அண்ணா வாழ்க்கை வரலாறு: தமிழ்நாடு அரசியலில் திராவிட இயக்கம் மூலம் அண்ணா செய்த மாற்றங்கள் என்ன?
- அ.தா.பாலசுப்ரமணியன்
- பிபிசி தமிழ்
15 செப்டெம்பர் 2021
காஞ்சிபுரம் நடராஜன் அண்ணாதுரை
1909 செப்டம்பர் 15ம் தேதி இந்தப் பெயருக்கு உரியவர் காஞ்சிபுரத்தில் ஓர் எளிய நெசவாளர் குடும்பத்தில் பிறந்தபோது அது அடுத்த தெருவுக்கு கூட செய்தி இல்லை. நடராஜன் – பங்காரு அம்மாள் இணையருக்கு ஒரு மகன். அவ்வளவுதான்.
1969 பிப்ரவரி 3-ம் தேதி அவர் இறந்தபோது அது பல கோடி மக்களுக்குப் பெருந்துயரம்.
அண்ணாவின் இறுதி ஊர்வலத்துக்காக சென்னையில் குவிந்தவர்கள் எண்ணிக்கை 1.5 கோடி என்று மதிப்பிடப்பட்டது. இந்த எண்ணிக்கை கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்திலும் பதிவானது.
சாமானியப் பிறப்புக்கும், சாதனை மரணத்துக்கும் இடைப்பட்ட அண்ணாவின் வாழ்க்கையானது, வரலாற்றுத் திருப்பங்கள் நிறைந்தது மட்டுமல்ல, வரலாற்றைத் திருப்புவதாக அமைந்ததும் கூட.
யார் இந்த அண்ணா?
சமூக நீதி, மாநில உரிமை, மொழி உரிமை தொடர்பான சிந்தனையாளர், அந்த சிந்தனையை வெற்றிகரமாக அரசியல் படுத்தியவர். அப்படி அரசியல் படுத்துவதற்காக மேடை, பத்திரிகை, நாடகம், சினிமா, நூல்கள் என்று எல்லா ஊடகங்களையும், கையில் எடுத்து அதற்குப் புதிய தோற்றமும், உள்ளடக்கமும் தந்தவர்.
இந்த ஊடகங்களில் பிற திராவிட இயக்கப் படைப்பாளிகளும் அணி அணியாக நுழைந்து தனித்துவமான ஒரு பாரம்பரியம் உருவாக காரணமாக இருந்தவர்.
காங்கிரஸ் அல்லாத கட்சி ஒன்றின் சார்பில் இந்தியாவில் முதலமைச்சரான இரண்டாவது தலைவர். தமிழ்நாட்டில் இடையறாமல் நடந்துவரும் 53 ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்கு அதன் மூலம் அடித்தளம் இட்டவர். நவீன தமிழின் மீது, மக்கள் புழங்கும் தமிழின் மீது அண்ணா செலுத்தியிருக்கும் தாக்கம் அளப்பரியது. பெரிதாக ஆவணமாக்கப்படாதது.
எல்லாவற்றுக்கும் மேலாக உலகில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஒரு நிலப்பரப்புக்கு அதன் முகவரியாக விளங்கும் ‘தமிழ்நாடு’ என்ற பெயரை சூட்டியவர் அண்ணா. தங்களை ஒரு தனித்த தேசிய இனமாக உணரத் தொடங்கிய தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளுக்கு அசைக்கமுடியாத ஓர் அங்கீகாரமாகிவிட்டது இந்தப் பெயர்.
அண்ணா என்ற பெயர் ஒரு பண்பாட்டின் குறியீடாகிவிட்டது. அது ஒரு வரலாறாக, அடையாளமாக கொண்டாடப்படுகிறது. அவரது பெயரில் கட்சி, பல்கலைக்கழகம், விமான நிலையம், சாலை, நூலகம் என்று ஏராளமான நிறுவனங்கள் உள்ளன. ஆனாலும் கூட நவீன தமிழ்நாட்டின் மொழி, அரசியல், பண்பாடு ஆகியவற்றின் மீது அவர் செலுத்திய தாக்கத்தின் பரிமாணத்தோடு ஒப்பிடும்போது இந்த அங்கீகாரம் குறைவே.
இந்த தாக்கம் ஆதரவாளர்களால் மிகவும் கொண்டாடப்படுகிறது. விமர்சகர்களால் கடுமையாகத் தாக்கப்படுகிறது என்பது வேறு.
துடிப்பும், பரபரப்பும், விவாதங்களும் நிரம்பிய அவரது வாழ்க்கையை அதன் இயல்பில், சுருக்கமாக அறிமுகம் செய்யும் முயற்சியே இந்த கட்டுரை.
மிக எளிய குடும்பத்தில் பிறந்த அண்ணா தமது சித்தி ராஜாமணி என்பவராலேயே வளர்க்கப்பட்டார். அவரது குடும்பம் கடவுள் நம்பிக்கை மிகுந்த குடும்பம். எனவே இயல்பிலேயே அண்ணாவும் சிறு வயதில் கடவுள் நம்பிக்கை மிக்கவராகவே இருந்தார். பின்னாளில் தமிழ்நாட்டின் பிரபலமான நாத்திகத் தலைவரான அண்ணா சிறுவயதில் பிள்ளையார் பக்தர் என்ற தகவலைத் தெரிவிக்கிறது, அண்ணாவின் வளர்ப்பு மகன் டாக்டர் பரிமளம் எழுதிய ‘அண்ணா வாழ்க்கை வரலாறு’ நூல்.
