அமெரிக்க பிரதிநிதிகள் சபைத் தீர்மானம் இலங்கையின் காலைச் சுற்றியுள்ள பாம்பு!
நக்கீரன்
அரசன் அன்றறுப்பான் தெய்வம் நின்றறுக்கும் என்பது தமிழ்மொழியில் வழங்கும் பழமொழி. மன்னர் ஆட்சிக் காலத்தில் இறைமை மன்னர்களிடம் இருந்தது. அதனால் மன்னன் இறைவன் என அழைக்கப்பட்டான். குற்றம் செய்தவர்களை அவனே விசாரித்துத் தீர்ப்புக் கூறிவிடுவான். அமைச்சர்களது ஆலோசனைப்படி அவன் நடந்து கொள்ள வேண்டும் என்பது கட்டாயம் இல்லை. பாண்டியன் நெடுஞ்செழியன் தீர ஆராய்ந்து பார்க்காது தனது பட்டத்தரசியாரின் சிலம்பை கோவலன் திருடிவிட்டான் என்பதைக் கேட்டவுடனேயே கோவலனது தலையை வெட்டிவிட்டுச் சிலம்பைக் கொண்டுவருமாறு கட்டளை
இட்டான்.
நாங்கள் மக்களாட்சி முறைமையுள்ள காலத்தில் வாழ்கிறோம். நூறு குற்றவாளிகளைத் தப்பவிடலாம் ஆனால் ஒரு நிரபராதியை (தக்க சாட்சியங்கள்) இல்லாது தண்டிக்கக் கூடாது என்பது நீதித்துறையின் எழுதாத சட்டமாகும்.
வரலாற்றில் இனப்படுகொலை நடந்தேறியது இலங்கையில் மட்டுமின்றி ஏனைய நாடுகளிலும் நடந்துள்ளன. மனித உரிமைச் செயற்பாட்டாளர்களால் பேசப்பட்டு வந்த ஆர்மீனியன் படுகொலை ஓட்டமான் பேரரசு ஆர்மீனியர்கள் மீது மேற்கொண்ட கொலைகள் இனப்படுகொலைதான் என இப்போது நூறு ஆண்டுகள் கழித்து அமெரிக்கா அங்கீகரித்துள்ளது.
1915 ஆம் ஆண்டில் ஆர்மீனியர்கள் படுகொலை செய்யப்பட்டதை ஒரு இனப்படுகொலை என அமெரிக்க சனாதிபதி ஜோ பைடென் அறிவித்துள்ளார். நவீன கால துருக்கியின் உருவாக்கத்துக்குக் காரணமாக அமைந்த ஒட்டோமான் பேரரசு வீழ்ச்சியுற்ற கால கட்டத்தில் இந்த கொலைகள் இடம்பெற்றன. இந்த அட்டூழியங்களை துருக்கி ஒப்புக்கொண்ட போதும் “இனப்படுகொலை” என்ற வார்த்தையை நிராகரித்துள்ளது.
சிங்களத்துக்கு எதிரான போர் முடிவுக்கு வந்து 12 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் போரில் அநியாயமாகக் கொல்லப்பட்ட தமிழ்மக்களுக்கு நீதி கிடைக்கவில்லை, நியாயம் கிடைக்கவில்லை என்ற ஆதங்கம் தமிழர் தரப்பில் இருக்கிறது.
ஆனால் 73 ஆண்டுகள் என்பது வரலாற்றில் மிகச் சிறிய காலமாகும். ஐரிஷ் மக்களது விடுதலைப் போராட்டம் 120 ஆண்டுகள் நீடித்தது. எமது விடுதலைப் போராட்டமும் வெற்றிபெற மேலும் பல ஆண்டுகள் செல்லலாம். எனவே எமக்குப் பொறுமை வேண்டும். உலகம் நீதியின் அச்சில் சுழல்கிறது என்று நாம் கற்பனை செய்யக் கூடாது!
உலகில் ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை பெற நீண்ட காலம் போராட வேண்டியிருந்தது. முப்பது இலட்சம் திபெத்திய மக்கள் சீனாவின் இரும்புப் பிடிக்குள் வாழந்து வருகிறார்கள். தமிழ்மக்களைப் போலவே திபெத்தியர்கள் தனித்த இனம். அவர்களுக்கு என்று தனித்த மொழி, பண்பாடு, வரலாறு உண்டு. இருந்தும் 1950 இல் சீனாவின் மக்கள் விடுதலை இராணுவம் திபெத்தில் நுழைந்தது முதல் கிட்டத்தட்ட 1,200,000 திபெத்தியர்கள் கொல்லப்பட்டதாக திபெத்துக்கு வெளியே வாழும் திபெத்தியர்கள் தெரிவிக்கிறார்கள்.
திபெத்தியர்கள், குர்திஷ் மக்களோடு ஒப்பிடும் போது தமிழ்மக்களது தேசியச் சிக்கல் கடந்த 12 ஆண்டுகளாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் பேசுபொருளாக இருந்து வருகிறது. 2012 ஆம் ஆண்டு தொடக்கம் இலங்கைக்கு எதிராகப் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இவற்றில் 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 30-1 மற்றும் 2021 இல் நிறைவேற்றப்பட்ட 46-1 தீர்மானங்கள் மிகவும் முக்கியமானவை.
தமிழ்மக்கள் எதிர்நோக்குகிற தேசியச் சிக்கலுக்குத் தீர்வு காண வேண்டும் என்றால் அதனை இலங்கைக்கு வெளியேதான் காண வேண்டும். இதில் உலக நாடுகளின், குறிப்பாக அமெரிக்கா, இந்தியா போன்ற வல்லரசு நாடுகளின் ஆதரவு தேவை. அப்படியான நாடுகளின் உதவி, ஆதரவு இல்லாமல் எமது விடுதலைப் போராட்டம் எள்முனையும் நகர முடியாது.
இலங்கையில் இடம்பெற்ற போரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டமை தொடர்பில் பொறுப்புக்கூறலுக்காக சர்வதேச பொறிமுறை நிறுவப்பட வேண்டும். அத்துடன், இலங்கை இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்தி அமெரிக்க பிரதிநிதிகள் சபை ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. இது நல்ல திருப்பமாகும்.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 12 வது ஆண்டு நிறைவை ஒட்டி அமெரிக்கப் பிரதிநிதிகள் சபை உறுப்பினர் டெபோரா ரோஸ் இந்தத் தீர்மானத்தை சபையில் முன்வைத்தார்.
இலங்கை இராணுவம் முள்ளிவாய்க்காலில் தாக்குதல்களை நடத்தி பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொன்று 12 ஆண்டுகள் கடந்துவிட்டன. இவ்வாறான படுகொலைகள் இடம்பெற்று ஒரு தசாப்தம் கடந்துவிட்டபோதும் குற்றவாளிகளைப் பொறுப்புக் கூறச் செய்ய இலங்கை அரசு தவறிவிட்டது. அத்துடன், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் வழங்கிய வாக்குறுதிகளையும் இலங்கை நிறைவேற்றவில்லை.
போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு பரிகாரம் செய்யவோ, அவை குறித்து விசாரிக்கவோ, வழக்குத் தொடரவோ தவறி வருவதன் மூலம் இலங்கையில் தண்டனை விலக்குக் கலாச்சாரம் நிலவுகிறது எனவும் அந்தத் தீர்மானம் குறிப்பிடுகிறது.
உள்நாட்டு பொறுப்புக்கூறல் பொறிமுறை மூலம் பாதிக்கப் பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படும் என்று இலங்கை அரசு தொடர்ந்து கூறி வருகிறது. எனினும் அது செயற்படுத்தப்படவில்லை.
இலங்கையின் தமிழ் மக்கள் பல்லாயிரக்கணக்கில் கொல்லப்பட்டனர். பெருமளவானோர் காணாமல் போகச் செய்யப்பட்டனர். போரின்போது முறைகேடுகள் இடம்பெற்றன.
பல ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர நிர்ப்பந்திக்கப்பட்டனர் என்பதையும் தீர்மானம் வலியுறுத்தியுள்ளது. போரால் பாதிக்கப்பட்ட இலங்கையில் பாரம்பரிய தமிழர் தாயக பகுதிகளில் இரண்டு பொதுமக்களுக்கு ஒரு படைச் சிப்பாய் என களமிறக்கப்பட்டு அப்பகுதி இராணுவமயமாக்கப்பட்டுள்ளது எனவும் தீர்மானம் குறிப்பிடுகிறது.
மேலும், நிரந்தர அரசியல் தீர்வுக்காக வடக்கு, கிழக்கு மாகாண மக்களின் கருத்தறிய ஐ.நா. பொது வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என அழைப்பு விடுத்து வடக்கு மாகாண சபை தீர்மானம் நிறைவேற்றிய தீர்மானத்தைச் சுட்டிக்காட்டுகிறது.
அமெரிக்க பிரதிநிதிகள் சபை தீர்மானத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது.
(1) இலங்கையில் போர் முடிவடைந்த 12 -ஆவது ஆண்டு நிறைவில் மோதலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அமெரிக்க பிரதிநிதிகள் சபை ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறது.
(2) இறந்தவர்களை நினைவுகூர்ந்து மதிப்பளிப்பதுடன், நல்லிணக்கம், அபிவிருத்தி, இழப்பீடு மற்றும் மீள்கட்டுமானத்துக்காக ஏங்கும் இலங்கையில் உள்ள அனைத்து சமூக மக்களுடனும் ஆதரவாக நிற்பதை அமெரிக்கா பிரதிநிதிகள் சபை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
(3) மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஆதாரங்களைச் சேகரிப்பதற்கும் பாதுகாப்பதற்கும் முன்னுரிமை அளித்ததற்காக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையை சபை பாராட்டுகிறது. இந்த விடயத்தில் இலங்கை அரசாங்கம் தலையிடக் கூடாது என வலியுறுத்துகிறது.
(4) காணாமல் போகச் செய்யப்பட்ட தமிழ் குடும்பங்கள் உட்பட, இலங்கையில் உள்ள அனைத்து சமூகங்களிலும் நீதிக்காக பாடுபடும் சட்டத்தரணிகளில் துணிச்சலையும் அர்ப்பணிப்பையும் சபை அங்கீகரிக்கிறது. காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் உள்ளிட்ட போராடும் தரப்பினர் சில சமயங்களில் அரசாங்க பாதுகாப்புப் படையினரால் அச்சுறுத்தப்படுவதுடன், துன்புறுத்தல்களையும் எதிர்கொள்வதையும் சபை சுட்டிக்காட்டுகிறது.
(5) இலங்கையின் வரலாற்று ரீதியாக ஒடுக்கப்பட்டுவரும் வடக்கு, கிழக்கு பிராந்தியத்தின் அரசியல் உரிமைகள் மற்றும் பிரதிநிதித்துவத்தை ஏற்று, பாதுகாக்க முன்வருமாறு சர்வதேச சமூகத்தை சபை வலியுறுத்துகிறது. அத்துடன் இன மோதலுக்கு வழிவகுத்த அடிப்படை பிரச்சினைகளுக்குத் தீர்வு காண ஒரு நிரந்தர அரசியல் தீர்வை நோக்கி முன்னேற சபை அழைப்பு விடுக்கிறது.
(6) ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை உயர் ஸ்தானிகரின் பரிந்துரைகளுக்கு இணங்க விசாரணைகள் மற்றும் வழக்குகளை முன்னெடுக்க அமெரிக்கா பரிந்துரைக்கிறது.
(7) இலங்கையில் போரின்போது நடந்த கடுமையான குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறலுக்கான நம்பகமான மற்றும் பயனுள்ள சர்வதேச பொறிமுறையை நிறுவ ஐக்கிய நாடுகள் பொதுச் சபை, ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை மற்றும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கவுன்சில் ஆகியவற்றுடன் இணைந்து பணியாற்றுமாறு அமெரிக்காவை வலியுறுத்துகிறது.
அத்துடன், மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் அதற்குப் பொறுப்புக்கூற வேண்டும். எனினும் இலங்கை அரசாங்கம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கத் தடையாக உள்ளதாக அமெரிக்க பிரதிநிதிகள் சபை உறுப்பினர் டெபோரா ரோஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கத்தை பொறுப்புக்கூற செய்யும் முயற்சியாக சர்வதேச பொறிமுறையை நிறுவுவதற்கான சர்வதேச சமூகத்தின் முயற்சிகளை டெபோரா ரோஸ் பாராட்டினார்.
மேலும் போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு நீதி வழங்கவும் பொறுப்புக்கூறலை உறுதி செய்யவும் இன்னும் தாமதமின்றிச் செயற்படுமாறு இராசபக்ச அரசாங்கத்தை ஊக்குவிக்கிறேன் என தீர்மானத்திற்கு இணைத் தலைமை தாங்கிய ஜோன்சன் கூறியுள்ளார்.
இந்தத் தீர்மானம் 2021 மே 18ஆம் திகதி வெளிநாட்டு விவகாரங்கள் தொடர்பான சபைக் குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேற்கண்ட தீர்மானத்தின் பந்தி 3, 6 மற்றும் 7 கூர்ந்து கவனிக்கத்தக்கது. இந்தப் பந்திகள் சட்ட பூர்வமான அதிகாரங்களைக் கொண்ட ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் தலையீட்டைக் கேட்கிறது. இந்த ஆண்டு செப்தெம்பரில் நடைபெறும் ஐநா மனித உரிமைகள் பேரவை அமர்வுகளுக்கான நிகழ்ச்சி நிரலில் இலங்கைச் சிக்கல் உள்ளது. எனவே, வரவிருக்கும் வாரங்கள் மற்றும் மாதங்களில் இலங்கை அரசாங்கம் பல சிக்கல்களைக் கொண்ட ஒரு ஆபத்தான நெருக்கடிக்கு முகம் கொடுக்க வேண்டிவரும்.
இதேவேளை, நாட்டின் வடகிழக்குப் பிராந்தியமான பாரம்பரிய தமிழர் தாயகம் பெரிதும் இராணுவமயமாக்கப்பட்டுள்ளதாகவும், மிகவும் பாதிக்கப்படக்கூடிய பிராந்தியங்களில் ஒவ்வொரு இரண்டு பொதுமக்களுக்கும் ஒரு சிப்பாய் என்ற வகையில் காணப்படுவதாகவும் அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் வடக்கும் – கிழக்கும் தமிழர்களுடைய பாரம்பரிய வாழ்விடம் என்பதைத் தீர்மானம் உறுதி செய்கிறது.
மேலும், ஆயுத மோதலின் போது செய்யப்பட்டதாகக் கூறப்படும் போர்க்குற்றங்களுக்கு, சர்வதேச விசாரணைக்கு அழைப்பு விடுக்கும் தீர்மானத்தை, இலங்கையின் வடக்கு மாகாண சபை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் 2021 மே 18, இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) உட்பட பல்வேறு ஆயுதமேந்திய தமிழ் சுதந்திர அமைப்புகளுக்கும் இடையிலான 26 ஆண்டுகால ஆயுத மோதலின் முடிவின் 12 ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.
முதல்முறையாக தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதமேந்திய தமிழ் சுதந்திர அமைப்புகளில் ஒன்று எனத் தீர்மானம் சொல்கிறது.
இதுகாலவரை தமிழீழ விடுதலைப் புலிகளை ஒரு பயங்கரவாத இயக்கம் எனக் கூறி அதனை 1959 ஆம் ஆண்டு தொடக்கம் தடைசெய்துள்ளது நினைவு கூரத்தக்கது. அமெரிக்காவின் இந்தப் புதிய பார்வை இலங்கையின் ஆட்சியாளர்களது வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது.
இந்தத் தீர்மானம் வரலாற்றில் இடம் பிடித்துள்ள மே 18 இல் நிறைவேற்றப்பட்டது தற்செயலாக நடந்த சம்பவம் என எடுத்துக் கொள்ள முடியாது.
வழக்கம் போல அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தை இலங்கை அரசாங்கத்தின் வெளியுறவு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் “அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் முன்வைக்கப்பட்ட தீர்மானம், தமிழீழ விடுதலைப் புலிகளின் அனுதாபிகளால் தாக்கம் செலுத்தப்பட்ட ஒன்றாகும்” என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. மே 18 இல் விடுதலைப் புலிகளைத் தோற்கடித்து அதன் தலைவரை சுட்டுக் கொன்றுவிட்டதாகச் சொல்லும் இலங்கை அரசாங்கம் “அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் முன்வைக்கப்பட்ட தீர்மானம், தமிழீழ விடுதலைப் புலிகளின் அனுதாபிகளால் செலுத்தப்பட்ட தாக்கம்” என்பது நகைப்புக்கு உரியது ஆகும்.
தீர்மானத்தின் நோக்கத்தில் கடுமையான சந்தேகங்களை எழுப்பும் வகையில், ஆதாரமற்ற, நிறுவப்படாத மற்றும் அப்பட்டமான பொய்களைக் கொண்ட குற்றச்சாட்டுக்களைக் கொண்டுள்ளதாக வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த முன்னாள் படைத் தளபதி கலகே வி.புலிகளைத் தோற்கடிக்க ஆயுதங்களும் இராணுவ புலனாய்வுத் தகவல்களையும் தந்துதவிய அமெரிக்கா இலங்கைக்கு எதிராகத் திரும்பியிருப்பது வியப்பாக இருக்கிறது என்றார். அமெரிக்கா வழங்கிய இராணுவ புலனாய்வுத் தகவலின் அடிப்படையிலேயே வி.புலிகளுக்குச் சொந்தமான நான்கு ஆயுதக் கப்பல்களையும் அதிலிருந்த பல மில்லியன் பெறுமதியான ஆயுதங்களையும் மூழ்கடிக்க முடிந்தது என்றும் சுட்டிக் காட்டினார்.
குறித்த தீர்மானமானது அமெரிக்கா உள்ளிட்ட 32 நாடுகளில் பயங்கரவாத அமைப்பாக தடைசெய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரிவினைவாத நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்துச் செல்வதற்காக, அமெரிக்கக் காங்கிரசில் உள்ள ஒத்த கருத்துடைய தமிழீழ விடுதலைப் புலிகளின் அனுதாபிகளாக அறியப்பட்டவர்களால் தாக்கம் செலுத்தப்பட்ட ஒரு நடவடிக்கையாகத் தென்படுகிறது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கம் அமெரிக்க பிரதிநிதிகள் சபை நிறைவேற்றியுள்ள தீர்மானத்தை புறந்தள்ளினாலும் அதன் தாக்கத்தில் இருந்து இலங்கை இலேசில் தப்ப முடியாது.
ஏற்கனவே இலங்கை அரசாங்கம் அமெரிக்காவோடு எம்.சி.சி (MCC (Millennium Challenge Corporation) உடன்பாடு தொடர்பாக முரண்பட்டுக் கொண்டிருப்பது தெரிந்ததே.
இலங்கை ஏற்கனவே கொரோனா தொற்று, பொருளாதார நெருக்கடி, வெளிநரட்டுக் கடன் போன்ற பல சிக்கல்களில் மாட்டுப்பட்டுள்ளது. இப்போது அமெரிக்காவின் கிடுக்குப் பிடியில் சிக்கவுள்ளது. அதனைத்தான் அமெரிக்க பிரதிநிதிகள் சபை நிறைவேற்றியுள்ள தீர்மானம் கட்டியம் கூறுகிறது! அது இலங்கையின் காலைச் சுற்றியுள்ள பாம்பு ஆகும்.
Leave a Reply
You must be logged in to post a comment.