கியூபாவுக்கு வந்த சோதனை!
நக்கீரன்
சொர்க்க வாசலில் ஒருவர் நுழையும்போது அவரிடம் இரண்டு கேள்விகள் கேட்கப்படும் என்று சொல்லப்படுகிறது. இந்தக் கேள்விகளுக்கு உங்கள் பதில் “ஆம்” என்றால் அனுமதி உண்டு, இல்லாவிட்டால் அனுமதி மறுக்கப்படும். முதல் கேள்வி என்னவென்று தெரியுமா?
“உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியை உணர்ந்திருக்கிறீர்களா?” இரண்டாம் கேள்வி, “உங்களைச் சுற்றியுள்ள மனிதர்களுக்கு மகிழ்ச்சியை விளைவித்திருக்கிறீர்களா?”
இதற்கு உங்கள் பதில் “ஆம்” என்றால், நீங்கள் ஏற்கனவே சொர்க்கத்தில்தான் இருக்கிறீர்கள்!
கியூபா ஒரு தீவல்ல. அது பூலோகத்தில் உள்ள ஒரு சொர்க்க பூமி. உலகில் உள்ள அத்தனை வளங்களும், அழகுகளும் அங்கே கொட்டிக் கிடக்கிறது. ஆனால் அங்கு வாழும் மக்கள் சொர்க்கத்தில் வாழவில்லை. பாலும் பழமும் உண்ணவில்லை. வறுமையில் உழல்கிறார்கள்.
1959 இல் பிடல் கஸ்ரோ தலைமையிலான யூலை 26 இயக்கம் கியூபா நாட்டின் சர்வாதிகாரி புல்கேன்சியோ பாடிஸ்தா (Fulgencio Batista) அவர்களின் ஆட்சியைக் கவிழ்த்து அதிகாரத்துக்கு வந்தது. 1965 ல் கியூபாவின் ஒருங்கிணைந்த பொதுவுடமை கட்சியின் மூலம் ஆட்சியமைக்கப்பட்டது.
கியூபா கரீபியன் தீவுகளில் மிகவும் பெரிய தீவாகும். லா எசுப்பானியோலாவிற்கு அடுத்து இரண்டாவது அதிக மக்கள்தொகை உள்ள தீவாக அது விளங்குகின்றது. இப்பகுதியில் உள்ள மற்ற நாடுகளை விடக் குறைந்த மக்களடர்த்தி கொண்டதாக உள்ளது.
1990 வரை கிழக்கு ஐரோப்பா மற்றும் சோவியத் ஒன்றிய நாடுகளில் கொடிகட்டிப் பறந்த பொதுவுடமை அரசுகள் வலுவிழந்து கரைந்து போய்விட்டன. இன்று உலகளாவிய அளவில் சீனா, லாவோஸ், வியட்நாம், கியூபா நாடுகளில் மட்டுமே பொதுவுடமைக் கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. வட கொரியாவில் தொழிலாளர் கட்சியின் பெயரில் ஒரு கட்சி ஆட்சி நடக்கிறது.
இந்தப் பொதுவுடைமை நாடுகளில் ஐக்கிய நாடுகளின் “மிக உயர்ந்த” மனித வளர்ச்சி தரவரிசையிலுள்ள நாடாக இன்று கியூபா விளங்குகின்றது. பொது சுகாதாரம், கல்வித் துறைகளில் மிக உயர்ந்த நிலையில் உள்ளது. 2019 ஆம் ஆண்டுக்கான கியூபாவின் மனிதவள மேம்பாடு மதிப்பு (Human Rights Index) 0.783 ஆகும். இது நாட்டை உயர் மனித வளர்ச்சிப் பிரிவில் வைத்தது – 189 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் 70 ஆக உள்ளது. இந்தத் தரவரிசை ஈரானுடன் (இஸ்லாமிய குடியரசு) பகிர்ந்து கொள்ளப்பட்டது. 1990 க்கும் 2019 க்கும் இடையில், கியூபாவின் மனித மேம்பாடு மதிப்பு 0.680 இல் இருந்து 0.783 ஆக அதிகரித்தது, இது 15.1 விழுக்காடு அதிகரிப்பாகும்.
கியூபாவில் பொது சுகாதாரம் மற்றும் கல்வி இலவசமாகக் கிடைக்கிறது. ஹவானா பல்கலைக் கழகம் கியூபாவின் மிகப் பழைய பல்கலைக் கழகம் ஆகும். கியூபாவின் கல்வியறிவு 100% ஆகும். கியூபாவில் வயது பால் வித்தியாசம் இன்றி பாடசாலைச் சீருடைகளையே மாணவ – மாணவிகள் அணிகின்றனர். இதனை நான் நேரில் பார்த்திருக்கிறேன்.
வெளிநாடுகளில் 30,000 கியூபா நாட்டு மருத்துவர்கள் பணியில் இருக்கிறார்கள். இதன் மூலம் கியூபா 7 பில்லியன் அ.டொலர்களை திரட்டுகிறது. மேலும் தொடர முன்னர் கியூபா நாடு பற்றிய புள்ளிவிபரங்களைப் பார்ப்போம்.
பெயர் – கியூபா குடியரசு (República de Cuba (Spanish)
தலைநகரம் – ஹவானா (23°8′N 82)
அரச மொழி – இசுப்பானியா
பரப்பளவு – 110,860 ச.கிமீ
மக்கள் தொகை – 11, 147,407 ( யூலை 2017 மதிப்பீடு)
தலைநகரம் – ஹவானா
இனக் குழுக்கள் – வெள்ளையர் 64.1 விழுக்காடு, கருப்பர் 9.3 விழுக்காடு (2012 மதிப்பீடு)
மொத்த உள்நாட்டு உற்பத்தி – அ.டொலர் 137.00 பில்லயன் (2017 மதிப்பீடு)
தனிநபர் வருமானம் – அ.டொலர் 12,300 (2016 மதிப்பீடு)
வேலையற்றோர் – 2.2 விழுக்காடு (2017 மதிப்பீடு). உத்தியோகப்பற்றற்ற மதிப்பீடு பல மடங்கு அதிகம்.
இந்தப் பின்னணியில்தான் கடந்த யூலை மாதம் 11 ஆம் நாள் (ஞாயிற்றுக் கிழமை) 2021 அன்று கியூபா அரசாங்கத்திற்கும் ஆளும் கியூபா பொதுவுடமைக் கட்சிக்கும் எதிரான தொடர்ச்சியான போராட்டங்கள் தொடங்கின, இது உணவு மற்றும் மருந்துபற்றாக்குறை மற்றும் கியூபாவில் மீண்டும் எழுச்சி பெற்ற கோவிட் – 19 தொற்றுநோய்க்கு அரசாங்கத்தின் மெத்தனப் போக்கு ஆகியவற்றால் தூண்டப்பட்டது. இந்த எதிர்ப்புக்கள் 1994 இல் மாலேகொனாஸோவுக்குப் (Maleconazo) பின்னர் நடந்த மிகப் பெரிய அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் ஆகும்.
கியூபாவின் ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் பாரிய ஆர்ப்பாட்டத்தில் இறங்கினார்கள். இது முற்றிலும் எதிர்பாராத எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் என்று சொல்ல முடியாது.
நான் கடந்த பல ஆண்டுகளாக கியூபாவுக்கு சுற்றுலா போய் வந்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் வெவ்வேறு சுற்றுலா தலங்களுக்குப் போயிருக்கிறேன். சாதாரண மக்களோடு உரையாடியிருக்கிறேன். அவர்கள் வீடுகளில் விருந்து உண்டுள்ளேன்.
கியூபா இயற்கை கொஞ்சமும் வஞ்சகம் செய்யாத நாடு. இந்த சுற்றுலா தலங்களில் காணப்படும் ஆடம்பர ஹோட்டல்கள், நீச்சல் தடாகங்கள், கடற்கரைகள், படுக்கை அறைகள், விதம் விதமான உணவு வகைகள், பழங்கள் எவரையும் மலைக்க வைக்கும்.
ஆனால் சற்று வெளியே சென்று பார்த்தால் பெரும்பான்மை மக்கள் ஏழ்மையில் வாடுவதைப் பார்க்கலாம். சுற்றுலா போகிறவர்கள் பழைய உடுபுடவைகளைக் அன்பளிப்புச் செய்தால் மக்கள் அடித்துப் பிடித்து வாங்கிக் கொள்கிறார்கள்.
அரசு மக்களுக்கு மாதந்தோறும் அடிப்படைத் தேவைகளான அரிசி, பருப்பு வெள்ளைச் சீனி, பழுப்புச் சீனி போன்ற பொருட்களை சந்தை விலையை விட 8 இல் ஒரு பங்கு விலைக்கு வழங்குகிறது.
பொருள் | அளவு | விலை (CUP) |
---|---|---|
அரிசி | 2.7 kg | 0.70 / lb |
பருப்பு | 570 g | 0.32 / lb |
சீனி (வெள்ளை) | 1.4 kg | 0.15 / lb |
சீனி (பழுப்பு) | 1.4 kg | 0.10 / lb |
பால் (7 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு | 1 lt / day | 0.25 / each |
முட்டை | 12 | 0.15 each |
உருளைக் கிழங்கு/வாழைப்பழம் | 6.8 kg | 0.40 / lb |
பிடல் காஸ்ட்ரோவும் அவரது இளவல் இராவுல் காஸ்ட்ரோவும் கியூபாவைக் கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் வழிநடத்தினார்கள். 2018 இல், தலைமை ஒரு இளைய தலைமுறைக்கும் காஸ்ட்ரோ குடும்பத்திற்கு வெளியே உள்ள ஒருவருக்கும் ஒப்படைக்கப்பட்டது. இராவுல் காஸ்ட்ரோவின் இரண்டாவது பதவிக்காலத்தில் மைக்கல் டயஸ் கேனரல் ( Miguel Díaz-Canel) முதல் துணை சனாதிபதியாக இருந்தார்.தேசிய சட்டமன்றத் தேர்தல்களுக்குப் பிறகு – எந்த எதிர்க்கட்சி வேட்பாளர்களும் அனுமதிக்கப்படாத நிலையில் – கியூபா நாடாளுமன்ற அமைப்பு ஒருமனதாக Díaz-கேனலை புதிய அரசுத் தலைவராகத் தேர்ந்தெடுத்தது.
இந்தத் தொடர் ஆர்ப்பாட்டங்களுக்கு பல காரணங்கள் உண்டு. அவற்றில் முக்கியமானவை 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக மோசமான பொருளாதாரச் சரிவு, உணவு, மின்சாரம் மற்றும் மருந்துகள் பற்றாக்குறை, விலைவாசி உயர்வு, கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்தத் தவறியது, சட்டத்துக்குப் புறம்பான கைதுகள், அரசியல் எதிரிகள் மீது அடக்குமுறை ஆகியவை காரணமாக அரசின் மீது மக்களது கோபத்தை அதிகப்படுத்தியது ஆகும்.
கியூபாவில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் பற்றி மனித உரிமைக் காப்பகம் விரிவான அதே நேரம் காட்டமான அறிக்கையை 2020 இல் வெளியிட்டிருந்தது. (https://www.hrw.org/world-report/2021/country-chapters/cuba)
ஆர்ப்பாட்டக்காரர்கள் ஹவானா வீதிகளில் “எங்களுக்குச் சுதந்திரம் வேண்டும்” “சர்வாதிகாரம் ஒழிக என்று முழக்கமிட்டனர். மொத்தம் 40 க்கு மேற்பட்ட ஊர்வலங்கள் கியூபாவின் பல ஊர்களில் இடம்பெற்றன. சமூக ஊடகங்கள்
மக்கள் வெளிப்படையாக ஆட்சியாளர்களை விமர்ச்சிப்பதில்லை. சிறிது காலப் பழக்கத்தின் பின்னர் கொஞ்சம் மனம் திறக்கிறார்கள். அப்போதும் பிடல் கஸ்ரோ பற்றி உயர்வாகவும் மரியாதையோடும் பேசுகிறார்கள்.
ஹவானாவிற்கு தென்மேற்கே 30 கிலோமீட்டர் (20 மைல்) தொலைவில் உள்ள சான் அன்டோனியோ டி லாஸ் பானோஸ் என்ற நகரத்தில் போராட்டங்கள் முதலில் ஆரம்பித்தன. அங்கு பல ஆயிரம் ஆர்ப்பாட்டக்காரர்கள், முக்கியமாக இளைஞர்கள் வீதிகளில் இறங்கினார்கள்.
மக்களின் கோபத்தைத் தனிப்பதற்குப் பதிலாக சனாதிபதி டயஸ்-கேனல் ஞாயிற்றுக்கிழமை நடத்திய தொலைக்காட்சி உரையில், “நாட்டின் அனைத்துப் புரட்சியாளர்களும், கம்யூனிஸ்டுகளும் தெருக்களில் இறங்குங்கள். ஆர்ப்பாட்டக்காரர்களைத் தீர்க்கமான, உறுதியான மற்றும் தைரியமான வழியில் எதிர்கொள்ளுங்கள்” என்னும் பொருள்பட பேசியது ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு மேலும் கோபத்தை ஏற்படுத்தியது.
எரிகிற நெருப்பில் அமெரிக்க அதபர் ஜோ பைடன் பின்நிற்கவில்லை. கியூபாவில் நடக்கும் “பல்லாண்டு கால அடக்குமுறையை” முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என அவர் அழைப்பு விடுத்தார். “கியூபா மக்களின் கோரிக்கைகளை கவனிக்குமாறு” பிடன் கியூபா அரசாங்கத்தை வலியுறுத்தினார். “நாங்கள் கியூப மக்களுடன் துணை நிற்கிறோம், இந்த முக்கியமான தருணத்தில் தங்கள் மக்களின் சிக்கல்களைக் கவனித்து, அவர்களின் தேவைகளை நிறைவு செய்யுமாறு கியூபாவை அமெரிக்கா கேட்கிறது” என்று அவர் மேலும் கூறினார்.
2014 மற்றும் 2016 க்கு இடையில் பராக் ஒபாமாவின் ஆட்சியில் கியூபா மீதான பொருளாதாரத் தடைகள் தற்காலிகமாக நீக்கப்பட்டன. அவர் கியூபாவின் தலைநகர் ஹவானாவுக்கு மார்ச் 21, 2016 வருகை தந்தபோது நான் கியூபாவில் இருந்தேன். 88 ஆண்டுகளுக்குப் பின்னர் கியூபாவில் காலடி எடுத்த முதல் சனாதிபதி பராக் ஒபாமா ஆவார். ஆனால் அவர் தொடக்கி வைத்த நல்லிணக்க முயற்சிகளை அடுத்து வந்த சனாதிபதி ட்ரம்ப் தலைகீழாக மாற்றினார். இப்போதுள்ள சனாதிபதி பைடனும் ட்ரம்ப் அவர்களின் கியூபா கொள்கையை பின்பற்றுவதாகத் தெரிகிறது.
கியூபாவின் இன்றைய பொருளாதார அவலத்துக்கு அமெரிக்கா அதன்மீது விதித்துள்ள பொருளாதாரத் தடைகளே காரணமாகும். கியூபாவின் தொழில்துறைக்கு தேவைப்படும் யந்திரங்கள், உதிரிப் பாகங்கள் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது. ஐம்பது, அறுபதுகளில் உற்பத்தி செய்த வண்டிகளையே வீதிகளில் பார்க்க முடியும்.
கியூபா அரசைக் கவிழ்ப்பதற்கு அமெரிக்கா பலமுறை முயற்சித்தது. அவை வெற்றிபெறவில்லை. இப்போது கியூபா மக்களே அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். சோறும் வேண்டும் சுதந்திரமும் வேண்டும் என்கிறார்கள்.
இது கியூபாவுக்கு வந்த சோதனை!
Leave a Reply
You must be logged in to post a comment.