இன்றைய பூகோள அரசியலில் இஸ்லாமிய அடிப்படைவாத அரசாட்சி நிலைக்குமா?
நக்கீரன்
போரைத் தொடங்குவது எளிது, ஆனால் அதை முடிப்பது எப்போதும் கடினம் (It’s easy to start a war, but it’s always difficult to end with it) என்பது அரசியல் பாடம். இந்தப் பாடத்தை உலக வல்லரசான அமெரிக்கா ஆப்பகனிஸ்தான் நாட்டுக்கு எதிரான நீண்ட கால (ஒக்தோபர் 07, 2001 – ஓகஸ்ட் 2021) போரில் கடினமான முறையில் கற்றுக் கொண்டுள்ளது. இருபது ஆண்டுகளில் அமெரிக்காவுக்கும் நேட்டோ நாடுகளுக்கும் ஏற்பட்ட உயிர், உடமை இழப்பு பின்வருமாறு:
மனித செலவு
அமெரிக்க இராணுவத்தினர் – 2,448. அண்ணளவாக 20,700 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
அமெரிக்க ஒப்பந்தக்காரர்கள் – 3,846.
ஆப்கான் தேசிய இராணுவம் மற்றும் காவல்துறை: 66,000.
நேட்டோ உறுப்பு நாடுகள் – 1,144.
ஆப்கான் பொதுமக்கள் – 47,245.
தலிபான்கள் மற்றும் பிற எதிர்க்கட்சி போராளிகள் – 51,191.
உதவி தொழிலாளர்கள் – 444.
டிசம்பர் 2001 இல் ஆப்கானிஸ்தான் மோதலுக்கு 38 நாடுகளின் நேட்டோ கூட்டணி உறுதியளித்தது, ஆனால் அமெரிக்கா எப்போதுமே மிகப்பெரிய இராணுவக் குழுவை வழங்கியுள்ளது.
பெப்ரவரி 2020 நிலவரப்படி, வோஷிங்டன் தலிபான்களுடன் தனது படைகளைத் திருப்பிப் பெறுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டபோது, பென்டகன் சுமார் 14,000 பேர் ஆப்பானிஸ்தான் நாட்டில் தங்கியிருப்பதாக மதிப்பிட்டது.
மே 1, 2021 க்குள் திரும்பப் பெறுவதற்கான அசல் காலக்கெடு, புதிய ஜனாதிபதி ஜோ பைடனால் செப்டம்பர் 11 க்கு தள்ளிவைக்கப்பட்டது. ஆப்கானிஸ்தானில் சுமார் 9,500 வெளிநாட்டு துருப்புக்கள் இருந்தன, அதில் அமெரிக்க துருப்புக்கள் 2,500 பேர் கொண்ட மிகப்பெரிய அணியாகும்.
இழப்புகள்
பொது மக்கள் – 38,000, அதே காலகட்டத்தில் 70,000 க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இடம் பெயர்ந்தோர் – 395,800, ஆப்கானிஸ்தான் இராணுவம் – 2014 முதல் 45,000.
போருக்கு எவ்வளவு செலவானது? ஒரு திரில்லியன் (ஆயிரம் கோடி) டொடர்கள் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. உலகளாவிய அளவில் 2001 முதல் ஈராக், சிரியா மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் “பயங்கரவாதத்திற்கு எதிரான போர்” களில் 6.4 திரில்லியன் டொலர் செலவாகியுள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
செப்தெம்பர் 11, 2001 இல் இரட்டைக் போபுரங்கள் மீது இஸ்லாமிய தீவிரவாதிகள் விமானத் தாக்குதல் ஒன்றை மேற்கொண்டார்கள். அவர்கள் பில் லேடன் தலைமையில் இயங்கிய அல் கொய்தா தீவிரவாதிகள் என அறியப்பட்டது. எனவே பின் லேடனைப் பிடிக்க அமெரிக்கா முடிவு செய்தது. பின் லேடன் பாகிஸ்தானில் ஒளித்திரந்ததைக் கண்டறிந்த அமெரிக்க கடற்படை உலங்கு வானூர்திகளைப் பயன்படுத்தி அவரது இருப்பிடத்தை வளைத்து மே 02, 2011 அன்று தாக்குதல் மேற்கொண்டது. இந்தத் தாக்குதலில் பின் லேடன், அவரது மகன் உட்பட 5 பேர் கொல்லப்பட்டனர்.
பின் லேடன் கொல்லப்பட்டதை அடுத்து அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறியிருக்க வேண்டும். ஆனால் அமெரிக்கா அப்படிச் செய்யத் தவறியது.
அமெரிக்க சனாதிபதி ஜோ பைடன் அமெரிக்க துருப்புக்கள் ஓகஸ்ட் 31 க்கு முதல் ஆப்கானிஸ்தில் இருந்து வெளியேறிவிடும் என அறிவித்துள்ளார். அப்படி அமெரிக்கா வெளியேறும் என ஒரு ஒப்பந்தம் ஒன்று கடந்த 29 பெப்ரவரி 2019 அன்று தலிபான் தலைவர்களோடு
கைச்சாத்திடப்பட்டது.
அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் ஆப்கனிஸ்தானில் இருந்து தமது படைகளை விலக்கிக் கொள்ள 30 மாதங்கள் அவகாசம் இருந்தும் அங்கு இப்போது குழப்ப நிலை நிலவுகிறது. கடைசியாக அங்கிருந்து கிடக்கும் செய்தியின் படி ISIS (K) தீவிரவாதிகள் மேற்கொண்ட தற்கொலைத் தாக்குதலில் அமெரிக்க படையினர் 13 பேர் இறந்துள்ளனர். 18 பேர் காயப்பட்டுள்ளனர். ஆப்கானிய பொதுமக்கள் 90 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
அமெரிக்கா ஆயிரக்கணக்கான அமெரிக்க குடிமக்களையும் ஆப்கானிஸ்தான் பொதுமக்களையும் வெளியே கொண்டுவர 5,800 இராணுவ வீரர்களை காபுல் விமான நிலையத்தில் நிறுத்தியுள்ளது.
ஏற்கனவே ஆப்கானிஸ்தானில் இருந்து ஓகஸ்ட் 31 முன்னர் அமெரிக்க படைகளை விலக்கிக் கொள்ளும் முடிவு தொடர்பாக சனாதிபதி ஜோ பைடன் கடுமையான கண்டனத்துக்கு உள்ளாகி வருகிறார்.
சனாதிபதி ஜோ பைடன் எடுத்த முடிவை முன்னாள் பிரித்தானியாவின் பிரதமர் ரோனி பிளேயர் மிகக் கடுமையாக விமர்ச்சித்துள்ளார். “இதுவொரு முட்டாள்” த்தனமான முடிவு ( “imbecilic” decision) எனச் சாடியுள்ளார். அதே நேரம் ஓகஸ்ட் 31 க்கு முன்னர் அமெரிக்கப் படைகள் வெளியேற வேண்டும் வெளியேறத் தவறினால் விளைவுகள் பாரதூரமாக இருக்கும் என தலிபான் எச்சரித்துள்ளது.
இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் தலிபான் மீள ஆட்சியைக் கைப்பற்றினாலும் சாதாரண மக்கள் அவர்களுக்கு மாலை மரியாதை செய்யவில்லை. எதிராக தலிபான்களை பேய்களைப் பார்த்த அச்சத்தில் மக்கள் இருக்கிறார்கள்! இதன் காரணமாக மக்கள் ஆப்கானிஸ்தானை விட்டுவெளியேற படாதபாடு படுகிறார்கள். பேருந்தில் ஏறுவது போல அமெரிக்க விமானங்களில் முண்டியடித்து ஏறுகிறார்கள். இதன்போது உயிர் இழப்பும் ஏற்பட்டுள்ளது.
இதுவரை (செவ்வாய் 24) காபூலில் இருந்து 21,000 பேர் விமானத்தில் கொண்டு செல்லப்பட்டனர் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. முப்பத்தேழு அமெரிக்க இராணுவ விமானங்கள் மூலம் 12,700 பேரும் அமெரிக்க நட்புநாடுகளின் 57 விமானங்களில் கூடுதலாக 8,900 பேர் வெளியேறியுள்ளார்கள்.
