அமைதிப்படையை அனுப்பியது பெரிய தவறு – முன்னாள் தளபதி
15 ஏப்ரல் 2015
இலங்கைக்கு இந்திய அமைதிப் படையை அனுப்பியது மிக உயர் மட்டத்தில் எடுக்கப்பட்ட தவறான முடிவு என்று இந்திய இராணுவத்தின் முன்னாள் தலைமைத் தளபதியும், தற்போதைய இந்திய வெளியுறவுத் துறை துணை அமைச்சருமான வி கே சிங் விமர்சித்துள்ளார்.

இலங்கைக்கு இராணுவத்தை அனுப்புவது என்ற முடிவு இராணுவ மட்டத்தில் எடுக்கப்படவில்லை என்றும், இலங்கை அரசுக்கும் புலிகளுக்கும் இடையே இலங்கையில் சண்டை நடந்து கொண்டிருந்த சமயத்தில் இந்திய அரசு இலங்கை அரசுடன் மட்டும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதை குறிப்பிட்டுக் காட்டிய அவர், இந்திய இராணுவம் தான் பயிற்சியளித்த நபர்களுடன் மோத வேண்டிய சூழல் உருவானதாகவும், இது தர்மசங்கடங்களைத் தோற்றுவித்ததாகவும் சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசுகையில் வி கே சிங் குறிப்பிட்டார்.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை அழிக்க இந்திய அமைதிப்படைக்கு பல சந்தர்ப்பங்கள் கிடைத்தும், ஒவ்வொரு முறையும் பிரபாகரனை பத்திரமாகச் செல்ல அனுமதிக்குமாறே உத்தரவு வழங்கப்பட்டது என்றும் வி கே சிங் கூறியுள்ளார். இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி பிரேமதாச, இந்திய இராணுவத்தை எதிர்க்க விடுதலைப் புலிகளை பயன்படுத்தியதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
பிரபாகரன்
இந்த சூழலில் ஜெனரல் வி கே சிங் தெரிவித்துள்ள கருத்துக்கள் குறித்து புிபிசியிம் பேசிய இந்திய அமைதிப் படையில் பங்காற்றிய கர்னல் ஹரிஹரன், இராணுவக் குறிக்கோள்கள் தெளிவாக இல்லை என்றார். ஆனால் தனக்குத் தெரிந்தவரை ஒரே ஒரு முறைதான் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மறைவிடத்தை இந்தியப் படையினர் நெருங்கியதாகவும், அப்போது பிரபாகரன் தப்பிவிட்டதாகவும் தெரிவித்தார்.
இந்திய இலங்கை ஒப்பந்தத்தை அமல்படுத்துவதற்காக இலங்கைக்கு அனுப்பப்பட்ட இந்திய இராணுவம் அதிக அளவு உயிரிழப்புக்களை சந்தித்தது. நகர்ப்புறங்களில் விடுதலைப் புலிகளின் செயல்பாடுகளை அமைதிப்படை கட்டுப்படுத்தினாலும், காடுகளுக்குச் சென்று பதுங்கிய விடுதலைப் புலிகள் கெரில்லா போர் முறையை கையாண்டு அமைதிப் படைக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்தனர். இந்திய அமைதிப் படை எத்தகைய அரசியல் குறிக்கோள்களை நிறைவேற்றப் போகிறது என்ற தெளிவில்லாத சூழல் ஏற்பட்டதன் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டதாக முன்னாள் இந்திய இராணுவ அதிகாரிகள் பலர் தெரிவித்துள்ளனர்.

இந்திய இராணுவம் இலங்கையில் கால் பதித்தபோதே, அந்த இராணுவ நடவடிக்கைக்கு எதிராக இந்தியாவில் மிகவும் மதிக்கப்பட்ட முன்னாள் ராஜதந்திரிகள் குரல் எழுப்பியதை நினைவ கூர்ந்த இலங்கையின் முன்னாள் ராஜதந்திரியான டாக்டர் தயான் ஜெயதிலக, “இந்தியாவின் முரண்பட்டக் குறிக்கோள்களே இராணுவத் தோல்விக்குக் காரணம் என்கிறார். இலங்கையின் ஒருமைப்பாட்டை பேணுவதாக உறுதியளித்த இந்தியா, தமிழகத்திலிருந்து எழுந்த அரசியல் அழுத்தம் காரணமாக பல்வேறு ஆயுதக் குழுக்களுக்கும் ஆயுதங்களையும், பயிற்சிகளையும் அளித்தது. ஒரே நேரத்தில் முன்னேடுக்கப்பட்ட இந்த முரண்பட்ட நிலைப்பாட்டின் காரணமாக அமைதிப்படை பெரிய விலை கொடுத்தது,” என்றார்
விடுதலைப் புலிகளால் ஏற்பட்ட சவாலுக்கு இராணுவ ரீதியாக மட்டுமே தீர்வு காண முடியும் என்று உறுதியாக முடிவெடுத்து அதற்காக தேசிய வளங்களை திரட்டியதன் காரணமாகவே புலிகள் பிரச்சனையை ராஜபக்ஷவால் தீர்க்க முடிந்தது என்றும் தயான் ஜெயதிலக தெரிவித்தார்.
https://www.bbc.com/tamil/global/2015/04/150415_vksinghonipkf
Leave a Reply
You must be logged in to post a comment.