திமுக ஆட்சி அடுத்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும்!
நக்கீரன்
ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என்பார்கள். அதாவது ஆசை, மோகம் போன்ற உலகியல் குணங்கள் நிலைப்பதில்லை. தொடக்கத்தில் தோன்றக் கூடிய இவை நாட்கள் போகப் போகக் குறைந்துவிடும் என்பதே இதன் பொருளாகும்.
தமிழ்நாட்டில் மு.க. ஸ்டாலின் தலைமை வகிக்கும் திமுக ஆட்சிக்கு வந்து முப்பது நாட்கள் கழிந்துவிட்டன. கடந்த மே 07 இல் 34 அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவை பதவிக்கு வந்தது.
தமிழ் நாட்டின் 23 ஆவது முதலமைச்சராக ஸ்டாலின் பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார். அப்போது தனது பாட்டன், தந்தை பெயர்களைச் சொல்லத் தவறவில்லை. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆகிய நான் எனத் தொடங்கி தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையில் உண்மையாகவும் உளச்சான்றின்படியும் என் கடமைகளை நிறைவேற்றுவேன் என்றும் உறிதுமொழி எடுத்துக் கொண்டார்.
ஸ்டாலின் தமிழ்நாட்டின் முதலமைச்சர் பதவிக்கு வர அவர் நீணட் காலம் காத்திருக்க வேண்டியிருந்தது. இப்போது அவருக்கு அகவை 78. இரண்டு பிள்ளைகள் நான்கு பேரப்பிள்ளைகள் அவருக்கு உண்டு. மார்ச் 01, 1953 இல் பிறந்த இவருக்கு சோவியத் ஒன்றிய பொதுவுடமைக் கட்சியின் பொதுச்செயலாளர் மறைந்த ஸ்டாலின் நினைவாக ஸ்டாலின் எனப் பெயர் சூட்டப்பட்டது. சோவியத் ஒன்றியத்தின் தலைவர் மறைந்த நாள் மார்ச் 05, 1953 ஆகும்.
தேர்தல் பரப்புரைக் காலத்தில் ஸ்டாலின் வாரிசு அரசியல் செய்கிறார். அவருக்குத் தந்தைக்குப் பின்னர் தனயன் என்ற தகுதியை விட வேறு தகுதியில்லை, இந்தத் தேர்தலில் மட்டுமல்ல இந்த நூற்றாண்டில் அவர் முதலமைச்சராக வரமுடியாது என அவருக்கு எதிராக அதிமுக பரப்புரை செய்தது. குறிப்பாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பி. பழனிச்சாமி தேர்தல் மேடைகளில் முழங்கினார்.
அப்போது ‘நான் உழைப்பால் உயர்ந்தவன் பழனிச்சாமி போல் சசிகலா காலில் ஊர்ந்து போய் முதலமைச்சர் பதவியைப் பெறப்போவன்’ அல்லன் என ஸ்டாலின் பதிலடி கொடுத்தார்.
ஸ்டாலின் தமிழகத்தின் துணை முதலமைச்சராகவும் உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் ( 29 மே 2009 – மே 15, 2011 வரை பொறுப்பு வகித்துள்ளார். 1996 முதல் 2002 வரை சென்னை மாநகராட்சியின் 37 ஆவது மேயராகவும், 2009 முதல் 2011 வரை தமிழகத்தின் முதல் துணை முதல்வராகவும் பொறுப்பில் இருந்திருக்கிறார். ஓகஸ்ட் 28, 2018 முதல் திமுக இன் தலைவராக இருந்து வருகிறார்.
எனவே ஸ்டாலின் அவர்கள் அவர் கூறியது போலவே உழைப்பால் உயர்ந்தவர். கலைஞர் கருணாநிதியின் மகன் என்ற ஒரே காரணத்காக அவர் முதலமைச்ராக வந்துவிட வில்லை.
இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி அகால மரணம் அடைந்த போது விமான ஓட்டியாக இருந்த அவரது மகன் இராஜீவ் காந்தி நாட்டின் பிரதமராக தெரிவு செய்யப்பட்டார். அதற்குப் பெயர்தான் வாரிசு அரசியல் ஆகும்.
ஓரு ஆட்சியின் பலத்தை அல்லது பலவீனத்தை 30 நாட்களில் எடை போட முடியாது. குறைந்தது 100 நாட்கள் ஆவது போக வேண்டும். இப்போது நடப்பது தேனிலவுக் காலம்.
இந்த 30 நாட்களில் (மே 07 – யூன் 06) ஸ்டாலின் அவர்கள் தனக்கென்று ஒரு முத்திரையைப் பதித்துள்ளார். தாய் (தந்தை) எட்டடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும் என்பதை எண்பித்துக் காட்டியுள்ளார்.
தமிழ்நாட்டு அரசியலில் கறைபடியாத அரசியல்வாதிகளை – கலைஞர் கருணாநிதி உட்பட – காண முடியாது. ஐந்து முறை முதலமைச்சராக இருந்த செல்வி ஜெயலலிதா வருவாய்க்கு மேல் சொத்துச் சேர்த்தார் என்ற ஊழல் குற்றச் சாட்டில் கர்நாடக சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டு சிறையும்100 கோடி தண்டப் பணமும் விதித்தது. அவரது அன்றைய சொத்து மதிப்பு ரூபா 66.65 கோடி என மதிக்கப்பட்டது. நல்லகாலமாக அவர் தீர்ப்பு வருமுன்னர் 06 டிசெம்பர் 2016 இல் காலமாகிவிட்டார். அவருக்கு உடந்தையாக இருந்த குற்றச் சாட்டில் சசிகலா நடராசன் அவர்களுக்கு 4 ஆண்டுகாலச் சிறையும் ரூபா 10 கோடி தண்டப்பணமும் விதிக்கப்பட்டது.
தேர்தல் காலத்தில் திமுக வின் தலைவர் மற்றும் முதலமைச்சர் வேட்பாளர் என்ற முறையில் ஸ்டாலின் ஏராளமான வாக்குறுதிகளை வீசியிருந்தார். ஆனால் அவரால் அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியுமா என்ற அச்சம் திமுக தொண்டர்கள் உட்படப் பலருக்கு இருந்தது. வழக்கம் போல அவை தேர்தல் கால வாக்குறுதிகள் என நினைத்தார்கள். ஆனால் ஸ்டாலின் இந்த 30 நாட்களில் கொடுத்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார்.
ஸ்டாலின் பதவியேற்ற காலத்தில் தமிழ்நாட்டில் கொரோனா தொற்று உச்சத்தில் இருந்தது. அது புதிய அரசுக்குப் பெரிய சவாலாகவும் இருந்தது. மற்றது நிதி நெருக்கடி. முன்னைய அதிமுக அரசு தமிழ்நாட்டை பல இலட்சம் கோடி கடனில் மூழ்கடித்துவிட்டுச் சென்றிருந்தது.
தமிழகத்தின் கடன் அளவு மார்ச் 2021 நிலவரப்படி 4,85,502.54 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டிருப்பதாக தமிழ் நாட்டின் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது வரவு – செலவுத் திட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அதே போல அடுத்த மார்ச் 2022 ஆம் ஆண்டில் தமிழகத்தின் கடன் 5,70,189.29 கோடி ரூபாயாக அதிகரிக்கலாம் எனவும் அவ்வுரையில் குறிப்பிட்டு இருந்தார்.
முதலமைச்சர் ஸ்டாலின் 30 நாட்களில் காலம் காலமாக இருந்து வந்த தமிழ்நாட்டு அரசியல் கலாசாரத்தை மாற்றி வருகிறார். எதிர்க்கட்சியை எதிரிக் கட்சியாக நடத்தாமல் எதிர்க்கட்சித் தலைவர்களுக்குரிய மரியாதையைக் கொடுத்து வருகிறார். முன்னைய ஆட்சியில் அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலினுக்கு அரச நிகழ்ச்சிகளில் 7 ஆவது வரிசை ஒதுக்கப்பட்டிருந்தது. இப்போது அதிமுக தலைவர்களுக்கு முன்வரிசை ஒதுக்கப்படுகிறது.
முக்கிய விடயங்களில் தொழில்சார் நிபுணர்களை மட்டுமல்ல எதிர்க்கட்சித் தலைவர்களையும் அழைத்து ஆலோசனை செய்கிறார். எடுத்துக்காட்டு கொரோனா தொடர்பான ஆலோசனைக் கூட்டத்துக்கு முன்னாள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி விஜயபாஸ்கர் அழைக்கப்பட்டிருந்தார்.
‘இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்’ என்ற திருக்குறளுக்கு ஒப்ப தகுதியானவர்களையும் திறமைசாலிகளையும் ஸ்டாலின் அமர்த்தியுள்ளார். நல்வாழ்வுத்துறை என்றால் அந்த அமைச்சின் அமைச்சர் மருத்துவராக இருக்க வேண்டும் என்ற மரபை மாற்றி முன்னாள் சென்னை மேயராக இருந்த மா. சுப்பிரமணியம் (சைதாப்பேட்டை) அவர்களுக்கு அந்தப் பதவி வழங்கப்பட்டுள்ளது. அதே போல் பழனிவேல் தியாகராசன் (மதுரை மத்தி) அவர்களுக்கு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சு கொடுக்கப்பட்டுள்ளது. இவர் தேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சி (பி.டெக்) பஃபலோ பல்கலைக்கழகம், நியூயோர்க்(முனைவர்) எம்.ஐ.டி முகாமைத்துவப் பள்ளி(முதுகலை) பட்டம் பெற்றவர்.
முதலமைச்சர் ஸ்டாலின் தனக்கென 4 முக்கிய தனிச் செயலாளர்களை அமர்த்தியுள்ளார். இவர்கள் முன்னைய ஆட்சியாளர்களால் ஒதுக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசின் தலைமை செயலாளராக வெ. இறையன்பு நியமிக்கப்பட்டுள்ளார். இவர் திறமையான அதிகாரியாக மட்டுமின்றி, பேச்சாளராகவும் எழுத்தாளராகவும் அறியப்பட்டவர். முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தனிச் செயலராக பணிபுரிந்த இறையன்பு, தற்போது ஸ்டாலின் தலைமையிலான அரசின் பிரதான செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலின் முன்னைய பொன்னாடை மற்றும் பூங்கொத்துக் கொடுக்கும் கலாசாரத்தை ஒழித்துவிட்டார். அவற்றுக்குப்பதில் புத்தகங்கள் கொடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். இதனால் எழுத்தாளர்கள், நூல்பதிப்பாளர்கள் நன்மை பெறுவர்.
தமிழ்நாடு முதலமைச்சர்கள் வெளி மாவட்டங்களுக்கு அரச முறையாகப் போனாலும் நூற்றுக் கணக்கில் வரவேற்புத் தட்டிகள், மின்விளக்குகள், சாலை நெடுகக் கொடிகள், தார தப்பட்டைகள் எனக் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் அசத்துவார்கள். ஸ்டாலின் ‘நான் அரசமுறைச் சுற்றுப் பயணத்தில் வருகிறேன். கட்சித் தொண்டர்களைப் பார்க்க மாட்டேன், மாலை மரியாதை வேண்டாம்’ என அறிவித்துவிட்டார்.
ஸ்டாலின் அவர்களது பதவியேற்பு நிகழ்ச்சியை ஆளுநர் மாளிகையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் முன்னிலையில் மிக எளிய முறையில் வைத்துக் கொண்டார். கொரோனா ஒரு காரணம் என்றாலும் ஸ்டாலின் பொதுவாக ஆடம்பரத்தை விரும்பாதவர்.
ஸ்டாலின் பதவியேற்குமுன் தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவர்களான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சங்கரையா, த கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் நல்லகண்ணு, எம்ஜிஆர் கழகத் தலைவர் ஆர்.எம். வீரப்பன் போன்றோரை அவர்கள் இல்லத்துக்கு நேரில் சென்று பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்களைப் பெற்றுக் கொண்டார். தன்னைப் பெற்ற அன்னை தயாளு அம்மாளிடம் வாழ்த்துப் பெற்றார். ஏன் தான் குடியிருக்கும் முன் வீட்டுக்காரரிடம் சென்று வாழ்த்துக்களைப் பெற்றுக் கொண்டார்.
