தமிழர்கள் எங்கு வாழ்ந்தாலும் தமிழ்நாடு தான் அவர்களுக்கு தாய் வீடு

தமிழர்கள் எங்கு வாழ்ந்தாலும் தமிழ்நாடு தான் அவர்களுக்கு தாய் வீடு

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்


2022-01-13

சென்னை: தமிழர்கள் எங்கு வாழ்ந்தாலும் தமிழ்நாடு தான் அவர்களுக்கு தாய் வீடு என்றும், வெளிநாடு வாழ் தமிழர்களுக்காக அறிவித்த திட்டங்களுக்கு ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் அயலக தமிழர் திருநாள் நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பில், ‘அயலகத் தமிழர் திருநாள்’ நிகழ்ச்சியில் இணையவழியில் நேற்று நடைபெற்றது. சென்னை கோட்டூர்புரம், தமிழ் இணையக் கல்விக் கழகத்திலிருந்து இணையவழியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசு செயலாளர் ஜகந்நாதன் வரவேற்புரையாற்றினார்.

Thanthi TV - அயலகத் தமிழர் திருநாள் நிகழ்ச்சி - முதலமைச்சர் சிறப்புரை

மலேசியா முன்னாள் துணை அமைச்சர் டாடூக் கமலநாதன், அமெரிக்காவின் மேரிலேண்ட் போக்குவரத்து ஆணைய ஆணையர் ராஜன் நடராஜன், பப்புவா நியூ கினியா மாகாண ஆளுநர் சசிதரன் முத்துவேல், மொரிஷியஸ் முன்னாள் துணை அதிபர் பார்லென் வையாபுரி, இலங்கை எம்பி சுமந்திரன், லண்டன் ஹார்லி ஸ்ட்ரீட் ஹெல்த் கேர் இயக்குனர் தனபால் ராமசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.மன்னார்குடி எம்எல்ஏ டிஆர்பி.ராஜா, தலைமை செயலாளர் இறையன்பு ஆகியோர் சிறப்புரையாற்றினர். அமைச்சர் மனோ தங்கராஜ் முன்னிலை வகித்தார். அமைச்சர் செஞ்சி கே.மஸ்தான் தலைமையுரையாற்றினார்.

நிகழ்ச்சியில், முதல்வர் மு.க.ஸ்டாலின் இணையவழியில் கலந்து கொண்டு விழாவில் பேசியதாவது: தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறையின் சார்பில் நடைபெறும் அயலகத் தமிழர் நாள் விழாவில் பங்கெடுத்து உரையாற்றுவதில் நான் பெருமை அடைகிறேன். எங்கே தமிழர்கள் வாழ்ந்தாலும், அவர்களுக்கு தமிழ்நாடு தான் தாய் வீடு. உங்களை அயலகத்துக்கு வாழப் போனவர்களாக நான் நினைக்கவில்லை. தமிழ்நாட்டின் பண்பாட்டுத் தூதர்களாக அயல்நாடுகளில் இருப்பவர்களாக நினைத்து போற்றக் கடமைப்பட்டுள்ளேன். இத்தகைய அயலகத் தமிழர் மேன்மைக்காக தன்னுடைய வாழ்வை ஒப்படைத்தவர் தான் தமிழினத் தலைவர் கலைஞர்.

மீண்டும் ஆட்சிக்கு வந்த நமது அரசு ‘வெளிநாடு வாழ் தமிழர் நல வாரியம்’ அமைக்கப்படும் என்பதை ஐந்தே மாதத்தில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நான் அறிவித்தேன். அரசு மற்றும் புலம்பெயர்ந்த தமிழர் பிரதிநிதிகள் பதிமூன்று பேரைக் கொண்டு இந்த வாரியம் அமைக்கப்படும். 5 கோடி ரூபாய் வெளிநாடு வாழ் தமிழர் நலநிதி என மாநில அரசின் முன்பணத்தைக் கொண்டு உருவாக்கப்படும். மூலதனச் செலவினமாக 1 கோடியே 40 லட்சம் ரூபாய் மற்றும் தொடர் செலவினமாக, நலத்திட்டங்கள் மற்றும் நிர்வாக செலவினங்களுக்காக 3 கோடி ரூபாய் ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் என்று அறிவித்தேன். வெளிநாடு வாழ் தமிழர் குறித்த தரவு தளம் (டேட்டா பேஸ்) ஏற்படுத்தப்படும்.

தமிழர்கள் பணியின் போது இறக்க நேரிட்டால், அவர்கள் குடும்பத்தில் கல்வி பயிலும் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை, திருமண உதவித் தொகை வழங்கப்படும்.தமிழர்கள் புலம் பெயரும்போது, பயண புத்தாக்கப்பயிற்சி பல்வேறு ஊர்களில் நடத்தப்படும். ஆலோசனை பெற வசதியாக கட்டணமில்லா தொலைபேசி வசதி மற்றும் வலைதளம், கைப்பேசி செயலி அமைத்துத் தரப்படும். சட்ட உதவி மையம் அமைக்கப்படும். தமிழ்நாடு திரும்பியவர்களுக்கு குறு தொழில்கள் செய்திட, அதிகபட்சமாக இரண்டரை லட்சம் ரூபாய் மானியத்துடன் கூடிய கடன் வசதி செய்து தரப்படும். இதற்கென ஆறு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். வெளிநாடு வாழ் தமிழர்களின் முதலீடுகளை அரசு மற்றும் தொழில் நிறுவனங்களில் பாதுகாப்பான முதலீடு செய்ய ஏதுவான சூழல் உருவாக்கப்படும். தமிழர்கள், ‘எனது கிராமம்’ திட்டத்தின் மூலம் தங்களது சொந்த ஊருக்கு நன்மைகள் செய்து தரலாம்.

தமிழ் பிள்ளைகள் தமிழ் கற்றுக் கொள்ள வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும். தமிழர்கள் அந்தந்த நாடுகளில் உருவாக்கியுள்ள நலச்சங்கங்கள் ஒருங்கிணைக்கப்படும் என்று பல்வேறு அறிவிப்புகளைச் செய்தேன். இவை அனைத்துக்கும் சேர்த்து 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இந்த வரிசையில் தான், வெளிநாடுகளில் உள்ள தமிழ்ச் சங்கங்களுடன் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 12ம் நாள் உலகத்தமிழர் புலம்பெயர்ந்தோர் நாளாகக் கொண்டாடப்படும். இலங்கையில் இருந்து தமிழ்நாட்டை நோக்கி வந்த தமிழர்களுக்கு 317 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு சமூக பாதுகாப்புத் திட்டங்களைச் செயல்படுத்தி வருவதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்.

உங்கள் அனைவரது உரைகளும் தமிழை, தமிழினத்தை, தமிழர்களை மேம்படுத்துவதாக அமைய வேண்டும். நம்மை பிளவுபடுத்தும் எண்ணங்களை பின்னுக்குத் தள்ளி, நம்மை இணைக்கும் எண்ணங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பவையாக உங்களது உரைகள் அமைய வேண்டும். தமிழ்நாட்டில் இருக்கும் பிளவுகளுக்கு வெளிநாடுகள் சென்ற பிறகும் முக்கியத்துவம் தராதீர்கள். ஒருதாய் மக்களாக வாழுங்கள். கல்வியிலும் வேலைவாய்ப்பிலும், தொழில் வளர்ச்சியிலும் முன்னேற்றம் காணுங்கள். எவ்வளவு உயரமாக மரம் வளர்ந்தாலும் அது தன்னுடைய வேரை விட்டு விடுவதில்லை என்பதைப் போல தமிழை, தமிழ்நாட்டை விட்டு விடாதீர்கள்.

அரவணைத்து வாழுங்கள். தமிழகத்துக்கு வாருங்கள். உங்களது பிள்ளைகளுக்கு தமிழ்நாட்டைக் காட்டுங்கள்.மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் பண்பாட்டிலும் செழிப்பிலும் மேம்பட்ட இனம் நாம் என்பதை அவர்களை அழைத்து வந்து கீழடியை, ஆதிச்சநல்லூரைக் காட்டுங்கள். இங்குள்ள தமிழர்களுக்கு எல்லாமுமாய் இந்த அரசு இருப்பதைப் போலவே அயலகத் தமிழ் மக்களுக்கும் எல்லாமுமாக இந்த அரசு இருக்கும். தமிழர் பண்பாட்டை இன்றைய தலைமுறைக்கு அறிமுகம் செய்ய, தமிழ் கற்பிக்க, ஒன்றாக இணைந்து ஒருவருக்கொருவர் உதவியாக இருக்க அனைத்தையும் தமிழ்நாடு அரசு நிச்சயம் செய்யும்.இவ்வாறு அவர் பேசினார். இலங்கையில் இருந்து தமிழ்நாட்டை நோக்கி வந்த தமிழர்களுக்கு 317 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு சமூக பாதுகாப்புத் திட்டங்களைச் செயல்படுத்தப் பட்டுள்ளது.

https://www.dinakaran.com/news_detail.asp?Nid=734712

——————————————————————————————————————–

ஈழ – தமிழகத் தமிழர்கள் நாம் உரிமைகளுக்காக இணைவோம்!
ஸ்டாலினிடம் சுமந்திரன் தெரிவிப்பு

ஈழத் தமிழர்கள் தொடர்பில் சுமந்திரன் வெளியிட்ட தகவல் - ஐபிசி தமிழ்

கொழும்பு,

ஜனவரி 13, 2022

ஈழத் தமிழர்களான நாங்களும், தமிழகத் தமிழர்களான நீங்களும், பிற அயலகத் தமிழ்ச் சகோதரர்களும் வெவ்வேறு நாடுகளில் வாழ்கிறோம். எனினும் அங்கங்கு எமது அரசியல் உரிமைகளுக்கான முயற்சிகளில் நாங்கள் ஒருவருக்குகொருவர் ஆதரவாகச் செயற்படுவோம்.

இப்படி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கு பற்றிய “அயலகத் தமிழர் நாள்’ நாள் நிகழ்வில் இணைய வழியில் கருத்துரைத்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன்.

தமிழ் நாடு அரசின் “அயலகத் தமிழர் நாள்’ நிகழ்வு நேற்று காலை 10 மணிக்கு முதல் தமிழ் நாடு அரசின் அயலகத் தமி ழர் நலன் மற்றும் மறுவாழ்வு துறையின் ஏற்பாட்டில் நடைபெற்றது. நிகழ்வில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு பேருரையாற்றினார்.

தமிழக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் உலமெங்கும் உள்ள சாதனைத் தமிழர்கள் இணைய வழியில் கலந்து கொண்டனர்.
அந்த முறைமையில் இலங்கையிலிருந்து சுமந்திரன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். அவரது உரையை நிகழ்வு நடைபெற்ற மண்ட பத்திலிருந்த தமிழக முதல்வர் ஸ்டாலினும் பிற முக்கியஸ்தர்களும் செவி மடுத்தனர்.

அப்போது சுமந்திரன் கூறியவை வருமாறு:-

ஈழத் தமிழரிடத்திலிருந்து இந்த வாழ்த்துச் செய்தியை கொண்டு வருவதில்மகிழ்ச்சி அடைகிறேன். அயலகத் தமிழர்கள் என்று குறிப்பிடும்போது மிகநெருக்கமாக பக்கத்தில் இருக்கின்ற ஈழத்தமிழர்களாகிய நாங்கள்தான் அதற்கு அதிகம் உரித்துடையவர்கள் என்பதை முதலில் குறிப்பிட விரும்புகிறேன். தமிழ்நாட்டிலிருந்து ஒரு சில கிலோமீட்டர் தூரத்தில் வாழ்கின்ற ஈழத் தமிழர்களாகிய நாங்கள், இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் செறிந்து குடி அமர்ந்திருக்கின்றோம். இந்த இரண்டு மாகாணங்களிலும் தமிழர்கள் தங்களுக்கு உரித்தான சுய நிர்ணய உரிமையோடு அதற்கு உகந்த ஓர் ஆட்சி முறை மாற்றத்தின்படி, தங்களைத் தாங்களே ஆளுகின்ற ஓர் அரசு கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற என்ற வேட்கையோடு, உங்களின் அயலவர்களாக – தமிழர்களாக – நாங்கள் வாழ்ந்து வருகிறோம்.

முதலமைச்சர் அவர்களே! உங்கள் தந்தையார் மாண்புமிகு மு.கருணாநிதி அவர்கள் உலகத் தமிழர்கள் எல்லோருக்கும் தலைவராக விளங்கியவர். அவரது பெரும் பணியை – அவர் எங்களோடு வைத்திருந்த நட்பை – நாங்கள் மீட்டுப் பார்க்கவேண்டிய ஒரு கட்டாய தேவை இந்த வேளையிலே இருக்கின்றது. அதனை நன்றி உணர்வோடு நாங்கள் நினைவு கூர்கின்றோம்.
அப்படியான ஒரு ஸ்தானத்துக்கு, இந்த அயலவர் தமிழர் திருநாளை கொண்டாடுவதன் மூலம், அதற்கான பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து, நீங்கள் தமிழ்நாட்டுக்கு வெளியே உலகெங்கும் வாழும் தமிழர்களைத் திரட்டி, அனைத்து தமிழர்களுக்கும் தலைமைத் துவம் கொடுக்கின்றீர்கள்.