பச்சையப்பன் கல்லூரி தந்த திருப்புமுனை
காஞ்சிபுரம் பச்சையப்பன் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்த அண்ணா சென்னை பச்சையப்பன் கல்லூரியில் இன்டர்மீடியேட் படிப்பை முடித்தார். மிக சாதாரண குடும்பத்தில் பிறந்து சராசரி மாணவரைப் போலவே பள்ளிப்படிப்பை முடித்த அண்ணாவுக்கு, இந்த பச்சையப்பன் கல்லூரி வாழ்க்கையே திருப்புமுனையை ஏற்படுத்தியது.
அங்கே அவர் சந்தித்த ஆங்கிலப் பேராசிரியரும். நீதிக்கட்சியில் செயல்பட்டவருமான, வரதராஜன்தான் அரசியலின் பக்கம் அண்ணாவின் கவனத்தைத் திருப்பியவர். மண்ணடியில் இருந்த பேராசிரியர் வரதராஜனின் எளிய, நெரிசலான அறையில் எப்போதும் மாணவர்கள் மொய்த்துக் கொண்டிருப்பார்கள். அதுதான் அண்ணாவுக்கு குருகுலம் போல அமைந்த இடம் என்று அண்ணாவின் வாழ்க்கை வரலாற்றை ஆங்கிலத்தில் எழுதிய (Anna: Life and Times of C.N.Annadurai) ஆர்.கண்ணன் குறிப்பிடுகிறார். வரதராஜனோடு சேர்ந்து பேராசிரியர் வேங்கடசாமி என்பவரும் அண்ணாவிடம் அரசியல் ஈடுபாடு ஏற்படக் காரணமாக இருந்தவர் என்கிறார் கண்ணன்.
மோசூர் கந்தசாமி முதலியார், மணி திருநாவுக்கரசு முதலியார் ஆகிய தமிழ்ப் பேராசிரியர்கள்தான் அண்ணாவுக்கு சங்கத் தமிழைக் கற்பித்தனர். அவர்களிடம் கற்ற சங்கத் தமிழ்தான் பின்னாளில் அண்ணாவின் புகழ் பெற்ற மேடைத் தமிழுக்கு அடிப்படை. மேற்கொண்டு பட்டப்படிப்பு படிக்க முடியாத குடும்பச் சூழ்நிலை நிலவியது அண்ணாவுக்கு. பச்சையப்பன் கல்லூரி முதல்வராக இருந்த சின்னத்தம்பிப் பிள்ளை, அவரை பி.ஏ. ஆனர்ஸ் படிக்கும்படி வலியுறுத்தினார். கல்வி உதவித் தொகை கிடைக்கவும், பாடநூல் வாங்கவும் உதவுவதாக அவர் ஒப்புக்கொண்ட பிறகு அண்ணா 1931ம் ஆண்டு பச்சையப்பன் கல்லூரியில் பி.ஏ. ஆனர்ஸ் படிப்பில் சேர்ந்தார்.
இதற்கு ஓராண்டு முன்பே, 21 வயதில் அண்ணாவுக்கும் ராணி அம்மையாருக்கும் சம்பிரதாய முறைப்படி திருமணம் நடந்தது. இந்த இணையருக்கு குழந்தை இல்லை என்பதைத் தவிர, இல்லறம் நல்லவிதமாகவே சென்றதாக ராணியை மேற்கோள் காட்டிச் சொல்கிறார் ஆர்.கண்ணன்.
கல்லூரியில் தவறாமல் வகுப்புகளுக்குச் செல்கிற அண்ணா, தீவிரமான படிப்பாளி. நீண்ட நேரத்தை நூலகங்களில் செலவிடுகிறவர். கல்லூரிக் காலத்திலேயே தமிழ், ஆங்கிலப் பேச்சுப் போட்டிகளில் பங்கேற்றவர். அந்த நாள்களில் தமக்கு இதழியலில் ஈடுபாடு இருந்தது என அண்ணாவே பிற்காலத்தில் சொல்லியிருக்கிறார்.
கல்லூரி மாணவர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்த அண்ணா 1931ம் ஆண்டு பச்சையப்பன் கல்லூரி மாணவர் பேரவையின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இரண்டாண்டுகள் கழித்து அவர் கல்லூரி பொருளாதாரத் துறை மாணவர் சங்கத்தின் தலைவராகவும் இருந்தார். படித்து முடித்தவுடன் காஞ்சிபுரம் நகராட்சியில் எழுத்தராக 6 மாதம் பணி செய்தார். பிறகு சென்னை கோவிந்தப்ப நாயக்கன் நடுநிலைப்பள்ளியில் தமிழாசிரியராக சிறிது காலம் பணியாற்றினார்.
நீதிக்கட்சியில் அண்ணா
இதற்குள், பிராமணர் அல்லாதார் அரசியல் இயக்கமாக இருந்த நீதிக்கட்சி செயல்பாடுகளில் ஈடுபடத் தொடங்கிவிட்டார் அண்ணா.
அது நீதிக்கட்சி தன்னுடைய செல்வாக்கை இழந்துகொண்டிருந்த காலம். ஆதி திராவிடர்கள் உள்ளிட்ட பிராமணர் அல்லாதார் நலனுக்கான திட்டங்களை நீதிக்கட்சி அரசுகள் செயல்படுத்தியிருந்தன. ஆனால், பிரிட்டிஷ் ஆட்சியை அவர்கள் ஆதரித்தனர். அரசுப் பணிகளில் பிராமணர் அல்லாதவர்களை அமர்த்துவது, கல்வியைப் பரவலாக்குவது ஆகியவற்றில் அவர்கள் கவனம் செலுத்தினர். ஆனால், நீதிக்கட்சித் தலைவர்கள் பலர் நிலவுடைமை யாளர்கள். பிரிட்டிஷ் அரசின் பதவி, பட்டங்களை தாங்கியவர்கள். இது அவர்களை எளிய மக்களிடம் இருந்து அந்நியப்படுத்திய காலம் அது.
ஆனால், பிராமணர் அல்லாதார் அரசியலுக்கு என்று இருந்த ஒரே கட்சி நீதிக்கட்சிதான் என்பதால் அண்ணாவுக்கு வேறு தேர்வு இருக்கவில்லை. அண்ணாவின் நீதிக் கட்சி தொடர்பு அவருக்கு, ராஜாக்களோடும், பெரும் பணக்காரர்களோடும், கனவான்களோடும் பழகும் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தது.
பெரியாரோடு சேர்ந்த அண்ணா
ஆனால், சாமானியர்களைப் பற்றிய கவலைகளோடு சமூகப் பாகுபாடுகளை அகற்றப் பாடுபட்டுவந்த, அலங்காரங்கள் இல்லாமல், கடும் மொழியில் பேசிவிடக்கூடிய பெரியார் ஈ.வெ.ராமசாமியைத்தான் அண்ணா தலைவராகத் தேர்ந்தெடுத்தார்.
1935ம் ஆண்டு திருப்பூரில் நடந்த செங்குந்த இளைஞர் மாநாட்டில் பெரியாரை முதல் முதலாக சந்தித்தார் அண்ணா. அப்போது முதல் பெரியார் அண்ணாவின் தலைவரானார். அப்போது நடந்த உரையாடலை, 1949ம் ஆண்டு நடந்த திமுக தொடக்க விழாவில் அண்ணா இப்படி நினைவு கூர்ந்தார்:
“பெரியார் என்னைப் பார்த்து என்ன செய்கிறாய் என்று கேட்டார். படிக்கிறேன். பரீட்சை எழுதியிருக்கிறேன் என்றேன். உத்தியோகம் பார்க்கப் போகிறாயா என்று கேட்டார். இல்லை உத்தியோகம் விருப்பமில்லை. பொது வாழ்வில் ஈடுபட விருப்பம் என்று பதில் அளித்தேன். அன்று முதல் அவர் என் தலைவர் ஆனார். நான் அவருக்கு சுவீகாரப் புத்திரன் ஆகிவிட்டேன்”.
1937ம் ஆண்டு ஈரோடு சென்ற அண்ணா அங்கு பெரியாரின் குடியரசு, மற்றும் விடுதலை நாளிதழ்களில் துணை ஆசிரியராக 60 ரூபாய் சம்பளத்துக்கு வேலைக்கு சேர்ந்தார். அப்போது அவருக்கு வயது 28. அந்த வயதில், அண்ணாவின் திறமையைக் கண்டு வியந்த பெரியார், அதே ஆண்டு துறையூரில் நடந்த சுயமரியாதை இயக்க மாநாட்டை தலைமையேற்று நடத்தும் பொறுப்பை அண்ணாவுக்கு அளித்தார்.
முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டம்
அதே ஆண்டில் இன்னொரு முக்கிய சம்பவமும் நடந்தது. சென்னை மாகாணத்தில் ஆட்சியைப் பிடித்த ராஜாஜி, பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை இந்தி கற்பது கட்டாயம் என்று ஆக்கினார் (பின்னாளில் ராஜாஜியே இந்தித் திணிப்பை எதிர்த்தார் என்பது வேறு). இதை எதிர்த்து பெரியார் போராட்டம் அறிவித்தார். பெரியார் அண்ணா ஆகியோர் 1938ம் ஆண்டு கைது செய்யப்பட்டனர். அண்ணாவுக்கு 4 மாத சிறைவாசம் விதிக்கப்பட்டது. பெரியாருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை கிடைத்தது.
திராவிட நாடு
இந்த முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை தொடர்ந்து பெரியார் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்ற முழக்கத்தை முன்வைத்தார். அப்போது தமிழ்நாடு என்ற மாநிலமே உருவாகியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதுபோலவே, இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் சிறையில் இருக்கும்போதுதான் பெரியாருக்கு நீதிக்கட்சித் தலைவர் பதவி தரப்பட்டது.
இதுவே பின்னாளில் நீதிக் கட்சியையும், பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தையும் இணைத்து 1944ல் திராவிடர் கழகமாக ஆக்குவதற்கு வழி கோலியது.
நீதிக்கட்சியிலும், திராவிடர் கழகத்திலும் பெரியாரின் தளபதியாக இருந்தார் அண்ணா.
இந்திய சுதந்திரம் குறித்து ஆலோசிக்கவும், இரண்டாம் உலகப் போரில் இந்தியர்களின் ஒத்துழைப்பைப் பெறுவதற்காகவும் 1942ல் இந்தியா வந்த கிரிப்ஸ் தூதுக்குழுவை சந்தித்து திராவிட நாட்டை தனி நாடாக அங்கீகரிக்கும்படி பெரியார் கோரிக்கை வைத்தார். அந்த சந்திப்பின்போது அண்ணா உடன் இருந்தார்.
ஆனால், இந்தக் கோரிக்கையை சர் ஸ்டாஃபோர்ட் கிரிப்ஸ் ஏற்றுக்கொள்ளவில்லை. இதையடுத்து, திராவிட நாடு கோரிக்கை நிறைவேறுவதற்கான வாய்ப்பு நழுவிவிட்டது என்று அண்ணா நினைக்கத் தொடங்கினார் என்று பின்னாளில் அவரோடு முரண்பட்ட ஈ.வெ.கி.சம்பத் அண்ணாவின் மரணத்துக்குப் பின் குறிப்பிட்டார்.
ஆனால், திராவிட நாடு என்ற லட்சியத்தை அண்ணா அத்துடன் கைவிடவில்லை. தன்னுடைய பத்திரிகைக்கு ‘திராவிட நாடு’ என்று பெயர் வைத்தார்.
அந்த திராவிட நாடு என்ற லட்சியத்துக்கு தடையாக இருந்ததாக அவரும் பெரியாரும் நினைத்தவற்றுக்கு எதிராக தீவிரமாக செயல்பட்டார்.
கம்ப ராமாயணம், பெரிய புராணம் எதிர்ப்பு
கம்ப ராமாயணம், பெரிய புராணம் ஆகிய நூல்கள் திராவிடர்கள் மீது ‘ஆரியர்கள்’, வட இந்தியர்களின் ஆதிக்கம் செலுத்த வழி செய்வதாகவும், அவை அறிவுக்குப் புறம்பாக இருப்பதாகவும் பெரியாரும் அண்ணாவும் தீவிரமாக பிரசாரம் செய்தனர். இவர்களின் கருத்துகளால் ஏராளமான இளைஞர்கள் ஈர்க்கப்பட்டனர். ஆனால், நீதிக்கட்சியின் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தால் ஈர்க்கப்பட்ட தமிழ் ஆர்வலர்கள், புலவர்கள், சைவை, வைணவ மதப் பற்று மிகுந்தவர்கள் இந்த கம்ப ராமாயண – பெரிய புராண எதிர்ப்பால் துணுக்குற்றனர்.
கம்ப ராமாயணம், பெரிய புராணம் என்ற இரண்டு நூல்களையும் தீயிட்டுக் கொளுத்தவேண்டும் என்று அண்ணா வாதிட்டார். இந்தக் கருத்தை எதிர்த்த தமிழறிஞர் ரா.பி.சேதுப்பிள்ளை, நாவலர் சோமசுந்தர பாரதியார் ஆகிய இருவரோடும் 1943ம் ஆண்டு அண்ணா தனித்தனியாக நேருக்கு நேர் விவாதத்தில் ஈடுபட்டார்.
இரண்டு தரப்பும் மிகவும் மரியாதையான முறையில் நாகரிகமாக தங்கள் கருத்துகளை முன்வைத்து வாதிட்டன. இந்த விவாதம் ‘தீ பரவட்டும்’ என்ற பெயரில் நூலாக வெளியாகி பிரபலம் அடைந்தது.
ஆரிய மாயை, நீதி தேவன் மயக்கம், கம்பரசம் போன்ற சிறு நூல்களை எளிய நடையில் எழுதி அண்ணா வெளியிட்டார்.
கம்ப ராமாயணத்தில் இருக்கும் ஆபாசமான பகுதிகள் என்று தாம் கருதியவற்றை கம்பரசத்தில் விமர்சித்தார் அண்ணா.
- `பெரியாரின் கொள்கையில் நடைமுறை மாற்றங்களை கொண்டுவந்தவர் அண்ணா: சுப.வீ.’
- தி.மு.கவைத் துவக்கிய நாளில் அண்ணா பேசியது என்ன?
இலக்கிய வளத்துக்காக கம்பராமாயணத்தை ஏற்கவேண்டும் என்று வாதிட்டவர்களுக்கு அண்ணா சொன்ன பதில்:
தங்கள் கலைகளும், வாழ்க்கை முறையும் வேறுபட்டது என்று நிரூபிக்க முடிந்ததால்தான் இரண்டே ஆண்டுகளில் தங்களுக்கு தனி நாடு வேண்டும் என்ற கோரிக்கையை முஸ்லிம்களால் முன்னெடுக்க முடிந்தது. ஆனால், தமிழர்கள் ‘ஆரியர்களின்’ வாழ்க்கை முறையையும், கலைகளையும் தங்களுடையது என்று ஏற்றுக்கொண்டதால் தன்னாட்சிக்கோ, தன்மானத்துக்கோ அவர்களால் போராட முடியவில்லை. கம்பராமாயணம் போன்ற இலக்கியங்கள் ‘ஆரியர்’களின் மேன்மையைப் பேசுகின்றன. தங்களைத் தாங்களே திராவிடர்கள் சிறுமையாக நினைக்கும்படி செய்கின்றன என்று வாதிட்டார் அண்ணா.
இத்தகைய வாதங்கள் கடுமையான இனவாத உள்ளடக்கத்தைக் கொண்டிருப்பதாக விமர்சிக்கப்பட்டன.
ஆனால், மொழி நடை, அழகிய சொற்கள் ஆகியவற்றைத் தேடுகிறவர்கள் கம்ப ராமாயணம், திருவாசகம் ஆகியவற்றைப் படிக்கலாம் என்று கூறிய அண்ணா ‘மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு’ என்றார். எதிரிகளின் நேர்மறைப் பண்பை ஏற்கவேண்டும் என்று சொல்வதற்கு அண்ணாவின் இந்த வாசகம் இன்றும் பயன்படுத்தப்படுகிறது.
பெரியாருடன் முரண்பாடு
திராவிடர் கழகத்தினர் கட்டாயம் கருப்புச் சட்டை அணியவேண்டும் என்று பெரியார் கொண்டு வந்த தீர்மானத்தை அண்ணா விரும்பவில்லை. இதனால், சுயமரியாதை இயக்கத்தினர் சமூகத்தில் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று அண்ணா கருதினார். சில கூட்டங்களுக்கு அண்ணாவே வெள்ளை சட்டையில் வந்து பேசியது பெரியாரை எரிச்சல்படுத்தியது. அண்ணாவின் புகழ் காரணமாக அவர் புறக்கணிக்கப்பட முடியாதவராக இருந்தார். எதையும் வலுவாக ஆனால், நாசூக்காகப் பேசும் அண்ணாவின் திறமை காரணமாக மாற்றுக் கருத்து உடையவர்களையும் கவரும் ஆற்றல் அவருக்கு இருந்தது. இப்படி பல விஷயங்களில் கொஞ்சம் கொஞ்சமாக பெரியார் – அண்ணா இடையே விரிசல் அதிகமானது.
இந்நிலையில், பிரிட்டாஷாரிடம் இருந்து நேரடியாக, பாகிஸ்தான் போல திராவிட நாடு என்பதைத் தனி நாடாக்கி விடுதலை பெறவேண்டும் என பெரியார் மேற்கொண்ட முயற்சி தோற்றுப் போனது.
1947 ஆகஸ்ட் 15ல் இந்தியா விடுதலை பெற்றது. வட இந்தியர்களிடம் திராவிடர்களின் எதிர்காலம் ஒப்படைக்கப்படுவதாக கூறி இதை பெரியார் துக்க தினம் என்று வருணித்தார்.
ஆனால், இதை ஒரு சுதந்திரமான நாட்டுக்கான, ஒரு ஜனநாயக அரசியலுக்கான வாய்ப்பாக அண்ணா பார்த்தார்.
இந்நிலையில் 70 வயதைக் கடந்த பெரியார் தன்னைவிட சுமார் 40 வயது குறைந்தவரான மணியம்மையை திருமணம் செய்ய முடிவெடுத்தது திராவிடர் கழகத்துக்குள் பெரும் புயலைக் கிளப்பியது. இது கட்சிக்கு அவப்பெயரைக் கொண்டுவரும் என்று விமர்சனம் எழுந்தது. இது வெறும் திருமணம் மட்டுமல்ல, பெரியார் தனக்குப் பிறகு தனது மனைவியை தலைவராக்கப் பார்க்கிறார் என்ற விமர்சனமும் வந்தது. இந்நிலையில், அதிருப்தியாளர்கள் கூடி 1949 செப்டம்பர் 17ம் தேதி திராவிட முன்னேற்றக் கழகத்தை ஏற்படுத்தினர். அண்ணா அதன் பொதுச் செயலாளர் ஆனார். பெரியார் இந்த புதிய கட்சியை கடுமையாக விமர்சித்தார்.
திராவிட முன்னேற்றக் கழகம்
முதலில் திராவிடர் கழகத்தைப் போலவே தேர்தல் அரசியலில் ஈடுபடாத இயக்கமாகவே திமுக இருந்தது. பிறகு 1957ம் ஆண்டு நடந்த இரண்டாவது பொதுத் தேர்தலில் பங்கேற்று 15 எம்.எல்.ஏ.க்களை வென்றது. காஞ்சிபுரத்தில் அண்ணா வெற்றி பெற்றார். இரண்டு எம்.பி.க்களும் வென்றனர்.
1962-ம் ஆண்டு நடந்த அடுத்த தேர்தலில் திமுக 50 தொகுதிகளை வென்றது. ஆனால், அண்ணா தோல்வி அடைந்தார். இதையடுத்து திமுக எம்.எல்.ஏ.க்களால் நாடாளுமன்ற மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அங்கு அவர் ஆற்றிய முதல் உரை புகழ் பெற்றது.
திமுகவைத் தோற்றுவித்தபோது அதன் கொள்கையாக நாத்திகம் இருக்கவில்லை. ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்ற சமரசக் கொள்கையை அண்ணா வெளிப்படுத்தினார். இது தீவிர பெரியாரியவாதிகளால் விமர்சிக்கப்பட்டது.
‘நான் பிள்ளையாரையும் உடைக்கமாட்டேன் அதற்குத் தேங்காயும் உடைக்கமாட்டேன்’ என்ற அண்ணாவின் வாசகம், வெகுஜன அரசியலுக்கேற்ற நிலைப்பாடாக, அதே நேரம் மதச்சார்பற்ற அரசியலுக்கேற்ற நிலைப்பாடாகவும் இருந்தது.
திரைப்படங்கள்
அண்ணாவுக்கு முன்பே உடுமலை நாராயணகவி, பாரதிதாசன் போன்ற திராவிட இயக்க சிந்தனை உள்ள கவிஞர்கள் சினிமாவுக்குள் நுழைந்துவிட்டனர். ஆனால், 1948ம் ஆண்டு நல்ல தம்பி படத்துக்கு வசனகர்த்தாவாக அண்ணா திரைத்துறையில் நுழைந்தபோது அது திராவிட இயக்கத்துக்கும், திரைத்துறைக்குமே முக்கியமான திருப்பு முனையாக பண்பாட்டு மாற்றமாக இருந்தது என்கிறார் திரைப்படம் குறித்து முனைவர் பட்ட ஆய்வு செய்தவரும், தமிழப் பேராசிரியருமான இரா.முருகன்.
“நல்ல தம்பிக்கு அண்ணா வசனம் எழுதியிருந்தாலும், 1949ம் ஆண்டு அண்ணாவின் கதை வசனத்துடன் வெளியான வேலைக்காரி படம்தான் உண்மையில் திரைத்துறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது. அதற்கு முன்பு காவியப் படங்கள், அரசர்கள்களைப் பற்றிய படங்கள், தெய்வங்களைப் பற்றிய படங்கள் வந்துகொண்டிருந்த நிலையில், அண்ணாவின் வேலைக்காரிதான் சமானிய மனிதர்களைப் பற்றிய கதையை தமிழ்த் திரைத்துறையில் பேசிய முதல் படம் என்கிறார் முருகன். தெய்வீகமான, காவியமான பெயர்களைத் தாங்கியே படங்கள் வந்துகொண்டிருந்த நிலையில், வேலைக்காரி என்ற பெயரே அந்தக் காலத் திரைத்துறையில் புரட்சிகரமானது” என்கிறார் பேராசிரியர் முருகன்.
திராவிட நாடு கோரிக்கையை கைவிடுதல்
இந்த நிலை வரையிலும் திமுக தன்னுடைய திராவிட நாடு பிரிவினை கொள்கையை கைவிடாமல் இருந்தது. ஆனால், 1963ம் ஆண்டு மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசு பிரிவினை கோரும் அமைப்புகள் இந்தியாவில் தேர்தலில் பங்கேற்பதை தடை செய்யும் வகையில் அரசமைப்புச் சட்டத்தைத் திருத்தியது. இந்த 16வது அரசமைப்பு சட்டத் திருத்தமே திமுகவை குறிவைத்து கொண்டுவரப்பட்டதுதான் என்று தமது ‘ரீபப்ளிக் ஆஃப் ரெட்டோரிக்’ நூலில் குறிப்பிடுகிறார் மூத்த வழக்குரைஞர் அபினவ் சந்திரசூட்.
இதையடுத்து திமுக திராவிட இயக்கக் கோரிக்கையைக் கைவிடுவதா அல்லது தேர்தலில் போட்டியிடும் திட்டத்தைக் கைவிடுவதா என்ற சங்கடமான சூழ்நிலை ஏற்பட்டது. இந்தப் பிரச்சனை 1963 ஜூன் 8,9,10 தேதிகளில் நடந்த திமுக பொதுக்குழுவில் விவாதிக்கப்பட்டது. திராவிட நாடு கோரிக்கையை தற்காலிகமாக கைவிட்டு தேர்தலில் பங்கேற்கவேண்டும் என்பதற்கான காரணங்களை அடுக்கி மிக நீண்ட உரையை அண்ணா ஆங்கிலத்திலும், தமிழிலும் எழுதிவைத்து பொதுக்குழுவில் வாசித்தார். இந்த தமிழ் உரையை பின்னாளில் கருணாநிதி ‘எண்ணித் துணிக கருமம்’ என்ற பெயரில் தனி நூலாகப் பதிப்பித்து வெளியிட்டார்.
முடிவில் தேர்தலில் பங்கேற்கவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு, திராவிட நாடு கோரிக்கை கைவிடப்பட்டது. ஆனால், அந்தக் கோரிக்கைக்கான காரணம் அப்படியே இருப்பதாகத் தெரிவித்தார் அண்ணா. இதன் பிறகு, திராவிட நாடு கோரிக்கை, மாநில சுயாட்சிக் கோரிக்கையாக மாற்றம் பெற்றது. மாநிலங்களுக்கு கூடுதல் உரிமை வேண்டும் என்று வாதிட்டார் அண்ணா. ‘மத்தியில் கூட்டாட்சி. மாநிலத்தில் சுயாட்சி’ என்பது அண்ணாவின் புகழ் பெற்ற முழக்கம்.
- திராவிடக் கட்சிகளின் 50 ஆண்டு ஆட்சி : நிதி நெருக்கடியிலும் வளர்ச்சி
- ‘திராவிட இயக்கங்களின் வரலாற்றுத் தேவை முடியவில்லை’
இதன் பிறகு, 1965ம் ஆண்டு நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் அண்ணா தலைமையிலான திமுக தீவிரமாக ஈடுபட்டது. போராட்டம் வன்முறையாக மாறியபோது அண்ணா போராட்டத்தை நிறுத்தினாலும்கூட அந்தப் போராட்டம் திமுக ஆட்சிக்கு வருவதற்கான உந்து விசையாக மாறியது. அத்துடன் விலைவாசி உயர்வு போன்ற வாழ்வாதாரப் பிரச்சனைகளும் பக்தவத்சலம் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக அதிருப்தி அலையை உருவாக்கியிருந்தன.
ராஜாஜியுடன் கூட்டணி
ராஜாஜி தலைமையிலான சுதந்திரா கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட திமுக பெரு வெற்றி பெற்றது. 1967 மார்ச் 6-ம் தேதி அண்ணா முதல்வரானார். அண்ணாவும் அமைச்சர்களும் இறைவனின் பெயரால் பதவி ஏற்காமல், ‘உளமாற’ உறுதி கூறி பதவி ஏற்றனர்.
வெற்றி பெற்ற பிறகு, 18 ஆண்டு காலப் பிரிவுக்குப் பின் பெரியாரை சென்று பார்த்தார் அண்ணா. தங்கள் தேர்தல் வெற்றியை பெரியாருக்கு சமர்ப்பிப்பதாகவும் அவர் கூறினார். அதன் பிறகு திமுக மற்றும் அண்ணா மீதான பகையை விட்டார் பெரியார்.
சென்னை மாகாணத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்டது, புரோகிதர்கள் இல்லாமல் நடக்கும் சுயமரியாதைத் திருமணங்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும் வகையில் நிறைவேற்றப்பட்ட சட்டம் ஆகியவை அவரது குறுகிய கால ஆட்சியின் சாதனைகள். திமுகவின் தேர்தல் வாக்குறுதியான ஒரு ரூபாய்க்கு ஒரு படி அரிசித் திட்டம் செயல்படுத்தப்பட்டு, பிறகு நிதிப் பற்றாக்குறையால் நிறுத்தப்பட்டது.
சிக்கன நடவடிக்கையாக அமைச்சர்களின் ஊதியம் பாதியாக குறைக்கப்பட்டது. அண்ணா சென்னை நுங்கம்பாக்கம் அவென்யூ சாலையில் உள்ள தமது எளிமையான வீட்டிலேயே வாழ்ந்தார். ஒருவர் வைத்திருக்கக் கூடிய நில அளவுக்கான உச்ச வரம்பை 30 ஏக்கரில் இருந்து 15 ஏக்கராக குறைத்து சட்டம் இயற்ற அண்ணா நடவடிக்கை எடுத்தார். அந்த நடவடிக்கை அவரது மரணத்துக்குப் பிறகே நிறைவடைந்து கருணாநிதி முதல்வராக இருந்தபோது 1,78,880 ஏக்கர் மிகை நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு 1,36,236 நிலமற்ற விவசாயிகளுக்கு பிரித்து வழங்கப்பட்டன என்கிறார் ஆர்.கண்ணன்.
முதலிரண்டு உலகத் தமிழ் மாநாடுகளை நடத்தியதும் அண்ணாவின் சாதனை. இதையடுத்து தமிழ்நாடு அரசின் கொள்கையாக இருமொழிக் கொள்கையையும் அண்ணா கொண்டுவந்தார். 1968 ஏப்ரல் மாதம் அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்துக்கு சென்று அங்கு உரையாற்றினார் அண்ணா. அதே ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகம் அண்ணாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் அளித்தது. அதே ஆண்டு செப்டம்பரில் அண்ணாவுக்கு புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. சிகிச்சைக்காக அண்ணா செப்டம்பர் 10ம் தேதி அமெரிக்காவுக்கு கிளம்பினார். அவரை நேரில் வந்து கண்ணீர் மல்க வழியனுப்பி வைத்தார் பெரியார்.
சிகிச்சை முடிந்து அண்ணா சென்னை திரும்பிய பிறகும் அவரது உடல் நிலை மிகவும் பலவீனமாகவே இருந்தது. 1969 ஜனவரி இறுதியில் அண்ணாவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பிப்ரவரி 3-ம் தேதி அதிகாலை 12.20க்கு அண்ணா இறந்தார்.
தஞ்சையை அடுத்த கீழ் வெண்மணியில் கூலி உயர்வு கேட்டதற்காக 44 தலித்துகள் உயிரோடு கொளுத்தப்பட்ட நிகழ்வு அவரது ஆட்சிக் காலத்தில் 1968 டிசம்பர் 25ம் தேதி நடந்தது. இது தொடர்பாக அண்ணா எடுத்த நடவடிக்கை குறித்து கேள்விகள் எழுப்பப்படுகின்றன. ஆனால், அப்போது அண்ணா மிகவும் உடல் நலிவுற்றிரு்தார். அமைச்சர்களை அந்த இடத்துக்கு அனுப்பி நடவடிக்கையைத் துரிதப்படுத்தினார். ஆனால், அந்த சம்பவத்துக்குப் பிறகு அண்ணா சுமார் ஒரு மாதத்தில் இறந்துவிட்டார். எனவே அண்ணாவின் நடவடிக்கையை இந்த சம்பவத்தில் மதிப்பிட முடியாது என்று வாதிடுவோர் உண்டு.
தமிழும் அண்ணாவும்
தற்காலத் தமிழ் மொழி மீது அண்ணா செலுத்திய தாக்கமும் அளப்பரியது.
‘வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல’ என்ற தொடரை பலரும் பழமொழி என்று கருதியிருக்கலாம். ஆனால், இது அண்ணாவின் சொல்லாட்சி. ‘உறுப்பினர்’ என்ற சொல் தமிழுக்கு அண்ணாவின் கொடை என்று தமிழ் ஆட்சிமொழித் துறை அலுவலர் ஒருவர் ஒரு கருத்தரங்கில் தெரிவித்ததை கேட்டிருக்கிறேன்.
தமிழில் ஏராளமான சம்ஸ்கிருதச் சொற்கள் கலந்து மணிப்பிரவளம் என்று சொல்லக்கூடிய கலப்பு மொழியாக ஆகிவிட்டிருந்த நிலையில், அந்த சம்ஸ்கிருதச் சொற்களை நீக்கி தமிழை மீட்க முயன்றது தனித்தமிழ் இயக்கம். மறைமலைஅடிகள், பரிதிமாற்கலைஞர், தேவநேய பாவாணர் போன்றோரால் முன்னெடுக்கப்பட்ட அந்த இயக்கம் பெரிதும் புலவர்களின் இயக்கமாகவே இருந்தது.
ஆனால், தமிழ்ச் சமூகத்தின் புதிய தேவைகளுக்கு ஏற்ப தனித்தமிழ்ச் சொற்களைப் படைத்து அதை மேடையில் பேசி, பிறகு பேச்சு மொழியாகவும் ஆக்கியது திராவிட இயக்கத்தின் சாதனை என்றால் அந்த சாதனைப் பயணத்தை தொடக்கியவர் அண்ணா.
பஞ்சாயத்து சமிதி என்ற சொல் ஊராட்சி ஒன்றியம் ஆனதும், காரியக் கமிட்டி செயற்குழு ஆனதும், மந்திரி அமைச்சர் ஆனதும், அக்கிரசேனார் அவைத்தலைவர் ஆனதும், சட்ட சபை சட்டப் பேரவை ஆனதும் அண்ணா தொடங்கிய பேச்சுமொழிப் புரட்சி செய்த சில வேதி வினைகள்.
பழைய மொழியை மீட்டெடுத்து…
அரசியல் வானில் அண்ணா கொண்டுவந்தது வெறும் பேச்சு மாற்றமல்ல. அது மிகப் பெரிய அரசியல் விழைவை நோக்கிய பயணம். அதன் திசையோடு உடன் பட்டவர்களும், மாறுபட்டவர்களும் உண்டு என்பது வேறு.
“20-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழ் மேடைப் பேச்சு பழங்காலப் பேச்சைப் போல ஒலிக்கத் தொடங்கியது. பழங்காலச் சொற்களை, உவமைகளை, உருவகங்களைப் பயன்படுத்த தொடங்கியது. ஆனால், இவையெல்லாம் நவீன, ஜனநாயக அரசியலைப் பேசுவதற்காகவே பயன்பட்டன. வேறு சொற்களில் கூறுவதானால், தமிழர்கள் தங்களை ஒரு நாடாக, ஒரு மக்களாக, பொது மக்கள் திரளாக, ஓர் அரசியல் பொருளாதாரமாக, பெரிய அளவில் இவை அனைத்துமாக நினைக்கத் தொடங்கினர். இப்படி அவர்கள் புதிதாக ஒன்றைச் செய்ய முயன்றபோது, அவர்களது பழைய விஷயங்கள் மேலெழுந்து வந்தன” என தமிழ் மேடைப் பேச்சும், திராவிட அழகியலும் (Tamil Oratory and Dravidian Aesthetic) என்ற தமது நூலில் குறிப்பிடுகிறார் யேல் பல்கலைக்கழக மானுடவியல் பேராசிரியர் பெர்னார்டு பேட்.
அதாவது மேடைப் பேச்சில் செந்தமிழைக் கொண்டுவந்த திராவிட அரசியல், அதை பழமையை நோக்கி கொண்டு செல்வதற்காக செய்யவில்லை. நவீன ஜனநாயக அரசியலுக்காக அதை செய்தது. புதிதாக ஒரு சமூகமாக, நாடாக, பொருளாதார அமைப்பாக தங்களை நினைக்கத் தொடங்கிய நிலையில், அந்த அரசியலைப் பேசுவதற்காகவே பழைய மொழியை மீட்டெடுத்து அவர்கள் பயன்படுத்தினர் என்பதே அவர் கூறுவதன் பொருள். இப்படி பழமையான செம்மொழியை மீட்டெடுத்து அதை புதிய அரசியலுக்குப் பயன்படுத்தும் அசகாய சூரத்தனத்தை திராவிட அரசியலுக்கு கொடையாக அளித்தது வேறு எவரும் அல்ல. அண்ணாதான்.
தொடர்புடைய செய்திகள்:
Leave a Reply
You must be logged in to post a comment.