இராச ராச சோழனே! நீங்கள் நல்லவரா? கெட்டவரா?
இலங்கநாதன் குகநாதன்
இராச ராச சோழனே! நீங்கள் நல்லவரா? கெட்டவரா?
இதுதான் தமிழ் சமூக ஊடகங்களின் தற்போதைய பேசுபொருள். இக் கேள்விக்குப் பதில் காண்பதாயின், #யாருக்கு நல்லவரா/ கெட்டவரா என்ற எதிர்க்கேள்வி தேவை. மேலும் பதிலானது நீங்கள் எந்தக் கோட்பாட்டின் (தலித்தியம், திராவிடம், தமிழ்த் தேசியம், இந்துத்துவா,பார்ப்பனியம், இடதுசாரி) தாங்கலாளர் என்பதையும் பொருத்து அமையக்கூடும். கோட்பாடுகளிற்கு அப்பால், அறத்தினடிப்படையிலேயே நான் பதில் காண முயல்கின்றேன். எனினும் முதல்கோட்பாடுகளின்படி ஒரு சிறு விளக்கத்தையும் பார்ப்போம். முதலில் இன்றைய சமூக ஊடக உரையாடல்களில் இராச ராச சோழப் பேரரசினை கடுமையாகச் சாடுபவர்கள் தலித்தியலாளர்களே (முதலில் வெடியினைக் கொழுத்தியது இயக்குனர் பா.ரஞ்சித் என்பதும் இதற்கொரு காரணம்).
சோழப் பேரரசு தலித் மக்களிற்கு பல தீங்குகளை ஏற்படுத்தியது உண்மேயே, என்றபோதிலும் அதனால் பாதிப்பிற்குள்ளானவர்கள் அவர்கள் மட்டுமல்ல. அங்கிருந்த முதன்மையான சாதிச்சண்டையே வலங்கை-இடங்கை சாதிச்சண்டையே. (இந்த வலங்கை-இடங்கைப் பிரிவுகள் பற்றித் தெரியாதவர்கள் கருத்து ஒன்றிலுள்ள இணைப்பில் பின்பு காண்க) . வேறு சில அறிஞர்கள் (இடதுசாரிப் பார்வையாளர்கள்) உழைக்கும் மக்களிற்கும், சுரண்டும் மக்களிற்குமான போரினையே பின்நாளில் எழுத்தாளர்கள் வலங்கை-இடங்கை போராட்டமாகச் சுருக்கிவிட்டதாகவும் கூறுவார்கள். எது எவ்வாறாயினும், இது தலித் மக்களை மட்டும் குறிவைத்து நடாத்தப்பட்ட கொடுமைகளல்ல. அதே நேரம் இராச ராச சோழனைத் தூக்கிப்பிடிக்கும் தாங்கலாளர்களார்களாக தமிழ்த்தேசியக் கோட்பாட்டாளர்களே காணப்படுகின்றார்கள்.
சோழப் பேரரசு எந்த வகையிலும் தமிழ்ப்பேரரசினை ஏற்படுத்த அமைந்த அரசல்ல. மாறாக, சோழ அரசினை ஏற்படுத்த முயன்றவரே இராசராச சோழன். சோழப் பேரரசின் சில பெயர்களைப் பாருங்கள். • மதுராந்தக சோழன் = மதுரையை அழித்த சோழன்! (அந்தம்= அழித்தல்). { அந்தகன்= குருடு என்பது வேறு} • பராந்தகன்= பர சூரர்களையே அழித்த பராந்தக சோழன் • கேரளாந்தகன்= சேர நாட்டை அழித்த ராஜராஜன்.மதுரையினை அழித்தல், சேரரை அழித்தல் எவ்வாறு தமிழ்த்தேசியம் ஆகும். மேலும் சமற்கிரதக் கல்வெட்டுகள் பெருமளவிற்கு பொறிக்கப்பட்டதும், பெருமளவு கிரந்த எழுத்துகள் தமிழில் கலந்தது -தமிழ் சிதைந்ததும் இக் காலத்திலேயே. எனவேதான் சோழர்கள் மேற்கொண்ட படையெடுப்புகள் எல்லாமே நாடு பிடிச் சண்டைகளேயன்றி, தமிழ்த்தேசியப் போர்களன்று. அதனாலேயே கோட்பாடுகளிற்கு அப்பால் இச் சிக்கலைப் பார்க்கவேண்டியுள்ளது. பார்ப்போம்.#பேரரசுபொதுவாக ஒன்று சிறந்ததா/ நல்லதா என்பது ஒப்பீட்டுரீதியிலான பார்வையே. எனவே சோழப் பேரரசு நல்லதா /கெட்டதா என்பதனை ஒப்பிட்டுப் பார்ப்பதற்கு இன்னொரு தமிழ்ப் பேரரசு வரலாற்றிலில்லை. எனவே பொதுவாகவே பார்க்கவேண்டியுள்ளது. முதலில் பேரரசு என்பது ஒரு படிமுறை மலர்ச்சியானevolution (evolution ) செயற்பாடாகும்.
கோ-இறை-மன்னன்-வேந்தன்-பேரரசு
இதனைச் சுருக்கின், கோ என்பது ஒரு இனக்குழுத் தலைவன் எனவும், அவர் இறை(Tax) விதிக்கத்தொடங்கும்போது இறை எனவும், பல இனக்குழுக்களை வெற்றிகொண்டு ஒரு அரசாகும்போது மன்னன் எனவும், பல மன்னர்களை வென்று ஒரு அரசாக்கும் போது வேந்தன் எனவும், பல வேந்தர்களை வென்று ஒரு குடையின் கீழ் அமைக்கப்படுவது பேரரசு எனவும் கூறலாம். இந்த வகையில் தமிழக வரலாற்றில் #வேந்தர் என்ற தகமை சேர-சோழ-பாண்டியர்களிற்கு மட்டுமேயுண்டு. அதேபோன்று பேரரசு என்ற தகமை இராச ராச- இராசேந்திர சோழர் கால்வழியில் அமைக்கப்பட்ட சோழப்பேரரசு மட்டுமே. இதில் ஒவ்வொரு கட்ட வளர்ச்சியிலும் அறம் மீறப்படுவதும், ஆதி பொதுவுடமை சமூகமானது ஒரு சுரண்டல் சமூகமாக மாறிவருவதும் பொதுவிதியாகவேயுள்ளதைக் காணலாம். எடுத்துகாட்டாக பாரி போன்ற குறுநில மன்னர்களை மூவேந்தர்கள் வெற்றிகொண்டபோது இடம்பெற்ற நிகழ்வுகளைச் சங்கத்தமிழ் பாடல்கள் எடுத்துக்காட்டுகின்றன (இதனையே வேள்பாரி புதினமும் பேசும்). இந்த வகையில் பேரரசு அமையும்போது, இத்தகைய சுரண்டல்கள் உச்சத்தையடையும். இதுவே சோழப்பேரரசிலும் இடம்பெற்றது.
#சோழப்_பேரரசின்_கேடுகள்:பேரரசின் வளர்ச்சியுடன் சேர்ந்து பல கேடுகளும் இடம்பெற்றன. பேரரசின் பெருமைகள் பேசப்பட்டளவிற்கு, இந்தக்கேடுகள் பேசப்படாமையால்; அவை குறித்துச் சுருக்கமாகப் பார்ப்போம்.
1. #கொடுமையான_வரிவிதிப்புகள்கோ என்ற தலைவன் `இறை` (இறைவன்) ஆகிய போதே வரிகள் தொடங்கிவிட்டன. ஏழாம் நூற்றாண்டில் கொடுமையான வரிகள் விதித்ததால் ஒரு அரசனின் பெயரே #கடுங்கோன் ( கடுமை+கோன்) என அமைந்த வரலாறு {கடுங்கோன் பாண்டியன் 7th CE} பேரரசிற்கு முன்னரே உண்டு. என்றபோதிலும் இந்த வரிவிதிப்பு உச்சம் தொட்டது சோழப்பேரரசு காலத்திலேயே. உழவர்கள் மேல் பல்வேறு பெயர்களில் வரிகள் விதிக்கப்பட்டன..*காணி வரி*கழனி வரி*மதகு வரி*கேணி வரி*உழக்கு வரி*ஆ வரி*துறைத் தீர்வை*செந்தலை இறை*வாய்க்கால் வரி*கால்வாய் வரிஇத்தகைய வரிக்கொடுமைகள் பற்றிய செய்திகளை பல்வேறு கல்வெட்டுகள் பேசுகின்றன.
எடுத்துக்காட்டு- #தஞ்சாவூரில்_புஞ்சைக்_கிராமக்_கல்வெட்டு – தஞ்சாவூரில் புஞ்சைக் கிராமக் கல்வெட்டு ஒன்றில் தங்களுக்குச் சொந்தமான நிலத்தை கோயில் நிர்வாகத்தார் பறித்துக் கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதி கிடைக்காத நிலையில் அக்கோவிலின் முன் தீ வளர்த்து உயிர்த்தியாகம் செய்த நிகழ்வு கூறப்பட்டுள்ளது.இத்தகைய வரிவிதிப்புகளிற்கு எதிராக மக்கள் கலகம் செய்ததனை #தஞ்சை_ஜில்லா_உடையாரூர்ச் சாசனம் சொல்லும்.”மூன்றாம் ராஜராஜ சோழனுடைய ஆட்சியில் ஐந்தாம் ஆண்டிலும் பரவிய கலகத்தில் ஊரில் உள்ளோருடைய நிலங்களின் மூல பத்திரங்கள் அழிந்து போயினமையால் நான்காம் ஆண்டு அளவில் உள்ள அனுபோக முறைப்படி நிர்ணயித்துப் புதிய பத்திரங்கள் வழங்க வேண்டிவந்ததென்று தஞ்சை ஜில்லா உடையாரூர்ச் சாசனம் கூறுகிறது.'{“பிற்காலத்தில் ஏழ்மையால் வருந்திய மக்கள் பற்பல இடங்களில் தங்களது உரிமையை நிலைநாட்டிக்கொள்ள இயலாமல், கோவிற் சுவர்களை இடித்தும் பத்திரங்களைத் தீக்கிரையாக்கியும் சுரண்டல் முறைக்கு எதிராகத் தங்களது எதிர்ப்பைக் காட்டியுள்ளார்கள். ஏனெனில் கோயில் மதில் சுவர்களில்தான் அவர்களை அந்நிலையில் வைத்திருந்த நிலமான்யமுறையின் பிரமானப் பத்திரங்கள் எழுதி வைக்கப்பட்டிருந்தன” என இக் கல்வெட்டிற்கு விளக்கம் கூறுவார் நா. வானமாமலை.
தஞ்சைப் பெருங்கோயிலின் கட்டிடக்கலை, கலை வேலைப்பாடுகள் தலை சிறந்தவை என்பதில் ஐயமில்லை. ஆனால், இதே கோயில்தான் பேரரசு காலத்தில் வரி விதிக்கும் மையமாகவும், வட்டிக்குப் பணம்கொடுக்கும் (12%) நிறுவனமாகவும் செயற்பட்டது. கோயிலிற்கு வரி கட்டமுடியாதவர்களினதும், வட்டி கட்டமுடியாதவர்களதும் நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கோயில்கள் பல வேளைகளில் மனிதனை- குடும்பங்களை விலை கொடுத்து வாங்கின. இத்தகைய அடிமைமுறை பற்றியும் பல கல்வெட்டுகள் கூறுகின்றன. (CHOLAS Ibid , page 294). கோயில் அடிமைகளிற்கு மாடுகளிற்கு குறியிடுவது போல, திரிசூலத்தால் மனிதர்களிற்கு குறியிடப்பட்ட நிகழ்வுகளும் நடந்தேறின. இதில் இன்னொரு கொடுமை யாதெனில்; தஞ்சைப்பெருங்கோயிலைக் கட்டுவதற்கு எந்த உழைக்கும் மக்கள் தமது கடுமையான, கற்பனைக்கு அப்பாற்பட்ட உழைப்பினை வழங்கினார்களோ, அவர்களையே ஒடுக்கும் ஒரு நிறுவனமாகவே அக் கோயில் தொழிற்பட்டிருந்தது . அதே போன்று பெருங்கோயிலின் நிழல் எங்கும் விழாது, அது கடவுளில் எல்லாம் அடங்கும் என்பதைக் காட்டும் என்பது போன்ற புருடாக்களும் தோற்றுவிக்கப்பட்டன (படம் 1 இல் நிழல் காண்க).
குறிப்பு – க.கைலாசபதி அவர்கள் தஞ்சைப் பெருங்கோயில் சோழப் பேரரசில் வகித்த ஒடுக்குமுறைப் பாத்திரத்தினை, ஆங்கிலப் பேரரசில் கத்தோலிக்கசபை வகித்த நிலவுடமை ஒடுக்குமுறையுடன் ஒப்பிட்டு, ஒற்றுமைகளை `பேரரசும் பெருந்தத்துவமும்` என்ற கட்டுரையில் படம்பிடித்துக்காட்டுவார்.
3. #தேவதாசிகள்_முறைபரத்தையர் முறையானது சங்ககாலத்திலிருந்தே காணப்பட்டிருந்தபோதும், அதனை ஒரு நிறுவனமயப்படுத்திக் கோயிலுடன் இணைத்து தேவடியார் (தேவதாசி) நிறுவன முறையானது சோழப்பேரரசிலேயே இடம்பெற்றிருந்தது. வரி /வட்டி கட்டமுடியாத குடும்பப்பெண்களும் கட்டாயத்தின் பெயரில் தேவடியார்களாக்கப்பட்டனர். இராசராசனின் இக் கொடுமைக்கு எதிராக சேரிப் பெண்களின் உரிமையினை நிலைநாட்டகோபுரத்தில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட பெண் = #சதுரி_மாணிக்கம்.
4. #பார்ப்பனத்_தாங்கல்கடைச் சங்ககாலத்திலேயே தமிழ் அரசர்கள் பார்ப்பன செல்வாக்கிற்கு உட்படத்தொடங்கிவிட்டார்கள். எ.கா- பாண்டியன் பெருவழுதி -> பல்யாகசாலை பெருவழுதிஇதன்போதே பார்ப்பனர்களிற்கு நிலங்கள் தானமாகக்கொடுக்கத் தொடங்கப்பட்டுவிட்டன. இவ்வாறு உழைக்கும் மக்களிடமிருந்து பறித்து, பார்ப்பனர்களிற்குத் தானம் கொடுக்கப்பட்ட சில நிலங்களை, மீண்டும் திருப்பி உழைக்கும் மக்களிடம் கொடுத்த செய்தியினை வேள்விக்குடி செப்பேடுகள் பேசும் (அதனாலேயே களப்பிரர் காலத்தினை இருண்டகாலம் என பிற்கால பார்ப்பன எழுத்தாளர்கள் எழுதிவிட்டார்கள்). மீண்டும் பார்ப்பன நிலத் தானங்கள் பல்லவர் காலத்தில் ஆரம்பித்தன. இது மீண்டும் சோழப்பேரரசின் காலத்திலேயே உச்சம் பெற்றன. ஏனையோரிற்கு 11 வகையான வரிகள் விதித்த சோழப்பேரரசு, பார்ப்பன நிலங்களிற்கு வரிவிலக்கு அளித்திருந்தது. எனவே பெருந்தொகை நிலம் உழைக்கும் மக்களிடமிருந்து பிடுங்கப்பட்டு, பார்ப்பனர்களிற்கு வழங்கப்பட்டது இக் காலத்திலேயே. சோழன், பார்ப்பனர்களுக்கு மானியமாகக் கொடுத்த நிலங்கள் #சதுர்வேதி_மங்கலம் எனப்படும்.
5. #மனு_நீதி_நிலைபெறல்இராச ராச சோழனிற்கு அண்ணன் முறையான ஆதித்த கரிகாலனை கொலை செய்த பார்ப்பனர்களை (ரவிதாஸன்) சா ஒறுப்பிற்கு (மரண தண்டனை) உள்ளாக்காமல், நாட்டை விட்டு அனுப்பிவிடுகின்றான். பிராமணன் கொலை செய்தாலும், தண்டனை கூடாது என்ற மனுநீதியினையே இராச இராச சோழன் இங்கு கடைப்பிடிக்கின்றார். இதனை உடையார்குடி செப்பேடு தெளிவாகப் படம்பிடித்துக்காட்டும் (படம்2). இதே கருணையினை மீண்டுமொரு முறை வேளாளக் குற்றவாளிக்கும் மனுநீதியின்படி வழங்குகின்றார்( K.A. Nilakanta Sastri- Cholas. Vol. part 1, page 472-475)அதே போன்று தில்லைப் பார்ப்பனர்கள் தமிழ் மறைகளை மறைத்து வைத்து மிரட்டியபோது, சமயக்குரவர்களின் தங்கச்சிலைகளைச் செய்து அவர்களுக்குத் தானம் தந்து மீட்டவரே `தமிழ்மறை மீட்டான்` ஆகிய இராசராச சோழன். இவ்வாறு பதுங்கிய /ராச தந்திரமாகச் செயற்பட்ட சோழன், உழவர்களிடம் வரி அறவிடும்போது அந்த பதுங்கலை/ அரச தந்திரத்தைக் கடைப்பிடிக்கவில்லை. இவ்வாறு சோழப்பேரரசின் மறுபக்கம் கொடுமையானது. எனவே இப் பேரரசினைத் தொடக்கிவைத்த இராச ராச சோழன் உறுதியாக உழைக்கும் எளிய மக்களின் பக்கம் நின்றுபார்த்தால் கெட்டவரே. அதேவேளை நல்லவர் ஒருவர் எக் காலத்திலும் ஒரு பேரரசினை அமைக்கமுடியாது /அமைக்க விரும்பமாட்டார் என்பதனையும் மறுக்கவியலாது.இறுதியாக, இந்த வெடியினைக் கொளுத்திப்போட்ட இயக்குனர் பா.ரஞ்சித்தின் சில செயல்கள் ஐயத்திற்குரியது. தலித் மக்களின் விடுதலை ஏனைய முற்போக்குவாதிகளின் துணையுடன் இணைந்து அடையப்படவேண்டிய ஒன்று, அதனை தலித்- தலித்தல்லாதோர் பிரிவினை மூலம் செய்யமுடியாது. இவரது முதிர்ச்சியின்மைக்குச் சிறந்த எடுத்துக்காட்டு, திருமாவளவன் பானைச் சின்னத்தில் பெற்ற வெற்றியினை `தலித் வெற்றி` எனச் சுருக்கி, திருமாவளனையே தலித் தலைவர் என மட்டும் சுருக்கும் முயற்சி. இதே ரஞ்சித் தேர்தலின் போது திருமாவளனிற்காக துணைநின்றரா? என்ற கேள்வி வேறு எழுப்பப்படுகின்றது. எனவே, ரஞ்சித் வேறு விடயங்களிலிருந்து கவனத்தைத் திசைதிருப்ப இப்படியான வெடிகளை கொளுத்துகின்றரா? என்ற கேள்விக்கான பதில் ரசினிகாந்த் அரசியலிற்கு வரும்போதுதான் தெரியும்.
Leave a Reply
You must be logged in to post a comment.