பௌத்தம்

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி – 150)

நவீனன்

அதிகரித்த இந்திய அழுத்தம்  

1984 ஒக்டோபர் இறுதிவாரத்தில், தலைநகர் கொழும்பில் நடந்த குண்டுத்தாக்குதல்கள், இலங்கை அரசாங்கத்தையும் ஜனாதிபதி ஜே.ஆரையும் கடுமையான அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருந்தது.  

தன்னுடைய இராணுவவழித் தீர்வுத் திட்டத்துக்கு, இந்தியா கடும் முட்டுக்கட்டையாக இருக்கும் என்று ஜே.ஆர், மீண்டும் உணர்ந்த தருணம் இது. 

இதேவேளை, 1984 ஒக்டோபர் 27ஆம் திகதி, அமெரிக்க துணை இராஜாங்கச்  செயலாளர் றிச்சட் மேர்ஃபி, இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொண்டு, ஜனாதிபதி ஜே.ஆரைச் சந்தித்திருந்தார்.   

சந்திப்பைத் தொடர்ந்து, ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், “இலங்கை இனப்பிரச்சினை, அரசியல் ரீதியில்தான் தீர்க்கப்பட வேண்டும்; ஆனால், அது இலங்கை அரசாங்கத்தால்தான் தீர்க்கப்பட வேண்டுமேயன்றி, அந்நியர்களால் அல்ல” என்று குறிப்பிட்டிருந்தார். அவர் அங்கு, ‘அந்நியர்’ என்று சுட்டியது, இந்தியாவைத் தான் என்பது வௌ்ளிடைமலை. 

ஜே.ஆரைச் சமாதானப்படுத்த, இத்தகைய கருத்தை அமெரிக்காவின் துணை இராஜாங்கச் செயலாளர் தெரிவித்திருந்தாலும், இலங்கை விவகாரத்தில், இந்தியாவுடன் நேரடியாக முரண்பட, அமெரிக்கா ஒரு போதும் தயாராக இருக்கவில்லை என்பதையும் நாம் அவதானிக்கக்கூடியதாக இருந்தது.   

இலங்கைக்கு நேரடியாகவும், வௌிப்படையாகவும் அமெரிக்கா எந்த இராணுவ உதவியையும் செய்யவில்லை. இதுபற்றிக் கருத்துரைக்கும் கே.எம்.டி.சில்வா, ‘இந்திய இராஜதந்திர அழுத்தமானது, மேற்கு நாடுகள் இலங்கைக்கு இராணுவ ரீதியில் உதவுவதைத் தடைசெய்தது. ஆனால், இந்திய அழுத்தத்துக்கு உட்படாத பாகிஸ்தான், சீனா மற்றும் இஸ்‌ரேல் ஆகிய நாடுகளிடமிருந்து இலங்கை, தனக்கு தேவையான இராணுவ உதவிகளைப் பெற்றுக்கொண்டது’ என்று அவர் பதிவு செய்கிறார்.   
இதில், இஸ்‌ரேல், பாகிஸ்தான் ஆகிய நாடுகள் செய்த உதவிகளுக்குப் பின்னால் இருந்தது, அமெரிக்காதான் என்று சில விமர்சகர்கள் கருதுகிறார்கள். 

இலங்கைப் பிரச்சினையையும் ‘பனிப்போரின்’ ஓர் அங்கமாக, அக்ஷய் மிஷ்ரா விவரிக்கிறார். அன்றைய, சோவியத் சார்பு இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் நடந்த பனிப்போரின் முக்கிய களம், இலங்கைத் தீவு என்று அவர் விவரிக்கிறார். 

இந்த விவரணத்தின் ஏற்புடைமை பற்றிய வாதத்தைவிட, இலங்கையின் அரசியலில் சர்வதேச நாடுகளின், வல்லரசுகளின் பங்கு எவ்வளவு தூரம் இருந்தது என்பதை உணர்தல்தான் இங்கு முக்கியமானது.  

 திரைகளுக்கு பின்னால் நடக்கும், இந்த இராஜதந்திர மற்றும் பூகோள அரசியலைப் புரிந்து கொள்ளாமல், இலங்கை அரசியலைப் புரிந்துகொள்ள முடியாது. 

இலங்கையின் 30 வருட கால யுத்தம் என்பது, வெறுமனே, இலங்கை அரசாங்கத்துக்கும், தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களுக்கும் இடையில் நடந்தது என்ற புரிதல் மேலோட்டமானது. அது மட்டுமல்ல, அர்த்தமற்றதும் கூட. 

இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு எவ்வாறு வடிவமைக்கப்பட்டது; தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் எவ்வாறு உருவாகின; அவற்றின் அரசியல் எவ்வாறு வடிவமைக்கப்பட்டது. 

இவை அனைத்தின் பின்னணியிலும் இருந்தவர்கள் யார்? பின்னணியிலிருந்த அரசியல் என்ன? என்பவற்றைப் புரிந்துகொள்ளாது, இலங்கையின் இனப்பிரச்சினையையும் யுத்தத்தையும் அரசியலையும் நாம் புரிந்துகொள்ள முடியாது.  

இந்திராவின் அகால மரணம்  

ஜே.ஆரின் ‘இராணு ரீதியான அணுகுமுறை’ என்ற திட்டத்துக்கு, இந்தியா சிம்மசொப்பனமாக இருந்தது.

இலங்கைக்கு விஜயம் செய்த, அமெரிக்காவின் அன்றைய ஜனாதிபதி டொனல்ட் றேகனின் விசேட தூதுவர் வேர்னன் வோல்டேர்ஸ், “இலங்கை மீது நேரடி இராணுவ நடவடிக்கையை இந்தியா முன்னெடுக்கக்கூடும்” என்ற எச்சரிக்கையை, ஜனாதிபதி ஜே.ஆருக்குத் தெரிவித்திருந்தார். 

மேலும், இந்தியாவுக்கு விஜயம் செய்த அவர், “இலங்கை மீது நேரடி இராணுவ நடவடிக்கையை, இந்தியா மேற்கொள்ளக்கூடாது” என்ற கோரிக்கையையும் முன்வைத்திருந்தார். 

ஆனால், அன்றைய இந்தியா, அமெரிக்க சார்புடைய இந்தியாவாக இருக்கவில்லை. ஆகவே, இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவது, அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை என்று வோல்டேர்ஸ் கூறியதையும் கே.எம்.டி சில்வா பதிவுசெய்கிறார். 

இந்தச் சிக்கல் நிறைந்த சூழலில்தான், 1984 ஒக்டோபர் 31ஆம் திகதி, இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி, அவரது மெய்ப்பாதுகாவலர்களால் படுகொலை செய்யப்படும் துயரச்  சம்பவம் இடம்பெற்றது. 

இந்த அதிர்ச்சி மிக்க சம்பவம், ஜே.ஆர் அரசாங்கத்துக்குத் துயரத்திலும் ஓர் ஆசிர்வாதமாக அமைந்தது. தொடர்ந்த இந்திய அழுத்தத்திலிருந்து, ஜே.ஆருக்கு மூச்சுவிட, ஒரு சிறிய இடைவேளை கிடைத்ததைப் போல, இந்தச் சம்பவம் அமைந்தது. 

மேலும், ஜே.ஆர் – இந்திரா ஆகியோருக்கு இடையிலான உறவு, மிகப் பலவீனமானதாகவும் பரஸ்பர ஐயமும், நம்பிக்கையீனமும் கொண்டதாக அமைந்திருந்தது.

இந்த நிலையில் இனி மாற்றம் வரும் என்று ஜே.ஆர் எதிர்பார்த்தார். குறிப்பாக, அடுத்ததாக ஆட்சிக் கட்டில் ஏறிய, இந்திராவின் மகன் ராஜீவ் காந்தி, இந்திரா போலல்லாது, நேரு போல, இலங்கை விவகாரத்தைக் கையாள்வார் என்று, ஜே.ஆர் எதிர்பார்த்ததாக கே.எம்.டி சில்வா குறிப்பிடுகிறார்.   

சோகத்தில் தமிழர்கள்  

இந்திராவின் அகால மரணம், இலங்கைத் தமிழ்த் தலைமைகளை, மிகுந்த அதிர்ச்சிக்குள் தள்ளியிருந்தது. “தமிழர்களின் இனப்படுகொலையைத் தடுக்கும் ஒரே தடுப்பரணாக இருந்தவர், இந்திரா காந்தி” என்று தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் மிகுந்த சோகத்துடன் கருத்துரைத்தார்.   

எதிர்காலம் பற்றி, நிச்சயமற்றிருந்த தமிழர்கள், இந்திரா காந்தியின் படுகொலையைத் தொடர்ந்து, அச்சத்துடன் இருப்பதாக அவர் தெரிவித்தார். ராஜீவ் காந்திக்கு, அமிர்தலிங்கம் அனுப்பிய தந்தியில், ‘இலங்கை மக்கள், தமது தாயை இழந்துவிட்டார்கள்’ என்று குறிப்பிட்டிருந்தார்.  

image_05a14feedc.jpg

 ராஜீவ் காந்திக்கு, விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனும் துயர்பகிர்வுக் கடிதமொன்றை அனுப்பி இருந்தார். 

அதில், இந்திரா காந்தியை ‘அன்னை’ என்று விளித்திருந்தவர், இந்திரா காந்தியின் கொலையை, மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றமென்றும் அதைத் தாம் கண்டிப்பதாகவும் தெரிவித்திருந்தார்.  

 மேலும், அன்னை இந்திரா, அடக்குமுறைக்குள்ளான தமிழீழ மக்கள் மீது இரக்கமும், புரிந்துணர்வும் கொண்டிருந்ததுடன், அவர்களுக்கு உதவியும் செய்ததாகவும் குறிப்பிட்டதுடன், அவரது தனிப்பட்ட அக்கறை இல்லாவிட்டால், எமது சமூகம் துடைத்தெறியப்பட்டிருக்கும் என்றும், தமிழ் மக்கள் எப்போதும் இந்திரா காந்தியை அன்புடனும், மரியாதையுடனும், தீராத நன்றியுடனும் நினைவுகூர்வார்கள் என்றும் தெரிவித்திருந்தார்.  

 இந்திரா காந்தியின் மறைவின் சோகம், வெறுமனே ஜனநாயகத் தமிழ்த் தலைமைகளாலும், தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களாலும் மட்டும் வௌிப்படுத்தப்படவில்லை; மாறாகத் தமிழர் தாயகமே, இந்திராவின் அகாலமரணச் செய்தியறிந்து சோகமயமாகி இருந்தது. 

தமிழர் தாயகமெங்கும், வீடுகள் உட்படக் கறுப்புக் கொடிகள் பறந்தன; கடைகள், பாடசாலைகள் மூடப்பட்டன; போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்தது.   

மறுபுறத்தில், இந்திரா காந்தியின் அகால மரணம், சிங்கள-பௌத்த தேசியவாத அரசியல் தலைமைகளுக்கு மகிழ்ச்சியைத் தந்ததாக, சில விமர்சகர்கள் பதிவு செய்கிறார்கள்.   

வடக்கில், இலங்கை இராணுவத்தினர் சிலர், துக்கம் அனுஷ்டித்த தமிழ் மக்களை நோக்கி, “அம்மா எங்கே?”, “அம்மா எங்கே?” என்று, நக்கலாகக் கேட்டதாகவும் சிலர் பதிவு செய்கிறார்கள்.   

இந்திரா காந்தியின் மரணம், எத்தகைய மகிழ்ச்சியைத் தந்திருக்குமென்பது, இந்திரா காந்தி என்ற ஆளுமையின் கீழான, இந்தியா என்ற பிராந்திய வல்லரசின் மீதான அச்சமும், அதிருப்தியும் எவ்வளவு தூரம் இலங்கை அரசியலில் ஊடுருவி இருந்தது என்பதை எடுத்துக் காட்டுவதாக அமைகிறது.   

தனிப்பட்ட உணர்வுகள் எவ்வாறு அமைந்திருந்தாலும், இந்திரா காந்தியின் இறுதிச் சடங்குகள் இடம்பெற்ற 1984 நவம்பர் மூன்றாம் திகதியை, இலங்கை அரசாங்கம் துக்கதினமாக அறிவித்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.  

இந்திரா காந்தியின் மரணச் செய்தி வௌிவந்த நாள் முதல், அமைதி காத்த தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள், இந்திரா காந்தியின் இறுதிச்சடங்கு நடைபெற்ற நவம்பர் மூன்றாம் திகதி, ஏறத்தாழ அரைமணிக்கொருமுறை, வடக்கில் குண்டுகளை வெடிக்கச் செய்தன. 

‘இது மரியாதையின் முகமாக நடத்தப்பட்டது’ என்று, ரீ.சபாரட்ணம் தன்னுடைய நூலில் கருத்துரைக்கிறார்.  

புதியதோர் ஆரம்பம்  

இந்திராவின் மரணம், ஜே.ஆருக்கு மூச்சுவிட, ஓர் இடைவௌியை மட்டுமல்ல, புதிய தலைமையுடனான, புதிய உறவொன்றைக் கட்டியெழுப்பக்கூடிய வாய்ப்பையும் உருவாக்கி இருந்தது.   

இந்திராவின் அகால மறைவைத் தொடர்ந்து, இந்திரா காந்தியின் மகன் ராஜீவ் காந்தி, பிரதமராகப் பதவியேற்றிருந்தார். ராஜீவின் அரசியல் பிரவேசம் கூட, சந்தர்ப்ப சூழலால் அமைந்தது என்பதுதான் பொது அபிப்பிராயம்.   

இந்திராவின் அரசியல் வாரிசாகக் கருதப்பட்டவர் ராஜீவின் தம்பியான சஞ்சய் காந்தியே. 
விமானியாகப் பயிற்சி பெற்றிருந்த ராஜீவ், இந்திய விமானசேவையில் விமானியாகப் பணியாற்றிக் கொண்டிருந்ததுடன், 1980 வரை அரசியலிலிருந்து விலகியே இருந்தார்.   

சஞ்சய் காந்திதான், நேரு-காந்தி குடும்பத்தின் அடுத்த அரசியல் வாரிசாகவும் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து, அவரது தாயார் இந்திரா காந்தியுடன், அரசியல் பயணத்தை மேற்கொண்டிருந்தார்.  
 1980 ஜூன் மாதத்தில், விமான சாகச முயற்சியொன்றில் ஏற்பட்ட விபத்தில், சஞ்சய் காந்தி உயிரிழந்தார். 

அதைத் தொடர்ந்து, இந்திராவின் வற்புறுத்தலின் பெயரில், ராஜீவ் காந்தி 1980இன் பிற்பகுதியில் அரசியலில் நுழைந்தார்.  

 1984 நவம்பரில் ராஜீவ் காந்தி, இந்தியப் பிரதமராகப் பதவியேற்ற போது, அவரது நேரடி அரசியல் அனுபவம் என்பது ஏறத்தாழ நான்கு வருடங்களேயாகும். அவர் அரசியலுக்கு அந்நியர் இல்லை.   

ஆனால், அவரது வாழ்வின் பெரும்பகுதி, அரசியலிலிருந்து அந்நியப்பட்டே இருந்ததால், அவரது நேரடி அரசியல் கள அனுபவம் என்பது, மிகக் குறைவானது. ஜே.ஆர் இதனை ஒரு நல்ல சந்தர்ப்பமாகப் பார்த்தார்.   

இந்திராவுடன் தனக்கு உருவாக்க முடியாதிருந்த நல்ல உறவை, ராஜீவுடன் உருவாக்குவதற்கான நல்லதோர் ஆரம்பமாக, இந்திரா காந்தியின் இறுதிச்சடங்கை அவர் பயன்படுத்தினார்.  

 இந்திரா காந்தியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள டெல்லி சென்ற ஜே.ஆர், ராஜீவுடன் மிகச் சுருக்கமான சந்திப்பொன்றை நடத்தியிருந்ததோடு, அந்தச் சந்திப்பில், தனது ஆதங்கத்தைப் பதிவு செய்திருந்தார்.   

இந்தியாவானது, தமிழ் மக்களுக்குச் சார்பாக நடந்துகொள்வதாகவே இலங்கை மக்கள் கருதுகிறார்கள் என்றும், அதற்காகவே தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் கோரிக்கையை ஏற்றுக்கொள்வதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு இந்தியா அழுத்தம் கொடுப்பதாக இலங்கை மக்கள் உணர்கிறார்கள் என்றும் ராஜிவிடம் எடுத்துரைத்த ஜே.ஆர். இந்தியாவின் செல்வாக்கை தாம் விரும்பும் அதேவேளை, இலங்கை தொடர்பில் இந்தியா புதியதோர் அணுகுமுறையை முன்னெடுக்க வேண்டும் என்று வேண்டிக் கேட்டுக் கொண்டிருந்தார்.   

இதற்கு ராஜீவிடமிருந்து சாதகமானதொரு பதில் கிடைத்ததானது, ஜே.ஆருக்கு நிறைந்த நம்பிக்கையைத் தந்தது.   

(அடுத்த திங்கட்கிழமை தொடரும்)    

Posted July 9, 2018

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி – 151)

கிழட்டு நரி’ தந்திரம்  

“மெத்தப் பழையதோர் இல்லம்,   
நீ நுழைந்ததும் தரை மட்டமானது.   
உந்தன் நரித்தந்திரம் கொண்டு   
பல நிலங்களை ஆக்கிரமித்துக் கொண்டாய்.   
பலநூறு பொறிகளிலுமிருந்தும்   
நீ தப்பித்துக் கொண்டாய்,   
ஒரு கிழட்டு நரியைப் போல!”  

செய்யத் அஹ்மட் அதிப் பிஷாவாரி என்ற கவிஞன், பாரசீக மொழியில், பிரித்தானிய ஏகாதிபத்தியத்தைச் சுட்டி எழுதிய கவிதை இது. இன்றும் ஈரானியர்கள், பிரித்தானியாவைக் ‘கிழட்டு நரி’ என்று வர்ணிக்கிறார்கள்.  

 ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனவையும் ‘கிழட்டு நரி’ என்று, பொதுவௌியில் பலரும் விளித்திருக்கிறார்கள். சிலர் ‘ஆசியாவின் நரி’ என்றும், சிலர் ‘இருபதாம் நூற்றாண்டின் நரி’ என்றும் விளித்திருக்கிறார்கள். ‘நரி’ என்பதன் முன்னுள்ள அடைமொழி மாறுபட்டாலும், ‘நரி’ என்பது மட்டும் ஜே.ஆரோடு தொடர்ந்து ஒட்டிக் கொண்டிருந்தது.

இந்தச் சொற்பயன்பாடானது, வௌிப்பார்வையில் எதிர்மறையான தோற்றத்தைக் கொடுப்பினும், அதிகார அரசியல் பார்வையில், இதை மிகப்பெரியதொரு புகழாரமாகவே கொள்ளலாம். 

‘சிங்கத்தால் தன்னைப் பொறிகளிலிருந்து காப்பாற்றிக் கொள்ள முடியாது. நரியால், ஓநாயிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முடியாது. ஆகவே ஒருவன் பொறிகளை அடையாளம் காண நரியாகவும், ஓநாய்களைப் பயமுறுத்த, சிங்கமாகவும் இருக்க வேண்டும்’ என்று, தனது ‘இளவரசன்’ என்ற நூலில், நிக்கோலோ மக்கியாவலி எழுதுகிறார்.   

1970ஆம் ஆண்டுத் தேர்தலில், டட்லி சேனாநாயக்கவின் தலைமையின் கீழ், வெறும் 17 ஆசனங்களை மட்டுமே பெற்றுப் படுதோல்வி அடைந்திருந்த ஐக்கிய தேசியக் கட்சியை, 1977 தேர்தலில் 5/6 என்ற வரலாறு காணாத, பெரும்பான்மைப் பலத்தை வென்றெடுக்கச் செய்ததில், ஜே.ஆரின் பங்கு மறுக்கப்பட முடியாதது.  

 அதேபோல, இரண்டாவது குடியரசு அரசமைப்பின் அறிமுகமாகட்டும், அதனூடாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையின் அறிமுகமாகட்டும், மீண்டும் நாடாளுமன்றத் தேர்தலை நடத்தாது, சர்வஜன வாக்கெடுப்பினூடாக 5/6 பெரும்பான்மைப் பலத்தை கொண்டிருந்த நாடாளுமன்றத்தின் ஆயுளை நீடித்ததாகட்டும், இனப்பிரச்சினை விவகாரத்தில் நடந்துகொண்ட விதமாகட்டும், தன் முன்னாலிருந்த பொறிகளை ஜே.ஆர், இதுவரை நேர்வழியிலோ, சூழ்ச்சியாலோ வெற்றிகரமாகக் கடந்துகொண்டிருந்தார்.  

 ஆனால், இதுவரை அவரால் தாண்ட முடியாத பொறியாக இருந்தது இந்திராவும் இந்தியாவும். இந்திரா காந்தியின் அகால மரணம், அந்தப் பொறியைத் தகர்த்திருந்தது. இப்போது, ஜே.ஆருக்கு முன்பிருந்தது அரியதொரு வாய்ப்பு.  

 அரசியலில் முதிர்ந்த அனுபவம் கொண்டிருந்த இந்திரா காந்தியின் இடத்தில், இப்போது அரசியல் குழந்தையான ராஜீவ் காந்தி. இது, ஜே.ஆருக்கு மிகச் சிறந்த சந்தர்ப்பம். அவர் அதை, இந்தப் பொழுதில் சிறப்பாகவே கையாண்டிருந்தார் எனலாம்.  

இறுதிச் சடங்கில் புதியதோர் ஆரம்பம்  

இந்திரா காந்தியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக, இந்தியா சென்றிருந்த ஜே.ஆர், புதிய பிரதமராகப் பதவியேற்றிருந்த ராஜீவ் காந்தியுடன் மிகச் சுருக்கமான சந்திப்பொன்றை நடத்தியிருந்தார். 

குறித்த சந்திப்புப் பற்றிய, பல பதிவுகளையும் பார்க்கும் போது, தானறிந்த அரசியல் கலையின் அனைத்து உத்திகளையும் ஜே.ஆர் பயன்படுத்தினார் என்றே கூறலாம்.   

தன்னை, இந்தியாவினதும் நேரு குடும்பத்தினதும் நண்பனாக ராஜீவிடம் அறிமுகப்படுத்திய ஜே.ஆர், தன்னை ஒரு கருணைமிக்க, சிறந்த பௌத்தன் என்றும் காட்டிக்கொள்ளத் தவறவில்லை. மகாத்மா காந்தியையும் நேருவையும் புகழ்ந்த ஜே.ஆர், 1940களில் இந்திய காங்கிரஸ் நடாத்திய மாநாடொன்றில் தான் கலந்துகொண்டதையும் குறிப்பிட்டிருந்ததுடன், ஜவஹர்லால் நேருவுடன், தான் தொடர்ந்து தொடர்புகளைப் பேணியதையும் ராஜீவிடம் எடுத்துரைத்தார்.

இந்த ஆலாபனைகளில், இந்திரா காந்தியுடனான உறவு பற்றிக் குறிப்பிடுவதை ஜே.ஆர், இலாவகமாகத் தவிர்த்துவிட்டார் என்று தோன்றுகிறது.   

ஆலாபனைகளைத் தொடர்ந்து, முக்கிய விடயத்துக்குள் நுழைந்த ஜே.ஆர், தான் இலங்கைத் தமிழ் மக்களுக்கு, நியாயத்தை வழங்கவே விரும்புவதாகவும், ஆனால் தன்னைச் சூழ, சிங்களத் தீவிரப்போக்குடைய அமைச்சர்கள் இருப்பதால், தன்னால் அதைச் செய்யமுடியவில்லை என்று குறிப்பிட்டதுடன், தமிழ் ஆயுதக் குழுக்களின் தாக்குதல்கள், தன்னுடைய நிலைப்பாட்டை இன்னும் அதிகமாகப் பாதிப்பதாகவும் தெரிவித்தார்.  

 ஆகவே, தன்னுடைய நிலைப்பாட்டை ஸ்திரப்படுத்த இந்தியா உதவ வேண்டும் என்று வேண்டினார். 

அதாவது, தான் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை வழங்கவே விரும்புகி‌றார். ஆனால், தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள், வன்முறையை முன்னெடுக்கும் போது, தன்னால் அரசியல் தீர்வொன்றை எட்ட முடியாது. ஆகவே, அரசியல் தீர்வை எட்டுவதற்கு, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களைக் கட்டுப்படுத்த, இந்தியா உதவவேண்டும். அதாவது இந்தியா, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களுக்கு ஆதரவளிப்பதை நிறுத்த வேண்டும் என்பதுதான், ஜே.ஆர் சொன்னதற்குள் பொதிந்திருந்த உட்பொருள் ஆகும்.  

 அடுத்ததாக, இந்திரா காந்தியின் நிலைப்பாடு பற்றிக் கருத்துரைத்த ஜே.ஆர், இந்திரா காந்தியைத் தமிழ்த் தீவிரப் போக்காளர்கள் சூழ்ந்திருந்தனர். அவர்களே இந்திரா காந்தியைப் பக்கச்சார்புடன் நடந்துகொள்ளத் தூண்டியதாகவும், அதில் கோபால்சாமி பார்த்தசாரதியின் பங்கு முக்கியமானது என்றும், சிங்கள மக்கள், கோபால்சாமி பார்த்தசாரதி மீது நம்பிக்கை இழந்துவிட்டார்கள் என்றும் தெரிவித்ததுடன், வேறோர் இந்திய அதிகாரியை நியமித்தால், சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடும் என்றும் தெரிவித்தார்.  

 அதாவது, இந்திரா காந்தியின் மகனிடம், தாயாரைப் பற்றிக் குறை கூற முடியாது; ஆகவே, இந்திரா காந்தியைச் சூழ்ந்தவர்கள் தான் தவறானவர்கள் என்று ஜே.ஆர், இந்திரா காந்தியை நேரடியாகக் குறைசொல்லாது தவிர்த்ததுடன், சர்வ கட்சி மாநாடு, வெற்றி அளிக்காததற்கான பழியை, இலாவகமாக கோபால்சாமி பார்த்தசாரதி மீது திருப்பி விட்டிருந்தார்.   

அதாவது, பார்த்தசாரதி ஒரு தமிழர் என்பதால், அவர் தமிழர்களுக்குச் சார்பாகச் செயற்படுகிறார் என்று சிங்கள மக்கள் நினைக்கிறார்கள்; ஆகவே, அவருடைய மத்தியஸ்தத்தைச் சிங்கள மக்கள் ஏற்கத் தயாரில்லை என்றும், ஆளை மாற்றினால், இந்த முயற்சி வெற்றியளிக்கும் என்றும் கருத்துரைக்கிறார். 

இறுதியாக ஜே.ஆர், இந்தியா இராணுவ ரீதியாகத் தலையீடு செய்யுமோ என்ற அச்சம், இந்திய மத்தியஸ்தத்தின் நிமித்தம், இலங்கை மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது என்று, தன்னுடைய நீண்டநாள் அச்சத்தை ராஜீவிடமும் பதிவுசெய்தார்.   

அதாவது, இந்தியா இராணுவ ரீதியில் தலையிடாது என்ற உறுதிமொழியை, இந்திரா காந்தியிடம் பெற்றுக்கொண்டதைப் போல, ராஜீவிடமும் பெற்றுக்கொள்ள, ஜே.ஆர் விரும்பினார். சுருக்கமாக, புதியதோர் ஆரம்பத்தை ஜே.ஆர், ராஜீவிடம் வேண்டி நின்றார்.  

வென்றது தந்திரம்  

ஜே.ஆரின் ‘கிழட்டு நரி’த் தந்திரம், அரசியல் குழந்தையான ராஜீவ் காந்தியிடம், இந்தச் சந்தர்ப்பத்தில் வெற்றிபெற்றது என்றே கூறலாம். இதற்குச் சில அரசியல் விமர்சகர்கள், இராஜதந்திரம், சர்வதேச, பூகோள அரசியல் தொடர்பிலான ராஜீவ் காந்தியின் அனுபவக் குறைவே காரணம் என்கிறார்கள்.   

மறுபுறத்தில் சில விமர்சகர்கள், இந்திரா காந்தியின் மறைவைத் தொடர்ந்து, பிரதமரான ராஜீவ் காந்தியின் முன், இலங்கை விவகாரத்தை விட முக்கியமான பல காரியங்கள் இருந்ததால், அவர் இலங்கை விவகாரத்தில், அப்போது பெரும் சிரத்தை கொண்டிருக்கவில்லை என்று குறிப்பிடுகிறார்கள். 

எவ்வாறிருப்பினும், ஜே.ஆரின் வேண்டுகோள்களுக்குச் செவிசாய்த்த ராஜீவ் காந்தி, சில உறுதிமொழிகளை ஜே.ஆருக்கு வழங்கினார்.   

இலங்கை மீது, ஆக்கிரமிப்பு நடவடிக்கையை இந்தியா முன்னெடுக்காது; இலங்கையின் ஒற்றுமையும் ஆட்புல ஒருமைப்பாடும் பாதுகாக்கப்படும்; இலங்கை விவகாரத்தில் இந்தியா சார்பில் மத்தியஸ்தராகச் செயற்படும் கோபால்சாமி பார்த்தசாரதிக்குப் பதிலாக, வேறொரு நபரை நியமித்தல் ஆகிய உறுதிமொழிகளை வழங்கியதுடன், புதியதோர் ஆரம்பத்துக்கும் இணக்கம் தெரிவித்திருந்தார்.  

 ஆனால், தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் அடிப்படையில், அரசியல் தீர்வு அமையவேண்டும் என்றும், அது அவ்வாறு நடக்காவிட்டால், நீளும் முரண்பாடு இலங்கையைப் பிளவடையச் செய்யும் என்றும் ராஜீவ் குறிப்பிட்டிருந்தார். 

தன்னுடைய விருப்பம் நிறைவேறியதில் மகிழ்ச்சி கொண்ட ஜே.ஆர், ராஜீவுக்கு வாழ்த்துரைத்து விடைபெற்றார்.   

கொழும்பு திரும்பிய ஜே.ஆர், ஊடகங்களை உற்சாகத்தோடு எதிர்கொண்டார். 

இந்தியாவின் இளைய பிரதமர், இலங்கை விவகாரம் தொடர்பில் புதியதோர் ஆரம்பத்துக்குச் சம்மதித்துள்ளார் என்று ஊடகங்களுக்கு மகிழ்ச்சியுடன் சொன்ன ஜே.ஆர், இலங்கையின் பிரிவினையை  ஒருபோதும் இந்தியா ஆதரிக்காது என்றும் அவர் உறுதியளித்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.   

ராஜீவ் காந்தியுடனான சந்திப்பைச் சாதகமான மாற்றமாகவே ஜே.ஆர் பார்த்தாரெனச் சில ஆய்வாளர்கள் பதிவு செய்கிறார்கள். 

ராஜீவ் காந்தியைத் தன்னால் கட்டுப்படுத்த முடியும் என்று, ஜே.ஆர் நம்பியதாகவும் சிலர் கருத்துரைக்கிறார்கள். குறிப்பாக, ராஜீவ் காந்தியினதும், அவரது வௌிவிவகார அமைச்சரான றொமேஷ் பண்டாரியினதும் அரசியல் அனுபவக் குறைவை, தனக்குச் சாதமானதாக ஜே.ஆர் கருதியிருந்தார்.  

மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது சர்வகட்சி மாநாடு  

மறுபுறுத்தில், ராஜீவ் காந்திக்கு இலங்கையை பற்றி யோசிக்கும் அவகாசம் இருக்கவில்லை. இந்திரா காந்தியின் மறைவைத் தொடர்ந்து, அவர் இந்தியாவின் பிரதமராகவும், ஆளும் காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் பதவியேற்றிருந்தாலும், நாடாளுமன்றத் தேர்தலைச் சந்தித்து, தன்னுடையை அரசியல் நிலையைப் பலப்படுத்தவே அவர் விரும்பினார்.  

 1984 டிசெம்பர் மாதத்தின் இறுதியில், இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவிருந்த நிலையில், ராஜீவின் கவனம் முழுவதும் அதிலேயே இருந்தது. 

இது, ஜே.ஆருக்குத் தேவையான இடைவௌியை வழங்கியது. இந்த இடைவௌியின் முழுப் பயனையும் பெற்றுக் கொள்ள விரும்பிய ஜே.ஆர், 1984 நவம்பர் 14ஆம் திகதி, மீளத் தொடரவிருந்த சர்வகட்சி மாநாட்டை, ஒரு மாதகாலம், அதாவது டிசெம்பர் 14ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார்.   

இதற்கு அவர் சொன்ன காரணம், “அரசாங்கக் கட்டமைப்பு பற்றி, சட்டமூல முன்மொழிவுகள் தயாராகவில்லை” என்பதுதான். 

மறுபுறத்தில், பாதுகாப்புக் கெடுபிடிகளை ஜே.ஆர் அரசாங்கம் பலப்படுத்திக் கொண்டிருந்தது. குறிப்பாக, 1984 நவம்பரில், இலங்கையின் வடக்கு, வடமேற்குக் கடற்பரப்பில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டது.   

தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் தமிழ்நாட்டுடனான கடற்போக்குவரத்து, ஆயுதக் கடத்தலைத் தடுக்கும் வகையில் இது முன்னெடுக்கப்பட்டது. 

ஆயினும், இக்காலப்பகுதியில் இச்செயற்பாடு, வினைத்திறனுடன் முன்னெடுக்கப்படவில்லை என்று, கே.எம்.டி சில்வா குறிப்பிடுகிறார். 

அதற்கு, இலங்கைக் கடற்படையின் வளக்குறைபாடு, ஒரு காரணமாக இருக்கலாம்.  

 இப்போது, 1984 டிசெம்பர் 14ஆம் திகதி, ஜே.ஆர் சர்வகட்சி மாநாட்டில் சமர்ப்பிக்கவிருந்த அரசாங்கக் கட்டமைப்பு முறை தொடர்பிலான சட்ட முன்வரைவு மட்டும்தான், தமிழர்களுக்கு ஜனநாயக அரசியல் பாதையின் தொலைவில் தெரிந்த, மெல்லிய ஒளியாக இருந்தது.  

(அடுத்த திங்கட்கிழமை தொடரும்)    

மணலாறும் திட்டமிட்ட குடியேற்றமும் 

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி – 152)

திட்டமிட்ட அரசாங்க குடியேற்றங்கள்  

1950களில் இருந்து, தமிழ்த் தலைமைகள் முக்கியமாக எதிர்த்து வந்ததொரு விடயம், தமிழர் பிரதேசங்களில் அரசாங்கத்தால் நடாத்தப்பட்டு வந்த, திட்டமிட்ட குடியேற்றங்கள் ஆகும்.   

இந்தத் திட்டமிட்ட குடியேற்றங்கள், குறித்த பிரதேசத்தின் குடிப்பரம்பலைச் சிதைப்பதாக அமைகின்றன என்பது, தமிழ் மக்களின் அச்சமாகும். ஆனால், திட்டமிட்ட குடியேற்றங்கள், அதுவும் குறிப்பாகத் தமிழர் பிரதேசங்களில், சிங்கள மக்கள், அரசாங்கத்தால் திட்டமிட்டு குடியேற்றப்பட்டமை, தொடர்ந்து கொண்டிருந்ததானது, தொடர்ந்து வந்த இலங்கை அரசாங்கங்களின் மனநிலையையும் எண்ணப்பாட்டையும் பிரதிபலிப்பதாகவே அமைந்தது.   

திட்டமிட்ட குடியேற்றங்கள் பற்றித் தமிழ்த் தலைமைகள் பேசும்போது, அதற்கெதிராகப் பொதுவான ஒரு விமர்சனம் எழுவதுண்டு. தமிழ் மக்கள் வடக்கு -கிழக்கிலிருந்து வந்து, கொழும்பு உள்ளிட்ட தென்னிலங்கை நகரங்களில் காணி வாங்கி, வீடு கட்டி வாழ முடியுமென்றால், சிங்கள மக்கள் ஏன் வடக்கு-கிழக்குக்குச் சென்று வாழ முடியாது, ஏன் வாழக் கூடாது என்பதுவே அந்த விமர்சனமாகும்.  

தர்க்க சாஸ்திரத்தில், தர்க்கத் தவறுகள் (logical fallacies) என்று ஒரு விடயம் உண்டு. அதில், முக்கியமானதொரு தர்க்கத் தவறானது, தவறான சமநிலை (false equivalency) ஆகும். சுருங்கக்கூறின், ஒன்றுக்கொன்று வேறுபட்ட விடயங்களை, ஒத்த விடயங்களாகக் கருதி, இரண்டையும் சமமானதாகக் கொள்ளுதல் ஆகும். இது தர்க்க ரீதியில் தவறானதாகும்.   

இன்னொரு முக்கியமான தர்க்கத் தவறானது, ‘வைக்கோல் மனிதன் தவறு’ (straw man fallacy) என்று சுட்டப்படும். அதாவது, ஒருவர் சொன்ன கருத்தை, எதிர்ப்பதற்குப் பதிலாக, ஒருவர் சொல்லாத கருத்தை, அவர் சொன்ன கருத்தாக உருவகப்படுத்திக்கொண்டு, அதனை எதிர்த்து வாதிடுவதாகும்.  

‘தமிழ் மக்கள் தென்னிலங்கையில் வந்து வாழ முடியுமென்றால், சிங்கள மக்கள் ஏன் வடக்கில் சென்று வாழ முடியாது’ என்ற வாதத்தை, தமிழ்த் தலைமைகளின் திட்டமிட்ட அரச குடியேற்றங்களுக்கு எதிரான வாதமாக முன்வைப்பதில், மேற்சொன்ன இரண்டு தர்க்கத்தவறுகளும் இடம்பெறுகின்றன.   

முதலாவதாக, தனிநபர்கள் தாமாகத் தனிப்பட்ட முறையில், இன்னோர் இடத்துக்கு இடம்பெயர்ந்து வாழ்வதும், அரசாங்கம் திட்டமிட்டு, ஒரு பகுதியிலிருந்து மக்களைப் பெருந்தொகையில் அழைத்து வந்து, இன்னோர் இடத்தில் அவர்களுக்கான குடியேற்றங்களை அமைத்து, அவர்களுக்கு உதவிசெய்து குடியேற்றுவதும், சமமான விடயங்கள் அல்ல.   

தமிழ் மக்கள் வடக்கிலிருந்து, கொழும்புக்கு இடம்பெயர்ந்து வாழ்வதற்கு, அரசாங்கம் எந்த உதவியும் செய்யவில்லை. தமிழ் மக்கள் தனிப்பட்ட ரீதியில் காணிகளையும் வீடுகளையும் வாங்கி, அங்கு இடம்பெயர்ந்து, தாமே தமக்கான வாழ்வாதாரத்தையும் தேடிக் கொண்டார்கள்.   

ஆனால், வடக்கு-கிழக்கில் அரசாங்கம், திட்டமிட்டுத் தனியாருடைய பெருங்காணிகளைக் கையகப்படுத்தி அல்லது அரச காணிகளில், தென்னிலங்கையிலிருந்து மக்களை அழைத்துச் சென்று குடியேற்றி, அவர்களுக்கான வீடுவாசல், அடிப்படை வசதிகள், வாழ்வாதாரம் என்பவற்றை ஏற்படுத்திக் கொடுத்து, அரச குடியேற்றங்களை உருவாக்கின.   

இதைத்தான் தமிழ்த் தலைமைகள் எதிர்த்தார்களே அன்றி, சிங்கள மக்கள் தென்னிலங்கையிலிருந்து தாமாகத் விரும்பி வந்து, வடக்கு-கிழக்கில் குடியேறுவதைத் தமிழ்த் தலைமைகளோ, தமிழ் மக்களோ எதிர்க்கவில்லை. ஆகவே, தமிழ்த்தலைமைகள் சிங்கள மக்கள் வடக்கு-கிழக்கில் வந்து வாழ்வதை எதிர்க்கிறார்கள் என்பதில், எந்த உண்மையும் இல்லை.   

மாறாக, அரசாங்கம் திட்டமிட்டு, சிங்கள மக்களைத் தமிழர் பிரதேசங்களில் குடியேற்றுவதைத் தான் அவர்கள், திட்டமிட்ட குடிப்பரம்பல் சிதைப்பு என்ற அடிப்படையில் எதிர்த்தார்கள். இந்தப் புரிதல் மிக முக்கியமானது.  

மணலாறு  

முல்லைத்தீவு மாவட்டத்தில் மணலாறு என்று அறியப்பட்ட சிறு ஆறை ஒட்டி, தமிழ்க் கிராமங்களும், அதையொட்டிய விவசாய நிலங்களும், தமிழ் வணிகர்களுக்கு உரியதாக இருந்தன.   

அரச காணிகளான இவை, 99 வருடக் குத்தகைக்கு, தமிழ் வணிகர்களுக்கு வழங்கப்பட்டிருந்தன. நாவலர் ஃபாம், கென்ட் ஃபாம், டொலர் ஃபாம், சிலோன் தியேட்டேர்ஸ் ஃபாம், ரெயில்வே குறுப் ஃபாம், ஃபோஸ்ட் மாஸ்டர் குறுப் ஃபாம் எனக் கிட்டத்தட்ட 1,000 ஏக்கர் விவசாய நிலங்கள், 16 தனியார் தோட்டங்களாக அமைந்திருந்தன.  

 1977ஆம் ஆண்டு, இன வன்முறைகளைத் தொடர்ந்து, மலையகத்தில் பாதிக்கப்பட்ட இந்திய வம்சாவளி மக்கள், டொலர் மற்றும் கென்ட் ஃபாம்களில் குடியேற்றப்பட்டிருந்தனர். 1983 கறுப்பு ஜூலையைத் தொடர்ந்து, மணலாற்றை ஒட்டிய குடியேற்றங்களில் இருந்து, தமிழ் மக்களை விரட்டும் கைங்கரியத்தை, அரச படைகளூடாக அரசாங்கம், முன்னெடுக்கத் தொடங்கியிருந்ததாக, மனித உரிமைகளுக்கான யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் அமைப்பு, தனது அறிக்கையொன்றில் குறிப்பிடுகிறது.   

குறிப்பாக, 1984இன் நடுப்பகுதியில், கென்ட் மற்றும் டொலர் ஃபாமுக்குள் நுழைந்த பொலிஸார், அங்கு வாழ்ந்து வந்த தமிழ் மக்கள், பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தி, அங்கிருந்து விரட்டியடிக்கும் கைங்கரியத்தை முன்னெடுத்திருந்தனர்.   

இதைத் தொடர்ந்து, அன்றைய தேசிய பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத்முதலியின் கண்காணிப்பில், சிங்கள மக்களைக் குடியேற்றும் பணி இடம்பெற்றது.   

கென்ட் மற்றும் டொலர் ஃபாம்களில் குடியேற்றப்பட்டிருந்தவர்கள், இந்திய வம்சாவளித் தமிழர்கள்; அவர்கள் அங்கிருந்து, இத்தகைய விதத்தில் வௌியேற்றப்பட்டமையானது, சௌமியமூர்த்தி தொண்டமானுக்குக் கடும் விசனத்தை உருவாக்கியது. இதைக் கண்டித்து அவர், அமைச்சரவையில் கருத்துரைத்த போது, சிறில் மத்யூ, காமினி திசாநாயக்க, லலித் அத்துலத் முதலி உள்ளிட்ட அமைச்சர்கள், “அவர்கள் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் வழங்குகிறார்கள்” என்று கூறி, தமது நடவடிக்கையை நியாயப்படுத்தியதாக ரீ.சபாரட்ணம் பதிவு செய்கிறார்.   

லலித் அத்துலத்முதலி, பயங்கரவாதத்துக்கு உதவுகிறார்கள் என்ற பல்லவியோடு, இந்த மக்களின் பிள்ளைகள் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டு, பயங்கரவாத இயக்கங்களில் வலிந்து சேர்க்கப்படுகிறார்கள்; ஆகவே அவர்களைக் காப்பாற்ற இந்த நடவடிக்கை அவசியம் என்ற சரணத்தையும் இணைத்துப் பாடினார்.   

தமிழ் மக்கள் வௌியேற்றப்பட்டு, கென்ட் மற்றும் டொலர் ஃபாம்களில் சிறைத்தண்டனை பெற்ற குற்றவாளிகளும் அவர்களது குடும்பத்தினரும் குடியேற்றப்பட்டனர். இதைச் சிறைச்சாலை மறுசீரமைப்பு நடவடிக்கை என்று குறிப்பிட்ட அமைச்சர் அத்துலத்முதலி, சிறைக்கைதிகள் மறுவாழ்வு தொடர்பிலான திறந்த சிறைச்சாலை பரீட்சார்த்த முயற்சி என்றும், சிறைக்கைதிகளும் அவர்களது குடும்பத்தினரும் இங்கு விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் என்றும் குறிப்பிட்டார்.  

இது அப்பகுதியின் குடிப்பரம்பலைச் சிதைக்கும் செயல் மட்டுமல்ல, மாறாகக் குற்றவாளிகள் குடியேற்றப்பட்டமையானது, அதற்கு அண்மித்த பகுதிகளில் வாழும் தமிழ் மக்களையும் ஆபத்தில் தள்ளும் செயலாக அமைந்தது.   

மறுபுறத்தில், இந்த நடவடிக்கையானது, இஸ்‌ரேலின் ஆலோசனையின்படி, லலித் அத்துலத்முதலியால் முன்னெடுக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை என்று, சிலர் கருத்துரைக்கிறார்கள்.   

பலஸ்தீன கெரில்லா இயக்கங்களின் நடவடிக்கையைக் கட்டுப்படுத்த, இஸ்‌ரேல் எல்லையோரக் கிராமங்களில், யூதக் குடியேற்றங்களை உருவாக்கி, அதன் மூலம் கெரில்லாப் படைகளின் ஊடுருவலையும் அவர்களது வழங்கல் சங்கிலியையும் தடுத்தனர். இதையொத்த நடவடிக்கையே, இங்கு முன்னெடுக்கப்பட்டது என்பது சில விமர்சகர்களது கருத்தாகும்.  

கென்ட், டொலர் ஃபாம் படுகொலைகள்  

இந்த நிலையில், 1984 நவம்பரில், வடக்கில் வன்முறைத் தாக்குதல்கள் அதிகரித்துக் கொண்டிருந்தன. குறிப்பாகப் பொலிஸ், அரச படைகளுக்கும் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களுக்கும் இடையேயான தாக்குதல்கள், கணிசமானளவில் அதிகரித்திருந்த காலப்பகுதி அதுவாகும்.   

முல்லைத்தீவில் நடந்து கொண்டிருக்கும் அரசாங்கத்தின் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றமும், ஏலவே அங்கு வாழ்ந்து வந்த தமிழ் மக்கள், பொலிஸ் மற்றும் அரச படைகளால் அங்கிருந்து விரட்டப்பட்டு வருவதும், தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் கவனத்தை, மணலாற்றின் பக்கம் திருப்பியது.   

இதுவரை காலமும் பொலிஸ், அரசபடைகள் மற்றும் அரச இயந்திரம் மீது மட்டுமே தாக்குதல் நடத்தி வந்த தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் வன்முறைக் கரம், முதன் முறையாகச் சிங்களப் பொதுமக்களைப் பதம் பார்த்தது.   

1984 நவம்பர் 30ஆம் திகதி, இரவோடிரவாக மணலாற்றுக்கு வந்திறங்கிய விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சார்ந்த 50 போராளிகள், கென்ட், டொலர் ஃபாம்களுக்குள் நுழைந்து, அங்கிருந்த சிறைக் காவலர்கள், ஆண்கள் மற்றும் சில பெண்கள், குழந்தைகள் மீது துப்பாக்கி, கத்தி, வெடிகுண்டு உள்ளிட்ட ஆயுதங்களால் கொடூரத் தாக்குதல் ஒன்றை நடத்தினர்.   

இந்தத் தாக்குதலில், அங்கு குடியேற்றப்பட்டிருந்த குற்றவாளிகள், சிறைக் காவலர்கள், மற்றைய காவலர்கள் உள்ளிட்டு ஏறத்தாழ 80 ஆண்கள் உயிரிழந்திருந்தனர். அரசபடைகள், தமிழ்ச் சிவிலியன்கள் மீது கட்டவிழ்த்து வந்த வன்முறையை மட்டுமே இதுவரை அறிந்திருந்த உலகத்துக்கு, முதல் தடவையாகத் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுவொன்று, சிங்களப் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய செய்தி, பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.  

 குறிப்பாக, தமிழ் நாட்டில் கூட, குறித்த தாக்குதல் தொடர்பில், அதிருப்தி ஏற்பட்டதாக 1984 டிசெம்பர் நான்காம் திகதி வௌியான ‘டெய்லி நியூஸ்’ பத்திரிகை குறிப்பிட்டிருந்தது.  

1950கள் முதல், தமிழர்கள் மீது பொலிஸ், அரசபடைகள் நடத்திய தாக்குதலைக்கூட மறந்தும் இன அழிப்பு என்று குறிப்பிடாத அரசியல் விமர்சகர்கள் கூட, இந்தச் சம்பவத்தை விடுதலைப் புலிகள் அமைப்பு நடத்திய இன அழிப்பு என்று விளிப்பதைக் காணலாம்.   

கென்ட், டொலர் ஃபாம் படுகொலைச் சம்பவத்தைத் தொடர்ந்து, அங்கு வந்த பொலிஸாரும், இராணுவத்தினரும் தாம், 30 பயங்கரவாதிகளைச் சுட்டுக் கொன்றதாக அறிவித்தனர்.   

இதைத் தவறு என்று தனது நூலில் குறிப்பிடும் ரீ.சபாரட்ணம், தாக்குதல் நடத்திய தமிழ் இளைஞர் ஆயுதக் குழுவினர் பொலிஸ், இராணுவம் அவ்விடத்துக்கு விரையும் முன்பே, அங்கிருந்து வௌியேறி விட்டிருந்ததாகவும், பொலிஸ், இராணுவம் அப்பாவித் தமிழ் மக்களையே சுட்டுக் கொன்றதாகவும் கூறுகிறார்.   

எது எவ்வாறாயினும், சிங்களப் பொதுமக்கள் மீதான இந்தத் தாக்குதல், தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் மீதான முதற்கறையாக அமைந்தது. மற்றொரு தமிழ் இளைஞர் ஆயுதக் குழுவான ஈ.பீ.ஆர்.எல்.எப் தலைவர் பத்மநாபா, இந்தத் தாக்குதலை கடுமையாகக் கண்டித்திருந்தார்.   

அரசாங்கத்துடனும் அரச படைகளோடும் தான் யுத்தமேயன்றி, சிங்களப் பொதுமக்களோடு அல்ல என்பது அவரது கருத்தாக இருந்தது. இது மிகச் சரியான கருத்தாகும். அப்பாவிப் பொதுமக்கள் மீதான தாக்குதலானது, எந்த வகையிலும் நியாயப்படுத்தக் கூடியதொன்றல்ல; அது, மிகக் கடுமையாகக் கண்டிக்கப்பட வேண்டியது.  

இலங்கையில் இடம்பெறுவது பயங்கரவாதப் பிரச்சினைதான் என்று நிறுவ, பகிரதப் பிரயத்தனத்தில் ஈடுபட்டிருந்த ஜே.ஆர் அரசாங்கத்துக்கு இந்தத் துயரம் மிகு சம்பவம், பெரும் வாய்ப்பாக அமைந்தது.   

இந்தச் சம்பவத்தை முன்வைத்து, விடுதலைப் புலிகள் அமைப்புக்கு எதிராகச் சர்வதேச ரீதியில் பெரும் பிரசாரத்தை இலங்கை அரசாங்கம் முன்னெடுத்தது. ஆனால், அரசாங்கத்தின் படைகள் இத்தோடு நின்றுவிடவில்லை.  

(அடுத்த திங்கட்கிழமை தொடரும்)    

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/மணலாறும்-திட்டமிட்ட-குடியேற்றமும்/91-219069

நவீனன்

  • Grand Master
  • வரையறுக்கப்பட்ட அனுமதி
  • Gender:Male
  • Interests:cricket,internet,
  • தொடங்கியவர்

Posted July 22, 2018மணலாற்று வன்முறைகள்  

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி – 153) 

யார் பொறுப்பு? 

அப்பாவிப் பொதுமக்களைப் படுகொலை செய்வது, எந்த வகையிலும் நியாயப்படுத்தப்பட முடியாத ஒன்று. அந்தப் படுகொலை, எந்தத் தரப்பால் நிகழ்த்தப்பட்டாலும், அது கொடூரமானது; கண்டிக்கப்பட வேண்டியது.  

1984 நவம்பர் மாத இறுதியில், மணலாற்றில் ‘கென்ட்’, ‘டொலர்’ பண்ணைகளில், விடுதலைப் புலிகள் அமைப்பால் நிகழ்த்தப்பட்ட தாக்குதலானது அரசாங்கம், அரச படைகளைத் தாண்டி, விடுதலைப் புலிகளால் சிங்களப் பொதுமக்கள் மீது, நடாத்தப்பட்ட முதல் தாக்குதலாகக் கருதப்படுகிறது.   

இது விடுதலைப் புலிகளுக்கு எதிரான ‘பயங்கரவாதிகள்’ என்ற அரசாங்கத்தின் பிரசாரத்துக்கு வலுச்சேர்ப்பதாக அமைந்தது.   

இது பற்றி, அப்போது இந்தியாவிலிருந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனிடம் வினவப்பட்டபோது, அவர் இதற்குச் சற்றே வேறுபட்ட வியாக்கியானம் ஒன்றைக் கொடுத்திருந்தார். போர் புரியாதவர்களைக் கொல்வதை தான் எதிர்ப்பதாகச் சொன்ன பிரபாகரன், ஆனால், அங்கு கொல்லப்பட்டவர்கள் பொதுமக்கள் அல்ல; மாறாகத் தமிழர் தாயகத்தைச் சிங்கள மயப்படுத்தும் இராணுவத்தின் திட்டத்துக்கேற்ப, திட்டமிட்டுக் குடியேற்றப்பட்ட குற்றவாளிகள். 

அத்தோடு பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எந்தவித பாதிப்பும் வரக்கூடாது என்று போராளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். ஒரே ஒரு பெண் மட்டும் மரணித்ததாக ஒத்துக் கொண்ட பிரபாகரன், தன்னுடைய கணவரை விட்டுப்பிரியாது நின்றதால், குறித்த கட்டடத்தில் நடந்த குண்டுவெடிப்பில் அவர் மரணித்ததாகத் தெரிவித்தார்.   

அரசாங்கத்தின் குறித்த திட்டமிட்ட குடியேற்றம் என்பது, திறந்த சிறைச்சாலைத் திட்டமாக உருவாக்கப்பட்டு, குற்றவாளிகள்தான் அங்கு, அவர்களது குடும்பத்தினருடன் குடியேற்றப்பட்டிருந்தார்கள்.   

ஆயினும், போரியல் பொருள்கோடலில், இந்தச் சந்தர்ப்பத்தில் அவர்கள் சிவிலியன்கள்தான்; அவர்கள் அரச படைகளோ, போராளிகளோ அல்ல; ஆகவே, குறித்த வியாக்கியானத்தின் வலுத்தன்மை, இங்கு அர்த்தமற்றதாகிறது.   

மறுபுறத்தில், அரசாங்கம் தன்னை முழுமையாக, இந்தத் துயரச் சம்பவத்தின் பொறுப்பிலிருந்து, விடுவித்துக்கொள்ளவும் முடியாது. தேசிய கிறிஸ்தவ சபையைச் சேர்ந்த வண.பிதா செலஸ்டைன் பெனான்டோ, குறித்த மணலாற்றுச் சம்பவமானது, அரசாங்கத்தின் தேவையற்ற ஆத்திரமூட்டலின் விளைவாக ஏற்பட்டது என்று குறிப்பிட்டிருந்ததாக மனித உரிமைகளுக்கான யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் அமைப்பு பதிவு செய்கிறது.   

ஏலவே, தமிழ் வணிகர்கள் 99 வருடக் குத்தகைக்கு எடுத்திருந்த பண்ணை நிலத்தை, அந்தக் குத்தகையை இரத்துச் செய்து, அரசாங்கம் மீளக் கைப்பற்றி, அங்கு ஏலவே, 1977 கலவரத்தின் விளைவாக, மலையகத்திலிருந்து இடம்பெயர்ந்து குடியேறியிருந்த தமிழர்களை அங்கிருந்து விரட்டியடித்து, அந்த இடத்தில், தெற்கிலிருந்து சிங்களக் குற்றவாளிகளைக் கொண்டு வந்து, திறந்தவௌிச் சிறைச்சாலையொன்றை நிறுவ வேண்டிய அவசியம் ஏன் வந்தது?   

அதுவும் 1950களிலிருந்து தமிழர் தாயகத்தின் குடிப்பரம்பலைச் சிதைக்கும் வகையில், அரசாங்கம் திட்டமிட்ட குடியேற்றங்களை நடத்தக்கூடாது என்று தமிழ்த் தலைமைகள் தொடர்ந்து வலியுறுத்திவரும் போது, அதை மீறி இதைச் செய்ததானது, அரசாங்கத்தின் அலட்சியத்தை மட்டுமல்ல, தமிழ்மக்களை ஆத்திரமூட்டும் செயலையும் சுட்டி நிற்கிறது.  

 குறித்த சம்பவத்தின் உயிர்ப்பலிகள், சௌமியமூர்த்தி தொண்டமானைக் கவலை கொள்ளச் செய்திருந்தாலும், “தமிழ் மக்களுக்கும் தன்மானம், சுயகௌரவம், தமது மொழி, மதம், அடையாளம் மீதான பற்று உண்டென்பதை உணராத சிங்களத் தலைவர்களுக்கு, இது மிகச் சிறந்த பாடம். அரசாங்கம் தமது கையில் இருப்பதால், தாம் பலம் மிக்கவர்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள், ஆனால், அவர்களை விடப் பலமான சக்திகள் உண்டு” என அவர் குறிப்பிட்டதாக ரீ.சபாரட்ணம் பதிவு செய்கிறார்.  

அரசாங்கத்தின் திட்டமிட்ட குடியேற்றங்கள், இந்த இரண்டு பண்ணை நிலங்களில் மட்டுமல்ல; முல்லைத்தீவின் ஒதியமலை, கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், அலம்பில், நாயாறு, குமுழமுனை, திருகோணமலையில் அமரவயல், தென்னமரவடி உள்ளிட்ட கிராமங்களிலும் இடம்பெற்றன.   

இங்கு காலம்காலமாக வாழ்ந்து வந்த தமிழ் மக்களை, உடனடியாக வௌியேறுமாறு இராணுவம் அறிவித்தது. 

அரசாங்கங்கள் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கும் போது, குறிப்பாக, காடு வெட்டிப் புதிய கழனி பெருக்கும் திட்டங்களாக அவை அமையும் போது, அதற்கு முன் காடாக இருந்த நிலத்தை, அபிவிருத்தி செய்வதற்காக அங்கு நிலம், வீடு, விவசாய வேலைவாய்ப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து, அங்கு மக்களைக் குடியேற்றுவதில் நியாயமுண்டு.   

இன்று வடக்கில் குறிப்பிடத்தக்க நகராக வளர்ந்திருக்கும் கிளிநொச்சி கூட, 1930களில் இவ்வாறு அரச குடியேற்றமாகக் காடு வெட்டி, கழனி செய்த திட்டத்தின் ஒரு பகுதிதான். 

ஆனால், இத்தகைய திட்டங்கள், தமது நோக்கமாக அபிவிருத்தி, அண்மித்த பெருநகரங்களின் சனநெருக்கடியைக் குறைத்தலைக் கொண்டிருக்கும். 

இதுபோன்ற அபிவிருத்தி திட்டங்களின் போதுகூட, குறித்த பிரதேசத்தின் குடிப்பரம்பலைக் கருத்திற்கொள்வது அவசியம். ஆனால், மணலாறு உள்ளிட்ட பிரதேசங்களில் நடைபெற்றது அபிவிருத்திசார் குடியேற்றமோ, காடு வெட்டிக் கழனி பெருக்கும் குடியேற்றமோ அல்ல;  மாறாக, அங்கு காலங்காலமாக வாழ்ந்துவந்த தமிழ் மக்களை, அரசாங்கம் இராணுவக் கரம் கொண்டு விரட்டியடித்துவிட்டு, அங்கு சிங்கள மக்களைக் குடியேற்றி, குறித்த நிலப்பரப்பின் குடிப்பரம்பலைச் சிதைக்கும் திட்டமிட்ட செயல். 

இதைத்தான், அரசாங்கத்தின் தேவையற்ற கோபமூட்டும் செயல் என்று வண.பிதா செலஸ்டைன் பெனான்டோ குறிப்பிட்டிருந்தார். தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களால் நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, இந்தப் பிரதேசங்களில், அரசாங்கத்தால் குடியேற்றப்பட்டிருந்த சிங்கள மக்கள், அங்கிருந்து வௌியேறத் தொடங்கியதாக ‘மணலாறு’ என்ற தன்னுடைய நூலில், விஜயரட்ணம் பதிவு செய்கிறார்.   

தொடர்ந்த வன்முறையும் பதிலடியும்  

கென்ட், டொலர் பாம் தாக்குதலைத் தொடர்ந்து, 1984 டிசெம்பர் முதலாம் திகதி இரவு நாயாறு, கொக்கிளாய் மீனவக் கிராமங்கள் மீது விடுதலைப் புலிகள் அமைப்பால் தாக்குதலொன்று முன்னெடுக்கப்பட்டது.   

நீர்கொழும்பு, சிலாபம் பகுதிகளிலிருந்து அழைத்துவரப்பட்ட சிங்கள மீனவக் குடும்பங்கள் இங்கு அரசாங்கத்தால் குடியேற்றப்பட்டிருந்தன என்றும், இந்தத் தாக்குதலில், இரண்டு மீனவக் குடியேற்றங்களைச் சேர்ந்த, 59 மீனவர்கள் கொல்லப்பட்டதாகவும் ரீ.சபாரட்ணம் குறிப்பிடுகிறார்.   

அடுத்தடுத்து இரண்டு நாள்களில் பொதுமக்கள் மீதான தாக்குதலை விடுதலைப்புலிகள் முன்னெடுத்திருந்தமை, அரசாங்கத்தையும் வடக்கில் குடியேற்றப்பட்ட சிங்கள மக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருந்ததுடன், வடக்கில் குடியேற்றப்பட்ட மக்கள் அங்கிருந்து உடனடியாக வௌியேறத் தொடங்கினார்கள். 

வன்முறை வழி நீதியின் அடிப்படை

 ஹுப்ரூ வேதாகமத்துக்கும் முந்தைய ஹமுராபிச் சட்டக் காலத்திலிருந்தே, ‘பல்லுக்குப் பல்’ என்பதுதான் நடைமுறையிலிருந்து வந்தது. இதை இலத்தீனில் ‘லெக்ஸ் ரலியொனிஸ்’ (lex talionis) பதிலடிச் சட்டம் என்பார்கள்.   

அதாவது, சட்ட ரீதியாக ஏற்புடைய பதிலடி. ஆனால், ‘பல்லுக்குப் பல்’, ‘கண்ணுக்குக் கண்’ என்று பேச்சுவழக்கில் வழங்கி வந்தாலும், அதன் விரிவாக்கம் ‘ஒரு பல்லுக்கு ஒரு பல்’, ‘ஒரு கண்ணுக்கு ஒரு கண்’ என்பதாகும். இது, பதிலடியானது சமவிகிதத்தில் அமைய வேண்டும் என்பதை உணர்த்துகிறது. ஆனால், ஹமுராபிச் சட்டத்தைக் கொண்டிருந்த மெசப்பத்தேமிய நாகரிகத்திலிருந்து, மனிதன் பலதூரம் முன்னகர்ந்து, ‘கண்ணுக்குக் கண்’ என்பது குருடான உலகத்தை உருவாக்கிவிடும் என்ற நிலையை அடைந்தான்.   

அதன் விளைவுதான், மனித உரிமைகள் சாசனம் முதல், ஜெனீவா ஒப்பந்தங்கள் வரை மனிதத்தை முன்னிறுத்தும் முன்னேற்றங்கள் ஏற்பட்டன. ஆனாலும், அவ்வப்போது முற்காலத்தயப் போக்குகள் (primitive tendencies) மனிதனுக்குள் ஆதிக்கம் செலுத்திக் கொண்டுதான் இருக்கின்றன.  

மணலாற்றில் விடுதலைப் புலிகள் அமைப்பு, நடந்தியிருந்த தாக்குதல்களைத் தொடர்ந்து, அங்கிருந்து சிங்கள மக்கள் வௌியேறுவதைத் தடுக்க, மணலாறு பகுதியிலிருந்து, தமிழ் மக்களை வௌியேற்றும் கைங்கரியத்தை, அரசாங்க படைகள் முன்னெடுத்ததாகத் தன்னுடைய நூலில் விஜயரட்ணம் குறிப்பிடுகிறார்.   

மேலும், 1984 டிசெம்பர் இரண்டாம் திகதி, பதவியா இராணுவ முகாமிலிருந்து முல்லைத்தீவில் அமைந்திருந்த ஒதியமலை என்ற தமிழ்க் கிராமத்துக்குள்  அதிகாலையில் நுழைந்த ஏறத்தாழ 30 இராணுவத்தினர், வீடுகளுக்குள் சென்று, ஆண்களை இழுத்துச் சென்று சுட்டுக் கொன்றதாகச் சர்வதேச மன்னிப்புச் சபை அறிக்கையிட்டிருக்கிறது.   

இந்தத் தாக்குதலில் ஏறத்தாழ 27 இளைஞர்கள் கொல்லப்பட்டிருந்தார்கள். மேலும், மூன்றாம் திகதி மணலாற்றில் புகுந்த இராணுவம், திறந்த துப்பாக்கிச் சூடு, வீடுகளுக்கு எரியூட்டுதல் என்பவற்றை நடத்தி, அங்கு வாழ்ந்துவந்த தமிழ் மக்களை, அங்கிருந்து வௌியேற்றும் நடவடிக்கைகளை முன்னெடுத்தார்கள். தொடர்ந்து, முல்லைத்தீவு, திருகோணமலையின் பல கிராமங்களிலுமிருந்து தமிழ் மக்கள் விரட்டியடிக்கப்பட்டார்கள். இந்தச் சம்பவங்களும் வன்முறைகளும் டிசெம்பர் மாதம் முழுவதும் தொடர்ந்தன. தாக்குதல் நடத்தும் தரப்பு எதுவாக இருப்பினும், பெரும் பாதிப்பைச் சந்திக்கும் தரப்பு, அப்பாவிப் பொதுமக்களாகவே இருப்பதுதான் யுத்தத்தின் பெருங்கோரம். 

காலங்காலமாகத் தமிழ் மக்கள் தாம் வாழ்ந்த கிராமங்களிலிருந்து, அரசாங்கத்தின் வன்முறைக்கரம் கொண்டு விரட்டியடிக்கப்பட்டார்கள்.  

 1984 டிசெம்பரில் உச்சத்தையடைந்த விரட்டியடிப்பின் விளைவாக, சில காலத்திலேயே கொக்கிளாய், கருணாட்டுக்கேணி, கொக்குத்தொடுவாய், நாயாறு, அண்டங்குளம், கணுக்கேணி, உதயனார்குளம் ஆகிய கிராமங்களிலிருந்து மக்கள் முற்றாக வௌியேற்றப்பட்டிருந்தார்கள்.   

ஒதியமலை, பெரியகுளம், தண்டுவான், குமுழமுனை, தண்ணியூற்று, முள்ளிவயல், செம்மலை, தண்ணிமுறிப்பு, அலம்பில் ஆகிய பகுதிகளில் பெருமளவு மக்கள் வௌியேறியிருந்தார்கள்.  

குடியேற்றங்களைக் கைவிடாத அரசு  

மணலாற்றில் நடந்த தாக்குதல்களால் அதிர்ச்சியடைந்திருந்த இலங்கை அரசாங்கம், அப்பகுதியில் திட்டமிட்ட குடியேற்றங்களைத் தொடர்வதில் உறுதியாக இருந்தது. ஆகவே, குறித்த பகுதியில் பாதுகாப்பைப் பலப்படுத்தும் முகமாக, மணலாற்று குடியேற்றங்களில் இராணுவ காவலரண்களை அமைக்கவும், மேலும், அங்குள்ள குடியேற்றவாசிகளுக்கு ஆயுதப்பயிற்சி அளிக்கவும் அரசாங்கத்தின் பாதுகாப்புச் சபை தீர்மானித்திருந்தது.  

மணலாறு என்ற தமிழர் பிரதேசம் வெலிஓய (வெலி-மணல், ஓய-ஆறு) ஆன கதை இதுதான். கென்ட் பாமுக்கு அருகில், இலங்கை இராணுவத்தின் வெலிஓய முகாம் ஸ்தாபிக்கப்பட்டது. கென்ட் பாம், ‘கல்யாணிபுர’ ஆனது.   

இந்த வன்முறைகளுக்கும் அநீதிகளுக்கும் மத்தியில்தான் சர்வகட்சி மாநாட்டில், அரசாங்கக் கட்டமைப்பு தொடர்பிலான சட்டமூல வரைவு  சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. நவம்பர் 14ஆம் திகதி சமர்ப்பிப்பதாக இருந்த இந்த முன்மொழிவை, அவர் டிசெம்பர் 14ஆம் திகதிக்கு ஒத்திவைத்திருந்தார்.   

அதன்படி, டிசெம்பர் 14ஆம் திகதி கூடிய சர்வகட்சி மாநாட்டில் ஜே.ஆரால் புதிய ஐந்தடுக்கு நிர்வாகப் பொறிமுறையை ஸ்தாபிக்கும் சட்டமூல வரைவை சமர்ப்பித்திருந்தார்.  

(அடுத்த திங்கட்கிழமை தொடரும்)    

ஜே.ஆரின் முன்மொழிவுகள்  

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி – 154)

ஜே.ஆர் முன்மொழிந்த ஐந்தடுக்கு நிர்வாகப் பொறிமுறை  

1984 டிசெம்பர் 14ஆம் திகதி, ஒரு மாதகாலத்தின் பின்னர் மீண்டும் ஒன்றுகூடிய சர்வகட்சி மாநாட்டில், புதிய ஐந்தடுக்கு நிர்வாகப் பொறிமுறையை ஸ்தாபிக்கும் சட்டமூல வரைவு, ஜே.ஆர் அரசாங்கத்தால் சமர்ப்பிக்கப்பட்டது.   

இதன்படி, கிராமோதய மண்டலங்கள் முதல், நாடாளுமன்றத்தின் இரண்டாவது சபையாக, மாநிலங்களின் சபை ஒன்றை அமைப்பது வரை, கீழிருந்து மேலாக ஐந்தடுக்கு நிர்வாகப் பொறிமுறையொன்றை அறிமுகப்படுத்த, ஜே.ஆர் அரசாங்கம் விளைந்திருந்தது.   

படிநிலையின் அடித்தளத்தில், கிராமமட்டத்தில் ஏறத்தாழ 4,500 கிராமோதய மண்டலங்களை ஸ்தாபிக்கவும்; அதற்கடுத்த தளத்தில், ஏறத்தாழ 250 அளவிலான உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளை அடிப்படையாகக் கொண்ட உள்ளூராட்சி சபைகளாகப் பிரதேச சபைகளை ஸ்தாபிக்கவும்; மூன்றாவது மட்டத்தில், ஏலவே ஸ்தாபிக்கப்பட்டிருந்த மாவட்ட அபிவிருத்தி சபைகளை அடிப்படையாகக் கொண்டதாகவும், ஆனால் அதைவிடவும் சற்றே அதிகாரங்கள் கூடிய 25 மாவட்ட சபைகளை ஸ்தாபிக்கவும் முன்மொழியப்பட்டிருந்தது.  

 இதற்கு மேலாக, நான்காவது மட்டத்தில், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாவட்ட சபைகள் இணைந்து, மாகாண சபையொன்றை ஸ்தாபிக்கக் கூடியதாகவும் முன்மொழியப்பட்டிருந்தது.   

அதாவது, ஒரு மாகாணத்துக்குட்பட்ட இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாவட்ட சபைகள், தாம் இணைய விரும்பினால், அதற்கு அம்மாவட்ட மக்களில் பெரும்பான்மையினர் ஒப்புதல் அளித்தால், அவை மாகாண சபையாக உருவாக முடியும்.

அத்தோடு மாவட்ட சபைகள், தமது அதிகாரத்திலிருந்து குறித்த மாகாணசபைக்குப் பாரப்படுத்தும் அதிகாரங்களைக் கொண்டமைவதோடு, மாவட்ட சபைகள் தீர்மானிப்பதன் அடிப்படையிலாக, மாகாண சபை உறுப்பினர்களை அங்கத்தவர்களாகக் கொண்டிருக்கும் என்றும் முன்மொழியப்பட்டிருந்தது.   

இதைவிடவும் மாகாண சபையின் முதலமைச்சராக, மாகாண சபையின் ஆதரவைப் பெற்ற நபரை நியமிக்கும் அதிகாரம், ஜனாதிபதிக்கு உரியதாக இருக்கும். 

மேலும் ஜனாதிபதி, நாடாளுமன்ற உறுப்பினர்களை அல்லது மாகாண சபை உறுப்பினர்களை, மாகாண அல்லது மாவட்ட சபை அமைச்சராக நியமிக்க முடியும் என்றும் முன்மொழியப்பட்டிருந்தது.   

இந்தப் புதிய ஐந்தடுக்கு நிர்வாகப் பொறிமுறையின் ஐந்தாவது தளத்தில், நாடாளுமன்றத்தின் இரண்டாவது அவையாக, 75 உறுப்பினர்களைக் கொண்ட மாநிலங்களின் சபை அமைக்கப்படும். இதில், 25 மாவட்ட சபைகளின் தலைவர்கள், உப தலைவர்கள் அங்கம் வகிப்பார்கள். இதைவிட, ஒவ்வொரு மாகாணத்தில் இருந்தும், தலா இருவர் என்ற அடிப்படையில், மொத்தம் 18 பேர் நியமிக்கப்படுவார்கள். 

இவர்கள், அம்மாகாணத்தில் அமைந்துள்ள மாவட்ட சபைகளில், போதியளவு பிரதிநிதித்துவம் பெறாது, சமூகங்களிலிருந்து தெரிவு செய்யப்படுவார்கள். 

இதைவிட, ஏழு பேர் ஜனாதிபதியால் நியமிக்கப்படுவார்கள் என்றும்,அந்த ஐந்தடுக்கு நிர்வாகப் பொறிமுறையில்  முன்மொழியப்பட்டிருந்தது.   

குறித்த மாநிலங்களின் சபை, ஆலோசனை வழங்கும் சபையாகவே அமையும் என்பதுடன், சட்டவாக்கத்தைத் தாமதிக்கச் செய்யும் அதிகாரங்களைக் கொண்டிருக்காது என்றும் முன்மொழியப்பட்டிருந்தது.  

 குறித்த முன்மொழிவு அடங்கிய சட்டமூல வரைவும், குறித்த முன்மொழிவு பற்றிய ஜே.ஆரின் காரண காரிய விளக்கமும் சர்வகட்சி மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டது. அத்துடன், சர்வகட்சி மாநாடு 1984 டிசெம்பர் 21ஆம் திகதி ஒத்திவைக்கப்பட்டது.

குறித்த முன்மொழிவுகள் பற்றிக் கருத்துரைத்த சர்வகட்சி மாநாட்டின் பேச்சாளரும், தேசிய பாதுகாப்பு அமைச்சருமான லலித் அத்துலத்முதலி, “குறித்த சட்டவரைவு, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட முன்பு, மக்களின் கருத்துகள் பெறப்படும்” என்று குறிப்பிட்டிருந்தார்.   

பௌத்த பிக்குகளின் எதிர்ப்பு  

இந்த முன்மொழிவு, ஜே.ஆர் அரசாங்கத்துக்குள்ளும் சலசலப்பை ஏற்படுத்தியது, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்குள்ளும் சலசலப்பை ஏற்படுத்தியது. இருதரப்புக்குள்ளும்  இரண்டு தரப்புகளை, இந்த முன்மொழிவுகள் தோற்றுவித்திருந்தன.  

இந்த முன்மொழிவுகளுக்கு, முதலில் தன்னுடைய நாடாளுமன்ற உறுப்பினர்களையும் ஐக்கிய தேசியக் கட்சியினரையும் சம்மதிக்க வைக்க வேண்டிய தேவை, ஜே.ஆருக்கு இருந்தது.   

இது தொடர்பில் நடந்த ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டமொன்றில், குறித்த முன்மொழிவுகளின்படியானதொரு கட்டமைப்பு, இலங்கையின் ஒற்றையாட்சித் தன்மையைக் கொண்ட அரசமைப்புக்கு ஆபத்தானதா என, சர்வஜன வாக்கெடுப்பொன்றின் மூலம் மக்கள் கருத்தை அறிந்து கொள்ள வேண்டும் என, அன்றைய பிரதமர் ரணசிங்ஹ பிரேமதாச, தனது பேச்சில் குறிப்பிட்டிருந்தார்.   

பிரேமதாசவுக்கு அடுத்ததாகப் பேசிய ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்தன, “புதிய முன்மொழிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ள இரண்டாவது சபையோ, மாகாண சபைகளோ, சமஷ்டிக் கட்டமைப்பை ஸ்தாபிக்கவில்லை. ஆகவே, நிச்சயமாக அதனால், ஒற்றையாட்சிக் கட்டமைப்புக்குப்  பாதிப்பு வராது” என்று கூறியதுடன், தனிநாடு கோரிநிற்கும் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியை, அந்தக் கோரிக்கையைக் கைவிடச் செய்வதற்கு மாவட்ட சபைகளைவிடச் சற்றே மேம்பட்டதொரு கட்டமைப்பை வழங்கவேண்டியதாக உள்ளதைக் குறித்த முன்மொழிவுக்கான தன்பக்க நியாயமாகப் பதிவுசெய்தார்.   

ஆனால், இந்த நியாயங்கள் ஐக்கிய தேசியக் கட்சியிலும், ஜே.ஆர் அரசாங்கத்திலும் இருந்த, ‘சிங்கள-பௌத்த’ கடும்போக்குத் தேசியவாதிகளைத் திருப்திப்படுத்துவதாக இருக்கவில்லை. இதைவிட, குறித்த முன்மொழிவுகள் சிங்கள-பௌத்த தேசியவாத பௌத்த பிக்குகளையும் திருப்திப்படுத்துவதாக இருக்கவில்லை. ஜே.ஆரின் முன்மொழிவுகளுக்கு எதிரான பெரும் எதிர்ப்பு, பௌத்த பிக்குகளிடமிருந்து வந்தது.    

அமரபுர நிக்காயாவின் தலைவராக இருந்த மாதிஹே பண்ணசீஹ தேரர், குறித்த முன்மொழிவுகள் பற்றி ஆராய, பெளத்த பிக்குகளுக்கான கூட்டமொன்றை ஜெயவர்தனபுர கோட்டை நாக விகாரையில் உடனடியாகக் கூட்டியிருந்தார்.   

இந்தக் கூட்டத்தில், குறித்த முன்மொழிவுகள், இலங்கையின் அரசமைப்புக்கும் பௌத்தத்துக்கும்  சிங்கள இனத்துக்கும் நாட்டுக்கும் பெரும் ஆபத்தென்று குறிப்பிட்ட அவர், இந்த மாகாணசபை முறைமைக்கு முழுமையான எதிர்ப்பு, சத்தியாக்கிரகப் போராட்டமாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.   

ஜே.ஆரின் முன்மொழிவுகளுக்கு எதிராக, கட்சிக்குள்ளும் வௌியேயும் எதிர்ப்புகள் வலுக்கத் தொடங்கியிருந்தன.   

தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் நிலைப்பாடு  

தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்குள்ளும், குறித்த முன்மொழிவுகள் பற்றி, முரண்பட்ட நிலைப்பாடுகள் உருவாகி இருந்தன.   

கொழும்பில் கூடிய தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் அரசியல் குழுவில், எம்.சிவசிதம்பரத்தை உள்ளடக்கிய சிலர், குறித்த முன்மொழிவுகள் தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கு ஏதுவானவையாக இல்லை என்பதால், அவை நிராகரிக்கப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார்கள்.   

மறுபுறத்தில், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தை உள்ளடக்கிய சிலர், குறித்த முன்மொழிவுகள், முழுமையாகத் திருப்திகரமானதாக இல்லாத போதும், அவற்றை நிராகரித்தால், அது ஜே.ஆர் அரசாங்கத்துடனான அடுத்தகட்டப் பேச்சுவார்த்தைகளுக்கு முட்டுக்கட்டையிடுவதாகவே அமையும் என்றும் கருதினர்.    

அவருடைய எண்ணம், இதனை அடிப்படையாகக் கொண்டு, இந்த முன்மொழிவுகளை மேம்படுத்த, ஜே.ஆர் அரசாங்கத்தோடு தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபடவேண்டும் என்ற அடிப்படையில் அமைந்திருந்தது. 

தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் எழுச்சியோடு, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் செல்வாக்கு, தமிழர்களிடையே சரிந்துகொண்டிருந்தது. இந்தச் சூழலில், அரசாங்கத்தோடு பேச்சுவார்த்தை நடாத்தி இந்தப்பிரச்சினைக்கு உகந்ததொரு தீர்வுகாண்பதுதான், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியிடம் இருந்த ஒரே அரசியல் மூலதனமாகும்.  

 இதை இழக்க, அமிர்தலிங்கம் விரும்பி இருக்காததில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. ஏனென்றால், இந்தப் பேச்சுவார்த்தைகள் ஸ்தம்பிதம் அடையுமானால், அதற்கு மாற்றாக எழுச்சியடைந்து வந்த வழி, பேரழிவும் இரத்தமும் துன்பமும் நிறைந்த வழி என்பதும், இங்கு தமிழர்களைப் பொறுத்தவரை கருத்திற்கொள்ள வேண்டிய விடயமாக இருந்தது.  

 குறித்த முன்மொழிவுகள் பற்றிய, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் நிலைப்பாட்டைத் தௌிவாக எடுத்துரைக்கத் தயாராகிக் கொண்டு, 1984 டிசெம்பர் 21ஆம் திகதி மீளக் கூடிய சர்வகட்சி மாநாட்டில், அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் சமுகமளித்தார்.   

ஆனால், சர்வகட்சி மாநாட்டில் ஜே.ஆரின் நடவடிக்கை, அமிர்தலிங்கத்துக்கு பெரும் அதிர்ச்சி தருவதாக அமைந்தது.   

 அமிருக்கு, ஜே.ஆர் கொடுத்த அதிர்ச்சி  

சர்வகட்சி மாநாட்டில் உரையாற்றிய ஜே.ஆர், “எனது அரசாங்கத்தின் முன்மொழிவுகள் பற்றிய கருத்துகளை, அனைத்துத் தரப்பினரும் எழுத்துமூலம் சமர்ப்பிக்கவும்” என்று கூறியதுடன், குறித்த முன்மொழிவுகளை, மிகக் கவனமாகப் பரிசீலிக்குமாறு சர்வகட்சி மாநாட்டில் பங்குபெற அழைக்கப்பட்டிருந்த மஹா சங்கத்தினரிடம் வினயமாகக் கேட்டுக் கொண்டார்.   

மேலும் குறித்த முன்மொழிவுகளை, மக்கள் முன் சமர்ப்பித்து, சர்வஜன வாக்கெடுப்பொன்றின் மூலம் அல்லது தேர்தல் ஒன்றின் மூலம் அங்கிகாரத்தைப் பெற்றுக்கொள்ளவும் தமது அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் தெரிவித்ததுடன், மறுதிகதி அறிவிக்காமல், சர்வகட்சி மாநாட்டை ஒத்தி வைத்தார்.  

 இந்த ஒத்திவைப்பு, அமிர்தலிங்கத்துக்கு அதிர்ச்சியைத் தந்தது. மறுதிகதி அறிவிக்காமல் ஒத்திவைத்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்த அமிர்தலிங்கம், தான் கருத்துரைக்க விரும்புவதாகத் தெரிவித்தார்.   

கருத்துரைக்க அமிர்தலிங்கத்தை அனுமதிக்காத ஜே.ஆர், தன்னுடைய ஆவணங்களை எடுத்துக் கொண்டு உடனடியாக அங்கிருந்து வௌியேறிவிட்டார். முகத்தில் அறைந்தாற்போன்ற ஜே.ஆரின் அணுகுமுறை, அமிர்தலிங்கம் உள்ளிட்ட தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியினருக்குக் கடும் விசனத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியது.   

அதே தினம் இரவில், மீண்டும் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் அரசியற்குழு கூடியபோது, முன்மொழிவுகளை எதிர்த்தவர்களின் கரம் ஓங்கியிருந்தது. ஜே.ஆர் நம்பத்தகாதவர் என்பதை நிரூபித்துவிட்டார் என்று அவர்கள் சொன்னபோது, அமிர்தலிங்கத்தால் அக்கூற்றை இப்போது, நிச்சயம் மறுத்திருக்க முடியாது.   

மறுநாள் வௌியான அமிர்தலிங்கத்தின் அறிக்கை, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி, குறித்த முன்மொழிவுகளை ஏற்கவில்லை என்பதாக அமைந்திருந்தது. 

அனெக்‌ஷர் ‘சி’ முன்மொழிவுகளின் படியான அம்சங்கள், பிராந்திய சுயாட்சி குறித்த முன்மொழிவுகளில் இல்லை என்பதை, அமிர்தலிங்கம் தன்னுடைய அறிக்கையில் தௌிவாகக் கோடிட்டுக்காட்டியிருந்தார்.   மறுபுறத்தில், சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் குறித்த முன்மொழிவுகளை எதிர்த்தது.   

இந்த நாட்டு மக்கள், மிகத்தௌிவாக இந்த முன்மொழிவுகளை நிராகரிக்க வேண்டும் என்று, சிறிமாவோ தன்னுடைய அறிக்கையில் வேண்டியிருந்தார்.   

கட்சிக்குள்ளும் எதிர்ப்பு  

குறித்த முன்மொழிவுகளுக்குப் பௌத்த பிக்குகளின் எதிர்ப்பு வலுத்திருந்த வேளை, ஐக்கிய தேசிய கட்சிக்குள்ளும் எதிர்ப்புகள் வலுக்கத் தொடங்கின.

அதுமட்டுமல்ல, ஜே.ஆரின் அமைச்சரவைக்குள்ளும் குறித்த முன்மொழிவுகளுக்கான கடும் எதிர்ப்பு சிங்கள-பௌத்த பேரினவாதியாக அறியப்பட்ட அமைச்சர் சிறில் மத்யூவிடமிருந்து வந்தது. “குறித்த முன்மொழிவுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று என்னால், யாருக்கும் ஆலோசனை வழங்க முடியாது” என்று குறிப்பிட்டிருந்தார். 

குறித்த முன்மொழிவுகளுக்கு எதிராக, குறித்த முன்மொழிவுகள் கைவிடப்படவேண்டும் என்று, அமைச்சர் சிறில் மத்யூ எழுதிய திறந்த கடிதமொன்று, ஜே.ஆருக்குக் கடும் விசனத்தையும் சினத்தையும் ஏற்படுத்தியிருந்தது. பலகாலம் முன்பு எடுத்திருந்திருக்க வேண்டிய ஒரு முடிவை, தற்போது ஜே.ஆர் எடுத்திருந்தார்.  

(அடுத்த திங்கட்கிழமை தொடரும்)

Posted August 5, 2018

பதவியிழந்தார் சிறில் மத்யூ 

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி – 155)

சிங்கள – பௌத்த தேசியவாதமும் ஜே.ஆரும்

சமகால ‘சிங்கள-பௌத்த’ தேசியவாதம் என்பது, 19ஆம் நூற்றாண்டின் ஈற்றில், அநகாரிக தர்மபாலவின் ‘புரட்டஸ்தாந்து பௌத்த’ சித்தாந்தத்திலிருந்து தோன்றியது என்று கணநாத் ஒபேசேகர, ஸ்ரான்லி ஜே. தம்பையா உள்ளிட்ட மானுடவியலாளர்களும் லெஸ்லி குணவர்த்தன, எச்.எல்.செனவிரட்ன உள்ளிட்ட வரலாற்றாய்வாளர்களும் குறிப்பிடுகிறார்கள். 

அநகாரிக தர்மபாலவில் உதித்த ‘புரட்டஸ்தாந்து பௌத்தம்’, ‘சிங்கள-பௌத்த’ தேசியவாதமாக, வல்பொல ராஹூல தேரர் போன்ற வித்யாலங்கார பிரிவேனாவைச் சேர்ந்த அரசியல் ஈடுபாடுகொண்ட பௌத்த துறவிகளாலும், மெத்தானந்த, மலலசேகர உள்ளிட்ட பௌத்த தொண்டர்களாலும் 20ஆம் நூற்றாண்டில் வளர்த்தெடுக்கப்பட்டது. 

1956இல் ஆட்சியை எவ்வாறேனும் கைப்பற்றிவிட வேண்டும் என்று தாகம் கொண்டிருந்த எஸ்.டபிள்யூ.ஆர்.டீ.பண்டாரநாயக்கவால், அதுவரை காலமும் பிரதான அரசியல் களத்துக்குள்  நுழைய முயன்று கொண்டிருந்த, சிங்கள-பௌத்த தேசியவாதத்துக்குச் செங்கம்பளம் வழங்கப்பட்டது. 

அன்றிலிருந்து, இலங்கை அரசியலின் முதன்மை முகமாக, ‘சிங்கள-பௌத்த’ தேசியவாதம் உருப்பெற்றது. தேசியவாத அரசியல், அடுத்த படிமுறைகளில் பேரினவாதம், இனவெறியை எட்டிப்பார்ப்பது 20ஆம், 21ஆம் நூற்றாண்டுகளில் உலக அரசியல் கண்டுணர்ந்த ஒரு விடயமாகும். 

தன்னுடைய ‘சிங்கள-பௌத்த’ அடையாளப் பெருமையை, ஒரு போதும் ஜனாதிபதி ஜே.ஆர் பேசத்தயங்கியதில்லை. ஆங்கிலத்தில் convert’s zeal என்று ஒரு சொற்றொடர்ப் பிரயோகமுண்டு. மதமொன்றைச் சார்ந்த குடும்பத்தில் பிறந்தவர்களை விட, அந்த மதத்துக்கு மாறியவர்கள், அம்மதம் மீது தாம், அதீத ஆர்வம் கொண்டவர்களாகக் காட்டிக் கொள்வார்கள் என்பதைச் சுட்டிக் காட்டப் பயன்படும் சொற்றொடரது. 

ஒல்லாந்தர் காலத்தில் மதம் மாறிய கிறிஸ்தவ குடும்பங்களில் ஜெயவர்தன குடும்பமும் ஒன்று; ஆனால், அந்தக் குடும்பத்தில் பிறந்த ஜூனியஸ் றிச்சர்ட் ஜெயவர்தன, இளமையிலேயே தாய் மதத்துக்குத் திரும்பியிருந்தார். இதுபற்றி, 1996ஆம் ஆண்டு ஜே.ஆர் நினைவுக்கட்டுரையில் குறிப்பிடும் றுபேட் ஸ்கொட், பண்டாரநாயக்கவைப் போன்றே, ஜே.ஆரும் தன்னுடைய ஆங்கிலேய அடையாளங்களைத் துறக்க மிகுந்த பாடுபட்டதாகவும், அதன்படியே, பௌத்த மதத்துக்கு மாறியதுடன், சிங்கள மொழியைச் சரளமாகக் கற்றுக் கொண்டதுடன், பண்டாரநாயக்கவைப் போன்றே சுதேச உடையை அணிந்து கொள்ளவும் செய்தார் என்று குறிப்பிடுகிறார். 

இலங்கை ஜனநாயக நாடாக மாறினால், பெரும்பான்மை மதம், பழக்கவழக்கம், மொழி, உடை ஆகியவற்றிலிருந்து உயர்குழாமினர் விலகிநிற்க முடியாது என்பதை ஜே.ஆர், மிக இளமையிலேயே உணர்ந்துகொண்டதே இதற்குக் காரணம் என்று றுபேட் ஸ்கொட் கருத்துரைக்கிறார். 

சிங்கள மொழியை உத்தியோகபூர்வ மொழியாக்க வேண்டும் என்று, சட்டசபையில் முதன்முதலில் முன்மொழிந்ததிலிருந்து, சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் தன்னைச் சிறந்த பௌத்தனாகக் காட்டிக் கொள்வது வரை, ஜே.ஆர் செய்த பல நடவடிக்கைகளை, இந்த மீள்நோக்கி பார்க்கும்போது, ஜனநாயக வௌியில், பெரும்பான்மை இன-மய்ய அரசியலைத் தனக்குச் சாதகமாக மாற்றிக் கொண்ட அவரது தந்திரோபாயத்தின் ஓர் அங்கமோ என்று தோன்றுவது தவிர்க்க முடியாதுள்ளது. 

ஜே.ஆர் தன்னைச் சூழ, பல்வேறுபட்ட அரசியல் ஆளுமைகளை நெருக்கமாக வைத்துக்கொண்டார். மெத்தக்கற்றறிந்த லலித் அத்துலத்முதலி, மக்கள் செல்வாக்கு மிக்க இளந்தலைவரான காமினி திசாநாயக்க, அவரிலும் இளையவரான ரணில் விக்கிரமசிங்க, மறுபுறத்தில் ஏழை எளிய மக்களின் நாயகனாக அறியப்பட்ட ரணசிங்ஹ பிரேமதாஸ, மாத்தறையின் அசைக்கமுடியாத அரசியல் தலைமையாக இருந்த றொனி டி மெல், சிறுபான்மையினர்களில் ஏ.ஸி.எஸ்.ஹமீட், மற்றும் கே.டபிள்யூ.தேவநாயகம் என எல்லாவகை அரசியல் ஆளுமைகளையும் தன்னருகே வைத்துக்கொண்டார். அப்படி ஜே.ஆருக்கு நெருக்கமாக இருந்த இன்னோர் அரசியல் ஆளுமைதான் சிறில் மத்யூ. 

ஜே.ஆரின் ‘பூனைப்பாதம்’

‘அதிகாரம் பற்றிய 48 சட்டங்கள்’ என்று, அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்வது பற்றிய தனது நூலில் 26ஆவது சட்டமாக, ‘உங்கள் கையை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்’ என்கிறார் றொபேர்ட் க்ரீன். 

அதில், பூனையின் பாதம் என்று ஒரு விடயத்தை க்ரீன் குறிப்பிடுகிறார். அதாவது, ஒரு குரங்கானது, நெருப்பில் வெந்துகொண்டிருந்த ஒரு விதையை எடுத்து உண்பதற்கு, தன்னுடைய கையைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, தன்னுடைய நண்பனான பூனையில் பாதத்தைப் பயன்படுத்தியதாம்; 
அதுபோலவே, வெறுப்பு விளைவிக்கின்ற அல்லது பிரபல்யமற்ற செயற்பாடுகளை நீங்கள் செய்வது ஆபத்தானது; ஆகவே, நீங்களும் ஒரு பூனையின் பாதத்தைப் பயன்படுத்துதல் அவசியமாகும் என்பது க்ரீனின் அறிவுரை. 

ஜே.ஆரின் ‘சிங்கள-பௌத்த’ பேரினவாத அரசியலின் ‘பூனைப் பாதமாக’, சிறில் மத்யூ இருந்ததாகவே தோன்றுகிறது. களனித் தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்துக்குத் தெரிவான சிறில் மத்யூ, வௌிப்படையாகவே சிங்களப் பேரினவாதியாக நடந்து கொண்டவர். ‘சிங்களவரே! பௌத்தத்தைக் காக்க எழுந்திருங்கள்!’ என்ற, சிங்கள-பௌத்த பேரினவாதக் கருத்து நிறைந்த, சிறு பிரசுரத்தை எழுதி வௌியிட்டவர். இலங்கை, ‘சிங்கள-பௌத்த’ தேசம் என்று வௌிப்படையாக முழங்கியவர். மாக்ஸிஸ தொழிற்சங்கங்கள் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த காலத்தில், இன்று ஐக்கிய தேசியக் கட்சியின் தொழிற்சங்கமாகக் கருதப்படும் ‘ஜாதிக சேவக சங்கமய’ (தேசிய தொழிலாளர் சங்கம்) தொழிலாளர் மத்தியில் பிரபல்யமுறாத தொழிற்சங்கமாக இருந்தது. 

அந்தத் தொழிற்சங்கத்துக்குத் தலைமையேற்ற சிறில் மத்யூ, எந்தக் கொள்கையின்பாலும் பற்றுறுதிகொண்டிராத அந்தச் சங்கத்தில், ‘சிங்கள-பௌத்த’ தேசியவாதத்தை விதைத்தார் என்று ப்ரையன் செனவிரட்ன குறிப்பிடுகிறார். 

1981 யாழ். நூலக எரிப்பு மற்றும், 1983 ‘கறுப்பு ஜூலை’யின் முக்கிய காரணகர்த்தாக்களில் ஒருவராகக் கருதப்படும் சிறில் மத்யூ, கைத்தொழில் அமைச்சராக இருந்த காலத்தில், கொழும்பில் அமைந்திருந்த தமிழர்களின் பொருளாதாரத் தளத்தை இல்லாதொழித்தால், அவர்களைக் கொழும்பிலிருந்து அகற்றுவதற்கான முதற்படி என்று கருதிச் செயற்பட்டதாகவும் ப்ரையன் செனவிரட்ன கருதுகிறார். 

இலங்கை இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண, இந்தியா அழுத்தம் கொடுத்த போதெல்லாம், என்னுடைய அமைச்சரவை இதற்கு ஒத்துக்கொள்ளாது என்று ஜே.ஆர் காரணம் சொல்வதற்குக் காரணமாக இருந்த முதன் முக்கிய அமைச்சரும் இந்தச் சிறில் மத்யூதான். 

இதே சிறில் மத்யூதான், சர்வகட்சி மாநாட்டில் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வாக, ஜே.ஆர் முன்மொழிந்திருந்த ஐந்தடுக்கு நிர்வாகப் பொறிமுறைக்கு, கடுமையாக எதிர்ப்பை வௌியிட்டிருந்தார். 

இனப்பிரச்சினைத் தீர்வு முயற்சியொன்றுக்கு, சிறில் மத்யூ எதிர்ப்புத் தெரிவிக்கும் முதல்முறை இதுவல்ல. டட்லி-செல்வா ஒப்பந்தத்தையே கட்சிக்குள் எதிர்த்ததில், சிறில் மத்யூ குறிப்பிடத்தக்கவர் என்று ரஜீவ விஜேசிங்ஹ குறிப்பிடுகிறார். 

ஆனால், இந்தமுறை சிறில் மத்யூ காட்டிய எதிர்ப்பு, ஜே.ஆருக்கு ஏற்றதாக அமையவில்லை. 1984 டிசெம்பர் மாதத்தின் இறுதிப்பகுதியில், ஜே.ஆர்  ஜெயவர்தன, அமைச்சர் பதிவியிலிருந்து சிறில் மத்யூவை நீக்கியதுடன், தொடர்ந்து கட்சியிலிருந்து விலக்கினார். 

இந்த நடவடிக்கைக்கு, ஜே.ஆர் குறிப்பிட்ட காரணம், “சிறில் மத்யூ அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பிலிருந்து விலகிவிட்டார்” என்பதாகும். 

கூட்டுப்பொறுப்பு என்ற ஒரு மரபு

அமைச்சரவையின் கூட்டுப்பொறுப்பு என்பது, தற்காலத்தில் இலங்கையில் மறக்கப்பட்டுக் கொண்டிருக்கும் முக்கிய நாடாளுமன்ற அரசியல் மரபுகளில் ஒன்றாகும். 

இலங்கையின் நாடாளுமன்ற முறை என்பது, பிரித்தானிய ‘வெஸ்மினிஸ்டர்’ நாடாளுமன்ற முறையைப் பின்பற்றி உருவானதொன்று. பிரித்தானியாவைப் பொறுத்தவரையில் அது, தொகுக்கப்படாத அரசமைப்பைக் கொண்ட நாடு. அதாவது, பிரித்தானியாவில் அமெரிக்கா, பிரான்ஸ், இலங்கை போன்று அரசமைப்பு என்ற ஒரு தொகுக்கப்பட்ட சட்டம் கிடையாது. மிகச் சில எழுதப்பட்ட சட்டங்களும், பலவேறு மரபுகளும், மாண்புகளும் ஒன்று சேர்ந்ததுதான் பிரித்தானியாவின் அரசமைப்பு. 

ஆகவேதான், மரபுகள் என்பது ‘வெஸ்மினிஸ்டர்’ முறையில், மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. இத்தகைய மரபுகளில் ஒன்றுதான் அமைச்சரவையின் கூட்டுப்பொறுப்பு என்பது. 

நாட்டை நிர்வகிக்கும் அமைச்சரவையானது, ஒரு முடிவை எடுக்கும் போது, அந்த அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அனைத்து அமைச்சர்களும், அந்த முடிவுக்குக் கட்டுப்பட்டவர்களாகிறார்கள். 

அதாவது, குறித்த ஒரு முடிவு தொடர்பில், அமைச்சரவை விவாதிக்கும் போது, அதில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள், தமது தனிப்பட்ட எண்ணப்பாடுகளை அந்த விவாதத்தில் தெரிவிக்கலாம்; ஆனால், விவாதத்தின் பின்னர், அமைச்சரவை ஒரு முடிவை எடுக்கும் போது, அமைச்சரவையின் அனைத்து அமைச்சர்களும் அந்த முடிவுக்குக் கட்டுப்பட்டவர்களாகிறார்கள் என்பதோடு, அவர்கள் தனிப்பட்ட ரீதியில் அம்முடிவை விரும்பாவிட்டாலும், பகிரங்கமாக, அம்முடிவை ஆதரிக்க வேண்டியவர்களாகிறார்கள். 

சுருங்கக் கூறின், அமைச்சரவையின் முடிவுக்கு, அனைத்து அமைச்சர்களும் கூட்டாகப் பொறுப்புடையவர்கள்; அமைச்சரவை ஒரு முடிவு எடுத்தபின், ஒரு தனிப்பட்ட அமைச்சர் வௌியில் வந்து, “இது அமைச்சரவையின் முடிவுதான்; ஆனால், இந்த முடிவை நான் ஏற்றுக்கொள்ளவில்லை” என்ற சொல்ல முடியாது. 

அதுபோலவே, இதனுடன் இணைந்த இன்னொரு மரபு, அமைச்சரவையின் இரகசியக் காப்பு. அதாவது, அமைச்சரவையில் விவாதிக்கப்பட்ட விடயங்கள் இரகசியமானவை; அவற்றை அமைச்சரவையின் உறுப்பினர்கள் வௌியிடக்கூடாது. அமைச்சரவைக் கூட்டத்தில், இந்த அமைச்சர் இப்படிச் சொன்னார்; அந்த அமைச்சர் அப்படிச் சொன்னார் என்று வௌியில் தெரிவிக்கக்கூடாது. 

ஏனெனில், அமைச்சரவையின் முடிவு, அது எதுவாக இருப்பினும், அது அனைத்து அமைச்சர்களுடைய கூட்டு முடிவாகத்தான் அமையும். 

யாராவது ஓர் அமைச்சரால், தனது தனிப்பட்ட நிலைப்பாட்டைத் தாண்டி, அமைச்சரவையின் முடிவை ஏற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டால், அவர் தமது அமைச்சர் பதவியை இராஜினாமாச் செய்ய வேண்டும். 

தேசிய அரசாங்கம் ஒன்று அமைதல், முக்கியத்துவம் மிக்கதொரு சர்வசன வாக்கெடுப்பு நடத்தப்படவிருத்தல் உள்ளிட்ட மிகச் சில சந்தர்ப்பங்களில் இந்த மரபானது ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இதுதான் அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பு என்ற மரபின் சாரம் ஆகும். 

சிறில் மத்யூவின் பதவி நீக்கம்

ஜே.ஆரின் அமைச்சரவை, குறித்த ஐந்தடுக்கு நிர்வாகப் பொறிமுறை தொடர்பான முன்மொழிவை, சர்வகட்சி மாநாட்டில் சமர்ப்பிக்க முடிவெடுத்திருந்தது. 

சிறில் மத்யூ தன்னுடைய எதிர்ப்பை, அமைச்சரவைக் கூட்டத்தில் வௌிப்படுத்தியது இங்கு தவறல்ல; ஆனால், அமைச்சரவைக்கு வௌியில், துண்டுப்பிரசுரம் மூலமாக, அவருடைய எதிர்ப்புக் குரல் வௌிவந்தது, அமைச்சரவையின் கூட்டுப்பொறுப்புக்கு முரணாக அமைகிறது. 

இதைக் காரணம் காட்டித்தான் ஜே.ஆர், சிறில் மத்யூவை அமைச்சரவையிலிருந்து நீக்கினார். ஆனால், இந்த நடவடிக்கையால் ஜே.ஆருக்கோ, தமிழ்த் தரப்புக்கோ, இலங்கைக்கோ உண்மையில் எந்த நன்மையுமில்லை. 

ஏனெனில், சிறில் மத்யூவைவிட பலமான எதிர்ப்பு, ஜே.ஆரால், சர்வகட்சி மாநாட்டில் பங்குதாரர்களாக இணைத்துக்கொள்ளப்பட்ட பௌத்த துறவிகளிடமிருந்து வந்தது. 

சிறில் மத்யூவைப் பதவியிலிருந்து நீக்கிவிடலாம்; பௌத்த துறவிகளின் எதிர்ப்பை என்ன செய்வது?

(அடுத்த திங்கட்கிழமை தொடரும்)

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/பதவியிழந்தார்-சிறில்-மத்யூ/91-219922

நவீனன்

  • Grand Master
  • வரையறுக்கப்பட்ட அனுமதி
  • Gender:Male
  • Interests:cricket,internet,
  • தொடங்கியவர்

Posted August 13, 2018கைவிடப்பட்டது சர்வகட்சி மாநாடு 

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி -156)

அரசும் மதமும் 

ஒரு நாட்டை ஆள்வதற்கான உரிமையை, ஓர் அரசன் எவ்வாறு பெற்றுக்கொண்டான் என்பது, அரசாட்சி பற்றிய மிக அடிப்படையான கேள்விகளில் ஒன்று.

மேற்குலகைப் பொறுத்தவரை, ஒருவனுக்கு ஆட்சி அதிகாரம் செலுத்துதற்கான ஏற்புடைமை பற்றிய நியாயப்படுத்தல், பல நூற்றாண்டுகளுக்கு, “தெய்வீகத்தன்மை வாய்ந்த உரிமை” என்ற ரீதியில்தான் நியாயப்படுத்தப்பட்டு வந்தது.

அதாவது, அந்த உரிமை இறைவனால் நேரடியாக அரசனுக்கு வழங்கப்பட்டது என்று நம்பப்பட்டது. இதனால் அரசன், இறைவனுக்குக் கீழ்ப்பட்டவனாகவும், மக்களுக்கு மேற்பட்டவனாகவும் கருதப்பட்டான். ஆகவே அவன், இறைவனைத் தவிர வேறெவர்க்கும் பொறுப்புடையவன் அல்லன் என்றும் கருதப்பட்டான். 

பழங்காலத் தமிழகத்தைப் பொறுத்தவரை, அரசன் “இறையனார்”, “கோ”, “கோன்” என்று விழிக்கப்பட்டான். ஆகவே அரசனை, இறைவனாக அல்லது இறைவனின் ரூபமாகக் காணும் மரபிருந்தது என்று சிலர் குறிப்பிடுவர். 

நிற்க, ஐரோப்பாவைப் பொறுத்தவரை “தெய்வீகத்தன்மை வாய்ந்த உரிமையினூடாக” அரசாட்சி நியாயப்படுத்தப்பட்டதானது, கத்தோலிக்கத் திருச்சபைக்கும், இறைவனின் முகவராகக் காணப்பட்ட போப்பாண்டவருக்கும், அரசின் மீது அதீத செல்வாக்கை வழங்கியது. இதன்படி, ஐரோப்பிய மத்தியகாலங்களில் போப்பாண்டவர், பல கிறிஸ்தவ இராச்சியங்களின் மன்னர்களைப் பதவிநீக்கிய வரலாறும் உண்டு. இந்தக் காலப்பகுதியில், மதமும் திருச்சபையும், அரசின் கட்டுப்பாட்டில் இருக்கவில்லை என்பதோடு, அரசைக் கட்டுப்படுத்தத்தக்க பலத்தை, மதமும் திருச்சபையும் கொண்டிருந்தன. 

இந்தப்போக்கில் முதல் தத்துவார்த்த மாற்றம், 16ஆம் நூற்றாண்டில் மார்ட்டின் லூதரின் புரட்டஸ்தாந்து எழுச்சியோடு தொடங்கியது. அரசனுக்கும் திருச்சபைக்குமான முதல் முறிவு, இங்கிலாந்தின் எட்டாவது ஹென்றி மன்னன், தன்னுடைய மனைவி கத்தரீனை விவாகரத்துச் செய்ய போப்பாண்டவர் மறுத்ததில் ஏற்பட்டது. அம்முடிவை ஏற்க மறுத்த மன்னன், தன்னுடைய தலைமையில் இங்கிலாந்துக்கான தனித்த இங்கிலாந்து திருச்சபையை ஸ்தாபித்தான். அத்தோடு நிற்காது, தன்னுடைய அதிகாரத்தின் இரும்புக் கரம் கொண்டு, இங்கிலாந்துத் திருச்சபையை நாடு முழுவதும் பரப்பினான். இதனால் கத்தோலிக்கர்கள் உள்ளிட்டவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். தம்முடைய நம்பிக்கையைப் பாதுகாத்துக்கொள்ள விரும்பியவர்கள், இங்கிலாந்தை விட்டு பல்வேறு இடங்களுக்கும் இடம்பெயர்ந்தார்கள். மக்களின் நம்பிக்கையில் அரசாங்கம் தலையிடக்கூடாது என்ற எண்ணம் துளிர்விட்ட முக்கிய சந்தர்ப்பம் இது எனலாம். 

இதன் பின்பு 17, 18ஆம் நூற்றாண்டுகளில், ஐரோப்பா, அறிவொளி எழுச்சியைக் கண்டது. ஜோன் லொக், ஜோன் ஜக் ரூஸோ ஆகியோரிடமிருந்து, சமூக ஒப்பந்தக் கோட்பாடு என்ற தத்துவம் பிறந்தது. அரசாட்சியின் ஏற்புடைமை, சமூகத்தின் ஒப்புதல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு நியாயப்படுத்தப்பட்டது.

தனிமனித உளச்சான்று, சுதந்திரம் போன்ற கருத்துகள் பலம்பெற்றன. தொடர்ந்து வந்த ஃபிரெஞ்சுப் புரட்சியோடு ஏற்பட்ட மொன்டெஸ்க்யு, வோல்டேயர், டிடெறோ உள்ளிட்டவர்களது தத்துவார்த்த எழுச்சி, மதம்சாரா அரசின் தோற்றத்துக்கு வழிவகுத்தது. அதாவது, திருச்சபையின் கட்டுப்பாட்டிலிருந்து அரசு விலக்கப்பட்டது. அரசு, முற்றிலும் மதம் சாராததானது.

அரசில் திருச்சபைக்கு நேரடிப் பங்கு எதுவுமில்லை என்ற அடிப்படையிலான மதச்சார்பற்ற ஃபிரெஞ்சு தேசிய-அரசு உருவானது. இதே சமகாலத்தில்தான், பிரித்தானிய கொலனித்துவத்தை விரட்டியடித்தபின், அமெரிக்கா என்ற அரசும் தோற்றம் பெற்றது. ஃபிரெஞ்சுப் புரட்சியில் பிறந்த தத்துவங்களின் ஆதிக்கத்தில், அமெரிக்காவும் மதம்சாரா அரசாக, அமெரிக்க அரசமைப்பின் உருவாக்கத்தோடு தோற்றம் பெற்றது.

அரசு என்ற ஆட்சி அதிகாரத்திலிருந்து மதத்தை விலக்கி வைப்பதற்கு, பல நூற்றாண்டுகால போராட்டம் அவசியப்பட்டிருக்கிறது. மதம்சாரா அரசு என்பது, மதங்களுக்கு எதிரான அரசு என்று அர்த்தமல்ல. அரசுக்கு மதமில்லை; அது நடுநிலையானது; பக்கச்சார்பற்றது என்று அர்த்தம்.

சுதந்திர இலங்கையில் அரசும் மதமும் 

இலங்கையைப் பொறுத்தவரை, கொலனித்துவத்திலிருந்து நாம், தேசிய-அரசு என்ற கட்டமைப்பைச் சுவீகரித்துக்கொண்டோம்.

1947இல் பிரித்தானிய வெஸ்மினிஸ்டர் முறையின்பாலான சோல்பரி அரசமைப்பை நாம் பெற்றுக்கொண்ட போது, அது மதம்சாரா இலங்கைத் தேசிய-அரசை ஸ்தாபிக்கும் வகையிலான கட்டமைப்பைக் கொண்டிருந்தது.

ஆனால் அடுத்த கால் நூற்றாண்டுக்குள் இந்த நிலை மாறியது. இனங்களை, மதங்களைக் கடந்த ஒற்றைத்தேசிய அடையாளம் ஒன்றைக் கட்டியெழுப்புவதற்குப் பதிலாக, பெரும்பான்மை மக்களது இன-மத அடையாளத்தை, இலங்கை அரசு பூசிக்கொண்டது.

மத்தியகால மேற்குலகில், அரசுகள் மீது கத்தோலிக்க திருச்சபை கொண்டிருந்த ஆதிக்கத்தோடு ஒப்பிடத்தக்க வகையில், இலங்கை அரசின் மீது, பௌத்த மகா சங்கத்தின் ஆதிக்கம் வலுப்பெறத் தொடங்கியது. 

எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவோடு ஆரம்பித்த இந்த ஆதிக்கம், அதன் உச்ச நிலையை, ஜே.ஆர். ஜெயவர்தனவின் ஆட்சியில் அடைந்தது என்று சொன்னால் அது மிகையல்ல. அரசியலுக்கும் மதத்துக்குமான உறவு மிக நெருக்கமானது, அதேவேளை மிகச் சிக்கலானது.

ஏனெனில், ஒன்று மற்றொன்றுக்குப் பயன்தரும் பலமான கருவியாகிறது. இங்கு, எது எதைக் கட்டுப்படுத்துகிறது என்பது முக்கியம்.

சுதந்திர இலங்கையின் மூன்றாவது பிரதமராக இருந்த சேர் ஜோன் கொத்தலாவல, “அரசியலில் பிக்குகள் ஈடுபட்டால், அவர்களது தலையில் தார் பூசுவேன்” என்று முழங்கியிருந்தாரென, தன்னுடைய நூலில் பிரட்மன் வீரக்கோன் குறிப்பிடுகிறார். அதாவது, பௌத்த துறவிகள் அரசியல் ஈடுபடுதல் என்பது, பௌத்த ஒழுக்கத்துக்கு முரணானது என்பதை, சேர் ஜோன் கொத்தலாவல காரணமாகக் கோடுகாட்டியிருந்தார். 

ஆனால், பண்டாரநாயக்கவோடு இந்த நிலை மாறியது. “பண்டா-செல்வா” ஒப்பந்தத்தை எதிர்த்துப் பிக்குகள் போராடிய போது, அங்கு கைகட்டி நின்ற பண்டாரநாயக்க, அதன் பின்னர் “பண்டா-செல்வா” ஒப்பந்தத்தைக் கைவிட்டதானது, இங்கு அதிகாரம் யாரிடம் இருக்கின்றது என்பதை உணர்த்துவதாக அமைந்தது. இதுபோன்ற நிலையில்தான், தற்போது ஜே.ஆரும் இருந்தார்.

ஜே.ஆரின் முடிவுக்கு வலுத்த எதிர்ப்பு 

சிறில் மத்யூவை பதவி விலக்கியதால், பிரச்சினை முடிந்துவிடவில்லை. ஜே.ஆரின் ஐந்தடுக்கு நிர்வாகப் பொறிமுறை முன்மொழிவுக்கு, சிறில் மத்யூவிடமிருந்து வந்த எதிர்ப்பை விடப் பலமான எதிர்ப்பு, பௌத்த பிக்குகளிடமிருந்து வந்தது.

சர்வகட்சி மாநாடு என்பது, அரசியல் கட்சிகளுக்கானது. அதில் மகா சங்கத்தினரையும் மதத்தலைவர்களையும் ஜே.ஆர் தான் உள்ளீர்த்திருந்தார். அதற்கு எந்த அவசியமும் இருக்கவில்லை. 

இன்று ஜே.ஆர் சிக்கியிருந்த நிலைக்கு, ஜே.ஆர் தான் காரணம். இதனை, இரண்டு விதமாகப் பார்க்கலாம். 

ஒன்று, ஜே.ஆர் இப்போது எழுந்திருந்ததை விரும்பியிருந்தார். அதாவது, தான் கொடுக்க முயன்றாலும், பௌத்த பிக்குகள் தடுத்துவிட்டார்கள் என்ற விம்பத்தை ஜே.ஆர் உருவாக்க விளைந்திருக்கலாம். அந்தப் பெருந்திட்டத்தின் அடிப்படையிலேதான் அவர், சர்வகட்சி மாநாட்டில் பிக்குகளைப் பங்குபெறச் செய்திருந்தார்.

இரண்டு, நல்லெண்ணத்துடன் ஜே.ஆர் செயற்பட்டிருந்தாலும், அவரது நல்லெண்ணமே அவருக்கு எதிராக அமைந்திருந்தது. தான் நல்லெண்ணத்துடன் அமைத்த வியூகத்தில், தானே சூழ்நிலைக்கைதியாகச் சிக்கிக்கொண்டார்.

இதில் எந்தப் பார்வையை நாம் எடுத்துக்கொண்டாலும், அது பௌத்த பிக்குகளுக்கு, இலங்கை அரசில் அதீத செல்வாக்கை வழங்குவதாகத்தான் அமைகிறது.

இங்கு பௌத்த பிக்குகள் எதிர்த்தது, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் முன்மொழிவையோ, இந்தியாவினுடைய முன்மொழிவையோ அல்ல; மாறாக, ஜே.ஆரினுடைய முன்மொழிவை.

கடும் எதிர்ப்பைச் சமாளிக்க முடியாத ஜே.ஆர், அந்த எதிர்ப்புக்குக் கீழிறங்கிச் செல்ல முடிவெடுத்தார். ஆனால் அதற்கு, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியைக் காரணமாகச் சொன்னதுதான், இதில் நகைப்புக்குரிய விடயம். 

கைவிடப்பட்டது சர்வகட்சி மாநாடு

அதன்படி முன்மொழிவுகளைக் கைவிடவும், சர்வகட்சி மாநாட்டைக் கைவிடவும் தான் முடிவெடுத்திருப்பதாக, 1984 டிசெம்பர் 26ஆம் திகதி நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், ஜே.ஆர் அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து வௌியிட்ட அரசாங்க அறிவிப்பொன்றில் “சர்வகட்சி மாநாட்டின் பெரும்பான்மையினரின் பார்வையைப் பிரதிநிதித்துவம் செய்த முன்மொழிவுகள் சில, 19 டிசெம்பர் 1984 அன்று, அமைச்சரவையின் முன்பு கலந்துரையாடலுக்காகச் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. அவை தொடர்பில், மீண்டும் 1984 டிசெம்பர் 26 அன்றும் கலந்துரையாடப்பட்டன. இதேவேளை, டிசெம்பர் 21ஆம் திகதி வரை அரசாங்கக் குழுவோடு குறித்த முன்மொழிவுகளிலுள்ள அரசாங்கக் கட்டமைப்பு முறை, அதிகாரப் பரவலாக்கம் ஆகியவற்றின் விவரங்கள் தொடர்பில் கலந்துரையாடிக் கொண்டிருந்த தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியானது, இது பற்றி மேலதிகமாகக் கலந்துரையாடுவதால் பயனில்லை என்று பகிரங்கமாக அறிவித்துள்ளது. ஆகவே இந்த முன்மொழிவுகள் பற்றிக் கலந்துரையாடுவதாலோ அல்லது முடிவெடுப்பதோ எந்தப்பயனையும் தரப்போவதில்லை என்று, அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. அமைச்சரவையானது, அதிமேதகு ஜனாதிபதியிடம் அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கான அவருடைய சகல முயற்சிகளையும் எடுக்குமாறு வேண்டிக் கொண்டுள்ளதுடன், பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க சகல நடவடிக்கைகளையும் எடுக்குமாறும் வேண்டிக்கொண்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

சர்வகட்சி மாநாடு என்ற நாடகம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. இதில் அரசியல் தீர்வு காணும் முயற்சிகள் என்பது எடுக்கப்பட்டதோ இல்லையோ, “பயங்கரவாத ஒழிப்பு” தொடர்பில் பாதுகாப்பைப் பலப்படுத்தும் நடவடிக்கை, வடக்கில் டிசெம்பர் 30ஆம் திகதி தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது. 

மீண்டும் சங்கடத்தில் அமீர்

தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்லிங்கம், கடும் அதிர்ச்சியிலிருந்தார்.

தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி, சர்வகட்சி மாநாட்டில் அவர் கலந்துகொண்டிருந்தார். இது, ஜே.ஆர் அரசாங்கத்தின் காலங்கடத்தும் செயற்பாடு என்று அக்குழுக்கள் எடுத்துரைத்த போது, அதை மீறியும் அவர் இந்த செயற்பாட்டில் பங்குபற்றியிருந்தார்.

ஒரு வருட முயற்சி இப்படி ஒன்றுமில்லாமற் போனது நிச்சயம் துரதிர்ஷ்டவசமானதே. மிகுந்த ஏமாற்றத்துடன் அமிர்தலிங்கம் சென்னை சென்றிருந்தார்.

அமிர்தலிங்கத்தைப் பொறுத்த வரையில், இனி ஆயுதப் போராட்டம்தான் ஒரே வழி என்று சொல்ல முடியாது. ஏனென்றால், அது அரசியல் தற்கொலைக்குச் சமமானதாகும். பேச்சுவார்த்தை மூலமான தீர்வு முயற்சி தோல்வி கண்டநிலையில், அவர் முன் அதிக தெரிவுகள் இருக்கவில்லை.

மீண்டும் தமிழகம் சென்றிருந்த அமிர்தலிங்கம், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி அஹிம்சை வழியில் சத்தியாக்கிரகப் போராட்டத்தை முன்னெடுக்கும் என்று தெரிவித்திருந்தார். இந்த சத்தியாக்கிரகப் போராட்ட அறிவிப்பு, வடக்கிலும் கிழக்கிலும், அதுவும் இளைஞர்களிடையே, அதிருப்தியையும் விசனத்தையும் சினத்தையும்தான் தோற்றுவித்தது.

“நாங்கள், பல முறை இந்த சத்தியாக்கிரகத்தைப் பார்த்துவிட்டோம். ஒரு கோவிலுக்கு முன்னாள் உட்கார்ந்துகொள்வார்கள்; மங்கையற்கரசி அமிர்தலிங்கம் பாட்டுப்பாடுவார். பிறகு மாலையானதும், பழச்சாறு குடித்துவிட்டுக் கலைந்துவிடுவார்கள். இது ஜே.ஆர். ஜெயவர்தன அரசாங்கத்தின் மீது எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது” என்பது, அமிர்தலிங்கத்தின் இந்த அறிவிப்புக்கு எதிராக வைக்கப்பட்ட குறிப்பிடத்தக்க விமர்சனமாகும்.

இப்போது அமிர்தலிங்கத்தின் ஒரே நம்பிக்கையாக இருந்தது, இந்தியாவும் இந்தியாவின் புதிய பிரதமராக பதவியேற்றிருந்த ராஜீவ் காந்தியுமே.

(அடுத்த திங்கட்கிழமை தொடரும்)

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/கைவிடப்பட்டது-சர்வகட்சி-மாநாடு/91-220246

நவீனன்

  • Grand Master
  • வரையறுக்கப்பட்ட அனுமதி
  • Gender:Male
  • Interests:cricket,internet,
  • தொடங்கியவர்

Posted August 20, 2018ராஜீவின் புதிய அணுகுமுறைஎன்.கே. அஷோக்பரன்

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி – 157)

அமீரின் கோரிக்கை

ஜே.ஆரின் சர்வகட்சி மாநாடு தொடர்பில், ஓராண்டு காலத்துக்கு முன்பே, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் சொன்ன ஆரூடம் பலித்திருந்தது.  

 இது அமிர்தலிங்கத்தையும் தமிழ் மக்களையும் பொறுத்தவரையில், துரதிர்ஷ்டவசமானதாகும்.   
இராணுவ வழியில், இந்த இனப்பிரச்சினையை அணுக ஜே.ஆர் எண்ணியிருந்தார். அதற்குத் தயாராவதற்குத் தேவையான காலத்தைப் பெற்றுக்கொள்வதற்கான, காலங்கடத்தும் முயற்சியாகவே சர்வகட்சி மாநாடு நடத்தப்பட்டது என்பதே, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் கருத்தாக இருந்தது.   

இதன் காரணமாகத்தான், அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி, சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்பதை, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் கடுமையாக எதிர்த்திருந்தன.   

ஜே.ஆர், தன்னுடைய இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பான முன்மொழிவுகளையும் சர்வகட்சி மாநாட்டையும் கைவிட்டதாக, 1984 டிசெம்பர் இறுதியில் அறிவித்த நிலையில், அமிர்தலிங்கத்தின் நிலைமை, பெரும் தர்மசங்கடமாக இருந்தது.   

மறுபுறத்தில், இந்திரா காந்தியின் மறைவைத் தொடர்ந்து, பிரதமராகப் பதவியேற்றிருந்த ராஜீவ் காந்தி, இந்திய நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு, 1984 டிசெம்பரில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றியீட்டி, இந்தியாவின் மிக இளவயதுப் பிரதமராக, 1984 டிசெம்பர் 31ஆம் திகதி பதவியேற்றிருந்தார்.   

ராஜீவ் காந்தி, நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் அதைத் தொடர்ந்து ஆட்சியமைக்கும் சமாசாரங்களில் கவனம் செலுத்திக்கொண்டிருந்த காலகட்டத்தில்தான் ஜே.ஆர், சர்வகட்சி மாநாட்டைக் கைவிடும் முடிவை அறிவித்திருந்தார்.   

இந்த நிலையில், தமிழகம் திரும்பியிருந்த அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்துக்கு இந்தியாவை நம்புவதை விட, வேறு வழியிருக்கவில்லை. 1985 ஜனவரி இரண்டாம் திகதி, ராஜீவ் காந்திக்கு இலங்கைத் தமிழர்கள் சார்பில் வாழ்த்துத் தெரிவித்து, கடிதமொன்றை அமிர்தலிங்கம் அனுப்பி இருந்தார்.   

அதில், ராஜீவ் காந்தியின் கரிசனை, இலங்கை மீது திரும்ப வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தி இருந்தார். 

கடந்த இரண்டுவார காலத்துக்குள், இலங்கையில் வாழும் 30 இலட்சம் தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணும் முயற்சி, முட்டுக்கட்டை நிலையை எட்டியுள்ளது என்று குறிப்பிட்ட அமிர்தலிங்கம், ஜே.ஆர். ஜெயவர்தன அரசாங்கம், திடீரென்று சர்வகட்சி மாநாட்டைக் கைவிடுவதாக அறிவித்துள்ளதுடன், ஜே.ஆரின் அமைச்சரவை, ஜே.ஆர் சர்வகட்சி மாநாட்டின் முன்பாகச் சமர்ப்பித்திருந்த முன்மொழிவுகளையும் கைவிடுவதாக அறிவித்திருப்பதானது, கடந்த ஒன்றரை வருட காலத்துக்கும் மேலாக, இந்தியா எடுத்துவந்த முயற்சிகளைச் சூனியமாக்குவதாக அமைகிறது என்று எழுதியிருந்தார்.  

 மேலும், தமிழர் வாழும் பகுதிகளில் தற்போது நிலவி வரும், அரச பயங்கரவாதத்தை முற்றுப் பெறச்செய்யும் அரசியல் தீர்வொன்று, எட்டப்படும் என்ற நம்பிக்கை, முற்றாக அற்றுப்போயுள்ளது. முன்னாள் பிரதமர் அவர்களுடைய செல்வாக்கும், நிரந்தரத் தீர்வொன்றை எட்டும் நல்லெண்ணமும்தான் பெரும் இன அழிப்பிலிருந்து, தமிழ் மக்களைக் காக்கும் அரணாக இருந்ததுடன், பேச்சுவார்த்தை நடவடிக்கைகளை ஊக்குவிப்பதாகவும் அமைந்தது. நீங்கள், டிசெம்பர் மாதம் வௌியிட்டிருந்த அறிக்கை, இலங்கைத் தமிழர்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்படும் கொடூர வன்முறைத் தாக்குதல்கள் பற்றிய இந்தியாவின் அக்கறையைச் சுட்டும் பேச்சுகள் என்பவை தொடர்பில், நாம் மிகுந்த நன்றியுடையவர்களாகிறோம். தற்போது ஏற்பட்டிருக்கும் முட்டுக்கட்டையானது, இந்தியா புதிய முன்னெடுப்புகளைச் செய்ய வேண்டிய தேவையை உருவாக்கியுள்ளது. இந்தியாவின் செல்வாக்கை, இலங்கை அரசாங்கமும் தமிழ் மக்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர் என்று, தனது கடிதத்தில் அமிர்தலிங்கம் குறிப்பிட்டிருந்தார். 

மேலும், இந்தியாவைத் தவிர எமக்கு வேறு உதவியில்லை. உதவியற்றிருக்கும் தமிழர்கள், தம்மை அடக்குமுறையிலிருந்தும், இன அழிப்பிலிருந்தும் பாதுகாப்பதற்காக, உங்களைத்தான் எதிர்பார்த்து இருக்கிறார்கள் என்று, ராஜீவ் காந்தியிடம், இலங்கை விவகாரத்தில் உடனடியாகத் தலையிட, உருக்கமாக வேண்டியிருந்தார்.   

ஓரம் கட்டப்பட்ட பார்த்தசாரதி

அதைத் தொடர்ந்து அமிர்தலிங்கம், உடனடியாக கோபால்சாமி பார்த்தசாரதியையும் தொடர்புகொண்டிருந்தார். 

தன்னை உடனடியாக, டெல்லியில் சந்திக்குமாறு பார்த்தசாரதி கேட்டுக்கொண்டதற்கு இணங்க, டெல்லி சென்ற அமிர்தலிங்கம் குழு, 1985 ஜனவரி 13ஆம் திகதி, பார்த்தசாரதியைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியது.   

இந்தப் பேச்சுவார்த்தையில், அமிர்தலிங்கத்தின் பிரதான நோக்கம், புதிதாகப் பதவியேற்றுள்ள ராஜீவ் காந்தி தலைமையிலான, இந்திய அரசாங்கத்தின் இலங்கை தொடர்பான நிலைப்பாட்டை, அறிந்துகொள்வதாகவே இருந்தது.   

இந்திரா காந்தியினுடைய இறுதிச் சடங்குகளில் கலந்துகொண்டிருந்த ஜே.ஆர், ராஜீவ் காந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து, அதுதொடர்பில் ஊடகங்களுக்குச் சாதகமான கருத்தையே வௌியிட்டிருந்தார். 

ஆகவே, இலங்கைத் தமிழ்மக்கள் தொடர்பில், இந்திராவின் பின்பான, இந்தியாவின் நிலைப்பாடு மாறியிருக்கிறதா என்ற கேள்வி, தமிழ்த் தலைமைகளுக்கு முக்கியமானதொன்றாகவே இருந்திருக்கும்.   
இலங்கை தொடர்பில், ராஜீவ் காந்தி அரசாங்கம், புதிய கொள்கையைக் கொண்டிருப்பதாக பார்த்தசாரதி குறிப்பிட்டிருந்தார்.  “இலங்கையுடனான உறவில் எதிர்ப்பைவிட, இணக்கமுறையிலான அணுகுமுறையைக் கையாளுதல், பேச்சுவார்த்தைகளில் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களையும் இணைத்துக்கொள்ளுதல், பேச்சுவார்த்தைக்கு முன்னரும், பின்னரும் இலங்கை அரசாங்கம் மற்றும் ஆயுதக் குழுக்களுக்கிடையே, யுத்தநிறுத்தத்தை உருவாக்குதல், ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யத்தக்கதான தீர்வைக் காணுதல் ஆகியவற்றின் அடிப்படையில்தான், இலங்கை தொடர்பிலான, இந்தியாவின் புதிய கொள்கை அமைந்திருக்கும்” என்று, பார்த்தசாரதி மேலும் விளக்கியிருந்தார்.   

அமிர்தலிங்கத்துக்கு, இது தொடர்பில் நிறையச் சங்கடமும் அசூசையும் இருந்தது. ஜே.ஆரை இனியும் நம்பமுடியாது என்ற நிலைக்கு அமிர்தலிங்கம் வந்திருந்தார். அதைப் பார்த்தசாரதியிடம் வௌிப்படையாகவே  குறிப்பிட்டிருந்தார். இதைப் பார்த்தசாரதியும் ஆமோதித்திருந்ததுடன், தானும் இக்கருத்தையே ராஜீவ் காந்தியிடம் தெரிவித்திருந்ததாகக் குறிப்பிட்டிருந்தார்.   

ஆயினும் ராஜீவ் காந்தி, தன்னுடைய கருத்தைக் கேட்கவில்லை என்று அமிர்தலிங்கத்திடம் தெரிவித்த பார்த்தசாரதி, தான் விரைவில் இந்தச் செயற்பாட்டிலிருந்து ஓரம் கட்டப்படலாம் என்று தெரிவித்ததுடன், ராஜீவ் காந்தியை நேரில் சந்தித்து, அமிர்தலிங்கத்தின் கருத்துகளை, அவரிடம் நேரடியாகவே சொல்லுமாறும் கேட்டுக்கொண்டிருந்தார். 

இலங்கை விவகாரத்திலிருந்து, அடுத்து இரண்டு மாதங்களில், பார்த்தசாரதி முழுமையாக ஓரம் கட்டப்பட்டார் எனலாம்.  இது பற்றி, தன்னுடைய நூலொன்றில் குறிப்பிடும் ஜே.என். திக்ஸிட், ‘ராஜீவ் காந்தி மற்றும் பார்த்தசாரதி இடையேயான உறவு, நேர்மறையானதாக இருக்கவில்லை. 

பார்த்தசாரதியின் ஆழ்ந்து ஆராய்ந்த, கவனம்மிக்க, பொறுமையான இராஜதந்திரப் பாணி, ராஜீவ்காந்தியின் உடனடியான, முடிந்தமுடிபான விளைவுகளைத் தரத்தக்க இராஜதந்திர அணுகுமுறையுடன் ஒன்றிப்போகவில்லை. ஆகவே, இந்தியாவின் புதிய வௌியுறவுச் செயலாளராக நியமிக்கப்பட்ட ரொமேஷ் பண்டாரி, 1985 பெப்ரவரி, மார்ச் காலப்பகுதியில், இலங்கை விவகாரம் தொடர்பாக, இந்திய அரசாங்கத்தின் முக்கிய பிரதிநிதியானார்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.    

இந்த இராஜதந்திரக் கொள்கை மாற்றம் பற்றி, அமிர்தலிங்கத்திடம் மட்டுமல்ல, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களிடமும் பார்த்தசாரதி தெரிவித்திருந்தார். 

ஜே.ஆரின் நல்லெண்ணம் பற்றி, ராஜீவ் காந்தி நம்பிக்கை கொண்டுள்ளதாக அமிர்லிங்கத்திடம் பார்த்தசாரதி தெரித்திருந்தார். இந்திரா காந்தியின் இருவழிக் கொள்கை கைவிடப்படும் என்றும், பேச்சுவார்த்தைக்கு முன்பாக, யுத்த நிறுத்தத்தை இந்தியா வலியுறுத்துமென்றும் தெரிவித்ததுடன், இனித் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் யாவும் ஒன்றிணைந்து, ஒரே சக்தியாகச் செயற்படுவதுதான் உசிதமானது என்ற ஆலோசனையையும் வழங்கியிருந்தார்.   

அமீர் – ராஜீவ் சந்திப்பு

1985 ஜனவரி 14ஆம் திகதி டெல்லியில், அமிர்தலிங்கம் குழு, இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்தியாவை அண்மித்த அனைத்து நாடுகளுடனும் தான், நல்லுறவைப் பேணவே விரும்புவதாக அமிர்தலிங்கத்திடம் தெரிவித்திருந்த ராஜீவ்காந்தி, இலங்கையை மட்டும், இதற்கு விதிவிலக்காக்க முடியாது என்று, நேரடியாகவே தெரிவித்திருந்தார்.   

பேச்சுவார்த்தை மூலமான தீர்வுதான் ஒரேவழி என்பது, ராஜீவின் கருத்தாக இருந்தது. இந்திரா காந்தி காலத்திலிருந்து பெரிதும் வேறுபட்ட களமாக இது இருக்கிறது என்பது, அமிர்தலிங்கத்துக்குப் புரிந்திருக்கும்.   

பேச்சுவார்த்தைக்குப் பின்னர், ஊடகங்களிடம் கருத்துரைத்த அமிர்தலிங்கம், “இலங்கையில் அப்பாவித் தமிழ் மக்களின் உயிர்கள் இனியும் பலியாகாதிருக்க, இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். 

இந்திரா காந்தியோடு ஒப்பிடுகையில், இலங்கை அரசாங்கத்துக்குச் சாதகமானதொரு நிலைப்பாட்டை ராஜீவ் காந்தி எடுத்திருந்தாலும், அமிர்தலிங்கத்துடன் ராஜீவ் காந்தி சந்திப்பை நடத்தியதானது, இலங்கை அரசாங்கத்துக்குக் கடும் அதிருப்தியையும் விசனத்தையும் ஏற்படுத்தி இருந்தது.   

ஜனவரி 16ஆம் திகதி, ஊடகங்களிடம் கருத்து வௌியிட்டிருந்த அமைச்சர் ஆனந்த திஸ்ஸ டி அல்விஸ், “இலங்கைக்குள் பிரிவினையையும் தனிநாட்டையும் கோரும், ஒன்றரை வருட காலத்துக்கும் மேலான முயற்சியின் விளைவாக, உருவான முன்மொழிவுகளை நிராகரித்த ஒரு தரப்புடன், வௌிநாட்டு அரசாங்கமொன்று பேச்சுவார்த்தை நடத்தியது தொடர்பில், இலங்கை அரசாங்கம் கவலை கொள்கிறது” என்று குறிப்பிட்டதுடன், தமது அதிருப்தியை, இந்திய அரசாங்கத்தின் கவனத்துக்கும் கொண்டுசென்றுள்ளதாகத் தெரிவித்திருந்தார்.   

பௌத்த பிக்குகளின் அழுத்தத்தால் ஜே.ஆர், தான் கைவிட்ட, தன்னுடைய முன்மொழிவுகளை, அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி நிராகரித்ததால்தான் கைவிட்டதாக, அக்கதையை மாற்றி இருந்தமையானது ஆச்சரியத்துக்குரியது.   

ஒருவேளை, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி, ஜே.ஆரின் முன்மொழிவுகளுக்கு நேரடியாகவே சம்மதித்திருந்தால், அதை ஜே.ஆரால் நிறைவேற்றியிருக்க முடியுமா என்பது ஐயத்துக்குரிய கேள்வியாகும்.   

இந்திரா காந்தியைப் போன்று, இலங்கை அரசாங்கத்துடன் முரண்பட்ட உறவைக் கைக்கொள்ள, ராஜீவ் காந்தி விரும்பி இருக்கவில்லை என்பது, அவரது அடுத்த நடவடிக்கையில் வௌிப்பட்டது.   

ஜனவரி 18ஆம் திகதி, இந்தியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகராக இருந்த பேர்னார்ட் திலகரட்ணவை வரவழைத்துச் சந்தித்த ராஜீவ் காந்தி, இலங்கையின் இனப்பிரச்சினையைத் தீர்க்கத் தான் உதவி செய்ய விரும்புவதாகக் குறிப்பிட்டதோடு, இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவைச் சந்திக்க விரும்புவதாகவும் தெரிவித்திருந்தார்.   

இந்தச் செய்தி, இலங்கை உயர் ஸ்தானிகர் ஊடாக, ஜனாதிபதி ஜே.ஆரிடம் சேர்ப்பிக்கப்பட்டது.  ஜே.ஆர் இதை, வேறு வழியில் அணுகத் திட்டமிட்டார். ராஜீவ் காந்தியை நேரடிச் சந்திப்பதை, ஜே.ஆர் விரும்பி இருக்கவில்லை. அதனால், இலங்கையின் தேசியப் பாதுகாப்பு அமைச்சரான லலித் அத்துலத்முதலியை, ராஜீவ் காந்தியுடன் சந்திப்பு நடத்த, இந்தியாவுக்கு அனுப்பி வைக்க, ஜே.ஆர் முடிவெடுத்தார்.   

இந்த விஜயமும் சந்திப்பும் 1985 பெப்ரவரி மத்தியில் நடத்தப்படத் திட்டமிடப்பட்டது.  இதேவேளை, 1985 ஜனவரியில் இலங்கையின், வடக்கு-கிழக்கில் இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் ஜே.ஆரும் அத்துலத்முதலியும் கங்கணம்கட்டிக்கொண்டு செயற்பட்டனர்.   

(அடுத்த திங்கட்கிழமை தொடரும்)  

——————————————————–

 August 26, 2018

வன்முறையுடன் தொடங்கிய 1985

என்.கே. அஷோக்பரன்

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி – 158)

பயங்கரவாத ஒழிப்பும் அச்சுவேலித் தாக்குதலும்

1985 ஜனவரியில் ஜே.ஆர். ஜெயவர்தனவின் இராணு ரீதியான அணுகுமுறை, அதனுடைய முழுவடிவத்தைப் பெறத்தொடங்கியது.   

‘தேசிய பாதுகாப்பு’ என்பது, சகல நிலைகளிலும் முக்கியத்துவம் மிக்கதொன்றாக மாற்றப்பட்டது. ‘பயங்கரவாத ஒழிப்பு’ என்பது, அரசாங்கத்தின் வேதவாக்கானது.   

தேசிய பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத்முதலி தலைமையில், இந்தச் செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களை, களையெடுக்கும் நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டது.   

இதன்படி, 1985 ஜனவரி முதல்வாரத்திலேயே, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருக்கோணமலை, வவுனியா, அக்கரைப்பற்று என, வடக்கு, கிழக்கு எங்கும் நடத்தப்பட்ட சுற்றிவளைப்புத் தேடுதல்களில், ஆயிரக்கணக்கான பொதுமக்கள், பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டார்கள்.  

1985 ஜனவரி ஒன்பதாம் திகதி, யாழ். அச்சுவேலிப் பகுதியில், இலங்கை இராணுவம், விடுதலைப் புலிகள் அமைப்பின் மறைவிடம் ஒன்றின் மீது, தாக்குதல் நடத்தியதில், அந்த அமைப்பின் யாழ்ப்பாணத் தளபதி கொல்லப்பட்டார்.  

இது, அரச படைகளுக்கு உற்சாகத்தையும் நம்பிக்கையையும் கொடுத்தது. ஜே.ஆர் அரசாங்கம், இதைக் குறிப்பிடத்தக்க வெற்றியாகக் கருதியதுடன், தாக்குதல் நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச் சென்றது.   

இந்தத் தாக்குதல் ஜே.ஆருக்கு, தான் தேர்ந்தெடுத்த ‘பயங்கரவாத ஒழிப்பு’ என்ற, இராணுவ ரீதியான அணுகுமுறை மீதான, நம்பிக்கைக்கு உரமூட்டியது. பெப்ரவரி நான்காம் திகதி, ஜே.ஆர் ஆற்றிய சுதந்திரதின உரையில், “பயங்கரவாத அச்சுறுத்தலை நாம் வெற்றிகொள்வோம்” என்று, உறுதியுடன் குறிப்பிட்டிருந்தார்.   

இந்த வெற்றியை, அரச படைகளின் மிகப்பெரிய ஊடறுப்பு என்று, சிலாகித்துப் பேசிய தேசிய பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத்முதலி, உளவுத்தகவலின் அடிப்படையிலேயே, இந்தத் தாக்குதல் நடத்தப் பட்டதாகவும், தான் தேசிய பாதுகாப்பு அமைச்சராகப் பொறுப்பேற்றதன் பின்னர், நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல் இது என்றும், குறிப்பிட்டிருந்தார்.   

இந்தத் தாக்குதல் வெற்றியைத் தொடர்ந்து, தாக்குதல் நடத்தப்பட்ட இடத்திலிருந்து, குறித்த தமிழ் இளைஞர் ஆயுதக் குழுவினர், வசம் இருந்த ஆயுதங்கள் பலவும் மீட்கப்பட்டன.   

அதன் மூலம், குறித்த ஆயுதங்கள் இந்தியாவால் வழங்கப்பட்டன என்று, அடையாளம் காணப்பட்டதாகத் தனது நூலில், ரீ.சபாரட்ணம் குறிப்பிடுகிறார்.   

இதுவரை, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களுக்கு, தான் ஆதரவு வழங்குவதை, இந்தியா நேரடியாக ஏற்றுக்கொள்ளவில்லை. இலங்கை அரசாங்கம், இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தபோதெல்லாம் இந்தியா, அதை மறுத்து வந்துள்ளது.   

இந்த நிலைப்பாட்டைத் தனது நூலொன்றில் ஜே.என். திக்ஸிட் பின்வருமாறு விமர்சிக்கிறார். ‘இந்தக் குற்றச்சாட்டை இந்தியா, வௌிப்படையாக மறுத்திருக்க வேண்டியதில்லை. மாறாகக் குறித்த குற்றச்சாட்டு தொடர்பில், அமைதி காப்பதுடன், பதில் சொல்ல வேண்டுமானால், இலங்கையில் ஆயுதக் குழுக்கள் உருவாகியுள்ளதெனில், அது இலங்கை அரசாங்கத்தின் தமிழர்கள் மீதான பாகுபாட்டு கொள்கைகளால் உருவானது என்று குறிப்பிட்டிருக்கலாம்’ என்று அவர் தனது நூலில் கருத்துரைக்கிறார்.   

இந்தியா, இந்தக் குற்றச்சாட்டை மறுப்பதில் உள்ள சிக்கல், இதில் இந்தியாவின் பங்கை வௌிப்படுத்தத்தக்க ஆதாரங்கள் கிடைக்கும் போது, அது இராஜதந்திர ரீதியில் இந்தியாவைச் சங்கடத்துக்கு உட்படுத்தும் என்பதுடன், இலங்கை அரசாங்கத்துக்கு இந்தியாவுடன் பேரம் பேசத்தக்க பலத்தை வழங்குவதாக அமையும்.   

மறுபுறத்தில் வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களுக்கு எதிராக அதிகரித்த கைதுகள், மற்றும் தொடர்ந்த வன்முறைத் தாக்குதல்கள் தொடர்பில், தமிழ்த் தலைமைகள் தமது கண்டனத்தைப் பதிவு செய்தனர். அவர்களுக்கு இந்தியாவை விட, வேறு நாதியிருக்கவில்லை.  

தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் முக்கியத் தலைவர்களுள் ஒருவரான எம்.சிவசிதம்பரம், “தமிழர்கள் இனி, இந்தியாவிடம்தான் தமது பாதுகாப்புக்குக் கையேந்தவேண்டும்” என்று கூறியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.  

பதிலடித் தாக்குதல்கள்

அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகளுக்கு எதிரான, பதிலடியை வழங்கத் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் தயாராகின. 1985 ஜனவரி 19ஆம் திகதி, தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) யாழிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணமான ‘யாழ்தேவி’ ரயில் மீது, முறிகண்டிப் பிரதேசத்தில் வைத்து, குண்டுத் தாக்குதலொன்றை நடத்தியது.   

இந்தத் தாக்குதலில், 22 இராணுவ வீரர்கள் உட்பட, 34 பேர் கொல்லப்பட்டதாக ‘போரும் சமாதானமும்’ என்ற நூலில், அன்டன் பாலசிங்கம் குறிப்பிடுகிறார். 

இந்தத் தாக்குதல், இலங்கை அரசாங்கத்துக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருந்தாலும், இது பயங்கரவாதத்துக்கு எதிரான, இலங்கை அரசாங்கத்தின் கருத்துருவாக்கத்துக்கு வலுச்சேர்ப்பதாக இருந்தது.   

இலங்கை அரசாங்கம், தன்னுடைய பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையை, இன்னும் வலுவாக முன்னெடுக்கத் தொடங்கியது. இந்தத் தாக்குதலின் எதிர்வினையாக, இலங்கை அரசாங்கம் கொழும்பிலும் வடக்கு, கிழக்கிலும் தமிழ் மக்களுக்கு எதிராகப் பெரும் சுற்றி வளைப்புத் தேடுதல்களையும் கைதுகளையும் அரங்கேற்றியது.   

வடக்கு, கிழக்கில் பாதுகாப்பு படைகள், பொதுமக்கள் மீதான துப்பாக்கிச் சூடுகளையும் நடத்தியிருந்தனர். வடக்கு, கிழக்கு முழுமையான யுத்த பூமியாக மாறத் தொடங்கியிருந்தது. சுற்றி வளைப்புகள், தாக்குதல்கள், கைதுகள், காணாமல் போதல் என இலங்கைத் தமிழ் மக்களின் வாழ்வு, அல்லோல கல்லோலப்பட்டுக் கொண்டிருந்தது.  இதனால் வடக்கு, கிழக்கை சேர்ந்த பெருமளவு தமிழர்கள், உள்நாட்டில் இடம்பெயர்ந்தும், வௌிநாட்டுக்குக் குறிப்பாகத் தென்னிந்தியாவுக்கு அகதிகளாகச் செல்லத்தொடங்கினர்.  

 1983 ‘கறுப்பு ஜூலை’யைத் தொடர்ந்து, இந்தியாவில் தஞ்சமடைந்து வந்த ஈழ அகதிகளின் எண்ணிக்கை, தற்போது பெருமளவு அதிகரிக்கத் தொடங்கியது. இந்தியாவுக்கு புதியதொரு சவாலாக, இது உருவெடுத்திருந்தது. மேலும், இலங்கை அரசாங்கம் இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையே, கடல் மார்க்கமாகப் பயங்கரவாதிகள் பயணிப்பதையும் ஆயுதக்கடத்தலைத் தடுக்கவும் பாக்கு நீரிணை பாதுகாப்பு நடவடிக்கையை முடுக்கிவிட்டிருந்தது. இந்தப் பாதுகாப்பு நடவடிக்கையில், இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த இந்திய (குறிப்பாக தமிழக) மீனவர்கள், இலங்கைக் கடற்படையின் தாக்குதலுக்கும் கைதுகளுக்கும் உள்ளானார்கள். இது, இந்தியாவுக்கு இன்னொரு தீராத தலைவலியாக உருவெடுத்திருந்தது.   

திட்டமிட்ட குடியேற்றமும் கொக்கிளாய்த் தாக்குதலும்

1985 ஜனவரி முழுவதும், இடம்பெற்ற தாக்குதல்கள், பெப்ரவரி மாதமும் தொடர்ந்தது. தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களுக்கும், அரச படைகளுக்கும் இடையிலான போர், வலுத்துக் கொண்டிருந்த நிலையில்தான், பெப்ரவரி இரண்டாவது வாரம், ராஜீவ் காந்தியின் அழைப்பின் பேரில், தேசிய பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத்முதலியை, ராஜீவ் காந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்த, ஜே.ஆர், இந்தியா அனுப்பி வைத்தார்.   

மறுபுறத்தில் வடக்கு, கிழக்கின் எல்லைகளில், சிங்களக் குடியேற்றங்களை உருவாக்குவதில், ஜே.ஆர் அரசாங்கம் கங்கணம் கட்டிக்கொண்டு செயற்பட்டுக் கொண்டிருந்தது.   

ஜே.ஆர், இந்தக் குடியேற்றங்கள் தொடர்பில், மிக உறுதியாக இருந்தார். இலங்கைத் தீவுக்குள், ஒரு பகுதியை எந்தவொரு தனிப்பட்ட மக்கள் கூட்டமும், தம்முடைய தாயகமாகக் கருதமுடியாது என்றும், அத்தகைய தாயகக் கோரிக்கையை, அரசாங்கம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்றும், நாட்டின் ஒட்டுமொத்த இன விகிதாசாரம் பேணப்படும் வகையில் குடியேற்றங்கள் அமைக்கப்படும் என்றும், அவர் ஜனவரி இறுதிப்பகுதியில் தெரிவித்திருந்தார்.   

வன்னிப் பகுதியில், ஏறத்தாழ 30,000 சிங்கள மக்களைத் தெற்கிலிருந்து அழைத்து வந்து குடியேற்றுதல், அவர்களுக்கும், அந்தக் குடியேற்றங்களுக்கும் பாதுகாப்பு வழங்குதல் என்ற திட்டத்தை, ஜே.ஆர் முன்வைத்திருந்தார்.   

இந்தக் குடியேற்றங்கள் பற்றிக் கருத்துரைத்த அமைச்சர் காமினி திசாநாயக்க, இந்தக் குடியேற்றங்களின் இராணுவ ரீதியான முக்கியத்துவத்தை, இஸ்‌ரேலின் மேற்கு எல்லைப்புறக் குடியேற்றங்களுடன் ஒப்பிட்டார்.   இது, ஜே.ஆர், அத்துலத்முதலி ஆகியோரின் இராணுவ நடவடிக்கைகள், இஸ்‌ரேலிய ஆலோசனையின்படி, நடத்தப்படுகிறது என்ற சிலரது கருத்துக்கு, வலுச்சேர்ப்பதாக அமைந்தது.   

இந்த நிலையில்தான், அச்சுவேலித் தாக்குதலுக்கான பதிலடித் தாக்குதலொன்றை, இதே காலப்பகுதியில் விடுதலைப் புலிகள் இயக்கம் நடத்தியிருந்தது. முல்லைத்தீவு மாவட்டத்தில், அரசாங்கம் உருவாக்கியிருந்த திட்டமிட்ட குடியேற்றங்களைப் பாதுகாப்பதற்காக, முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் பகுதியில், ஓர் இராணுவ முகாமொன்று ஸ்தாபிக்கப்பட்டது.   

1985 பெப்ரவரி 13ஆம் திகதி, விடுதலைப் புலிகள் அமைப்பினர், இந்த இராணுவ முகாம் மீது, தாக்குதலொன்றை நடத்தியிருந்தனர். இந்தத் தாக்குதலில், இருதரப்பு இழப்புப் பற்றியும் இருதரப்பும் முரணான புள்ளிவிவரங்களை வௌியிட்டிருந்தனர்.  

யுத்தமொன்றின் போது ஒரு தரப்பு, தன்தரப்பு இழப்புகளைக் குறைத்தும், எதிர்த்தரப்பின் இழப்பை அதிகப்படுத்தியும் குறிப்பிடுவது புதியவிடயமல்ல. ஆகவேதான், இந்த இழப்பு குறித்த தகவல்கள் ஏற்புடைமை ஐயத்துக்கு உரியதாகின்றன. இரு தரப்பு இழப்புகள் எவ்வாறிருப்பினும், இந்தத் தாக்குதல் இலங்கை அரசாங்கத்துக்கு, இன்னொரு வகையில் அதிர்ச்சியைக் கொடுப்பதாக அமைந்திருந்தது.   

இலங்கையில் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள், ‘கெரில்லா யுத்தம்’ என்ற நிலையிலிருந்து மாறி, மரபுவழி யுத்தத்தின் அம்சங்களை நோக்கி நகர்ந்தமை, இந்தத் தாக்குதலில் தௌிவானதாக, சிலர் பதிவு செய்கிறார்கள்.   

அதாவது, இந்தத் தாக்குதலில் விடுதலைப் புலிகள் இயக்கம், நவீன ஆயுதங்களைப் பயன்படுத்தி இருந்ததும், போராளிகள் இராணுவ சீருடையை ஒத்த சீருடையை அணிந்திருந்தமையும் யுத்தத்தில் ஈடுபடும் இராணுத்தினர் கொண்டுள்ளதைப் போல, உணவுப்பொதி, நீர்க்குடுவை, மருந்துகள் என்பவற்றையும் தம்முடன் கொண்டிருந்தமையும் இராணுவ முகாமொன்றின் மீது, நேரடி யுத்தத்தில் ஈடுபட்டமையும் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள், கெரில்லாப் போர் முறையைத் தாண்டி, மரபுவழிப் போருக்குத் தயாராகி விட்டார்கள் என்பதை, உணர்த்துவதாக அமைந்ததாகச் சிலர் குறிப்பிடுகிறார்கள்.   

இது இலங்கை அரசாங்கத்தினது, குறிப்பாக பாதுகாப்புச் சபையினது கவனத்தை ஈர்த்திருந்தது. இனி அரசாங்கமும், தன்னுடைய யுத்த அணுகுமுறையை, இதற்கேற்றாற்போல மாற்ற வேண்டிய தேவை உருவாகியிருந்தது.   

விடுதலைப் புலிகள் இயக்கம் நடத்திய கொக்கிளாய் தாக்குதலுக்கு பதிலாக, குறித்த தாக்குதல் நடந்த இரண்டாம் நாள், முல்லைத்தீவுப் பகுதியில், அரசபடைகள் கடுமையான சுற்றிவளைப்புத் தாக்குதலொன்றை நடத்தியிருந்தனர். இதில், 52 தமிழர்கள் கொல்லப்பட்டனர்.   

தமிழ்த் தரப்பில், “கொல்லப்பட்டவர்கள் அப்பாவிப் பொதுமக்கள்” என்று தெரிவித்தபோது, இலங்கை அரசாங்கம், “கொல்லப்பட்டவர்கள், தமிழ்ப் பிரிவினைவாதிகள்” என்று குறிப்பிட்டிருந்தது.   

சென்னையிலிருந்த அமிர்தலிங்கம், செய்வதறியாது திகைத்துப்போயிருந்தார் என்று சொன்னால், அது மிகையல்ல. அப்பாவிப் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டிப்பதுடன், மீண்டும் இந்திய அரசாங்கத்திடம் மண்டாடுவதையே அவர் செய்தார்.   

“1970-71 காலப்பகுதியில், மேற்கு வங்கத்தில் உருவானதைப் போன்றதொரு சூழல்தான், தற்போது இலங்கையின் வடக்கு, கிழக்கில் நிலவிவருகிறது. தமிழர் பிரதேசங்களில் இன அழிப்பைத் தடுக்க, இந்தியா நேரடியாகத் தலையிட வேண்டும்” என்று அமிர்தலிங்கம், ராஜீவ் காந்தி தலைமையிலான இந்திய அரசாங்கத்திடம், கோரிக்கை விடுத்தார்.   

ஆனால், ராஜீவ் காந்தி மற்றும் அத்துலத்முதலி ஆகியோரிடையே பெப்ரவரி இரண்டாவது வாரத்தில் இடம்பெற்றிருந்த பேச்சுவார்த்தைகளில், அத்துலத்முதலியின் கோரிக்கைகளுக்கு ராஜீவ் காந்தி சாதகமான பதிலை வழங்கியிருந்தார் என்பதுதான் நிதர்சனமாக இருந்தது.  

 (அடுத்த திங்கட்கிழமை தொடரும்)

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வன்முறையுடன்-தொடங்கிய-1985/91-220793

நவீனன்

  • Grand Master
  • வரையறுக்கப்பட்ட அனுமதி
  • Gender:Male
  • Interests:cricket,internet,
  • தொடங்கியவர்

Posted September 3, 2018ராஜீவ் – லலித் சந்திப்புஎன்.கே. அஷோக்பரன் /

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி – 159)

லலித் அத்துலத்முதலி எனும் ஆட்சி நிபுணன்

ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனவை, இந்தியாவுக்கான விஜயமொன்றை மேற்கொள்ளுமாறு இந்தியப் பிரதமர், இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஊடாக வழங்கிய அழைப்பை, ஜே.ஆர் நேரடியாக மறுதலிக்காது ஏற்றுக்கொண்டார். 

இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியுடன், தனக்குப் பதிலாகப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, தேசிய பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத்முதலியை, டெல்லிக்கு அனுப்பி வைத்தார்.  

 இன்னொரு வழியில் பார்த்தால், ராஜீவின் அழைப்பை, ஜே.ஆர், மறுத்திருந்தார் என்றும் பொருள் கொள்ள முடியும். ராஜீவ் காந்தி தலைமையிலான புதிய அரசாங்கம் பதவிக்கு வந்திருந்த சூழ்நிலையில், இந்தியாவுடனான உறவைச் சுமுகமான உறவாக, புதிதாக வடிவமைக்கவே ஜே.ஆர் விரும்பியிருந்தார்.  
 ஆகவே, அந்த உறவில், தன்னுடைய நிலையைப் பலப்படுத்த அவர் விரும்பியிருக்கலாம். அதற்கான இராஜதந்திர நகர்வாகக் கூட, இதைப் பொருள் கொள்ளலாம்.   

மேலும், லலித் அத்துலத்முதலி தேர்ந்ததொரு புலமையாளராக அறியப்பட்டவர். பாடசாலைக் காலத்திலிருந்தே, கல்வியில் பெருஞ்சாதனையாளராகத் திகழ்ந்தவர். கொழும்பு றோயல் கல்லூரியில், அதிக பரிசில்களை வென்ற மாணவன் என்ற சாதனைக்கு, இன்றுவரை இவரே சொந்தக்காரர்.  

றோயல் கல்லூரியில் பாடசாலைக் கல்வியைத் தொடர்ந்து, இங்கிலாந்தின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் இளமாணி, முதுமாணிப் பட்டக்கல்வியைப் பெற்றுக்கொண்டதுடன், பிரபல்யமிக்க ஒக்ஸ்போர்ட் ஒன்றியத்தின் தலைவராகவும் பதவி வகித்தார். ஒக்ஸ்போர்ட் ஒன்றியத்தின் தலைவரான முதலாவது இலங்கையர் இவராவார்.   

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் முதுமாணிக் கல்வியைத் தொடர்ந்து, ஐக்கிய அமெரிக்காவின் புகழ்பூத்த ஹாவர்ட் பல்கலைக்கழகத்திலும் சட்டத்துறை முதுமாணிக் கற்கையை பூர்த்திசெய்தார்.

 அதைத் தொடர்ந்து, சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் சட்டத்துறை விரிவுரையாளராகப் பணியாற்றியவர், இஸ்‌ரேலின் ஹீப்ரு பல்கலைக்கழகம், ஸ்கொட்லாந்தின் எடின்பரோ பல்கலைக்கழகம், இந்தியாவின் அலஹபாத் பல்கலைக்கழகம் ஆகியவற்றிலும் வருகைதரு விரிவுரையாளராகப் பணியாற்றியிருந்தார்.   

இஸ்‌ரேல் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய காலத்தில்தான், இஸ்‌ரேலுடனான இவரது உறவு பலமடைந்தது என்று சிலர் கருத்துரைக்கிறார்கள். 

குறுகியகாலக் கற்பித்தல் பணியைத் தொடர்ந்து, இலங்கை வந்து சட்டத்தரணியாகப் பணியாற்றத் தொடங்கியவர், 1970களின் ஆரம்பத்தில், ஐக்கிய தேசியக் கட்சியினூடாக அரசியலில் நுழைந்தார்.   

பெரும் புலமையாளராக, அரசியலில் நுழைந்த அத்துலத்முதலி, அரசியல்வாதியாக (politician) அல்லாது ஆட்சிநிபுணனாகவே (statesman) அறியப்பட்டார்.   

ஆனால், அத்துலத்முதலியின் மறுமுகம் வித்தியாசமானதாக இருந்தது. யுத்தம் என்று வந்தபோது, அவர் மனவுணர்ச்சிகளுக்கு  இடம் தரவில்லையென்றும், தேசிய பாதுகாப்பு அமைச்சராக, யுத்தத்தை இரக்க உணர்ச்சியற்ற திடத்துடன் முன்னெடுத்துச் சென்றார் என்றும், ப்ரூஸ் பலிங் தன்னுடைய கட்டுரையொன்றில் குறிப்பிடுகிறார்.   

முக்கியத்துவம் வாய்ந்த இந்தச் சந்திப்புக்கு, அத்துலத்முதலியை அனுப்பிவைக்க, ஜே.ஆர் எடுத்த முடிவுக்கு, அத்துலத்முதலியின் புலமை, மொழியாற்றல், சர்வதேச ரீதியிலான அங்கிகாரம், மதிப்பு என்பவற்றை முக்கிய காரணங்களாக அடையாளப்படுத்த முடியும்.   

குறித்த சந்திப்புக்காக அத்துலத்முதலி, 1985 பெப்ரவரி ஒன்பதாம் திகதி இரவு, கொழும்பிலிருந்து பொம்பே ஊடாக டெல்லி சென்றிருந்தார்.  

புதியதோர் ஆரம்பம்

ராஜீவ் காந்தி, அத்துலத்முதலி ஆகியோருக்கு இடையேயான பேச்சுவார்த்தை, ஏறத்தாழ இரண்டு மணி நேரமளவு நீடித்தது. 

இந்தியாவுடனான புதிய அணுகுமுறையை, இந்திரா காந்தி காலத்தேய அணுகுமுறையிலிருந்து விலத்தி, இலங்கைக்குச் சாதகமான அணுகுமுறையாக மாற்றச் செய்வதுதான், அத்துலத்முதலியின் முன்பிருந்த பெரிய சவால் ஆகும்.   

ராஜீவ் காந்தியின் மிகப் பெரும் தேர்தல் வெற்றிக்கான வாழ்த்துரையோடு, பேச்சுவார்த்தையைத் தொடங்கிய அத்துலத்முதலி, “இலங்கை விவகாரத்தில், இதுவரைகாலமும் இந்தியாவின் வற்புறுத்தல் தன்மையான போக்கு, இலங்கையின் பெரும்பான்மையின சிங்கள மக்களிடையே, இந்திய விரோத மனப்பான்மையையும் இந்திய ஆக்கிரமிப்பு அச்சத்தையும் தோற்றுவித்துள்ளது”, என்று குறிப்பிட்டார்.   

அத்துலத்முதலியின் நோக்கமானது, இந்தியா, இராணுவ ரீதியிலான ஆக்கிரமிப்பை, இலங்கை மீது செய்யாது என்ற உறுதிமொழியை ஜே.ஆர், இந்திரா காந்தியிடம்  பெற்றுக் கொண்டதைப் போல, ராஜீவிடமிருந்தும் அந்த உறுதிமொழியைப் பெற்றுக்கொள்வதாக இருந்தது.   

அதற்கேற்றாற் போல, ராஜீவ் காந்தியும் “இந்தியா ஒருபோதும், இலங்கை மீது ஆக்கிரமிப்புச் செய்யாது” என்று உறுதியளித்தார்.   

1984 நவம்பரில், ராஜீவ் காந்தியைச் சந்தித்த ஜே.ஆர், புதியதோர் ஆரம்பம் பற்றிப் பேசியும் இணங்கியும் இருந்தார். 

இலங்கை விவகாரத்தில், பேச்சுவார்த்தைகளைப் புதிதாக ஆரம்பிப்பதற்கு, இதுவரை காலமும் இலங்கை விவகாரத்தை, இந்தியா சார்பாகக் கையாண்ட கோபால்சாமி பார்த்தசாரதியை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை, அத்துலத்முதலி சார்பில் முன்வைக்கப்பட்டது.   

சர்வகட்சி மாநாடு தோல்வியடைந்ததைப் பற்றிய தன்னுடைய கவலையை ராஜீவ் காந்தி பகிர்ந்த போது, அதற்குப் பதிலளித்த அத்துலத்முதலி, “அரசாங்கத்தால், சிங்கள மக்களை இந்த விடயத்தில் அணைத்துச் செல்ல முடியாது போயுள்ளது” என்று  கூறினார்.   

 பிரதான எதிர்க்கட்சியான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் அதன் தலைவி சிறிமாவோ பண்டாரநாயக்கவும் ‘அனெக்சர் -சி’ முன்மொழிவுகளைக் கடுமையாக எதிர்த்தமையும் அந்த முன்மொழிவுகள் ஜே.ஆரின் விருப்பமின்றி, பார்த்தசாரதியால் திணிக்கப்பட்டமையும்தான், சர்வகட்சி மாநாடு, இந்த முடிவை எட்டக் காரணம் என்ற தொனியில் கருத்துரைத்தார்.   

மேலும், “சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வொன்று அடையப் பெறவேண்டுமானால், இந்தச் செயற்பாடு, மீண்டும் புதிதாக ஆரம்பிக்கப்பட வேண்டும். சிங்கள மக்கள் பார்த்தசாரதியை, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்கு சார்பான நபராகக் கருதுவதால், புதிய செயற்பாடுகள் ஆரம்பிக்கும் போது, பார்த்தசாரதி அதில் இல்லாதிருப்பது, உசிதம்” என்று, நாசூக்காக வேண்டிக் கொண்டார்.  

ஏற்கெனவே பார்த்தசாரதிக்கும், ராஜீவ் காந்திக்கும் இடையிலான அணுகுமுறை வேறுபாடுகள், அவர்களது உறவைப் பலமிழக்கச் செய்திருந்த நிலையில், அத்துலத்முதலியின் இந்தக் கோரிக்கைக்கு இணங்குவதில், ராஜீவ் காந்திக்கு எந்தத் தயக்கமும் இருந்திருக்க வாய்ப்பில்லை.   

அத்துலத்முதலியின், புதிய ஆரம்பமொன்றுக்கான கோரிக்கைக்கு இணங்கிய ராஜீவ், இந்தியா பக்கசார்பின்றி, நடுநிலையுடன் செயற்படும் என்று உறுதியளித்ததுடன், இனி, பேச்சுவார்த்தைகள் இந்தியா சார்பில், புதிய வௌியுறவுச் செயலாளர் ரோமேஷ் பண்டாரியால் முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார். முதல் இரண்டு கோரிக்கைகளும் அத்துலத்முதலிக்கு சாதகமாக அமைந்தன.  

மாவட்ட சபைகள் போதும்

அடுத்ததாக, அதிகாரப் பகிர்வு முறை பற்றி விவரமாக, ராஜீவ் காந்தியும் அத்துலத்முதலியும் பேச்சுவார்த்தை நடத்தினர். 

தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி கேட்கும், பிராந்திய சபைகளை, இலங்கை அரசாங்கத்தால் வழங்க முடியாது என்று குறிப்பிட்ட அத்துலத்முதலி, தம்மாலியன்ற மிகச்சிறந்த அதிகாரப் பகிர்வுக் கூறு, மாவட்ட சபைகள்தான் என்று, தௌிவாகக் குறிப்பிட்டார்.  அதிகளவு அதிகாரங்களைப் பகிர்வதற்குத் தாம் தயார், எனினும், அதிகாரப் பகிர்வுக் கூறாக, மாவட்ட சபைகளை விட, பரந்த அமைப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதில், அத்துலத்முதலி விடாப்பிடியாக இருந்தார்.   

மாவட்ட சபைகளைத் தாண்டிய, பிராந்திய, மாகாண சபைகளை அடிப்படையாகக் கொண்ட தீர்வையே, இந்திரா காந்தி முன்னிறுத்தியிருந்தார். 

ஆனால், அத்துலத்முதலியின் மாவட்ட சபையை அடிப்படையாகக் கொண்ட தீர்வுக்கு, ராஜீவ் காந்தி இணங்கியதாகவும் அதிகாரப்பகிர்வு தொடர்பில் மாவட்டங்கள் இணைக்கப்பட வேண்டியதில்லை என்று ராஜீவ் காந்தி கருதியதாகவும் தங்களுடைய நூலில் கே.எம்.டி.சில்வாவும் ஹவட் றிக்கின்ஸும் குறிப்பிடுகின்றனர்.   

அத்தோடு, அதிகளவு அதிகாரங்கள் மாவட்ட சபைகளுக்குப் பகிரப்படவேண்டும் என்பதில் ராஜீவ் காந்தியும் அத்துலத்முதலியும் உடன்பட்டாலும், சட்டவொழுங்கு அதிகாரங்கள், பகிரப்படவேண்டியதில்லை என்பதிலும் இருவரும் இணங்கியிருந்தனர். 

இந்தச் சட்டவொழுங்கு அதிகாரப் பகிர்வுதான், பஞ்சாப் மாநிலம் தொடர்பாக பிரச்சினைக்கான காரணங்களில் ஒன்று என்று, ராஜீவ் காந்தி கருதியதாக, டி சில்வாவும் றிக்கின்ஸும் கருத்துரைக்கின்றனர். இந்த விடயமும் அத்துலத்முதலிக்குச் சாதகமாகவே அமைந்தது.  

இணக்கத்துக்கு மேல் இணக்கம்

அடுத்ததாக, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்கான ஆதரவை, இந்தியா நிறுத்தவேண்டும் என்று, அத்துலத்முதலி கேட்டுக் கொண்டிருந்தார். 

தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியை, பஞ்சாப் பிரிவினை அமைப்பான அகாலி தள்ளுக்கு ஒப்பிட்ட ராஜீவ் காந்தி, இந்திய அரசாங்கத்துடன், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்கு இருந்த நேரடிச் செல்வாக்கு குறைக்கப்படும் என்ற உறுதிமொழியை, அத்துலத்முதலிக்கு வழங்கியதுடன், இலங்கை அரசாங்கம் தமிழ்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார். இதுவும் அத்துலத்முதலிக்குச் சாதகமாகவே அமைந்து, அவருக்கு நிறைந்த மகிழ்வைத் தந்தது.   

அடுத்ததாக, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள், தமிழ் நாட்டிலிருந்து செயற்படுவதையும் அவற்றின் பயிற்சிமுகாம்கள் அங்கு இயங்குவதையும் விவரமான தகவல்கள், ஆதாரத்துடன் ராஜீவ் காந்தியிடம், அத்துலத்முதலி சமர்ப்பித்தார். இதன் நோக்கம், இந்தத் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் பின்னணியில், இந்தியா இருக்கிறது என்பதை, இலங்கை அறியும் என்று சுட்டிக்காட்டுவதோடு, மறைமுகமாக, இத்தகைய ஆதரவுகளை, இந்தியா நிறுத்தவேண்டும் என்று அறிவுறுத்துவதாகும்.   

இதைப்பற்றி, தான் அறிந்திருக்கவில்லை என்று குறிப்பிட்ட ராஜீவ் காந்தி, இந்த விவகாரத்தில், தான் கரிசனை செலுத்துவதாக உறுதியளித்ததாக, ரீ.சபாரட்ணம் பதிவுசெய்கிறார்.   

இலங்கையிலிருந்து, தொடர்ச்சியாக வந்துகொண்டிருக்கும் அகதிகள் பிரச்சினை பற்றித் தன்னுடைய கவலையை வௌியிட்ட ராஜீவ் காந்தி, “இது, தமிழ்நாட்டில் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கும்” என்று குறிப்பிட்டார்.   

மேலும், இந்திய மீனவர்கள், இலங்கைக் கடற்படையால் தாக்கப்படுவது, கைது செய்யப்படுவது, சுட்டுக்கொல்லப்படுவது பற்றிய தன்னுடைய கரிசனையையும் அத்துலத்முதலியிடம், ராஜீவ் முன்வைத்தார்.  

 இலங்கை-இந்தியா இடையேயான கடற்பரப்பில் இந்திய, இலங்கைக் கடற்படைகள் இணைந்த ரோந்துச் செயற்பாட்டை முன்னெடுக்கவேண்டும் என்பது, ஜே.ஆரின் விருப்பமாக இருந்தது. இந்தச் சந்தர்ப்பத்தில், அந்த முன்மொழிவை ராஜீவ் காந்தி முன்பு, அத்துலத்முதலி சமர்ப்பித்தார். அதனைத் தான் பரிசீலிப்பதாக, ராஜீவ் காந்தி உறுதியளித்தார்.   

பேச்சுவார்த்தையின் இறுதியில், இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட அண்மித்த நாடுகள் அனைத்துடனும் நல்லுறவைப் பேணத் தான் விரும்புவதாகத் தெரிவித்த ராஜீவ் காந்தி, ஜே.ஆர் ஜெயவர்தனவை, அவருக்கு வசதியாக பொழுதில், இந்தியாவுக்கு விஜயம் செய்யுமாறு, தான் அழைப்பு விடுப்பதாக அத்துலத்முதலியிடம் குறிப்பிட்டார்.   

அத்துலத்முதலியைப் பொறுத்தவரை, இந்தப் பேச்சுவார்த்தைகள், அவர் எதிர்பார்த்ததைவிடப் பெரிய வெற்றியாகவே அமைந்தது எனலாம். குறிப்பாக, மாவட்ட சபைகளை அடிப்படையாகக் கொண்ட தீர்வொன்றுக்கு, ராஜீவ் காந்தி இணங்கியமை, இலங்கை தொடர்பிலான இந்திய நிலைப்பாட்டில் ஏற்பட்ட, முக்கிய மாற்றமாக இலங்கை கருதியது.   

இந்தியாவின் அணுகுமுறையில் ஏற்பட்ட இந்த மாற்றம், ஜே.ஆர் அரசாங்கத்துக்கு மிகச் சாதகமாக அமைந்திருந்தது. அதன் பின்னர், இருதரப்பும் வௌியிட்ட அறிக்கைகள் வாயிலாகவும் பேச்சுவார்த்தைகள் நடந்த அதேதினம், இடம்பெற்ற முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சம்பவம் ஊடாகவும் இந்த மாற்றம் மிகத்தௌிவாக வௌிப்பட்டது.   

(அடுத்த திங்கட்கிழமை தொடரும்)  

September 11, 2018

என்.கே. அஷோக்பரன்

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி – 160)

ராஜீவ் காந்தி – லலித் அத்துலத்முதலி இடையேயான சந்திப்பு பற்றி, இந்திய நாடாளுமன்றத்துக்கு அறிவித்த இந்திய வௌிவிவகார அமைச்சர் குர்ஷித் ஆலம் கான், இருதரப்புப் பேச்சுவார்த்தைகளில், இந்திய – இலங்கை உறவு தொடர்பான பல்வேறு விடயங்களும் ஆராயப்பட்டனவெனவும் இலங்கை விரும்பும் பட்சத்தில், இலங்கைக்கு உதவ இந்தியா தயாராக இருப்பதாகவும், ஆனால், இலங்கைத் தீவின் இனப்பிரச்சினைக்கான தீர்வை, இறுதியில் இலங்கை அரசாங்கமே காணவேண்டுமென்று இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி, இலங்கையின் தேசியப் பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத்முதலியிடம் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், ராஜீவ் காந்தி, இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படுவது பற்றி, பலமான முறையில் தனது கரிசனையை அத்துலத் முதலியிடம் குறிப்பிட்டதையும் குர்ஷித் ஆலம் கான், தன்னுடைய அறிக்கையில் கோடிட்டுக் காட்டியிருந்தார். மறுபுறத்தில், இந்தப் பேச்சுவார்த்தையை லலித் அத்துலத்முதலி வெற்றியாகப் பார்த்தார். பேச்சுவார்த்தைகள், நட்புறவுடனும் பயனுள்ளதாகவும் அமைந்ததாக, ஜே.ஆரிடம் கருத்து வௌியிட்ட அத்துலத்முதலி, இந்திரா காந்தியைவிட, ராஜீவ் காந்தியின் அணுகுமுறை இலங்கைக்குச் சாதகமாக உள்ளதையும் சுட்டிக்காட்டினார். இந்தக் கொள்கை மாற்றத்தின் முதல் பலன், ராஜீவ் – அத்துலத்முதலி பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருந்த போதே இலங்கைக்குக் கிடைத்திருந்தது.

1985 ஜனவரி 10ஆம் திகதியன்று, ஜோர்தானிலிருந்து கொழும்புக்குப் பயணமாகிக்கொண்டிருந்த பொதி சுமக்கும் விமானமொன்று, அவசரமாகத் தரையிறங்க வேண்டிய நிலையொன்றின் காரணமாக, தென்னிந்தியாவின் திருவானந்தபுரம் விமான நிலையத்தில் தரையிறங்கியது. குறித்த விமானத்தில், ஜோர்தானிலிருந்து இலங்கைக்கு இரகசியமாக வழங்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் படைத்தளவாடங்கள் இருந்ததாக, தன்னுடைய கட்டுரையொன்றில் திலீப் பொப் குறிப்பிடுகிறார்.

ராஜீவ் காந்தியின் தனிப்பட்ட தலையீட்டின் காரணமாக, எந்தத் தடையுமின்றி எரிபொருள் மீள்நிரப்பிய பின், குறித்த விமானம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகக் குறிப்பிடும் திலீப் பொப், அத்துலத்முதலியே இந்திரா காந்தியின் காலத்தில் இது சாத்தியமாகியிருக்காது என்று குறிப்பிட்டதாகவும் பதிவுசெய்கிறார். இலங்கை அரசாங்கத்தை அரவணைத்துப் போக, ராஜீவ் விரும்பியிருந்தார் என்பது இப்போது தௌிவாகியிருந்தது. ஆனால் அவர், ஜே.ஆரைச் சந்திப்பதில் உறுதியாக இருந்தார். அதற்கான அழைப்பையும், அவர் அத்துலத்முதலியூடாக அனுப்பி வைத்திருந்தார்.  

ஜே.ஆரின் யுத்தப் பாதை

ராஜீவ் காந்தி, இலங்கை விவகாரத்தை நட்புறவுடன் அணுக விரும்பியதில் தவறில்லை. ஒப்பீட்டளவில் இளைஞரான அவர், புதியதோர் அரசியல் அணுகுமுறையை விரும்பியிருந்தார். 

ஆனால், அவருடைய அடிப்படை எண்ணம், பேச்சுவார்த்தை மூலம் இலங்கைப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்பதில் தான் இருந்தது. அதிலும், தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களையும் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளச் செய்யவேண்டும் என்ற எண்ணத்தை, அவர் கொண்டிருந்தார்.

மறுபுறத்தில், ஜே.ஆர்., இந்திரா காந்தியின் ஆதிக்கப் போக்கிலிருந்து மாறுபட்ட ராஜீவின் நட்புறவுப் போக்கை, தன்னுடைய அரசியலுக்குச் சாதகமாக மாற்றிக்கொள்ளும் இராஜதந்திர உபாயத்தையே கையாண்டார். இராணுவ ரீதியான வெற்றியே ஜே.ஆரின் இலக்காக இருந்தது. கடந்த ஓராண்டுக்கும் மேலாக, அவர் அதற்காகவே தயாராகியிருந்தார்.

ஜே.ஆரும், ஜே.ஆர். அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களும், யுத்தம் மூலம் இனப்பிரச்சினையை வெற்றிகொள்வது பற்றி சூளுரைக்கத் தொடங்கியிருந்தனர். அமைச்சரவையிலிருந்து விலக்கப்பட்டிருந்தாலும், தன்னுடைய பேரினவாத அரசியலை சிறில் மத்யூ கைவிடவில்லை. தமிழ் இளைஞர் ஆயுதக்குழுக்கள் முற்றாக அழித்தொழிக்கப்பட வேண்டுமென, அவர் அனல் கக்கப் பேசிக்கொண்டிருந்தார். பிரதமர் ரணசிங்ஹ பிரேமதாஸவும், இதற்கு விதிவிலக்கல்ல.

பிரிவினைவாதிகள் ஆபத்தானவர்கள், அவர்கள் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதே, அவரது வீராவேசப் பேச்சாக இருந்தது. தேசிய பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத்முதலி, யுத்த முழக்கம் செய்வது போல, நாடு தாக்குதலுக்குத் தயாராக இருக்கிறது, நாம் அவர்களைத் தோற்கடித்தே தீருவோம் என்று சூளுரைத்தார்.

இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக, 1985 பெப்ரவரி இறுதியில், ஜே.ஆர். ஆற்றிய கொள்ளை விளக்க உரையொன்றில், நாடு இறுதி யுத்தத்துக்குத் தயாராகிவிட்டிருந்தது என்று முழங்கியிருந்தார். தொடர்ந்து, நாடு முழுவதும் யுத்தத்துக்கு ஆதரவு திரட்டும் முகமான பிரசாரங்கள், சிறிது சிறிதாக முன்னெடுக்கப்படத் தொடங்கின.   

ராஜீவுக்கு, ஜே.ஆர் எழுதிய கடிதம்

இதேவேளை, இந்தியாவை இராஜதந்திர ரீதியில் சமாளித்துப் போகும் அவசியத்தையும் உணர்ந்த ஜே.ஆர்., 1985 மார்ச் 1ஆம் திகதி, இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கு, இராஜதந்திர ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கடிதத்தை எழுதியிருந்தார். ஜே.ஆர் என்ற அரசியலில், பழுத்த “ஆசியாவின் நரியின்” இராஜதந்திர அறிவின் சாற்றை, அந்தக் கடிதத்தில் காணலாம்.

பொது நெறிமுறைகளையும் சம்பிரதாயங்களையும் கடந்து, தனிப்பட்ட உறவை உணர்த்தும் வகையில் “என் அன்புக்குரிய ராஜீவ்” என்று தனது கடிதத்தை ஆரம்பித்த ஜே.ஆர்., “நான் இந்தியாவினதும் அதன் மக்களதும் நண்பன், அதன் பாரம்பரியத்தை ரசிப்பவன், அம்மண் தந்த மிகச்சிறந்த புதல்வனின் வழியைப் பின்பற்றுபவன்” என்று குறிப்பிட்டதுடன் தொடர்ந்து ராஜீவின் பாட்டனாரும் இந்தியாவின் முதல் பிரதமருமான பண்டிட் ஜவஹர்லால் நேருவுக்கும் தனக்கும் இடையிலான நெருங்கிய உறவு பற்றிச் சிலாகித்து எழுதுகிறார்.

நேரு குடும்பத்தின் நண்பனாக தன்னை வர்ணித்த ஜே.ஆர்., இந்த நட்பு, ஜவஹர்லால் நேருவை 1939இல் அவருடைய இலங்கை விஜயத்தின் போது, தன்னுடைய வீட்டில் உபசரித்தது முதல் உருவானது என்றும் அது இப்போது, நேரு குடும்பத்தின் மூன்றாவது தலைமுறை வரை தொடர்வதையும் கோடிட்டுக் காட்டுகிறார்.

நேருவை தன்னுடைய நாயகர்களில் ஒருவராக வர்ணித்ததுடன், அவரும் இந்தியாவின் ஏனைய பல தலைவர்களும் விரும்பிய அஹிம்சை வழியையே தானும் நேசிப்பதாகக் குறிப்பிடுகிறார். 

தன்னுடைய இந்திய விஜயத்தின் போது, நேருவின் அலஹாபாத் இல்லத்தில் தான் சில நாள்கள் விருந்தினராகத் தங்கியதைக் குறிப்பிட்ட ஜே.ஆர்., நேருவின் சிறைவாசத்தின் போது, தமக்கிடையே இருந்த கடிதத் தொடர்பையும் அந்தக் கடிதங்களின் நகல்களைத் தான் நேரு ஆவணக் காப்பகத்துக்கு அனுப்பி வைத்தமையும் கோடிட்டுக் காட்டுகிறார்.

இந்த ஆலாபனைகளைத் தொடர்ந்து, அண்மைக்கால இலங்கை – இந்திய உறவின் நிலை பற்றிக் குறிப்பிட்ட ஜே.ஆர், துரதிர்ஷ்டவசமாக, நீங்களும் நானும் அறிந்த அண்மைக்காலப் பிரச்சினைகளால், எம் இரு நாடுகளிடையேயான உறவு பாதிப்படைந்துள்ளது என்று எழுதியதுடன், இந்த நிலையை மாற்றியமைக்கத் தான் விரும்புவதாகவும் இதுபற்றி தன்னுடைய அமைச்சரிடம் (அத்துலத் முதலியிடம்) சில நாள்கள் முன்னர் ராஜீவ் காந்தி குறிப்பிட்ட விடயங்கள் தனக்கு மகிழ்ச்சி தருவதாகவும் இதனால், ஏலவே எழுந்துள்ள முட்டுக்கட்டை நிலையை மாற்றுவதற்கான புதிய முயற்சிகளை எடுக்கும் ஊக்கம் பிறந்துள்ளதாகவும், அதற்காகத் தான் ராஜீவ் காந்தியைச் சந்தித்துக் கலந்துரையாட விரும்புவதாகவும் தெரிவித்திருந்தார்.

ஆனால் அந்தச் சந்திப்புக்கு முன்பதாக, ராஜீவ் காந்தியின் மனநிலையை அறிந்துகொள்வதற்காக, அவருடைய முக்கிய அதிகாரி ஒருவரை கலந்தாலோசனைக்காக இலங்கைக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொண்ட ஜே.ஆர், அதன் மூலமாக, ராஜீவின் மனநிலையைப் புரிந்துகொள்வதுடன், இருவரும் சந்திக்கும் போது, தற்போதுள்ள பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் பொது அணுகுமுறையொன்றைக் கையாள உதவும் என்று குறிப்பிட்டிருந்தார்.

தொடர்ந்தும், ராஜீவ் காந்தியின் அண்மையை பேச்சுகள் தொடர்பில் தன்னுடைய மகிழ்ச்சியைப் பதிவுசெய்த ஜே.ஆர்., அது, எதிர்கால உறவுகள் பற்றி தனக்குப் புதிய ஊக்கத்தைத் தந்திருப்பதாக எழுதியதுடன், தன்னுடைய அண்மைக்காலப் பேச்சுகளை, ஊடகங்கள் திரிபுபடுத்துவதாகக் கோடிட்டுக் காட்டியதுடன், அதனால் ஏற்பட்டிருக்கக்கூடிய குழப்பங்களைக் களைவதற்காக, தான் அண்மையில் ஆற்றிய கொள்கைவிளக்க உரையின் மூலப் பிரதியை, குறித்த கடிதத்துடன் இணைத்துள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார்.

அடுத்ததாக, இலங்கையின் இனப்பிரச்சினை பற்றிய விடயத்தினுள் நுழைந்த ஜே.ஆர்., உலகின் பலபாகங்களிலும் பயங்கரவாதம் எனும் அசிங்கமான தலை உயர்வதாகத் தெரிவித்ததுடன், இலங்கைப் பிரச்சினையை, இந்தியாவின் வடகிழக்கு மற்றும் பஞ்சாப் ஆகிய பிராந்தியங்களில் எழுந்துள்ள பிரச்சினையுடன் ஒப்பிட்டார்.

மேலும், இந்தியாவின் பாரிய நிலப்பரப்பு அளவின் காரணமாக, ஒரு மூலையில் இடம்பெறும் பயங்கரவாதம், முழு நாட்டையும் பாதிப்பதில்லை என்பதை கோடிட்டுக் காட்டியவர், இலங்கை என்று சிறிய நிலப்பரப்பில் ஒரு இடத்தில் இடம்பெறும் பயங்கரவாதம், முழுநாட்டையும் ஆபத்தில் தள்ளுகிறது என்று குறிப்பிட்டார்.

அடுத்ததாக, சர்வகட்சி மாநாடு பற்றி எழுதிய ஜே.ஆர்., வடக்கு – கிழக்கு மாகாணங்களை ஒன்றாக இணைத்த பிராந்திய சபை மற்றும் நாடாளுமன்றத்துக்கான இரண்டாவது அவை என்ற இரண்டே இரண்டு விடயங்கள் தொடர்பில் மட்டுமே, சர்வ கட்சி மாநாட்டில், தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியுடன் இணக்கம் காணப்பட முடியவில்லை என்று குறிப்பிட்டதுடன், அரசியல் தீர்வொன்றை எட்டும் வகையில், மாகாண சபைகளூடான அதிகாரப் பகிர்வு முறை பற்றி, தொடர்ந்தும் தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியுடன் பேசத் தயாராக இருப்பதாக, தன்னுடைய கடிதத்தில் பதிவுசெய்தார்.   

இறுதியாக, ஜே.ஆர் குறிப்பிட்ட விடயம் முக்கியமானது. நான் உங்களிடம் ஒரு சிறிய கோரிக்கையைத் தான் முன்வைக்கிறேன் என்று தொடங்கியவர், நாம் பயிற்சி முகாம்கள் பற்றிய பிரச்சினையை மறந்துவிடுவோம். தென்னிந்தியாவில், இலங்கைப் பயங்கரவாதிகளின் நடமாற்றம் பற்றி, அவர்களது திட்டமிடுதல்கள் பற்றி மறந்துவிடுவோம். நான் உங்களிடம் கேட்பதெல்லாம், அவர்கள் ஆயுதங்களுடன் இலங்கைக்கு வருவதைத் தடுக்குமாறு தான். அதேவேளை, இலங்கையர்கள் உங்கள் நாட்டில் தஞ்சம் பெறுவதைத் தடுக்கவும் முடியுமா என்று ஜே.ஆர் வினயமாக வேண்டினார். இதனை நாம் இணைந்துச் செய்வதற்கான பொதுத்திட்டமொன்றுக்கு இணங்க முடியுமானால், நான் யுத்தத்திலுள்ள இராணுவத்தை மீளப்பெற முடியும் என்பதோ, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவதுடன், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கை அதன் இயல்பு நிலைக்கு மீளக் கொண்டுவர முடியும் என்று குறிப்பிட்டார்.

உயிரையும் உடமைகளையும் பறிக்கும் இந்தப் பயங்கரவாதத்தைத் தடுப்பதற்கான இந்த நடவடிக்கையை, நீங்கள் நிச்சயம் செய்வீர்கள், அது உங்கள் அயலவனின் அமைதியாக வாழ்க்கை மீளத்திரும்ப உதவும் என்று எழுதிய ஜே.ஆர்., எல்லை கடந்த பயங்கரவாதம், இரண்டு நாட்டினதும் ஜனநாயகத்துக்கு ஆபத்தானது என்றும் இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வுக்கு, இந்தப் பயங்கரவாதமே பிரதான முட்டுக்கட்டையாக இருப்பதாக, இலங்கையின் பிரதான அரசியல் கட்சிகள் யாவும் கருதுவதாகவும் பதிவுசெய்தார்.

இறுதியாக, எங்களுடைய பிரச்சினையைத் தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள், இது தற்போது உங்களுடைய பிரச்சினையும் கூட. ஆகவே, உதவி செய்யுங்கள் என்று வினயமாக வேண்டி, தனது கடிதத்தை முடித்திருந்தார்.   

பல விடயங்களைத் தொட்டுச் சென்றாலும், இந்தக் கடிதத்தில் மேவிநிற்கும் பொருள் ஒன்று தான். இன்று இலங்கையினதும் இந்தியாவினதும், உலகினதும் பெரும்பிரச்சினை பயங்கரவாதமாகும்.  அதனை இல்லாதொழிப்பதுதான், முதல் கடமை. அதையே இனப்பிரச்சினைத் தீர்வினதும் முதற்படியாக ஜே.ஆர். குறிப்பிட்டிருந்தார்.

இதில், ராஜீவ் காந்திக்கும் இணக்கம் இருப்பதாகவே தெரிந்தது. ஆனால், இருவரும் ஓர்  இடத்தில் வேறுபட்டனர். ராஜீவ் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களை பேச்சுவார்த்தை மேசைக்கு அழைக்க விரும்பினார். ஜே.ஆரின் எண்ணம், யுத்த ரீதியான வெற்றியை நோக்கியே இருந்தது.  

(அடுத்த திங்கட்கிழமை தொடரும்)    

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ராஜீவ்-லலித்-சந்திப்பின்-விளைவு/91-221506

நவீனன்

  • Grand Master
  • வரையறுக்கப்பட்ட அனுமதி
  • Gender:Male
  • Interests:cricket,internet,
  • தொடங்கியவர்

Posted September 17, 2018மாறியது களம்என்.கே. அஷோக்பரன் /

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி – 161)

ராஜீவினுடைய ‘அரசியலற்ற முகாமைத்துவம்’ அணுகுமுறை  

ராஜீவ் காந்தியின் கீழான, இந்தியாவின் வௌியுறவுக் கொள்கையானது, அதற்கு முன்பிருந்த இந்திரா காந்தியின் கீழாக, இந்திய வௌியுறவுக் கொள்கையின் அடிப்படைகளிலிருந்து மாறுபட்டதல்ல என்று, 1987இல் வௌியான ஆய்வுக்கட்டுரை ஒன்றில் கருத்துரைக்கும் ஹரிஷ் கபூர், ஆனால், ராஜீவின் பாணி வேறானதாக இருந்தது என்கிறார்.   

நபருக்கு நபர், அரசியல் பாணி மாறுபடும் என்பதை ஏற்றுக்கொள்ளும் அவர், ராஜீவினுடைய பாணி ‘அரசியலற்ற முகாமைத்துவம்’ என்ற அணுகுமுறையில் அமைந்ததாகவும், அவரது முடிவெடுக்கும் முறை, எதேச்சதிகாரத் தன்மையைக் கொண்டிருந்ததாகவும் குறிப்பிடுகிறார்.   

பிராந்திய மேலாதிக்கம் என்ற இந்திய வௌியுறவுக் கொள்கையின் அடிப்படை மாறவில்லை. ஆனால், ராஜீவ் அதை, இந்திரா காந்தியின் இரும்புக்கரம் கொண்ட அணுகுமுறையைவிட மாறுபட்டு, தன்னுடைய தனித்துவப் பாணியில் கையாள விரும்பினார். அந்த மாற்றத்தை அவர் அதிரடியாகவே நிறைவேற்றினார்.   

அவர், இலங்கையை நோக்கி மட்டுமல்லாது, பாகிஸ்தானை நோக்கியும் நேசக்கரத்தை நீட்டினார். இந்தியாவின் நலனையும் நோக்கத்தையும் இந்தப் பாணியில் நிறைவேற்றவே அவர் எத்தனித்தார்.  

ஆகவே, ஜே.ஆரின் கடிதத்துக்கு ராஜீவிடமிருந்து சாதகமான எதிர்வினையே கிடைத்தது. தமிழ்த் தேசியவாதிகள் இதை, ஜே.ஆரின் வலைக்குள் ராஜீவ் விழுந்துவிட்டதாக விமர்சித்தார்கள்.   

ஆறுதலாக ஆய்ந்து முடிவெடுப்பவன், ஒரு முடிவை எடுத்தபின், அந்த முடிவை மாற்றவும் காலம் எடுத்துக் கொள்வான். அதுபோல, அவசரமாகவும் எதேச்சதிகாரத்துடனும் முடிவெடுப்பவன், தான் எடுத்த முடிவை, அதேவேகத்திலும் எதேச்சதிகாரத்துடனும் மாற்றிக்கொள்ளக் கூடியவனாகவே இருப்பான். 

ஆகவே, ராஜீவினுடைய அதிரடிப் பாணியானது, தற்போது தமக்குச் சாதகமாக அமைந்தாலும், அதே அதிரடியுடன் அந்த முடிவை, ராஜீவ் மாற்றிக் கொள்ளக் கூடும் என்பதையும் ஜே.ஆர் அரசாங்கம் உணர்ந்திருக்க வேண்டும். இங்கு, அணுகுமுறைகள் மாறலாம்; இந்திய நலன் என்ற அடிப்படை, எப்போதும் மாறப்போவதில்லை. சர்வதேச இராஜதந்திர அரசியலின் அடிப்படை இதுதான்.   
இந்திய அணுகுமுறை மாற்றம்   

ஜே.ஆரின் கடிதத்தைத் தொடர்ந்து, ஜே.ஆர் கேட்டுக் கொண்டதன்படி, தன்னுடைய மூத்த அதிகாரி ஒருவரை, பேச்சுவார்த்தைக்கு அனுப்ப, ராஜீவ் காந்தி முடிவெடுத்தார்.   

இதுவரை காலமும், இலங்கை விவகாரத்தைக் கையாண்டு வந்த, கோபால்சாமி பார்த்தசாரதியை ஓரங்கட்டிவிட்டு, வௌியுறவுச் செயலாளரான ரொமேஷ் பண்டாரியை, இலங்கை விவகாரத்தைக் கையாள்வதற்கு நியமித்ததுடன், ஜே.ஆர் அரசாங்கத்தோடு பேச்சுவார்த்தை நடத்துவதற்கு, அவரை அனுப்ப ராஜீவ் தீர்மானித்தார்.   

மறுபுறத்தில், இந்திய வௌியுறவு அணுகுமுறையில் ஏற்பட்டிருந்த இந்த மாற்றத்தை, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களுக்கு எடுத்துரைக்கும் பணியை, இந்திய உளவுப் பிரிவு (றோ) முன்னெடுத்ததாக, அன்ரன் பாலசிங்கம் தன்னுடைய ‘போரும் சமாதானமும்’ என்ற நூலில் பதிவுசெய்கிறார்.   

தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் தலைவர்களைச் சந்தித்த, இந்திய உளவுத்துறைத் தலைவர்கள், இந்தியா, இலங்கையோடு நட்புறவைப் பேண விரும்பியுள்ள மாற்றத்தை எடுத்துரைத்ததோடு, பேச்சுவார்த்தை மூலம் சமாதானத்தை ஏற்படுத்த, ராஜீவ் காந்தி விரும்பியுள்ளதாகவும், இந்தப் பேச்சுவார்த்தையில், தமிழ்த்தரப்பின் அனைத்துப் பங்குதாரிகளும் பங்குபற்ற வேண்டும் என்று விரும்புவதாகவும் தெரிவித்திருந்தனர். 

அத்துடன், தமிழ் ஆயுதக் குழுக்கள் யாவும், இந்திய மத்தியஸ்தத்துடன், சகல தாக்குதல் நடவடிக்கைகளையும் கைவிட்டுவிட்டு, இலங்கை அரசாங்கத்தோடு பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய நேரம் நெருங்கிவிட்டதாகவும்  குறிப்பிட்டனர்.   

மேலும், தமிழ் மக்களது உண்மையான அரசியல் அபிலாஷைகளை, பூர்த்தி செய்யத் தக்க தீர்வொன்றை எட்டுவதற்கு, ஆயுதப் போராட்டக் குழுக்கள் உள்ளிட்ட அனைத்துத் தமிழ்ச் சக்திகளினதும் ஒத்தழைப்பையும் புரிந்துணர்வையும் இந்திய அரசாங்கம் வேண்டுவதாகவும் கேட்டுக்கொண்டனர்.   

ராஜீவ் காந்தியின் இந்த அணுகுமுறை மாற்றம் பற்றி, விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், ஆச்சரியமோ அதிர்ச்சியோ அடையவில்லை என்றும்,
ஜே.ஆர். ஜெயவர்தனவை, ராஜீவ் காந்தி  தவறாக எடைபோட்டுவிட்டதாகவும், யுத்தநிறுத்தத்துக்கான காலம் இன்னும் ஏற்படவில்லையென்றும் கருதியதாக, அன்ரன் பாலசிங்கம் பதிவுசெய்கிறார்.   

மேலும், தன்னுடைய நிலைப்பாட்டைத் தௌிவுறுத்தும் சில விடயங்களையும், அவர் இந்திய உளவுத்துறைத் தலைவர்களோடு பகிர்ந்திருந்ததாகவும் அன்ரன் பாலசிங்கம் குறிப்பிடுகிறார்.   

தமிழ் ஆயுதப் போராட்டமானது, அரச அடக்குமுறையின் காரணமாகவே ஏற்பட்டதாகவும் விடுதலைப் புலிகள் வன்முறையை விரும்பவில்லை என்றும், தமிழ் இனத்தையும் தமிழ் அடையாளத்தையும் பாதுகாக்க, ஆயுதவழிமுறையைத் தவிர, வேறு வழியிருக்கவில்லை என்றும், இந்தியாவால் தமிழ் மக்களுக்கான நீதியையும் நியாயத்தையும் அமைதியான வழியில் பெற்றுக்கொடுக்க முடியுமானால் அதைத் தமிழ் மக்கள் வரவேற்பதோடு, அதற்கு நன்றி உடையவர்களாக இருப்பார்கள் என்றும், இந்திய உளவுத்துறைத் தலைவர்களிடம் வேலுப்பிள்ளை பிரபாகரன் தெரிவித்திருந்ததாக, அன்ரன் பாலசிங்கம் தனது நூலில் பதிவுசெய்கிறார். 

மேலும், வே. பிரபாகரன், மாற்றமுடியாத பேரினவாத சித்தாந்தத்துக்குள் இரண்டறக் கலந்துவிட்ட சிங்களத் தலைமைகளின் இலக்குகள், திட்டங்கள் பற்றி, தமிழர்கள் மனதில் ஐயம் உண்டு என்றும், ஜே.ஆர். ஜெயவர்தன தொடர்பிலான ராஜீவ் காந்தியின் எடைபோடல் தவறானது என்ற ஐயமுண்டு என்றும், இந்திய உளவுத்துறைத் தலைவர்களிடம் தெரிவித்திருந்ததாக, அன்ரன் பாலசிங்கம் பதிவுசெய்கிறார்.   

இந்தக் கருத்துகள், இந்தியாவால் கேட்டுக் கொள்ளப்பட்டாலும், குறித்த கூட்டம், இந்தியாவின் முடிவை, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களுக்குத் தெரிவிப்பதற்காகவே அமைந்திருந்தது. அதுவன்றி, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் ஆலோசனையைப் பெறுவதற்கானது அல்ல. ஏனெனில், ராஜீவ் காந்தி அரசாங்கத்தால், ஏற்கெனவே முடிவு எடுக்கப்பட்டிருந்தது. 

இந்திரா காந்தியின் அரசாங்கத்தின் கீழ், தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களுக்குக் கிடைத்த அதே ஆதரவு, ராஜீவின் தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் கிடைக்காது என்ற சூழல் உருவாகி இருந்தது.   
ரோமேஷ் பண்டாரியின் இலங்கை விஜயம்   

ராஜீவ் காந்தி சார்பில்,  ஜே.ஆர். ஜெயவர்தன அரசாங்கத்தோடு கலந்தாலோசனை நடத்துவதற்காக, இந்திய வௌியுறவுச் செயலாளர் ரொமேஷ் பண்டாரி, 1985 மார்ச் 25ஆம் திகதி, கொழும்பை வந்தடைந்தார்.   

இந்த வருகையின் போது, ஜனாதிபதி ஜே.ஆர், தேசிய பாதுகாப்பு அமைச்சர் அத்துலத்முதலி, அமைச்சர்களான காமினி திசாநாயக்க, ரொனி டி மெல், கே.டபிள்யூ.தேவநாயகம், சௌமியமூர்த்தி தொண்டமான் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.   

இதில், தொண்டமானுடனான சந்திப்பின் போது, அரசியல் தீர்வு தொடர்பில், வடக்கு-கிழக்கு இணைப்பின் முக்கியத்துவத்தைத் தொண்டமான், பண்டாரியிடம் எடுத்துரைத்ததாகவும், ஆனால், இணைப்பு அவசியமில்லை; மாறாக மாவட்ட ரீதியிலான அணுகுமுறையே, இனப்பிரச்சினைத் தீர்வுக்குப் போதுமென்ற கருத்தை, பண்டாரி கொண்டிருந்ததாகவும் ரீ.சபாரட்ணம் பதிவுசெய்கிறார். 

குறித்த சந்திப்பின் பின்னர், சந்திப்புப் பற்றிக் கருத்துரைத்திருந்த தொண்டமான், “நான் பண்டாரியிடம் நேரடியாகவே, உங்களுக்கு இந்தப் பிரச்சினையின் தன்மையோ, சிக்கல்களோ தெரியவில்லை” என்று தெரிவித்திருந்ததாக ரீ.சபாரட்ணம் பதிவுசெய்கிறார். 

இது மிக முக்கியமான விடயம். தமிழர்களது அபிலாஷைகளைச் சரிவரப் புரிந்துகொள்ளாது, ஏதோ ஒருவடிவிலான அதிகாரப் பகிர்வு, இனப்பிரச்சினையைத் தீர்த்துவிடும் என்ற எடுகோளில் செயற்படுவது, இனப்பிரச்சினையைத் தீர்த்துவிடப்போவதில்லை. இது இந்திரா காந்திக்கும், கோபால்சாமி பார்த்தசாரதிக்கும் புரிந்திருந்தது. அதனால்தான், பார்த்தசாரதி சில விடயங்களில், ஜே.ஆரிடம் கண்டிப்பாக நடந்துகொண்டிருந்தார். ஆனால், ராஜீவ் காந்திக்கு இந்தச் சிக்கல்கள் இன்னும் புரிபடவில்லை.   

பண்டாரி – அமீர் சந்திப்பு   

இலங்கையில், தன்னுடைய சந்திப்புகளைப் பூர்த்தி செய்து கொண்டு, தென்னிந்தியாவுக்குச் சென்ற பண்டாரி, அங்கு அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியினருடன் சந்திந்துப் பேசினார். பேச்சுவார்த்தை என்பதை விட, இந்தியாவின் புதிய நிலைப்பாட்டை எடுத்துரைக்கும் கூட்டமாகத் தான் இது நடந்தது.  

 ஜே.ஆர் அரசாங்கத்தோடு, மீண்டும் புதிய சுற்றுப் பேச்சுவார்த்தைக்கு தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியைத் தயாராகுமாறு கேட்டுக்கொண்ட பண்டாரி, குறித்த பேச்சுவார்த்தையில், தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களையும் இணைத்துக் கொள்ளும் முயற்சியில், இந்தியா ஈடுபட்டுள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தார்.  

ஜே.ஆரை நம்ப வேண்டாம் என்பதை, அமிர்தலிங்கம் எடுத்துரைத்த போதும், பண்டாரி தன்னுடைய நிலைப்பாட்டில் மிகத் தௌிவாக இருந்தார். 

ராஜீவுக்கும், இந்திராவுக்கும் இருந்த, இன்னொரு முக்கிய அணுகுமுறை வேறுபாடு இதுவாகும். இந்திரா காந்தி, ஒருபோதும் ஜே.ஆரை நம்பவில்லை என்பதுதான் பல ஆய்வாளர்கள், அவதானிகளின் கருத்தாக உள்ளது. 

ஆனால், ராஜீவ் அதில் வேறுபட்டிருந்தார். அவர், தன்னுடைய நல்லெண்ணம் மீது நம்பிக்கை கொண்ட அளவுக்கு, ஜே.ஆர் காட்டிக் கொண்ட நல்லெண்ணம் மீதும், நம்பிக்கை கொண்டிருந்தார்.  

 டெல்லி திரும்பிய ரொமேஷ் பண்டாரி, ராஜீவின் நம்பிக்கைக்கு மேலும் உரமூட்டினார்.   

ஊடகங்களிடம் பேசிய அவர், “இலங்கையில் யுத்தம் விரைவில் நிறுத்தப்பட்டு, அரசாங்கத்துக்கும் தமிழ்த் தரப்பினருக்கும் இடையிலான பேச்சுவார்த்தை, விரைவில் ஆரம்பமாகும்” என்று நம்பிக்கையை விதைத்தார்.  

பண்டாரி தந்த நம்பிக்கையின் எதிரொலியாக, 1985 ஏப்ரல் 10ஆம் திகதி, இலங்கை விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி, “பாதையின் முடிவில், வௌிச்சம் தெரிகிறது” என மிகுந்த நம்பிக்கையோடு குறிப்பிட்டிருந்தார்.  

களமாற்றத்தின் எதிரொலி   

மேலும், ரொமேஷ் பண்டாரியின் இலங்கை விஜயத்தைத் தொடர்ந்து, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் செயற்பாடுகளை முடக்கும் சில நடவடிக்கைகளை இந்திய அரசு முன்னெடுத்தது.   

1985 மார்ச் மாத இறுதிப்பகுதியில், தென்னிந்தியாவில் இருந்து இலங்கை நோக்கி, ஆயுதங்கள் சிலவற்றுடன் பயணித்த ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் 
(ஈ.பி.ஆர்.எல்.எப்) படகொன்று, இந்தியக் கடலோர காவற்படையினரால் மறிக்கப்பட்டு, குறித்த படகிலிருந்தவர்கள் கைது செய்யப்பட்டார்கள்.   

தொடர்ந்து, 1985 ஏப்ரல் மாத முதல் வாரத்தில், சென்னைத் துறைமுகத்தில் வைத்து, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளோட்) ஆயுதக் கொள்கலன் ஒன்று, சுங்கப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டது.   
இதன் மூலம், இந்திய அரசு, தான் வளர்த்துவிட்ட தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களுக்கு, ஒரு தௌிவான செய்தியைச் சொன்னது. நீங்கள், இங்கிருந்து இயங்க வேண்டுமென்றால், எங்களுடைய சொல்லைக் கேட்டால் மட்டுமே இயங்கலாம் என்பதே அந்தச் செய்தியாகும்.   

ராஜீவ் தலைமையிலான இந்திய அரசாங்கத்தின், அந்தச் சந்தர்ப்பத்திலான முக்கிய நோக்கமானது, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களை, இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை மேசைக்கு அழைத்து வருவதிலேயே இருந்தது.   

தமிழ் இளைஞர் ஆயுதக்குழுக்கள் ஜே.ஆர் அரசாங்கத்தோடு பேசுவது தொடர்பில் ஆர்வம் காட்டாத நிலையில், எவ்வழியிலேனும் அவர்களைப் பேச்சுவார்த்தை மேசைக்கு அழைத்து வரும் முடிவில் இந்தியா செயற்பட்டது. அதன்படிதான் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.   

இந்திய அரசின் இந்த மாற்றம், இது வரை தம்முள்ளும் முரண் போக்கைக் கொண்டிருந்த தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் ஒன்றிணைய வேண்டிய, குறைந்த பட்சம் ஒருமித்த தளமொன்றில் இணைய வேண்டிய தேவையையும் உருவாக்கியிருந்தது.   

(அடுத்த திங்கட்கிழமை தொடரும்)  

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/மாறியது-களம்/91-221901

நவீனன்

  • Grand Master
  • வரையறுக்கப்பட்ட அனுமதி
  • Gender:Male
  • Interests:cricket,internet,
  • தொடங்கியவர்

Posted September 23, 2018வேற்றுமையில் ஒற்றுமைஎன்.கே. அஷோக்பரன் /

   
தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி – 162)

பிரிந்து நின்றவர்கள்

நோக்கம் ஒன்று; ஆனால், அதை அடைவதற்காகப் பல பாதைகளில் புறப்பட்ட பல அமைப்புகள் ஒன்றோடொன்றும், தமக்குள்ளும் முரண்பட்டு, எதிரும் புதிருமாகத் திசைமாறிப் பயணிக்க ஆரம்பித்தன.   

ஈழத் தமிழ் மக்களுக்காகத் தனிநாடொன்றைப் பெற்றுக்கொள்வதற்காக, ஆயுதப்போராட்டமே ஒரேவழி எனத் தீர்மானித்த தமிழ் இளைஞர், ஆயுதம் தரித்த அமைப்புகளாக இயங்கினார்கள்.   

இவை ஒவ்வொன்றினதும் உருவாக்கம், செயற்பாடுகள், பின்புலம் என்பன, தனித்து ஆராயப்படவேண்டியதொரு விடயம். அவற்றின் அடிப்படை நோக்கம், ஒன்றாக இருப்பினும், அதன் அரசியல், ஆதரவுப் பின்புலங்கள், அவை கொண்டிருந்த அரசியல் கொள்கைகள், கரிசனைகள் வேறுபட்டிருந்தன. இது பற்றிக் கருத்துரைக்கும் சிலர், இவற்றில் சில அமைப்புகள், முழுமையாக இந்திய ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்டிருந்ததாகச் சுட்டிக் காட்டுவதுடன், சில அமைப்புகள் இந்திய எதிர்ப்புப் போக்கைக் கொண்டிருந்ததாகவும் குறிப்பிடுகிறார்கள்.     

 மேலும், இந்த இயக்கங்களுக்கு இடையேயான எதிர்ப்பிலும், முரண்பாட்டிலும் பல உயிர்கள் பலியானதும் மறக்கவோ, மறுக்கவோ முடியாது. அவை, வரலாற்றில் கறுப்புப் பக்கங்களாக இடம்பிடித்து விட்டன. 

இந்தியா பற்றிய இந்த இயக்கங்களின் நிலைப்பாடுகள், எவ்வாறு இருந்தாலும், கிட்டத்தட்ட எல்லா அமைப்புகளுமே, தென்னிந்தியாவில், தமிழகத்தை மய்யமாகக் கொண்டே செயற்பட்டுக் கொண்டிருந்தன.   

இந்திய அரசாங்கத்தினது பின்புலமும், தமிழகத்தின் ஆதரவும், இந்திய உளவுத்துறையின் அரவணைப்புமின்றி இது சாத்தியமாகி இருக்காது. அரசியல் தந்திரோபாய ரீதியில் நோக்கினால், ஒன்றுக்கொன்று முரணான ஆயுதக் குழுக்களை வளர்த்துவிடுவது, ஆதரிப்பது இந்திய நலன்களுக்குச் சாதகமானதாகவே இருக்கும்.  

ஏனெனில், இந்தியா ஒரேயோர் இயக்கத்தை நம்பியிருக்க வேண்டியதில்லை. இப்படியாக, ஈழத் தமிழரின் விடுதலை என்றொரு குறிக்கோளை முன்வைத்து, உருவான தமிழ் இளைஞர் ஆயுத அமைப்புகளுக்குள்  1985களில், தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ), ஈழப் புரட்சிகர மாணவர் இயக்கம் (ஈரோஸ்), ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்), தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்), தமிழீழ விடுதலைப் புலிகள் (எல்.ரீ.ரீ.ஈ) ஆகியவை பலம் பொருந்திய, முக்கிய தமிழ் இளைஞர் ஆயுத அமைப்புகளாக விளங்கின.   

இவற்றில், 1984ஆம் ஆண்டு ஏப்ரல் காலப்பகுதியில், ஸ்ரீ சபாரட்ணம் தலைமையிலான ‘டொலோ’, பாலகுமாரன் தலைமையிலான ‘ஈரோஸ்’, பத்மநாபா தலைமையிலான ‘ஈ.பி.ஆர்.எல்.எப் ஆகிய மூன்று அமைப்புகளும் ஒன்றிணைந்து, ‘ஈழத் தேசிய விடுதலை முன்னணி’ என்ற ஒன்றுபட்ட முன்னணியை ஸ்தாபித்திருந்தன.   

1984ஆம் ஆண்டு காலப்பகுதியிலேயே, தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்கள் பிரிந்து, தனித்துச் செயற்படுவதைவிட, ஒன்றிணைந்து ஒரே நிகழ்ச்சி நிரலில் செயற்படுவது தான், அக்காலப்பகுதியில் எழுந்திருந்த சூழலை, எதிர்கொள்வதற்கேற்ற பொருத்தமான தந்திரோபாயம் என்று, அவை கருதியிருக்கக்கூடும்.   

மேலும், இதுபற்றித் தன்னுடைய நூலொன்றில் கருத்துரைக்கும் நாராயண்சுவாமி, ‘ஈழத் தேசிய விடுதலை முன்னணி என்ற இந்தக் முன்னணியானது, இந்திய உளவுத்துறையான ‘றோ’வினுடைய குழந்தை என்று குறிப்பிடுகிறார்.   

தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்களை ஒருங்கிணைப்பதில், நிறையச் சிக்கல்கள் இருந்ததாகவும் அதை நிவர்த்திக்கும் வகையில், அனைத்து அமைப்புகளையும் ஒரே குடையின் கீழ், ஒரு புள்ளியில் ஒன்றிணைக்கத் திட்டமிட்டு, ‘றோ’ அமைப்பே, இந்த முன்னணியை ஸ்தாபித்ததாக அவர் குறிப்பிடுகிறார்.   

இந்த அமைப்பு உருவானபோது, அது பற்றிக் கருத்துரைத்த, ‘ஈரோஸ்’ இயக்கத்தின் தலைவர் பாலகுமாரன், “அரசியல்வாதிகளின் தலையீடுகளின்றி, தமிழ் இளைஞர் ஆயுத அமைப்புகளால் உருவாக்கப்பட்டது” என்று கூறியிருந்தார்.   

“தமிழ்ப் போராளிகளிடையே ஒற்றுமை ஏற்பட வேண்டும் என்ற கருத்து உருவானபோது, பாக்கு நீரிணையின் இரு மருங்கிலுமுள்ள அரசியல்வாதிகளின் தலையீடு, அதில் நிறையவே ஏற்படத் தொடங்கியது. இந்த அரசியல்வாதிகளை, இதிலிருந்து தள்ளி வைக்க, நாம் உறுதி கொண்டிருந்தோம். அவர்களுக்குத் தேவைப்பட்டதெல்லாம், இந்த ஒற்றுமையை உருவாக்கியது ‘நான்தான்’ என்று சொல்வதனூடாக, அரசியல் இலாபத்தைப் பெற்றுக் கொள்வது மட்டும்தான்” என்று பாலகுமாரன் மேலும் குறிப்பிட்டிருந்தார்.  

1984இல் இந்த முன்னணி உருவானபோது, இதில் மிக முக்கியமான இரண்டு அமைப்புகளான வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமையிலான விடுதலைப் புலிகள் அமைப்பும், உமா மகேஸ்வரன் தலைமையிலான ‘புளொட்’ அமைப்பும் இணைந்திருக்கவில்லை. அவற்றை இணைத்துக்கொள்வதில் நிறையச் சிக்கல்கள் இருந்தன.   

ஆரம்பத்தில், இதுதொடர்பில் விடுதலைப் புலிகள் அமைப்பை அணுகுவதைவிட, ‘புளோட்’ அமைப்பை அணுகுவது, இலகுவாக இருந்தாக, பாலகுமாரன் குறிப்பிட்டதாகத் தன்னுடைய கட்டுரையொன்றில், அனிதா பிரதாப் மேற்கோள் காட்டுகிறார்.   

விடுதலைப் புலிகள் அமைப்பைப் பொறுத்தவரையில், அவர்கள் இந்த ஒற்றுமையை வரவேற்றிருந்தாலும், தம்மைப் பலம்வாய்ந்த அமைப்பாகக் கருதியதுடன், தனித்துப் போராடும் எண்ணத்திலேயே இருந்தார்கள் என அனிதா பிரதாப் குறிப்பிடுகிறார்.   

மேலும், ‘டெலோ’வுக்கும் விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையே நேரடி முரண்பாடுகள் நிறைய இருந்தன. ஆகவே, விடுதலைப் புலிகள் அமைப்போடு, ஓரளவு இணக்கமான உறவைக் கொண்டிருந்த ‘ஈரோஸ்’, ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்புகளே, விடுதலைப் புலிகளுடன் பேச வேண்டிய நிலையில் இருந்தன.  

மேலும், விடுதலைப் புலிகள், ‘புளொட்’ ஆகிய இரண்டு அமைப்புகளையும் இந்த முன்னணிக்குள் கொண்டு வருவது சாத்தியமாக இருக்கவில்லை. இதற்கு அந்த அமைப்புகளின் தலைவர்களான வேலுப்பிள்ளை பிரபாகரன், உமா மகேஸ்வரன் ஆகியோருக்கு இடையிலான தனிப்பட்ட வேறுபாடுகள், பகைமை உருவாகக் காரணங்களாகின என்று கூறப்படுகிறது. இந்தக் காரணங்கள், அனைவருக்கும் மிக வெளிப்படையாகத் தெரிந்தவையாகும்.

பிரபாகரனும் உமா மகேஸ்வரனும்  விடுதலைப் புலிகள் அமைப்பிலேயே ஆரம்பத்தில் இருந்தார்கள். விடுதலைப் புலிகள் அமைப்பின் இராணுவத் தளபதியாகப் பிரபாகரன் இருந்தபோது, 1977 முதல் 1980 வரை, அந்த அமைப்பின் மத்திய குழுவின் தலைவராக (தவிசாளராக) உமா மகேஸ்வரன் இருந்தார்.   

இருவரிடையேயும் தனிப்பட்ட ரீதியில் உருவான முரண்பாட்டின் விளைவாக, அந்த அமைப்பிலிருந்து விலகிய உமா மகேஸ்வரன், 1982இல் ‘புளொட்’ அமைப்பை உருவாக்கியிருந்தார். இவர்களுக்கு இடையேயான பகையின் வௌிப்பாடு, 1982 மே 19ஆம் திகதி, சென்னை, பாண்டிபஸார் பகுதியில் நேரடியாகத் துப்பாக்கிச் சூட்டு மோதலுக்கும் வழிவகுத்தது.   

இந்தப் பகையின் காரணமாக, இந்த இரு அமைப்புகளையும் ஒன்றிணைப்பதென்பது சாத்தியக் குறைவானதொரு விடயமாகவே இருந்தது.  

கைகோர்த்துக் கொண்டார்கள்  

1985இன் ஆரம்பப் பகுதியில், இலங்கை விவகாரம் தொடர்பில், ராஜீவ் காந்தியின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டிருந்தமையானது, தமிழ் இளைஞர் ஆயுதக்குழுக்கள் தொடர்பிலான, இந்தியாவின் ஆதரவு நிலைப்பாட்டையும் சற்றே மாற்றியிருந்தது.   

தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் முழுமையாக ஒன்றிணையாவிட்டாலும், குறைந்தபட்சம் அவை ஒருங்கிணைந்து செயற்பட வேண்டிய தேவையை, புதிதாக எழுந்துள்ள சூழல், உருவாக்கியிருந்தது. 

இந்தச் சூழலில்தான், 1985 ஏப்ரல் 10ஆம் திகதி, வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமையிலான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு, ஈழத் தேசிய விடுதலை முன்னணியில் இணைந்து கொண்டது.   

image_f0434facc2.jpg

தமிழகத்தின் சென்னையில் பாலகுமாரன், ஸ்ரீ சபாரட்ணம், பத்மநாபா, பிரபாகரன் ஆகியோர் இந்த அமைப்பின் கீழ் கைகோர்த்துக் கொண்டனர்.   

இது தொடர்பில், அவர்கள் வௌியிட்டிருந்த ஊடக அறிக்கையில், ‘அதிகரித்து வந்த அரச பயங்கரவாதமும், இன அழிப்பும் நாம் ஒன்றாக வேண்டிய தேவையை உருவாக்கியுள்ளதுடன், ஒன்றுபட்ட இராணுவ, அரசியல் தந்திரோபாயத்துக்கான அவசியத்தையும் உருவாக்கியுள்ளது’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.   

இந்த ஒன்றுபட்ட அமைப்பின் நிகழ்ச்சி நிரலானது, மூன்று அடிப்படைக் கொள்கைகளைக் கொண்டமைந்ததாக, தன்னுடைய கட்டுரையொன்றில் அனிதா பிரதாப் விவரிக்கிறார்.   

முதலாவது, ஆயுதப் போராட்டம் மூலமாக, விடுதலைக்கான தந்திரோபாயத்தை, இணைந்து முன்னெடுத்தல்.   

இரண்டாவது, அதன் மூலம் சுதந்திர தனிநாட்டை ஸ்தாபித்தல்.   

மூன்றாவது, அந்தச் சுதந்திர நாட்டை, சோஷலிச நாடாக வடிவமைத்தல் என்பனவாகும்.  

விடுதலைப் புலிகள் அமைப்பு, ஈழத் தேசிய விடுதலை முன்னணியில் இணைந்தது பற்றி, தன்னுடைய நூலொன்றில் விவரிக்கும் அடேல் பாலசிங்கம், ‘அதிகரித்து வந்த இந்தியாவின் அழுத்தமும், இந்திய அரசாங்கத்துக்கும் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களுக்கும் இடையில் அதிகரித்து வந்த கருத்து வேற்றுமைகளும் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தி இருந்தன என்று, விடுதலைப் புலிகள் அமைப்பின் தத்துவாசிரியரான அன்டன் பாலசிங்கம் உணர்ந்ததாகவும், மேலும், இந்தியாவிடமிருந்து எதிர்காலத்தில் வரக்கூடிய அரசியல், இராஜதந்திர அழுத்தங்களையும் சவால்களையும் விடுதலைப்புலிகள் அமைப்பால் தனித்து எதிர்கொள்வது சாத்தியமில்லை என்று அவர் கருதியதாகவும் அதனால், ஏலவே உருவாகியிருந்த ஈழத் தேசிய விடுதலை முன்னணியில் இணைந்துகொள்வதன் மூலம், தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்துக்கு வலுச்சேர்க்க முடியுமென்றும், அந்த ஒற்றுமையே இந்தியாவால் வரக்கூடிய அரசியல், இராஜதந்திர சவாலுக்கேற்ற கேடயமாக அமையுமென்றும் அன்டன் பாலசிங்கம் கருதியதாகப் பதிவு செய்கிறார்.   

ஆகவே, இந்த ஒருங்கிணைப்பானது காலச்சூழலின் தேவை கருதி அமைக்கப்பட்டது என்பது வௌிப்படையாகிறது. எது எவ்வாறாயினும், ஈழத் தேசிய விடுதலை முன்னணியில், ‘புளொட்’ அமைப்பு இணைத்துக் கொள்ளப்படவில்லை. இதற்குப் பரவலாக, இருவேறு காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன.   

ஈழத் தேசிய விடுதலை முன்னணி என்பது, இந்திய உளவுத்துறையின் உருவாக்கம் என்று கருத்துரைப்பவர்கள், இந்தியா, ‘புளொட்’ அமைப்பை விரும்பி இருக்கவில்லை என்றும், இதற்கு அவர்களிடையே இருந்த, பரஸ்பர வெறுப்புணர்வு காரணமாக இருந்ததாகவும் குறிப்பிடுகிறார்கள்.   

மறுபுறத்தில், உமா மகேஸ்வரன் தலைமையிலான ‘புளொட்’ அமைப்பு, ஈழத் தேசிய விடுதலை முன்னணியில் இணைவதை, விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் விரும்பி இருக்கவில்லை என்று, சிலர் கருத்துரைக்கிறார்கள்.   

அரசியல் முக்கியத்துவம்  

தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்களின் இந்த ஒருங்கிணைவு பற்றி, சற்றேனும் விவரமாக இங்கு ஆராய்ந்தமைக்கான முக்கிய காரணம், இந்தக் கட்டுரைத் தொடரின் நோக்கமான, ‘இலங்கைத் தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன?’ என்ற தேடலில், அந்த அபிலாஷைகளை வரையறுத்ததில், இந்தத் தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்களின் பங்கு மிக முக்கியமானது.   

அவை, 1985இல் திம்புவில் வரையறுத்த நான்கு அடிப்படைக் கொள்கைகள்தான் இன்று வரை, தமிழ் மக்கள் முன்னெடுக்கும் அரசியலின் அடிநாதமாக இருந்து வருகின்றன.  

ஆகவே, இந்தத் தேடலில், தமிழ் இளைஞர் ஆயுத அமைப்புகளின் இந்த அரசியல் பங்களிப்பு, முக்கியமானது மட்டுமல்லாது தவிர்க்க முடியாததும் ஆகும்.  

(அடுத்த திங்கட்கிழமை தொடரும்)  

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வேற்றுமையில்-ஒற்றுமை/91-222443

கிருபன்

  • Grand Master
  • கருத்துக்கள உறவுகள்
  • Gender:Male
  • Location:முடிவிலி வளையம்
  • Interests:போஜனம், சயனம்
  • கருத்துக்கள உறவுகள்

Posted October 1, 2018

தந்திரோபாய ஒற்றுமை

என்.கே. அஷோக்பரன் / 2018 ஒக்டோபர் 01 திங்கட்கிழமை

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி – 163)

தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களும்  தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியும்  

ஈழத் தேசிய விடுதலை முன்னணியுடன், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் கைகோர்த்துக்கொண்ட பின்னர், எழுந்த முக்கிய கேள்விகளில் ஒன்று, ‘உமா மகேஸ்வரன் தலைமையிலான தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) ஏன் இணைத்துக் கொள்ளப்படவில்லை, அல்லது எப்போது இணைத்துக்கொள்ளப்படும்’ என்பதாகும்?  

அப்போதைய சூழ்நிலையில், இது சாத்தியப்படப்போவதில்லை என்பது, வௌிப்படையாக அனைவருக்கும் தெரிந்திருப்பினும், இந்தக் கேள்வி ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்களிடம் தொடர்ந்து முன்வைக்கப்பட்டது.   

இந்தக் கேள்விக்கு பதிலளித்திருந்த அன்டன் பாலசிங்கம், “போர்த் தந்திரோபாயம் தொடர்பான, அபிப்பிராய வேறுபாடுகளே, புளொட் இயக்கம் ஈழத் தேசிய விடுதலை முன்னணியில் இணைத்துக்கொள்ளப்படாமைக்குக் காரணமாகும்” என்று குறிப்பிட்டிருந்தார்.   

மேலும், “உமா மகேஸ்வரன், மக்களைப் பெருமளவில் ஒன்றுதிரட்டி, தேசிய இராணுவமொன்றை அமைத்து, மரபுவழிப் போரை முன்னெடுக்க விரும்புகிறார். அவர், ஏனைய இயக்கங்கள் முன்னெடுக்கும் கெரில்லாப் போர் முறையை விமர்சிப்பதால், அவர் தலைமையிலான புளொட் இயக்கத்துக்கும் ஏனைய இயக்கங்களுக்கும் இடையில் இந்தத் தந்திரோபாயம் தொடர்பான அபிப்பிராய பேதம் நிலவுகிறது. ஒரே நாளில் தேசிய இராணுவமொன்று உருவாக்கப்பட முடியாது. கெரில்லாப் போரானது, காலவோட்டத்தில் மக்களின் போராக மாறும். இதை, உமா மகேஸ்வரன் விரைவில் உணர்ந்துகொள்வார். அப்போது, அவரை இணைத்துக்கொள்வது தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகும்” என்று அன்டன் பாலசிங்கம் குறிப்பிட்டிருந்தார்.   

இது ஒருபுறமிருக்க, மறுபுறத்தில் இந்த ஒற்றுமை அரசியல் ரீதியில் வலுவடைய வேண்டுமானால், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியும் இதில் இணைத்துக்கொள்ளப்பட வேண்டும் என்ற கருத்தும் நிலவியது.   

தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியை, தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்கள் வெறுத்தன என்பது மிக வௌிப்படையானது. அந்த நிலையில், கூட்டணியினரை ஈழத் தேசிய விடுதலை முன்னணியில் இணைத்துக்கொள்வது என்பதன் சாத்தியக்கூறு, துளியளவும் இருக்கவில்லை.  

என்னதான், தமிழ் மக்கள் மத்தியில், தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்களின் செல்வாக்கு அதிகரித்திருந்தாலும், இலங்கை அரசாங்கத்தையும்  சர்வதேசத்தையும் பொறுத்தவரையில், தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்ற அங்கிகாரம், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்கே இருந்தது. தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்கள், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியை வெறுக்க, இது கூட ஒரு காரணம் என்று, சிலர் குறிப்பிடுகிறார்கள்.   

வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் பெரும் இன்னல்களுக்கு முகம்கொடுத்துக் கொண்டிருக்கும் போது, மக்களோடு, மக்களாக நிற்காது, அவர்களது பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொள்பவர்கள், தென்னிந்தியாவில் தஞ்சமடைந்து வாழ்ந்துவருவதை சிலர், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்கும் அதன் தலைவர்களுக்கும் எதிரான, கடுமையான விமர்சனமாக முன்வைத்தார்கள்.   

இப்படித் தென்னிந்தியாவிலிருந்து கொண்டு, தமிழர்களின் பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொள்பவர்களைவிட, மக்களோடு மக்களாக நின்று, அவர்களுக்காகப் போராடும் போராளிகளே, மக்களின் உண்மையான பிரதிநிதிகள் என்பது, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் கருத்தாக இருந்தது.   

மேலும், அமிர்தலிங்கத்தின் அரசியலையும் தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்கள் கடுமையாக விமர்சித்தார்கள். ஈழப் புரட்சிகர மாணவர் இயக்கத்தின் (ஈரோஸ்) தலைவர் பாலகுமாரன், “அமிர்தலிங்கம் ஒரு சந்தர்ப்பவாதி; அவர் மீது, எமக்கு நம்பிக்கையில்லை” என்று வௌிப்படையாகவே கூறியிருந்தார்.   

ஆனால், ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் உருவாக்கம் பற்றி, அமிர்தலிங்கத்திடம் இருந்து நேர்மறையான கருத்துகளே வௌிப்பட்டன. “தமிழ்ப் போராளிகள் ஒன்றிணைய வேண்டுமென்றே, எப்போதும் விரும்பினேன்” என்று தெரிவித்த அமிர்தலிங்கம், “வெறுமனே பெரிய இயக்கங்கள் மட்டும் ஒன்றிணைவது போதாது; அனைத்துச் சிறிய ஆயுதக் குழுக்களும் கூட, இதனுடன் ஒன்றிணையும் போதுதான், அரச பயங்கரவாதத்துக்கு எதிராக, வினைத்திறனாகச் செயற்பட முடியும்” என்று குறிப்பிட்டார்.   

ஆயினும், ஒரு விடுதலை அடையப் பெறுவதற்கு, ஆயுதப் போராட்டம் மட்டும் தனித்த வழிமுறையல்ல, என்பதையும் குறிப்பிட்ட அமிர்தலிங்கம், “ஈழம் என்ற கருத்துருவாக்கத்துக்கு சர்வதேச அங்கிகாரத்தையும் ஏற்புடைமையையும் ஏற்படுத்த, நாங்கள் முயற்சிக்கிறோம்” என்றும் கூறினார். 

தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி, ஈழத் தேசிய விடுதலை முன்னணியில் இணையுமா, என்ற கேள்விக்கு பதிலளித்த அமிர்தலிங்கம், “போராளி இயக்கங்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் இடையில் புரிந்துணர்வு அவசியம். நாங்கள், அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும்; விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்கவும், இன அழிப்பைத் தவிர்ப்பதற்குமாக ஈழத் தேசிய விடுதலை முன்னணியுடன் நெருங்கிய உறவை ஏற்படுத்திக்கொள்ள விரும்புகிறோம்” எனத் தெரிவித்திருந்தார்.   

ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் உருவாக்கம் வடக்கு, கிழக்கு உட்பட, புலம்பெயர் தேசங்களிலும் பெரும் பரபரப்பு அலைகளை ஏற்படுத்தியிருந்தது.   

இதேவேளை, ஈழத் தேசிய விடுதலை முன்னணியில் விடுதலைப்புலிகள் இணைந்துகொண்ட 1985 ஏப்ரல் 10 அன்று, அவர்கள், மிகப்பெரிய தாக்குதலொன்றை யாழ்ப்பாணத்தில் நடத்தியிருந்தனர்.   

யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலால், அங்கிருந்த பொலிஸார், பொலிஸ் நிலையத்தைக் கைவிட்டு, யாழ்ப்பாணக் கோட்டையில் அமைந்திருந்த இராணுவ முகாமுக்குள் தஞ்சம் புகுந்தனர். இந்தத் தாக்குதலில், பொலிஸ் நிலையத்திலிருந்த பல்வேறு ஆயுதங்களும் விடுதலைப்புலிகள் அமைப்பால் கைப்பற்றப்பட்டிருந்தன.   

இந்தத் தாக்குதல் நடந்த மறுதினம், விடுதலைப் புலிகள் அமைப்பு, சென்னையிலிருந்து இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்கும் அறிவிப்பை வௌியிட்டிருந்தது. 

தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்கள், பலம்பெற்று வந்தாலும், அரசியல் ரீதியில் நோக்கினால், இந்தத் தாக்குதலும்  ஜே.ஆருக்குச் சாதகமானதாகவே இருந்தது; அல்லது, இதையும் ஜே.ஆர், தனக்குச் சாதகமாக்கிக் கொண்டார் என்றே கூறலாம்.  

மார்கிரட் தட்சரின் விஜயம்  

இலங்கையில் தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்களால் முன்னெடுக்கப்படுவது ‘பயங்கரவாதம்’ என்பதே, ஜே.ஆரினதும் அவரது அரசாங்கத்தினதும் நிலைப்பாடாக இருந்தது.   

இலங்கை அரச படைகள் நடத்தும் தாக்குதல்களானவை, பயங்கரவாதத்துக்கு எதிரான தாக்குதல்கள் என்பதே, ஜே.ஆர் அரசாங்கம் முன்வைத்த வியாக்கியானம்.   

தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்கள், பொது இலக்குகள் மீது தாக்குதல் நடத்திய போதெல்லாம், ஜே.ஆரின் இந்தப் ‘பயங்கரவாத’ வியாக்கியானத்துக்கு வலுச்சேர்ந்துக் கொண்டிருந்தது.   

மேலும், 1985 ஏப்ரல் 10ஆம் திகதி, நடந்த தாக்குதலானது, பிரித்தானியப் பிரதமர் மார்கிரட் தட்சரின் இலங்கை விஜயத்துக்கு ஒருநாள் முன்பாக இடம்பெற்றிருந்தது.   

மறுநாள், இலங்கை வந்த பிரித்தானிய பிரதமர் தட்சரைச் சந்தித்த ஜனாதிபதி ஜே.ஆர், யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத் தாக்குதலானது, தட்சரின் வருகையை அவமதிக்கும் வகையில் அமைந்ததாகக் குறிப்பிட்டதுடன், இந்தக் குழுக்கள், தமிழ் மக்களைப் பயங்கரவாதம் நோக்கி அழைத்துச் செல்வதாகவும் தெரிவித்திருந்ததாக ரீ.சபாரட்ணம் பதிவு செய்கிறார்.  

1985 ஏப்ரல் 13ஆம் திகதி, பிரித்தானியப் பிரதமர் தட்சர், இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது, அந்த உரையில் பயங்கரவாதத்துக்கு எதிரான கருத்துகள் அடங்கியிருந்தன. “எம்மிரு நாடுகள் உட்பட, பல நாடுகளையும் பாதித்துக்கொண்டிருக்கும், இன்று வேகமாகப் பரவும் நோயான பயங்கரவாத வன்முறைகளுக்கு, நாம் முகம்கொடுத்துக் கொண்டிருக்கின்றோம். ஆகவே, இலங்கையில் பயங்கரவாதத்தோடு போராட, நீங்களெடுக்கும் முயற்சிகள் பற்றி, என்னால் பரிதாபம் கொள்ள முடிகிறது. வாக்குச் சீட்டால் செய்ய முடியாததைத் துப்பாக்கி ரவையால் சாதிக்க முயல்பவர்களுக்கு, வன்முறையைக் கையிலெடுத்தவர்களுக்கு எதிராக, திடமான பதில் வழங்கப்பட வேண்டும்” என்று பயங்கரவாதத்துக்கு எதிரான தன்னுடையதும், பிரித்தானியாவின் உடையதுமான உறுதியான நிலைப்பாட்டை, தட்சர் எடுத்துரைத்திருந்தார்.   

தொடர்ந்து, சுதந்திரம், பொறுப்புணர்வு, நாடாளுமன்ற ஜனநாயகம் ஆகிய விழுமியங்கள் பற்றிப் பேசியவர், தமது பிரச்சினையை அமைதி வழியிலும், ஜனநாயக ரீதியாகவும் எடுத்துரைக்கும் சிறுபான்மை சமூகங்களுடன், இணைந்து செயற்பட, அரசாங்கங்கள் தயாராக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.   

மேலும், தோல்வியடைந்த சர்வகட்சி மாநாட்டு முயற்சிகளைக் குறிப்பிட்டுப் பேசியவர், உங்களுடைய ஜனாதிபதியின் முன்மொழிவின் அடிப்படையிலான தீர்வை, சர்வகட்சி மாநாட்டின் மூலம் எட்டமுடியாது போனது பற்றி, தான் வருத்தம் கொள்வதாகத் தெரிவித்ததுடன், சமூகங்களுக்கிடையில் ஏற்படும் சிக்கலான பிரச்சினைகள், கலந்துரையாடல்,  நல்லிணக்கம் ஆகியவற்றின் மூலம் மட்டுமே தீர்க்கப்படமுடியும் என்று, தான் உறுதியாக நம்புவதாகவும் தட்சர் குறிப்பிட்டிருந்தார்.  

பயங்கரவாதமும் பயங்கரவாத எதிர்ப்பும்  

சர்வதேச ஆதரவைப் பொறுத்தவரையில், இந்தக் காலப்பகுதியில் ஜே.ஆர், வெற்றி கண்டுகொண்டிருந்தார். இதில், ராஜீவ் காந்தி தலைமையிலான, இந்தியாவின் அணுகுமுறையில் ஏற்பட்டிருந்த மாற்றமே குறிப்பிடத்தக்கதாக இருந்தது.   

இந்தியாவின் அணுகுமுறை மாற்றத்தை, ஈழத் தேசிய விடுதலை முன்னணி என்று ஒன்றுபடுதலுடன் எதிர்கொண்ட, தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்கள், தமது வன்முறைத் தாக்குதல் நடவடிக்கைகளை அதிகரிக்கத் தொடங்கின. 

1985 ஏப்ரல் 25ஆம் திகதி, புளொட் அமைப்பு, கொழும்பு நகரை அண்டிய பிரதேசமொன்றில் அமைந்த பொலிஸ் நிலையமொன்றின் மீது, தாக்குதலொன்றை நடத்தியிருந்தது.   

1985 மே மாத ஆரம்பத்தில், ஈ.பி.ஆர்.எல்.எப், விடுதலைப் புலிகள் ஆகிய அமைப்புகள், வடக்கில் அரச படைத்தளங்கள் மீது, தாக்குதல்களை முன்னெடுத்திருந்தன.   

இதில், மே 09ஆம் திகதி, விடுதலைப் புலிகள் அமைப்பு நடத்திய கண்ணிவெடித் தாக்குதலில், இராணுவ அதிகாரியும், ஐந்து வீரர்களும் கொல்லப்பட்டிருந்தார்கள். இதற்குப் பதிலடியாக, இராணுவம் ஊருக்குள் நுழைந்து நடத்திய தாக்குதலில், ஏறத்தாழ 75 அப்பாவிப் பொதுமக்கள் பலியானதாகச் சிலர் பதிவு செய்கிறார்கள்.   

வடக்கு, கிழக்கில் கொடூர வன்முறைகள் நித்திய நிலையாக மாறியிருந்தன. மறுபுறத்தில், தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்கள் முன்னெடுத்த தாக்குதல்கள், ஜே.ஆரின் ‘பயங்கரவாதம்’ என்ற கருத்துக்கு வலுச்சேர்த்ததுடன், அரசாங்கம் பயங்கரவாத எதிர்ப்பாக, பதில் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வழிசமைத்தது.   

அரசாங்கம் நடத்திய பதிலடித் தாக்குதல்கள், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையாக, ஜே.ஆராலும் ஜே.ஆர் அரசாங்கத்தின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத்முதலியாலும் நியாயப்படுத்தப்பட்டன.  இந்த வியாக்கியானத்தின் படி இந்தியா, மேற்குலகம் உள்ளிட்ட சர்வதேச சமூகம், தமக்கு ஆதரவாக இருக்கும் என்பதே ஜே.ஆரின் கணக்கு.   

இலங்கை விவகாரத்தில், இந்தியாவின் அணுகுமுறை தொடர்ந்து இரண்டு வழிமுறைகளைக் கொண்டிருந்தது. அரசியல் ரீதியில் ராஜீவ் காந்தி, ஆயுத இயக்கங்கள் தொடர்பிலான நிலைப்பாட்டை ஓரளவு மாற்றியிருந்தாலும், இந்திய உளவுத்துறை, தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்களுக்கான ஆதரவை, தொடர்ந்து வழங்கிக் கொண்டுதான் இருந்தது. 

தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள், ‘ஆயுதம் மூலமாக விடுதலை’ என்ற எண்ணத்திலும், ‘பயங்கரவாத எதிர்ப்பு என்ற கோசத்தின் கீழ், இராணுவ ரீதியில், தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களை வெற்றிகொள்வது, என்பது ஜே.ஆரின் திட்டமாகவும் இருந்தது.   

ஆனால், தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களோ, ஜே.ஆரோ எதிர்பார்க்காத வகையில், ராஜீவ் காந்தி வேறொரு திட்டத்தைக் கொண்டிருந்தார். அதற்கான காய்நகர்த்தல்களை இந்திய அரசாங்கம் முன்னெடுத்துக் கொண்டிருந்தது.   

அதில் முக்கியத்துவம் மிக்கதொரு காய்நகர்த்தலாக, இலங்கைக்கான புதியதொரு தூதுவரை இந்திய அரசாங்கம் நியமித்தது.  

(அடுத்த திங்கட்கிழமை தொடரும்)  

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/தந்திரோபாய-ஒற்றுமை/91-222786

கிருபன்

  • Grand Master
  • கருத்துக்கள உறவுகள்
  • Gender:Male
  • Location:முடிவிலி வளையம்
  • Interests:போஜனம், சயனம்
  • கருத்துக்கள உறவுகள்

Posted October 8, 2018

இருபெரும் படுகொலைகள்

என்.கே. அஷோக்பரன் / 2018 ஒக்டோபர் 08 திங்கட்கிழமை, மு.ப. 01:13

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி -164)

அநுராதபுரப் படுகொலைகள்   

1985 ஏப்ரல், மே மாதங்களில், தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள், பல்வேறு தாக்குதல் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தன.இதற்குப் பதிலடியாக, அரச படைகளும் தாக்குதல்களை முன்னெடுத்திருந்தன.   

அரச படைகளின் பதில்தாக்குதலில், அப்பாவிப் பொதுமக்கள் பலரும் கொல்லப்பட்டனர்; காயப்பட்டனர்; பாதிக்கப்பட்டனர்.   

1985 மே ஏழாம் திகதி, விடுதலைப் புலிகள் அமைப்பு, வல்வெட்டித்துறை பகுதியில் இராணுவத்தினர் மீது நடத்திய தாக்குதலொன்றில், ஐந்து இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடியாக, அரச படைகள் அப்பகுதியிலும், அதை அண்டிய பகுதிகளிலும் நடத்திய பதில் தாக்குதல்களில், ஏறத்தாழ 75 அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டிருந்தனர்.   

தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்கள் அரச படைகளைத் தாக்குவதும், அதற்குப் பதிலடித் தாக்குதலை, அரச படைகள் முன்னெடுக்கும் போது, அதில் அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்படுவதும், அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்கள், பதில்த் தாக்குதல் நடத்துவதும், ஒரு விஷச்சுழலாகச் சுற்றிச் சுழன்று கொண்டிருந்ததை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.   

வல்வெட்டித்துறைத் தாக்குதலுக்கு ‘பதிலடி’ என்ற அடிப்படையில், தமிழ் இளைஞர் ஆயுதக் குழு ஒன்று, (சில காலத்துக்குப் பின்னர், இந்தத் தாக்குதலுக்கு விடுதலைப் புலிகள் அமைப்பு உரிமை கோரியிருந்ததாகச் சில ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்) நடத்திய தாக்குதல், வரலாற்றில் அழிக்கமுடியாத, பெரும் இரத்தக் கறையாகப் படிந்து கிடக்கிறது.  

அசோகனின் மகள் சங்கமித்தையால் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டதும், கௌதம புத்தர் ஞானம் பெற்ற அரச மரத்தின் கிளையிலிருந்து, உயிர்த்தெழுந்திருந்த ‘மஹாபோதி’ மரத்தையும் இலங்கையின் பல்வேறு மன்னர்களும் அமைத்திருந்த சைத்தியங்களையும் அநுராதபுர நகரம் கொண்டுள்ளது. இத்தகைய சிறப்புகளும் பெருமைகளும் மிக்கதும் சிங்களப் பௌத்தர்களால் ‘புனித பூமி’யாகவும் கருதப்படும் அநுராதபுர நகரத்துக்குள், தமிழ் இளைஞர் ஆயுதக் குழு உறுப்பினர்கள் 1985 மே 14ஆம் திகதி, பஸ் ஒன்றில் நுழைந்தனர். அந்த ஆயுததாரிகள், முதலில் அநுராதபுர பஸ் நிலையத்திலும், பின்னர் ‘மஹாபோதி’ ஸ்தலத்திலும் பெரும் தாக்குதலை நடத்தினர்.   

இந்தத் தாக்குதலில் பொதுமக்கள், புத்த பிக்குகள், ஆண்கள், பெண்கள் என அங்கிருந்தவர்கள் மீது, ஈவிரக்கமின்றி வன்முறைத் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில், ஏறத்தாழ 120 பேர் பலியானதோடு, ஏறத்தாழ 58 பேர் படுகாயமடைந்ததாக ‘ரூபின் மற்றும் ரூபின்’ தம்முடைய நூலில் குறிப்பிடுகின்றனர். வேறும் சிலர், ஏறத்தாழ 146 பேர் பலியானதாகக் குறிப்பிட்டுள்ளனர்.  

‘வரலாற்றுத் தவறு’ என்ற சொற்றொடருக்கு அர்த்தமுண்டாயின், அது நிச்சயமாக, இந்தச் சம்பவத்தைச் சுட்டி நிற்கும். உணர்ச்சி ரீதியாக, இந்தத் தாக்குதலை ஆதரிப்பவர்கள் உளராயின், அவர்களது நியாயப்படுத்தலானது, ‘கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்’ என்ற, ‘காட்டுமிராண்டி நீதி’யின் அடிப்படையிலானதாகவே இருக்கும்.   

அந்த, உணர்ச்சிவசப்படுதலைத் தாண்டிய, நீண்டகால அரசியல், சமூக விளைவுகளை, அவர்கள் கருத்தில் கொண்டிலர். 

அரச படைகள் அப்பாவித் தமிழ் மக்களைத் தாக்கியதை, ‘அரச பயங்கரவாதம்’ என்று சொல்லிக்கொண்டு, மறுமுனையில், தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள், அப்பாவிச் சிங்களப் பொதுமக்கள் மீது தாக்குதலை மேற்கொள்ளும் போது, அது, “ஆயுதக் குழுக்களானவை பயங்கரவாதிகளே” என்ற ஜே.ஆர் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை, குறித்த ஆயுதக் குழுக்களே வழிமொழிவதாக அமைகிறது.   

இது மட்டுமல்ல, இலங்கையின் பெரும்பான்மை மக்களாகிய சிங்களப் பௌத்தர்கள் மத்தியில், இச்சம்பவம்  ஆறாத காயத்தையும் அழிக்கமுடியாத வடுவையும் ஏற்படுத்தி விடுகிறது. 

இது, எந்த வகையிலும் தமிழ் மக்களுக்கு ஆதாயத்தைத் தரக்கூடியதொன்றல்ல; மாறாக, பெரும் பாதகத்தைத் தரக்கூடியது என்பதை, அன்று இந்தத் தாக்குதலை முன்னெடுத்தவர்களும், அதற்குக் கட்டளை இட்டிருந்தவர்களும், அவர்களுக்கு ஆலோசனை வழங்கியவர்களும் அறிந்திருக்கவில்லை என்பது வருத்தத்துக்குரியது.   

குறிப்பாக, இதன் அரசியல் விளைவுகளைப் பற்றி, அவர்கள் சிந்தித்ததாகத் தெரியவில்லை. இதைப் பற்றி, ‘முறிந்த பனை’ நூலில் கருத்துரைக்கும் அதன் நூலாசிரியர்கள், ‘அநுராதபுரப் படுகொலைகளை அங்கிகரித்த அநேகர், சிங்களவர்களின் உயிர்களோடு நினைத்தபடி விளையாடுதல், தமிழர்களின் உயிர்களுக்கு மோசமான பாதுகாப்பின்மையை ஏற்படுத்துமென உணரவில்லை’ என்று குறிப்பிடுகிறார்கள்.   

ஆனால், இந்தத் தாக்குதலை, மற்றைய தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்கள், ஏற்றுக் கொண்டிருக்கவில்லை என்பதையும் இங்கு பதிவு செய்தாக வேண்டும். தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்களின் ஒன்றிணைந்த அமைப்பான ‘ஈழத் தேசிய விடுதலை முன்னணி’, குறித்த தாக்குதல் தொடர்பில் அதிர்ச்சியையும் கடும் எதிர்ப்பையும் பலியானவர்கள் தொடர்பில் பெரும் வருத்தத்தையும் பதிவு செய்திருந்தது.   

மறுபுறத்தில், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியும் குறித்த தாக்குதல் தொடர்பில், தனது கண்டனத்தையும் வருத்தத்தையும் பதிவுசெய்திருந்தது.   

சில காலம் கழித்து வௌிவந்த ஊடகத் தகவல்கள், குறித்த தாக்குதல் விடுதலைப் புலிகள் அமைப்பால் முன்னெடுக்கப்பட்டதாகவும், இதன் பின்னணியில் இந்திய உளவு நிறுவனமான ‘றோ’ இருந்ததாகவும் தன்னுடைய ஆய்வுக் கட்டுரையொன்றில் அசோக பண்டாரகே கோடிட்டுக் காட்டுகிறார்.   

இது பற்றி, தன்னுடைய கட்டுரையொன்றில் குறிப்பிடும் ராஜன் ஹூல், ‘பிற்காலத்தில் ஊடகங்களில் வந்த தகவல்களின் படி, இந்தத் தாக்குதலை முன்னெடுப்பதற்காக, ‘றோ’ அமைப்பு, முதலில் புளொட், டெலோ இயக்கங்களையே நாடி இருந்ததாகவும், ஆனால், அவர்கள் இதை மறுத்துவிட்டார்கள்’ என்றும் குறிப்பிடுகிறார்.   

ராஜீவ் காந்தி அரசாங்கமானது, இலங்கை உள்ளிட்ட அயல் நாடுகளுடனான வௌியுறவுக் கொள்கை தொடர்பிலான, தன்னுடைய வௌிப்படையான அணுகுமுறையை நட்புறவானதாக மாற்றி இருந்தாலும், இந்திய உளவுத்துறையினூடான மறைமுக அணுகுமுறைகள் தொடர்ந்து கொண்டுதான் இருந்தன. 

இந்தியாவின் நலன்களுக்கு, இந்த இரட்டை அணுகுமுறை அவசியமென்று, அவர்கள் கருதியிருந்திருக்கலாம். ஆனால், இது தமிழர்களின் நிலையை, இன்னும் சிக்கலானதாகவே மாற்றியிருந்தது.   

தமிழ் அரசியல், ஏற்கெனவே இந்தியாவின் கைப்பொம்மையாக மாற்றப்பட்டுவிட்டிருந்த நிலையில், தமிழ் ஆயுதப் போராட்டத்தையும் தன்னுடைய பிடிக்குள் முழுமையாகக் கொண்டுவரும் கைங்கரியத்தை, இந்தியா முன்னெடுத்தது.   

குமுதினிப் படுகொலைகள்   

‘கண்ணுக்குக் கண் என்பது, ஒரு குருடான உலகத்தையே உருவாக்கும்’ என்பது மகாத்மா காந்தியின் பிரபல்யமான கூற்றுகளில் ஒன்று. மேற்குறிப்பிட்டது போல, தாக்குதலுக்கு பதில்த்தாக்குதல் என்பது ஒரு ‘விஷச்சுழல்’.   

இந்த விஷச்சுழலின் அடுத்த கொடூரத்தை, அநுராதபுரத் தாக்குதல் நடந்ததன் மறுநாள், நெடுந்தீவுக்கும் குறிகட்டுவானுக்கும் இடைப்பட்ட கடலில், அப்பாவித் தமிழ் மக்கள் அனுபவித்தனர். 

அநுராதபுரப் படுகொலை இடம்பெற்றதற்கு மறுதினம், 1985 மே 15ஆம் திகதி, வடக்கின் பசுந்தீவு எனப் புகழப்படும் நெடுந்தீவிலிருந்து, யாழ்ப்பாணம் நகர், ஏனைய பகுதிகளுக்குச் செல்லும் பொதுமக்களை ஏற்றிக்கொண்டு, ‘குமுதினி’ என்ற பெயர்கொண்ட படகு, தனது பயணத்தை ஆரம்பித்திருந்தது. 

நடுக்கடலில் பயணப்படகு  சென்றுகொண்டிருக்கும் போது, வேறொரு ‘பைபர்’ படகில் வந்த நபர்கள் சிலர், குமுதினிப் படகை வழிமறித்து, அதற்குள் நுழைந்து, அதிலிருந்த பயணிகளான அப்பாவிப் பொதுமக்களை,குழந்தைகள், முதியவர்கள் என்ற வயது வேறுபாடின்றி, ஈவிரக்கமின்றி வெட்டிக் கொன்றனர். 

இந்தத் தாக்குதலில் ஏறத்தாழ 36 முதல் 48 பேரளவில் கொல்லப்பட்டார்கள் என்று சிலர் குறிப்பிடுகிறார்கள். தாக்குதலை நடத்தியவர்கள் ‘ரீ சேர்ட்’ அணிந்திருந்ததுடன், சிலர் நீளக்காற்சட்டையும் சிலர் கட்டைக்காற்சட்டையும் அணிந்திருந்ததாகக் கண்கண்ட சாட்சிகள் குறிப்பிட்டிருந்தன. 

அத்துடன், அவர்கள் இலங்கை கடற்படையைச் சேர்ந்தவர்கள் என, குறித்த சாட்சிகள் அடையாளப்படுத்தி இருந்ததாகக் குறித்த தாக்குதல் தொடர்பிலான, தன்னுடைய அறிக்கையில், சர்வதேச மன்னிப்புச் சபை கோடிட்டுக் காட்டியிருந்தது.   

இந்தக் குரூரத் தாக்குதல், இலங்கை கடற்படையினரால் நடத்தப்பட்டது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட போது, அதற்குப் பதிலளித்த இலங்கையின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத்முதலி, “குறித்த தாக்குதலுக்கு, யார் பொறுப்பு என்பதற்கு, எந்தவித சாட்சியங்களும் இல்லை” என்று குறிப்பிட்டார். 

இந்த வன்முறைகள் முடிவின்றித் தொடர்ந்தன. மே 16 – 18க்குள், மட்டக்களப்பில் ஏறத்தாழ 63 தமிழ் இளைஞர்கள், அரச படைகளால் கைது செய்யப்பட்டு, கொன்று புதைக்கப்பட்டார்கள். 

மே 31இல், திருகோணமலையின் கிளிவெட்டியில், ஏறத்தாழ 37 தமிழ் இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டு, சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.   

‘போர் மூலமான வெற்றி’ என்ற இலக்கிலேயே, ஜே.ஆர் அரசாங்கமும், தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்களும் செயற்பட்டுக் கொண்டிருந்தன. விஷச்சுழல் சுழன்று கொண்டிருந்தது.   

ராஜீவின் திட்டம்   

இந்தச் சூழலில்தான், ராஜீவ் காந்தி அரசாங்கம், தன்னுடைய பெரும் திட்டத்துக்கான அத்திபாரத்தைத் தயார் செய்துகொண்டிருந்தது. ராஜீவ் காந்தியின் எண்ணம், மீண்டும் இலங்கைப் பிரச்சினையை, பேச்சுவார்த்தை மேசைக்கு  எடுத்து வருவதில் இருந்தது. ஆனால், இம்முறை வெறுமனே, ஜே.ஆர் அரசாங்கத்துக்கும் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்கும் இடையில் மட்டுமன்றி, தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்களையும் பேச்சுவார்த்தை மேசைக்கு அழைத்து வரும் எண்ணத்தை, ராஜீவ் காந்தி கொண்டிருந்தார்.   

இது மிகவும் சிக்கலானதொன்று; ஏனெனில், ஜே.ஆர் அரசாங்கத்தையும் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களையும் இதற்குச் சம்மதிக்கச் செய்வதென்பது சிக்கலானதொரு காரியம்.  

 ஜே.ஆர் அரசாங்கமானது, ராஜீவ் காந்தியுடன் நல்லெண்ணத்தை வளர்க்க விரும்பியிருந்தமை, இந்தியாவைப் பொறுத்தவரையில் சாதகமானதொன்று. ஏனெனில், ராஜீவ் காந்தியோடு நல்லுறவை விரும்பிய ஜே.ஆர், ராஜீவினுடைய பேச்சுவார்த்தைக்கான அழைப்பை, நேரடியாக எதிர்க்கும் வாய்ப்புக் குறைவு. ஆகவே, ஜே.ஆர் அரசாங்கத்தைப் பேச்சுவார்த்தை மேசைக்குக் கொண்டுவருவது தொடர்பில், இந்தியா நேர்மறையான எண்ணத்தைக் கொண்டிருந்தது.   

மறுபுறத்தில், தமிழ் இளைஞர் ஆயுதக் இயக்கங்களைப் பேச்சுவார்த்தை மேசைக்கு அழைத்துவருவது, அவ்வளவு இலகுவான காரியமில்லை என்பதையும் இந்திய அரசாங்கம் உணர்ந்திருந்தது.  

 முக்கிய இயக்கங்கள், ‘தமிழ்த் தேசிய விடுதலை முன்னணி’யாக ஒன்றிணைந்திருப்பது, சாதகமான ஒன்றாக இருந்தாலும், பேச்சுவார்த்தைக்கான அழைப்புக்கு அவை, எவ்வாறு எதிர்வினையாற்றும் என்பது நிச்சயமற்று இருந்தது. 

இதில், இந்திய உளவுத்துறையான ‘றோ’வினது உதவி அவசியமாக இருந்தது. இந்த விடயத்தில், இந்தியாவுக்குச் சிக்கலே தராது, இந்தியாவின் சொல்கேட்கும் செல்லப்பிள்ளையாக, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி மட்டுமே இருந்தது.   

இந்தப் பேச்சுவார்த்தைத் திட்டத்தின் முதற்படியாக, இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகராக ஜே.என்.டிக்ஸிட், 1985 மே மாத இறுதியில் இந்தியா நியமித்திருந்தது. 

1985 மே 26 ஆம் திகதி, இலங்கை வந்த டிக்ஸிட், மறுதினம், ஜனாதிபதி ஜே.ஆரைச் சந்தித்து, தனது உயர்ஸ்தானிகர் நியமனத்தைச் சமர்ப்பித்திருந்தார்.   

இதற்கு மறுநாள், 1985 மே 28ஆம் திகதி, இந்திய வௌியுறவுச் செயலாளர் ரொமேஷ் பண்டாரி, இலங்கையை வந்தடைந்திருந்தார். 

புதிய, இந்திய வௌியுறவுச் செயலாளர் ரொமேஷ் பண்டாரி, புதிய இந்திய உயர்ஸ்தானிகர் ஜே.என். டிக்ஸிட் ஆகியோர் இணைந்து, அடுத்த கட்டக் காய்நகர்த்தல்களை முன்னெடுக்க இருந்தனர்.   

(அடுத்த திங்கட்கிழமை தொடரும்)  

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/இருபெரும்-படுகொலைகள்/91-223226

nunavilan

  • Grand Master
  • கருத்துக்கள நிர்வாகம்
  • Gender:Male
  • Location:USA

Posted October 8, 2018

அநுராதபுரப் படுகொலை மே 14 1985

இந்திய இராணுவத்துடன் புலிகள் முரண்பட்டு மோதல் நடத்திய காலத்தில்
மறைந்த புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் இந்திய அரசின் இலங்கைப் பிரசைகள் மேலான பயங்கரவாத நடவடிக்கைக்கு தாங்கள் எப்படி கைக்கூலிகளானோம் என பின்வருமாறு அம்பலப்படுத்துகின்றார்.

இலங்கை நாட்டின் அநுராதபுரத்தில் ஜே.ஆர். ஜெயவர்த்தனா ஆட்சிக்காலத்தில் 1985 ம் ஆண்டு மே மாதம் 14 ம் திகதி 146 அப்பாவி பொதுமக்களை ஈவிரக்கமின்றி தாங்கள் பெண்கள் குழந்தைகள் வயோதிபர், புத்தபிக்குகள் என யார் எவர் என்று பாராமல் சுட்டுத்தள்ளிய படுகொலையை நிகழ்த்தும்படி தங்களுக்கு ஆலோசனையும் பணமும் ஆயுதமும் பயிற்சியும் உளவுத் தகவலும் தந்து தங்களை வேண்டிக் கொண்டவர்கள் யாருமல்ல இந்திய அரசேயாகும் என்றார்.

இறைமையுள்ள ஒரு நாட்டின் அப்பாவி குடிமக்களை குறிவைத்து கொலைக்களமாக்கி அவர்களின் உயிர் குடித்து இரத்தத்தை ஆறாய் ஓடவைத்த பயங்கரவாதத்தை பணம் ஆயுதம் மற்றும் திட்டம் தயாரித்து அயல்நாட்டிற்கு ஏற்றுமதி செய்த இந்திய ஆளும் வர்க்கமே! இன்று மும்பை பயங்கரவாதத்தை யாரோ ஏற்றுமதி செய்ததாக அலறுவதற்கு உனக்கு என்ன அருகதையுண்டு?!


இந்திய அரசு இலங்கையரசுடன் போடவிருந்த இலங்கை இனப்பிரச்னை சம்பந்தமான ஒப்பந்தத்திற்கு இலங்கையரசு ஒத்துவராத போக்கிலிருந்து அவர்களை அடக்கி நிர்ப்பந்தப்படுத்துவதற்காகவும் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவை உலுப்புவதற்காகவும் எல்லாவற்றிலும் மேலாய் தமது மேலாண்மையை இலங்கை மீது இறுக்கமாய் நிறுவிக் கொள்வதற்காகவும் இந்திய அரசின் நெறியாள்கையில் நடந்தேறிய பயங்கரவாதம் இதுவாகும்.

அது மட்டுமல்ல ஈழப்போராட்டத்திற்கென தோற்றமெடுத்த இயக்கங்கள் மக்கள் மயப்பட்ட போராட்ட நெறிமுறைகளிலிருந்து விலகிச் சென்று பயங்கரவாத நடைமுறைக்குள் அவர்களை வீழ்த்துவதற்காய் ஆயுதமும் பயிற்சியும் அவசர அவசரமாய் அள்ளிக் கொடுத்தது யார்?

பஞ்சாப் பொற்கோவிலுக்குள் கைப்பற்றிய ஆயுதங்கள் கைக்கூலி இயக்கங்களின் கைகளுக்கு எட்டியது எப்படி?

பங்களாதேசம் முதற் கொண்டு ஈழத் தமிழ்மக்கள் ஈறாய் ஏற்றுமதி செய்த பயங்கரவாதத்துக்கு மும்பாய் பயங்கரவாதம் எம்மட்டு.

மும்பாய் பயங்கரவாதம் இந்திய ஆளும் வர்க்கத்தின் இந்துவெறி சார்பில் உண்டான உள்ளுர் உற்பத்தி. இந்திய ஆளும் வர்க்கம் தனது அயல்நாடுகளுக்கு ஏற்றமதி செய்த பயங்கரவாதம் போலன்றி மும்பாய் பயங்கரவாதம் எந்த அயல்நாட்டினதும் ஏற்றுமதியல்ல.

அநுராதபுரத்தில் யார் எவர் என்ற வித்தியாசம் இன்றி வழியில் தெருவில் அகப்பட்டோர்களை படுகொலை செய்யும்படி ஏவிவிட்ட இப்பயங்கரவாதத்தை புலிகள் நடத்த ஒப்புக் கொண்டார்கள்.

1985 ஆம் ஆண்டு மே மாதம் 14 ம் திகதி பயணிகள் பஸ் ஒன்றைக் கடத்தி அதில் அநுராதபுர நகரின் பிரதான பேருந்து நிலையத்தை வந்தடைந்த புலிகள் அங்கு பஸ்சுக்கு காத்திருந்த பிரயாணிகளை பலரை கண்மண் தெரியாமல் சுட்டு வீழ்த்தினார்கள். அதன்பின்னால் ஸ்ரீமகா போதி புத்த விகாரையினுள் புகுந்து பிக்குகளையும் காணிக்கை செலுத்த வந்திருந்த பொதுமக்களையும் சுட்டு வீழ்த்தினார்கள். திரும்பிச் செல்லும் வழியில் வில்பத்து வன பாதுகாப்பு வலயப் பகுதியில் மேலும் 18 பொதுமக்களை சுட்டு வீழ்த்தினார்கள். இந்த அரசியல் சதுரங்கத்தில் இந்திய ஆளும் வர்க்கத்தால் ஏவிவிடப்பட்ட பயங்கரவாதத்தில் மொத்தமாக படுகொலையானோர் 146 அப்பாவிச் சிங்கள பொதுமக்கள். படுகாயமடைந்தோர் பலபேர்.

மும்பாய் தாக்குதல் கொடுரம் எனில் இந்திய ஆளும் வர்க்கம் தயாரித்து நெறிப்படுத்திய இந்த அயல்நாட்டுக்கான பயங்கரவாத ஏற்றமதி எந்த வகை?

மும்பாய் தாக்குதலுக்கும் மேலாக தெருவெங்கும் குதறப்பட்டு பிணமாக்கப்பட்ட இவ் அப்பாவிப் பொதுமக்களின் மேலான இப்பயங்கரவாதத்தை கீழே வீடியோ ஒளிப்பதிவில் காண்பவர்கள் இந்திய ஆளும் வர்க்கத்தின் பயங்கரவாதத்தை இரத்த சாட்சியாய் பதிந்து கொள்ளுங்கள்.

சிறி 02.12.08

http://www.padippakam.com/index.php?option=com_content&view=article&id=194:—14-1985&catid=135:etnicskillings

பெருமாள்

  • Grand Master
  • கருத்துக்கள உறவுகள்
  • Gender:Male
  • கருத்துக்கள உறவுகள்

Posted October 8, 2018

நன்றி இணைப்புக்கு .

கிருபன்

  • Grand Master
  • கருத்துக்கள உறவுகள்
  • Gender:Male
  • Location:முடிவிலி வளையம்
  • Interests:போஜனம், சயனம்
  • கருத்துக்கள உறவுகள்

Posted October 15, 2018

புட்டும் தேங்காய்ப் பூவும்

என்.கே. அஷோக்பரன் / 2018 ஒக்டோபர் 15 திங்கட்கிழமை, மு.ப. 01:29Comments – 0

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி – 165)

தமிழ் – முஸ்லிம் உறவும் கிழக்கும்   

இலங்கை அரசியல் வரலாற்றில், 1985 ஏப்ரல் மாதத்தை மீட்டுப் பார்க்கும் போது, பொதுவாகப் பலரும் மீட்டுப் பார்க்காத, ஆனால், இலங்கை இனப்பிரச்சினை வரலாற்றில், முக்கியத்துவம் மிக்கதொரு சம்பவம், 1985 ஏப்ரலில், கிழக்கில் இடம்பெற்றுள்ளதைக் காணலாம்.  

அது, தமிழ் – முஸ்லிம் வன்முறைகளாகும். பிரித்தானியரின் ‘பிரித்தாளும் தந்திரம்’தான், இலங்கையின் தேசிய இனங்களை, இனரீதியாகப் பிளவுபடுத்தக் காரணமானது என்ற பொதுக்கருத்தைப் பலரும் சொன்னாலும், அதே இனரீதியாகப் பிரித்தாளும் தந்திரம், சுதந்திரத்தைத் தாண்டியும் உயிர்வாழ்ந்தது; உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது.  

இதற்கு நல்லதோர் எடுத்துக்காட்டாக, தமிழ் – முஸ்லிம் மக்களிடையே தூண்டிவிடப்பட்ட வன்முறைகளை, நோக்க முடியும்.   

இலங்கையில் தமிழ் – முஸ்லிம் உறவைப் பற்றிப் பேசும் போது, ‘புட்டும் தேங்காய்ப் பூவும் போல’ என்ற உவமையைப் பலர் சொல்வர். குறிப்பாக, இலங்கைத் தமிழரசுக் கட்சியோடும், சா.ஜே.வே செல்வநாயகத்தோடும் இணைந்திருந்த, தமிழரசுக் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட்டிருந்த மசூர் மௌலானா, இந்த உவமையைப் பலமுறை பயன்படுத்தி இருக்கிறார்.   

இரு இனங்களும் ஒன்றுபட்டிருக்க வேண்டும் என்ற உயர் எண்ணத்தைத் தாண்டி, இந்த உவமை வேறு எதைச் சொல்கிறது? நாம் ஒன்றாக இருக்கமுடியும்; ஆயினும், அடிப்படையில் நாம் வேறானவர்கள் என்பதையா? அல்லது, நாம் தனித்தனியாக இருப்பதிலும், இணைந்திருப்பதுதான் சிறப்பானது என்பதையா?   

இலங்கையில் காணப்படும் தமிழ் – முஸ்லிம் இன அடையாளப்படுத்தல்கள், தென்னிந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு அந்நியமானதும், புதுமையானதுமான அடையாளமாக இருக்கும்.  அங்கு, தமிழ் என்பது இனமாகவும் இந்து, கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகியன மதமாகவும் நோக்கப்படுவதால், தமிழ் பேசும் முஸ்லிம்கள் தமிழர்களாகவே தம்மைக் கருதிக்கொள்கிறார்கள். அவர்களது மதம்தான் இஸ்லாம். ஆனால், இலங்கையின் நிலை, இதிலிருந்து வேறுபட்டது. இதன் தோற்றுவாய், உருவாக்கம், விருத்தி என்பன, தனித்த மானுடவியல் ஆராய்ச்சிக்கு உரியது.   

ஆனால், அரசியல் ரீதியில் நோக்கினால், எவ்வாறு வடக்கு-கிழக்கு தமிழ் மக்களும், இந்திய வம்சாவளித் தமிழ் மக்களும் ஒரு தளத்தில் இணைந்து, பின்னர், தமது அரசியல் அபிலாஷைகளின் வேறுபாடுகள் காரணமாகத் தனிவழி பிரிந்தார்களோ, அதேபோலவே தமிழ் – முஸ்லிம் உறவும் அமைந்தது எனலாம்.   

இலங்கைத் தமிழரசுக் கட்சியில் அதன் உருவாக்கம் முதல், முஸ்லிம்கள் அங்கம் வகித்திருந்திருக்கிறார்கள், அதன் மேடைகளில் அரசியல் முழக்கம் புரிந்திருக்கிறார்கள். தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களில், முஸ்லிம் இளைஞர்கள் அங்கம் வகித்திருந்திருக்கிறார்கள்.   

ஆகவே, தமிழ் பேசும் முஸ்லிம்கள், குறிப்பாக, வடக்கு-கிழக்கு வாழ் முஸ்லிம்கள், தமிழ் அரசியல் கட்சிகளுடன் பயணித்திருந்தார்கள் என்பது மறுக்க முடியாத வரலாறு. இதேவேளை, தமிழ், முஸ்லிம் கிராமங்கள் அருகருகே இருந்த கிழக்கு மாகாணத்தில், தமிழ்-முஸ்லிம் முரண்பாடுகள் அவ்வப்போது இடம்பெற்றுக் கொண்டுதான் இருந்தன என்பதும் மறுக்க முடியாத வரலாறு.  

 1981இல் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தோற்றத்தோடு, முஸ்லிம் மக்களுக்கான தனித்துவமான அரசியல் வாகனமொன்று உருவாகிறது. முஸ்லிம்கள், குறிப்பாக வடக்கு-கிழக்கு வாழ் தமிழ் பேசும் முஸ்லிம்கள், தமக்கான தனிவழி அரசியலை முன்னெடுக்கத் தொடங்கிய காலம் இது எனலாம்.   
1985 ஏப்ரல் வன்முறைகள்

இந்த நிலையில், 1985 ஏப்ரல் 12ஆம் திகதி, கிழக்கு மாகாணத்தின் காரைதீவில், தமிழ் மக்கள் மீது, முஸ்லிம் இளைஞர்களால் கொடூரத் தாக்குதல் ஒன்று முன்னெடுக்கப்பட்டதென, இது தொடர்பான தன்னுடைய கட்டுரையொன்றில், கே.என்.தர்மலிங்கம் விவரமாக விவரிக்கிறார்.  

காரைதீவு தமிழ் அகதிகள் சங்கத்தைச் சேர்ந்த ஈ.விநாயகமூர்த்தியை மேற்கோள் காட்டும் கே.என்.தர்மலிங்கம், ஏறத்தாழ 800 முஸ்லிம் இளைஞர்கள், 1985 ஏப்ரல் 12 வௌ்ளிக்கிழமை, தொழுகையின் பின் காரைதீவுக்குள் ஆயுதங்களுடன் நுழைந்து, வீடுகளையும் கடைகளையும் தாக்கியதுடன், அவற்றை எரியூட்டியதாகவும் தொடர்ந்து அங்கிருந்த பத்தினி கோவில் (கண்ணகி அம்மன் கோவில்) கூட விட்டுவைக்கப்படவில்லை எனவும், அந்தக் கோவிலின் ஒரு பகுதி எரியூட்டப்பட்டதுடன், சுற்றுச்சுவர் தரை மட்டமாக்கப்பட்டதெனவும் பதிவு செய்கிறார்.  

இந்தத் தாக்குதல் நடத்தப்படுவதற்கு சில தினங்களுக்கு முன்பதாகத்தான், தற்பாதுகாப்பு, தமது பயிர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக, கிழக்கில் பொதுமக்கள், முறையான அனுமதியுடன் வைத்திருந்த துப்பாக்கிகள், அரசாங்கத்தால் மீளப்பெற்றுக்கொள்ளப்பட்டன.

இதைக் கோடிட்டுக் காட்டும் தர்மலிங்கம், தமிழ் மக்களின் தற்பாதுகாப்பை இல்லாது செய்து, அவர்களை இந்த வன்முறைக்குப் பலியாக்கியதில், அரசாங்கத்தின் கை இருக்கிறது என்பதைச் சுட்டிக் காட்டுகிறார்.   

தொடர்ந்த வன்முறைகளில், சில உயிர்கள் பலியானதுடன், ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் தமது இருப்பிடங்களையும் தொழில் நிலையங்களையும் இழந்து, நிர்க்கதியானதாகவும் சுட்டிக் காட்டும் தர்மலிங்கம், இந்தத் தாக்குதலானது மறுதினம், 1985 ஏப்ரல் 13ஆம் திகதியும் தொடர்ந்ததாகவும், அதில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான தோட்டங்களும், பயிர்களும் எரியூட்டப்பட்டதுடன், வீடுகள், கடைகள் என்பனவும் அழிக்கப்பட்டதாகவும் பதிவு செய்கிறார். மேலும் இந்தத் தாக்குதலுக்கு, ஜிஹாத் இயக்கம்தான் காரணமென்றும் அவர் குறிப்பிடுகிறார்.   

இந்த வன்முறைத் தாக்குதல்கள் தொடர்ந்தும் மூன்றாவது நாளாக, 1985 ஏப்ரல் 14ஆம் திகதியும் இடம்பெற்றதாகப் பதிவு செய்யும் தர்மலிங்கம், இந்த மூன்றுநாள் கொடூர வன்முறைத் தாக்குதல்களில் 17 பேர் கொல்லப்பட்டதுடன், பலரும் காயமடைந்ததாகவும், ஏறத்தாழ ஆறு இந்துக் கோவில்கள் தாக்குதலில் பாதிப்படைந்ததாகவும், 802 வீடுகள், 84 கடைகள் தாக்கப்பட்டு, கொள்ளையடிக்கப்பட்டு, சேதமாக்கப்பட்டதாகவும், பலநூறு கால்நடைகள் கொல்லப்பட்டதாகவும், அரச வைத்தியசாலையொன்றும் இரண்டு தனியார் வைத்திய நிலையங்களும் பாதிப்படைந்தன எனவும், 17 கார்கள், இரண்டு டிரக்டர்கள், 22 மாட்டு வண்டிகள், 987 சைக்கிள்கள் எரியூட்டப்பட்டன எனவும் அவர் தனது கட்டுரையில் பதிவு செய்கிறார்.   

சித்திரை வருடப்பிறப்பு நாள்களில் நடைபெற்ற இந்த வன்முறைத் தாக்குதல்கள், தமிழர் மனங்களில் ஆறாத வடுக்களாகப்  பதிந்ததுடன், ஏற்கெனவே முறிந்திருந்த தமிழ் – முஸ்லிம் உறவை, மேலும் தகர்ப்பதாகவே அமைந்தது என்பது, சோகத்திலும் சோகம்.   

தர்மலிங்கத்தின் இந்தப் பதிவோடு, இதை நிறுத்திவிடுவது மறுதரப்பின் நியாயத்தைக் கேட்கும் மாண்பைச் சிதைத்துவிடும். மறுபக்கக் கருத்துகளையும் இங்கு பதிவு செய்வது அவசியமானதாகும்.   

வரலாறுகள் ஒருதரப்பால் மட்டும் எழுதப்பட்டால், அது வரலாற்றுக்குச் செய்யும் துரோகமாகும். இந்தப் பிரச்சினை பற்றி விவரமாக எழுதாவிடினும், ‘இலங்கைப் பிரச்சினையில் முஸ்லிம் காரணி (ஆங்கிலம்)’ என்ற தனது கட்டுரையில், 1985 ஏப்ரல் தமிழ்-முஸ்லிம் வன்முறைத் தாக்குதல்கள் பற்றி குறிப்பிடும் மன்சூர் முஹம்மட் பாஸில், ‘தமிழ் ஆயுதக் குழுக்கள், முஸ்லிம் மக்களிடமிருந்து கப்பம் பெறுதல், ஆயுதமுனையில் அவர்களிடம்ற கொள்ளையடித்தல் என்பவற்றில் ஈடுபட்டமையும் அத்தகைய நடவடிக்கைகள் கணிசமாக அதிகரித்தமையுமே, முஸ்லிம்களின் எதிர்ப்புக்குக் காரணம்’ என்று குறிப்பிடுகின்றார்.   

அவர், மேலும் அந்தக் கட்டுரையில் குறிப்பிடும்போது, ‘இந்த நிலைமை அதிகரித்த போது, முஸ்லிம்கள் அதை இஸ்லாமியச் சட்டங்கள் வழங்கிய வழிமுறைகளின் படியே தணிக்க முயன்றார்கள். 

ஆனால், அக்கரைப்பற்று முஸ்லிம் வர்த்தகரொருவரிடம் கப்பம் பெறும் நோக்கில், தமிழ் ஆயுதக் குழுக்கள் அவரது மகளைப் பணயமாகப் பிடித்து வைத்திருந்தமை, இந்த நிலையை மாற்றியது. ஆயினும் கூட, 1985 ஏப்ரல் எட்டு முதல் 12ஆம் திகதி வரை, அக்கரைப்பற்று முஸ்லிம்கள் குறித்த நடவடிக்கைக்கு எதிராக, அமைதிவழியில் ஹர்த்தால் ஒன்றின் மூலமே போராடியிருந்தார்கள். அவர்கள் இலங்கைக் கொடியை ஏற்றி, ஒற்றை இறைமைக்கும், நாடு பிரிபடாதிருக்கவுமென இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டுக்கு ஆதரவு தெரிவித்திருந்தார்கள்’ என, தனது கட்டுரையில், மன்சூர் முஹம்மட் பாஸில் பதிவு செய்கிறார்.   

ஏப்ரல் 14ஆம் திகதி, அக்கரைப்பற்றின் வடக்கே, ஏறத்தாழ 10 கிலோ மீற்றர் தொலைவிலிருந்த கிராமமொன்றுக்குள் நுழைந்த தமிழ் ஆயுதக் குழுவினர், அங்கிருந்த பள்ளிவாசலுக்கு அருகில் திறந்த துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும், ஆயினும் அவர்களது வாகனம் தடம் புரண்டதிலும், அவர்கள் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதிலும் அவர்கள் அனைவரும் கொல்லப்பட்டதாகவும், பாஸில் குறிப்பிடுகிறார்.   

1985 ஏப்ரல் தமிழ்-முஸ்லிம் வன்முறையை அவர், ‘துரதிர்ஷ்டவசமான சம்பவம்’ என்று விளித்தாலும், ஏப்ரல் 12 முதல் 15 வரை, தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது. இதே போன்று, தர்மலிங்கமும், தமிழ் ஆயுதக் குழுக்கள் முஸ்லிம் மக்களிடம் கப்பம் பெற்றமை, ஆயுதமுனையில் கொள்ளையடித்தமை பற்றி குறிப்பிடாமையும் கவனிக்கப்பட வேண்டியதே.   

இந்த வன்முறைகள் பற்றி, ‘நெருக்கடி தொடர்பான சர்வதேசக் குழு’ வினுடைய ‘இலங்கை முஸ்லிம்கள்: தாக்குதலிடையில் சிக்கிக்கொண்டவர்கள்’ (ஆங்கிலம்) என்ற அறிக்கையில் விவரிக்கையில், தமிழ்-முஸ்லிம்களுக்கு இடையிலான பல்வேறு வன்முறைகளில், பாதுகாப்புப் படைகளின் ஈடுபாடு காணப்பட்டதாகக் கருதப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், 1985 ஏப்ரல் தாக்குதலானது, முஸ்லிம் இளைஞர்களால் ஆயுதப்படைகளின் உதவியுடன் நடத்தப்பட்டதாகக் கருதப்படுவதாகவும், அதன் பின்னர், தமிழ் ஆயுதக் குழுக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையிலான வன்முறைகள் பொது நிகழ்வாக மாறிவிட்டிருந்ததாகவும், அரசாங்கம், சில முஸ்லிம்களுக்கு அவர்களது பாதுகாப்புக்காக ஆயுதம் வழங்கியிருந்ததாகவும், அவர்கள் அண்மித்த தமிழ்க் கிராமங்களில் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டமையானது, தமிழ் மக்களிடமிருந்து எதிர்வினையை ஏற்படுத்தியதாகவும் குறிப்பிடுகிறது.   

1985 ஏப்ரல், தமிழ்-முஸ்லிம் வன்முறைகள் பற்றி சிந்திக்கத்தக்க இன்னொரு விடயமுண்டு. ஏப்ரல் 12 முதல் 15 வரை, வன்முறைகள் தொடர்ந்தபோது, அதைத் தடுத்து நிறுத்துவது தொடர்பில், அரச இயந்திரம் மெத்தனத்தோடு செயற்பட்டதாகத் தர்மலிங்கம் பதிவு செய்கிறார். இதுவே, இந்த வன்முறையின் பின்னணியில் அரசாங்கத்தின் கை இருக்கிறது என்ற ஊகத்துக்கு வலுச்சேர்ப்பதாக உள்ளது என்று சிலர் குறிப்பிடுகிறார்கள். இதுபற்றித் தன்னுடைய நூலொன்றில் குறிப்பிடும் ரஜீவ விஜேசிங்ஹ, “ஊடகங்கள் கூட, இந்த வன்முறைகள் தொடர்பில் மிகக் குறைவான அக்கறையையே காட்டியிருந்தன. இலங்கையின் பெரும்பான்மை, குறிப்பாக சிங்களவர்கள் இதனால் பாதிக்கப்படாதது, இதற்குக் காரணமாக இருக்கலாம்” என்று அவர் தெரிவிக்கிறார்.  

 ரஜீவ விஜேசிங்ஹவும், “இந்த வன்முறைகளின் பின்னணியில் விசேட அதிரடிப் படையினரின் கை இருக்கிறது” என்ற கருத்தை முன்வைக்கிறார். தமிழ் – முஸ்லிம் மக்களிடையே விசமத்தனமான வன்முறைத் தீயைப் பற்ற வைத்தவர்கள், அதற்கு எண்ணெய் ஊற்றியவர்கள் வௌியிலிருந்து அங்கு கொண்டுவரப்பட்டவர்களே என்றும் அவர் குறிப்பிடுகிறார்.   

1983 ‘கறுப்பு ஜூலை’ தொடர்பிலேயே சுயாதீன விசாரணை நடத்தப்படாத நிலையில், இந்தச் சம்பவத்தினதும் உண்மை, பொய்கள் வௌியே தெரியாது; அவ்வாறே மறைக்கவும் காலவோட்டத்தில் மறக்கவும் பட்டுவிடும்.   

ஆனால், நாம் இந்த வரலாறு பற்றி யோசிக்கும் போது, கேட்டுக் கொள்ள வேண்டிய முக்கிய கேள்வி, வடக்கு-கிழக்கில் ‘புட்டும் தேங்காய்ப்பூவும்’ ஆக வாழும் தமிழ் – முஸ்லிம் மக்களிடையே, பிரிவினையையும் முரண்பாட்டையும் வன்முறையையும் உருவாக்கியதால் பயனடைந்தது, இன்றும் பயனடைந்து கொண்டிருப்பது யார் என்பதுதான்.

இந்த வன்முறைகளின் பெருந்துன்பியல் விளைவானது, இது தணியாது; காலவோட்டத்தில் ஆற்றொணாக் காயங்களை, இரு இனங்களிலும் ஏற்படுத்தியதுதான். அவை நாம் மறக்க நினைத்தாலும் மறக்கமுடியாதவை; வரலாற்றின் கறுப்புப் பக்கங்கள்.  

(அடுத்த திங்கட்கிழமை தொடரும்)  

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/புட்டும்-தேங்காய்ப்-பூவும்/91-223610

கிருபன்

  • Grand Master
  • கருத்துக்கள உறவுகள்
  • Gender:Male
  • Location:முடிவிலி வளையம்
  • Interests:போஜனம், சயனம்
  • கருத்துக்கள உறவுகள்

Posted October 22, 2018

இந்தியப் பிரயத்தனம்

என்.கே. அஷோக்பரன் / 2018 ஒக்டோபர் 22 திங்கட்கிழமை, மு.ப. 12:44

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி – 166)

தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்களும் இலங்கை அரசாங்கமும் மாறிமாறி வன்முறைத் தாக்குதல்களை நடத்திக்கொண்டிருந்த, அப்பாவிப் பொதுமக்களின் உயிர்களையும் சேர்த்துப் பலிகொண்டிருந்த, 1985 மே – ஜூன் காலப்பகுதியில்தான், இலங்கை தொடர்பிலான தன்னுடைய காய்நகர்த்தல்களை, இந்தியா முடுக்கிவிட்டிருந்தது.   

இந்தியாவின் காய்நகர்த்தல் பற்றி, அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ.ஏயின் அறிக்கையொன்றில், பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 

இலங்கை தொடர்பிலான இந்தியக் கொள்கையை, ராஜீவ் காந்தி மென்மையாக்கி உள்ளார். இந்தியாவின் இந்த மாற்றத்துக்கு, எதிர்வினையாற்றும் வகையில், இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன, மீண்டும் தமிழ்த்தரப்போடு பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார் என்று, இந்தியா நம்புகிறது’ என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.   

மேலும், அதில், யுத்தத்தைத் தவிர்க்கவே இந்தியா முயற்சிப்பதாகவும் இரத்த ஆறு பாய்ந்தால் அது இந்தியாவுக்கு அதிகளவிலான அகதிகளைக் கொண்டு வரும் என்பதோடு தென்னிந்தியாவில் பெரும் அரசியல் எழுச்சியையும் ஏற்படுத்தும் என்பது இந்தியா யுத்தத்தை விரும்பாமைக்கு முக்கிய காரணம் என்றும் குறிப்பிடுகிறது.   

மேலும், அளவில் சிறிய தனிநாடொன்று உருவானால், அது அரசியல், பொருளாதார ரீதியில் திராணியற்றதாகவே இருக்கும் என்பதுடன், தொடர்ந்தும் இந்தியாவின் ஆதரவை எதிர்பார்த்திருக்கும் என்பதும், மேலும் இனரீதியில் தனிநாட்டுப் பிரிவினை உருவாவதானது, இந்தியாவுக்குள் அதிகரித்த தன்னாட்சி கோரி நிற்கும் இனக்குழுக்களுக்கு, தவறான சமிக்ஞையை அளிக்குமென்று, புதுடெல்லி அஞ்சுவதாகவும் அந்த அமெரிக்க உளவுத்துறை அறிக்கை சுட்டிக் காட்டப்பட்டிருந்தது.  

மேலும், ராஜீவ் காந்தியின் இராஜதந்திர அணுகுமுறை பற்றி, அலசும் அந்த அறிக்கை, இலங்கை தொடர்பில் ரொமேஷ் பண்டாரி, புதியதோர் அணுகுமுறையைக் கையாள்வதாகவும், முதலில் வன்முறை நிறுத்தப்பட வேண்டும், அதன் பின்பே பேச்சுவார்த்தை என்ற கருத்தை பண்டாரி ஏற்பதாகவும், இந்தக் கருத்தானது, மிகநீண்ட காலமாக ஜே.ஆர் அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்டு வந்தபோதும், இந்திராகாந்தி அரசாங்கம் இதை எதிர்த்து வந்ததாகவும் அந்த அறிக்கை கோடிட்டுக் காட்டுகிறது.  

தமிழ்க் கிளர்ச்சியாளர்களின் நடவடிக்கைகளை இந்தியா கட்டுப்படுத்தும் என்ற உறுதிமொழியை, ஜே.ஆருக்குத் தெரிவிக்க, பண்டாரிக்கு ராஜீவ் காந்தி அனுமதியளித்திருந்ததாகவும் அந்த அமெரிக்க உளவுத்துறை அறிக்கை குறிப்பிடுகிறது.   

ஜே.ஆர் அரசாங்கத்தை பேச்சுவார்த்தை மேசைக்கு அழைத்து வருதல்   

ஜே.ஆர் அரசாங்கத்தையும் தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்கள் உட்படத் தமிழ்த் தரப்பையும் பேச்சுவார்த்தை மேசைக்கு அழைத்து வருவதுதான் ரொமேஷ் பண்டாரியின் திட்டம். தமிழ்த் தரப்பில், தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்களும் இடம்பெற வேண்டும் என்ற கருத்தை, ராஜீவ் காந்தியிடம் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் தெரிவித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.   

இலங்கை அரசாங்கத்துடன், எதிர்காலப் பேச்சுவார்த்தைகள் பற்றி, அமிர்தலிங்கம் மூன்று நிபந்தனைகளை, ராஜீவ் காந்தியிடம் முன்வைத்திருந்தார். முதலாவதாக, பேச்சுவார்த்தைகளில் சகல தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்களும் பங்கேற்க வேண்டும்.   

இரண்டாவதாக, பேச்சுவார்த்தை இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலானதாக இருக்க வேண்டும்.   
மூன்றாவதாக, எந்தத் தீர்வு எட்டப்பட்டாலும், அதற்கு இந்தியா காப்பீடாக இருக்க வேண்டும். இது, ராஜீவ் காந்திக்கும் இந்தியாவுக்கும் ஏற்புடையதாகவே இருந்தது.   

1985 மே 28ஆம் திகதி, இலங்கை வந்த இந்திய வௌியுறவுச் செயலாளர் ரொமேஷ் பண்டாரி, முதலில் குறித்த பேச்சுவார்த்தைக்கு, ஜே.ஆரைச் சம்மதிக்க வைக்கும் முயற்சிகளை முன்னெடுத்தார்.   

இதுபற்றி, தன்னுடைய நூலொன்றில் விவரிக்கும் அன்றைய இலங்கைக்கான இந்தியத் தூதுவர் ஜே.என்.திட்ஷிட், ‘ஜெயவர்த்தனவைப் பேச்சு வார்த்தை மேசைக்கு அழைத்து வருவதற்காக, இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி, பஞ்சாப் போராளிகள், அஸாம் கிளர்ச்சியாளர்களோடு பேச்சுவார்த்தை நடத்திய முன்னுதாரணங்களை ரொமேஷ் பண்டாரி முன்வைத்ததுடன், ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வொன்றை அடையப்பெறுவதற்காக, அந்நியப்படுத்தப்பட்ட குடிமகன்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவது என்பது சட்டம், சட்டரீதியான ஏற்புடைமைகளின் தொழில்நுட்பங்களுக்கு அப்பாற்பட்டதென்று எடுத்துரைத்ததாக கோடிட்டுக் காட்டுகிறார்.   

இலங்கை அரசாங்கம், ஆயுதமேந்திய போராளிகளுடன், அவர்கள் ஆயுதங்களைக் கீழே வைக்கும் வரை, பேசுவதில்லை என்பதில் உறுதியாக இருந்தது.   

ஏனெனில், அவர்களுடன் அவ்வாறு பேச்சுவார்த்தை நடத்துவதானது, அவர்களை அங்கிகரிப்பதாக அமையும் என்று இலங்கை அரசாங்கம் கருதியது.   

இந்த மனநிலையை மாற்ற வேண்டியது, ரொமேஷ் பண்டாரியின் முதல் முக்கிய வேலையாக இருந்தது.   
இதன் அடுத்த கட்டமாக, ராஜீவ் காந்தியை சந்திக்க, ஜே.ஆரைப் புதுடெல்லி வருமாறு, ராஜீவ் சார்பில், பண்டாரி அழைப்பை விடுத்திருந்தார்.   

அந்தவகையில், 1985 ஜூன் முதல்வாரத்தில், புதுடெல்லிக்கான விஜயத்தை ஜே.ஆர் மேற்கொண்டிருந்தார்.   
ஜே.ஆர் – ராஜீவ் சந்திப்பு   

பேச்சுவார்த்தை மேசைக்கான இந்தியாவின் அழைப்பை ஜே.ஆர், தனக்கு சாதகமான வாய்ப்பாக மாற்ற முனைந்தார்.   

தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களுடன், தான் பேச்சுவார்த்தை மேசைக்கு வர வேண்டுமானால், அதற்கு சில நிபந்தனைகளை இந்தியா ஏற்க வேண்டுமென அவர் ராஜீவிடம் தெரிவித்தார்.   

முதலாவது நிபந்தனையாக, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களை ஆதரிப்பதை, இந்தியா நிறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். 

இரண்டாவதாக, இலங்கையின் ஆள்புலத்துக்குள் சுதந்திரமானதும் இறைமையுள்ளதுமான தமிழரசு ஒன்றை ஸ்தாபிப்பதற்கான கோரிக்கையை ஒருபோதும் இந்தியா அங்கிகரிக்கக்கூடாது.  

மூன்றாவது நிபந்தனை, பாக்கு நீரிணைப் பகுதியில், இந்தியா, இலங்கை இணைந்து ரோந்துப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்றவாறான கோரிக்கையை ஜே.ஆர் முன்வைத்தார்.   

ஜே.ஆர், இந்தியா சென்றிருந்த நாள்களில்தான், பங்களாதேஷின் சிட்டகொங் பகுதி, கடுமையான இயற்கை அனர்த்தத்துக்கு ஆளாகியிருந்தது. இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பங்களாதேஷுக்கு விரைந்து, அன்றைய பங்களாதேஷ் ஜனாதிபதி எர்ஷாடை சந்தித்து, இந்தியாவின் ஆதரவைத் தெரிவிக்க விரும்பிய ராஜீவ் காந்தி, அந்தச் சில மணிநேர விஜயத்தில், தன்னோடு இணைந்து கொள்ளுமாறு, ஜே.ஆருக்கும் அழைப்பை விடுத்திருந்தார்.   

இது பற்றித் தன்னுடைய நூலில் விவரிக்கும் ஜே.என்.திட்ஷிட்,‘விசேட விமானத்தில், தன்னுடன் பங்களாதேஷ் செல்வதற்கு, ஜனாதிபதி ஜே.ஆருக்கு, ராஜீவ் காந்தி எதுவித முன்னறிவிப்புமின்றித் தன்னிச்சையாக அழைப்புவிடுத்ததாகவும், இரண்டு அயல்நாடுகளின் தலைவர்கள் தமது இரங்கலையும் ஆதரவையும் நேரில் சென்று தெரிவிப்பதானது, தெற்காசிய நாடுகளிடையேயான ஒற்றுமையையும் ஒத்துழைப்பையும் எடுத்துக்காட்டும் குறிப்பிடத்தக்கதோர் அரசியல் சைகையாகும் என்று ராஜீவ் குறிப்பிட்டதுடன், தெற்காசிய நாடுகளிடையே உருவாகவிருந்த சார்க் அமைப்பின் ஆரம்ப மாநாடு, 1985 டிசெம்பரில் பங்களாதேஷின் டாக்கா நகரில் நடைபெறவிருந்த நிலையில், இந்த விஜயமானது ஆரம்பிக்கப்படவிருந்த சார்க் அமைப்பு தொடர்பில் இந்தியாவினதும், இலங்கையினதும் அர்ப்பணிப்பைப் பறைசாற்றிநிற்கும் என்றும் எடுத்துரைத்ததாக ஜே.என்.திட்ஷிட் பதிவு செய்கிறார். இதற்குள் ராஜீவின் முக்கிய பிராந்திய அரசியல் காய்நகர்த்தல் இருக்கிறது.   

இந்தியாவின் இலங்கைக் கொள்கை பற்றி விவரித்த அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ.ஏயின் 1985 மே 17 திகதியிடப்பட்ட அறிக்கையொன்று, இந்தியாவின் முக்கிய நோக்கமாக, இந்தியாவின் பிராந்திய மேலாதிக்கத்தை தக்கவைத்தலும், அதை நீடித்தலுமே என்று கோடிட்டுக் காட்டுகிறது.   

சார்க் அமைப்பு என்பதும் இந்தியாவின் அந்தத் திட்டத்தின் ஒருபடிதான். இலங்கை முழுமையாக விருப்பத்துடன் சார்க் அமைப்பில் இணைந்துகொண்டது என்றும் கூறிவிட முடியாது.   

இலங்கையானது தென்கிழக்காசிய நாடுகளின் ஒன்றியமான ‘ஆசியான்’ அமைப்பில் இணைவதுதான், இலங்கைக்கு நன்மை தரக்கூடியது என்ற குரல், இன்றுவரை ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது.  

கொள்கை ரீதியான முரண்பாடுகள் இருப்பினும், ஜே.ஆர், ‘ஆசியான்’ அமைப்பு தொடர்பில் எப்போதும் நேர்மறையான கருத்துகளையே பதிவுசெய்திருக்கிறார்.   

ஆசியானில் இலங்கை இணைய வேண்டும் என்ற கருத்து ரணசிங்க பிரேமதாஸவாலும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.   

ஆசியானில் இலங்கை இணைந்தால், இந்தியாவின் பெரியண்ணன் ஆதிக்கத்திலிருந்து நழுவிவிடக்கூடிய பெரும் வாய்ப்பு இலங்கைக்கு உண்டு என்பதை இந்தியா அறியும். அது நீண்டகாலத்தில் இந்திய நலன்களுக்கு முரணாக அமையும். ஆகவேதான், சார்க் அமைப்பை ஸ்தாபிப்பதில் இந்தியா குறியாக இருந்தது.

சார்க் அமைப்பின் ஸ்தாபகம் தொடர்பில், வௌிப்படையான முன்னெடுப்பு, பங்களாதேஷிடமிருந்தே வந்திருப்பினும், அதன் பின்னணியில் இந்தியாதான் இருந்தது; இருக்கிறது என்பது சில ஆய்வாளர்களது கருத்தாக இருக்கிறது.   

இலங்கையை சார்க்குக்குள் கொண்டுவந்துவிட்டால், அதனால் இலங்கைக்கும் தெற்காசியப் பிராந்தியத்துக்கும் நன்மை கிடைக்கிறதோ இல்லையோ, இன்னொரு மாற்றுப் பிராந்தியக் கூட்டில் இலங்கை இணைவது தடுக்கப்படுகிறது. அது யாருக்கு நன்மை பயக்கும் என்ற கேள்விக்கான விடைதான், இங்கு கூர்ந்து கவனிக்கப்பட வேண்டியது.  

ஜே.ஆரின் சம்மதம்   

புதுடெல்லியிலிருந்து டாக்கா வரையும், பின்னர் டாக்காவிலிருந்து புதுடெல்லி வரையுமான விமானப்பயணத்தின்போது, ஜே.ஆருக்கும் ராஜீவுக்கும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு, குறிப்பிடத்தக்களவு காலம் கிடைத்ததாகத் தனது நூலில் பதிவு செய்யும் ஜே.என்.திட்ஷிட், இந்தப் பேச்சுகளின் போது, இனப்பிரச்சினைக்கான தீர்வின் அடிப்படையானது, மாவட்ட ரீதியான அதிகாரப் பகிர்வு என்ற ரீதியில் அமைவதற்குப் பதிலாக, மாகாண ரீதியான அதிகாரப்பகிர்வு என்ற ரீதியில் அமைய ஜே.ஆரைச் சம்மதிக்க வைத்ததாக, ராஜீவ் காந்தி நம்பியதாகக் குறிப்பிடப்படுகிறது,   

 மேலும், தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்களுடன் பேசுவதில்லை என்ற தன்னுடைய நிலைப்பாட்டிலிருந்து இறங்கி, தமிழ்த் தரப்பின் அனைத்து இயக்கங்களுடனும் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தவும் தனது சம்மதத்தை ராஜீவ் காந்தியிடம் வழங்கியிருந்ததாக ஜே.என்.திட்ஷிட் பதிவு செய்கிறார்.   

ஜே.ஆர் தனது இந்திய விஜயத்தை நிறைவு செய்து கொண்டு, இலங்கை திரும்பிய பின், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த ராஜீவ் காந்தி, “இலங்கைக்குள் தனித்த அரசொன்றை ஸ்தாபிக்கும் எண்ணத்துடன் போராடும் தமிழ் கெரில்லாக்களுக்கு ஆயுதம் பெறும் வழியாக இந்திய ஆள்புலம் இருப்பதை அனுமதிக்க முடியாது என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது. இலங்கைத் தமிழர்கள் தனிநாடு ஒன்றை எதிர்பார்க்கக்கூடாது; அவர்கள் சமஷ்டியைக் கூட எதிர்பார்க்கக் கூடாது; அவர்கள் எதிர்பார்க்கக்கூடியதெல்லாம் இந்தியாவிலுள்ளது போன்றதோர் ஏற்பாட்டை மட்டுமே” என்றும் தெரிவித்திருந்தார்.  

எந்தத் தமிழ் அரசியல்வாதி எந்த வியாக்கியானத்தை எந்தவகை வார்த்தை ஜாலங்களில் சொன்னாலும், இலங்கை, இலங்கைத் தமிழர் தொடர்பிலான எந்தக் காலத்திலும் மாறாக இந்தியாவின் நிலைப்பாடு இதுதான்.

இந்தியாவில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், இந்த வௌியுறவுக் கொள்கை ஒருபோதும் மாறாது; ஏனென்றால், இந்த வௌியுறவுக் கொள்கையின் அஸ்திபாரம் என்பது, இந்திய நலனாகும். அந்த இந்திய நலனுக்கு முரணாணதொரு நிலைப்பாட்டை, ஒரு போதும் இந்தியா எடுக்காது.   

ஜே.ஆரைப் பேச்சுவார்த்தை மேசைக்கு அழைத்துவரச் சம்மதிக்க வைத்தாலும் அதைவிட இந்தியாவுக்குச் சவாலானதாக இருந்த விடயம், தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களைப் பேச்சுவார்த்தை மேசைக்கு அழைத்து வருவதாகும்.  

(அடுத்த திங்கட்கிழமை தொடரும்)  

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/இந்தியப்-பிரயத்தனம்/91-223934

கிருபன்

  • Grand Master
  • கருத்துக்கள உறவுகள்
  • Gender:Male
  • Location:முடிவிலி வளையம்
  • Interests:போஜனம், சயனம்
  • கருத்துக்கள உறவுகள்

Posted October 29, 2018

தாக்குதல் நிறுத்தம்

என்.கே. அஷோக்பரன் / 2018 ஒக்டோபர் 29 திங்கட்கிழமை, பி.ப. 05:19 Comments – 0

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி – 167)

அஹிம்சையும் ஆயுதமும் தீர்வும்  

இராஜவரோதயம் சம்பந்தன், அண்மையில் நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது, “சத்தியாக்கிரகம், அஹிம்சையைக் கடைப்பிடித்திருந்தால், ஆயுதப் போராட்டத்தைத் தவிர்த்திருக்கலாம்” என்று கருத்துத் தெரிவித்திருந்தார்.    

இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வு, நிச்சயமாக ஆயுதவழியில் தனித்துப் பெறப்பட்டிருக்கவே முடியாது. அரசியல் என்பதும், பேச்சுவார்த்தை என்பதும், எந்தவோர் இனப்பிரச்சினைக்கான தீர்வை எட்டுவதில், மிக முக்கியமானவை; தவிர்க்கப்பட முடியாதவை.   

ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை மேசைக்கு, அதிகாரத்தரப்பை அழைத்து வருவதற்கான அழுத்தம், ஏதாவதொரு போராட்ட வழியில்தான் தங்கியிருக்கிறது. 

அது, அகிம்ஷை வழியிலான போராட்டமாகவும் இருக்கலாம்,  ஆயுத வழியிலான போராட்டமாகவும் இருக்கலாம். 

மஹாத்மா காந்தி, மார்ட்டின் லூதர் கிங் போன்றவர்கள், அஹிம்சை வழிப் போராட்டத்தை முன்னெடுத்து, அதில் குறிப்பிடத்தக்க வெற்றியையும் கண்டிருந்தார்கள். 

ஆனால், இந்திய சுதந்திரத்துக்கு ஆயுத வழி சென்ற சுபாஷ் சந்திரபோஸ், பகத் சிங் ஆகியோரே, காந்தியைவிட முக்கிய காரணகர்த்தாக்கள் என்று கருத்துரைப்போரும் உளர். 

எது எவ்வாறு இருப்பினும், ஆயுத வழியைத்தாண்டி, அஹிம்சை வழியை நாடுவதற்கான மிக முக்கிய நியாயங்களில் ஒன்று, ஆயுதவழியானது இரு தரப்புக்கும் அதிக உயிர்ச்சேதத்தையும் ஈடுசெய்ய முடியாத இழப்புகளையும் ஏற்படுத்திவிடும். 

சுருங்கக்கூறின், ‘கண்ணுக்குக் கண்’ என்பது, குருடான ஓர் உலகத்தையே உருவாக்கும் என்பதாகும். இதுவே நிதர்சனம். 

ஆனால், இதைக் குறிப்பிடும் போது, இன்னொரு கேள்வியும் தொடர்ந்து எழுகிறது. குறித்த, அஹிம்சை  வழிப் போராட்டமானது, வெற்றியைத் தராது போனால், அஹிம்சை வழிப்போராட்டங்கள் மறுதரப்பால் உதாசீனப்படுத்தப்பட்டால், சத்தியாக்கிரகங்கள் போதிய அழுத்தத்தை ஏற்படுத்தாவிட்டால், அதன் பின்னர், என்ன செய்வது என்ற கேள்வி எழுவது, தவிர்க்க முடியாதது.

அதேவேளை, அஹிம்சைக்கு மாற்றாக, ஆயுதம் எடுத்துப் பேரழிவுப் பாதையில் தொடர்வதா என்று, மாற்றுக் கேள்வியையும் இங்கு, தவிர்த்துவிட முடியாது. இந்த எதிரிடைகளில், ஒரு சமநிலையைத் தேடுவதில்தான், அரசியல் சாணக்கியம் இருக்கிறது எனலாம்.   

சம்மதித்த ஜே.ஆர்; சம்மதிக்காத போராளிகள்  

“பயங்கரவாதிகளோடு பேச்சுவார்த்தைக்கே இடமில்லை” என்று, 1985 வரை சொல்லிவந்த ஜே.ஆர் அரசாங்கம், இந்திய அழுத்தத்தின் பேரில், ஆயுதந்தரித்த தமிழ் இளைஞர் இயக்கங்களோடு, பேச்சுவார்த்தைக்கு சம்மதித்திருந்தது. 

இந்தத் தீர்மானத்தை நிச்சயமாக, தூய மனத்தோடு எடுத்த முடிவு என்று சொல்லமுடியாது. இது ஜே.ஆரின் சாணக்கியம். சில நிபந்தனைகளுடனேயே ஜே.ஆர், இதற்குச் சம்மதித்திருந்தார். அந்த நிபந்தனைகளூடாக, தனக்குச் சார்பாக இந்தியாவிடமிருந்து, சில உறுதிமொழிகளையும் நன்மைகளையும் அவர் பெற்றுக்கொண்டிருந்தார். 

மறுபுறத்தில், தமிழ்த்தரப்பின் நிலை வேறானதாக இருந்தது. ஜே.ஆரைப் பேச்சுவார்த்தைக்குச் சம்மதிக்க வைப்பதிலும் தமிழ்த் தரப்பை, குறிப்பாக, விடுதலைப் புலிகள் அமைப்பைப் பேச்சுவார்த்தை மேசைக்கு அழைத்து வருவதில், இந்தியாவுக்குச் சற்றே அதிக சிரமமாய் இருந்தது. 

இதற்குக் காரணம், விடுதலைப் புலிகள் அமைப்பும் அதன் தலைமையும் ஜே.ஆருடனான பேச்சுவார்த்தைகளின் மீது, நம்பிக்கையற்று இருந்தமையாகும். ராஜீவ் காந்தியோடு பேச்சுவார்த்தை நடத்திவிட்டு, நாடுதிரும்பியிருந்த ஜே.ஆர் இங்கு வந்ததும், “எந்தத் தீர்வும் மாவட்ட சபைகளின் அடிப்படையிலேயே அமையும்” என்று கருத்துரைத்திருந்தார். 

ராஜீவிடம், மாகாண சபைகளை அடிப்படையாகக் கொண்ட தீர்வுக்குச் சம்மதம் தெரிவித்துவிட்டு, இலங்கை வந்ததும், மாவட்ட சபைகளே தீர்வு என்று சொன்னது சாணக்கியமா, நேர்மையீனமா என்பது தனித்த விவாதம். 

இது, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவரான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்துக்கு  கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இது தொடர்பில், அமிர்தலிங்கம், ஊடகங்களுக்கு விடுத்த அறிக்கையில், “மாவட்ட சபைகளை அடிப்படையாகக் கொண்டுதான், தீர்வு அமையும் என்று, இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய ஜே.ஆர், விமான நிலையத்தில் வைத்துத் தெரிவித்தமையானது, எம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது” என்று குறிப்பிட்டிருந்தார்.

 ஜே.ஆரின் விசேட தூதுவராகச் சென்று, முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியைச் சந்தித்து பேசிய எச்.டபிள்யூ.ஜெயவர்தன, இந்திரா காந்தியிடம் தெரிவித்த போது, “மாவட்ட சபைகள், தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யப் போதுமானவையல்ல” என்று, இந்திரா காந்தி குறிப்பிட்டிருந்ததையும் அமிர்தலிங்கம் சுட்டிக் காட்டியிருந்தார்.   

இம்முறை, சற்றே நேரடியாக இலங்கை விவகாரத்தில், இந்தியா செயற்படத் தொடங்கியிருந்தது. ஜே.ஆர் அரசாங்கத்துக்கும் தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்கள் உள்ளிட்ட தமிழ்த் தரப்புக்கும் இடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றே ஆகவேண்டும் என்பதில், ராஜீவ் காந்தி தலைமையிலான இந்திய அரசாங்கம் உறுதியாக இருந்தது. 

அதற்கான தொடர் அழுத்தத்தை, இந்திய அரசாங்கம், ஜே.ஆர் மீது வழங்கிக் கொண்டிருந்தது. 
இதன் ஒரு பகுதியாக, இலங்கையிலிருந்து சட்டம், நீதி சம்பந்தமான நிபுணர் குழுவொன்றை இந்தியாவுக்கு அழைத்து, அதிகாரப்பகிர்வு தொடர்பிலான, சட்டம், அரசமைப்பு விவகாரங்கள் பற்றிய கலந்துரையாடல் ஒன்றை, இந்தியாவின் சட்டம், நீதியியல் நிபுணர்களுடன் நடத்தியது. 

இலங்கை சார்பாக, ஜே.ஆரின் சகோதரரும், இலங்கையின் முன்னணி வழக்குரைஞர்களில் ஒருவருமான எச்.டபிள்யூ.ஜெயவர்தன தலைமையில் குழுவொன்று, இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டிருந்தது.
 இலங்கையிலிருந்து சென்ற சட்டம்,  நீதியியல் நிபுணர் குழுவானது, இலங்கை அரசமைப்பின் இரண்டாம், மூன்றாம் சரத்துகளுக்குட்பட்ட தீர்வொன்றே வழங்கப்பட முடியும்; அதாவது, ஒற்றையாட்சிக்குள், இலங்கையின் இறைமையைப் பாதிக்காத அரசியல் தீர்வொன்றைப் பற்றியே பேசமுடியும் என்பதில் உறுதியாக இருந்தது. 

இந்த விடயத்தில், இந்திய நிபுணர் குழுவும் தன்னுடைய இணக்கத்தை வௌிப்படுத்தி இருந்தது. ஒற்றையாட்சிக்குள் தீர்வு என்பதுதான், தீர்வுத்திட்டம் தொடர்பிலான பேச்சுவார்த்தைகளுக்கு அடிப்படையானது. இலங்கை தொடர்பிலான, இந்தியாவின் வௌியுறவுக் கொள்கையுடனும் இது ஒத்துப்போனது.  

இருதரப்புத் தாக்குதல் நிறுத்தம்  

மறுபுறத்தில், தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்களைப் பேச்சுவார்த்தை மேசைக்கு அழைத்து வருவதில், இந்தியா பெரும் சவாலைச் சந்தித்தது. 

1985 மே – ஜூன் மாதங்களில் தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்களுக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையே தொடர் வன்முறைத் தாக்குதல்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. 

இலங்கையில் வன்முறைத் தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டிருக்கும் வரை, பேச்சுவார்த்தைகளில் ஈடுபடப்போவதில்லை என்று, முக்கிய தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்களின்  ஒற்றுபட்ட முன்னணியான, ‘ஈழத் தேசிய விடுதலை முன்னணி’ அறிவித்திருந்தது. 

ஆகவே, இருதரப்புத் தாக்குதல்களை, ஒரு முடிவுக்குக் கொண்டுவரவேண்டியது, இந்தியாவின் முதற்கடமையாக இருந்தது. இருதரப்புத் தாக்குதல் நிறுத்தத்தை இந்தியா, தனது முழு அழுத்தத்தையும் பிரயோகித்து ஏற்படுத்தியது. 

அதன்படி, 1985 ஜூன் 18ஆம் திகதி, இலங்கை அரசாங்கமும் தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்களும் இருதரப்புத் தாக்குதல் நிறுத்தத்தை அறிவித்திருந்தன. 

ஆனால், இந்தத் தாக்குதல் நிறுத்தம் தொடர்பில், விடுதலைப் புலிகள் அமைப்பும் அதன் தலைமையும் திருப்தி கொண்டிருக்கவில்லை என்று, தன்னுடைய நூலொன்றில் நாராயண் சுவாமி குறிப்பிடுகிறார். 

இதுபற்றி, மேலும் விவரிக்கும் நாராயண் சுவாமி, இந்தத் தாக்குதல் நிறுத்தம் ஏற்படுத்தப்பட்டு ஒரு வாரகாலத்தின் பின்னர், இந்தத் தாக்குதல் நிறுத்தத்தை முதலில் தான் எதிர்த்ததாகவும் பின்னர் இந்தியாவின் அதீத அழுத்தத்தின் காரணமாகவே, தன்னுடைய மனது மாற்றப்பட்டதாகவும் இது பற்றித்தான் மகிழ்ச்சிகொள்ளவில்லை என்றும், விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர், பொதுவில் ஏற்றுக்கொண்டதாகக் குறிப்பிடுகிறார். 

மேலும், தமிழ்ப் போராளிகளும் தமிழ் அரசியல்வாதிகளைப் போலவே, திடீரென்று கொழும்போடு சமரசத்துக்கு வந்து விடுவார்கள் என்ற அச்சம், தமிழ் மக்களிடம் இருப்பதை, விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் புரிந்துகொண்டிருந்தாரெனவும் நாராயண் சுவாமி குறிப்பிடுகிறார். 

அதன்படி, “எமது மக்களின் விடுதலையையும் பெருமையையும் வென்றெடுக்கவே, நாம் ஆயுதம் ஏந்தினோம். அந்த விடுதலையையும் பெருமையையும் வென்றெடுக்கும் வரை, ஆயுதங்களைக் கீழே வைக்கப்போவதில்லை” என்று, விடுதலைப் புலிகளின் தலைவர் கூறினாரெனவும் நாராயண் சுவாமி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “நான் ஒன்றைத் தௌிவாகக் குறிப்பிட விரும்புகிறேன்; சுதந்திர தமிழீழம் கிடைக்கும்வரை, எமது போராட்டம் தொடரும்” என்று, புலிகளின் தலைவர் கூறினாரெனவும் நாராயண் சுவாமி பதிவு செய்கிறார். 
இந்தப் பேச்சுவார்த்தை முயற்சி, நிச்சயமாகத் தோல்வி அடையும் என்பதற்கு, இந்தப் பேச்சுவார்த்தைக்கு, இருதரப்பும் அழைக்கப்பட்ட விதமே சான்று பகர்கிறது. 

ஜே.ஆர் அரசாங்கத்துக்கோ, முக்கிய தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்களுக்கோ பேச்சுவார்த்தையில் நம்பிக்கையோ, விருப்பமோ இருக்கவில்லை. 

மாறாக, ஜே.ஆர் மீது, இந்தியா பிரயோகித்த அழுத்தம் காரணமாகவும் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களை, கிட்டத்தட்ட மிரட்டி வற்புறுத்தியதன் காரணமாகவும்தான் இந்தப் பேச்சுவார்த்தைக்கான அவர்களது சம்மதம் கிட்டியது. 

ஒரு தரப்பு, ஒற்றையாட்சிக்குள்ளான மாவட்ட சபைகளை அடிப்படையாகக் கொண்ட தீர்வு என்பதிலும், மறுதரப்பு, சுதந்திரமான தனி நாடு என்பதிலும் உறுதியாக இருக்கும் போது, பேச்சுவார்த்தை மூலமான தீர்வு என்பது, நிச்சயம் சாத்தியமில்லை. 

இங்கு இருதரப்பையும் சமநிலைக்குக் கொண்டு வருவதற்கான முன்னேற்பாடுகள், செய்யப்பட்டிருக்க வேண்டும். காலத்தால் பின்னோக்கிப் பார்க்கும்போது, இந்தியா இத்தனை அவசரமின்றி, இன்னும் கொஞ்சம் இலாவகமாகக் கையாண்டிருக்கலாம் என்ற எண்ணம் தோன்றுவதைத் தவிர்க்க முடியாதுள்ளது. 

அதேவேளை, ஓடிக்கொண்டிருந்த இரத்த ஆற்றை, உடனடியாக நிறுத்த வேண்டிய காலத்தின் அவசரத் தேவையும் இந்த அவசர முடிவுக்கு, முக்கிய உந்துசக்தியாக இருந்திருக்கும் என்ற நிதர்சனத்தையும் மறந்துவிட முடியாது.   

திம்புவில் பேச்சுவார்த்தை நடத்தத் தீர்மானம்  

1985 ஜூன் 18ஆம் திகதி, இருதரப்புகளின் தாக்குதல் நிறுத்தம் ஏற்படுத்தப்பட்டிருந்த நிலையில் கூட, தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்கள்  பேச்சுவார்த்தைகளில் பங்குபற்றுவது தொடர்பில் ஆர்வம் காட்டவில்லை. 

பேச்சுவார்த்தைகளானது கொழும்பில் நடத்தப்படுவதற்கு, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் தமது எதிர்ப்பைப் பதிவுசெய்திருந்தன. ஜே.ஆர் அரசாங்கமும் பேச்சுவார்த்தைகள், மூன்றாவது நாடொன்றில் நடத்தப்படுவது பொருத்தமானது என்ற அபிப்பிராயத்தைக் கொண்டிருந்தது. 

இவற்றைச் செவிமடுத்த இந்திய வௌியுறவுத்துறை செயலாளர் ரொமேஷ் பண்டாரி, பேச்சுவார்த்தைகளை பூட்டானில் நடத்தும் முன்மொழிவை முன்வைத்தார். 

இதைத் தொடர்ந்து, பூட்டானின் மன்னரும், இந்தப் பேச்சுவார்த்தையை பூட்டானின் தலைநகரான திம்புவில் நடத்துவதற்கான அழைப்பை, இந்தப் பேச்சுவார்த்தையின் மத்தியஸ்தர் என்ற வகையில், இந்தியாவிடம் விடுத்திருந்தார். 

தாக்குதல் நிறுத்தமும் ஏற்படுத்தப்பட்டிருந்தது; பேச்சுவார்த்தைக்கான இடமும் முடிவாகியிருந்தது. விரைவில் பேச்சுவார்த்தைகளை நடத்தி, சில மாதங்களுக்குள் தீர்வொன்றை எட்டுவதே, ரொமேஷ் பண்டாரியின் எண்ணமாக இருந்தது. 

இதற்காக முரண்பட்டுக்கொண்டிருந்த தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்களை பேச்சுவார்த்தை மேசைக்கு அழைத்துவரும் பணி, இந்திய உளவுத்துறையான ‘றோ’ அமைப்பிடம் வழங்கப்பட்டிருந்ததாக, நாராயண் சுவாமி உள்ளிட்ட பலர் பதிவு செய்கிறார்கள். சாம, பேத, தான, தண்டம் என்ற எதையும் பயன்படுத்தி, இதைச் சாத்தியமாக்க, இந்தியா தலைப்பட்டிருந்தது.  

(அடுத்த திங்கட்கிழமை தொடரும்)  

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/தாக்குதல்-நிறுத்தம்/91-224411
  • 2 weeks later…

கிருபன்

  • Grand Master
  • கருத்துக்கள உறவுகள்
  • Gender:Male
  • Location:முடிவிலி வளையம்
  • Interests:போஜனம், சயனம்
  • கருத்துக்கள உறவுகள்

Posted November 6, 2018

பேச்சுவார்த்தை முஸ்தீபுகள்

என்.கே. அஷோக்பரன் / 2018 நவம்பர் 06 செவ்வாய்க்கிழமை, பி.ப. 04:06Comments – 0

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி – 168)

திம்புவுக்கு அழைத்துவருதல் 

ஜே.ஆர் அரசாங்கத்துக்கும் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் உள்ளிட்ட தமிழ்த் தரப்புக்கும் இடையில், திம்புவில் நடத்துவதற்குத் தீர்மானித்திருந்த பேச்சுவார்த்தைக்கு, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களைச் சம்மதிக்க வைக்க, பகீரதப் பிரயத்தனத்தில் இந்தியா ஈடுபட்டிருந்தது.

தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களுக்கு, இந்தியாவின் ஆதரவென்பது மிக முக்கியமானது. தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள், மிகச் சுதந்திரமாகத் தென்னிந்தியாவில் இயங்கிக்கொண்டிருந்த காலகட்டமிது. 

இந்தியாவின் அந்த ஆதரவு என்பது, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களுக்கு இன்றியமையாததாக இருந்த நிலையில், அந்த இன்றியமையாத ஆதரவையே, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களைப் பேச்சுவார்த்தை மேசைக்கு அழைத்துவருவதற்கான துருப்புச் சீட்டாக இந்தியா பயன்படுத்தியது. 

இந்த அழுத்தத்தின் வாயிலாக, முக்கிய ஆயுதக் குழுக்களில் அநேகமானவற்றை, அவற்றின் அதிருப்திக்கு மத்தியிலும் பேச்சுவார்த்தை மேசைக்கு அழைத்துவர இந்தியாவால் முடிந்திருந்தாலும், விடுதலைப் புலிகள் அமைப்பைச் சம்மதிக்க வைப்பது, அவ்வளவு இலகுவானதாக இருக்கவில்லை.

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், பேச்சுவார்த்தைகளில் சுத்தமாக நம்பிக்கையற்றிருந்ததுடன், ஆயுத வழியில் சுதந்திர தனித்தேசத்தை வென்றெடுப்பதில் உறுதியாக இருந்தார். பிரபாகரனின் இந்த மனநிலையை, ஆரம்பத்திலிருந்தே இந்திய அதிகாரிகள் அறிந்திருந்தாலும், காலவோட்டத்தில் அதைத் தம்மால் மாற்றவிட முடியும் என்று அவர்கள் நம்பிக்கை கொண்டிருந்தனர் என, தனது நூலொன்றில் நாராயண் ஸ்வாமி குறிப்பிடுகிறார்.

ஆனால் தற்போது இந்த விடயத்தை ஆறுதலாக அணுகுவதற்கான நேரம் இருக்கவில்லை. ஒரு மாதகாலத்துக்குள் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படவேண்டியிருந்த நிலையில், விடுதலைப் புலிகள் அமைப்பைப் பேச்சுவார்த்தை மேசைக்கு எவ்வாறெனினும் அழைத்து வரவேண்டிய நிர்ப்பந்தத்தில் இந்தியா இருந்தது.

ஜே.ஆரைச் சம்மதிக்க வைத்துவிட்டு, விடுதலைப் புலிகள் அமைப்பைப் பேச்சுவார்த்தை மேசைக்கு அழைத்துவராவிட்டால், அது இந்தியாவுக்குப் பெரும் தோல்வியாக அமையும். பிராந்தியத்தின் பெரியண்ணனாகச் செயற்பட்ட இந்தியாவுக்கு, அது ஏற்புடையதொன்றாக இருக்காது, ஆகவே, தன்னுடைய ஒட்டுமொத்தப் பலத்தையும் பிரயோகிக்க இந்தியா தயாரானது. 

விடுதலைப் புலிகளின் தலைமையைச் சந்தித்த இந்தியாவின் உளவுத்துறையான “றோ”வின் அதிகாரிகள், திம்புப் பேச்சுவார்த்தைகளுக்குச் செல்வதைத் தவிர பிரபாகரனுக்கு வேறு வழியில்லை என்பதைத் திட்டவட்டமாக கூறினரெனவும், அவ்வாறு பிரபாகரன் சம்மதிக்காவிட்டால், இந்தியாவின் நிலமும் கடலும், இனி அவர்களின் பயன்பாட்டுக்குக் கிடைக்காது என்று கூறினரெனவும், நாராயண் ஸ்வாமி பதிவுசெய்கிறார். அதாவது, திம்புவுக்கு விடுதலைப் புலிகள் வராவிட்டால், இந்தியாவில் விடுதலைப் புலிகள் செயற்படமுடியாது என்ற அச்சுறுத்தலை அவர்கள் வௌியிட்டிருந்தார்கள். 

அன்றைய சூழலில், இந்தியாவின் ஆதரவின்றித் தனித்துச் செயற்படத்தக்க வகையில் எந்தத் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுவும் இருக்கவில்லை. ஆகவே, விடுதலைப் புலிகளைப் பொறுத்த வரையில், இது அவர்களது இருப்பு, நிலைப்பு சம்பந்தப்பட்ட பிரச்சினையாக, தற்போது மாறியிருந்தது. இந்தியாவின் இந்த மிரட்டல், விடுதலைப் புலிகள் அமைப்புக்கு வேறு தெரிவுகளை வழங்கவில்லை. 

மறுபுறத்தில், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி பேச்சுவார்த்தைகளில் பங்குபற்றுவதையும், விடுதலைப் புலிகள் உள்ளிட்ட தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் சில விரும்பியிருக்கவில்லை. தமிழர் பிரச்சினை தொடர்பில், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்கு எந்தத் தொடர்புமில்லை என்று, றோ அதிகாரிகளிடம், விடுதலைப் புலிகள் அமைப்பின் மதியுரைஞர் அன்டன் பாலசிங்கம் குறிப்பிட்டாரெனவும், அதற்குப் பதிலளித்த றோ அதிகாரிகள், “உங்களை நாம், ஆயுதப் போராட்டத்தைக் கைவிடச் சொல்லவில்லை, பேச்சுவார்த்தை மேசைக்கு வரத்தான் சொல்கிறோம்” என்று கூறினரெனவும், நாராயண் ஸ்வாமி குறிப்பிடுகிறார்.

பேச்சுவார்த்தைகள் தொடர்பில் பேசுவதற்கு, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் தலைவர்களும் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர்களும் டெல்லிக்கு அழைக்கப்பட்டிருந்தனர். இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள டெல்லி வந்திருந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன், அவருடைய அடையாளமாகவே மாறியிருந்த மீசையை மழித்துவிட்டு வந்திருந்தாரெனவும், அது ஏன் என்று வினவியவர்களிடம், “போராடும் போதுதான் மீசை தேவை; பேச்சுவார்த்தைக்குப் போவதென்றால் நாம் மீசையை மழித்துவிட வேண்டும்” என்று குறிப்பிட்டாரென, நாராயண் ஸ்வாமி பதிவுசெய்கிறார்.

இது, பேச்சுவார்த்தை தொடர்பிலான தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் மனநிலையைப் பிரதிபலிப்பதாகப் பார்க்கப்பட வேண்டியதொன்று. வேண்டாவெறுப்பாக, பிராந்திய வல்லாதிக்க சக்தியின் மிரட்டலின் காரணமாகப் பேச்சுவார்த்தை மேசைக்கு ஒரு தரப்பு செல்லும் போது, அந்தப் பேச்சுவார்த்தை எவ்வளவு தூரம் வெற்றியளிக்கும் என்பது கேள்விக்குரியதே.

தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் முடிவு

இதனிடையே, “சில நிபந்தனைகளோடு பேச்சுவார்த்தைக்கு நாம் வருவோம்” என்று, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் குறிப்பிட்ட போது, இந்திய அதிகாரிகள் அதனையும் மறுத்திருந்தனரென, ரீ.சபாரட்ணம் பதிவு செய்கிறார்.

தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களோடு பேச்சுவார்த்தை நடத்திய இந்திய உளவுத்துறையான றோவின் தலைவராக இருந்த கிறீஷ் சக்ஸேனா, பேச்சுவார்த்தைகள், எதுவித நிபந்தனைகளுமின்றியே இடம்பெறும் என்று திட்டவட்டமாகக் குறிப்பிட்டிருந்ததோடு, ஆயுதக்குழுக்கள் பேச்சுவார்த்தைக்குச் சம்மதிக்காவிட்டால், இந்திய எல்லைக்குள் அவை செயற்பட முடியாது என்ற அச்சுறுத்தலையும் உறுதிபடத் தெரிவித்ததுடன், மறுநாள் அவர்களது முடிவை அறிவிக்க வேண்டுமென்றும் ஆணித்தரமாக அறிவித்திருந்தார்.

இது, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களை இன்னும் அழுத்தத்தினுள் தள்ளியிருந்தது. 
இது பற்றி ஏனைய தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் தலைமைகளோடு பேச்சுவார்த்தை நடத்திய பிரபாகரன், “இந்த நிலையில் நாம், இந்தியாவை விரோதித்துக் கொள்ள முடியாது. இந்தியாவோடு நாம் பயணிப்பது அவசியம். திம்புவுக்கு நாம், நிபந்தனையின்றியே செல்ல வேண்டும். எமக்கும் இந்தியாவுக்குமிடையில் பிரச்சினையை  ஜே.ஆர் உருவாக்க, நாம் அனுமதிக்கக் கூடாது. ராஜிவும் பண்டாரியும், ஜே.ஆரை நம்புகிறார்கள், அந்த நம்பிக்கையை நாம் தகர்க்க வேண்டும்” என, தந்திரோபாய ரீதியாக அறிவுறுத்தினாரென, ரீ.சபாரட்ணம் பதிவுசெய்கிறார்.

மேலும், இதனை தந்திரோபாயமாகக் கையாள வேண்டும் என்ற வகையில், நிபந்தனையின்றி அங்கு சென்றுவிட்டு, அங்கு சென்று, “தமிழ் மக்களின் உரிமைகளில் உறுதியாக இருப்போம்” என்ற திட்டத்தையும் முன்வைத்தார். 

விடுதலைப் புலிகள் உள்ளிட்ட தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் தலைமைகளைச் சந்தித்துப் பேசிய இந்திய வௌியுறவுத்துறைச் செயலாளர் றொமேஷ் பண்டாரி, திம்புவில் நடக்கவிருந்த பேச்சுவார்த்தையின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். பண்டாரி கூறிய முழுவதையும் ஆறுதலாகக் கேட்ட பிரபாகரன், “நான் மரியாதையின்றி மூர்க்கமாக இருக்க விரும்பவில்லை, ஆனால் இலங்கை அரசாங்கத்தை நான் நம்பவில்லை” என்று திட்டவட்டமாகக் கூறினாரெனவும், “ஆயினும், நீங்கள் இதற்காக அதீத முயற்சிகள் எடுத்துள்ளமையாலும், ‘அம்மா’ (இந்திரா காந்தி) எங்களுக்காக நிறையவே செய்துள்ளதாலும், நாங்கள் திம்புவுக்கு வருகிறோம்” என்று குறிப்பிட்டாரெனவும், நாராயண் ஸ்வாமி கோடிட்டுக்காட்டுகிறார்.

இறுதியாக, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களையும் பேச்சுவார்த்தை மேசைக்கு அழைத்து வருவதில், இந்தியா வெற்றி கண்டிருந்தது. ஆனால் அது, முழுமையான வெற்றியா என்பதும் சந்தேகமே.

பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வது யார்?

திம்புப் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள விடுதலைப் புலிகள் அமைப்பு உத்தியோகபூர்வமாகச் சம்மதித்திருந்தாலும், அதன் தலைவரான பிரபாகரனோ, அல்லது அவரின் மதியுரைஞரான அன்ரன் பாலசிங்கமோ, பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வதாக இருக்கவில்லை, மாறாக தம்முடைய அமைப்புச் சார்ந்து ஃபிரான்ஸிலிருந்து செயற்பட்டுக்கொண்டிருந்த திலகர் என்ற பொறுப்பாளர் கலந்துகொள்வார் என்று பிரபாகரன் அறிவித்திருந்தார்.

விடுதலைப் புலிகள் கலந்துகொள்வதே போதும் என்ற மனநிலையில் இந்தியா இருந்திருக்க வேண்டும் போலும், அவர்கள், இது தொடர்பில் விடுதலைப் புலிகளை மேலும் வற்புறுத்தவில்லை. இதுபோலவே, மற்றைய தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் சார்பாகவும், அவர்களது இராணுவத் தலைமைகளின்றி, அரசியல் தலைமைகளே பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளவிருந்தனர். 

ஜே.ஆரும், இலங்கை அரசாங்கம் சார்பாக தன்னுடைய சகோதரரும் இலங்கையின் முக்கிய வழக்குரைஞர்களில் ஒருவருமான எச்.டபிள்யூ.ஜெயவர்த்தன தலைமையிலான குழுவையே பேச்சுவார்த்தைகளுக்கு அனுப்பிவைக்கவிருந்தார். எந்தவித அரச பதவிகளிலுமில்லாத, அரசாங்கத்தோடு நேரடியாகச் சம்பந்தமில்லாத ஒருவரை ஜே.ஆர் அனுப்பிவைப்பது தொடர்பில் கேள்விகள் எழுந்தன. 

இந்தியாவும் இது தொடர்பில் கரிசனம் கொண்டதாக, தன்னுடைய நூலொன்றில், இலங்கைக்கான இந்தியத் உயர்ஸ்தானிகராக அப்போது இருந்த ஜே.என்.டிக்‌ஷிட் பதிவு செய்கிறார். அமைச்சர் அல்லது அரசமைப்பு ரீதியில் வலுவுள்ளவர் அல்லாத ஒருவர் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வதானது, இந்தப் பேச்சுவார்த்தையின் நோக்கத்தையே சிதைத்துவிடும் என்பது, இந்தியாவின் கவலையாக இருந்தது. இந்தக் கவலையை ஜே.என். டிக்‌ஷிட், ஜே.ஆரிடம் பகிர்ந்துகொண்ட போது, அதற்குப் பதிலளித்த ஜே.ஆர், எச்.டபிள்யூ.ஜெயவர்த்தன தனக்கு மிக நம்பிக்கையானவர் என்றும், அரசமைப்புத் தொடர்பில் அவர் தேர்ந்த நிபுணர் ஒருவர் என்றும், மேலும் அவர் ஜனாதிபதியின் விசேட தூதுவராக அனுப்பப்படுதால், அவருடைய தகுதி, வலு பற்றிய கேள்விகள் அவசியமில்லாதன என்றும் பதிலளித்திருந்தாரென, ஜே.என்.டிக்‌ஷிட் பதிவுசெய்கிறார்.

ஆகவே, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களினதும் சரி, இலங்கை அரசாங்கத்தினதும் சரி, வலுவுள்ள தலைமைகள் இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளவில்லை. நேரடியாக அரச பதவியேதும் வகிக்காத ஒருவரின் தலைமையிலான பேச்சுவார்த்தைக் குழுவொன்றையே ஜே.ஆர் அனுப்பவிருந்தமையே, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் தலைமைகளும் நேரடியாகப் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வதைத் தவிர்க்க முக்கிய காரணம் என்று, ரீ.சபாரட்ணம், தன்னுடைய நூலொன்றில் கோடிட்டுக் காட்டுகிறார்.

இது, இருதரப்பும் இந்தப் பேச்சுவார்த்தைக்குக் கொடுத்த முக்கியத்துவத்தை வௌிப்படுத்தி நிற்பதாகவே நாம் கருதவேண்டியதாக இருக்கிறது.

விவாகரத்து வேண்டும் இருதரப்பை, மூன்றாந்தரப்பொன்று நிர்ப்பந்தித்து, வற்புறுத்திக் கலந்துரையாடச் செய்வதைப் போலத்தான் இந்தப் பேச்சுவார்த்தைகள் அமையவிருந்தன என்றால், அது மிகையாகாது. 

தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி சார்பில், அதன் தலைவரான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் இதில் கலந்துகொண்டிருந்தார். தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகளில் முழு நம்பிக்கையும் ஈடுபாடும் கொண்ட அமைப்பாக, தமிழர“ ஐக்கிய விடுதலைக் கூட்டணியே இருந்தது எனலாம்.

ஆனால் இது பற்றிக் கருத்துரைக்கும் சிலர், பேச்சுவார்த்தைகள் மட்டுமே தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி தன்னுடைய அரசியல் இருப்பைத் தக்கவைத்துக்கொள்ள இருக்கின்ற ஒரே வழி என்றும், மேலும் இந்தியாவின் செல்லப் பிள்ளைகளாக இருந்த அவர்கள், இதில் முழு அக்கறை காட்டியதில் எந்த வியப்புமில்லை என்றும் குறிப்பிடுகின்றனர். 

(அடுத்த திங்கட்கழைமை தொடரும்)

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/பேச்சுவார்த்தை-முஸ்தீபுகள்/91-224781

கிருபன்

  • Grand Master
  • கருத்துக்கள உறவுகள்
  • Gender:Male
  • Location:முடிவிலி வளையம்
  • Interests:போஜனம், சயனம்
  • கருத்துக்கள உறவுகள்

Posted November 12, 2018

திம்புவில் சந்திப்பு

என்.கே. அஷோக்பரன் / 2018 நவம்பர் 12 திங்கட்கிழமை, மு.ப. 12:56 Comments – 0

  தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி – 169)

பேச்சுவார்த்தையும் எதிர்ப்பும்  

இலங்கை அரசாங்கத்தையும் தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்கள் உள்ளிட்ட தமிழ்த் தரப்பையும் பூட்டானின் தலைநகரான திம்புவில், பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இணங்கச் செய்ததில் இந்தியா வெற்றி கண்டிருந்தது.   

இதற்காக, ஏறத்தாழ ஆறுமாத காலமாக இந்திய வௌியுறவுச் செயலாளர் ரொமேஷ் பண்டாரி, கங்கணம் கட்டிக்கொண்டு செயற்பட்டிருந்தார். ஆனால், இருதரப்பும் சுயவிருப்பின் அல்லது தன்முனைப்பின் பேரில், இந்தப் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்ளச் சம்மதித்திருக்கவில்லை என்பது, இங்கு கோடிட்டுக் காட்டப்பட வேண்டியது.   

இருதரப்பின் மீது, இந்தியா கடுமையான அழுத்தங்களைப் பிரயோகித்தே, அவர்களைப் பேச்சுவார்த்தை மேசைக்கு அழைத்து வந்திருந்தது என்பது, மீண்டும் மீண்டும் அழுத்திச் சொல்ல வேண்டிய ஒரு விடயமாக இருக்கிறது. 

இதனால்தான், இருதரப்பின் முதல்மட்ட தலைமைகள், இந்தப் பேச்சுவார்த்தைகளில் பங்குகொண்டிருக்கவில்லை என்பதும், இங்கு குறிப்பிட்டு அவதானிக்கப்படக் கூடியது.  இங்கு, இனப்பிரச்சினைத் தீர்வுக்காக, இருதரப்பும் பேச்சுவார்த்தைக்கு வந்தன என்பதைவிட, இந்தியாவின் அழுத்தத்தால்தான் பேச்சுவார்த்தைக்கு வந்தன என்பதே நிதர்சனமாகும்.  

தமிழ்த் தரப்பின் எதிர்ப்பு  

தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்கள், பேச்சுவார்த்தைகளில்   கலந்துகொள்கின்றன என்ற செய்தி, தமிழர் தாயகப் பகுதிகளில், குறிப்பாக வடக்கில், அதுவும் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில், வரவேற்பைப் பெறவில்லை என்பதுடன், கடும் அதிருப்தியை ஏற்படுத்தியதாக, ரீ.சபாரட்ணம் பதிவு செய்கிறார். 

பேச்சுவார்த்தை என்ற பெயரில், பல தசாப்தங்களாகத் தாம் ஏமாற்றப்பட்டதாலேயே, பேச்சுவார்த்தை வழியை மட்டுமே நாடியிருந்த, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியைத் தாம் நிராகரித்து, தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்கள்பால், தமது விடுதலைக்கான நம்பிக்கையைக் கொண்டிருந்த நிலையில், தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்களும்  அதே பேச்சுவார்த்தை வழிக்குத் தற்போது சென்றதால், ஏற்பட்ட அதிருப்தியே இது என்பது, ரீ.சபாரட்ணத்தின் கருத்தாக அமைகிறது.   

யாழ்ப்பாணம் எங்கும், இந்தப் பேச்சுவார்த்தை முயற்சிகளுக்கு எதிராக, இளைஞர்கள் தமது எதிர்ப்பை வௌிப்படுத்தி இருந்தனர். ஊர்வலங்கள், பொதுக் கூட்டங்கள், வீதிநாடகங்கள், சுவரொட்டிகள் எனப் பல்வேறு வகைகளில் இந்த எதிர்ப்பு வௌிப்பட்டிருந்தது. பேச்சுவார்த்தையைத் தம்மீது திணித்த இந்தியா மீதும், இளைஞர்கள் சினங்கொண்டிருந்ததாக, ரீ.சபாரட்ணம் குறிப்பிடுகிறார்.  

இந்தியா தன்னுடைய விருப்பத்தை, எங்கள் மீது திணிக்க முயல்கிறது என்று அவர்கள் சுட்டிக்காட்டியதுடன், தங்களுக்குத் “தமிழீழம் வேண்டும்” என்றும் குரல் கொடுத்தனர். 

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள், பாடசாலை மாணவர்கள் ஆகியோரால் இந்த எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. மேலும், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தினது உருவப்பொம்மைக்கு எரியூட்டியும் அவர்கள், தமது எதிர்ப்பை வௌிக்காட்டி இருந்தனர்.   

 அமிர்தலிங்கத்துக்கு எதிராகக் கோஷமிட்ட அவர்கள், ஜே.ஆருடன் பேச்சுவார்த்தை நடத்தியதன் மூலம், ‘அரசியல் தற்கொலை’ செய்துகொண்ட பின்னும், அமிர்தலிங்கத்துக்குத் தன்னுடைய முட்டாள்தனம் புரியவில்லை என்று சுட்டிக்காட்டினார்கள்.   

மேலும், இந்திய பெரியண்ணனின் கட்டளைக்குத் தலைசாய்க்கும் அடிமைகளாக, சில தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்கள் மாறியிருக்கின்றன என்பதைச் சுட்டிக்காட்டும் வீதிநாடகங்களும் அரங்கேற்றப்பட்டிருந்தன. 

இது, தமிழ் இளைஞர் ஆயுத இயக்கமொன்றின் ஆதரவாளர்களால், மற்றைய தமிழ் இளைஞர் ஆயுத இயக்கமொன்றின் மீது, குற்றஞ்சாட்டும், மட்டந்தட்டும் நடவடிக்கையாகக் கூட இருக்கலாம் என்பதையும், இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.  

அரசாங்கத் தரப்பில் எதிர்ப்பு  

மறுபுறத்தில், இலங்கை அரசாங்கத்துக்கு உள்ளேயும், திம்புப் பேச்சுவார்த்தைகளுக்குக் கடுமையாக எதிர்ப்பு இருந்தது. குறிப்பாக, இந்தியாவையும் இந்தியத் தலையீட்டையும் முற்றாக வெறுத்த பிரதமர் ரணசிங்ஹ பிரேமதாஸ, போர் மூலம், தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்களை முற்றாக இல்லாதொழிக்கக் கங்கணம் கட்டிக்கொண்டு செயற்பட்ட, தேசிய பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத்முதலி ஆகியோர், திம்புப் பேச்சுவார்த்தைகளைக் கடுமையாக எதிர்த்தவர்களில் முக்கியமானவர்கள் என்று, இலங்கைக்கான அன்றைய இந்திய உயர் ஸ்தானிகராக இருந்த ஜே.என். திக்ஸிட், தன்னுடைய நூலொன்றில் பதிவு செய்கிறார்.   

குறிப்பாக, பிரதமர் பிரேமதாஸவின் எதிர்ப்பானது, சர்வகட்சி மாநாடு நடந்த காலம் தொட்டு வௌிப்பட்டுக் கொண்டிருந்தது. இதுபற்றிக் கருத்துரைக்கும் ஜே.என். திக்ஸிட், பிரதமர் பிரேமதாஸ வௌிப்படையாகவும் எதுவித தயக்கமும் இன்றி, பௌத்த துறவிகள்,  மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பியின்) சில தரப்புகள் ஆகியனவற்றை, அரசியல் மீளிணக்கப்பாடு தொடர்பில், ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்தன முன்னெடுத்த நடவடிக்கைகளைச் சிதைக்கப் பயன்படுத்தியதாகக் குற்றம் சுமத்துகிறார்.   

ஜே.ஆர்.ஜெயவர்தனவே பல கட்டுப்பாடுகளுடனும் தயக்கத்துடனுமே சில நடவடிக்கைகளை முன்னெடுக்கிறார் என்று தெரிந்துகொண்டுமே, அவர்கள் இந்த எதிர்ப்புகளை முன்னெடுத்தார்கள் என்று ஜே.என். திக்ஸிட் கோடிட்டுக் காட்டுகிறார்.  

ரணசிங்ஹ பிரேமதாஸ, லலித் அத்துலத்முதலி உள்ளிட்டவர்களின் இந்த எதிர்ப்பை, இரண்டுவிதமாக நோக்கலாம். 

முதலாவதாக, ஜே.ஆரின் ‘நரித் தந்திர’ உபாயங்களை, அழுத்தமாகக் கருத்தில் கொள்பவர்கள், பிரேமதாஸ, அத்துலத்முதலி உள்ளிட்டவர்களின் எதிர்ப்பும், ஜே.ஆரின் தந்திரோபாயத்தின் ஒரு பகுதி என்பார்கள்.   

அதாவது, நான் தயக்கத்துடன் ஆதரவளிப்பது போல ஆதரவளிக்க, என்னுடைய அமைச்சர்களான நீங்கள், அதை எதிர்ப்பது போல, எதிர்ப்பை வௌிப்படுத்த, இறுதியில் இந்தியாவிடமும் சர்வதேசத்திடமும், “நான் முயற்சி செய்தேன்; ஆனால், என்னுடைய அமைச்சர்களே இதை எதிர்க்கிறார்கள், பௌத்த துறவிகள் எதிர்க்கிறார்கள், சிங்கள மக்கள் எதிர்க்கிறார்கள் என்று சுட்டிக்காட்டி, நான் விரும்பினாலும், இவர்கள் விரும்பாது, இதை நிறைவேற்ற முடியாது” என்று சொல்ல, அது வாய்ப்பாக இருக்கும் என்ற தந்திரமே அதுவாகும். சர்வகட்சி மாநாட்டிலும் ஜே.ஆர், இதையொத்த தந்திரத்தையே கையாண்டிருந்தார் என்பதையும் நாம் காணலாம்.  

 அரசியல் கட்சிகள் பங்கேற்க வேண்டிய மாநாட்டில், பௌத்த துறவிகள் அழைக்கப்பட்டது ஏன் என்ற கேள்விக்கான பதிலில்தான், இந்தத் தந்திரம் ஒளிந்திருக்கிறது.   

இரண்டாவது வகையில் நோக்கினால், உண்மையில் ஜே.ஆர், சாத்தியமானதொரு தீர்வை அடைய விரும்பியிருக்கலாம். அவர் 80 வயதை எட்டவிருந்தார். ஜனாதிபதியாகத் தன்னுடைய இரண்டாவது பதவிக்காலத்தில் இருந்தார்.அவருடைய மகன், நேரடி அரசியலில் இருக்கவில்லை. அப்படியே வந்தாலும், உடனடியாக அடுத்த தலைவராகக் கூடிய நிலையில் அவர் இருக்கவில்லை. அவரது பாரியார் அரசியல் படோடாபங்களையே விரும்பியிராத ஒருவர் என்று, இன்றுவரைகூட, முதற்பெண்மணி ஒருவருக்கு உதாரணமாகப் பலராலும் புகழப்படுபவர். 

ஆகவே, அவரது குடும்பத்தில், அரசியல் அதிகாரப்பதவிக்கு வர, அல்லது அந்த இடத்தைத் தொடர்ந்து தக்க வைக்கவேண்டிய தேவையுடன் எவரும் இருக்கவில்லை.  

 மேலும், அடுத்த நிலைத் தலைவர்கள் சிலர், தாமாகவே உருவாகி இருந்தார்கள், சிலரை, ஜே.ஆரே உருவாக்கியிருந்தார். ஆகவே, தன்னுடைய அரசியல் வாழ்வு, தன்னுடைய இந்த ஜனாதிபதி பதிவிக்காலம், முடிவடைவதோடு முடிந்துவிடும் என்பது, ஜே.ஆருக்கு சர்வ நிச்சயமாகத் தெரிந்திருக்கும். 

ஆகவே, அதற்குள் இந்தப் பிரச்சினைக்குத் தன்னாலியன்றதொரு தீர்வை அடைவதற்கு, ஜே.ஆர் நேர்மையாகவே முயற்சித்திருக்கலாம் என்று சொல்பவர்களின் கருத்தில், உண்மை இல்லாமலும் இல்லை.   
மறுபுறத்தில், இந்தத் தீர்வு முயற்சிகளை எதிர்த்தவர்களின் நிலையானது, வேறானதாக இருந்தது. அவர்கள், அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் போட்டியில் இருந்தார்கள். அடுத்தடுத்த தலைவர்கள், அடுத்தடுத்த ஜனாதிபதி என்ற போட்டியில், பிரதமர் ரணசிங்ஹ பிரேமதாஸ, தேசியப் பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத்முதலி ஆகியோர் இருந்தனர் என்பது, மிக வௌிப்படையான உண்மை.   

ஆகவே, அதிகாரத்தைத் தக்கவைப்பதற்கு மிக இலகுவான வழியாக, எஸ்.டபிள்யூ.ஆர்.டீ. பண்டாரநாயக்க உருவாக்கிவிட்டுச் சென்றிருந்த, இனவாத அல்லது இனமய்ய வாக்குவங்கி, இலங்கையில் அரசியலை முன்னெடுக்க வேண்டிய நிலையில் அவர்கள் இருந்தார்கள்.

அன்றைய சூழலில், அரசியல்வாழ்வின் அந்திமக் காலத்திலிருந்த ஜே.ஆருக்கு, அந்தத் தேவை இல்லாதிருப்பினும், பிரேமதாஸ, அத்துலத்முதலி ஆகியோருக்கு அது இருந்தது என்ற அரசியல் யதார்த்தம், இங்கு கவனிக்கப்பட வேண்டியது.  

 ஆகவே, திம்புப் பேச்சுவார்த்தையை அவர்கள் எதிர்த்தமைக்கு இது ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம். எதுஎவ்வாறாக இருப்பினும், ஒட்டுமொத்தத்தில் இருதரப்பும், வேண்டாவெறுப்பாகத் திம்புப் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டிருந்தன என்பதுதான் உண்மை.  

திம்புவைச் சென்றடைந்த பிரதிநிதிகள்  

1985 ஜூலை எட்டாம் திகதி, பூட்டானின் தலைநகரான திம்புவில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாக இருந்த நிலையில், திம்பு சென்ற இருதரப்புப் பிரதிநிதிகளும் மத்தியஸ்தம் வகிக்கும் இந்தியப் பிரதிநிதிகளும் கடும் பாதுகாப்புக்கு மத்தியில், திம்புவில் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.   

ஜே.ஆரின் சகோதரர் எச்.டபிள்யூ.ஜெயவர்தன தலைமையில், இலங்கை அரசாங்கம் சார்பில் கலந்துகொண்டிருந்த குழு, கடுமையான பாதுகாப்புடன் ஒரு விடுதியில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். அதேவேளை, தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்களான தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்), தமிழீழ விடுதலைப் புலிகள் (எல்.ரீ.ரீ.ஈ), தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ), ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம் (ஈரொஸ்) ஆகியவற்றையும் அரசியல் கட்சியான தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியையும் (ரீ.யு.எல்.எப்) உள்ளடக்கிய 13 பிரதிநிதிகளைக் கொண்ட தமிழர் தரப்பு, மற்றொரு விடுதியில் கடுமையான பாதுகாப்புடன் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.   

திம்பு நகர் முழுவதும், பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டு இருந்ததோடு, ஊடகவியலாளர்கள், சுற்றுலாப்பயணிகள் கூடப் பேச்சுவார்த்தைகள் இடம்பெறும் காலத்தில், பூட்டானின் தலைநகருக்குள் நுழையத் தடைவிதிக்கப்பட்டிருந்தனர்.  

தமிழ்ப் பிரதிநிதிகள், ஏறத்தாழ பணயக் கைதிகளாக, திம்புவில் தங்க வைக்கப்பட்டிருந்ததாக ரீ.சபாரட்ணம் விவரிக்கிறார். 

விடுதியில் தங்கவைக்கப்பட்டிருந்த அவர்கள், வௌிநபர்களோடு தொடர்பு கொள்வதற்குத் தடைவிதிக்கப்பட்டு  இருந்ததாகவும், சென்னையின் இரகசிய இடமொன்றிலிருந்து, ஒரு தொலைபேசிக்கு மட்டுமே, அவர்கள் தொடர்புகொள்ள அனுமதிக்கப்பட்டதாகவும், அது அவர்களது தலைவர்களோடு, அவர்கள் பேசுவதற்காக, இந்திய உளவுத்துறையான றோவால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும் ரீ.சபாரட்ணம் பதிவு செய்கிறார்.   

பேச்சுவார்த்தை ஆரம்பமாக இருந்த நிலையில், தமது இரண்டாம் மட்ட பிரதிநிதிகளைத் திம்புவுக்கு அனுப்பிவிட்டு, தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்களின் தலைவர்கள், சென்னை திரும்பி இருந்தார்கள். பத்மநாபா, சிறிசபாரட்ணம், பாலகுமார் ஆகியோர் சென்னையில் தங்கியிருந்த நிலையில், அன்ரன் பாலசிங்கத்தை சென்னையில் பேச்சுவார்த்தைகளைக் கவனித்துக் கொள்ளவிட்டுவிட்டு, பிரபாகரன் சேலம் சென்றிருந்ததாகப் பதிவு செய்யும் ரீ.சபாரட்ணம், திம்புப் பேச்சுவார்த்தைகள் நிச்சயம் தோல்வி காணும் என்று பிரபாகரன் கருதியிருந்ததாகவும் அவர், அடுத்தகட்ட இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில், திட்டமிடவே சேலத்தில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் முகாமுக்குச் சென்றிருந்ததாகவும் குறிப்பிடுகிறார்.  

கிட்டத்தட்ட, இந்தியாவின் பலாத்காரத்தினால்தான், இந்தப் பேச்சுவார்த்தை நடந்தது என்றால் அது மிகையல்ல. ஆனால், இதில் கவலைக்குரிய இன்னொரு விடயம் இருந்தது. 

பேச்சுவார்த்தை மேசைக்கு, இருதரப்பையும் அழைத்துவரக் கங்கணங்கட்டிக்கொண்டு செயற்பட்ட இந்தியா, பேச்சுவார்த்தைகளின் நிகழ்ச்சி நிரலில், அதேயளவு அக்கறையைக் காட்டவில்லை என்பது, பேச்சுவார்த்தைகள் தொடங்கியபோது அனைவராலும் உணரப்பட்டது.  

(அடுத்த திங்கட்கிழமை தொடரும்)    

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/திம்புவில்-சந்திப்பு/91-225043

கிருபன்

  • Grand Master
  • கருத்துக்கள உறவுகள்
  • Gender:Male
  • Location:முடிவிலி வளையம்
  • Interests:போஜனம், சயனம்
  • கருத்துக்கள உறவுகள்

Posted November 19, 2018

வரலாற்றின் முக்கியத்துவம்

என்.கே. அஷோக்பரன் / 2018 நவம்பர் 19 திங்கட்கிழமை, மு.ப. 02:37 Comments – 0

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி – 170)

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன என்ற கேள்விக்கான, விடை தேடும் இந்தப் பயணத்தின் முக்கிய கட்டம், திம்பு பேச்சுவார்த்தைகள்.   

சுதந்திர இலங்கையில், குடியுரிமைப் பிரச்சினையில் தொடங்கி, 1956இல் மொழிப் பிரச்சினையாக உருவெடுத்து, தொடர்ந்து தமிழ் மக்கள் பல வன்முறைத் தாக்குதல்களுக்கு இலக்காகி, தமது அரசியல் பலத்தைத் தொலைத்து, இரண்டாந்தரப் பிரஜைகளாக்கப்பட்டதில் இருந்து, 1976இல் தனிநாட்டுக்கான கோரிக்கையை முன்வைத்து, அதன் பின்னர், ஆயுதவழிப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுவரை, தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் மாற்றமடைந்தும், கூர்ப்படைந்தும் வந்திருந்ததை நாம் அவதானிக்கலாம்.   

இதனால்தான், ‘தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன?’ என்ற கேள்விக்கான விடையைத் தேடுவதில், வரலாறை மீட்டுப்பார்ப்பது மிகமுக்கியமானதும் அத்தியாவசியமானதுமான விடயமாகிறது.   

இன்று, இன்றைய நாள்களில், இலங்கை மிகப்பெரும் அரசமைப்பு நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. ‘ஜனநாயகத்தின் கோவில்’ என்று விளிக்கப்படும் நாடாளுமன்றத்தின் இயல்பான இயக்கம், அதன் உறுப்பினர்களில் சிறுபான்மையினரின் வெட்கக்கேடான, அவமானகரமான, ரௌடித்தனமான செயற்பாடுகளால் முடக்கப்பட்டிருக்கிறது.   

நாடாளுமன்றத்தின் முடிவை, ஜனாதிபதி ஏற்க மறுக்கிறார். நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை ஆதரவு இருக்கின்ற கட்சியின் தலைவரை, பிரதமராக ஏற்க ஜனாதிபதி மறுக்கிறார்.   

இந்தப் பெரும் நெருக்கடி நிலையில், நாம் அவதானிக்கக் கூடிய இன்னொரு விடயமும் நடக்கிறது.   
தமிழ் மக்களின், குறிப்பாக வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்களின், பெரும்பான்மை ஆதரவு பெற்ற பிரதிநிதிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், ‘நல்லாட்சி’ அரசாங்கத்துக்கான ஆதரவை, நேரடியாகவும் மறைமுகமாகவும் வழங்கி வருகிறார்கள்.   

ஆட்சிக் கவிழ்ப்பொன்றை அரங்கேற்றி, அரசியல் நெருக்கடி நிலையை உருவாக்கி, சந்தர்ப்பவாத அரசியலினூடாக, உடனடியாகத் தேர்தலொன்றுக்குச் சென்று, ஆட்சியதிகாரத்தைத் தக்கவைக்க முயற்சிக்கும் மஹிந்த ராஜபக்‌ஷ குழுவினருக்கு எதிரான, ஜனநாயகப் போரில், நாடாளுமன்ற ஜனநாயகத்தையும் சட்டவாட்சியையும் காப்பாற்றப் போராடும் கட்சிகளோடு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று கைகோர்த்து நிற்கிறது.   

இது, வரலாற்றில் முன்பு நடந்ததொரு விடயத்தை, எமக்கு நிச்சயம் ஞாபகமூட்டுவதாக அமைகிறது. 1965இல் ஆட்சிப்படியேறிய ‘டட்லி அரசாங்கம்’, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெறுவதற்கு, இலங்கைத் தமிழரசுக் கட்சியினது ஆதரவு தேவைப்பட்டிருந்தது. டட்லி – செல்வா ஒப்பந்தத்தின் அடிப்படையில் தமிழரசுக் கட்சி, டட்லி அரசாங்கத்துக்குத் தனது ஆதரவை வழங்கியிருந்தது.  

 டட்லி-செல்வா ஒப்பந்தம் தோல்வி கண்ட பிறகும் கூட, ஆட்சியிலிருந்து விலகிய தமிழரசுக் கட்சி, வௌியிலிருந்து கொண்டு, டட்லி அரசாங்கத்துக்கு ஆதரவளித்திருந்த வரலாறு, இந்தத் தொடரின் வாசகர்களுக்கு நிச்சயம் பரிச்சயமானதே.  

வரலாறு இன்னொரு வகையில் மீளவும் அரங்கேறுகிறது

 ஜோர்ஜ் சன்ரயானா சொன்னது போல, “வரலாற்றிலிருந்து படிப்பினைகளைப் பெற்றுக் கொள்ளாதவர்கள், வரலாற்றை மீள அரங்கேற்றுவதற்குச் சபிக்கப்பட்டவர்கள் ஆகிறார்கள்”. இம்முறையாயினும், கடந்தகாலப் படிப்பினைகள் எதிர்காலத்தை மாற்றியெழுதுவதாக அமையவேண்டும்.   

தமிழ் மக்களும் தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்களும்

ஒவ்வொரு முறையும், தமிழர்கள் பிரிவினைவாதிகள், இனவாதிகள், இனவெறியர்கள், வன்முறை வழிசென்ற பயங்கரவாதிகள் என்ற பாணியிலான குற்றச்சாட்டுகள் அறியாமை இருளில் சிக்கியுள்ளவர்களால் முன்வைக்கப்படும்.   

அதன்போது, இந்த வரலாற்றை அவர்களுக்குச் சுட்டிக் காட்டுதல் அவசியமாகும். தமிழ் மக்கள், ஆயுத வழியை ஆதரித்தவர்கள் அல்லர். ஜனநாயக விழுமியங்களினூடாகத் தமது உரிமைகளை வென்றெடுக்கவே இரண்டரைத் தசாப்தத்துக்கும் மேலாக, தமிழ் மக்கள் முழுமையான ஆதரவை வழங்கியிருந்தார்கள்.   

தமிழ் மக்கள், தனிநாட்டை விரும்பியவர்கள் அல்ல. மாறாக, ஒன்றுபட்ட இலங்கைக்குள் சுயமரியாதையுடன், சமவுரிமையுடன், தமது தாயகத்தில் கௌரவத்துடன் வாழவே விரும்பினர். அதன் பாலான அரசியலுக்கு, தமிழ் மக்கள் திரண்டெழுந்து வாக்களித்திருந்தனர். இதுதான் வரலாறு, இதுதான் யதார்த்தம்.   

ஆரம்பத்திலேயே தமிழரசுக் கட்சியிலிருந்து விலகி, தனி நாடு கோரிய தலைவர்களைத் தமிழ் மக்கள் நிராகரித்திருந்த வரலாற்றை, நாம் இங்கு மீண்டும் ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும்.   

ஆனால், தொடர்ந்து வந்த இலங்கை அரசாங்கங்கள், அஹிம்சை வழியில் பேச்சுவார்த்தைகள் மூலம் இணக்கப்பாட்டையும் குறைந்தபட்சத் தீர்வுகளையும் வேண்டி நின்ற தமிழ்த் தலைமைகளை, உதாசீனம் செய்ததும், தமிழ் மக்கள் மீது சொல்லொணா வன்முறைவெறியைக் கட்டவிழ்த்து விட்டதும், ஆசியாவின் மிகப் பெரிய இன அழிப்புச் சம்பவங்களிலொன்று 1983 ஜூலையில் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்டதும், வேறு வழியின்றிய நிலையில், தமிழ் மக்களைத் தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்களின்பால் அனுதாபங்கொள்ளச் செய்தது.   

இதற்காகத் தமிழ் மக்கள், தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்களை முழுமையாகவும், எதுவித நிபந்தனைகள் இன்றியும் ஆதரித்தார்கள் என்று சொல்வதற்குமில்லை.   

தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் செயற்பாடுகளால், இலங்கை அரசாங்கம் மட்டுமே பாதிக்கப்பட்டது என்று சொல்வதற்குமில்லை; தமிழ் மக்கள் பாதிக்கப்படவேயில்லை என்று சொல்வதற்குமில்லை. 

தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களால், தமிழ் மக்களும் கணிசமாகக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அவை தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தின் கறுப்புப் பக்கங்கள்.   

இதில் குறிப்பிடத்தக்க ஒரு படுகொலை, திம்புப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாவதற்கு ஏறத்தாழ இரண்டு வாரங்களுக்கு முன்பு, யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றிருந்தது.   

யாழ்ப்பாணத்தின் கல்விப் பாரம்பரியம் என்பது, இன்றுவரை தமிழர்கள் மெச்சிக்கொள்ளும் விடயங்களுள் ஒன்று. அந்தக் கல்விப் பாரம்பரியத்துக்கு வலுச்சேர்த்த, புகழ் பூத்த கல்லூரிகளிலொன்று யாழ். பரி. யோவான் கல்லூரியாகும்.  

1976 முதல் அந்தக் கல்லூரியின் அதிபராக இருந்தவர் சீ.ஈ. ஆனந்தராஜா. 1985 ஜூன் 18ஆம் திகதி, அரசாங்கத்துக்கும் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களுக்கும் இடையில் ஆரம்பிக்கப்படவிருந்த திம்புப் பேச்சுவார்த்தைக்கான முஸ்தீபுகளின் ஒரு பகுதியாக, யுத்த நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தது.   

இந்த யுத்த நிறுத்த காலத்தில், 1985 ஜூன் 26ஆம் திகதி, தனது மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த சீ.ஈ. ஆனந்தராஜா, ஆயுததாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தக் கொலை, விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்டதாகக் குறிப்பிடும் ‘முறிந்த பனை’ நூலின் ஆசிரியர்களான ராஜனி திரணாகம, ராஜன் ஹூல், தயா சோமசுந்தரம், கே. ஸ்ரீ தரன் ஆகியோர், “திரு ஆனந்தராஜாவுக்கு எதிரான பிரதான குற்றச்சாட்டு அற்பமானது. அதாவது, போர் நிறுத்தச் சூழ்நிலையின் நம்பிக்கையில், யாழ்ப்பாணப் பாடசாலைகளுக்கும், இலங்கை இராணுவத்துக்கும் இடையே, ஒரு கிரிக்கட் விளையாட்டுப் போட்டியை, அவர் ஒழுங்குபடுத்தியதாகும்” என்று, தமது நூலில் பதிவு செய்கிறார்கள்.   

ஆகவே, தம்முடைய நிகழ்ச்சி நிரலுக்கு முரணாகச் செயற்படுபவர்கள், அவர்கள் நல்லெண்ணத்தோடு செயற்பட்டாலும் கூட, அவர்களைக் கொன்றொழிக்க, தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்கள் தயங்கவில்லை என்ற யதார்த்தத்தையும் நாம் கருத்தில் கொள்ளவேண்டும்.   

இத்தகைய கொலைகள் பற்றிக் கருத்துரைக்கும் ‘முறிந்த பனை’ நூலின் ஆசிரியர்கள், “ஆயுதபாணிகளால் தாம் முற்றுகையிடப்படுவோம்  என்ற உணர்வால், யாழ்ப்பாண மக்கள், எல்லா வதந்திகளையும் மறைமுகக் கூற்றுகளையும் எவ்வித விசாரணையுமின்றித் தமிழ் இலட்சியத்தை முன் தள்ளுகிறது எனும் பேரில் ஏற்றுக்கொள்கிறார்கள். விடயங்கள் ஆபத்தான வகையில், பிழையான திசைக்குச் சென்றுவிட்டதாகச் சிறுதொகையினரே உணர்ந்தனர். ஆனால் அநேகர், பெடியன்கள் தெரிந்துகொண்டே சிறு தவறுகள் செய்தாலும் அவர்கள் சரியான வழிக்குத் திரும்பி விடுவார்கள் என்று கருதினர்” என்று பதிவு செய்கிறார்கள்.   

தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்களுக்கான தமிழ் மக்களின் ஆதரவு என்பது, இலங்கை அரசாங்கத்தாலும், அரசபடைகளாலும் தமிழ் மக்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்ற சூழல் உருவானபோது தான், வலுத்தது என்பதையும் இங்கு உற்று அவதானிக்க வேண்டும்.   

‘கறுப்பு ஜூலை’ இன அழிப்பைத் தொடர்ந்து, ஜனநாயகத் தமிழ்த் தலைமைகள் இந்தியாவுக்குச் சென்று, தஞ்சம் புகுந்துவிட்டிருந்த நிலையில், தமது பாதுகாப்புக்குப் ‘பெடியங்களை’ நம்ப வேண்டிய நிர்ப்பந்தத்தில் தமிழ் மக்கள் இருந்தார்கள்.   

தமிழ்த் தரப்பு, ஜனநாயக அரசியல் தலைமை, ஆயுதத் தலைமை என்ற இருபிரிவாக மட்டும் இருக்கவில்லை. ஆயுதத் தலைமை என்பது, பல தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்களிடையேயான போட்டியாக மாறியிருந்தது.   

தமிழ்த் தரப்புக்குள்ளான இந்தப் பிரிவினையை, ஜே.ஆர் அரசாங்கம் தமக்குச் சாதகமானதாகக் கருதினர். திம்புப் பேச்சுவார்த்தை அல்ல; எந்தப் பேச்சுவார்த்தை வெற்றிபெற வேண்டுமானாலும், முதலில் தமிழ்த் தலைமைகள் தமக்குள் இணக்கமொன்றுக்குள் வரவேண்டிய சூழல் இருந்தது.   

தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்களுக்குள் இருந்த பகைமை, அந்த இணக்கத்துக்கு வாய்ப்பளிக்காது என்று ஜே.ஆர் அரசாங்கம் எண்ணி இருக்கக்கூடும். 

ஆனால், திம்புப் பேச்சுவார்த்தையில் நடந்த விடயம், ஜே.ஆர் அரசாங்கத்துக்கு ஆச்சரியமூட்டியதாக, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) இந்நாள் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் குறிப்பிட்டதாக, ரீ.சபாரட்ணம் பதிவு செய்கிறார்.   

திம்புப் பேச்சு வார்த்தைகள்- முதல்நாள்

திம்புப் பேச்சு வார்த்தைகள், 1985 ஜூலை எட்டாம் திகதி, பூட்டான் தலைநகர் திம்புவில் அமைந்துள்ள அரச மாளிகையில் ஆரம்பமானது.   

தமிழர் தரப்பில், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி சார்பில் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம், எம். சிவசிதம்பரம், இராஜவரோதயம் சம்பந்தன் ஆகிய மூவரும், ஈ.பி.ஆர்.எல்.எப் இயக்கம் சார்பில் வரதராஜபெருமாள், கேதீஸ்வரன் ஆகிய இருவரும், டெலோ இயக்கம் சார்பில் சார்ள்ஸ் அன்ரனி தாஸ், மோகன் ஆகிய இருவரும், ஈரோஸ் இயக்கம் சார்பில் சங்கர் ராஜு, ஈ. இரத்னசபாபதி ஆகிய இருவரும், புளொட் இயக்கம் சார்பில் வாசுதேவா, த. சித்தார்த்தன் ஆகிய இருவரும், எல்.ரீ.ரீ.ஈ இயக்கம் சார்பில் லோரன்ஸ் திலகர், சிவகுமாரன் ஆகிய இருவரும் பங்குபற்றி இருந்தனர்.   

image_3fafe918b0.jpg

மறுபுறத்தில், இலங்கை அரசாங்கம் சார்பில் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனவின் சகோதரரும் இலங்கையில் புகழ்பூத்த வழக்குரைஞர்களில் ஒருவருமான எச்.டபிள்யூ. ஜெயவர்தன தலைமையில் ஒரு வழக்குரைஞர் பட்டாளம் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டிருந்தது. அந்த வழக்குரைஞர் பட்டாளத்தில், இலங்கையின் குறிப்பிடத்தக்க வழக்குரைஞர்களாக இருந்த எச்.எல்.டி. சில்வா, எல்.சீ. செனவிரத்ன, மார்க் பெணான்டோ, எஸ்.எல். குணசேகர ஆகியோர் பங்குபற்றி இருந்தனர்.  

 கிட்டத்தட்ட மிக முக்கியத்துவம் வாய்ந்த வழக்கில் ஆஜராகும் வழக்கறிஞர் குழுவைப்போல, திம்புப் பேச்சுவார்த்தையில் இலங்கை அரசாங்கம் சார்பில் கலந்துகொண்ட குழு அமைந்ததென்று சொன்னால் அது மிகையல்ல.  

 முதல்நாள் நிகழ்வு, சம்பிரதாயபூர்வ வரவேற்பு நிகழ்வாகவே அமைந்தது. பூட்டானின் அன்றைய வௌிவிவகார அமைச்சர் தாவா ஸ்செரிங், பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள வந்த தரப்பினரை வரவேற்றுப் பேசினார்.   

அதில், அரசியல் பிரச்சினைகள், அமைதி வழியில் தீர்க்கப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தைச் சுட்டிக்காட்டிப் பேசிய அவர், பேச்சுவார்த்தைகள் வெற்றி பெறத் தன்னுடைய வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்.   

இலங்கை அரசாங்கத்தின் சார்பில் பேசிய எச்.டபிள்யூ. ஜெயவர்தன, தன்னுடைய உரையில், பேச்சுவார்த்தைகளுக்கு ஏற்பாடு செய்த இந்தியாவுக்கும் பேச்சுவார்த்தைகளை நடத்தச் சம்மதித்த பூட்டானுக்கும் நன்றி தெரிவித்தார்.   

தமிழ்த் தரப்பு சார்பில், டெலோ இயக்கத்தின் சார்ள்ஸ் அன்ரனி தாஸ் நன்றியுரை ஆற்றியிருந்தார். முதல் நாள் நிகழ்வு, பூட்டானின் வௌிவிவகார அமைச்சர் வழங்கிய விருந்துபசாரத்தோடு நிறைவுற்றது. 
மறுநாள், 1985 ஜூலை ஒன்பதாம் திகதி, முதற்சுற்றுப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகின.   

(அடுத்த திங்கட்கிழமை தொடரும்)  

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வரலாற்றின்-முக்கியத்துவம்/91-225411

கிருபன்

  • Grand Master
  • கருத்துக்கள உறவுகள்
  • Gender:Male
  • Location:முடிவிலி வளையம்
  • Interests:போஜனம், சயனம்
  • கருத்துக்கள உறவுகள்

Posted November 26, 2018

திம்புப் பேச்சுவார்த்தை

என்.கே. அஷோக்பரன் / 2018 நவம்பர் 26 திங்கட்கிழமை, மு.ப. 12:15 Comments – 0

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி – 171)

பேச்சுவார்த்தை ஆரம்பம்  

1956இல், தனிச்சிங்களச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னரிலிருந்து, இலங்கை அரசாங்கம், தமிழ்த் தரப்பினரிடையே பல்வேறு பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றிருக்கின்றன; ஒப்பந்தங்களும் கைச்சாத்தாகி இருக்கின்றன.ஆனால், திம்புப் பேச்சுவார்த்தைகள் என்பது, இவை எல்லாவற்றையும் விடச் சற்றே வேறுபட்டது.   

இதுவரை காலமும் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள், ஜனநாயக அரசியல் கட்சிகளிடையே, அரசாங்கத்துக்கும் தமிழரசுக் கட்சி (பின்னர், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி) ஆகியவற்றுக்கு இடையேதான் இடம்பெற்றிருக்கிறது. அதுவும் நேரடியாக, எதுவித மூன்றாந்தரப்பு மத்தியஸ்தமுமின்றி.   

ஆனால், திம்புப் பேச்சுவார்த்தைகளைப் பொறுத்தவரையில், முதன்முறையாக இலங்கை அரசாங்கத்தரப்புடன், தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்கள் பங்குபற்றும் பேச்சுவார்த்தையாக அமைந்தது. 

அத்துடன், மூன்றாம் தரப்பான இந்தியாவின் ஏற்பாட்டின் பேரில், அவர்களுடைய மத்தியஸ்தத்துடன், இன்னொரு மூன்றாம் தரப்பான பூட்டானில் இடம்பெற்றது. ஆகவே, வௌித்தோற்றத்தில் இது மிகமுக்கியத்துவம் வாய்ந்த ஒரு பேச்சுவார்த்தையாகிறது.   

ஆனால், இந்தப் பேச்சுவார்த்தைகளுக்கு, அதற்குரிய முக்கியத்துவத்தை இதன் முக்கிய இருதரப்புகளும் வழங்கினவா என்றால், அது ஐயத்துக்குரியதே. 

ஜே.ஆர். ஜெயவர்தன தலைமையிலான இலங்கை அரசாங்கமாகட்டும், மறுபுறத்தில், தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்களாகட்டும்,  தமது சுயவிருப்பத்தின் பேரிலன்றி, தெற்காசியப் பிராந்தியத்தின் ‘பெரியண்ணா’ ஆன, இந்தியாவின் அழுத்தத்தின் பேரிலேயே இதில் பங்குபற்றியிருந்தன. போரொன்றின் மூலமான வெற்றியிலேயே, இருதரப்பின் எண்ணமும் குறியாக இருந்தது.   

தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியைப் பொறுத்தவரையில், ஜே.ஆர்.ஜெயவர்தன அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகள் மீதான நம்பிக்கையை அது, முற்றாக இழந்துவிட்டிருந்தது. மறுபுறத்தில், தமிழர் அரசியல் பரப்பில், அவர்களுடைய செல்வாக்குக் குறைந்து வருவதையும் தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்களின் செல்வாக்கு வளர்ந்து வருவதையும் அவர்கள் நன்கு அறிந்தும், உணர்ந்தும் இருந்தனர். ஆகவே விரும்பியோ, விரும்பாமலோ தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்களை அரவணைத்தே, தமது அரசியலை முன்னெடுக்க வேண்டிய நிர்ப்பந்தம், அவர்களுக்கு இருந்தது. அவர்களுடைய ஒரே நம்பிக்கையாக, இந்தியா மட்டுமே இருந்தது.   

ஆகவே, பேச்சுவார்த்தைகள் மீதான நம்பிக்கை என்பதை விட, அதைவிட வேறு அரசியல் வழியில்லை என்ற காரணத்தாலும், இந்தியா மீது கொண்டுள்ள, நம்பிக்கையின் காரணத்தாலும் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி, திம்புப் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்டிருந்தது.   

ஓர் எளிய உதாரணத்தைச் சொல்வதானால், ஆசிரியரின் வற்புறுத்தலின் காரணத்தால் மட்டும், ஒரு நிகழ்ச்சியில் பங்கெடுத்துக் கொண்ட மாணவர்களைப் போலவே, இருதரப்புகளும் இந்தப் பேச்சுவார்த்தைகளில் பங்குபற்றியிருந்தன எனலாம்.  

 முதல்நாள் சம்பிரதாயபூர்வ வரவேற்பு நிகழ்வைத் தொடர்ந்து, இரண்டாவது நாள், 1985 ஜூலை ஒன்பதாம் திகதி, திம்புப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமானபோதே இருதரப்பும், குறிப்பான தமிழ்த்தரப்பு, இந்தப் பேச்சுவார்த்தைகள் மீது, நம்பிக்கையற்றிருந்த நிலை திட்டவட்டமாக வௌிப்பட்டது.  

தமிழர் தரப்பின் அதிருப்தி  

1985 ஜூலை ஒன்பதாம் திகதி, ஒரு நீண்ட மேசையின் இருபுறத்திலும் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளும் வகையில், இலங்கை அரசாங்கத் தரப்பும், தமிழர் தரப்பும் அமர்ந்திருந்தனர். தமிழர் தரப்புச் சார்பாகப் பேச்சுவார்த்தைகளை அமிர்தலிங்கம் ஆரம்பித்து வைத்தார்.  

 இலங்கை அரசாங்கம் சார்பில், பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்டுள்ள இந்தக் குழு தொடர்பிலான தமது அதிருப்தியையும் அரசாங்கத்தில் எதுவித பதவியும் வகிக்காதவர்கள் பேச்சுவார்த்தைக்கு அனுப்பப்பட்டுள்ளமை தொடர்பிலும், அதன் பின்னால் இந்தப் பேச்சுவார்த்தைக்கு ஜே.ஆர் அரசாங்கம் வழங்கும் முக்கியத்துவம் தொடர்பிலும் தமிழ்த்தரப்பு, தனது ஐயத்தையும் கேள்வியையும் பதிவு செய்தது. இது தனது இராணுவத்தைப் பலப்படுத்துவதற்காக ஜே.ஆர். நேரத்தைப் பெற்றுக்கொள்வதற்காகக் கையாளும் தந்திரோபாயம் என்பதையும் தமிழ்த் தரப்பு, கோடிட்டுக் காட்டியது என்று, தனது நூலொன்றில் ரீ.சபாரட்ணம் குறிப்பிடுகிறார்.   

ஏற்கெனவே, ஓராண்டுக்கும் மேலாக நடந்த சர்வகட்சி மாநாடு, எதுவித முடிவுமின்றித் தோல்வியில் முடிவடைந்த விரக்தியிலிருந்த அமிர்தலிங்கம், அதைச் சுட்டிக்காட்டி, “இது புதிய தந்திரோபாயம் அல்ல; கடந்த வருடமும் அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை ஒரு வருடத்துக்கு இழுத்தடித்தது; அதையே இந்த வருடமும் செய்ய முயல்கிறது” என்றார்.  

மேலும், அரசாங்கத்தரப்பில் பங்குபற்றியுள்ள குழுவில், இலங்கை உளவுத்துறையைச் சார்ந்தவர்கள் இருந்தமை தொடர்பில், தமது எதிர்ப்பையும் தமிழர் தரப்புப் பதிவு செய்துகொண்டது.  

அரசாங்கம் சார்பில், கலந்துகொண்டுள்ள பேச்சுவார்த்தைக் குழு தொடர்பிலான ஐயத்தையும் நம்பிக்கையீனத்தையும் தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்கள், ஏற்கெனவே இந்தியாவிடம் பதிவு செய்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.   

தமிழர் தரப்பின் இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த இலங்கைப் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவரும், ஜே.ஆரின் சகோதரரும், பிரபலமான வழக்குரைஞருமான எச்.டபிள்யூ.ஜெயவர்தன, “இலங்கை இனப்பிரச்சினைக்கான இறுதித் தீர்வொன்றை எட்டுவதற்காக, மிகத் தீவிரமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்காக, இலங்கை அரசாங்கம் வழங்கிய முழு அதிகாரத்துடன் வந்திருக்கிறோம்” எனக் கூறியிருந்தார். 

மேலும், பேச்சுவார்த்தைகள் சாதகமாக அமைந்தால், இறுதி உடன்படிக்கையொன்றைச் செய்வதற்கு, ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன, திம்புவுக்கு வருவதற்குத் தயாராக இருப்பதாகவும், அவர் தெரிவித்தார்.   

ஆனால், அரசாங்கத்தரப்பு அதோடு நிறுத்திக்கொள்ளவில்லை. பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்வதற்கான தம்முடைய தகுதி, அதிகாரம் பற்றிக் கேள்வி எழுப்பிய தமிழர் தரப்பின் தகுதி, அதிகாரம் பற்றி, எச்.டபிள்யூ.ஜெயவர்தன மறுகேள்வி எழுப்பினார்.   

அரசாங்கத் தரப்பின் ஆட்சேபம்  

தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்த, தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்களுக்கு உள்ள தகுதி தொடர்பில் எச்.டபிள்யூ.ஜெயவர்தன கேள்வியெழுப்பினார். “நீங்கள் யாரைப் பிரதிநிதித்துவப்படுத்து–கிறீர்கள், நீங்கள் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை” என்று குறிப்பிட்ட எச்.டபிள்யூ.ஜெயவர்தன, “தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்கள், தம்மைத் தாமே பிரதிநிதித்துவப்படுத்துகி–ன்றனவே அன்றி, தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. இலங்கையின் வடக்கு, கிழக்கிலுள்ள தமிழர்களையும் அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. இலங்கையின் ஏனைய பாகங்களில் வாழும் தமிழர்களையும் அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. அவர்கள் முஸ்லிம்களையும் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. இலங்கை அரசாங்கத் தரப்பிலான நாங்கள்தான், தமிழர்களையும் சேர்த்தே பிரதிநிதித்துவம் செய்கிறோம்” என்று எச்.டபிள்யூ.ஜெயவர்தன குறிப்பிட்டார்.   

பேச்சுவார்த்தையின் ஆரம்பமே, ஒரு வழக்கின் ஆரம்பத்தைப்போல அமைந்திருந்தது. வழக்குரைஞர்கள், அதுவும் இலங்கையின் பிரபல வழங்குரைஞர்களான எச்.டபிள்யூ.ஜெயவர்தன, எச்.எல்.டி.சில்வா, எல்.சீ.செனவிரத்ன, மார்க் பெர்னாண்டோ, எஸ்.எல்.குணசேகர ஆகியோர் நிறைந்த இடத்தில், அவ்வாறு நடக்காதிருந்தால் தான், அது ஆச்சரியம்.  

ஒரு வழக்கின் ஆரம்பத்தில், பூர்வாங்க ஆட்சேபனைகளை முன்வைப்பது போலவே, “தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்கள், தமிழ் மக்களின் பிரதிநிதிகள் அல்ல” என்ற ஆட்சேபத்தை, எச்.டபிள்யூ.ஜெயவர்தன முன்வைத்தார்.   

அதாவது, அவரைப் பொறுத்தவரையில், இது அரசாங்கத்துக்கும் தமிழ் மக்களின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை அல்ல; மாறாக அரசாங்கத்துக்கும் – ஆயுத இயக்கங்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை. இதில், இலங்கையின் தமிழ், சிங்கள, முஸ்லிம் என அனைத்து மக்களையும் அரசாங்கமே பிரதிநிதித்துவம் செய்கிறது, அந்த அரசாங்கம், ஆயுதம் ஏந்திய ,‘பயங்கரவாதிகளுடன்’ சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறது என்பதே, எச்.டபிள்யூ.ஜெயவர்தனவின் ஆட்சேபனையின் உள்ளர்த்தம். இதில், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியை, இலாவகமாக அவர் தவிர்த்துக் கொண்டார்.  

சிலர், இதற்கு இன்னொரு தந்திரோபாய காரணம் இருக்கலாம் என்றும் கருத்துரைக்கின்றனர். தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்கும், தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்களுக்கும் இடையில், நிறைந்த முரண்பாடுகள் உள்ளன என்பது, அனைவரும் அறிந்ததே. ஆகவே, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியையும் தமிழ் இளைஞர் ஆயுத இயங்கங்களையும் பிரித்தாள முடியுமென்றால், அது பேச்சுவார்த்தைகளில் ஒன்றாக, ஒற்றுமையுடன் களம் கண்டுள்ள தமிழர் தரப்பைப் பிரித்து, அதன் மூலம் அதன் வலுவைக் குறைக்கமுடியும்.   

ஆகவே, தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்ய, தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்களுக்குத் தகுதியில்லை என்பதன் மூலம், மறுபுறத்தில், அந்தத் தகுதி தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்கு இருக்கிறது என்று சொல்லாமற் சொன்னால், அது அவர்களிடையேயான முரண்பாட்டை இன்னும் அதிகரிக்கக்கூடும் என்று, கருதியிருக்கலாம் என்றும் சிலர் கருத்துரைக்கிறார்கள்.  

தமிழர் தரப்பின் விசனம்  

தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு, தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்களுக்கு உள்ள தகுதி பற்றி, எச்.டபிள்யூ.ஜெயவர்தன எழுப்பிய கேள்வி, தமிழர் தரப்பை விசனமடையச் செய்ததுடன், கடும் அதிருப்திக்கும் உள்ளாக்கியது.   

இது தொடர்பிலான வாதப்பிரதிவாதங்களும் இடம்பெற்றன. இலங்கை அரசாங்கத் தரப்பு, தாமே தமிழர்களின் பிரதிநிதி என்று கூறிக்கொண்டால், அவர்கள் ஏன் எம்மோடு பேச்சுவார்த்தை நடத்தவேண்டும், நீங்களே உங்களோடு பேச்சுவார்த்தை நடத்தி, பிரச்சினைக்குத் தீர்வு காணுங்கள் என்று தமிழர் தரப்பிலிருந்து ஒருவர் விசனத்துடன் குறிப்பிட்டார்.   

அரசாங்கத் தரப்பு, தம்மை தமிழர்களின் பிரதிநிதிகள் என்று ஏற்றுக்கொள்ளாவிட்டால், தாம் இந்தப் பேச்சுவார்த்தைகளைத் தொடரத் தயாரில்லை என்று தமிழர் தரப்புக் குறிப்பிட்டதோடு, சிறு ஒத்திவைப்பொன்றையும் கோரியது. அதன்படி, பேச்சுவார்த்தைகள் சிறிது நேரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டன.   

தமிழ்த் தரப்பின் கோரிக்கையில், ஒரு நியாயம் இருக்கிறது. இலங்கையின் இனப்பிரச்சினைக்கான, இறுதித் தீர்வொன்றை எட்டுவதற்கான பேச்சுவார்த்தை இதுவென்றால், அந்தப் பேச்சுவார்த்தைகள் இலங்கை அரசாங்கத்துக்கும், தமிழ் மக்களின் பிரதிநிதிகளுக்கும் இடையிலேயே இடம்பெற வேண்டும். அரசாங்கத்தரப்பு, மறுதரப்பைத் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் அல்ல என்று குறிப்பிட்டால், அந்தப் பேச்சுவார்த்தையின் பயன்தான் என்ன?   

மேலும், இந்த வாதம் இந்தப் பேச்சுவார்த்தைகளிலிருந்த இன்னொரு மிகப்பெரும் குறையையும் கோடிட்டுக்காட்டி நிற்கிறது. அதாவது, பேச்சுவார்த்தைகளுக்கு இருதரப்புகளையும் அழைத்துவருவதற்கு இந்தியா காட்டிய முனைப்பை, பேச்சுவார்த்தைகளின் உள்ளடக்கத்தையும் நிழ்ச்சி நிரலையும் தயாரிப்பதில், இந்தியா காட்டவில்லை என்பதன் விளைவுகள், ஆரம்பத்திலேயே வௌிப்படத் தொடங்கியிருந்தன.  

பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்ட நேரத்தில், தமிழர் தரப்புத் தனியாகச் சந்திப்பொன்றை நடத்தியது. இந்தச் சந்திப்பில், பேச்சுவார்த்தைகளை முற்கொண்டு செல்வது தொடர்பிலான, தம்முடைய தந்திரோபாயத்தை அவர்கள் திட்டமிட்டுக் கொண்டனர். 

தமிழர் தரப்புக்குள் இருந்த ஜனநாயகத் தலைமைகளுக்கும் ஆயுதத் தலைமைகளுக்கும் இடையிலான பிளவொன்றை ஏற்படுத்த, இலங்கை அரசாங்கத் தரப்பு முயலும் தந்திரோபாயத்தை உணர்ந்து கொண்ட அவர்கள், இனித் தம்மை ஒன்றிணைத்து, ‘தமிழ் மக்களின் பிரதிநிதிகள்’ என்றே அழைத்துக் கொள்வதாகத் தீர்மானித்தார்கள். 

சிறு ஒத்திவைப்பைத் தொடர்ந்து, மீண்டும் பேச்சுவார்த்தைகள் ஆரம்பித்த போது, எச்.டபிள்யூ.ஜெயவர்தன, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் தொடர்பான தம்முடைய நிலைப்பாட்டை விளங்கப்படுத்தினார்.  

(அடுத்த திங்கட்கிழமை தொடரும்)    

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/திம்புப்-பேச்சுவார்த்தை/91-225720

கிருபன்

  • Grand Master
  • கருத்துக்கள உறவுகள்
  • Gender:Male
  • Location:முடிவிலி வளையம்
  • Interests:போஜனம், சயனம்
  • கருத்துக்கள உறவுகள்

Posted December 3, 2018

திம்புப் பேச்சுவார்த்தை – 02

என்.கே. அஷோக்பரன் / 2018 டிசெம்பர் 03 திங்கட்கிழமை, மு.ப. 11:55 Comments – 0

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி – 172)

முதல்நாள் அமர்வுகள்  

திம்புப் பேச்சுவார்த்தையின் முதல்நாள் அமர்வுகள், பெரும் வாதப்பிரதிவாதத்துடனேயே ஆரம்பித்திருந்தது. “தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்கள், தமிழ் மக்களின் பிரதிநிதிகள் அல்ல” என்ற, அரசாங்கத்தரப்புக் குழுவின் தலைவரும், ஜனாதிபதி ஜே.ஆரின் சகோதரருமான எச்.டபிள்யூ.ஜெயவர்தன சொன்ன கருத்து, திம்புப் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டிருந்த தமிழ்த் தரப்பை, பலத்த விசனத்துக்கும் அதிருப்திக்கும் ஆளாக்கியிருந்த நிலையில், தாம், தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்பதை, அரசாங்கத்தரப்பு ஏற்றுக்கொள்ளாவிட்டால், தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபடப்போவதில்லை என்று, தமிழ்த்தரப்புக் கூறியிருந்தது.  

 இதன் பின்னர், சிறிது நேர ஒத்திவைப்புக்குப் பின்னர், மீண்டும் பேச்சுவார்த்தை அமர்வுகள் ஆரம்பமானபோது, அரசாங்கத்தரப்பு நிலைப்பாட்டை எச்.டபிள்யூ.ஜெயவர்தன விளங்கப்படுத்தினார். 

இதன்போது, இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டுள்ள இருதரப்பும் இனப்பிரச்சினைக்கான ஒரு தீர்வைக் காணும் நோக்கத்தையே கொண்டிருக்கின்றன என்றும், தாம் இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வதே, இறுதித் தீர்வு காண்பதற்காக, தமிழர் தரப்பு இங்கு போதுமானளவு பிரதிநிதித்துவப் படுத்தப்பட்டுள்ளது என்பதை உணர்த்தி நிற்பதாகவும் தெரிவித்தார்.   

அதாவது, திம்புப் பேச்சுவார்த்தையில், “தமிழர் தரப்பு, போதுமானளவு பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டுள்ளது” என்று, அவர் குறிப்பிட்டதன் வாயிலாக, இந்தப் பேச்சுவார்த்தையில், தமிழர் தரப்பில் கலந்துகொண்டவர்கள், தமிழர்களின் ஏக பிரதிநிதிகள் அல்ல என்பதையும் மறைமுகமாக உணர்த்தியிருந்தார்.

இதைவிடவும், ஏலவே “அரசாங்கத் தரப்பானது தமிழர்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது” என்ற கருத்தை அவர் தெரிவித்திருந்த நிலையில், அந்தக் கருத்தையும் இந்த விளக்கம் மறுதலிக்கவில்லை. தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்களைத் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று வௌிப்படையாக ஏற்றுக்கொள்ளாமலும், அதேவேளை முன்னர் மறுத்ததுபோல, வௌிப்படையாக மறுக்காமலும் தன்னுடைய விளக்கத்தை எச்.டபிள்யூ.ஜெயவர்தன வடிவமைத்திருந்தார் என்பது இங்கு கவனிக்கத்தக்கது.  

யுத்தநிறுத்த உடன்படிக்கை மீறல்  

ஆனால், இத்தோடு ஆரம்பநாள் வாதப்பிரதிவாதங்கள் முடிந்துவிடவில்லை. இந்தியாவின் முயற்சியால், 1985 ஜூன் 18ஆம் திகதி முதல், தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்களும் இலங்கை அரசாங்கமும் யுத்த நிறுத்தமொன்றை அறிவித்திருந்தன. 

இந்த யுத்த நிறுத்தக் காலத்தில், இலங்கை அரசாங்கம், குறித்த யுத்த நிறுத்தத்தை மீறியதை தமிழர் தரப்புச் சுட்டிக்காட்டியதுடன், அது தொடர்பிலான இணைந்த அறிக்கையொன்றையும் தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்கள், திம்புப் பேச்சுவார்த்தையின் போது சமர்ப்பித்தன.   

இந்தியாவின் செல்வாக்கின்படி, இருதரப்பும் இணங்கிய யுத்த நிறுத்தத்தை, இலங்கை அரசாங்கம் மீறிவிட்டது என்று குறிப்பிட்ட அந்த அறிக்கை, இலங்கையின் ஆயுதப் படைகள், தமிழ்ப் பொதுமக்களுக்கு எதிரான நடவடிக்கைகளையும் அவர்களைச் சினமூட்டித் தூண்டிவிடும் நடவடிக்கைகளையும் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றன என்ற கடும் குற்றச்சாட்டையும் முன்வைத்ததுடன், அத்தகைய சம்பவங்கள் பலவற்றையும் பட்டியலிட்டது.   

அந்தப் பட்டியலில், முதலாவதாக மீனவர்களுக்கெதிரான நடவடிக்கைகளைச் சுட்டிக்காட்டிய தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்கள், இலங்கை கடற்படை தொடர்ந்தும் வல்வெட்டித்துறை, தொண்டமானாறு, பருத்தித்துறை, தாளையடி, முல்லைத்தீவு ஆகிய கரையோரப் பகுதிகளைச் சார்ந்த மீனவர்களைத் துன்புறுத்தி, இன்னலுக்குள்ளாக்கி வருவதாகக்  குற்றஞ்சாட்டினர்.   

தொடர்ந்தும், 1985 ஜூன் 18 முதல் ஜூலை எட்டு என்று, குறுகிய யுத்த நிறுத்தக் காலப்பகுதிக்குள், ஆயுதந்தாங்கியிராத ஆயுதக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பொதுமக்கள், அரசபடைகளால் கொலைசெய்யப்பட்டதாகக் குற்றஞ்சாட்டிய தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்கள், மன்னாரில் நான்கு இளைஞர்கள் இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டு, அவர்களுடைய உடல்கள் எரிக்கப்பட்டமை, சுன்னாகம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த இளைஞர்கள் இருவர் மீது இராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் அவரது உடல் எரிக்கப்பட்டமை, மூதூரில் இரண்டு இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்டு அவர்களுடைய உடல்கள் இராணுவ முகாமுக்கு உள்ளேயே வைத்து எரிக்கப்பட்டமை, மண்டூரில் நான்கு இளைஞர்கள் பாதுகாப்புப் படைகளால் கைது செய்யப்பட்டமை, மட்டக்களப்பு தாந்தாமலைப் பகுதியில் ட்ரக்டர் வாகனத்தில் பயணித்துக்கொண்டிருந்த விவசாயிகள், பொலிஸாரால் தாக்கப்பட்டதுடன், அவர்களது ட்ரக்டர் வாகனமும் சேதப்படுத்தப்பட்டமை, கரடியனாறு பகுதியிலமைந்துள்ள தமிழ்க்கிராமத்தில் ஏறத்தாழ 50 வீடுகளுக்கு எரியூட்டியழித்தமை, மட்டக்களப்பு, கிரான் பகுதியில் தமிழ்ப் பொதுமக்கள் மீது ஆயுதப்படைகளால் நடத்தப்பட்ட தாக்குதல், ஆனையிறவிலிருந்து கிளிநொச்சி பொலிஸ் நிலையம் நோக்கிப் பயணித்த பொலிஸார், பொதுமக்களை அச்சுறுத்த, திறந்த துப்பாக்கிச்சூடு நடத்தியமை, மட்டக்களப்பு கும்புறுமூலைச் சந்தியிலமைந்துள்ள அரச அச்சகக் கட்டடமொன்று, இராணுவ முகாமாக மாற்றப்படுவதற்காக 16 ட்ரக்குகளில் பொதுமக்கள், வலுக்கட்டாயமாக இராணுவத்தால் இழுத்துச்செல்லப்பட்டமை ஆகிய சம்பவங்களைச் சுட்டிக் காட்டினர்.   
மேலும், வடக்கு, கிழக்கு பகுதிகள் பாரிய இராணுவ ஆதிக்கத்துக்குள் தொடர்வதைத் தமது அறிக்கையில் சுட்டிக்காட்டிய தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்கள், தமிழ் மக்கள் மீது அச்சுறுத்தல், பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விடும் முகமாக, ரோந்துப்பணிகள், வீதித்தடைகள், தேடுதல் வேட்டைகள், கைதுகள் ஆகிய நடவடிக்கைகளை அரசுப்படைகள் முன்னெடுப்பதாகவும், ‘தடைசெய்யப்பட்ட பகுதி’ என்ற தடை நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பின்னரும், தடை தொடர்வதாகவும் சுட்டிக்காட்டினர்.   

மேலும், பெருந்தோட்டப்பகுதிகளிலும் தமிழ் மக்கள் மீது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளைச் சுட்டிக்காட்டிய தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள், தமிழ் மக்கள் அப்பகுதிகளுக்குச் செல்லவோ, அங்கிருந்து வௌியேறவோ தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், இது அவர்களை நாட்டின் ஏனைய பகுதியிலிருந்து முற்றாகத் துண்டிக்கும் நடவடிக்கை என்றும், ஏற்கெனவே இந்தப் பகுதியில் கைதுசெய்யப்பட்ட தமிழ் இளைஞர்கள், இன்றுவரை விடுவிக்கப்படவில்லை என்பதையும் தமது அறிக்கையில் சுட்டிக்காட்டினர்.   

மேலும், தமிழர் பிரதேசங்களில் ஊரடங்கு அமுல்படுத்தப்படுவதையும் தமிழ் மக்கள் விசாரணையின்றித் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையையும் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள், தமது அறிக்கையில் கோடிட்டுக் காட்டினர். 

தமது அறிக்கையின் இறுதியில், இலங்கை அரசாங்கமானது யுத்த நிறுத்த உடன்படிக்கையை மீறிவிட்டது என்று, வௌிப்படையாகக் குற்றம் சுமத்திய தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்கள், இருதரப்பு யுத்த நிறுத்த உடன்படிக்கையை மதித்து, இலங்கை அரசாங்கமானது உடனடியாக யுத்த நிறுத்த உடன்படிக்கையை முழுமையாக அமுல்படுத்த வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்தன.   

ஊரடங்கு நீக்கமும் தடுத்து வைக்கப்பட்டுள்ளோர் விடுதலையும்  

மறுபுறத்தில், யுத்தநிறுத்த உடன்படிக்கை மீறல் தொடர்பாக அரசாங்கத் தரப்பு, தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்கள் மீதும் அவற்றின் நடவடிக்கைகள் மீதும் குற்றம் சுமத்தியது. ஆயினும் தமிழர் பகுதிகளின் ஊரடங்கு, கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருப்போர் தொடர்பில் அரசாங்கத் தரப்பிலிருந்து சற்றே சாதகமான பதில் வழங்கப்பட்டது. 

இது பற்றி, ஜனாதிபதி ஜே.ஆரோடு தொலைபேசியில் பேசுவதாகக் குறிப்பிட்ட எச்.டபிள்யூ.ஜெயவர்தன, மதியத்துக்குப் பின்பு இவ்விடயம் தொடர்பிலான, அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அறியத்தருவதாகத் தெரிவித்திருந்தார்.   

அதுபோலவே, மதிய உணவு இடைவேளையின் போது, ஜனாதிபதி ஜே.ஆர் உடன், பிரத்தியேக தொலைபேசி இணைப்பினூடாகக் குறித்த விடயம் பற்றிப் பேசிய எச்.டபிள்யூ. ஜெயவர்தன, மீண்டும் திம்புப் பேச்சுவார்த்தை அமர்வுகள் ஆரம்பித்தபோது, வடக்கு, கிழக்கு பகுதிகளில் விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு நாளை விலக்கிக்கொள்ளப்படும் என்றும், தடுத்து வைக்கப்பட்டுள்ள 1,197 பேரில், 643 பேர், அடுத்த இரு தினங்களுக்குள் விடுவிக்கப்படுவார்கள் என்றும் அறிவித்தார்.   

மத்தியஸ்தச் சிக்கல்  

இனப்பிரச்சினைக்கு இறுதித் தீர்வொன்றை எட்டும் நோக்கத்துடன் ஆரம்பமான திம்புப் பேச்சுவார்த்தைகள், ஆரம்பித்த முதல்நாளின் பெரும்பகுதி தமிழர்களின் பிரதிநிதிகள் யார், தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்கள் தமிழ் மக்களின் பிரதிநிதிகளா, யுத்த நிறுத்த உடன்படிக்கை அரசாங்கத்தால் மீறப்பட்டதா, தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்களால் மீறப்பட்டதா? என்ற வாதப்பிரதிவாதங்களிலேயே கழிந்திருந்தது.   

ஒருவகையில் இது, பேச்சுவார்த்தை நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்பட்டதிலுள்ள குறைபாட்டால் ஏற்பட்ட விளைவே எனலாம். மறுபுறத்தில், பேச்சுவார்த்தைகளைச் சரியான வழியில் வழிநடத்த வேண்டிய கடமை, மத்தியஸ்தம் வகித்த இந்தியாவுக்கு இருந்தது.

 ஆகவே, பேச்சுவார்த்தைகளின் இந்த முரண்பாடான ஆரம்பத்துக்கு, இந்தப் பேச்சுவார்த்தைகளை ஏற்பாடு செய்த றொமேஷ் பண்டாரியும் பொறுப்புடையவராகிறார்.  

திம்புப் பேச்சுவார்த்தைகள் பற்றித் தன்னுடைய நூலொன்றில் குறிப்பிடும், இலங்கைக்கான இந்தியாவின் உயர்ஸ்தானிகராக அன்றிருந்த,  ஜே.என்.திக்ஸிட், இந்தப் பேச்சுவார்த்தைகளில் இந்தியா மத்தியஸ்தம் வகிக்காதிருந்திருக்கலாம் என்ற கருத்தையும் பதிவு செய்கிறார். 

அதாவது, இருதரப்பையும் பேச்சுவார்த்தைக்கு அழைத்து வந்துவிட்டு, அவர்களுடைய பிரச்சினையை அவர்களே பேசித்தீர்க்க வழிவகுத்திருக்கலாம் என்ற தொனியில், அவர் கருத்துத் தெரிவித்திருந்தார். அதில் உண்மை இல்லாமலும் இல்லை.   

இருதரப்பையும் இந்தியா வற்புறுத்திப் பேச்சுவார்த்தை மேசைக்கு அழைத்துவந்துவிட்டு, அந்தப் பேச்சுவார்த்தையில் மத்தியஸ்தமும் வகிக்கும் போது, இருதரப்பும் ஒன்றன் மீதுதொன்று அதிருப்தியடையும் போது, அந்த அதிருப்திகளையும் முறைப்பாடுகளையும் செவிமடுக்கவும், அதற்குத் தீர்வு வழங்க வேண்டிய பொறுப்பு, மத்தியஸ்தராக இந்தியாவுக்கு வந்து விடுகிறது.   

இந்தப் பேச்சுவார்த்தை முழுவதிலும் இந்தப்போக்குத் தொடர்வதை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. அதனால்தான் என்னவோ, ஜே.என். திக்ஸிட், “பேச்சுவார்த்தைகளை இந்தியா ஏற்பாடு செய்துவிட்டு, மத்தியஸ்தம் வகிக்காதிருந்திருக்கலாம்” என்று குறிப்பிடுகிறார் போலும்.   

தீர்வு முன்மொழிவுகள்  

முதல்நாள் அமர்வுகளின் போது, மாலைவேளையில்தான் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பிலான கருத்துகள் பேசப்படத் தொடங்கின.   

இனப்பிரச்சினைக்கான எந்தவோர் அரசியல் தீர்வும், 1978ஆம் ஆண்டின் இரண்டாம் குடியரசு அரசியல் யாப்புக்கமைய, ஒற்றையாட்சி அரசுக்குள், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமைக்கு உட்பட்டதாகவே அமைய வேண்டும் என்று குறிப்பிட்ட எச்.டபிள்யூ.ஜெயவர்தன, அவ்வகையில் அமைந்த புதிய தீர்வு முன்மொழிவை, தாம் சமர்ப்பிப்பதாகக் கூறி, இரு ஆவணங்களை உள்ளடக்கிய தீர்வு முன்மொழிவைச் சமர்ப்பித்ததுடன், குறித்த தீர்வு முன்மொழிவுகளானவை கடந்த வருடம் இடம்பெற்ற சர்வகட்சி மாநாட்டின் விளைவாகத் தோன்றியது என்றும், அதில் ஏற்பட்ட இணக்கப்பாட்டின் படியே இந்த இரண்டு ஆவணங்கள் உருவாகின என்றும், அதன்படி அதிகாரப் பகிர்வை அடிப்படையாகக் கொண்ட தீர்வு ஒன்று வழங்கப்படும் என்றும், தமிழர் தரப்பு, குறித்த ஆவணங்களைக் கவனத்துடன் கருத்திற்கொண்டு, குறித்த தீர்வை நடைமுறைப்படுத்த முழுமையான ஆதரவை அரசாங்கத்துக்கு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.  

 குறித்த ஆவணங்களைப் பரிசீலித்த அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்துக்கு, கடும் விசனம் உருவாகியது, ஏனென்றால் எச்.டபிள்யூ.ஜெயவர்தன குறிப்பிட்டதைப் போல, அவை ஒன்றும் புதிய தீர்வு முன்மொழிவுகள் அல்ல; மாறாக, சர்வகட்சி மாநாட்டில் ஜே.ஆர் சமர்ப்பித்த அரசமைப்புக்கான பத்தாவது திருத்தச் சட்டமூல வரைவு, மாவட்ட மற்றும் மாகாண சபைகள் சட்டமூல வரைவு ஆகிய இரண்டையுமே புதிய தீர்வு முன்மொழிவு என்று எச்.டபிள்யூ. ஜெயவர்தன சமர்ப்பித்திருந்தார் என்று, ரீ.சபாரட்ணம் தனது நூலொன்றில் பதிவு செய்கிறார்.   

தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியானது, குறிப்பிட்ட தீர்வு முன்மொழிவுகளை, ஏற்கெனவே நிராகரித்திருந்ததைச் சுட்டிக்காட்டிய அமிர்தலிங்கம், குறித்த முன்மொழிவுகள், தமிழர்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யாது என்றும் திட்டவட்டமாக அறிவித்தார்.  

(அடுத்த திங்கட்கிழமை தொடரும்)  

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/திம்புப்-பேச்சுவார்த்தை-02/91-226037

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest

 Reply to this topic…English
Bamini
Tamil-English

இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)Go to topic listing

  • Replies196
  • Created6 yr
  • Last Reply1 yr

TOP POSTERS IN THIS TOPIC

POPULAR DAYS

POPULAR POSTS

நவீனன்October 27, 2015தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன?  -என்.கே.அஷோக்பரன் இலங்கைத் தமிழ் அரசியல்…


About editor 3087 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply