தமிழ்ப் புத்தாண்டு சித்திரையா? தையா?

தமிழ்ப்  புத்தாண்டு சித்திரையா? தையா?

 நக்கீரன்

பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் | உங்களுக்காக

தமிழர்கள் கொண்டாடும் விழாக்களில் மூன்று விழாக்கள் முக்கியமானவை. தைப்பொங்கல், சித்திரைப் புத்தாண்டு மற்றது தீபாவளி. இந்த மூன்றோடு ஆங்கிலப் புத்தாண்டும் இன்று சேர்ந்து கொண்டது. இவற்றில்  தைப்பொங்கல் விழாவே மிகச் உலகளாவிய அளவில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

நெல் விதைத்ததில் இருந்து அறுவடை வரை  ஒரு உழவனுக்கு தோள் கொடுப்பவர்கள் மூன்று வகையினர். ஒன்று அவனது கால் நடை. இரண்டு பொய்யா வானம் பொழியும் மழை.  மூன்றாவது எல்லா உயிரினங்களுக்கும் ஆதாரமாக விளங்கும் ஞாயிறு.

  

Earth's Seasons Graphic Organizer by Active and Engaging Science

பண்டைக் காலத்தில் ஞாயிறு வணக்கம் எல்லாப் பண்பாடுகளிலும் காணப்பட்டது.   பண்டைய எகிப்தில் சூரியக் கடவுளான இரா  வழிபாடு புகழுடன் இருந்தது. ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான  சிலப்பதிகாரத்தில்  இளங்கோ கடவுள் வாழ்த்துக்குப் பதில் இயற்கையை வாழ்த்துகிறார். 

திங்களைப் போற்றுதும்! திங்களைப் போற்றுதும்!
ஞாயிறு போற்றுதும்! ஞாயிறு போற்றுதும்!
மா மழை போற்றுதும்! மா மழை போற்றுதும்! ( புகார் காண்டம் – மங்கல வாழ்த்து)

பொங்கல் விழா எப்போது தொடங்கப்பட்டது என்பதற்கு இலக்கியச் சான்றுகள் இல்லை. ஆனால் பொங்கல் விழா மதம் கடந்து தமிழர் பண்பாட்டில் முக்கிய இடம் பிடித்துள்ளது என்பது மட்டும் உண்மை. சித்திரைப் புத்தாண்டும் தீபாவளியும் வைதீக மதத்தோடு, புராண, இதிகாசங்களோடு தொடர்புடையவை.

சித்திரை தமிழரின் மரபார்ந்த புத்தாண்டு அல்ல என்ற மாற்றுக்கருத்து சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில் தோன்றியது. இக்கருத்து வலுப்பெற முக்கிய காரணம், தை முதலாம் நாள் தமிழரின் புத்தாண்டின் தொடக்க மாகவும் அதனை திருவள்ளுவர் பெயரால் அழைக்கப்பட வேண்டும் எனவும் திருவள்ளுவர் பிறந்த நாள் கிமு 31 ஆண்டென்றும் திருவள்ளுவர் பிறந்த நாளை தை இரண்டில் கொண்டாடப்பட வேண்டும் எனத் தமிழறிஞர்கள் மறைமலை அடிகளது தலைமையில் கூடித் தீர்மானம்


அதுவரை நடைமுறையில்  பிரபவ  தொடங்கி அஷய  ஈறாக இருந்த 60 ஆண்டுகள் சுழற்சி முறையிலான வட மொழிப் பெயர்களைக் கொண்ட ஆண்டுமுறை ஆகும். இது வரலாற்றைப்  பதிவு செய்ய உதவாது.  எனவே  தமிழர்களுக்கு  ஒரு தொடர் ஆண்டுமுறை  வேண்டும் என்றும் அதுவும் பொதுமறை தந்த திருவள்ளுவர் பெயரில் இருக்க வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது.

இந்த மாற்றம்  1981 இல் நடந்த  மதுரை உலகத்தமிழ் மாநாட்டில் உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இப்பின்னணியில், தை முதல்நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்றும், தை இரண்டாம் நாள் திருவள்ளுவர் பிறந்த  நாள் என்றும் திமுக அரசு 2008 தை மாதம் 23 ஆம் நாள்  அரசாணை பிறப்பத்தது. இது 2011இல் ஆட்சிக்கு வந்த அதிமுக அரசால் இரத்து செய்யப்பட்டு மீண்டும் சித்திரை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டாக அறிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்களுக்கும் அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களுக்கும் இடையில் பெரிய சொற்போரே நடந்தது. இருவரும் தங்களது வாதத்துக்கு இலக்கியங்களில் இருந்தும் வரலாற்றுக் குறிப்புகளிலிருந்தும் மேற்கோள் காட்டி வாதித்தார்கள். ஜெயலலிதாவின் வாதம் பின்வருமாறு இருந்தது.

சித்திரை மாதம் புத்தாண்டின் தொடக்கம் என்பது, வான நூலையும், பருவங்களின் சுழற்சியையும் அடிப்படையாகக் கொண்டது. பூமி, சூரியனை ஒரு முறை சுற்றி வர எடுக்கும் காலம் ஓர் ஆண்டு. சூரியன் பூமியின் நடுக்கோட்டில் மேட இராசியில் நுழையும் நாள் பத்தாண்டின் தொடக்கமாகக் கருதப்பட்டது.

சித்திரையில் துவங்கி, பங்குனி வரையிலான தமிழ் மாதத்தில், அம் மாதத்தின் பவுர்ணமி அன்று வரும் நட்சத்திரத்தின் பெயரே அம் மாதத்தின் பெயர். எடுத்துக்காட்டாக சித்திரை மாதம் பவுர்ணமியன்று சித்திரை நட்சத்திரம் வருவதால் அந்த மாதத்தின் பெயரே சித்திரை.

சோழர் கல்வெட்டுக்களிலும், கொங்கு பாண்டியர் கல்வெட்டுக்களிலும், 60 ஆண்டுகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு உள்ளன. திண்ணிலை, மருப்பின் ஆடுதலை‘ என்று நக்கீரர் கூறியிருக்கிறார். ஆடு தலை என்ற சொல்  மேட இராசியைக் குறிக்கிறது.

ஜெயலலிதாவின் வாதத்துக்கு பதிலளித்த கலைஞர் கருணாநிதி  “தை மாதத்தில் பௌர்ணமி “பூசம்” நட்சத்திரத்தில்தான் வருகிறது. ஆனால் அந்த மாதத்திற்குப் பூசம் என்ற பெயர் உள்ளதா? மாசி மாதத்தில் பௌர்ணமி “மகம்” நட்சத்திரத்தில்தான் வருகிறது. ஆனால் அந்த மாதத்திற்கு மகம் என்று பெயர் இல்லையே? பங்குனி மாதத்தில் பௌர்ணமி “உத்திரம்” நட்சத்திரத்தில்தான் வரும். அந்த மாதத்திற்கு உத்திரம் என்று பெயர் இல்லை. 27 நட்சத்திரங்களில் சித்திரை, கார்த்திகை தவிர மற்ற பெயர்களில் மாதப் பெயர்கள் இல்லையே?” என கலைஞர் கருணாநிதி பதிலுக்கு வாதிட்டார்.

உண்மை என்னவென்றால் சங்க இலக்கியங்கள் எதிலும்  சித்திரைதான் தமிழர்களது புத்தாண்டு என்றோ தைதான் தமிழர்களது புத்தாண்டு என்றோ குறிப்பிடப் படவில்லை.

Seasons

தை தொடர்பான சங்க இலக்கிய வரிகள் எதுவும் தைமாத நீராட்டு விழாவொன்றைக் குறிப்பிடுகின்றனவே அன்றி, தை மாதத்தில் புத்தாண்டு பிறக்கிறது எனப் பாடவில்லையென்பது புலப்படுகிறது.

