எந்தவொரு வெளிநாட்டின் தலையீட்டையும் அனுமதிக்க மாட்டோம்! இஸ்லாமிய சட்டங்களின்படி நாட்டை வழிநடத்துவோம்!
நக்கீரன்
காக்கையைக் கங்கையில் குளிப்பாட்டினாலும் அதன் கருமை நிறத்தை மாற்ற முடியாது. அது போலவே இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கமான தலிபான்களும் தாங்கள் திருந்தி விட்டதாகவும் முன்னைய பிழைகளை விடமாட்டோம் என்று சொன்னாலும் அவர்களது நடவடிக்கைகள் எதிர்மாறாக இருகின்றன.
தலிபான்கள் முன்னர் ஆப்கனிஸ்தானை ஆண்ட (1996 – 2001) போது இஸ்லாமிய அடிப்படைவாதக் கோட்பாடுகளை எந்த விட்டுக் கொடுப்பும் இல்லாமல் பின்பற்றினார்கள். இஸ்லாமிய ஷாரியா சட்டதிட்டங்களை நூறு விழுக்காடு நடைமுறைப்படுத்தினார்கள்.
அப்போது குற்றவாளிகள் விளையாட்டு மைதானத்தில் நிறுத்திவைக்கப்பட்டு கற்களால் எறிந்து கொல்லப்பட்டார்கள். பெண்கள் வேலை செய்வது முற்றாகத் தடைசெய்யப்பட்டது. பெண்கள் பள்ளிக்கூடங்களில் படிப்பது தடைசெய்யப்பட்டது. தொலைக்காட்சி, காணொளி மற்றும் இசை, நடனம் தடை செய்யப்பட்டன. ஒரு நாளில் அய்ந்து தரம் தொழுகை செய்யாத ஆண்கள் சவுக்கால் அடிக்கப்பட்டார்கள். அதேபோல் தாடி வைத்திராத ஆண்களுக்கு சவுக்குத் தண்டனை வழங்கப்பட்டது.
பயங்கரவாத அமைப்புக்களான அல் கொய்தா மற்றும் ஐஎஸ்ஐஎஸ் தடை செய்யப்படும் என்று தலிபான்கள் அறிவித்தார்கள். ஆனால் தலிபான்கள் அல் கொய்தா மற்றும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புகளோடான தொடர்பை இன்னமும் துண்டிக்கவில்லை.
தலிபான்களின் மீள ஆட்சியைப் பிடித்திருப்பது உலகெங்கிலும் உள்ள இஸ்லாமிய தீவிரவாதிகளை ஊக்குவிக்கும் என மேற்குலக நாடுகள் அஞ்சுகின்றன. அண்மையில் மத்திய கிழக்கில் ஐஎஸ்ஐஎஸ் மின்னல் வேகத்தில் இராக், சிரியா நாடுகளைத் தாக்கி இஸ்லாமிய அரசை நிறுவியது நினைவிருக்கலாம். அப்படியான பயங்கரவாத அமைப்புக்களுக்கு அமெரிக்க வல்லரசைத் தோற்கடித்த தலிபான்கள் புதிய உத்வேகத்தையும் உந்துசக்தியையும் கொடுக்க வாய்ப்புண்டு.
தலிபான் இயக்கத்தின் பேச்சாளர் தங்களது இயக்கம் ஜம்மு கஷ்மீர் மக்களுக்கு உதவப் போவதாக அறிவித்துள்ளார். அவர்கள் தங்கள் ககோதரர்கள் எனச் சொந்தம் கொண்டாடியுள்ளார்கள். இதன் காரணமாக இந்தியாவிற்குத் தீவிரவாத இயக்கங்களால் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதாக உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. குறிப்பாக ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கத்தின் மசூத் அசார், தலிபான் இணை நிறுவனர் முல்லா அப்துல் கனி பராதர் உள்ளிட்ட தலிபான் இயக்கத் தலைவர்களைச் சந்தித்து, ஜம்மு காஷ்மீரில் தங்களது நடவடிக்கைகளுக்கு உதவி கோரியதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
மேலும், இந்திய வெளியுறவு அதிகாரி இதுகுறித்துக் கூறுகையில், “லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது, ஹிஸ்புல் முஜாஹிதீன் மற்றும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள மற்ற பயங்கரவாதிகளின் இயக்கத்தை உளவு அமைப்புகள் இடைமறித்துள்ளன. கையெறிக் குண்டுத் தாக்குதல், ஸ்ரீநகரின் பொது இடங்களில் தாக்குதல் நடத்துவது உட்பட தீவிரவாதிகளின் பல்வேறு வகையான தாக்குதல் திட்டம் குறித்து பாதுகாப்பு அமைப்புகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தலிபான்களுக்கு எதிரான போரில் இந்தியா அமெரிக்கா போன்று ஆப்கனிஸ்தான் படைகளுக்கு இராணுவப் பயிற்சி அளித்தது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளைவிட தலிபான்களால் அண்டை நாடான இந்தியாவுக்கே பாதுகாப்பு அச்சுறுத்தல் அதிகமாக இருக்கும்.
இரண்டு நாட்களுக்கு முன்னர் உருசிய கூட்டமைப்பின் பாதுகாப்பு சபையின் செயலாளர் நிகோலாய் பத்ருஷேவ் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலால் அவர்களைச் சந்திக்க இரண்டு நாள் பயணமாக செவ்வாய்க்கிழமை புதுடெல்லி வந்தார்.
ஆப்கானிஸ்தானில் இருந்து வரும் பயங்கரவாதக் குழுக்களின் அதிகரிப்பு, போதைப்பொருள் கடத்தல் அதிகரிப்பு, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் அகதிகளின் வருகை போன்ற பொதுவான சவால்களை இந்தியாவும் உருசியாவும் எதிர்கொள்கின்றன.
மேலும், அதி நவீன அமெரிக்க இராணுவ உபகரணங்கள் இப்போது தலிபான் கைகளில் உள்ளன, எனவே இரு நாடுகளும் இந்தச் சிக்கல் பற்றி விவாதித்திருக்கின்றன. இந்த ஆலோசனை இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உருசிய கூட்டமைப்பின் தலைவர் விளாடிமிர் புட்டினுக்கும் இடையே ஓகஸ்ட் 24 அன்று நடைபெற்ற தொலைபேசி உரையாடலின் தொடர்ச்சியாகும்.
மோடிக்கும் புடினுக்கும் இடையிலான உரையாடலைத் தொடர்ந்து, ‘பயங்கரவாத சித்தாந்தம்’ மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளிவரும் போதைப்பொருள் அச்சுறுத்தலை எதிர்கொள்ள ஒத்துழைப்பை மேம்படுத்த இரு தலைவர்களும் விருப்பம் தெரிவித்ததாக உருசிய கூறியது. இந்த விடயத்தில் ஆலோசனைகளுக்கு ஒரு நிரந்தர இருதரப்பு தொடர்பை நிறுவவும் அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
தலிபான்கள் தாங்கள் முன்னர் விட்ட பிழைகளை மீண்டும் செய்யப் போவதில்லை என்று சொன்னாலும் அவர்கள் நிறுவியுள்ள இடைக்கால அமைச்சரையில் முன்னைய கடும்போக்கு இஸ்லாமிய அடிப்படைவாதிகள் இடம்பெற்றிருப்பது அதனைப் பொய்யாக்கியுள்ளது.
முல்லா மொகமது ஹசன் அக்குந்த் – இடைக்காலப் பிரதமர்
முல்லா அப்துல் சானி பறாடார் – இடைக்கால துணைப் பிரதமர்
முல்லா அகமத்துல்லா நஜீப் – இடைக்கால துணை இயக்குநர் பாதுகாப்பு செயலகம்
சிராசுடின் ஹக்கானி – இடைக்கால உட்துறை அமைச்சர்
காலில் உர் ரெகமான் ஹக்கானி – இடைக்கால அகதிகள் அமைச்சர்
மல்லா அப்துல் ஹக் வாசிக் – இடைக்காலத் தலைவர் என்டிஎஸ்
முல்லா ஹேடயத்துல்லா பட்றி – இடைக்கால நிதி அமைச்சர்
முல்லா மொகமது வகூப் – இடைக்கால பாதுகாப்பு அமைச்சர்
மவுலாவி ராஜ் யாவாட் – இடைக்கால துணை புலனாய்வு அதிகாரி
ஷேக் மவுலாவி நூர்துல்லா முனீர் – இடைக்கால கல்வி அமைச்சர்
இந்த அமைச்சர் பட்டியலில் இடம்பெற்ற பலர் பஷ்தூன் (பட்டாணியர்) இனத்தைச் சேந்தவர்கள். ஆப்கானிஸ்தான் மக்கள் தொகையில் பஷ்தூன் மக்களே பெரும்பான்மையாக (42 விழுக்காடு) இருக்கிறார்கள். அவர்களுக்கு அடுத்து டாஜியர்கள் 27 விழுக்காடு, ஹஜாராஸ் 8 விழுக்காடு, உஸ்பெக்ஸ் 9 விழுக்காடு, ஏமக்ஸ் 4 விழுக்காடு, டர்க்மென்ட் 3 விழுக்காடு மற்றும் பலுசி 2 விழுக்காடு. மீதமுள்ள 13 விழுக்காடு சிறுபான்மையினரானவர். மதத்தைப் பொறுத்தளவில் 99 விழுக்காடு மக்கள் சன்னி முஸ்லிம்கள் ஆவர்.
இடைக்காலப் பிரமராக நியமிக்கப்பட்டுள்ள முல்லா மொகமது ஹசன் அகுந்த் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் பயங்கரவாத கருப்புப் பட்டியலில் இடம் பெற்றுள்ளார். தலிபான் அமைப்பை முல்லா ஓமருடன் சேர்ந்து உருவாக்கியவர்களில் முல்லா மொகமது ஹசன் அகுந்த் ஒருவர். தலிபான்களின் ஆட்சியில் 2001 ஆம் ஆண்டு இடம்பெற்ற பார்மியன் புத்தர் சிலை தகர்ப்பின் சூத்திரதாரியும் இவரே. முல்லா மொகமது ஹசன் அகுந்த் போலவே ஏனைய பல தலிபான் தலைவர்களும் பயங்கரவாதக் கருப்புப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
இடைக்கால உள்த்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள சிராசுடின் ஹக்கானி குழுவை அமெரிக்கா வெளிநாட்டு பயங்கரவாதப் பட்டியலில் சேர்த்துள்ளது. இந்தக் குழு அல் கொய்தாவோடு நெருங்கிய தொடர்பில் உள்ளது.
இடைக்காலப் பிரதமராக பதவியேற்றபின் பேசிய முல்லா மொகமது ஹசன் அகுந்த் “ஆப்கானிஸ்தான் வரலாற்றில் இந்த வரலாற்றுத் தருணத்திற்காக நாங்கள் பணம் மற்றும் உயிர் இரண்டிலும் பெரும் இழப்பைச் சந்தித்தோம். ஆப்கானிஸ்தானில் மக்கள் மீது இரத்தம் சிந்துதல், கொலை செய்தல் மற்றும் அவமதிக்கும் நிலை முடிவடைந்தது, இதற்காக நாங்கள் அதிக விலை செலுத்தியுள்ளோம்” என்றார்.
2001 ஆம் ஆண்டு படையெடுப்பைத் தொடர்ந்து அமெரிக்கா மற்றும் நிருவாகத்துடன் இணைந்து பணியாற்றிய எவருக்கும் பொதுமன்னிப்பு வழங்குவதாக தலிபானின் வாக்குறுதியையும் அகுந்த் மீண்டும் வலியுறுத்தினார்.
“ஒருவர் பழிவாங்கலுக்கு உட்படுத்தப்பட்டார் என்பதை யாராலும் எண்பிக்க முடியாது. மேலும் இதுபோன்ற பதட்டமான சூழ்நிலைகளில், நீங்கள் விரும்பியதைச் செய்வது எளிது. ஆனால் எமது இயக்கம் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்கும் அமைப்பு. அது அதன் துப்பாக்கிதாரிகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. மேலும், ஒருவருடைய முந்தைய நடவடிக்கைகள் காரணமாக நாங்கள் யாருக்கும் தீங்கு செய்யமாட்டோம். இஸ்லாமிய தேசத்திற்கு, குறிப்பாக ஆப்கானிஸ்தான் மக்களுக்கு, எல்லா நன்மைகளையும் கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறோம். மேலும் நாங்கள் இஸ்லாமிய அமைப்பை நிறுவ முயல்கிறோம். அதில் எல்லோரும் பங்குகொள்ள வேண்டும். எங்கள் நாடு இனிமேல் இஸ்லாமிக் எமிரேட் ஆப் ஆப்கானிஸ்தான் (Islamic Emirate of Afghanistan) என்று அழைக்கப்படும். ஆப்கானிஸ்தான் விவகாரங்களில் எந்தவொரு வெளிநாட்டின் தலையீட்டையும் அனுமதிக்க மாட்டோம். இஸ்லாமிய சட்டங்களின்படி நாட்டை வழிநடத்து வோம்” என்றார் அவர்.
ஆனால் அவரது பேச்சுக்கும் அவர் கொடுக்கும் உறுதிமொழிகளுக்கும் சம்மந்தமில்லாத நிகழ்ச்சிகள் ஆப்கானிஸ்தானில் இடம்பெறுவதாக அங்கிருந்து வரும் செய்திகள் சொல்கின்றன. பெண்கள் விவகாரத்துக்கான அமைசர் பதவி நீக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் செய்வதென்றால் முன் அனுமதிபெற வேண்டும் எனத் தலிபான்கள் கட்டுப்பாடு விதித்துள்ளார்கள். பதாததைகளில் எழுதும் வாசகங்களுக்கும் முன்கூட்டியே அனுமதி பெறவேண்டும் எனக் கட்டளை பிறப்பித்துள்ளார்கள்.
பெண்ளுக்கு அரசாங்கத்தில் இடம் வழங்க வேண்டும் என்று கோரி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில், பெண்களைத் தலிபான்கள் சவுக்கால் அடித்தனர் எனக் கூறப்படுகின்றது. கடந்த புதன்கிழமை காபூல் நகரில் ஒரு சாலையில் அணிவகுத்துச் சென்ற பெண்களைத் தடுத்து நிறுத்திய தலிபான்கள், சவுக்கால் அடித்தும் மின்சாரத்தை உமிழும் தடிகளால் தாக்கினர் எனவும் போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் கூறுகின்றனர். தலிபான்கள் தங்கள் இடைக்கால அமைச்சரவையை அறிவித்த அடுத்த நாள் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. ஒரு வாரத்துக்குள்ளாக நடைபெற்ற இரண்டாவது போராட்டம் இதுவாகும்.
தலிபான்கள் தங்களது நாடு இஸ்லாமிய நாடாக இருக்கும் என அறிவித்துள்ளார்கள். இஸ்லாமிய கோட்பாடுகள், சட்டங்கள் பின்பற்றப்படும் நாட்டின் ஆட்சி தலிபான்களின் கையில் மட்டும் இருக்கும் எனச் சொல்கிறார்கள்.
இப்படியான ஒரு கட்சி ஆதிக்கம் செலுத்தும் மதவாத சர்வாதிகார நாட்டை பல உலக நாடுகள் அங்கீகரிக்க மாட்டா என்பதைச் சொல்லத் தேவையில்லை. குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், இந்தியா போன்ற நாடுகள் அங்கீகரிக்க மாட்டாது என்பதே இன்றைய யதார்த்தமாகும்.
ஆனால் சீனா, உருசியா, பாகிஸ்தான், இரான் போன்ற நாடுகள் தலிபான் அரசை ஆதரிக்கின்றன. சீனாவைப் பொறுத்தளவில் வழக்கம் போல் அது குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கப் பார்க்கிறது.
ஆப்கானிஸ்தானுக்கு 3.10 கோடி டொலர் மதி்ப்பிலான உதவிகள் வழங்கப்படும் என சீனா அரசு அறிவித்துள்ளது, அதோடு நில்லாமல் தலிபான் அரசுக்கு புகழாரம் சூட்டியுள்ளது.
சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி வெளியி்ட்ட அறிவிப்பில், “ஆப்கானிஸ்தானுக்கு முதல்கட்டமாக 30 இலட்சம் தடுப்பூசிகளை சீனா வழங்கும். அமெரிக்க நிருவாகத்தில் ஆப்கானிஸ்தான் இருந்துள்ளது. அமெரிக்கா அங்கிருந்து சென்றாலும், தனது பொறுப்புகளை உணர்ந்து ஆப்கன் மக்களுக்கு உதவ வேண்டும், வளர்ச்சிக்குத் துணையாக இருக்க வேண்டும். ஆப்கானிஸ்தானின் இறையாண்மை, சுதந்திரத்தை மதிக்க வேண்டும் ” எனத் தெரிவித்துள்ளார்.
அடிப்படை இஸ்லாமிய கோட்பாடுகள், சட்ட திட்டங்கள் கீழ் ஆளப்படும் நாட்டில் சனநாயகம், பன்முகத்தன்மை, மனிதவுரிமைகள், சட்டத்தின் ஆட்சி போன்ற விழுமியங்கள் இடம்பெறுவதற்கு வாய்ப்பில்லை. தலிபான்கள் 1996-2001 மட்டும் ஆப்கனிஸ்தானை ஆட்சி செய்தபோது ஒரு மதவாத – சர்வாதிகார ஆட்சியே இடம்பெற்றது.
இதன் காரணமாகவே ஆப்கானிஸ்தானிய மக்கள் நாட்டை விட்டு வெளியேற முண்டியடித்தார்கள். ஆனால் மிகக் குறைந்த அளவிலான மக்களையே அமெரிக்கா தனது விமானங்கள் மூலம் வெளியேற உதவிசெய்துள்ளது. அண்டை நாடான பாகிஸ்தானுக்குள் நுழைய பல்லாயிரம் ஆப்கனிஸ்தார்கள் கால் நடையாக நடந்து போனார்கள். ஆனால் பாகிஸ்தான் அதன் எல்லைகளை மூடிவிட்டது.
உலகத்தில் உள்ள பாவப்பட்ட மக்களில் ஆப்கானிஸ்தான் மக்களும் அடக்கம். கடந்த பல சகாப்தங்களுக்கு அந்த நாடும் மக்களும் அமைதி, நிம்மதி இல்லாத, துன்ப துயரம் தோய்ந்த வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள். விடியல் எப்போது?
Leave a Reply
You must be logged in to post a comment.