இந்த முயற்சியில் உங்கள் தந்தையாருடைய பாத அடிகளை நீங்கள் தொடர்ந்து வருகின்றீர்கள் என்பதை காண்பதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். உங்களின் இந்த மகத்தான பணி வெற்றி பெற வேண்டும் என்றும், அதன் மூலம் உலக தமிழர்கள் எல்லோரும் ஒன்றாகத் திரண்டு எங்கள் தாய் மொழியையும், தமிழ் கலாச்சாரத்தையும், நாங்கள் மென்மேலும் வளர்க்கத் தக்கதாக அது அமைய வேண்டும் என்றும் வாழ்த்துகிறோம்.
நாங்கள் எங்களுக்குள் ஒருவருக்கொருவர் உதவியாக – அது கலை, கலாச்சாரமாக இருக்கட்டும் – தமிழ் மொழி வளர்ப்பிலாக இருக்கட்டும் – நாங்கள் வாழுகின்ற நாடுகளில் எங்களுக்கு உரித்தான அரசியல் உரிமைகளாக இருக்கட்டும் அந்த விடயங்களில் நாங்கள் இணைந்தவர்கள், “தமிழால் இணைவோம்’ என்ற இந்நிகழ்வின் ஊடாக கூட நாம் அதனை வலியுறுத்துகிறோம். விசேடமாக தமிழக முதல்வருக்கு இந்தச் சந்தர்ப்பத்திலே ஈழத் தமிழர்களின் சார்பில் எங்கள் பெருநன்றியைத் தெரிவிக்க வேண்டிய கடப்பாடு எனக்கு உள்ளது.

எங்கள் தேசத்தில் இருந்து ஏதிலிகளாக இடம்பெயர்ந்து, உங்கள் நாட்டில் பல தசாப்தங்களாக வாழுகின்ற எங்கள் உறவுகளுக்கு நீங்கள் தொடர்ச்சியாக வழங்கி வருகின்ற பல நல்ல திட்டங்களுக்கு நாங்கள் என்றும் நன்றியாக இருக்கின்றோம். நீங்கள் முதலமைச்சர் பதவியை எடுத்த காலம் முதல் அவர்களை உங்களில் ஒரு பகுதியினராக நினைத்து, அவர்களுக்காகப் பெரும் நிதி ஒதுக்கீடு செய்து, பல நல்ல திட்டங்களை முன்னெடுத்து இருக்கிறீர்கள். அவர்களின் நலன்களை மிகுந்த அக்கறை கொண்டு கவனித்து வரும் உங்களுக்கு அவர்களின் உறவுகளான நாங்கள் இங்கு எங்கள் நாட்டிலிருந்து பெரு நன்றியை தங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த முயற்சி மூலமாக – இந்த நிகழ்ச்சி மூலமாக நாங்கள் ஒன்றி ணைந்து வருகின்ற இந்த நடவடிக்கை மூலமாக – உலகத் தமிழர்கள் ஒன்றாக சேர்ந்து எங்களுக்கு உரிய இடத்தை உலக வரைபடத்தில் நாங்கள் நிலை நிறுத்திக் கொள்வதற்கு வாய்ப்பு கிட்டும். இந்நிகழ்ச்சி அதற்கு பேருதவியாக இருக் கும். இதற்கு அடித்தளமிட்ட தமிழக முதலமைச்சருக்கும், அவரது அரசுக்கும், அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் இலங்கை தமிழ் மக்கள் சார்பில் நன்றி யையும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் சுமந்திரன்.

சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ்தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி.கே.எஸ்.மஸ்தான் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சுமந்திரனுடன் மலேசியா, அமெரிக்கா, பப்புவா நியூகினியா, மொரி´யஸ், லண்டன் ஆகிய இடங்களில் இருந்து தலாஒவ்வொரு சாதனைத் தமிழர்கள் தலா ஐந்து நிமிடநேரம் வாழ்த்துரை வழங்கினர்.

https://www.dinakaran.com/news_detail.asp?Nid=734712

————————————————————————————————————–

About editor 3016 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply