பு உறுதிப்படுத்தப்படுவதுமான சிறந்த தொலைநோக்கொன்றை அரசாங்கம் வழங்கவேண்டும் என்றும் நாம் கருதுகின்றோம். அதி கூடிய அதிகாரப் பரவலாக்கம் பற்றி ஜனாதிபதி ராஜபக்ஷ பேசியுள்ளார்;; ஒரு சமஸ்டி வரையறைக்குள் உள்ளக சுயநிர்ணயம் தொடர்பாக முன்னைய பேச்சுவார்த்தைகள் இணக்கங் கண்டுள்ளன. எனினும், அது வெளிப்படுத்தப்பட்டுள்ளது, ஒரே இலங்கை நாட்டிற்குள் தமது சொந்த வாழ்க்கை மற்றும் தலைவிதி ஆகியவற்றின்மீது தாமே கட்டுப்பாட்டைக் கொண்டிருப்போம் என்ற நம்பிக்கையை வடக்குக் கிழக்கில் வாழும் பலருக்கு அது வழங்க முடியும்.’ அவர் மேலும் கூறினார், ‘ தமிழ்ப்; புலிகள் பயன்படுத்திய வழிமுறையை நாம் நிராகரித்தாலும், தமிழ் சமூகத்தினால் எழுப்பப்படும் பல நியாயபூர்வமான பிரச்சினைகள் உண்டு. தாம் வரலாறுகண்டு வாழ்ந்துவரும் பகுதிகளில், தமது தாயகத்தில் தமது சொந்த வாழ்க்கையைத் தாமே கட்டுப்படுத்தக்கூடியதாகவும் தமது சொந்த தலைவிதியை தாமே ஆளக்கூடியதாகவும் இருப்பதற்கான மிகவும் நியாயபூர்வமான விருப்பம் அவர்களுக்கு உண்டு”

• இந்தியாவிற்கான உங்களுடைய அரசமுறைப் பயணத்தின்போது, 2019 நொவெம்பர 29 ஆம் திகதி பிரதம மந்திரி ஸ்ரீ நரேந்திர மோடி பின்வருமாறு கூறினார்:
“இலங்கையில் நல்லிணக்கம் தொடர்பாக நாம் வெளிப்படையாகக் கருத்துக்களை பறிமாறிக்கொண்டோம். இன அமைதி தொடர்பான தனது அனைவரையும் அரவணைக்கும் அரசியல் கண்ணோட்டம் பற்றி ஜனாதிபதி ராஜபக்ஷ என்னிடம் கூறினார். சமத்துவம், நீதி, சமாதானம் மற்றும் கௌரவம் ஆகியவற்றிற்கான தமிழ் மக்களின் வேணவாக்களை பூர்த்தி செய்யுமுகமாக நல்லிணக்க நடைமுறையை இலங்கை அரசாங்கம் தொடர்ந்து முன்கொண்டு செல்லுமென நான் உறுதியாக நம்புகிறேன். அது 13 வது திருத்தத்தை அமுல்படுத்துவதையும் உள்ளடக்கும். வடக்குக் கிழக்கு அடங்கலாக இலங்கை முழுவதும் அபிவிருத்திக்கான நம்பிக்கைக்குரிய ஒரு பங்காளராக இந்தியா விளங்கும்”

ஒரு புதிய அரசியலமைப்பு தொடர்பான பல முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக பல்வேறு இலங்கை அரசாங்கங்கள், தலைவர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் ஆகியோரினால் அடையப்பெற்ற கருத்தொருமைப்பாடு பற்றி தங்களுக்கு அறியத்தருமுகமாகவே நாம் மேற்காணும் விடயங்களை குறிப்பிட்டுள்ளோம். இந்தியா மற்றும் இதில் சம்பந்தப்பட்ட சர்வதேச சமூகம் ஆகிய இரண்டும் தமது கருத்துக்களை தெளிவாகக் குறிப்பிட்டுள்ளன.

மேலும் தாமதத்திற்கு இடமில்லை என்பதை நாம் மிகுந்த மரியாதையோடு குறிப்பிடுகின்றோம். இந் நடைமுறை தொடர வேண்டுமென்றும் ஒரு புதிய அரசியலமைப்பு தாமதமின்றி இயற்றப்படவேண்டும் என்றும் நாம் வினயமாக கேட்டுக்கொள்கிறோம்.

எமது நாட்டின் பிரசைகள் அனைவரும் சமத்துவத்தோடும், நீதியோடு;ம், சுய கௌரவத்தோடும் கண்ணியத்தோடும் நிம்மதியாக வாழ்வதற்கு உதவும் அனைவரையும் அரவணைக்கும், அதி கூடிய கருத்தொருமைப்பாட்டின் அடிப்படையிலான ஓர் அரசிலமைப்பிற்கு எமது தரப்பில் நாம் எமது முழுமையான ஆதரவைத் தொடர்ந்து வழங்குவோம்.

தேசிய பிரச்சினையை தீர்த்து வைத்தல் மற்றும் புதிய அரசியலமைப்பொன்றைத் தயாரித்தல் தொடர்பாக பெருமளவு முன்னேற்றம் காணப்பட்டிருப்பதால், தேசிய பிரச்சினை மற்றும் புதிய அரசியலமைப்பொன்றைத் தயாரித்தல் தொடர்பாக இறுதிநிலை அடையப்பெற வேண்டும் என்று நாம் கருத்;துரைக்கின்றோம். ஏனைய விடயங்கள் பின்னர் விவாதிக்கப்படலாம். அரசியலமைப்பைத் தயாரிக்கும் நடைமுறை நிறைவுற்ற பின்னர் ஏனைய விடயங்களை தீர்த்து வைப்பது எளிதானதாகவிருக்கும் என்று நாம் கருதுகின்றோம்.

யுத்தம் முடிவுற்றதன் பின்னர், கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் மற்றும் நல்லிணக்க நடைமுறை ஆகியவை தொடர்பாக பரிந்துரைகள் செய்வதற்காக மூத்த சிவில் சமூக அறிஞர்களைக் கொண்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்;லிணக்க ஆணைக்குழுவை(டுடுசுஊ) அரசாங்கம் நியமித்தது. இவ்வாணைக்குழு 2011 நொவெம்பர் மாதம் தனது அறிக்கையில் குறிப்பிட்டது:

“அதிகாரப் பரவலாக்கம் மிக முக்கியமானதாக இருக்கவேண்டும் எனபதற்கும் அரசாங்கம் ஓர் அரசியல் தீர்விற்கு தலைமைத்துவம் வழங்கவேண்டும் என்பதற்கும் வசதியேற்படுத்தும் ஓர் அரசியல் கருத்தொருமைப்பாட்டை அடைதல்”

“அதிகாரப் பரவலாக்கம் முக்கியமாக நாட்டு மக்கள் மத்தியில் கூடிய அமைதியையும் ஒற்றுமையையும் மேம்படுத்தவேண்டுமேயன்றி, அமைதியின்மையையும் ஒற்றுமையின்மையையும் அல்ல. நமது அரும்பெரும் பன்மைத்துவத்தைப் போற்றிப் பாதுகாக்கும் அதேவேளை, ;ஒரு பொதுவான தனித்துவத்தின் கீழ் ஒன்றே குலம் என்ற இந்த நிலையை மேம்படுத்துவதே எந்த வடிவத்திலான அதிகாரப் பரவலாக்கத்தினதும் முதன்மையான நோக்கமாக அமைதல் வேண்டும்”

இன்னொரு சிவில் சமூக அறிஞர்கள் குழுவாகிய ‘வெள்ளிக்கிழமை மன்றமும்’ அதிகாரப் பரவலாக்கம் மற்றும் அரசியல் தீர்வு ஆகியவற்றிற்கு ஆதரவாகப் பரிந்துரைகள் செய்துள்ளது,

இலங்கை அரசாங்கத்தினால் இணங்கிக்கொள்ளப்பட்டதும் ஏற்றுக்கொள்ளப்பட்டதுமான ஒரு சில சர்வதேச ஆவணங்களை குறிப்பிடுவதும் இங்கு பயனுள்ளதாகவும் அவசியமானதாகவும் அமையும். சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாயத்தின் உறுப்புரை 1 (1) மற்றும் (2) பொருளாதார சமூக மற்றும் கலாசார உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாயம். அது பின்வருமாறு குறிப்பிடுகிறது:

“சுய நிர்ணயத்திற்கான உரிமை அனைத்து மக்களுக்கும் உண்டு. அந்த உரிமையினால் அவர்கள் தமது அரசியல் அந்தஸ்தை சுதந்திரமாக தீர்மானிப்பதோடு, தமது பொருளாதார சமூக மற்றும் கலாசார அபிவிருத்தியை சுதந்திரமாக பின்பற்றுவார்கள்”

இவ்வாறு செய்வதற்கான தனது கடப்பாட்டை இலங்கை அரசாங்கம் அங்கீகரித்திருந்தபோதும், குறைந்தது 1957 ஆம் ஆண்டிலிருந்து கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக இக்கடப்பாடுகளை அமுல்படுத்த அது தவறிவிட்டது. அத்தகைய தொடர்ச்சியான செயல்தவிர்ப்பு சர்வதேச சட்டத்தின்கீழ் வேறு விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

இலங்கை அரசாங்கத்தினால் இணங்கிக்கொள்ளப்பட்டதும் ஏற்றுக்கொள்ளப்பட்டதுமான பிறிதொரு சர்வதேச ஆவணத்தையும் நாம் இங்கு குறிப்பிடுகிறோம்: சர்வதேச மனித உரிமைகள் சாசனத்தின் உறுப்புரை 21(3). அது குறிப்பிடுகிறது:

“மக்களின் விருப்பமே ஆட்சி அதிகாரத்தின் அடிப்படையாக அமைதல் வேண்டும். இவ்விருப்பமானது, சர்வஜன மற்றும் சமத்துவமான வாக்குரிமையினாலும், இரகசிய வாக்கு அல்லது அதற்குச் சமமான சுதந்திர வாக்களிப்பு நடைமுறையினாலும் நடத்தப்படவேண்டிய காலாகாலத்திலானதும் நேர்மையானதுமான தேர்தல்களின் மூலம் வெளிப்படுத்தப்பட வேண்டும்”

1956 ஆம் ஆண்டிலிருந்து வடக்குக் கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் ஒவ்வொரு நிறுவனத்திற்குமான ஒவ்வொரு தேர்தலிலும் ஆட்சி முறைமையில் மாற்றத்திற்காக வாக்களித்துள்ளனர் என்பதோடு, அனைத்து மட்டங்களிலும் பயன்மிக்க ஆட்சி அதிகாரப் பகிர்வை வேண்டி நின்றுள்ளனர்.; ஆட்சி அதிகாரத்;தின் அடிப்படையாக அமைந்திருக்கும் மக்களின் விருப்பம் இலங்கை அரசாங்கத்தினால் இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளது; அவர்கள் இலங்கைத் தமிழ் மக்களை ஒருதலைப்பட்சமாகவே ஆண்டு வந்துள்ளனர். 1978 ஆம் ஆண்டின் இரண்டாவது குடியரசு அரசியலமைப்பிற்கு, 1978 ஆம் ஆண்டு அது நிறைவேற்றப்பட்டதிலிருந்தே நாடு தொடர்ச்சியாக எதிர்ப்பு வெளியிட்டது என்பதும் சுட்டிக் காட்டப்படவேண்டும். 1994 ஆம் ஆண்டிலிருந்து கடந்த 25 வருடங்களுக்கு மேலாக ஒவ்வொரு தேசியத் தேர்தலிலும் இரண்டாவது குடியரசு அரசியலமைப்பு மக்களினால் நிரகரிக்கப்பட்டுள்ளது; விளைவாக, நாடு தற்போது ஆட்சி அதிகாரத்தின் அடிப்படையாக மக்களின் விருப்பத்தை அல்லது சம்மதத்தக் கொண்டிராத ஓர் அரசியலமைப்பின் கீழ் ஆளப்படுகிறது. இது ஆட்சியின் நியாயபூர்வத்தன்மை தொடர்பான பாரதூரமான கேள்விகளை எழுப்புகிறது.

மேற்கூறப்பட்ட அனைத்துக் காரணங்களினாலும் புதிய அரசியலமைப்பொன்று தாமதமின்றி இயற்றப்பட வேண்டும் என்பது கட்டாயமாகும். அனைத்து மட்டங்களிலும் ஆட்சி இன்னும் கூடிய ஜனநாயக பூர்வமானதாகவும், வெளிப்படையானதாகவும், பொறுப்புக்கூறத் தக்கதாகவும,; ஊழல் அற்றதாகவும் அமையும் அதேவேளை, அது முதலீட்டை ஊக்குவித்து, பொருளாதாரம் மீட்சிபெறுவதற்கு உதவவும் வேண்டும். அதிகாரம் ஓரிடத்தில் செறிந்து கிடப்பதுதான் நாட்டிலும் எல்லா அரசாங்கங்களிலும் ஊழல் மலிவதற்கு பிரதான காரணமாக இருந்துள்ளது.

இக்காரணங்கள் அனைத்தும் அதி கூடிய கருத்தொருமைப்பாட்டின் அடிப்படையில் அமைந்ததும் அனைவரையும் அரவணைக்கும் தன்மை கொண்டதுமான ஒரு புதிய அரசியலமைப்பு இயன்றவரை விரைவாக இயற்றப்பட வேண்டும் என்பதை கட்டாயமானதாக்குகின்றன.

உங்கள் உண்மையுள்ள,

ஆர். சம்பந்தன் பா.உ

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர்
இலங்கைத் தமிழரசுக் கட்சிப் பாராளுமன்றக் குழுத் தலைவர்

2021 ஜூன் 16 ஆம் திகதி மாலை 4 மணிக்கு சனாதிபதி செயலகத்தில் மேதகு சனாதிபதியுடனான மாநாட்டில் கலந்து கொள்ளும் ஆட்களின் நிரல்

கௌரவ ஆர் சம்பந்தன்
மாவை எஸ் சேனாதிராஜா
கௌரவ செல்வம் அடைக்கலநாதன்
கௌரவ த. சித்தார்த்தன்
கௌரவ எம்.ஏ.சுமந்திரன்
ரகு பாலச்சந்திரன்

ஆர். சம்பந்தன் பா.உ
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர்
இலங்கைத் தமிழரசுக் கட்சிப் பாராளுமன்றக் குழுத் தலைவர்




About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply