பொறுக் கூறலில் விலகிச்செல்லும் சிறிலங்கா தொடர்பில் ஐ.நா.வின் முன்னாள் விசேட ஆலோசகரின் கருத்து!
22. May 2021
தனது மக்களுக்கு நீதி வழங்க விரும்பாது அசிரத்தை உள்ள அரசோடு இணைந்து செயற்பட முடியாத நிலைமை இலங்கை விடயத்தில் உருவாகி வருகின்றது.
தன்னுடைய பொறுப்புக் கூறலில் இருந்து இலங்கை விலகிச் செல்லுமாக இருந்தால் அதற்கான பொறுப்பு சர்வதேச அமைப்புகள் மீதே சுமத்தப்படுகிறது என்று இனப்படுகொலைகளைத் தடுப்பதற்கான ஐ.நா.வின் முன்னாள் விசேட ஆலோசகர் (Special Adviser on the Prevention of Genocide) அடமா டியங்க் (Adama Dieng) தெரிவித்திருக்கிறார்.
புலம்பெயர் அமைப்பொன்றின் ஏற்பாட்டில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் பேரவல நினைவேந்தலின் 12ஆவது ஆண்டை முன்னிட்டு நடைபெற்ற அஞ்சலி நிகழ்வையடுத்து இலங்கையில் குற்றங்களுக்கான பெறுப்புக்கூறல் மற்றும் நீதி பரிகார நடவடிக்கைகளின் உள்நாட்டு மற்றும் சர்வதேச நிலவரங்களை மதிப்பீடு செய்தல் எனும் தொனிப்பொருளில் ஆற்றிய முள்ளிவாய்க்கால் நினைவுப் பேருரையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவருடைய உரையில் குறிப்பிட்ட முக்கிய விடயங்கள் வருமாறு,
“முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த பல்லாயிரக்கணக்கான மக்களை நினைவு கூர்ந்தும் அதில் உயிர்தப்பியோரின் வலிகளுக்கு மரியாதை செலுத்தியும் நினைவுரையை வழங்குகின்றேன்.
இலங்கை விடயத்தில் பரிகார நீதி நடவடிக்கைகள் சர்வதேச குற்றங்களுக்கு உட்பட்டதாகவோ அன்றி தேசங்களுக்கு உட்பட்டவையாகவோ எதுவாக இருப்பினும் பாதிக்கப்பட்டவர்களை முன்னிறுத்திச் செய்யப்படுகின்ற போதுதான் அது உண்மையான பொறுப்புக்கூறலாக அமைய முடியும்.
முள்ளிவாய்க்கால் என்பது ஒரு மானிடப் பேரவலத்தின் நினைவுகளாக நம்மிடையே உள்ளது. நினைவுகளை மறுத்துவிட்டு ஒருபோதும் உண்மையைப் பரிசோதித்துவிட முடியாது. கடந்த காலத்து நினைவுகளை மீட்டுவது நிகழ்காலத்தின் மீது நம்பிக்கையைக் கொண்டுவர உதவுவதாக இருக்கின்றது.
முள்ளிவாய்க்கால் ஆவணப்படுத்தல்களும் அதுசார்ந்த நினைவுமயப்படுத்தல்களும் உலகில் இதுபோன்ற மாபெரும் கொடுமைகளுக்கு எதிரான மனித உரிமை முன்னெடுப்புகளின் ஒரு முக்கியமான பகுதியாக மாறியுள்ளன என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
தனது மக்களுக்கு நீதி வழங்க விரும்பாத, அதில் முழுமையான ஈடுபாடு காட்டாத அசிரத்தை உள்ள அரசோடு இணைந்து செயற்பட முடியாத நிலைமை இலங்கை விடயத்தில் உருவாக்குவதை நாங்கள் கண்டுள்ளோம்.
அவ்வாறு ஓர் அரசு செயற்பட்டு தன்னுடைய பொறுப்புக்கூறலில் இருந்து விலகிச் செல்லுமாக இருந்தால், அதற்கான பொறுப்பு சர்வதேச அமைப்புகள் மீதே சுமத்தப்படுகிறது என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டியவர்களாக உள்ளோம்.
ஆனால், எந்த மண்ணில் கொடுமைகள் நிகழ்ந்தனவோ அந்த நாட்டின் அரசு என்ற வகையில் இலங்கையைத் தள்ளிவைத்து விட்டுப் பொறுப்புக்கூறல் நடவடிக்கைகளை முழுமையாக முன்னெடுத்துச் சென்றுவிடவும் முடியாது என்பதிலும் கரிசனை கொள்ளவேண்டியுள்ளது.
கொரோனா வைரஸ் நிலைமைகளுக்குப் பின்னர் அதனையொரு காரணமாகப் பயன்படுத்தி பொறுப்புக்கூறல் மற்றும் நீதி வழங்கும் செயற்பாடுகளில் இருந்து இலங்கை அரசு மேலும் பின்வாங்குகின்ற சூழல் காணப்படுவதை ஏற்றுக்கொள்ள வேண்டியும் உள்ளது.
தற்போதைய ஆட்சியில் இலங்கை ஒரு பாரதூரமான நிலைமைக்குள் சென்று கொண்டிருக்கிறது என்பதை விளக்கி அதன் நடவடிக்கைகளை “முரண்பாடுகளுக்கான விதைகளைத் தூவுதல்” என்று தலைப்பிட்டு கடிதம் ஒன்றை முன்னாள் ஐ.நா.செயலாளர்களுடன் இணைந்து வெளியிட்டிருக்கின்றேன்.
இலங்கையில் வரவிருக்கும் பேராபத்தை அங்குள்ள தற்போதைய நிலைமைகள் முன்கூட்டியே உணர்த்துகின்றன. ஜனநாயகத்துக்கான இடைவெளி சுருங்கி வருகின்றது என்ற எச்சரிக்கையை அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டி இருந்ததேன்” என்றார்.
(சட்ட நிபுணர் அடமா டியங்க், செனகல் நாட்டைச் சேர்ந்தவர். இவர் 2012 ஆம் ஆண்டு அப்போதைய ஐ.நா.செயலாளர் நாயகம் பான் கீன் மூனினால் இனப்படுகொலைகளைத் தடுப்பதற்கான விசேட ஆலோசகராக நியமிக்கப்பட்டிருந்தார்.
செனகலில் நீதி மற்றும் சட்டத் துறைகளில் நீண்ட காலம் பதவிகளை வகித்து வந்த அவர் 2001ஆம் ஆண்டு முதல் ருவாண்டாவுக்கான சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தின் பதிவாளராக இருக்கிறார்.
அத்துடன் சர்வதேச ஜூரிகள் ஆணைக்குழுவிலும் நீண்டகாலம் செயற்பட்டவர். 1995 முதல் 2000 வரை ஹெய்ட்டி நாட்டுக்கான ஜக்கிய நாடுகள் சபையின் சுயாதீன நிபுணராகவும் செயற்பட்டுள்ளமை குறிப்பிட்டத்தக்கது.)
Leave a Reply
You must be logged in to post a comment.