முன்னாள் அமைச்சர் ஜெயலலிதாவின் படத்தை அலுவலகங்களில் இருந்து அகற்றப்படக் கூடாது என உத்தரவு பிறப்பித்துளார். அது மட்டுமல்ல அம்மா உணவகம் தொடர்ந்து நடக்க வேண்டும் எனப் பணித்துள்ளார்.
எல்லாவற்றுக்கும் மேலாக எந்தப் பந்தாவும் இல்லாமல், கால நேரம் இல்லாது கொரோணா நோயாளிகள் இருக்கும் மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று அங்குள்ள நிறைகுறைகளை அறிந்து கொள்கிறார்.
மே 07, 2021 அன்று தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றது முதல் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தமிழ் நாட்டின் மீதும் தமிழ் மக்கள் மீதும் உண்மையான பற்றோடு திறம்பட வினையாற்றி வருகிறார். தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார்.
பதவியேற்ற முதல் நாளே ஐந்து கோப்புக்களில் கையெழுத்திட்டார். கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் 4, 000 வழங்கப்படும் என்று அறிவித்தார். இதன் மூலம் 2.07 கோடி குடும்ப அட்டைத்தாரர்களுக்கு ரூபாய் 4,153.39 கோடி செலவில் நிவாரணத் தொகை வழங்கப்படுகிறது.
ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாயாக குறைக்கப்பட்டது.
அனைத்து மகளிரும் கட்டணமில்லாமல் அரசு பேருந்தில் பயணம் செய்யலாம் என்ற கோப்பில் கையெழுத்திட்டார். இந்தச் சலுகை இப்போது திருநங்கையர்களுக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
தேர்தல் காலத்தில் மக்கள் கொடுத்த மனுக்கள் மீது 100 நாட்களுக்குள் தீர்வு காண ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ திட்டத்தை செயல்படுத்த புதிய துறையை உருவாக்குவதற்கு வகை செய்யும் கோப்பில் முதலமைச்சர் கையெழுத்திட்டார்.
தனியார் மருத்துவமனையில் மருத்துவம் பெறும் கொரோனா தொற்றாளர்களின் மருத்துவக் கட்டணத்தை அரசு செலுத்தும் என ஐந்தாவதாக கோப்பில் கையெழுத் திட்டார்.
ஸ்டாலின் அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். கொரோனா நிவாரண நிதிக்கு “உலகத் தமிழர்களே, உயிர்காக்க நிதி வழங்குவீர்!” என்று காணொலி மூலம் வேண்டுகோள் விடுத்தார். திமுக கொரோனா நிவாரண நிதிக்கு ரூபா1 கோடி வழங்கும் என அறவித்து அதற்கான காசோலை நிதியமைச்சரிடம் வழங்கப்பட்டது.
முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு இதுவரை (யூன் 07) ரூபா 280.20 கோடியை எட்டியுள்ளது. இதில் மருந்து, மருத்துவ உபகரணங்கள் மற்றும் உயிர்வளிக் கலங்கள் வாங்க ரூபா 141.40 கோடி செலவழிக்கப்பட்டுள்ளது.
மறைந்த கரிசல் எழுத்தாளர் கி.ராஜநாரயணன் (கி.ரா.) அவர்கள் படித்த இடைசெவல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை அரசு சார்பில் பழமை மாறாமல் புதுப்பிக்கவும் அவரது நினைவைப் போற்றும் வகையில் புகைப்படங்கள், படைப்புகள் வைத்திடவும், அவருக்கு கோவில்பட்டியில் அரசு சார்பில் சிலை அமைக்கவும் உத்தரவிட்டதுடன், அவரது மறைவையொட்டி அவரது உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய உத்தரவிட்டார்.
திருப்பூர் மாவட்டம், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனாதொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்துமிக்க உணவுகளின் தரத்தை ஆய்வு செய்தார். கோவை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்று ஆலோசனை வழங்கினார். மேலும் ஈரோடு, பெருந்துறை, திருப்பூர், கோவை மாவட்டங்களில் கொரோனா நோய் பரவல் தடுப்பு ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார்.
இந்தியாவிலேயே முதல் முறையாக பி.பி.இ. கிட் கவச உடை அணிந்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட வர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்த ஒரே முதலமைச்சரும் மு.க.ஸ்டாலின் அவர்கள் தான்.
கொரோனா தொற்றுக் காரணமாக இறக்க நேரிட்டால் அவர்களது வாரிசுகளுக்கு ரூபாய் 5 லட்சம் இழப்பீட்டுத் தொகை இதுவரை வழங்கப்பட்டு வந்தது. அதனை 10 இலட்சமாக உயர்த்தியும், கொரோனா நிவாரணத் தொகையினை 3,000 ரூபாயிலிருந்து 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கிடவும் உத்தரவிட்டார். திருநங்கைகளுக்கு ரூபா 2,000 கொரோனா நிவாரண நிதி வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார். இதன்மூலம், 11,449 திருநங்கைகள் பயனடைவார்கள். கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் பெயரில் ரூபா 5 இலட்சம் வைப்பீடு வைக்கப்படும்.
கொரோனா தொற்றால் உயிரிழந்த 43 மருத்துவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூபா 25 இலட்சம் வழங்கப்படும். இரண்டாம் ஆம் அலை பெருந்தொற்றுக் காலத்தில் பணியாற்றி வரும் மருத்துவர்களுக்கு ஏப்ரில், மே, யூன் ஆகிய 3 மாத காலத்திற்கு ரூபா 30 ஆயிரம், செவிலியர்களுக்கு ரூபா 20 ஆயிரம், இதர பணியாளர்களுக்கு ரூபா15 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
கொரொனா காலத்தில் கடமைமயில் இருந்த காவலர்களுக்கு ஊக்கத் தொகையாக 5 ஆயிரம் ரூபா வழங்க முதல்வர் உத்தரவிட்டார்.
அதேபோல், கொரானா ஊரடங்குக் கட்டுப்பாடுகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் துன்பங்களைக் குறைக்கும் வகையில், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.844.51 கோடி செலவில் 14 அத்தியாவசிய மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள திருக்கோயில்களில் நிலையான மாதச் சம்பளமின்றி பணியாற்றி வரும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகள் மற்றும் இதர பணியாளர்களுக்கு கொரோனா கால நிவாரண உதவித் தொகையாக ரூபா 4 ஆயிரம், 10 கிலோ அரிசி மற்றும் 15 வகை மளிகைப் பொருட்கள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 3 பத்திரிகையாளர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 இலட்சம் ரூபாயும், 2 மருத்துவர்கள், ஒரு காவல் ஆய்வாளர், ஒரு தலைமைக் காவலர் மற்றும் ஒரு நீதிபதி ஆகியோரின் குடும்பத்தினருக்கு தலா 25 இலட்சம் ரூபாய் என மொத்தம் ஒரு கோடியே 55 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகளை நிவாரண உதவித் தொகையாக முதலமைச்சர் வழங்கினார்.
சென்னையில் பேரறிஞர் அண்ணா அவர்களின் நூற்றாண்டு நூலகம் அமைக்கப்பட்டு பல்வேறு தரப்பினர் பயன்பெற்று வருகின்றனர். அதே போன்று தமிழகத்தில் மற்றப்பகுதியினரும் பயன்பெற வேண்டும் என்ற எண்ணத்தில் 2 இலட்சம் சதுர அடிப் பரப்பளவில் நவீன வசதிகளுடன்கூடிய வகையில், மதுரையில் 70 கோடி ரூபாய் செலவில் கலைஞர் நினைவு நூலகம் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.
இயல், இசை, நாடகத்தில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு கலைமாமணி விருது வழங்கு வதைப் போன்று தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவித்து சிறப்பிக்கும் வகையில் இலக்கிய மாமணி என்ற விருது உருவாக்கப்பட்டு, தமிழின் இலக்கியத்திற்கு வலு சேர்க்கும் மூன்று பேருக்கு ஆண்டுதோறும் இந்த விருது வழங்கப்படும் மற்றும் ஐந்து இலட்சம் ரூபாய் ரொக்கப்பரிசும் வழங்கப்படும் என்று அறிவித்ததுடன், தமிழ் நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர்கள் ஞானபீடம், சாகித்ய அகாடமி போன்ற தேசிய விருதுகள், மாநில இலக்கிய விருதுகள், புகழ் பெற்ற உலகளாவிய அமைப்புகளின் விருதுகள் பெற்றவர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்கள் வசிக்கும் மாவட்டத்தில் அல்லது விரும்பும் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு மூலமாக வீடு வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
கொரோனாப் பரவலைக் கட்டுப்படுத்த முதலமைச்சர் ஸ்டாலாலின் எடுத்த பல்வேறு நடவடிக்கை காரணமாக நாளொன்றுக்கு 35,000 தொற்றாளர்கள் என்ற நிலைமாறி கடந்த 20 நாட்களில் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,000க்கு கீழ் குறைந்துள்ளது. அதாவது,16,813 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23,08,838ஆக அதிகரித்துள்ளது. அதே நேரம் இதுவரையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்து 91 ஆயிரத்து 646 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா காரணமாக இதுவரை 28,528 பேர் பலியாகியுள்ளனர்.
நில ஆக்கிரமிப்பாளர்களிடம் சிக்கியிருந்த, சென்னை வடபழநி ஆண்டவர் கோவிலுக்குச் சொந்தமான 300 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை, அரசு இந்த வாரம் அதிரடியாக மீட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, ஆணையாளர் குமரகுருபரன் ஆகியோர் 10 ஆண்டுகளாக முடங்கியிருந்த கோவில் சொத்தை மீட்டுப் பத்திரப்படுத்தி உள்ளனர். அறநிலையத்துறை ஆணையத்தின் கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களின் சொத்துக்கள் இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன.
எல்லாம் சரி. தேர்தல் காலத்தில் அதிமுக அரசு கருவூலத்தைக் காலி செய்துவிட்டது, இலட்சம் கோடி கடனை மக்கள் தலைகளில் சுமத்திவிட்டது என்று பரப்புரை செய்யப்பட்டது. இப்போது திமுக அரசின் நிவாரணத் திட்டங்கள் கடன் சுமையை மேலும் பல மடங்கு அதிகரிக்கப் போகிறது. அப்படியென்றால் நிதி நெருக்கடியை திமுக அரசு எப்படிச் சமாளிக்கப் போகிறது?
போதாக் குறைக்கு நிறைவேற்றப்பட வேண்டிய தேர்தல் வாக்குறுதிகள் இன்னும் ஏராளம் இருக்கின்றன. எடுத்துக் காட்டாக எரிபொருள் (பெட்ரல்) விலையை ரூபா 5 மற்றும் டீசலை 4 ரூபா ஆகவும் குறைப்போம் என்ற வாக்குறுதி இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை.
ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான அதிமுக அமைச்சர்களை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்படும், நீட் தேர்வை இல்லாது செய்ய முதல் சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே சட்டம் இயற்றப்படும், தமிழ்நாடு ஆறுகள் பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்தப்படும், முதல் கட்டமாக 500 இடங்களில் கலைஞர் உணவகம் அமைக்கப்படும் என்பது போன்ற வாக்குறுதிகள் திமுக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன. சமையல் வாயு சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.100 மானியம் தரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
நடுவண் அரசு என்றால் பணத்தை அச்சடித்துப் புழக்கத்தில் விடலாம். அல்லது மத்திய வங்கியிடம் கடன் வாங்கலாம். ஆனால் ஒரு மாநில அரசால் அப்படிச் செய்ய முடியாது.
இருந்தும் உயிரா? பணமா? என்று வரும்போது தமிழக அரசின் முதலமைச்சர் ஸ்டாலின் உயிருக்கு முக்கியத்துவம் அளிப்பது சரியே!
தமிழ்நாட்டின் அரச இயந்திரம் இதே வினைத்திறனோடு இயங்கினால் திமுக ஆட்சி அடுத்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும்!
————————————————————————————————————-
Leave a Reply
You must be logged in to post a comment.