இலங்கைத் தமிழர்களுக்கு புதிய வீடுகள், கல்வி உதவி, பணக்கொடை அதிகரிப்பு – மு.க.ஸ்டாலின்

இலங்கைத் தமிழர்களுக்கு புதிய வீடுகள், கல்வி உதவி, பணக்கொடை அதிகரிப்பு – மு.க.ஸ்டாலின்

27 ஆகஸ்ட் 2021

அகதிகள் முகாம்
படக்குறிப்பு,மண்டபத்தில் இலங்கை அகதிகள் குடியிருப்புப் பகுதி.

தமிழ்நாட்டில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களின் குடும்பங்களுக்கு வீடுகள் கட்டித் தருவது உள்பட பல்வேறு திட்டங்களையும் சலுகைகளையும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு சட்டப்பேரவையில் வெளியிட்டார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிக்கை ஒன்றை வெளியிட்ட தமிழ்நாடு முதலமைச்சர் இலங்கைத் தமிழர்களுக்கென பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

முக்கியமான பத்து அறிவிப்புகள்:

1. முகாம்களில், மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ள 7 ஆயிரத்து 469 வீடுகள், 231 கோடியே 54 இலட்சம் ரூபாய் செலவில் புதிதாகக் கட்டித்தரப்படும். இதில் முதற்கட்டமாக 3 ஆயிரத்து 510 புதிய வீடுகள் கட்டுவதற்கு, நடப்பு நிதி ஆண்டில் 108 கோடியே 81 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

2. முகாம்களில் உள்ள மின் வசதி, கழிப்பிட வசதி மற்றும் குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்த 30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இதைத் தவிர, ஆண்டுதோறும், இது போன்ற வசதிகளை செய்து தர ஏதுவாக, இலங்கைத் தமிழர் வாழ்க்கைத் தர மேம்பாட்டு நிதியாக 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

கல்வி உதவிகள் அதிகரிப்பு

3. பொறியியல் படிப்புக்குத் தேர்ச்சிபெற்ற மாணவர்களில் மதிப்பெண் அடிப்படையில், முதல் 50 மாணவர்களுக்கு, அனைத்துக் கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணம் ஆகியவற்றை அரசே ஏற்கும். மேலும், வேளாண் / வேளாண் பொறியியல் பட்டப் படிப்பிலும் மதிப்பெண் அடிப்படையில் முதல் 5 மாணவர்களுக்கும், மேற்சொன்ன கல்வி மற்றும் விடுதிக் கட்டணங்களை அரசே ஏற்றுக்கொள்ளும். அதுமட்டுமின்றி, முதுநிலைப் பட்டப்படிப்பு பயிலும் அனைத்து முகாம்வாழ் மாணவர்களையும் ஊக்குவிக்கும் வகையில், அவர்களின் கல்வி மற்றும் விடுதிக் கட்டணங்களை அரசே ஏற்றுக் கொள்ளும்.

4. முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களில் ஆண்டொன்றுக்குத் தோராயமாக, 750 மாணவர்கள் அரசு மற்றும் பிற கல்லூரிகளில் கலை, அறிவியல் மற்றும் பட்டயம் உள்ளிட்ட தொழிற்படிப்புகள் படித்து வருகின்றனர். இவர்களுக்கு வழங்கப்படக் கூடிய கல்வி உதவித்தொகை (Scholarship) போதுமானதாக இல்லை என அறியப்பட்டுள்ளது. இனி பாலிடெக்னிக் படிப்பிற்கு 10 ஆயிரம் ரூபாய்; இளநிலை கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்பிற்கு 12 ஆயிரம் ரூபாய்; இளநிலை தொழில்சார்ந்த படிப்புகளுக்கு 20 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும்.

திமுக செயல் தலைவர் ஸ்டாலின்
வாழ்வாதார உதவிகள் அதிகரிப்பு

5. முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு, மாதந்தோறும் அவர்களுடைய வாழ்வாதாரத்திற்காகப் பணக்கொடை வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகையானது, குடும்பத் தலைவருக்கு ஆயிரம் ரூபாயும், இதர பெரியவர்களுக்கு 750 ரூபாயும், 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு 400 ரூபாயும் வழங்கப்பட்டு வருகிறது. இந்தப் பணக்கொடை, கடந்த பத்தாண்டு காலமாக உயர்த்தப்படாத நிலையில், இனி குடும்பத் தலைவருக்கு மாதந்தோறும் 1,500 ரூபாய், இதர பெரியவர்களுக்கு 1,000 ரூபாய் மற்றும் 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு 500 ரூபாய் என்று உயர்த்தி வழங்கப்படும்.

6. முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு பிரதம மந்திரி உஜ்வாலா திட்டத்தின்கீழ் இவர்களுக்கு எரிவாயு இணைப்புப் பெற இயலாத நிலை உள்ளது. எனவே, ஒவ்வொரு குடும்பத்திற்கும் விலையில்லா எரிவாயு இணைப்பு மற்றும் இலவச அடுப்பு வழங்கப்படும். இதற்காக அரசிற்கு ஒருமுறை 7 கோடி ரூபாய் செலவினம் ஏற்படும். அதைத் தவிர, குடும்பத்திற்கு 5 எரிவாயு உருளைக்குத் தலா 400 ரூபாய் வீதம் மானியத் தொகை வழங்கப்படும். இதற்காக 3 கோடியே 80 இலட்சம் ரூபாய் ஆண்டுதோறும் ஒதுக்கீடு செய்யப்படும்.

விலையில்லா அரிசி

7. முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு தற்போது 20 கிலோவிற்கு மேல் வழங்கப்படும் அரிசிக்கு, கிலோ ஒன்றிற்கு 57 பைசா வீதம் மானியம் வழங்கப்படுகிறது. இதனை இனி ரத்து செய்து, அவர்கள் பெறும் முழு அரிசி அளவும் விலையில்லாமல் வழங்கப்படும்.

8. முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு கோ-ஆப்டெக்ஸ் மூலம் ஒவ்வோர் ஆண்டும் இலவச ஆடைகளும், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இலவசப் போர்வைகளும் வழங்கக்கூடிய திட்டத்தில் ஒன்றிய அரசு நிர்ணயித்த விலையில் ஆடைகள் வாங்கி வழங்க இயலாத நிலையில், நடப்பு ஆண்டிற்கு பெறப்பட்ட விலைப்புள்ளிகளின் அடிப்படையில் குடும்பம் ஒன்றிற்கு 1,790/- ரூபாயிலிருந்து, குடும்பம் ஒன்றுக்கு, 3,473/- ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

இலங்கை அகதிகள்
படக்குறிப்பு,கீழ்புதுப்பட்டு பகுதியில் உள்ள அகதிகள் முகாமில் வாழும் ஒரு குடும்பம் (கோப்புப்படம்)

9. முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு 1,296/- ரூபாய் மதிப்பில் சேலம் இந்திய உருக்காலை நிறுவனம் மூலம் உயர்த்தப்பட்ட வீதத்தில் பாத்திரங்கள் வழங்கப்படும்.

அகதிகளுக்கான ஆலோசனைக் குழு

10. முகாம்களில் வசிக்கக்கூடிய இலங்கை அகதிகளுக்கும், வெளிப்பதிவில் உள்ள அகதிகளுக்கும் உரிய உதவிகளை வழங்கிடவும், அடிப்படை வசதிகளை மேம்படுத்திடவும், குடியுரிமை வழங்குதல் மற்றும் அவர்களில் இலங்கை திரும்பும் அகதிகளுக்கு தகுந்த ஏற்பாடுகள் செய்தல் போன்ற நீண்டகாலத் தீர்வினைக் கண்டறிய ஏதுவாகவும், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத் துறை அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், சட்டமன்ற உறுப்பினர் ஒருவர், பொதுத் துறை செயலாளர், மறுவாழ்வுத் துறை இயக்குநர் மற்றும் பிற அரசு உயர் அலுவலர்கள், அரசு சாரா உறுப்பினர்கள், முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களுடைய பிரதிநிதி மற்றும் வெளிப்பதிவில் வசிக்கக்கூடிய அகதிகளுக்கான பிரதிநிதி ஆகியோரை உள்ளடக்கிய ஒரு ஆலோசனைக் குழு விரைவில் அமைக்கப்படும்.

1983 ஆம் ஆண்டு முதல் இதுவரை 3 இலட்சத்து 4 ஆயிரத்து 269 இலங்கைத் தமிழர்கள் அகதிகளாகத் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளனர். இவர்களில், 18 ஆயிரத்து 944 குடும்பங்களைச் சார்ந்த 58 ஆயிரத்து 822 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தமிழ்நாட்டில் 29 மாவட்டங்களில் அமைந்துள்ள 108 முகாம்களில் (இரண்டு சிறப்பு முகாம்கள் உள்பட) தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். மேலும், 13 ஆயிரத்து 540 குடும்பங்களைச் சார்ந்த 34 ஆயிரத்து 87 நபர்கள் காவல் நிலையங்களில் பதிவுசெய்து, வெளியில் வசித்து வருகிறார்கள்.

https://www.bbc.com/tamil/india-58354916

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

1 Comment

  1. Veluppillai Thangavelu
    ஒரு புறம் இலங்கைத் தமிழர்கள் தமிழ்நாட்டுத் தமிழர்களின் தொப்புள்க்கொடி உறவுகள் என்று சொல்லிக் கொண்டு மறுபுறம் அவர்களை திறந்த வெளி சிறைச்சாலைகளில் அடைத்து வைத்திருப்பது முரண் நகையாகும். 1983 ஆம் ஆண்டுக் கலவரத்தை தொடர்ந்தே ஏழ்மையில் வாடிய மக்களே தங்கள் உயிரைக் காப்பாற்ற தமிழ்நாட்டுக்கு ஓடிப்போனார்கள். கொஞ்சம் வசதி, வாய்ப்பு உள்ளவர்கள் வட அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகளுக்கு இடம் பெயர்ந்தார்கள். இன்று இவர்களில் 90 விழுக்காட்டினர் அடைக்கலம் புகுந்த நாட்டின் குடிமக்களாக இருக்கின்றனர். கல்வி, தொழில் வாய்ப்பு தாராளமாகக் கிடைக்கிறது. தமிழ்நாட்டுக்கு ஓடிப் போனவர்களது வாழ்க்கை நிலை அப்படியே தொடர்கிறது. தமிழ் நாட்டில் உள்ள ஏதிலி முகாம்களில் தோராயமாக 65,000 பேர்கள் வாழ்கிறார்கள். வெளியே மேலும் 35,000 பேர் வாழ்கிறார்கள். இவர்கள் விரும்பும் பட்சத்தில் அவர்களுக்கு இந்திய குடியுரிமை கொடுக்க வேண்டும். இல்லையேல் அவர்கள் நாடு திரும்ப போக்குவரத்து, வசதிசெய்யப்பட வேண்டும். அவர்கள் மறுவாழ்வுக்கு காணி, வீடுகள் கட்டிக் கொடுக்கப் படவேண்டும். இதற்கு இந்திய ஒன்றிய அரசு நிதி உதவி செய்ய வேண்டும். கலைஞர் கருணாநிதி, முதலமைச்சர் எம்ஜிஆர், ஜெயலலிதா, இடப்பாடி பழனிச்சாமி போன்ற முதல் அமைச்சர்கள் இலங்கைத் தமிழ் ஏதிலிகளுக்கு உதவியிருக்கிறார்கள். ஆனால் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே உருப்படியான உதவிகளைச் செய்ய முன்வந்துள்ளார். அவரை எத்தனை முறை பாராட்டினாலும் தகும்.

Leave a Reply