ஆட்சியைக் கைப்பற்றிய தலிபான்கள் கடந்த காலத்தை விட (1996 – 2001) வித்தியாசமாக நாட்டை ஆட்சி செய்யப் போவதாக வாக்குறுதிகளை வழங்கி வருகிறார்கள். தலிபான்கள் ‘இஸ்லாமிய சட்டத்தின்’ கீழ் பெண்களின் உரிமைகளை பாதுகாக்கப் போவதாக உறுதிளிக்கின்றனர். அதே சமயம் ஆப்கனிஸ்தான் ஒரு இஸ்லாமிய குடியரசு எனவும் அறிவித்துள்ளார்கள்.
தலிபான் என்பது இஸ்லாமிய அடிப்படைவாத (Islamic Fundamentalism) தீவிர அமைப்பாகும். மொகமது நபி வாழ்ந்த காலமான 7 ஆம் நூற்றாண்டு இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு அமைய இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் அரசு அமைய வேண்டும் என அடிப்படைவாத தலிபான் இயக்கம் நம்புகிறது. இஸ்லாம் ஒரு மதம் அல்ல அது ஒரு மார்க்கம் என்றும் அதில் அரசியல் உள்ளடக்கப்பட்டுள்ளது. இஸ்லாம் மதத்தை உலகமயப்படுத்துவது ஒவ்வொரு முஸ்லிமின் கடமை என்றும் நவிலப்படுகிறது. இதற்காக முஸ்லிம்கள் ஜிகாதி போர்களை மேற்கொள்ள வேண்டும் என்று அல்குர் ஆன் கட்டளையிடுகிறது.
இசுலாமிய அடிப்படைவாதம் என்பது அரசியல் நோக்கங்களை அடைவதற்காக மதத்தின் பெயரால் இஸ்லாமியர்களால் மேற்கொள்ளப்படும் தீவிரவாத தாக்குதல்கள் ஆகும். இத்தீவிரவாத தாக்குதல்களுக்கான கருத்தியல் ஆதாரமாக குரானின் வசனங்களைக் கொள்ளுவதால் இவை இஸ்லாமிய தீவிரவாதம் என அழைக்கப்படுகிறது. இஸ்லாமியக் குழுக்கள் அவர்கள் நிகழ்த்தும் வன்முறையையும் கொலைகளையும் குரான் வசனங்கள் மற்றும் ஹதீஸ் மூலம் நியாயப்படுத்துகின்றனர். சமீப காலங்களில் உலகெங்கும் தீவிரப் போக்குடைய இஸ்லாமியக் குழுக்கள் பிற இஸ்லாமியப் பிரிவைச் சார்ந்தவர்களையும் இறை நம்பிக்கையற்றவர்களையும் மற்றும் பிற மதத்தவர்களையும் கலீபா ஆட்சிமுறையின் படி தலையை வெட்டிக் கொல்லப் பரிந்துரைப்பது மற்றும் அடிமைப்படுத்துவது ஆகியவற்றைச் செய்கின்றனர். இவ்வாறான செயல்கள் மிதவாத இஸ்லாமியர்களுக்கும் தீவிரவாதப் போக்குடைய இஸ்லாமியர்களுக்கும் இடையில் கருத்தியல் வேறுபாடுகளை உருவாக்குகின்றன.
பெண்களைப் பொறுத்தளவில் இஸ்லாம் அவர்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கிறது.
*ஆண்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை மணந்து கொள்ள இஸ்லாம் அனுமதிக்கிறது.
*மனைவியைப் பிடிக்காவிட்டால் சர்வ சாதாரணமாக விவாகரத்துச் செய்ய இஸ்லாம் ஆண்களுக்கு உரிமை வழங்கியுள்ளது.
*விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்களுக்கு ஜீவனாம்சம் கொடுப்பதையும் இஸ்லாம் மறுக்கிறது.
*பெண்களை ஹிஜாப் எனும் ஆடையால் போர்த்தி அவர்களின் சதந்திரத்தைப் பறிக்கிறது.
*வாரிசுரிமைச் சட்டத்தில் ஆண்களுக்கு இரு மடங்கும், பெண்களுக்கு ஒரு மடங்கும் எனப் பாரபட்சம் காட்டுகிறது.
*இரண்டு பெண்களின் சாட்சி ஒரு ஆணுடைய சாட்சிக்குச் சமமானது என்று பாரபட்சம் காட்டுகிறது.
*கணவன் இறந்து விட்டால் இத்தா என்ற பெயரில் குறிப்பிட்ட காலம் பெண்களைத் தனிமைப்படுத்தி வைக்கிறது.
*பெண்கள் ஆட்சித் தலைமை வகிக்கக் கூடாது எனக் கூறிப் பெண்களின் அரசியல் அதிகாரத்தைப் பறிக்கிறது.
*முஸ்லிம் பெண்கள் கல்வி கற்பதில்லை.
*முஸ்லிம் பெண்கள் பள்ளிவாசல்களில் தொழ அனுமதியில்லை.
தலிபான்கள், பெண்கள் ஆசிரியர், மருத்துவர் ஆகப் பணிபுரிய மட்டும் அனுமதிப்பார்கள். ஏனைய தொழில்கள் செய்ய அனுமதியில்லை.
இஸ்லாம் இசை. நடனத்தை தடை செய்கிறது. தலிபான்கள் தொலைக்காட்சிகளை தடை செய்து விட்டதாக அறிவித்துள்ளார்கள். போகப் போக வேதாளம் மீண்டும் முருக்க மரத்தில் ஏறினால் அது பற்றி வியப்படையத் தேவையில்லை.
2001 இல் பதவி நீக்கம் செய்யப்படுவதற்கு முன்பு, தாலிபான் பெண்கள் படிப்பதைத் தடைசெய்து, விபச்சாரம் போன்ற குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்ட பெண்களை ஷாரியா சட்டத்துக்கு அமைய கல்லால் அடித்துக் கொன்றனர்.
2001 இல் ஆப்கானிஸ்தானில் தலிபான்களது ஆட்சி அகற்றப்பட்ட பின்னர் கல்வி அமைச்சகம், இப்போது 9.7 மில்லியன் குழந்தைகள் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 42 சதவீதம் பேர் பெண்கள் என்றும் கூறியுள்ளது. நாடு முழுவதும் 18,000 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன, இது இரண்டு தசாப்தங்களுக்கு முன்பு 3,000 ஆக இருந்தது.
கடந்த ஓகஸ்ட் 15 வரை ஆப்கான் நாடாளுமன்றத்தில் 68 பெண் சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தார்கள். கடந்த இரண்டு தசாப்தங்களாக, பெண்கள் மேலவை உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் ஆளுநர்கள் போன்ற மூத்த அரசியல் மற்றும் அரசாங்க பதவிகளையும் வகித்துள்ளனர்.
2003 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், குழந்தை இறப்பு விகிதம் 1,000 பேருக்கு 53 முதல் 23 ஆக குறைந்துள்ளது என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.
சனநாயக விழுமியங்களையும் சட்டத்தின் ஆட்சியையும் புறந்தள்ளும் தலிபான் ஆட்சியை அங்கீகரிக்கப் போவதில்லை என இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அறிவித்துள்ளன. ஆப்கானிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வந்த நிதியுதவிகளை இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் உலக வங்கி நிறுத்தியுள்ளன.
அதே சமயம் தலிபான்கள் சீன அரசோடு பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார்கள். பாகிஸ்தான், உருசியா, இரான் போன்ற நாடுகள் தலிபான்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
மிதவாத முஸ்லிம் நாடுகள் தலிபான் ஆட்சியை அங்கீகரிப்பார்களா என்பது கேள்விக் குறி. முஸ்லிம் அடிப்படைவாதிகள் தங்கள் ஆட்சிக்கு அச்சுறுத்தலாக இருக்கிறார்கள் என பல மிதவாத இஸ்லாமிய நாடுகள் எண்ணுகின்றன.
இன்றைய பூகோள அரசியலில் தலிபான்களது இஸ்லாமிய அடிப்படைவாத அரசாட்சி நிலைக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Leave a Reply
You must be logged in to post a comment.