தமிழ்ப் புத்தாண்டு சித்திரையா? தையா?  என்றால் இரண்டுக்கும் வானியல் அடிப்படை இருக்கிறது. சித்திரைப் புத்தாண்டுக்கு வானியல் அடிப்படை இருப்பது போல தைப் புத்தாண்டுக்கும் வானியல் அடிப்படை இருக்கிறது. சித்திரை 01 (ஏப்ரில் 14)  அன்று சூரியன் மேட இராசிக்குள் நுழைகிறது. இதேபோல தை முதல் நாள் (சனவரி 14) சூரியன் தனது தென்திசைப் பயணத்தை (தட்சணாயம்) முடித்துக் கொண்டு வடதிசைப் பயணத்தை மகர இராசியில் தொடங்குகிறது. வட மொழியில் அதனை மகர சங்கராந்தி என அழைப்பர்.

சூரியன் மற்றும் நட்சத்திரம் இரண்டின்  இயக்கத்தை அடைப்படையாகக் கொண்டு  கணக்கிடுவதில்  இரண்டு முக்கிய முறைமைகள்  உண்டு.

(1) வெப்பமண்டல ஆண்டு

இந்த ஆண்டு 365 நாட்கள் 5 மணி 48 நிமிடங்கள் 46 வினாடிகள் கொண்டது. இது வெப்பமண்டல ஆண்டு அல்லது பருவங்களின் ஆண்டு என்றும் அழைக்கப் படுகிறது. இது இரண்டு சமவிரவு  (Equinox) நிகழ்வுகளுக்கு இடையிலான நேரமாகும் (சூரியன் வடக்கே நகரும் வான் நடுக்கோட்டை கடக்கும் தருணம்).  புவியின் முன்னேகல் காரணமாக (பூமியின் சுழற்சியில் மெதுவாக தள்ளாட்டம் சூரியன் சந்திரனின் ஈர்ப்பு விசையின் விளைவு), சூரிய ஆண்டு நட்சத்திர ஆண்டை விட 365 நாட்கள் 6 மணி 9 நிமிடங்கள் 10 வினாடிகள் குறைவாகக் காணப்படுகிறது.  

(2) நட்சத்திர ஆண்டு

கிரகங்கள், சூரியன் மற்றும் சந்திரன்களின் இயக்கங்களைக் கண்டறிய தொலைதூர நட்சத்திரங்களை நங்கூரமாக அல்லது குறியீடாகப் பயன்படுத்துவதே நட்சத்திர ஆண்டாகும். நட்சத்திர ஆண்டில் 365 நாட்கள், 5 மணி, 48 மணித்துளிகள், 45.51 வினாடிகள் (365.242189) கொண்டது ஆகும். இதனால் ஒவ்வொரு ஆண்டும் யூலியன் ஆண்டு 10.8 வினாடிகள் நீண்டுவிடுகிறது.

தொல்காப்பியர் ஒரு ஆண்டுக்கான ஆறு பெரும்பொழுதுகளைச் சொல்லும்போது ஆவணி மாதமாகிய கார்காலத்தையே தொடக்கமாகக் குறிப்பிடுகிறார். அதன்பிறகே கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் காலங்களை வரிசைப்படுத்துகிறார். மேலும் வைகறை, காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை. யாமம் என்பதே ஒரு நாளில் அடங்கிய ஆறு சிறுபொழுதாகும். ஒரு நாள் 60 நாளிகை கொண்டது என்று கணக்கிட்டனர். ஒரு நாளிகை 24 மணித்துளி  ஆகும். இது 2300 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் கார்காலத் தொடக்கமாகிய ஆவணி மாதத்தையே ஆண்டின் முதல் மாதமாகக் கொண்டனர் என்பதை உணர்த்துகிறது.

ஆனால் இன்று தொல்காப்பியர் கார் காலம் (ஆவணி, புரட்டாதி) எனக் குறிப்பிட்ட காலம்  ஒரு மாதம் முன்னரே ஆடியில் தொடங்கிவிடுகிறது. புவி, சூரியன் மற்றும் சந்திரன் இரண்டின் ஈர்ப்பு விசை காரணமாக தனது அச்சில் மேற்கு நோக்கி 72.5 ஆண்டுக்கு ஒருமுறை ஒரு பாகை (ஒரு நாள்) பின்நோக்கி நகர்ந்துவிடுகிறது. தொல்காப்பியர் காலம் கிமு 300 ஆண்டு என்று எடுத்துக் கொண்டால் சூரியன் இன்று 32 பாகை (32 ) நாள் மேற்குப் பக்கம் நகர்ந்து விட்டது.

காலத்தை இவ்வளவு நுணுக்கமாகக் கணக்கிட்ட புலவர்கள், இலக்கண ஆசிரியர்கள், அறிஞர்கள் தமிழர்களுக்கென ஒரு பொதுவான தொடர் ஆண்டை வகுக்கவில்லை.  அதனால் அரசர்கள், புலவர்கள், சான்றோர்கள் பிறப்பு ஆண்டு, மறைவு ஆண்டு இவற்றை ஒரு  தொடர் ஆண்டோடு தொடர்பு படுத்தி வரலாற்றைப் பதிவு செய்ய முடியாமல் போய்விட்டது.

உரோம பேரரசர் யூலியஸ் சீசர் படுகொலை செய்யப்பட்ட நாள் கிமு மார்ச் 15, 44 என்று  துல்லியமாக உரோம வரலாற்று ஆசிரியர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். மாறாக சங்க கால அரசர்கள், புலவர்கள் மட்டுமல்ல பிற்கால அரசர்கள், புலவர்கள்  வாழ்ந்து மறைந்த  காலம்  சரியாக பதியப்படவில்லை.

அரசர்கள் முடிசூடிக் கொண்ட ஆண்டை அடிப்படையாகக் கொண்டே அந்தந்த அரசர் 25 ஆண்டுகள், 50 ஆண்டுகள் ஆட்சி செய்தனர் எனக் குறிப்பிட்டார்கள். புலவர்களைப் பொறுத்தளவில், திருவள்ளுவர் உட்பட,  அவர்கள் பிறந்து மறைந்த  ஆண்டுபற்றிய எந்தக் குறிப்பும் இல்லை. மேலே கூறியவாறு தமிழர் வரலாற்றில் காலக் குழப்பம் இருப்பதற்கு தொடர் ஆண்டு இல்லாதது முக்கிய காரணமாகும்.  

இருக்கிற 60 ஆண்டுகளும் சுழற்சி முறையில் வருவது மேலும் குழப்பத்தை உருவாக்கவே உதவியது. இதனால் வரலாற்று நிகழ்ச்சிகளை 60 ஆண்டுகளுக்கு மேல் கணக்கிட முடியவில்லை. ஒருவர் பிரபவ ஆண்டில் பிறந்தார் என்றால் எந்தப் பிரபவ ஆண்டு என்பது தெரியாமல் இருந்தது. ஆண்டுகள் வரலாற்றைத் தொடர்ச்சியாகப் பதிவு செய்யப் பயன்பட வேண்டும். அவை குழப்பத்திற்கு இடமின்றி இருத்தல் வேண்டும்.

எனவே சித்திரைப் புத்தாண்டை தமிழ் இந்துக்களுக்கு உரிய புத்தாண்டாகவும்  அதே வேளை தை முதல்நாளை –  பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டின் – திருவள்ளுவர் ஆண்டின் – தொடக்கம் எனக் கொண்டாடுவதே சிறந்தது.

DMK - Dravida Munnetra Kazhagam - ”உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவருக்கும்  இனிய பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!” - கழக தலைவர் மு.க  ...

ஜெயலலிதாவின் அரசாணையை முதல்வர் மு.க. ஸ்டாலின்தலைமையிலான அரசு இன்றுவரை மாற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது பொங்கள் வாழ்த்துச் செய்தியில் “அனைவருக்கும் தை முதல் நாளாம்,  இனிய பொங்கல் – தமிழ்ப் புத்தாண்டுத் திருநாள் நல்வாழ்த்துக்கள்” என்று கூறியுள்ளார். 

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply