ஸ்டாலின் அரசின் 100 நாள்களில் கருணாநிதி பெயரில் வந்த அறிவிப்புகள் – ஒரு பட்டியல்!

ஸ்டாலின் அரசின் 100 நாள்களில் கருணாநிதி பெயரில் வந்த அறிவிப்புகள் – ஒரு பட்டியல்!

துரைராஜ் குணசேகரன்

கருணாநிதி பெயரில் வந்த அறிவிப்புகள்
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்

கருணாநிதி பெயரில் வந்த அறிவிப்புகள்

தமிழகத்தில் நடைபெற்றுவரும் தி.மு.க ஆட்சியில் தற்போதுவரை முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயரில் பல்வேறு அறிவிப்புகள் வந்துள்ளன.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுக் கடந்த மே 07-ம் தேதி தி.மு.க ஆட்சியமைத்தது. தமிழக முதல்வராக மு.க. ஸ்டாலின் பதவியேற்றுக்கொண்டார். தமிழக அரசின் நிதிநிலைக் கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கில் நடைபெற்றுவருகிறது. தமிழகத்தில் திமுக ஆட்சியமைத்து 100 நாள்கள் கடந்துள்ள நிலையில், மறைந்த முன்னாள் முதல்வர் மற்றும் தி.மு.க-வின் முன்னாள் தலைவரான மு.கருணாநிதியின் பெயரில் கல்லூரி, சிலைகள் என்று பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

சட்டப்பேரவையில் திறக்கப்பட்ட கலைஞர் கருணாநிதியின் படம்
சட்டப்பேரவையில் திறக்கப்பட்ட கலைஞர் கருணாநிதியின் படம்

சட்டப்பேரவையில் கருணாநிதி படம் திறப்பு:

தமிழக சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழா மற்றும் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவப்படம் திறந்துவைக்கும் விழாவை நடந்த தமிழக அரசு முடிவு செய்தது. கருணாநிதியின் உருவப்படத்தைத் திறந்து வைப்பதற்காக இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சிறப்பு விருந்தினராக அழைக்கப் பட்டிருந்தார். தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், முக்கிய பிரமுகர்கள் என்று பலரும் அழைக்கப்பட்டிருந்தனர். அதிமுக உறுப்பினர்கள் அழைக்கப்பட்டிருந்த நிலையிலும் அவர்கள் நிகழ்ச்சியைப் புறக்கணித்திருந்தனர். விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கருணாநிதியின் உருவப்படத்தைத் திறந்துவைத்தார்.

கலைக் கல்லூரிக்குக் கலைஞர் கருணாநிதி பெயர்:

நடைபெற்றுவரும் நிதிநிலை கூட்டத்தொடரில் உயர் கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, கலசப்பாக்கம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் சரவணன், திருவண்ணாமலையில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்குக் கருணாநிதியின் பெயர்தான் இருந்தது. பின்னர் மாற்றப்பட்டுவிட்டது. இப்போது அந்தக் கல்லூரிக்குக் கருணாநிதியின் பெயர் சுட்டப்பட வேண்டும்” என்ற கோரிக்கையை வைத்தார். அப்போது பேசிய அமைச்சர் பொன்முடி, முதல்வரின் ஒப்புதலோடு, திருவண்ணாமலை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கலைஞர் கருணாநிதி கலை அறிவியல் கல்லூரி எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டும்” என்று அறிவித்தார்.

கலைஞர் நினைவிட மாதிரி வரைபடம்
கலைஞர் நினைவிட மாதிரி வரைபடம்

39 கோடியில் கருணாநிதிக்கு நினைவிடம்

நடைபெற்றுவரும் சட்டமன்ற கூட்டத்தொடரில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் 110 விதியின் கீழ் தனது முதல் அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, “ 80 ஆண்டுக்காலம் தமிழினத்துக்கு உழைத்த போராளி. கலைஞரின் புகழுக்குப் பெருமை சேர்க்கும்விதமாக 110 விதியின் கீழ் அறிவிக்கப்படும் முதல் அறிவிப்பு அமைந்திருப்பதில் நான் மட்டுமல்ல, இந்த அரசும் பெருமைப்படுகிறது. வாழ்ந்த காலம் முழுவதும் வரலாறாக வாழ்ந்தவர் கலைஞர். நின்ற தேர்தலில் எல்லாம் வென்ற தலைவர் அவராக மட்டும்தான் இருக்க முடியும். அவரின் வாழ்வின் சாதனைகளை, சிந்தனைகளை மக்களும் வருங்காலச் சந்ததியினரும் அறியும் வகையில், நவீன விளக்கப் படங்களுடன் சென்னை காமராஜர் சாலையிலுள்ள அண்ணா நினைவிடத்துக்கு அருகில் 2.21 ஏக்கர் பரப்பளவில் 39 கோடி ரூபாய் செலவில் முத்தமிழறிஞர் கலைஞருக்கு நினைவிடம் அமைக்கப்படும். என்று தெரிவித்தார்.

புதுப்பொலிவுடன் “கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம்”

கடந்த 1996-2001-ம் ஆண்டு ஆட்சிக் காலத்தில் அன்றைய முதல்வர் மு.கருணாநிதி வருமுன் காப்போம் என்ற திட்டத்தைக் கொண்டுவந்தார். இந்தத் திட்டத்தின் மூலம், ஊராட்சி அளவில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாம்களில் மக்களுக்கு பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டு, மருந்துகளும் உடனடியாக வழங்கப்படும். ஒவ்வொரு முகாம்களிலும் பல மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். 2001-ம் ஆண்டு ஆட்சியமைத்த அதிமுக மீண்டும் இந்தத் திட்டத்தை நிறுத்தியது. 2006-ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்ததும் மீண்டும் இந்தத் திட்டம் செயல்படத் தொடங்கியது. மீண்டும் 2011-ம் ஆண்டு முதல் அதிமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் திமுக ஆட்சியமைத்துள்ளது. சட்டப்பேரவையில் மருத்துவத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது,“ ஆண்டுக்கு 1,000 சிறப்பு மருத்துவ முகாம்கள் மூலம் `கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம்’ மீண்டும் புதுப்பொலிவுடன் செயல்படுத்தப்படும்” என்று அறிவிக்கப்பட்டது.

கருணாநிதி
கருணாநிதி

மதுரையில் “கருணாநிதி பெயரில் நூலகம்”

மதுரையில் தேர்தல் பரப்புரையின்போது பேசிய ஸ்டாலின், “சென்னையில் அண்ணா நூற்றாண்டு நூலகம் அமைத்திருப்பதுபோல, மதுரையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் ஒரு பிரமாண்டமான நூலகம் அமைக்கப்படும்” என்று கூறியிருந்தார். இதனையடுத்து, மதுரையில் பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான இடத்தில் ரூ. 70 கோடி மதிப்பில், இரண்டு ஏக்கர் பரப்பளவில் நூலகம் கட்டப்படும் என்று கூறப்பட்டது. இந்த இடத்தில் பென்னிகுயிக் வாழ்ந்த கட்டிடம் இருப்பதாகவும் அதை இடித்துவிட்டு திமுக நூலகம் கட்ட முனைகிறது என்றும் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த இல்லத்தில் பென்னிகுயிக் வாழ்ந்ததற்கான சாத்தியக்கூறுகளே இல்லை என்று அரசு தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

சட்டசபையில் கருணாநிதி படம்: `அப்பாவுக்கு பிடிச்ச விஷயம்’ ; ஸ்டாலின் சொன்னதென்ன?’ - ஓவியர் பகிர்வு

Also Read

சட்டசபையில் கருணாநிதி படம்: `அப்பாவுக்கு பிடிச்ச விஷயம்’ ; ஸ்டாலின் சொன்னதென்ன?’ – ஓவியர் பகிர்வு

அண்ணா சாலையில் “கலைஞருக்கு மீண்டும் சிலை”

1971-ம் ஆண்டு நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் முதல்வர் கலைஞருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற கோரிக்கையைத் தந்தை பெரியார் முன்வைத்தார். அப்போது பேசிய கருணாநிதி, பெரியருக்கே சிலை இல்லாதபோது, அவரின் சீடன் எனக்கு எதற்கு இப்போது சிலை. முதலில் பெரியாருக்குச் சிலை வைக்கவேண்டும். எனக்குச் சிலை பிறகு பார்த்துக்கொள்ளலாம்” என்று பேசியிருந்தார். தந்தை பெரியார் மறைவுக்குப் பிறகு அவருக்குச் சிலை திறக்கப்பட்டது. அதன் பின் கலைஞருக்குச் சிலை வைக்கும் வேலையில் திராவிட கழகம் இறங்கியது. கலைஞருக்குச் சிலை வைப்பதற்கு தடை வாங்க அன்றைய எம்ஜிஆர் தலைமையிலான அ.தி.மு.க நீதிமன்றம் வரை சென்றது. இருந்தபோதும் அந்த இடத்தில் கலைஞருக்குச் சிலை வைக்க அனுமதி கிடைத்தது.

கருணாநிதி சிலை
கருணாநிதி சிலை

1975-ம் ஆண்டு அண்ணா சாலையில், மணியம்மையார் தலைமை வகிக்க, குன்றக்குடி அடிகளார் அந்த சிலையைத் திறந்து வைத்தார். 1987-ம் ஆண்டு டிசம்பர் 24-ம் தேதி அன்றைய முதல்வர் எம்ஜிஆர் மறைந்தார். அப்போது அந்த சிலை சிலரால் தகர்க்கப்பட்டது. இந்த புகைப்படம் நாளிதழ்களில் வெளியாகி பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. மீண்டும் அந்த சிலையை அமைக்கக் கழக நிர்வாகிகள் முற்படும்போது அதனை மறுத்துவிட்டார் கருணாநிதி. கருணாநிதி மறைவுக்குப் பிறகு மீண்டும் அந்த இடத்தில் சிலை நிறுவவேண்டும் என்று திராவிடர் கழகம் உட்பட பல்வேறு தரப்பினரிடம் கோரிக்கைகள் வலுவானது. இதனையடுத்து, சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், சட்ட வல்லுநர்களோடு கலந்தாலோசனை செய்து, அண்ணா சாலையில் ஏதாவது ஒரு இடத்தில் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் சிலை அமைக்கப்படும்” என்று தெரிவித்தார்.

கடந்த 2010-ம் ஆண்டு முதல் வழங்கப்படாமல் இருந்த `கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது’ – 10 லட்சம் ரொக்கத் தொகையுடன் இனி ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 3-ம் தேதி வழங்கப்பட்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் உள்ள திராவிட பல்கலைக்கழகத்தில் கட்டப்படும் தமிழ்மொழி மற்றும் இலக்கியத்திற்காக 5 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்படும் கட்டிடத்திற்கு நிதி உதவி மற்றும் பல்வேறு கோரிக்கையுடன் அந்த பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் தும்மல ராமகிருஷ்ணா தமிழக முதல்வரைச் சந்தித்தார். அந்த கட்டிடத்திற்கு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயர் வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

திராவிட பல்கலைக்கழக
திராவிட பல்கலைக்கழகம்

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்திற்குக் கருணாநிதியின் பெயர் வைக்க அரசு சார்பில் ஆலோசனைகள் நடைபெற்றுவருவதாகத் தகவல்கள் வெளியாகின. அதேசமயம், இந்தியாவிலேயே முதன்முறையாகச் சென்னைக்கு அருகே சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்படும் என்று அறிவிப்பு வெளியானது. இந்த பல்கலைக்கழகத்திற்குக் கருணாநிதியின் பெயர் வைக்க திமுக அரசு ஆலோசனை செய்துவருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவரை வந்த அறிவிப்புகள் மட்டுமில்லாது இன்னும் பல்வேறு அறிவிப்புகள் கருணாநிதியின் பெயரில் வெளிவரக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

About editor 3000 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply