நீதிமன்றம் விடுதலை செய்தும் தொடர்ந்து திருச்சி சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்களை விடுதலை செய்யவும்

செப்தெம்பர் 13, 2021

ரொறன்ரோ

மாண்புமிகு மு.க. ஸ்டாலின்
முதலமைச்சர்,
தமிழ்நாடு.

நீதிமன்றம் விடுதலை செய்தும் தொடர்ந்து திருச்சி சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்களை விடுதலை செய்யவும்

மாண்புமிகு முதலமைச்சர்  அவர்கட்கு,

வணக்கம், திருச்சிராப்பள்ளியில் உள்ள சிறப்பு முகாமில் 78  இலங்கைத் தமிழர்கள் தங்களை விடுவிக்குமாறிக் கூறி நீண்ட காலமாக அறவழியில் போராடி வருகிறார்கள். இதில் வேதனை என்னவென்றால் இவர்களுக்கு எதிராக தமிழ்நாட்டின் உளவுத் துறையான கியூ பிரிவு பொலீசாரால் தொடுத்த வழக்கில்  அவர்கள் நிரபராதிகள் எனக் கண்டறிந்து நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டவர்கள்  ஆவர்.    இருந்தும் கியூ பிரிவு பொலீசார் நீதிமன்றத் தீர்ப்பைப் புறந்தள்ளிவிட்டு  இவர்களைச் சிறப்பு முகாமில் தொடர்ந்து தடுத்து வைத்திருக்கிறது.

1983  இல் நிராயுதபாணிகளான தமிழர்கள் மீது சிங்களவர் நடத்திய இனப்படுகொலையை அடுத்து இலட்சக்கணக்கான  இலங்கைத் தமிழர்கள் தங்கள் உயிரைக் காப்பாற்ற  அரசியல் தஞ்சம் கேட்டு தமிழ்நாடு உட்பட பல நாடுகளுக்குப் புலம் பெயர்ந்தார்கள். அண்மையில் தமிழக முதலமைசர் வெளியிட்ட புள்ளி விபரத்தின்படி1983 முதல் இதுவரை 304,269 இலங்கைத் தமிழர்கள் ஏதிலிகளாக தமிழ்நாட்டிற்கு புலம்பெயர்ந்துள்ளார்கள்.  இவர்களில், 18,944 குடும்பங்களைச் சார்ந்த 58,822 பேர் தமிழ்நாட்டின் 29 மாவட்டங்களில் அமைந்துள்ள 108 முகாம்களில் (இரண்டு சிறப்பு முகாம்கள் உள்பட) தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். மேலும், 13,540 குடும்பங்களைச் சார்ந்த 34,087 பேர் காவல் நிலையங்களில் பதிவுசெய்துவிட்டு  முகாமுக்கு வெளியில்  வாழ்ந்து வருகிறார்கள்.

இலங்கைத் தமிழர்களை அடைத்து வைத்திருக்கும் முகாம் பெயரை இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் எனப் பெயர் மாற்றம் சூட்டப்பட்டதையும் அவர்களுக்கு ரூபா 317.4 கோடியில் பல வாழ்வாதாரத்  திட்டங்களை மாண்புமிகு  முதலமைச்சர்  அண்மையில்  அறிவித்துள்ளார். இதனைப் பாராட்டி எமது அமைப்பு முதலமைச்சருக்கு  ஒரு கடிதம் கடந்த ஓகஸ்ட் 30, 2021 அன்று அனுப்பியிருந்தது.

திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் 78 இலங்கைத் தமிழர்கள் கடந்த சில மாதங்களாக தங்களைச் சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று  கேட்டுப்   போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.  குறிப்பாக, பொய் வழக்கில் தங்களைக்  கைது செய்யப்பட்டதாகவும், தண்டனைக் காலம் முடிந்தும் சிறப்பு முகாம் என்ற சிறைக்குள் அடைத்து வைகடகப் பட்டுள்ளனர் என்றும், நீதிமன்றப் பிணையில்  வெளிவந்தவர்களையும் கைது செய்து அடைத்திருந்தார் என்றும் குற்றஞ்சாட்டுகிறார்கள்.

மேலும் இந்தக் கொரோனா  பெருந்தொற்றுக் காலத்திலாவது தங்களை விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த ஒரு மாத காலமாக போராடி வருகிறார்கள். இந்தப் போராட்டத்தின் காரணமாக 20 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 நீண்ட காலமாக போராட்டங்களை நடத்தியும் பலன் இல்லாததாலும், தொடர்ந்து வழக்குகள்  போடப்படுவதாலும் இந்த ஏதிலிகள்  மன அழுத்தியிலும் வேதனையிலும் இருக்கின்றனர். இதன் உச்சக்கட்டமாக கடந்த ஓகஸ்ட் 19 அன்று முகாமுக்குள்ளேயே,   16  சிறைக் கைதிகள் அளவுக்கு அதிகமான நித்திரைக் குளிசைகளை விழுங்கித் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். சிலர் தூக்குப்போட முயன்றனர். மேலும் ஒன்றிரண்டு பேர் வயிறு மற்றும் கழுத்துப் பகுதிகளை கத்தியால் அறுத்துக் கொண்டனர்.  இந்தச் செய்தியைக் கேட்ட சிறைக் காவலர்கள்  மற்றும்  பொலீசாரும் விரைந்து சென்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்டவர்களையும் மீட்டுத்  திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்கள்.   

திருச்சி சிறை வளாகத்தில் அடைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்கள் காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராகப் பல குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள். முக்கியமாக  சிறைக் கைதிகளை சட்டத்தரணிகள் சந்தித்துப் பேசும் வாய்ப்பு மறுக்கப்படுகிறது. இது அடிப்படை மனித உரிமை மீறலாகும். தங்களைத் திரும்பவும் இலங்கைக்கு நாடுகடத்தப் போவதாக  கியூ பிரிவு பொலீசார் பயமுறுத்துவதாகவும் குற்றம் சாட்டுகிறார்கள்.

“சிறப்பு முகாமில் இருப்பது சித்திரவதைக்கு ஒப்பானது”  என மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி வருணித்துள்ளார். இவர்  2009 ஆம் ஆண்டு சிறிலங்கா ஆயுதப் படைகளால் பொதுமக்கள் மீது  நடத்திய தாக்குதலில்  பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்று குரல் கொடுக்ம் ஒருவர் ஆவர்.

“சிறப்பு முகாம்கள் ஏற்கனவே கொடிய சிறைகள், மின்சார வேலிகளால் சூழப்பட்டு, 24 மணி நேர கண்காணிப்பின் கீழ் மற்றும் 250 க்கும் மேற்பட்ட காவலர்களால் பாதுகாக்கப்படுகின்றன. புலிகளின் இருப்பைக் குறைப்பதற்காக இந்தச் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டதாக அரசாங்கம் கூறுகிறது, ஆனால் அவர்கள் செய்தது அகதிகளின் உரிமைகளை அகற்றி அவர்களை நாடு கடத்தும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கும் நிலையில் வைத்திருப்பதாகும். இது நிச்சயம் அவர்களின் மரணத்திற்கு வழிகோலும்” என்கிறார் திருமுருகன் காந்தி.

இந்த முகாம் பற்றியும் அதில் அடைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்களின் துன்ப துயரங்கள் பற்றி CARAVAN என்ற ஏடு ஒரு நீண்ட கட்டுரையைக்   கடந்த மாதம் வெளியிட்டுள்ளது. அந்தக் கட்டுரையை https://caravanmagazine.in/security/amid-conflicting-court-orders-former-ltte-man-faces-threat-of-deportation-loss-of-refugee-status என்ற இணையதள முகவரியில் படித்துத் தெரிந்து  கொள்ளலாம்.

முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களது ஆட்சி தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் மட்டும் அல்ல ஏனைய நாடுகளில் வாழும் தமிழ்மக்கள் மத்தியிலும் ஒரு எழுச்சியைத் தோற்றுவித்துள்ளது. கடந்த நான்கு மாதங்களில் முதலமைசர் அறிவித்துள்ள பல்வேறு நல்வாழ்வுத் திட்டங்கள், தமிழ்மொழி வளர்ச்சிக்கான முன்னெடுப்புக்கள் தமிழ்நாட்டு மக்களது வாழ்வில் ஒலு ஒளிமயமான பொற்காலம் நிச்சயம் பிறக்கும் என்ற நம்பிக்கையை துளிர்விட்டுள்ளது. அதே போல்  தமிழ்நாட்டில் ஏதிலி முகாம்களில் வாழும் இலங்கைத் தமிழர்களது வாழ்வில் விடியல் பிறக்கும் என நெஞ்சார நம்புகிறோம்.

எனவே திருச்சி சிறப்பு முகாமில் சித்திரவதைக்கு உள்ளாகி வாடும் இலங்கைத் தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும்.  குறைந்தபட்சம் அவர்கள் வெளியில் தங்கள் குடும்பம் அல்லது உறவினர்களோடு  சேர்ந்து  வாழ ஆவன செய்ய வேண்டும் என அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

கனடா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
ரொறன்ரோ

About editor 3047 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply