கலை வாழும் தமிழ்நாடு தலை நிமிர்ந்தால் அது உலகத் தமிழர்கள் எல்லோருக்கும் நன்மையாகும்!

கலை வாழும் தமிழ்நாடு தலை நிமிர்ந்தால் அது உலகத் தமிழர்கள் எல்லோருக்கும்  நன்மையாகும்!

நக்கீரன்

பத்து ஆண்டு கால இடைவெளிக்குப் பின்னர் ஆட்சிக் கட்டில் ஏறிய திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி எதிர்வரும் இந்திய நாட்டின் சுதந்திரத் திருநாளான ஓகஸ்ட் 15 இல் நூறு நாட்களை நிறைவு செய்கிறது.

தமிழ்நாட்டின் 16 ஆவது சட்டசபைக்கான தேர்தல் கடந்த ஏப்ரில் 6 ஆம் நாள் நடந்தது தெரிந்ததே.  வாக்கு எண்ணிக்கை மே 02 ஆம் நடந்தது. மொத்தம் 234 இருக்கைகளைக் கொண்ட  தமிழ்நாடு சட்ட சபையில் தனித்து 125  இருக்கைகளை (திமுக கூட்டணி 159)  கைப்பற்றிய திமுக பெரும்பான்மை பலத்தோடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைத்தது.  பத்தாண்டு காலமாக ஆட்சி அதிகாரத்தில் இருந்த அதிமுக 65 தொகுதிகளில் (அதிமுக கூட்டணி 75)  மட்டும் வெற்றிபெற்று எதிர்க்கட்சி ஆக இருந்து வருகிறது.

ஸ்டாலின்

தேர்தல் காலத்தில் திமுக தனது தேர்தல் அறிக்கையில்  17 முக்கிய வாக்குறுதிகளை வழங்கியிருந்தது. அவையாவன,

(1)   திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

(2) ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’  நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் வழங்கிய மனுக்கள் மீது 100 நாட்களுக்குள் தீர்வு காண முதலமைச்சரின் நேரடிக்  கட்டுப்பாட்டில் தனித்துறை உருவாக்கப்படும்.

(3) அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க  தனி நீதிமன்றம் அமைக்கப்படும்.

(4) தமிழக சட்ட மேலவை மீண்டும் கொண்டுவரப்படும்.

(5) பொங்கல் திருநாள் மாபெரும் பண்பாட்டுத் திருநாளாக மாநிலம் முழுவதும் கொண்டாடப்படும்.

(6) சென்னையில் திராவிட இயக்கத் தீரர்கள் கோட்டம் அமைக்கப்படும்.

(7) தமிழ் ஆட்சிமொழி. மத்திய அரச அலுவலங்களில் தமிழ் ஆட்சிமொழி.

(8) மூன்று  ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் மின்மோட்டார் வசதியில்லாத விவசாயிகளுக்கு புதிய மின் மோட்டார்  வாங்கும் போது ரூபா 10,000 வரை மானியம் வழங்கப்படும்.

(9) மீனவ சமுதாயத்தை கடல்சார் பழங்குடி மக்கள் என்று பழங்குடியினர்  பட்டியலில் (ST) சேர்ப்பதற்கும்  பழங்குடியினருக்குள்ள அனைத்துச் சலுகைகளையும் மீனவர்கள் பெறுவதற்கும் திமுக  முயற்சி செய்யும்.

(10) சட்ட மன்றங்களிலும் நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கு 33 விழுக்காடு  இடஒதுக்கீடு  வழங்கும்  மசோதா அறிமுகப்படுத்தப்பட்டும் நிறைவேற்றப்படாத  நிலையில் உள்ளது. இந்தச் சட்டத்தை விரைவில் நிறைவேற்றிட வேண்டுமெனத் திமுக மத்திய அரசைத் தொடர்ந்து வலியுறுத்தும்.   

(11) ஏழை மக்கள் படும் துயரங்களைப் போக்கும் வகையிலும் ஏழைக் குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் கட்டுபடியான விலையில் பால் கிடைக்கும் வண்ணம் ஆவின் பால் லிட்டருக்கு ரூபா 3 ஆகக் குறைக்கப்படும்.

(12) அனைத்துச் சாதியினரும் கோயில்களில் அர்ச்சகர் ஆகலாம் என்ற கோட்பாட்டின் கீழ் பயிற்சி பெற்ற அர்ச்சகர்களுக்கு நியமனம் வழங்கப்படும். வழிபாடு தமிழில் நடத்தப்படும்.

(13) முடக்கி வைக்கப்பட்டிருக்கும் சேது சமுத்திர திட்டம் மீண்டும் துவங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

(14) 27 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை மனிதாபன அடிப்படையில் விடுதலை செய்ய வலியுறுத்துவோம்.

(15) நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் மேலும் மாணவர்களின் கல்விக்கடன்களை இரத்துச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

(16) கிராமத்தில் வறுமைக் கோட்டுக்குக்  கீழே உள்ள பெண்களுக்குத் தொழில் தொடங்க வட்டியில்லாமல் 50,000 ரூபாய் கடனாக வழங்கப்படும்.

(17) அகதி முகாமிலுள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படும்.

மொத்தம் 505 வாக்குறுதிகளை திமுக தனது தேர்தல் அறிக்கையில் (https://dmk.in/manifesto-2021)  வெளியிட்டிருந்தது. தமிழக அரசின் தற்போதைய நிதி நெருக்கடிச் சூழ்நிலையில் – அரசின் கடன் ரூபா 6 இலட்சம் கோடியாகவும் பொதுத்துறை நிறுவனங்களின் கடன் ரூபா 3 இலட்சம் கோடியாகவும் உள்ள நிலையில் – இந்த வாக்குறுதிகளை முழுமையாக திமுக அரசால் நடைமுறைப்படுத்த முடியுமா என்பது கேள்விக் குறியாகும். இருந்தும்   இந்த வாக்குறுதிகள் சிலவற்றை திமுக ஆட்சி நிறைவேற்றியுள்ளது. ஆவின் பால் விலை ரூபா 3 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது, “உங்கள்  தொகுதியில் ஸ்டாலின்” என்ற வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

இதே போல் 1, 212 ஒப்பந்த செவிலியர்கள்  பணி நிரந்தரம்,  கொரோனா தொற்றுப் பரவலால் ஏற்பட்ட பாதிப்பிற்கான நிவாரணமாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூபா 4 ஆயிரம் மற்றும் 14 பொருட்கள் அடங்கிய பொதிகள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் தமிழில் அர்ச்சை செய்யும் வகையில், “அன்னை தமிழில் அர்ச்சனை” என்ற திட்டத்தின் கீழ் ஓகஸ்ட் 5  இல்  சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோவிலில் தமிழ் மொழியில் அர்ச்சனை தொடங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து முதற்கட்டமாக 47 பெரிய கோவில்களிலும் அடுத்ததாக தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு 539 கோவில்களில் தமிழில் அர்ச்சனை விரிவுபடுத்தப்படவுள்ளது.

இந்தத் திட்டத்தைத் துவக்கி வைத்துப் பேசிய அமைச்சர் சேகர் பாபு, முதல்வர் ஸ்டாலின் அறிவுரைப்படி தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டத்தை செயல்படுத்தியிருப்பதாகவும் சமஸ்கிருதத்தில் அர்ச்சனை செய்யும் நடைமுறையும் தொடரும் விரும்புவோர் சமஸ்கிருதத்தில் அர்ச்சனை செய்யலாம் என்றும்  அமைச்சர் தெரிவித்தார்.

அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, “பெரும்பான்மை மக்கள் விருப்பப்பட்டால் தமிழ்நாட்டிலுள்ள அக்கோவில்களில் தமிழில் குடமுழுக்கு செய்யப்படும். அதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று கூறியிருக்கிறார்.

இதனிடையே, தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பைக்  கையேற்ற போது கொரோனா தொற்று  திமுகவுக்கு பெரும் அறைகூவலாக இருந்தது.  நாட்டையே உலுக்கி வந்த இரண்டாம் அலையில்  தமிழகத்திலும் நாளாந்தம் தினசரி கொரோனா பாதிப்பானது 20,000  தாண்டியிருந்தது. சென்னையில் மட்டும் 5,000 க்கும் மேற்பட்டோர் நாளாந்தம்  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வந்தனர். இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் எடுத்த தொடர்ச்சியான – கடுமையான நடவடிக்கைகளால்  நாளாந்த கொரோனா தொற்று நோய் எண்ணிக்கை இப்போது 2,000 க்கு கீழே குறைந்துள்ளது. சென்னையில் 180 ஆகக் குறைந்துள்ளது. 

இருந்தும் திமுக ஆட்சியைக் குறைசொல்வோரும் இருக்கவே செய்கிறார்கள். ஆட்சிக்கு வந்தால்  நீட் தேர்வு இரத்து செய்யப்படும் பெட்ரோல் விலை ரூபா 5  ஆகவும்  டீசல் விலை ரூபா 4 ஆகவும் சமையல் எண்ணெய்க்கு   ரூபா100 மானியம், குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூபா1,000 உதவித் தொகை போன்ற தேர்தல் வாக்குறுதிகளைக்  கொடுத்துவிட்டு தற்போது திமுக மௌனம் காக்கிறது என  அதிமுக குற்றம் சாட்டுகிறது.  குற்றம் சாட்டுவதோடு நில்லாமல் கடந்த யூலை 26 இல் தமிழகம்  தமிழகம் முழுதும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறது. 

எதிர்வரும் 13 ஆம் நாள்  திமுக அரசு  தமிழக வரவு – செலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்கிறது. இந்த வரவு – செலவுத் திட்டத்தில்  பல்வேறு அம்சங்கள் இடம் பெற வாய்ப்பு உள்ளன.   என்றாலும் 5  விடயங்களில் முக்கியத்துவம் பெறும் என்கிறார்கள்.

போக்குவரத்து ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம், மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்தும் முறை, முதியோர் உதவித்தொகை 1,500 ரூபாயாக உயர்வு, வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கான இடஒதுக்கீடு 40 விழுக்காடு அதிகரிப்பு, நகராட்சிகள், மாநகராட்சிகளாக தரம் உயர்வு உள்ளிட்ட 5 விடயங்கள் இடம் பெற வாய்ப்பு உள்ளது என்கிறார்கள். முதலமைச்சர் ஸ்டாலின்  தேர்தலில்  அறிக்கையில் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்ற வேண்டும் என்பதில் அவர் உறுதியாக உள்ளார்.

உள்ளாட்சி தேர்தல் தேதி நெருங்கி வரும் இந்தச்  சூழலில் தேர்தல் வாக்குறுதிகளில் குறிப்பிட்ட முக்கியமானவற்றை வரவு – செலவுத் திட்டத்தில்  அறிவித்திட வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறார் ஸ்டாலின். இம்முறை பொது வரவு – செலவுத் திட்டம், வேளாண் வரவு – செலவு திட்டம் என இரண்டு திட்டங்கள்  தாக்கல் செய்யப்படவுள்ளது,

நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பொது வரவு – செலவுத் திட்டத்தை தாக்கல் செய்கிறார். வேளாண் துறைக்கான வரவு – செலவு திட்டத்தை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்ய உள்ளார்.

முதியோர் உதவித்தொகை போக்குவரத்து ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம், மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்தும் முறை, முதியோர் உதவித்தொகையை ரூபா1,500  உயர்த்துவது,  வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கான இடஒதுக்கீடு 40 விழுக்காடு, நகராட்சிகள், மாநகராட்சிகளாக தரம் உயர்த்தல்,  சென்னை ஆறுகளைத் தூய்மைப்படுத்தல்,  மக்களைத்தேடி மருத்துவம்,  அரசு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி, அரசுக் கல்வி வளாகங்களில் வைஃபை வசதி, 100 நாள் வேலைத்திட்டம் 150 நாட்களாக அதிகரிக்கப்பது, சென்னை செம்மொழி பூங்காவிற்கு புத்துயிர் அளிப்பது, கலைஞர் கருணாநிதியின் நினைவாக திருச்சியில் ரூபா 70 கோடியில் உலகத் தரம் வாய்ந்த நூலகம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம் பெறலாம் என  எதிர்பார்க்கப்படுகிறது. 

ஸ்டாலின் தனது  நீண்ட அரசியல் பயணத்தில் முதல்வராக பதவியேற்று இருப்பது இந்த ஆண்டுதான். இதற்கு முன்னர் சட்ட சபை உறுப்பினராக, உள்ளாட்சி அமைச்சராக, துணை முதல்வராக, இருமுறை சென்னை மாநகராட்சி மேயராக, கட்சியின் மாநில இளைஞரணிச் செயலாளராக இருந்திருக்கிறார்.

இன்று முதலமைச்சராக கலைஞர் கருணாநிதியை விஞ்சும் வண்ணம் ஆட்சி செய்கிறார்.  தந்தையின் காலத்தைச் சேர்ந்த மூத்த தலைவர்கள், தனது சமகாலத்தவர்கள், உதயநிதியின் வயதொத்த இளைஞர்கள் என்று மூன்று தலைமுறைகளை இணைக்கும் தலைவராக அவர் இருக்கிறார். கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான துரைமுருகனுக்கு மட்டுமல்ல, இளைஞர்களான மருத்துவர் எழிலனுக்கும் வழக்கறிஞர் பரந்தாமனுக்கும்கூட தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு அளித்திருக்கிறார்.  ஏறக்குறைய ஐம்பது ஆண்டு காலம் நாள்தோறும் பல நூறு பேரைச் சந்தித்த வண்ணம் இருக்கிறார். யார் மீதும்  அவர் சுடுசொல் வீசியதாகவோ சினந்து பேசிக் கொண்டதாகவோ செய்திகள் இல்லை. அவரது கைகளும் தூய்மையானவை.

முதலமைச்சர் ஸ்டாலின்  தமிழ்நாட்டில் பொன்னாடை போர்த்தி வரவேற்கும் திராவிட இயக்க மரபுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.  பொன்னாடைகளையும் பூங்கொத்துகளையும் தவிர்த்துப் புத்தகங்களைப் பரிசளியுங்கள் என்று  5 ஆண்டுகளுக்கு முன்பு அவர் விடுத்த வேண்டுகோளுக்குக் கிடைத்திருக்கும் வெற்றி இது.  ஒரு காலத்தில் சமூகத்தில் ஒரு பிரிவினர் தோளில் துண்டு போட உரிமை மறுக்கப்பட்ட காலத்தில் பொன்னாடை அணிவிக்கும் வழக்கம் ஒரு பண்பாட்டுப் புரட்சியாகக் கருதப்பட்டது. 

Image

முக்கிய பிரமுகர்களைச் சந்திக்கும்போது தானும் புத்தகங்களை  பரிசளிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்.  தமிழக முதல்வர். டெல்லி பயணங்களில் பிரதமர், ஆட்சித்தலைவர் போன்றவர்களுக்கு பரிசளித்த புத்தகங்கள் முக்கிய பேசுபொருளாயிருக்கின்றன. பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தபோது ‘செம்மொழிச் சிற்பிகள்’ நூலையும் சோனியா காந்தியைச் சந்தித்தபோது ஆர்.பாலகிருஷ்ணனின்  ‘Journey of a Civilization: Indus to Vaigai’ நூலையும் பரிசளித்தார். டெல்லிக்குச் சென்று குடியரசுத் தலைவரைச் சந்தித்தபோது ஓவியர் மனோகர் தேவதாஸின் ‘Multiple Facets Of My Madurai’ (Illustrated) நூலைப் பரிசளித்தார்.

தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்ள சென்னை வந்த குடியரசுத் தலைவருக்கு  திருக்குறளின் ஆங்கில மொழிபெயர்ப்புடன் சி.சு.செல்லப்பா, தி.ஜானகிராமன், கி.ராஜநாராயணன், இராஜம் கிருஷ்ணன், நீல.பத்மநாபன் ஆகியோரின் நாவல்களின் ஆங்கில மொழிபெயர்ப்புகள் அடங்கிய புத்தகப் பேழையைப் பரிசளித்தார். கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் வெளியிடப்பட்ட நூல்கள் என்ற போதிலும் கட்சி பேதம்  பாராட்டாத முதல்வரின் பெருந்தன்மை பாராட்டத்தக்கது.

கலைஞர் கருணாநிதிக்கு இருந்த பேச்சாற்றல், எழுத்தாற்றல், இலக்கியப் புலமை  ஸ்டாலினுக்கு இல்லை. சேசும்போது அளந்து பேசுகிறார். தனக்கு வாலாயமான தமிழில் பேசுகிறார். பெரும்பாலும் குறிப்புகளை கையில் வைத்துக் கொண்டு அவற்றைப் பார்த்துக் கொண்டு பேசுகிறார்.  ஆனால் தந்தையைப் போலவே கடுமையாக உழைக்கிறார்.  தனது கடமைகளைச் செய்ய நிறைய நேரத்தைச் செலவிடுகிறார். தனக்கு நம்பிக்கையான ஐஏஸ் அதிகாரிகளை பொருத்தமான இடங்களில் அமர்த்தியிருக்கிறார். இதில் அனேகர் பெண் அதிகாரிகள். அகவையில் குறைந்தவர்கள்.  எல்லோரிடத்திலும் கருத்துக் கேட்கிறார். கலந்தாலோசிக்கிறார்.

தமிழகத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் நிதி நிலையைச்  சீரமைக்கவும் ஐந்து பேர் அடங்கிய  பொருளாதார ஆலோசனைக் குழு சமூகநீதி, உற்பத்தி மேம்பாடு, புதிய திட்டங்கள் தொடர்பாக  முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஆலோசனை வழங்கயிருக்கிறது. இந்தக் குழுவுக்கு உலக பொருளாதார இயக்கமான IMF இல் மிகக்குறைந்த வயதில் தலைமை பொருளாதார நிபுணராக பணியாற்றியவரும் இந்திய மத்திய வங்கியின் ஆணையாளராக இருந்த  இரகுராம் இராசன் தலைமை தாங்குகிறார். 

எதிர்க்கட்சிகள் உட்பட எல்லாக் கட்சித் தலைவர்களையும் அழைத்து ஆலோசனை நடத்துகிறார். இதனால் இந்தியாவின் முதலமைச்சர் பட்டியலில் ஸ்டாலின் முதல் இடத்தைப் பிடித்துள்ளார் என  ஊடகங்கள் சிலாகித்து எழுதுகின்றன.

முத்துவேலர் கருணாநிதி ஸ்டாலின் ஆட்சியில் ஒரு பொற்கால தமிழகம் மலர வேண்டும். கலை வாழும் தமிழ்நாடு தலை நிமிர்ந்தால் அது உலகத் தமிழர்கள் எல்லோருக்கும்  நன்மையாக இருக்கும்.

About editor 3015 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply