அயோத்திதாசர் ஏன் கொண்டாடப்பட வேண்டும்? இவருக்காக என்ன செய்தன திராவிடக் கட்சிகள்?

அயோத்திதாசர் ஏன் கொண்டாடப்பட வேண்டும்? இவருக்காக என்ன செய்தன திராவிடக் கட்சிகள்?

பாரதி நேசன்

09/09/2021

who is ayothidasar? why should we celebrate him and what dravidian parties did to him

‘அயோத்திதாசப் பண்டிதரின் 175ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு வடசென்னையில் அவருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும்’ எனத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், 110 விதியின் கீழ் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பால், அயோத்திதாசர் குறித்த உரையாடல்கள் மீண்டும் மேலெழுந்துள்ளன. திராவிடக் கட்சிகள் அயோத்திதாசரைப் புறக்கணித்துவிட்டன. இந்த மணிமண்டபத்தை அவருக்கு எப்போதோ கட்டியிருக்க வேண்டும் என ஒரு சாராரும், இல்லை இல்லை அவர்தான் திராவிடத்தின் முன்னோடி, அதை திராவிடக் கட்சிகள் எப்போதுமே மறுதலித்ததில்லை என மற்றொரு சாராரும் வாதிட்டுவருகின்றனர். வாதப்பிரதிவாதங்கள் ஒருபுறம் இருக்க, ‘அயோத்திதாசரை ஏன் கொண்டாட வேண்டும்?’ எனும் கேள்வி இந்த தலைமுறையிடம் தொக்கி நிற்கிறது. அந்தக் கேள்விக்கு வெளிச்சம் பாய்ச்சுவதே இந்தத் தொகுப்பு.

17ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், இந்தியாவை நிர்வகித்து வந்தது கிழக்கிந்திய கம்பெனி. அதன் பிரதிநிதியாக, மெட்ராஸ் மாகாணத்தில் வசித்துவந்தார் வெள்ளைக்கார அதிகாரியான ஜார்ஜ் ஆரிங்டன். இவருக்கு உதவியாளராகவும் சமையலராகவும் இருந்துவந்தவர் தேர்ந்த சித்தவைத்தியரான கந்தப்பன். கந்தப்பனின் மகன் கந்தசாமி. குடும்பத் தொழிலான சித்த வைத்தியத்தில், கந்தசாமியும் அப்பாவைப் போலவே பாண்டித்தியம் பெற்று விளங்கிவந்தார். 1845ஆம் ஆண்டு மே 20ஆம் தேதி, சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் கந்தசாமிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அதற்குப் பெற்றோர் வைத்த பெயர் காத்தவராயன். காத்தவராயன் கல்வி கற்க, மெட்ராஸ் ப்ளாக் டவுன் பகுதியில் வாழ்ந்துவந்த, பன்மொழிப் புலவர் வல்லக்காளத்தி அயோத்திதாசக் கவிராயரின் திண்ணைப் பள்ளிக்கு அனுப்பப்பட்டார். அப்போது, தன் குரு மீது உண்டான அதீத பற்றினால், காத்தவராயன் என்ற இயற்பெயரை அயோத்திதாசர் என மாற்றிக்கொண்டார். 

சென்னை ராஜதானியின் அப்போதைய கலெக்டராக இருந்தவர் பிரான்சிஸ் வைட் எல்லீஸ். இவருக்குத் தமிழ் மீது பெரும் பற்றும் தேடலும் இருந்துவந்தது. தமிழ் இலக்கியச் சுவடிகளைச் சேகரிப்பதில் முனைப்புடன் இயங்கிவந்தவர் எல்லீஸ். இவரின் நண்பர்தான் ஆரிங்க்டன். எல்லீஸின் தமிழ்ப் பற்றை அறிந்த கந்தப்பன், வீட்டுப் பரணியில் மூட்டைக்கட்டியிருந்த சில ஓலைச்சுவடிகளைத் தூசிதட்டி, ஆரிங்க்டனிடம் கொண்டுவந்து ஒப்படைத்தார். அந்த ஓலைச்சுவடிகளை எல்லீஸ் நூலாகக் கொண்டுவந்தார். அப்படி அவர் கொடுத்தவற்றிலிருந்து 1812-ம் ஆண்டு வெளியான ஒரு நூலின் பெயர் ‘திருக்குறள்’. who is ayothidasar? why should we celebrate him and what dravidian parties did to him

வெள்ளைக்கார துரையான ஆரிங்டன், தொழில் நிமித்தமாக நீலகிரிக்குப் பணிமாறுதல் பெற்றார். விளைவு, கந்தப்பனின் குடும்பமும் அவருடன் நீலகிரிக்குக் குடிபெயர்ந்தது. காத்தவராயன் எனும் அயோத்திதாசருக்கு திருமண வயது வந்ததும், தோடர் இனத்தைச் சேர்ந்த பெண்ணை மணமுடித்துக்கொள்கிறார். இவர்களுக்கு கண்பார்வையற்ற குழந்தை ஒன்று பிறந்தது. பிறந்த சில தினங்களில் இந்தக் குழந்தை இறந்துவிடுகிறது. குழந்தை இறந்த சோகத்திலேயே அயோத்திதாசரின் மனைவியும் காலமானார். கடும் சோகத்தில், பர்மா சென்றுவிடுகிறார் அயோத்திதாசர். சுமார் பத்து வருடங்களுக்குப் பிறகு ஊர் திரும்பும் அயோத்திதாசர்தான், பல புரட்சிகளுக்கு விதை தூவியவராக அறியப்படுகிறார். முதல் மனைவி இறந்துவிட்ட பிறகு, இரட்டைமலை சீனிவாசனின் தங்கை தனலட்சுமியை இரண்டாவது திருமணம் செய்துகொள்கிறார் அயோத்திதாசர். ஆதிசங்கரரின் கொள்கைகளை உள்வாங்கிய அயோத்திதாசர், 1876-ம் ஆண்டு ‘அத்வைனந்தா சபை’யைத் தோற்றுவிக்கிறார். இதன் மூலம், அத்வைத கொள்கைகளைப் பரப்புகிறார். அப்போது அவர் படித்த, ‘நாரதீய சங்கைத் தெளிவு’ எனும் ஓலைச்சுவடி, அவருக்குள் பெரும் சிந்தனை மாற்றத்தைக் கொண்டுவருகிறது. அதேநேரம், தலித்துகளின் மீது நடத்தப்பட்ட தீண்டாமைக் கொடுமைகளால் கொதித்துப்போன அயோத்திதாசர், சாதிய இழிவுகளில் இருந்து விடுதலை பெற பவுத்தம் ஒன்றே தீர்வு என புத்தரை நோக்கி நகர்கிறார். 

இதற்கிடையே, 1880-களில் நடத்தப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பில், ‘பூர்வத் தமிழர்’ என்ற பிரிவைப் பதிவு செய்யச் சொல்லி வேண்டுகோள் வைத்தார். ‘ஆதித் தமிழர்’, ‘ஆதி திராவிடர்’ போன்ற பல அடையாளங்களை அவர் முன்வைத்தார். ஆனால், ஆங்கிலேய அரசு அவற்றை ஏற்க மறுத்தது. “இவையெல்லாம், மொழி அல்லது இன அடையாளத்தின் கீழ் வருபவை. மத அடையாளத்தின் கீழ் இவற்றைக் கொண்டுவர முடியாது” எனக் கைவிரித்தது. அப்போதுதான் அவர், ‘பூர்வ பவுத்தர்’ எனும் அடையாளம் நோக்கிச் செல்கிறார். இந்தச் சமயத்தில்தான், ரெவரன்ட் ஜான் ரத்தினம், ஆல்காட் பிரபு உள்ளிட்டோரின் நட்பு கிடைக்கிறது. 1885-ல் நண்பர் ஜான் ரத்தினத்துடன் இணைந்து ‘திராவிடப் பாண்டியன்’ எனும் இதழைத் தொடங்கினார். ஆறாண்டுகள் கழித்து, ‘திராவிட மகாஜன சபை’யை நிறுவினார். 1891ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், திராவிட மகாஜன சபையின் சார்பாக, ஊட்டியில் ஒரு மாநாடு நடத்தப்பட்டது. இதில், “பறையர் எனக் கூறுவது குற்றம் எனச் சட்டம் இயற்ற வேண்டும், பொது இடங்களில் நுழைய உரிமை அளிக்க வேண்டும், கல்வி வசதி செய்துதர வேண்டும்” என்பன உள்ளிட்ட பத்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு காங்கிரஸ் செயலாளருக்கும் பிரிட்டிஷ் அரசுக்கும் அனுப்பப்பட்டது. அதையடுத்து, 1892 ஏப்ரல் மாதம், சென்னை விக்டோரியா அரங்கில் நடைபெற்ற சென்னை மகாஜன சபை மாநாட்டில், நீலகிரி பிரதிநிதியாக அயோத்திதாசர்  கலந்துகொண்டார். 

இம்மாநாட்டில்தான், ஒடுக்கப்பட்டோருக்கு இலவசக் கல்வி, புறம்போக்கு தரிசு நிலம், வேலைவாய்ப்பு உள்ளிட்டவை வழங்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்தார். மேலும், ‘இறைவனை வழிபட எங்கள் மக்களைக் கோவிலுக்குள் நுழைய அனுமதிக்க வேண்டும்’ என அவர் கேட்டபோது, அரங்கத்தில் உள்ள அனைவரும் எழுந்து நின்று “அவரை வெளியே துரத்துங்கள்” எனச் சத்தம் போட்டனர். “உங்களுக்கு மதுரைவீரன் சாமி, காட்டேரி சாமி, கருப்பண்ணசாமி கொடுத்திருக்கிறோம். சிவன் சாமி, விஷ்ணு சாமி எல்லாம் உங்கள் குலத்தோருக்கு உரியது அல்ல” எனப் பதில் கூறினர். அப்படியெனில், “எங்களுக்கு உங்கள் சாமிகள் வேண்டாம், எங்களுக்கு இலவசக் கல்வியும் நிலமற்றவர்களுக்கு நிலமும் கொடுக்க வேண்டும்” எனக் கோரிக்கை வைத்தார்.

அதற்குப் பின்னர்தான் தாழ்த்தப்பட்டவர்கள் இந்துக்கள் அல்லர் என்ற உணர்வு எழும்பி, ஆங்கிலேய நண்பரான ஆல்காட்டின் உதவியால் இலங்கைக்குச் செல்கிறார். அங்கு, சிங்கள பௌத்தத் துறவியிடம் தீட்சை பெற்று தாயகம் திரும்புகிறார். பிறகு, தென்னிந்தியா முழுவதும் பவுத்தத்தைப் பரப்பும் நோக்குடன், ‘சாக்கிய பவுத்த சங்கத்தை’ தோற்றுவித்தார். ‘சிந்தனைச் சிற்பி’ சிங்காரவேலரும், இந்த இயக்கத்தில் இணைந்துகொண்டு சாதிய கொடுமைகளுக்கு எதிராகக் குரல் எழுப்பினார். “இந்துக்களில் தீண்டத்தகாதவர்கள் என அழைக்கப்பட்டவர்கள் யாரும் இந்துக்கள் அல்ல. அவர்கள் அனைவரும் சாதியற்ற திராவிடர்கள்” என்னும் கருத்தை முன்வைத்துப் பேசியும் எழுதியும் வந்தார். who is ayothidasar? why should we celebrate him and what dravidian parties did to him

தமிழ் உள்ளிட்ட நான்கு மொழிகளில் தேர்ச்சி பெற்றிருந்தார் பண்டிதர். கல்விப் புலமை, குடும்பச் சொத்தாகக் கிடைத்த சித்த மருத்துவம், பவுத்த சமயம் வழிமொழியும் சமத்துவம் ஆகியவற்றின் கூட்டுக் கலவையாக வலம்வந்தார் பண்டிதர். 1907-ம் ஆண்டு ஜூன் 19 அன்று ‘ஒரு பைசாத் தமிழன்’ எனும் பத்திரிகையைத் தொடங்கினார். அதற்கு அவர் பெயர்க்காரணமும் கொடுத்தார், “ஒரு நயா பைசாவுக்குக் கூட தகுதியில்லாதவனாகத் தமிழன் இருந்துவருகிறான்” எனும் வேதனையை விளக்கும் விதமாக ‘ஒரு பைசாத் தமிழன்’ எனப் பெயர் வைக்கப்பட்டதாகக் கூறினார். இந்தப் பத்திரிகையில் தொடர்ந்து, பிராமணிய சிந்தனைகளுக்கு எதிரான கட்டுரைகளை எழுதிவந்தார் அயோத்திதாசர். அதன்மூலம், இந்திய வரலாற்றையே அவர் மறுகட்டமைப்பு செய்தார் எனலாம். இது பல தரப்பிலும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும், கார்த்திகை தீபம், தீபாவளி, பொங்கல், திருமணச் சடங்கு, இறுதிச் சடங்கு உள்ளிட்ட சடங்குகள் எல்லாம் பவுத்தம் வசம் இருந்தவை என்றும் காலப்போக்கில், இவையெல்லாம் எப்படி இந்துமயமானது என்பதையும் விளக்கி எழுதினார். 

இதே காலகட்டத்தில், புகழ்பெற்ற பத்திரிகையாக வெளியான ‘சுதேசமித்திரன்’ பத்திரிகையுடன் கடும் வார்த்தைப் போர்களையும் நடத்தியுள்ளார். ‘சுதேசமித்திரன்’ ஆசிரியர் பாரதியாருக்கும் அயோத்திதாசருக்கும் இடையே காரசாரமான கருத்துப் பரிமாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. அதேபோல, அயோத்திதாசர், ‘ஒரு பைசாத் தமிழர்’ தொடங்கியபோது அவரது மைத்துனர் ரெட்டமலை சீனிவாசன், ‘பறையன்’ எனும் இதழைத் தொடங்கினார். இவர் திராவிட மகாஜன சபையை நிறுவியபோது, அவர், ஆதிதிராவிட மகாஜன சபையை நிறுவினார். இப்படி இரண்டுபேரும் வெவ்வேறு தளங்களில் ஆதிக்கச் சாதிகளுக்கு எதிராக அனுதினமும் போராடி வந்தனர். 

அயோத்திதாசரைப் பற்றிய குறிப்புகள் திருவிக-வின் நாட்குறிப்புகளில் காணக்கிடைக்கின்றன. அதில், அயோத்திதாசர் எங்களது குடும்ப மருத்துவர் எனக் கூறும் திருவிக, இளம்பருவத்தில் நான் முடக்குவாத நோயால் பாதிக்கப்பட்டிருந்தபோது, அயோத்திதாசர்தான் சித்த மருத்துவத்தின் மூலம் எழுந்து நடக்க வைத்ததாகக் கூறியுள்ளார். மேலும், பாம்பு போன்ற விஷக் கடிகளுக்கு அவர் மருந்து தரமாட்டார் என்றும் பார்வையாலேயே விஷத்தை இறக்கிவிடும் கலைகளைக் கற்றுத் தேர்ந்திருந்தார் என்றும் அவரைப் பற்றி கூறியுள்ளார். 

தென்னிந்தியாவின் முதல் சாதி ஒழிப்புப் போராளியான அயோத்திதாசப் பண்டிதர்  1914-ம் ஆண்டு, மே 5-ம் தேதி காலமானார். இன்னுமொரு இருபது ஆண்டுகள் அவர் உயிருடன் இருந்திருந்தால் எண்ணற்ற மாற்றங்களை தமிழ்ச் சமூகம் சந்தித்திருக்கக் கூடும். பெரியார், அம்பேத்கர் போன்ற சாதியொழிப்பு போராளிகளின் மூத்த முன்னோடியாக விளங்கியவர் பண்டிதர் அயோத்திதாசர். அதனால்தான், “தங்கவேல் அப்பாதுரை பண்டிதமணியும் அயோத்திதாசப் பண்டிதரும் தன்னுடைய பகுத்தறிவுப் பிரச்சாரத்துக்கும் சீர்திருத்தக் கருத்துகளுக்கும் முன்னோடிகள்” எனப் பெரியார் போற்றினார். அதேபோல, பலமுறை சென்னை வந்து அயோத்திதாசர் குறித்த தகவல்களை அம்பேத்கர் சேகரித்துச் சென்றார் எனக் கூறப்படுகிறது. 1956-ம் ஆண்டு அம்பேத்கர் புத்த மதத்தைத் தழுவியதும் அயோத்திதாசரின் அடியொற்றித்தான் எனக் கூறுவோரும் உண்டு. who is ayothidasar? why should we celebrate him and what dravidian parties did to him

திமுக ஆட்சிக் காலத்தில், அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் துணையுடன், பல திட்டங்களை நிறைவேற்றியது திமுக. அதில், அயோத்திதாசரைப் பற்றிய திட்டங்களுக்கு, திமுக உரிய அங்கீகாரம் அளித்துள்ளது. அதன்படி, கடந்த 1999-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு 2005-ம் ஆண்டு திறக்கப்பட்டதுதான், தாம்பரத்தில் செயல்பட்டுவரும், இன்றைய அயோத்திதாசர் ஆராய்ச்சி மையம். கலைஞரின் முன்முயற்சியால், 21.10.2005 அன்று, அயோத்திதாசருக்கு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. அயோத்திதாசர் நடத்திய ‘ஒரு பைசாத் தமிழன்’ இதழின் நூற்றாண்டு விழாவை, 2008-ம் ஆண்டு சர். பிட்டி. தியாகராயர் அரங்கில், அப்போதைய முதல்வர் கலைஞர், மிகப்பெரிய அளவில் அரசு விழாவாகக் கொண்டாடிச் சிறப்பு சேர்த்தார். அதுமட்டுமின்றி, அயோத்திதாசப் பண்டிதரின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டு, அவரின் வாரிசுகளுக்குப் பத்து லட்சம் ரூபாய் நிதியும் வழங்கப்பட்டது. பிறகு, 2019-ம் ஆண்டு, சமத்துவம், பொதுவுடைமை, தமிழியல் போன்ற துறைகளில் முத்திரை பதித்தவர்களுக்கு, ‘அயோத்திதாசப் பண்டிதர் விருது’ வழங்கப்படும் என அறிவித்தது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு. 

இப்போது மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, அயோத்திதாசருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் எனக் கூறியுள்ளது. இந்த அறிவிப்புகளின் பின்னணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கோரிக்கையும் தொடர் அழுத்தமும் இருந்தது குறிப்பிடத்தக்கது. சித்த மருத்துவர், சமூக சீர்திருத்தவாதி, கல்வியாளர், பத்திரிகையாளர், தமிழர் என்ற உணர்வை முதலில் ஏற்படுத்தியவர், திராவிடச் சிந்தனைகளின் முன்னோடி எனப் பல பெருமைகளுக்குச் சொந்தக்காரரான அயோத்திதாசரை திராவிடக் கட்சிகள் உரிய முறையில் நினைவுகூர்ந்துள்ளன என்பதே வரலாறு. அதில், சில குறைபாடுகள் இருக்கலாம், ஆனால், திராவிடக் கட்சிகள் அயோத்திதாசரை கண்டுகொள்ளவே இல்லை எனச் சிலர் கூறுவதெல்லாம் முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கும் சூழ்ச்சிதான். 

https://www.nakkheeran.in/special-articles/special-article/who-ayothidasar-why-should-we-celebrate-him-and-what-dravidian

About editor 3082 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply