சோதிடம் பற்றிய சிறு அலசல்

சோதிடம் பற்றிய சிறு அலசல்

கந்தையா தில்லை விநாயகலிங்கம்

பகுதி 01

சோதிடம் குறித்த நம்பிக்கை நாட்டுப்புற மக்களிடம் பரவலாக காணப்படுகிறது. சாதகம் பார்ப்போர், குறி சொல்வோர், கைரேகை பார்ப்போர், ஏடு போட்டுப் பார்ப்போர், கிளி சோதிடம் கூறுவோர், “நல்ல காலம் பொறக்குது, நல்ல காலம் பிறக்குது” என்ற இந்த வார்த்தைக்கு சொந்தக் காரர்களான சாமக் கோடாங்கிகள் போன்றோர் கிராமத்து தெருக்களில் வலம் வருவதை இயல்பாக காணலாம். அதுமட்டும் அல்ல சோதிடத்தில் எடுத்துரைக்கப்படும் தீய பலன்களைப் போக்க, அதற்கான பரிகாரங்களை [Astrological Remedies] மேற்கொள்ளும் வழக்கமும் காணப்படுகிறது.

நவக்கிரகங்கள் ஒரு தனிமனிதனுக்கு நல்லதை அல்லது கெடுதல்களை மட்டுமே செய்வதில்லை என்றும் சில கிரகங்கள் சில நிலைகளில் இருக்கும்போது சோதனைக்கால சுமைகளையோ, கஷ்டங்களையோ ஒரு மனிதனுக்கு அளிக்கிறதாகவும், வேத சோதிடம் [vedic astrology] இதற்கு பரிகாரங்களையும், தீர்வுகளையும் கூறுகிறது எனவும் நம்பப்படுகிறது. ஒரு நடை பயணியை மழையிலிருந்தும், கடும் வெயிலிலிருந்தும் காப்பாற்றும் குடை போல, சோதிடம் கூறும் பரிகாரங்கள், ஒரு தனி மனிதனை கிரக நிலையினால்  தீர்மானிக்கப்படும், தீமைகளிலிருந்தும், சோதனைகளிலிருந்தும் பாதுகாக்கிறது என்கின்றனர். உதாரணமாக, செய்வாய் கிரகம் இரத்தத்திற்கும் விபத்திற்கும் உரியது என்பதால், ஒருவரின் சாதகத்தில் செய்வாய், சனி சேர்க்கை / பார்வை பெற்றிருந்தால், அவருக்கு விபத்துக்கள் ஏற்படுமாம். எனவே சம்பந்தப் பட்ட நபர், இரத்த தானம் செய்வது மூலம் இதை தடுக்கலாம் என பரிகாரம் கூறுகிறது. அதேபோல சர்ப்ப [நாக] தோஷம் இருப்பவர்களுக்கு பாம்புகளால் பாதிப்பு ஏற்படும். திருமணம் செய்வதில் தடையும் குழந்தை பாக்கியம் கிடைப்பதில் தாமதமும் ஏற்படும் என்று வேத சோதிடம் கூறுகிறது. இதனால், திருமணம் செய்யும் போது ஆணுக்கோ பெண்ணுக்கோ நாகதோஷம் இருக்கிறதா என பார்ப்பது ஒரு வழக்கமாக உள்ளது. இதற்கு விரதம் இருந்து  கோயிலில் உள்ள பாம்பு புற்றுக்கு பால், பழம் வைத்து வழிபடுதல் மற்றும் இவை போன்றவற்றை பரிகாரமாக எடுத்துரைக்கிறார்கள். இப்படியான பழக்கம் இந்துக்கள் வாழும் நாடுகளில் இன்னும் தொடர்கிறது. 

ஆகவே சோதிடம் என்பது வருங்காலத்தை எடுத்துரைப்பதுடன், வரப்போகும் கெடுதல்களில் இருந்து தப்பவும் வழியையும் காட்டுகிறது எனலாம். ஆனால் இது எப்படி முதல் முதல் கண்டுபிடிக்கப்பட்டது அல்லது ஆரம்பித்தது ?

காலம் காலமாக மனிதன் வானை நோக்கினான், அங்கே பூமி,  இடி,  மின்னல்,  சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், கிரகங்கள் முதலியவற்றின் செயல்பாடுகளை,  நகர்வுகளை கண்டான். அவைகள் நமக்கு பல நன்மைகளைத் தருகின்றன. சில தீமைகளையும் தருகின்றன என உணர்ந்தான். இந்த இயற்கையின் லீலைகளைக் கண்டு ஆதி மனிதன் ஆனந்தப்பட்டான். அதிசயப்பட்டான், சிலவேளை பயந்தான் மிரண்டான். இப்படி இயற்கையின் செயல்களை அதன் லீலா விநோதங்களைக் கண்டும் பயந்தும் வியந்தும் அனுபவித்த ஆதி மனிதன் படிப்படியாக, அவையை பற்றி அறிய முற்பட்டான். அதன் விளைவுதான் வானியலும் சோதிடமும் ஆகும்.

நமது அன்றாட அனுபவத்தின் மிக மர்மமான பகுதி வானம் ஆகும். தரையில், தாவரங்கள், மிருகங்கள் வளர்ந்து இறக்கின்றன, மழை பெய்கிறது, ஆறு ஓடுகிறது, இவை எல்லாவற்றையும் நாங்கள் புரிந்து கொண்டதாக உணர்கிறோம். ஏனென்றால் நாம் அவ்வற்றுடனான நேரடியான பரிச்சயம்,  தரை மட்டத்தில் நடக்கும் இப்படியான ஆச்சரியமான நிகழ்வுகள் எல்லாம் கிட்டத்தட்ட நமக்கு சாதாரணமாக  தோன்றுகின்றன. ஆனால் வானம் எம்மிடம் இருந்து மிக மிக தூரத்தில் இருப்பதால், அதை புரிந்துகொள்ள முடியாமல் அன்று இருந்தது. அந்த வானத்தினூடாக,  குறிப்பாக இரண்டு பெரிய பொருள்கள் பயணிப்பதை மனிதன் கண்டான். அதில் ஒன்று சூடான மற்றும் நிலையானதாகவும்,  மற்றொன்று குளிரானதாகவும் மற்றும் அதன் வடிவம் மாறக்கூடியதாகவும் [one hot and constant, the other cold and changeable] இருப்பதை கண்டான்.

பகல் நேரத்தில் எரியும் வெயில் அல்லது ஓடும் மேகங்கள் இருக்கலாம் அல்லது இருள் படர்ந்து இடி மற்றும் மின்னல் இருக்கலாம். என்றாலும் ஒரு தெளிவான இரவில் வானம் மிகவும் இதற்கு நேர்மாறாக இருக்கிறது. நீங்கள் போதுமான அளவு உற்றுப் பார்த்தால், நீங்கள் ஒரு அடையாளப்படுத்தி   காணக்கூடிய நட்சத்திரங்களின் குழுக்கள் மெதுவாக ஆனால் நம்பகமான முறையில் நகருவதை ஊகிக்கமுடியும். எனவே, சூரியன், சந்திரன் மற்றும் நட்சத்திர குழுக்களின் செயற்பாடுகள் அவனை சிந்திக்க வைத்தன. அதன் எதிரொலிதான் வானியல், சோதிடம் மற்றும் நாட்காட்டி [astronomy, astrology and the calendar] பிறக்க வழிவகுத்தன எனலாம்.

வானியல் என்பது விஞ்ஞான ஆய்வுகள் மூலம் அறிவுபூர்வமாக சூரியன், சந்திரன் மற்றும் நட்சத்திரங்கள் பற்றி அறியும் ஒரு கலை ஆகும். ஆனால் சோதிடம் இதற்கு எதிர்மாறானது. இது நம்பிக்கைகள் மற்றும் நடைமுறைககளின் தொகுப்புகளை அறிவியல்பூர்வமான ஒன்று என்று தவறாக கருதப்படும் ஒரு கலையாகும் [A collection of beliefs or practices mistakenly regarded as being based on scientific method / pseudo-science]. ஆகவே இரண்டும் உண்மையில் வெவ்வேறானவை. இதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். வானத்தில் தென்படும் சூரியன், சந்திரன் மற்றும் நட்சத்திரங்கள், மனித இருப்பு மீது, அவர்களின் வாழ்க்கை,  எதிர்காலம், எதிர்பார்ப்பு போன்றவற்றில் தாக்கங்களை ஏற்படுத்தும் என்ற ஒரு நம்பிக்கையின் அடிப்படையில் உருவானதே சோதிடம். ஆனால் எது எப்படியாகினும் மனிதனின் முன்னைய வரலாற்றில் அதிகமாக வானியல் மற்றும் சோதிடம் இரண்டும் நெருக்கமாக  பின்னிப் பிணைந்து இணைக்கப்பட்டு இருந்தன. அதனால்தான் இன்னும் சோதிடம் உலகம் முழுவதும் எதோ ஒரு விதத்தில் நிலைத்து இருக்கின்றன.

உதாரணமாக, இந்தியாவில், முன்னிலையில் இல்லாத சில கல்வி நிறுவனம் சோதிடத்தை பல்கலைக்கழகத்தில் இன்னும் போதிக்கின்றன என்பது தெரியவருகிறது. உதாரணமாக, தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் சோதிடம் பட்டயப் படிப்புப் (Diploma) பாடத்திட்டத்தில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அதேவாறு, ஐரோப்பா முழுவதும் பல்கலைக்கழகங்களில் சோதிடம் ஒரு படமாக குறிப்பாக 11ம் நூற்றாண்டு தொடங்கி 17ம் நூற்றாண்டு வரை சேர்க்கப்பட்டு இருந்தது [Studied at universities throughout Europe from the 11th to the 17th centuries, astrology was included in the curriculum of every educated person] அதுமட்டும் அல்ல, வானவியலும் சோதிடமும் வெவ்வேறாக பிரியும் முன்பு, உலகின் மிகப் பெரிய விஞ்ஞானிகள் அல்லது வானியலாளர்கள் சோதிடனாகவும் [கணியன்] செயல் பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது [In the days before astronomy and astrology became separated, many of the greatest scientist/ astronomers were also practising astrologers] 

வானவியல் (Astrology), சோதிடம் (Astronomy) என்னும் இரண்டு சொற்களை நாம் அடிக்கடி பாவித்தாலும், அவை இரண்டினதும் வித்தியாசத்தைப் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. வானத்தில் இருக்கும் கோள்களைப் பற்றியும்,நட்சத்திரங்களைப் பற்றியும் இந்த இரண்டுமே சொல்வதால்,  இவற்றை அனேகர் ஒன்றாகவே பார்க்கின்றனர். ஆனால் வானவியல் என்பது விஞ்ஞானம், சோதிடம் என்பது சாத்திரம் ஆகும். உலகில் உள்ள பல பண்டைய நாகரிகங்கள் வானத்தில் உள்ள நட்சத்திரங்களினதும், கோள்களினதும் நகர்வுகளை பல ஆண்டுகளாக கவனித்தே வந்திருக்கிறார்கள். அந்த கவனிப்பினூடாக, சூரியன், சந்திரன் விண்மீன் திரள்கள்,  நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களின் நிலையை தமக்கு தெரிந்த அளவில் விபரித்துள்ளார்கள்.

சிலவேளை அவைக்கு புராண கருத்துக்கள் அல்லது கற்பனைக் கதைகளும்   சோடித்துள்ளார்கள். சோதிடம்  என்பது நமது சூரிய மண்டலத்தில் உள்ள கிரகங்களின் நிலையிலிருந்து நமது வாழ்க்கை பயணத்தில் அனைத்து மனிதர்களுக்கும் எந்த நேரத்தில் எவ்வாறு பாதிப்புகள் ஏற்படும் என்பதைப் பற்றி ஊகிக்கும் ஒன்று. உதாரணமாக, சோதிடர் ஒரு நபரின் சாதகத்தை வான சாத்திர  தரவுகளின் அடிப்படையில் கிரகங்களின் நிலைகள் கொண்டே கணக்கிடுகிறார்கள். எனவே, சோதிடமும் மற்றும் பண்டைய வான சாஸ்திரம் இரண்டும் வெவ்வேறு அறிவியல் அல்ல, இவை இரண்டும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டதாக அன்று இருந்தது. என்றாலும் பின்னைய காலத்தில், விஞ்ஞானம் முன்னேற வானசாத்திரம் என்பது வானியலாக தனித்து அறிவுபூர்வமாக இன்று பயணிக்கிறது. 

செங்கதிரவன் செல்லும் வழியும் அக்கதிரவனின் இயக்கமும் அந்த இயக்கத்தால் சூழப்பட்ட வட்டமான நிலப்பரப்பும் காற்று இயங்கும் திசையும் ஆதாரம் ஏதுமின்றி தானே நிற்கின்ற ஆகாயமும் என்று சொல்லப்பட்ட இவற்றை ஆங்காங்கே சென்று அளந்து பார்த்து அறிந்தவர்களைப் போல எல்லாம் இத்தனை அளவு என்று சொல்லும் கல்வி கற்றோரும் உள்ளனர் என புறநானூறு 30 

“செஞ்ஞா யிற்றுச் செலவும்
அஞ் ஞாயிற்றுப் பரிப்பும்,
பரிப்புச் சூழ்ந்த மண் டிலமும்,
வளி திரிதரு திசையும்,
வறிது நிலைஇய காயமும், என்றிவை
சென்றளந்து அறிந்தார் போல, என்றும்
இனைத்து என்போரும் உளரே”

என்று கூறுகிறது. அவ்வாறுதான் வானமண்டலத்திலுள்ள கோள்கள் நட்சத்திரங்கள் வருங்காலத்தைப் பற்றிக் கூறுகின்றன என சோதிடர்களும் சொல்லுகிறார்கள் என்று நாம் கருதலாம்?  

அங்கம் 02

கடவுள் முதலில் பூமியை உருவாக்கினார். அதன் பின்னர் பூமி இருட்டாக இருக்கிறது என்று கருதி, சூரியனையும், சந்திரனையும் படைத்தார் என்று பைபிள், குரான், யூதமதம் ஆகிய மூன்று பிரதான மதங்களும் சொல்கின்றன. அதேபோல இந்து மதத்தின் உபவேதங்களில் ஒன்றான, ‘ஜோதிசம்’ எனச் சொல்லப்படும் சோதிடத்தில், பூமியை மையமாக வைத்து நவக்கிரகங்கள் சுற்றுகின்றன என்ற அடிப்படையிலேயே கணிப்புகள் யாவும் இருக்கின்றன. பூமியை சுற்றி மற்றவைகள் சுழல்கின்றன என்ற இந்த சிந்தனையை தான் அன்று வானசாத்திரமும் கொண்டு இருந்தது புலன்படுகிறது. அதனால் தான், மத நம்பிக்கைகளுக்கு விரோதமாக கலீலியோ கலிலி பூமியை சூரியன் சுற்றிவரவில்லை என்றும், மாறாக பூமியே சூரியனை சுற்றி வருவதாக கூறினார் என்று, ரோமன் கத்தோலிக்க திருச்சபை, அவரை “பூமிதான் யையப்புள்ளி. சூரியன் உள்பட எல்லாமே பூமியைத்தான் சுற்றுகிறது. பூமி நிலையானது” என்று கட்டாயப்படுத்தி சொல்ல வைத்தார்கள் என்பது வரலாறு.

பண்டைய பல நாகரிகங்களில், வானம் பல கடவுள்களின் வீடாக இருந்ததும் காணப்படுகிறது. அவர் அங்கிருந்து பூமியில் வாழும் உயிரினங்களில் செல்வாக்கு செலுத்துகிறார் என நம்பப்பட்டது. எனவே, வானத்தில் உள்ள வடிவங்கள், அதாவது சூரியன்,  சந்திரன்,  நட்சத்திரங்கள் போன்றவை  நிச்சயமாக அந்த செல்வாக்கை பிரதிபலிக்க வேண்டும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் தோன்றியதே சோதிடம் ஆகும். சுருக்கமாக சொன்னால் “கோள்களின் கோலாலட்டமே ! குவலயத்தின் சதுராட்டம் !” எனலாம்

சோதிடம் என்பது ஒரு அமானுஷ்ய பயிற்சியாக [பொது ஆய்வுக்கு அப்பாற்பட்ட அல்லது தெய்விகமான ஒன்றாக / an occult practice] பண்டைய மெசொப்பொத்தேமியா, எகிப்து, இந்தியா, மெக்ஸிகோ நாட்டின் தெற்கு மெக்ஸிகோ [south-eastern Mexico] பகுதியில் உள்ள யுகடான் தீபகற்பம் மற்றும் சீனாவில் [Mesopotamia, Egypt, India, Yucatán Peninsula and China] ஆரம்பித்தது வரலாற்றின் மூலம் தெரியவருகிறது. இவைகளில் பதியப்பட்ட மிகவும் பழமை வாய்ந்தது, கி மு 2000 ஆண்டு பழைய பாபிலோனிய காலத்தை [Old Babylonian period] சேர்ந்தது ஆகும். எவ்வாறாயினும் இதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, சோதிடம் பற்றி சில புரிதல்கள் சுமேரியனிடம் இருந்ததும் தெரியவருகிறது. இவர்கள் கிரகங்களின் இயக்கங்களை கவனித்து, அவைகளுக்கு கடவுளைப் போன்ற அம்சங்களையும் சக்திகளையும் கொடுத்தார்கள் [assigned them godlike features and powers]. ஒவ்வொரு கிரகமும் ஒரு ஆண் அல்லது பெண் தெய்வத்தை குறித்ததுடன், வாழ்க்கையின் சில பகுதிகளை அவர்கள் ஆட்சி புரிந்தனர். கிரக இயக்கங்களின் முறைகள் [pattern of planetary movements], சகுனங்களை தெரிவிப்பதாக சோதிடர்கள் ஆட்சியாளர்களுக்கு அறிவுரை கூறி,

அந்த சகுனங்கள் எதை எமக்கு விளக்குவதாக தெளிவு படுத்தி, எனவே அந்த விளக்கத்தை அல்லது அதற்காக அவர்கள் எடுத்துரைத்த ஆலோசனைகளை முறையாக செயல் படுத்த வேண்டும் என்று கூறினார்கள். உதாரணமாக, நாட்டில் ஏற்படும் கேடுகளையும் மற்றும் மன்னருக்கு அல்லது ஆளுநருக்கு எதிர்காலத்தில் ஏற்படும் வெற்றி அல்லது தோல்விகளையும் நேரத்துடன் கூறி அதற்கான ஆலோசனைகளையும் வழங்கினார்கள். அதுமட்டும் அல்ல, சூரிய, சந்திர, கிரக கணிதங்களைக் கொண்டு பன்னிரு இராசி சக்கரத்தை அமைத்தார்கள். ஒவ்வொரு இரசிக்கும் [ராசிக்கூட்டம் எனப்படும் விண்மீன் தொகுதிகளுக்கு] சம அளவாக, முப்பது பாகை வீதம், எளிமையாக வருவதற்காக சதுரமாக வரைந்து பன்னிரு கட்டங்களாக முதல் முதல் பிரித்தவர்கள் இந்த பாபிலோனியர்களே ஆவார்கள். பாபிலோனியர்கள் சூரியன் சந்திரன் தவிர, ஐந்து கோள்களையும் கண்டுபிடித்து, இவைகளுக்கு கடவுள் பண்புகளையும் கொடுத்தார்கள். உதாரணமாக, சூரியன்  =  சமாஷ் [shamash], சந்திரன் = சின் [Sin], செவ்வாய் =  நெர்கள் [Nergal], புதன் = நாபு  [Nabu (Nebo)], குரு =  மார்துக் [Marduk], சுக்கிரன் = இஸ்தர் [goddess Ishtar], & சனி = நினிப் [Ninurta (Ninib)]  ஆகும். இப்படித்தான் மெல்ல மெல்ல, அன்றைய வானசாத்திரமும் சோதிடமும் சேர்ந்து வளர்ச்சி அடைந்தது.

பாபிலோனியாவில் ஆரம்பித்த சோதிடவியலானது மேற்குப் பக்கமாக எகிப்து, கிரேக்கம் மற்றும் உரோமிற்கும், கிழக்கு பக்கமாக இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கும் மற்றும் ஐரோப்பாக் கண்டத்திற்கும் பரவியதாக அறிகிறோம். அதுமட்டும் அல்ல, பாபிலோனியாவின் முதல் அரச பரம்பரைக் காலத்தில், அதிகமாக கி மு 16 ம் நூற்றாண்டில் விண்வெளி சகுனங்களை தொகுத்து கூறும் ‘எனுமா அனு என்லில்’ [ One of the most remarkable texts from ancient Mesopotamia is the collection of celestial omens known as Enuma Anu Enlil, which was discovered in the library of the Assyrian king Aššurbanipal in Nineveh] என்ற முதல் சோதிடநூல் களிமண் பலகையில் வெளிவந்தது இன்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

இந்த பாபிலோனிய சோதிட நூலில், சந்திரன் தொடர்பான சகுனங்கள்,  சூரியன் தொடர்பான சகுனங்கள், வானிலை தொடர்பான மற்றும் கோள்கள் தொடர்பான சகுனங்கள் தொகுக்கப் பட்டுள்ளன.  உதாரணமாக, எள் விதைத்தல் காலமான, ஏப்ரல் / மே யில், அவர்களின் இரண்டாவது மாதமான ‘அஜாரு’ வில் [ஏறத்தாழ தமிழ் மாதம் சித்திரையில்], மாலை நேரத்தில் சந்திர கிரகணம் ஏற்பட்டால், அரசன் இறப்பான், மற்றும் அந்த அரசனின் மகன் தந்தையின் சிம்மாசனத்திற்கு தகுதி உள்ளவனாக இருந்தாலும், அவனால் அதில் அமரமுடியாது இருக்கும் என்று கூறுகிறது. [When in the month Ajaru [April/May / Harvest; sowing sesame], during the evening watch, the moon eclipses, the king will die. The sons of the king will vie for the throne of their father, but will not sit on it.]. பாபிலோனியன் நாட்காட்டி, 12 சந்திர மாதங்களையும், ஒரு ஆண்டில் ஏறத்தாழ 354 நாள்களையும் கொண்டிருந்தன. இன்று வழக்கில் உள்ள, ஒருவர் பிறந்த நேரத்தில் வானத்தில் உள்ள கோள்களின் இருப்பிடம் மற்றும் 12 இராசிகள் போன்றவற்றை வைத்து, ஒருவரின் எதிர் காலத்தை கணிக்கும் சோதிடத்தின் ஆரம்ப கட்டம் அதிகமாக கி மு மூன்றாம் நூற்றாண்டில் ஆரம்பித்தது தெரிய வருகிறது.

மெசோஅமெரிக்கா என்பது நவீன மெக்ஸிகோவின் பகுதி மற்றும் மத்திய அமெரிக்காவின் வடக்கே உள்ள பகுதியாகும், இங்கு கி மு 2000 ஆண்டு அளவில் தொடங்கிய மாயா நாகரிகம்,  கி.பி. 150 வாக்கில் உச்சத்தை அடைந்தது. அவர்கள் தனித்துவமான நாட்காட்டியை தயாரித்ததுடன், மாயன் குருக்கள், நாட்காட்டியை அடிப்படையாக கொண்டு, உலகளாவிய நிகழ்வுகள் மட்டும் அல்ல, ஒவ்வொரு நபரின் தனிப்பட்ட எதிர்காலத்தையும், அவர்களின் பிறந்த திகதியில் இருந்து கணித்தார்கள் என்று அறியமுடிகிறது. [The Mayan calendar is a unique tool that has come down to us through the dark ages. With his help the Mayan priests knew how to predict not only global events, but also the personal future of each person]. வேதத்தின் ஆறு பாகங்களில் ஒன்றானதும் இன்று இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் பயன்படுத்தப்படும்  சோதிடத்தின் ஆரம்பம் கி மு 1000 ஆண்டளவில் தோன்றி இருக்கலாமென நம்பப்படுகிறது.

வாழ்க்கையில் எந்த முக்கியமான படியையும் அல்லது நிகழ்வையும்,  சாதகத்தில் உகந்த அறிகுறிகள் காணப்படும் பொழுதே பொதுவாக ஆரம்பித்தார்கள். இன்னும் ஆரம்பிக்கிறார்கள். அது போலவே, சாதகம் பார்க்காமல் எந்த திருமணமும் பொதுவாக நடைபெறுவதும் இல்லை. மனிதனுக்கும் விண்ணிற்கும் தொடர்பு, வெறும் இருப்பு மட்டும் அல்ல, வாழ்வும் இருக்கக் கூடும் என்னும், மனிதனுடைய ஒரு யதார்த்த கற்பனையிலிருந்து தோன்றியதுதான் ‘வரும்பொருள் உரைத்தல்’ என்னும் இந்த சோதிடம் ஆகும். சமஸ்கிருத சொல்லான ஜீயோடிஸ் என்பது ஒளி அல்லது பிரகாசம் என்றுகொள்ளலாம். விண்மீன் மண்டலஞ்சார்ந்த ஒளி வடிவங்கள் மனிதர்களின் விதியை தீர்மானிக்கிறது என்ற அடிப்படையில் வேத சோதிடம் செயல்படுகிறது எனலாம் [“Jyotish”—the science of light—Vedic astrology deals with astral light patterns that are thought to determine our destiny].

சோதிடம் எவ்வளவு தூரம் ஆட்சி செலுத்தியது என்பதற்கு  நல்லதொரு எடுத்துக்காட்டு ஒன்று பெரிய புராணத்தில் காணப்படுகிறது. உதாரணமாக, பக்தி காலம் என போற்றப்படும் நாயனார் காலத்தில், சோழ மன்னனாகிய சுபதேவனும், அவன் பட்டத்தரசி கமலவதியும் சிதம்பரம் போய் மக்கட் பேறு கேட்டு வழிபட்டார்கள். அதன் பின் கமலவதி கருவுற்றாள். கருமுதிர்ந்து மகவு பெறும் வேளை வந்த போது, ‘இன்னும் ஒரு நாளிகை கழித்துப் பிறக்குமானால் இக்குழந்தை மூன்றுலகமும் அரசாளும்’ எனச் சோதிடர்கள் சொன்னனர்கள். அவ்வாறு ஒருநாளிகை கழித்துப் பிறப்பதற்காக அரசியை தலைகீழாக மேலே தூக்கி நிறுத்தினார்கள் என பெரிய புராணம் கூறுகிறது. குறித்த வண்ணம் ஒரு நாளிகை கழித்து ஆண்குழந்தை பிறந்தது.கால நீடிப்பால் அக்குழந்தையின் கண்கள் சிவந்திருந்தன, ஈன்ற தாய் அக்குழந்தையைக் கண்டு ‘என் கோச் செங்கணானனே’என அருமை தோன்ற அழைத்தார். இவரே பின்னாளில் ”கோச்செங்கட் சோழ நாயனார்” என்று புகழப்பெற்றார் என்கிறது புராணம்.

அது மட்டும் அல்ல சோதிடத்துடன் தொடர்புடைய ‘பழமொழி’களையும் இன்றும் மக்களிடையே புழக்கத்தில் இருப்பதை காண்கிறோம். உதாரணமாக, “மூல நட்சத்திரப் பெண்ணா? வேண்டவே வேண்டாம்! மூல நட்சத்திரம் உள்ள பெண்ணை திருமணம் செய்தால் மணமகன் தன் தாயையோ, தந்தையையோ இழக்க நேரிடும்.” என்று நட்சத்திரத்தைப் பார்த்ததுமே அவர்களின் ஜாதகத்தை ஒதுக்கித் தள்ளும் வேதனையான பழக்கம் இன்றும் தொடர்கிறது. அதனை

“ஆண் மூலம் அரசாலும் பெண் மூலம் நிர்மூலம்” என்று கூறுவார். அது போல, 

“கன்னியில் செவ்வாய் கடலும் வற்றும்”

“சனி பிடித்தவனுக்கு சந்தையிலும் கந்தை கிடைக்காது”

“சித்திரையில் பிறந்தவன் தெருவில் திரிவான்”

“பத்தில் குரு வந்தால் பதவி பறி போகும்”

“பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது,”

“பரணி நட்சத்திரத்தில் பிறந்தவன் தரணி ஆள்வான்.”

என்ற பழமொழிகளும் அதன் மேல் உள்ள நம்பிக்கைகளும் இன்னும் மக்களிடம் பரவலாக காணப்படுகிறது. பால்வெளி மண்டலத்தில் சிறு துகளான பூமியைப்போல் ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான கிரகங்களின் இருப்பை கண்டறிந்துள்ள விஞ்ஞானத்தின் முன்னால், கண்ணுக்கு தெரிந்த வெறும் சில உண்மையான / கற்பனையான [ராகு & கேது]  கிரகங்களின் நகர்வை மையமாக வைத்து கூறப்படும் இந்த சோதிடம் மக்களை எவ்வளவு தூரம் ஆட்டிப்படைக்கிறது என்பது ஆச்சிரியமாகவே உள்ளது !

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]


பாகம் 03

காலத்தின் அடிப்படையில் கணிக்கலாம். வேத சோதிட நூல்கள் 9 கோள்கள் பற்றிக் கூறுகின்றன. இவற்றுள் 7 உண்மைக் கோள்களாகும் [சூரியன்,  சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி / sun, moon? mars, mercury jupiter, venus, saturn] ஏனைய இரண்டும் நிழற்கோள்கள் அல்லது கற்பனை கோள்கள் [இராகு, கேது] ஆகும். அத்துடன் கோள்களின் நிலைகளையும் நகர்வுகளையும் குறிப்பதற்கு, வேத சோதிட நூல், பூமி பிரபஞ்சத்தின் மையம் என்ற கருத்தை அடிப்படையாக கொண்ட ‘புவியை மையமாகக் கொண்ட முறைமை’ [Geocentric model] ஒன்றையே பயன்படுத்துகின்றது. இது இராசிச் சக்கரம் (zodiac) எனப்படும்.

இந்த இராசிச் சக்கரம் ஒவ்வொன்றும், சரிசமனாக, 30 பாகைகளைக் கொண்ட 12 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை மேடம் (மேஷம்), இடபம் (ரிஷபம்), மிதுனம், கர்க்கடகம் (கடகம்), சிங்கம் (சிம்மம்), கன்னி, துலாம், விருச்சிகம், தனு (தனுசு), மகரம், கும்பம், மீனம் [Aries, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpius, Sagittarius, Capricornus, Aquarius and Pisces.] ஆகும். இவைகள் ஒவ்வொன்றும் ஒரு விண்மீன் குழாம் [Constellation] ஆகும். உத்தியோகபூர்வமாக 88  விண்மீன் குழாம்கள் இருக்கின்றன [There are 88 “official” constellations]. உண்மையில் ஒரு விண்மீன் குழாமில் பல நட்சத்திரங்கள், பூமியில் இருந்து வெவ்வேறு தூரங்களில், வெவ்வேறு அளவுகளில், மூன்று பரிமாணங்களில் விண்வெளியில் பரவி இருக்கின்றன.

என்றாலும் அங்கு காணும் எல்லா நட்சத்திரங்களும், நாம் அவைகளை மிக மிக மிக தொலைவில் இருந்து பார்ப்பதால், ஒரே தளத்தில் இருப்பது போல் தோன்றுகிறது [Each constellation is a collection of stars that are distributed in space in three dimensions – the stars are all different distances from Earth. The stars in a constellation appear to be in the same plane because we are viewing them from very, very, far away & vary greatly in size too]. அங்கு இன்னும் பில்லியன் நட்சத்திரங்கள் உண்டு.

ஆனால் சாதாரண கண்ணுக்கு தெரியக்கூடியதாகவும்  மற்றும் ஒரு வடிவத்தை அமைக்கக் கூடியதாகவும் காணப்படவையே இந்த 88 ம் ஆகும். இதில் பூமிக்குச் சார்பான சூரியனுடைய சுற்றுப்பாதையின் தளத்தில் காணப்படும் 12 விண்மீன் குழாம்கள் மட்டுமே இராசியாக சோதிடத்தின் கவனத்தில் எடுக்கப்படுகின்றன. ஞாயிற்றின் தோற்றுப்பாதை (முழுவதுமாக 360 பாகை)  131⁄3 பாகை இடைவெளியில் 27 விண்மீன் குழுக்களாக கூறு செய்யப் பட்டுள்ளது. ‘அசுவினி’ ஞாயிற்றின் தோற்றுப்பாதையில் முதற் கூறாகும், ‘ரேவதி’ கடைக்கூறாகும். ஒவ்வொரு விண்மீன் குழுவையும் மேலும் 31⁄3 பாகைகள் கொண்ட 4 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இப்பிரிவு ‘பாதம்’ எனப்படும். இதுதான் வேத சோதிடத்தின் முக்கிய கூறுகளாகும்.

“நடப்பவை அனைத்தும் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டவையே” என கூறும் வேத அல்லது இந்தியா சோதிடம், ஒருவர் பிறப்பதில் இருந்து அல்லது பூமியினுள் வரும் பொழுதில் இருந்து, அந்த நபர் இறக்கும் வரை அல்லது பூமியில் இருந்து வெளியேறும் வரை, அந்த நபருக்கு நடக்கும் அனைத்துச் சம்பவங்களும் முன்பே உறுதி செய்யப்பட்டவை என்று எடுத்துரைக்கிறது. இவ்வற்றை துல்லியமாக கூறவேண்டுமாயின், பனிரெண்டு ராசிக் கட்டங்களில் அடங்கிய ஒன்பது கிரகங்கள், இருபத்தேழு நட்சத்திரங்களின் இருப்பைச் சரியாக கணிக்க வேண்டும் என்று கூறுகிறது.

மேலும் வேத சோதிடம்  மனித வாழ்வை பிறந்ததிலிருந்து இறுதிவரை பகுதி பகுதியாய் பிரித்துப் பலன் சொல்லும் தசா,புக்தி கணக்கீடுகளையும் கொண்டுள்ளது. வேத சோதிடம் ஒரு மனிதனின் ஆயுட்காலம் சராசரியாக 120 ஆண்டுகளாக எடுத்து, அதை ஒன்பது கோள்களுக்கும் [கிரகங்களுக்கும்] அவை அவைகளின் சோதிட  தன்மை மற்றும் காரகத்துவத்தை [பொறுப்பை] மையமாக கொண்டு அவைகளுக்கு அந்த 120 ஆண்டுகளையும் பிரித்தனர்.

உதாரணமாக, சூரிய தசை —-   6 வருடங்கள் & சுக்கிர தசை —  20 வருடங்கள் ஆகும். ஒரு நபரின் ஆரம்ப தசையை தீர்மானிப்பது சந்திரன் மட்டுமே. உதாரணமாக, ஒரு நபர் பிறக்கின்ற பொழுது ஆகாயத்தில் சந்திரன் எந்த நட்சத்திரத்தின் மேல் சென்று கொண்டு இருக்கின்றதோ அது தான் அவரின் ஜென்ம நட்சத்திரம் ஆகும். அந்த ஜென்ம நட்சத்திர அதிபதியின் தசை தான் ஆரம்ப தசையாக வரும். அதாவது, ஒருவர் பூராடம் நட்சத்திரத்தில் பிறந்திருந்தால் அதன் அதிபதியான சுக்கிரனின் தசை அவருக்கு ஆரம்ப தசையாக வரும். இங்கு மொத்தம் உள்ள  27 நட்சத்திரங்களையும், மூன்று மூன்றாக 9 கோள்களுக்கும் பிரித்துள்ளார்கள் என்பதை கவனிக்க. எனவே, ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட மூன்று நட்சத்திரங்களுக்கு அதிபதியாக வருவார்கள். உதாரணமாக, பரணி, பூரம், பூராடத்திற்கு சுக்கிரன் அதிபதி ஆகும்.

அடுத்தாக ஒரு கிரகத்தின் தசை நடத்துகிறது என்றால் அந்த கிரகத்தின் ஆதிக்கம் சற்று ஓங்கி இருக்குமே தவிர சாதகத்துக்குரிய அந்த நபரின் மேல் முழு ஆதிக்கம் செலுத்தாது. அதாவது ஒவ்வொரு கிரகத்தின் தசையிலும் மற்ற எட்டு கிரகங்களும் தசாநாதருடன் கைக்கோர்த்து தன் பங்கிற்கு அவர் மேல் ஆதிக்கம் செலுத்தும். இந்த பங்குகள் தான் புத்தி என்று அழைக்கப்படுகிறது. ஒரு தசையில் உள்ள மொத்த ஆண்டுகளை சரி சமனாக பிரிக்காமல் ஒவ்வொரு கிரகங்களின் தசா வருடங்களை கணக்கில் கொண்டு ஒன்பது பங்குகளாக பிரிப்பது தான் புத்தி ஆகும். எனவே, அனைத்து கிரகங்களின் புத்திகளையும் உள்ளடக்கியதே ஒரு கிரகத்தின் தசை என நாம் கூறலாம்  இது தான் வேத சோதிடத்தின் முக்கிய கட்டமைப்பு ஆகும், என்றாலும் இன்னும் நுணுக்கமாக மேலும் சில உள் அமைப்புக்கள் உண்டு. அவ்வற்றை வேத சோதிடத்தை விரிவாக படிக்கும் பொழுது அறிந்து கொள்ளலாம் 

“நவ கிரகங்கள் எனக்கு சாதகமாம்
மணவாழ்க்கையில் பிரச்சனை இல்லை
அடித்து கூறினான் சோதிடன் 
ஆனால் சோதிடருக்கு தெரியுமா
நவக்கிரகங்கள் ஒன்றை ஒன்று
பார்த்துக் கொள்ளுவதில்லை என்று?”

“எனக்கு கடும் செவ்வாய் தோஷமாம் 
வாழைமரத்திற்கு தாலி கட்டு என்றான் சோதிடன்.
நான் கட்டிவிட்டு, மண்டபம் போனேன்.
மண்டப முகப்பில் வாழை மரங்கள்
என்னை ஏக்கத்துடன் பார்த்தன.”

——————————————————————————————————————–

பகுதி 04

தமிழரின் பண்டைய இலக்கியத்தில், மூத்ததான தொல்காப்பியத்தில், பொருளதிகாரம்  »  களவியல் பகுதியில், “மறைந்த ஒழுக்கத்து ஓரையும் நாளும் துறந்த ஒழுக்கம் கிழவோற்கு இல்லை” என்ற ஒரு பாடல் வருகிறது. இதற்கு பின்னாளில் உரை எழுதிய இளம்பூரணர்,  ஓரைக்கு ‘முகூர்த்தம்’ என்றும், நச்சினார்க்கினியர் ‘இராசி’ என்றும் கூறி உள்ளதை வைத்து, சோதிடம் தமிழரின் வாழ்வுடன் தொல்காப்பிய காலத்திலேயே அறிமுகமாகி விட்டது என்று சிலர் இன்று வாதாடுகிறார்கள். ஆனால் அவர்கள் ஓரைக்கு விளக்கம் காண மற்ற பல சங்க பாடல்களை எனோ மறந்தோ அல்லது மறைத்தோ விட்டார்கள்.

உதாரணமாக, தோழியர் கூட்டத்தோடு சேர்ந்து காலை நேரத்தில் ‘ஓரை’ விளையாடுகையில் பூந்தாதுகளால் பாவை செய்து விளையாடுவர் என்ற செய்தி கூறும் குறுந்தொகை, 48: 1- 3,  அடும்பினது அழகிய மலரைக் கலந்து நெய்தலாலாகிய நெடிய மாலையை யணிந்த நீர் ஒழுகிய கூந்தலையுடைய விளையாட்டு மகளிரை அஞ்சி ஈரத்தையுடைய நண்டு கடலுக்குள் ஓடும் என்ற செய்தி கூறும் குறுந்தொகை, 401 : 2 – 3, மற்றும் அதே போல நற்றிணை 143 : 2 – 3, அகநானூறு 60: 10 – 12, மற்றும் புறநானூறு 176: 1 – 2, போன்றவற்றில் ஓரை என்பது ஒரு மகளீர் விளையாட்டு என எல்லாப் பாடல்களிலும் எடுத்துக் காட்டி உள்ளார்கள்.

எனவே அந்த தொல்காப்பிய பாடலை மீளாய்வு செய்ய வேண்டும் என்று எண்ணுகிறேன், ஏனென்றால் உரை எழுதியது பிற்காலத்தில் என்பதாலும், அதே கால சங்க பாடல்களில்,  ஓரைக்கு ஒரு வகை விளையாட்டு என்று சுட்டிக் காட்டப்பட்டு இருப்பதாலும் ஆகும். உதாரணமாக கிழவன் / கிழவி – இக்காலத்தில் இதன் பொருள் வயதான ஆண் பெண்ணைக் குறித்தாலும். சங்க காலத்தில் பொதுவான ஆண் / பெண்ணைக் குறிக்கவே இச்சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவ்வாறுதான் இந்த ஓரையும் மாற்றமடைந்து இருக்கலாம்?

தொல்காப்பியத்துக்கு பிந்திய சங்க காலத்தில், எதிர்கால நிகழ்ச்சிகளை முன் கூட்டியே அறிவிக்கும் அறிகுறியாக மக்களால் தொன்று தொட்டு இன்று வரை நம்பப்பட்டு வரும் சகுனங்கள், நிமித்தங்கள் பார்த்தல், குறி சொல்லுதல் மற்றும் வேலன் வெறியாடல், கிரகங்களின் நகர்வுகளைப் பற்றி கூறுதல் [உதாரணமாக, சுக்கிரன் மழை தரும் கிரகமாக கருதி, அது தெற்குப் பக்கம் ஏகினால் மழை பெய்யாது என்பதை புறநானூறு “இலங்கு கதிர் வெள்ளி தென்புலம் படரினும் அந்தண் காவிரி வந்துசுவர் பூட்ட” என்று கூறுவது ], 

நல்ல நாள் [உகந்தநாள்] பார்த்தல், மற்றும் ஒப்புமை சொல்லுதல் [உதாரணமாக கற்புடைய மங்கையர்க்கு அருந்ததி நட்சத்திரத்தை ஒப்பிடுதல்]  போன்ற குறிப்புக்களை சங்க இலக்கியத்தில் காணலாம். என்றாலும் இராசிகள்,  நட்சத்திரங்கள், கிரகங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு மக்களுடைய பல்வேறு செயற்பாடுகளுக்கான சரியான காலத்தை அறியவும், எதிர்கால நிகழ்வுகளை எடுத்துக் கூறவும், ஏற்படப் போகும் துன்பங்களில் இருந்து தப்புவதற்கான பரிகாரங்களை கண்டறியவும் உபயோகப்படும் ஒரு கணிப்பு முறையான சோதிடத்தை அங்கு காணவில்லை என்றே கூறலாம்? 

முதல் முதல் தமிழில் எழுதிய சோதிட நூல், உபேந்திர ஆசாரியர் என்னும் சமண முனிவர் எழுதிய  சினேந்திர மாலை என்னும் பத்தாம் நூற்றாண்டில் காஞ்சி பகுதியில் எழுதப்பட்ட நூலாகும். இதை தொடர்ந்து வெளியான 10 அல்லது 14 ஆம் நூற்றாண்டின் பன்னிரு பாட்டியல் என்ற நூலில்

“தோற்றிய சாதகஞ் சாற்றுங் காலைப்
பற்றிய கலியுகத் துற்ற யாண்டில்
திருத்திய  சகாத்தமும்  ஆண்டும் பொருந்திய
ஞாயிறம் பக்கமும்  மேய வாரமும்
இராசியும் மன்னுற மொழிதற் குரிய”

என்ற ஒரு பாடல் வரிகள் வருகின்றன. மகவு தோன்றிய பொழுது பன்னிரண்டு இரசிகளின் நிலைகள் குறிப்பதை இப் பாடல் சொல்லுகிறது. மேலும் சாதகம் என்ற சொல் சங்க இலக்கியத்தில் இல்லை என்றாலும், இங்கு அது இராசி பலனை கூறும் நூல் என்ற கருத்தில் வழங்கப்பட்டு இருப்பதை கவனிக்க. அதே போல சென்ற நூற்றாண்டில் (1918-19) முத்து வேங்கடசுப்பையர் என்பவரால் இயற்றப்பட்ட  பிரபந்த தீபிகை என்ற நூலும் 

“அலகுறு சகாப்த மாண்டு தேதியுடு வோரையுந் திங்களுஞ் சாதகன்
றிசை சித்ர மபகாரமுந் திரமான கிரகநிலை யறிந்துசொல் சாதகம்”    

என்று கிரக நிலையை அறிந்து சொல்லுவதை விசேடமாக கூறுகிறது. கி பி 1310இல் இலங்கையை ஆண்ட தம்பதெனியா மன்னன் மூன்றாம் பராக்கிரமபாகுவின் அரசகுருவான தேனுவரைப்பெருமாள் [அந்தணர்] எழுதிய “சரசோதி மாலை” வெண்பா வடிவிலான, இலங்கையின் முதல் தமிழ் சோதிட நூல் ஆகும். இது, சிங்கள அரசன் பராக்கிரமபாகுவின் வேண்டுகோளுக்கிணங்க தமிழில் இயற்றப்பட்டு, கி.பி 1278 இல் அரச சபையில் அரசன் முன்னிலையில் வெளியிடப்பட்டது என்பது வரலாற்றுப் பதிவாகும். இம்மன்னன் எதனால் குறித்த சோதிட நூலைத் தமிழில் இயற்றுமாறு வேண்டுகோள் விடுத்தான் என்பது சிந்தனைக்குரியது. ஆய்வுக்குரியது.

அக்காலத்தில் அப்பிரதேசத்தில் தமிழ் மொழி மக்களின் பயன்பாட்டுக்குரிய அறிவு மொழியாக இருந்து இருக்கலாம் என நாம் ஊகிக்கலாம். இந்த நூல் பின்னர் சிங்கள மொழியில் மொழிபெயர்க்கப் பட்டும் உள்ளது. அத்துடன் நாடாண்ட அரசனும், அரச சபையிலிருந்த மந்திரி பிரதானிகளும் தமிழ்ப் புலமை கொண்டவர்களாக இருந்தனர் என்பதற்குச் சரசோதி மாலையின் தோற்றமும், அரங்கேற்றமும் மறைக்கவோ, மறுக்கவோ முடியாத தக்க சான்றுகளாகும். என நாம் கருதலாம்.

அது மட்டும் அல்ல, பராக்கிரம பாகு சோதிடத்தில் அதீத நம்பிக்கை கொண்டிருந்தான் என்பதையும்  இதன் மூலம் உணர முடிகின்றது. இந்நூலில் சோதிட கருமப் படலம் தொடக்கம் நட்சத்திரத் திசைப்படலம் ஈறாக 12 படலங்கள் உள்ளன. ‘சரசோதி மாலை’ கொக்குவில் சோதிடப் பிரகாசயந்திர சாலையில் மூன்று முறை முறையே 1892ல் முதலாம் பதிப்பும் 1909ல் இரண்டாம் பதிப்பும், 1925ல் மூன்றாம் பதிப்பும் இடம்பெற்றுள்ளது. இதனை மறுபதிப்பாக உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் 2014ல் பதிவு செய்துள்ளது. அதன் பின் யாழ்ப்பாண மன்னர்காலத்தில் (1380- 1414) எழுந்த மற்றொரு சோதிட நூல் செகராசசேகர மாலை ஆகும் சரசோதி மாலை திருமணப் பொருத்தம் பற்றி கூறும் பாடல்  கீழே தரப்பட்டுள்ளது.

“செப்பு நாள் கணங்கள் மாகேந்திர மொடு மங்கை தீர்க்கந்
தப்பிலா யோனி ராசி ராசியின் தலை தம்மோடு
ஒப்பிலா வசியம் நன்னூல் வரைதறு வேதை ஆக
மைபுயல் அளக மாதே மருவிய பொருத்தம் பத்தே”

இவற்றை தொடர்ந்து யாழ்பாண அராலியை சேர்ந்த இராமலிங்க முனிவரால் எழுதப்பட்ட சந்தான தீபிகை (கி.பி 1713) என்ற சோதிட நூல் இலங்கையில் வெளியானது. இது வடமொழி சந்தானதீபிகையின் தமிழ் மொழிப் பெயர்ப்பாகும். சந்தான விருத்தி தொடர்பாக சோதிட அம்சங்களை இது விளக்குகின்றது. இவ் ஆசிரியரே இலங்கையில் வாக்கிய பஞ்சங்கத்தை முதன் முதலில் கி.பி 1667ம் ஆண்டு அறிமுகம் செய்தவர் ஆகும். இதில் இருந்து நாம் அறிவது, இந்தியாவில் மட்டும் அல்ல, இலங்கையிலும் சோதிடம் மக்களின் வாழ்வில் ஒரு பிரிக்க முடியா ஒரு பகுதியாகவே, குறைந்தது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இருந்துள்ளது என்பதாகும். அது இன்னும் இருக்கிறது.

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

————————————————————————————————————–

பகுதி: 05 

மேலைநாட்டு சோதிடத்தை கவனத்தில் கொண்டால், அங்கு அவர்களின் சோதிடம் தனித் தன்மை உடையதாக காணப்படுவதுடன் வேத அல்லது இந்தியா சோதிடத்தில் இருந்து சில அடிப்படை கொள்கையிலேயே வேறுபடுவதை காண்கிறோம். அதேபோல, சீனா சோதிடமும் ஒரு தனி முறையாகவே இன்றும் இருந்து வருகிறது. இவ்வாறாக ஒவ்வொரு நாட்டை சேர்ந்தவர்களும் தமது அறிவுக்கு எட்டியவாறு பண்டைய காலத்தில் கிரகங்களையும், நட்சத்திரங்களையும் ஆராய்ந்து, தங்களுக்கென்று ஒரு தனித்துவமான முறையை வகுத்து பின்பற்றி வருகின்றனர். பொதுவாக எல்லோரும் ஆகாய மண்டலத்தை 12 வீடுகளாக அல்லது ராசிகளாக பிரித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. என்றாலும் வேத சோதிடத்தில் பன்னிரண்டு வீடுகளும் ஒரே அளவு, மேலை நாட்டு சோதிடத்தில் அவ்வாற்றின் அளவுகள் ஒன்றுக்கொன்று வேறுபடுகின்றன [In Vedic astrology, each house is assigned an equal 30°, in Western astrology, they may not all be given an equal number of degrees.].

முதலில் இந்தியா சோதிடம் மறு பிறப்பையும் மற்றும் சென்ற பிறவியின் பாவ புண்ணியங்களையும் [past karma and theory of incarnation], தெய்வ நம்பிக்கையையும், அதனால் பரிகாரத்திற்கான வழிகளையும் உள்ளடக்கி உள்ளது, ஆனால் மேல் நாட்டு சோதிடம் இவைகளை உள்ளடக்காததால்,  இவைகளுக்கு அப்பால் உள்ளது. இந்தியா சோதிடம் பண்டைய காலத்தில் பழக்கத்தில் இருந்த சூரியன், சந்திரன் மற்றும் ஐந்து நியம கிரகங்களுடன்,  இரு கற்பனை கிரகங்களையும் கொண்டுள்ளது. ஆனால் மேல் நாட்டு சோதிடம் கற்பனை கிரகங்களை தவிர்த்து, இன்று நவீன உலகில் கண்டுபிடிக்கப் பட்ட மூன்று நியம கிரகங்களான,   யுரேனஸ்,  நெப்டியூன், புளூட்டோ [Uranus, Neptune, Pluto] போன்றவையை  சேர்த்துள்ளன.

இந்தியா சோதிடம் நிராயனா [The Nirayana, or sidereal zodiac or Fixed Zodiac] முறையாகும். அதாவது இது ஒரு நிலையான நட்சத்திரத்தை அதன் ஆரம்ப மற்றும் முடிவு புள்ளியாக ஏற்று சூரிய சுழற்சியை கணிக்கிறது (Spica or Chitra, brightest star in Aries constellation). மேலை நாட்டு சோதிடம் சாயன [the Sayana or tropical zodiac or Movable Zodiac] முறை, இளவேனிற் கால சம இரவு – பகல் நாளை [Vernal Equinox ஐ] அதன் ஆரம்ப மற்றும் முடிவு புள்ளியாக ஏற்று சூரிய சுழற்சியை கணிக்கிறது [Western Astrology relies on what is known as the Tropical Zodiac (Sayana chakra), which uses the Vernal Equinox as the point of reference. The Indian system – Jyotish – uses the Sidereal Zodiac (Nirayana chakra), which adopts a fixed star as the point of reference] சூரியனின் வடசெலவின் பொழுது [உத்ராயணம்], வான பூமத்திய ரேகையை [celestial equator] கடக்கும் பொழுது சம இரவும் பகலும் [equinox] அந்த கணத்தில் / நாளில்  உண்டாகும். அந்த நாளை Spring equinox or Vernal equinox என அழைப்பர். [vernal equinox, the place of the sun on the first day of spring]. 

இது இளவேனிற் காலத்தில் நடைபெறுகிறது. சூரியனை மையமாக வைத்து நீள் வட்டப் பாதையில் சுற்றிக் கொண்டிருக்கும் கோள்களின் பாதையையே [tropical zodiac] என்கிறோம். இந்த சுற்றுப்பாதை நிலையானதாக இல்லை. ஒவ்வொரு ஆண்டும் கோள்களின் பாதை மண்டலம் ஒரு குறிப்பிட்ட அளவு சாய்ந்து கொண்டே இருக்கிறது. இந்த சாய்ந்த நிலையில் இருந்து தொடங்கி நிலையான இராசி மண்டலத்தை கடந்து கொண்டிருக்கிற கோள்களின் நிலைகளை சாயன கோள்களின் நிலைகள் என்கிறோம்.  இந்த நிலையே வானத்தில் ஒரு கோள் சென்று கொண்டிருக்கும் உண்மையான நிலையாகும். சாயன [Sayana] நிலைகளில் உள்ள கோள்களின் அடிப்படையிலேயே மேற்கத்திய சோதிடப்பலன்கள் (Western Astrology) கணிக்கப்படுகின்றன.

இந்த இரண்டு அமைப்புகளுக்கும், அதாவது, சாயன மற்றும் நிராயனா முறைகளுக்கும் இடையிலான முரண்பாட்டிற்கான காரணம், பூமியின் அச்சு சாய்ந்து இருப்பதால், அதன் சுழற்சியில் ஏற்படும் ஒரு தள்ளாட்டம் ஆகும் [wobble in the rotation of the earth on its axis]. புவி தனது அச்சில் தன்னைத்தானே இடஞ்சுழியாக சுற்றும் அதே நேரத்தில், புவி ஒரு வருட காலப்பகுதியில் சூரியனைச் சுற்றி அதன் சுற்றுப்பாதையில் (ecliptic) நகர்கிறது. இருப்பினும், பூமியின் சுழற்சியின் அச்சு சூரியனைச் சுற்றியுள்ள இயக்க அச்சுடன் வரிசையாக இல்லை. அதற்குப் பதிலாக புவியின்  அச்சு அதன் சுற்றுப் பாதைக்கு  23.44  பாகை சற்றுச்  சாய்ந்துள்ளது. இது ஆங்கிலத்தில் Obliquity (சரிவு) என்று அழைக்கப்படுகிறது.

புவி மட்டுமன்று சூரியக் குடும்பத்தில் உள்ள அனைத்து கோள்களுமே தமது அச்சில் குறிப்பிட்ட அளவு சாய்ந்து உள்ளன. இதனால், ஒவ்வொரு ஆண்டும், இந்த இரண்டு அமைப்புகளின் வட்டப்பாதை தோராயமாக  00.00.50 விகலை அளவு (around 50 seconds of arc according to the most widely used reference point) விலகிக் கொண்டே  இருக்கிறது. அதாவது அச்சுச் சுழற்சியால், ஒவ்வொரு 72 ஆண்டும் ஒரு பாகையால் சாய்கிறது அல்லது விலகுகிறது [Due to precession they move about 1 degree every 72 years]. எனலாம். இந்த சாய்ந்த அச்சு ஒரு முழு சுழற்சி செய்ய 25,772 ஆண்டுகள் செல்கிறது [25,772 years for a complete cycle]. 

இதனால் இது நமது நிலையான இராசிமண்டலப் புள்ளியான மேசராசியில் இருந்து விலகிக் கொண்டே இருப்பதால் இதை சாயன நிலை என்கிறோம். ஆனால் ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன், அதிகமாக கி பி 272 அளவில், இவை இரண்டும் ஒன்றாக இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது [the coincidence of tropical & sayana zodiac was in or near 272AD] பின் விலகத் தொடங்கின. இந்திய சோதிடமுறை நிராயன மண்டலத்தில் கோள்களை நிறுத்தி பலன்கள் கூறுவதாகும். மேற்கத்தியமுறையில் சாயன மண்டலத்தில் கோள்களை நிறுத்தி பலன்கள் காணப்படுவதாகும். இரண்டாயிரம் ஆண்டு அளவில் அல்லது பண்டைய சோதிட ஆரம்பத்தில் இவைகளுக்கு இடையில் பெரிய வேறுபாடு இருக்கவில்லை, ஆனால் இன்று,  இவை   ஏறத்தாழ   23.57.00 பாகை சாய்ந்துள்ளது / விலகியுள்ளது [about 23 degrees, 57 minutes] குறிப்பிடத்தக்கது. 

ஜாதகத்தில் மொத்தம் நான்கே வகைதானாம் : இதில் நீங்கள் எந்த வகை என்று தெரிய  வேண்டுமா? – வவுனியா நெற்

உதாரணமாக, இன்று  மாலை 7.00 மணிக்கு சந்திரனின் சாயன நிலை  234.02.58 ஆகும் என வைப்போம். இதுவே வானத்தில் சந்திரன் சென்று கொண்டிருக்கிற தற்கால கோள் நிலையும் ஆகும். எனின் சந்திரனின் நிராயன நிலைக்கு, 23.57.00 அளவை கழித்தால், 210.05.58  ஆக வரும். எனவே. உதாரணமாக இந்தியா சோதிடத்திற்கு மேடமாக [மேஷம் – Aries] இருக்கும் இரசியானது, தற்போது மேல்நாட்டவருக்கு இடபமாக [ரிஷபம் – Taurus] இருக்கும். அதாவது பொதுவாக ஒரு இராசி வித்தியாசமாக இருக்கும். [So there is a one sign difference for western & Vedic astrologers, which is big & makes an enormous difference while making predictions.] 

நிராயன கணிதத்திற்காக கோள்களின் சாய்ந்த அளவான அயனாம்சத்தைக் [23.57.00] கழித்துக் காணும் கோள்கள் நிலையே நிராயன கோள்கள் நிலையாகும். [By subtracting ayanmsha [23.57.00] from planet position in tropical or western sayana chart we can get the position of planets in sidereal or Vedic Nirayana chart] இது மேடராசியின் 00.00.00 அளவில் மீண்டும் கோள்கள் நிலைகளைக் கொண்டு வருவதாகும். இந்திய சோதிடம் நாள் என்பதை ஒரு சூரிய உதயத்திலிருந்து மறு சூரிய உதயமுள்ள காலத்தை ஒரு நாள் என்கிறோம். ஆனால் மேலை நாட்டு சோதிடத்திற்கு நாள் என்பது நள்ளிரவு  12.00 மணியிலிருந்து தொடங்கி அடுத்த நாள் இரவு 12.00 மணிவரையில் உள்ள இடைப்பட்ட காலமேயாகும். இவ்வாறாக பல விதத்தில் நமது சோதிடத்திற்கும் அவர்கள் சோதிடத்திற்கும் நிறைய வித்தியாசம் உண்டு

சந்திர கிரகணம் அல்லது சூரிய கிரகணம் ஏற்படுவது ஒரு சாதாரண நிகழ்வு. ‘சூரியன், பூமி, சந்திரன்’ அல்லது ‘சூரியன், சந்திரன் பூமி’  மூன்றும் முறையே இந்த வரிசையில் ஒரு நேர்க் கோட்டில் வரும் பொழுது இவை ஏற்படுகின்றன. வானியல் பற்றிய அறிவு ஆரம்ப  கட்டத்தில் இருந்த பண்டைய காலத்தில் சந்திர-சூரிய கிரகணங்களைக் கண்டு மக்கள் அச்சம் அடைந்தார்கள். அதற்கு ஒரு விளக்கமாக அல்லது தீர்வாக சமய குருக்களால் இராகு கேது என்ற பாம்புகள் சந்திர-சூரியரைக் கவ்வுவதால் கிரகணம் ஏற்படுகிறது என்று ஒரு புராணக் கதையை ஏற்படுத்தினார்கள். ஆனால் இந்த மூட நம்பிக்கையை வேத சோதிடர்கள் இன்னும் கைவிடவில்லை என்பது தான் இன்னும் ஆச்சரியமாக இருக்கிறது.

ஆமாம் இராகுவும்  கேதுவும் கோள்களாக கருதப்பட்டு, அது மற்ற பண்டைய காலத்தில் அறியப்படட ஏழு கோள்களுடன் வரிசைப் படுத்தப் பட்டு, ஒருவரின் மேல் அவற்றின் தாக்கங்களை கூறுகிறார்கள். ஒரு கருத்துக்கு கோள்கள் தன் ஈர்ப்பு சக்தியால் ஒருவரின் வாழ்க்கையை நிர்ணயிக்கிறது என்று வைத்துக்கொண்டால், எப்படி கற்பனை அல்லது புராண கோள்கள் அதை செய்யும் ?, இது தான் எனக்குப் புரியவில்லை. 

மறைந்த சோதிடர் பி.வி. இராமன் ஒரு உலகப் புகழ் பெற்ற இந்திய சோதிடர். இவரிடம் தங்கள் சாதகத்தைக் காட்டிப் பலன் கேட்காத இந்திய – இலங்கை  ஆட்சித் தலைவர்கள், அரசியல்வாதிகள் இல்லை என்றே சொல்லலாம். இவர் 1989 ஆம் ஆண்டு ஆந்திர சட்டசபைக்கு நடந்த தேர்தலில் என்.ரி. இராமராவ் தலைமையிலான தெலுங்கு தேசம் வெற்றி பெற்று ஆட்சிக்கு வரும் என்று கணித்துச் சொன்னார். ஆனால், அவரது கணிப்பு முற்றாகப் பிழைத்து விட்டது.  

இந்திய காங்கிரஸ் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று ஆட்சிக் கட்டில் ஏறியது என்பதே உண்மை ([ndian Express Express  – 12-7-1989 ). இவ்வாறு மேலும் அவரின் சோதிட இதழில் (சனவரி 79,  யூலை 79,  நொவெம்பர் 79 மற்றும் சனவரி 80) சொல்லிய அரசியல் ஆரூடங்களும் பிழைத்துப் போயின என்பது வரலாறு (Ref: Science, Non – science and the Paranormal).

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

பகுதி: 06 

About editor 3121 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply