உலகில் ஏன் இத்தனை மதங்கள்…?
ஓஷோவிடம் ஒரு சீடர் கேட்கிறார், ”எதற்கு உலகில் இத்தனை மதங்கள்?”
ஓஷோ சொல்கிறார், “இத்தனை மதங்கள் இருப்பது இயல்பானதுதான்…பார்க்கப் போனால் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு மதம் இருக்க வேண்டும். ஒவ்வொரு மனிதனும் தனிபட்டவன். பிறரிடமிருந்து வேறானவன். எனவே ஒவ்வொருவருக்கும் ஒரு மதம் இருக்க வேண்டும். ஒவ்வொருவரும் கடவுளை சென்றடைய தனிப்பட்ட மார்க்கம் இருக்க வேண்டும். ஒரே மதத்தை ஸ்தாபிக்க முடியாது. ஒரே மதம் என்ற பெயரில் ஏதாவது ஒன்றை எல்லோர் மீதும் திணிக்கலாம். ஆனால் அவர்களுடைய ஆத்மா அழிந்து போகும்…”
எவ்வளவு ஆழமான பதில். இங்கு ஒவ்வொரு மனிதனும் தனிப்பட்டவன். யோசனை, செய்கை மனிதர்களுக்கு மனிதர்கள் வித்தியாசப்படும் என்னும் போது, எப்படி ஒரு மதம் மட்டும் அனைவருக்கும் பொதுவானதாக இருக்க முடியும்?
இங்கு மதங்கள் என்பது ஆறுகள் என்றால், இறை என்பது கடல். இங்கு அனைத்து ஆறுகளும் கடல்களிலேயே சங்கமிக்க வேண்டும் என்பதுதான் பொது விதி. ஆனால், கறைபடிந்த நம் செயல்களால், ஆறுகளை சாக்கடை ஆக்கிவிட்டோம். இப்போது ஆறுகள், எங்கும் கடலில் கலப்பதில்லை.
அன்பு தான் இறை
நாம் இறை நிலையை உணர வேண்டுமென்றால், முதலில் அகவிடுதலை அடைய வேண்டும். முன் முடிவுகளுடன் விஷயத்தை அணுகுவதை நிறுத்த வேண்டும். அன்பை எங்கும் பரவவிட வேண்டும். அகவிடுதலைக்கும், புறவிடுதலைக்கும் ஒரே தீர்வு அன்புதான். அன்பு மட்டும்தான். எல்லா பிரச்னைகளுக்கும் அன்பினால் நாம் தீர்வை காணலாம். இதையேதான் அனைத்து மதங்களும் போதிக்கின்றன.
புத்தர் இப்படி சொல்கிறார், “இவ்வுலகில் எக்காலமும் பகைமை, பகைமையால் தணிவதில்லை. பகைமை அன்பினாலேயே தணியும். இதுவே அறநெறி.”
மேலும் சொல்கிறார், “எத்தகைய நற்கருமங்களாயினும், அவையாவும் இதயத்தை திறந்து வைக்கும் அன்பிலே பதினாறில் ஒரு பகுதிக்கு கூட ஈடாகாது. இதயத்தைத் திறந்து வைக்கும் அன்பிலே அவை அடங்கி உள்ளன. அன்பு பிரகாசிக்கின்றது. அது ஒளி அளிக்கிறது” என்கிறார் புத்தர்.
ஏசுவும் இதே அன்பைதான் முன்மொழிந்தார், “ஒருவரை ஒருவர் நேசியுங்கள். நான் உங்களை நேசிப்பது போல், நீங்கள் ஒருவரை ஒருவர் நேசியுங்கள்” என்றார்.
ஆம்.. அன்பு மட்டும்தான் இங்கு பொது மொழி. கிழக்கையும், மேற்கையும் இணைப்பது கப்பல்களும், வானூர்திகளும் அல்ல அன்புதான். அன்பு அமைதியை மட்டும் தராது. எப்போதும் புறச்சூழலில் ஏற்படும் பிரச்னைகளுக்கும் தீர்வாக இருப்பது அன்பு மட்டும்தான். மரத்தின் மீதான அன்பு, காட்டழிவை தடுக்கிறது. சக மனிதன் மீதான அன்பு, போரைத் தடுக்கிறது. நாம் நம் குழந்தைகளையும், அடுத்த தலைமுறையையும் நேசிக்கும் போது இயற்கையை சுரண்டுவதை நிறுத்துகிறோம்.
ஆம்…அன்பு மட்டும்தான் அனைத்திற்கும் தீர்வு. இந்த அன்பைதான் அனைத்து மதங்களும் போதிக்கின்றன. ஆனால், நாம் மதத்தின் உன்னத பொருளை மறந்துவிட்டு, அன்பால் ஆன மதங்களை நாமே கொன்றுவிட்டோம்.
அன்பு எத்தகையானதாக இருக்க வேண்டும்?
பேருண்மையை அடைய அன்புதான் வழி என்றால், அந்த அன்பு எப்படியானதாக இருக்க வேண்டும். அன்பு நிர்பந்தங்களும், நிபந்தனைகளும் அற்றதாக இருக்க வேண்டும். “அன்பு என்பது உங்களுக்கு சுதந்திரம் தரும் போதுதான் நேர்மையாகிறது” என்கிறார் ஓஷோ. ஆம்..அழுத்தங்களால் நாம் வேறு ஏதோ ஒன்றை வேண்டுமானால் பெறலாம். எப்படி அன்பை பெற முடியும் ?
அன்பாக இருக்கும் மனிதனை புறச்சூழல்கள் எதுவும் தொந்தரவு செய்ய முடியாது. அன்பு நாம் நாமாகவே இருக்கும் சுதந்திரத்தை தரவல்லது. அன்புள்ள மனிதன்தான் அன்பு செலுத்துபவர் துன்பப்படுவதை விட தான் துன்பமடைவதையே விரும்புவான். இத்தகையதாக அன்பு நம்மிடம் இருக்கும்போது, மதங்கள் தேவையற்றதாக ஆகிறது.
நீதி தான் இறை
அன்பு மட்டும் அல்ல, சத்தியமும், நீதியும்தான் இறை. இஸ்லாமில் அல்லாவின் இன்னொரு பெயர் அல் – ஆதில். இதற்கான அர்த்தம் நீதி. ‘உண்மையான இஸ்லாமியன் என்பவன் நீதியின் பக்கம் நிற்பவன்’ என்கிறார் எழுத்தாளர் மற்றும் செயற்பாட்டாளர் அஸ்கர் அலி என்ஜினியர். அதாவது நியாயத்தின் பக்கம் நிற்பதன் மூலம் இறைவனை அடையலாம். நியாயத்தின் பக்கம் நிற்பது என்பது, அநியாயம் எந்த வடிவில் வந்தாலும் அதை எதிர்ப்பது, பிறர் துன்பங்களை போக்குவது.
உலகில் முன்னூற்று சொச்சம் மதங்களே இருக்கின்றன. ஆனால் முன்னூறு கோடிக்கு மேலான மனிதர்கள் இருக்கிறார்கள். ஆக அன்பு, நீதி, உண்மை இதுதான் இறைவனை அடைய உண்மையான வழிகள். இதை சாராம்சமாக கொண்டு உங்களுக்கான பிரத்யேக மதத்தை நீங்களே உருவாக்குங்கள்.
– மு. நியாஸ் அகமது
https://www.vikatan.com/spiritual/temples/62805-why-are-there-so-many-religions-in-the-world
Leave a Reply
You must be logged in to post a comment.