கோட்டாபய ஆட்சிக்கு வந்தால் நாட்டில் தேனும் பாலும் ஓடும் என்ற மக்களின் எதிர்பார்ப்பு கனவாகி வருகிறது!

சனாதிபதி கோட்டாபய ஆட்சிக்கு வந்தால் நாட்டில் தேனும் பாலும் ஓடும்  என்ற மக்களின் எதிர்பார்ப்பு இன்று கனவாகி வருகிறது!

 நக்கீரன்

ஒரு நாடு எவ்வாறு அமைய வேண்டும் என்பதை வள்ளுவர் விளக்குகிறார்.

உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேராது இயல்வது நாடு.  (அதிகாரம்: நாடு குறள் எண்:734)

மிக்க பசியும், நீங்காத நோயும், நெருங்கி நிற்கும் பகையும் தன்னிடம் இல்லாது நடப்பதே நாடாகும். ஒரு நாட்டில் இவை இவை இருக்கலாகாது எனக் கூறவரும் வள்ளுவர் பசி, நோய், பகை ஆகியன இருந்தால் அது நாடாகாது என எதிர்மறை இயல்புகளைப் பட்டியலிடுகிறார்.

இலங்கைத் தீவு இன்று பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியிருக்கிறது. ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது கொரோனா தொற்று நோய் கட்டுக்குள் இருந்தாலும் அந்த நோய் பொருள் உற்பத்தியை தாக்கியிருக்கிறது. மக்களின் அன்றாற வாழ்வை பாதித்திருக்கிறது. ஒரு காலத்தில் தேங்காய் எண்ணெய்யை ஏற்றுமதி செய்த நாடு இன்று அதனை இறக்குமதி செய்கிறது!

இலங்கைக்கு அந்நிய செலாவணியை தேடிக் கொடுக்கும் சுற்றுலாத்துறை பாதிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் வேலையில் இருக்கும் தொழிலாளர்கள் தொற்று நோய் காரணமாக சொந்த நாட்டுக்குத் திரும்பி வந்து விட்டார்கள். இதனால் அவர்கள் மாதந்தோறும் அனுப்பும் அந்நிய செலாவணி வற்றி விட்டது.

எல்லாவற்றுக்கும் மேலாக சர்வதேசங்களிடம் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் இலங்கை வேந்தன் இராவணன் போல் கலங்குகிறது. கடனை அடைக்க மேலும் கடன் வாங்குகிறது. கடன் சுமையால் இலங்கைத் தீவு இந்து மகாபெருங்கடலில் மூழ்கிற ஆபத்து அதிகரித்து வருகிறது.

ஒரு நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்கு  நான்கு அத்தியாவசிய கூறுகள் இருக்கின்றன. முதலீடு, உற்பத்தி, வாணிகம்,  மனிதவளம், பொருள் வளம் பொருளாதார வளர்ச்சிக்கு  உறுதுணையாகும். பொருளாதார வளர்ச்சிக்கும்  முதலீட்டுட்டுக்கும் நிறைய தொடர்புடையது. கருவிகள் மற்றும் இயந்திரங்கள் போன்ற உற்பத்தி சொத்துக்களில் முதலீடு செய்யும் போது  உற்பத்தித் திறன் அதிகரிக்கிறது. வாணிகம் செல்வத்தை  பெருக்குகிறது. 

இலங்கை குறைந்த நடுத்தர வருமானம் கொண்ட நாடு.  மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தனிமனித வருமானம்  அ.டொலர் 3,852  (2019) மட்டுமே. மொத்த மக்கள் தொகை 21.8 மில்லியன்.

இலங்கையுடனான ஆறு தசாப்தங்களுக்கும் மேலான தொடர்பை வைத்திருக்கும்  உலக வங்கி குழுமம் இலங்கை  வாணிகத்துறையில் இருக்கும் போட்டிக்கு ஈடுகொடுக்கவும், உள்ளடக்கம் மற்றும் நெகிழ்ச்சியான நாடாக  மாறுவதற்கும் தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது.

இலங்கையின் தடையற்ற சந்தைப் பொருளாதாரம் 2019 ஆம் ஆண்டில்  மொத்த உள்நாட்டு உற்பத்தி 84 பில்லியன் டொலராகவும், வாங்கும் திறன் சமநிலை (பிபிபி)  296.959 பில்லியன் டொலராகவும் இருந்தது. 2003 முதல் 2012 வரை நாடு 6.4 விழுக்காடு ஆண்டு வளர்ச்சியை அடைந்திருந்தது, இது அதன் அண்டை நாடுகளை விடவும் அதிகமானது. ஆனால் அதன் பின்னர்  மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைந்துள்ளது. 2020 ஆம் ஆண்டில் பொருளாதாரம் 3.6 விழுக்காடாகச்  சுருங்கியது.  சுருக்கத்துக்கான காரணம் கொரோனா தொற்று நோயின் பரவலாகும்.  இது மிக மோசமான வளர்ச்சி ஆகும்

கடந்த வாரம் நிதியமைச்சராக இருக்கும் பிரதமர் மகிந்த இராசபக்ச  தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரம் இப்போது  புத்துயிர் பெறுவதற்கான அறிகுறிகளைக் காட்டத் தொடங்கியுள்ளதாகவும்,  2021 ஆம் ஆண்டில் மக்கள் முன்னேற்றத்தைப்  பார்க்க முடியும் என  நம்பிக்கை தெரிவித்தார்.  2021 ஆம் ஆண்டில் இலங்கையின்  பொருளாதாரம் மீட்கப்படும் என்று உலக வங்கியும்  கூறியுள்ளது. ஆனால் பொருளாதார சமிக்கைகள் வேறு விதமாக இருக்கின்றன.


முன்னதாக, இலங்கையின் பொருளாதாரம் ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதலின் விளைவாக நிலைகுலைந்து போயிருந்தது. இப்போது   COVID-19 தொற்றுநோய் மக்களின் வழமையான வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுள்ளது. ஏப்ரில் 14 வரை 95,719 பேர் தொற்றுக்கு உள்ளாகினர். இதில் 92,151 பேர் குணமடைந்து விட்டார்கள். மொத்தம் 602 பேர் இறந்து விட்டார்கள்.

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 2021 ஆம் ஆண்டில் 3.4 விழுக்காடு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, முக்கியமாக வெளிநாட்டு முதலீடுகள், சுற்றுலா மற்றும் பிற பொருளாதார நடவடிக்கைகளை இயல்பு நிலைக்குத் திரும்பும் என்கிறார்கள்.  எவ்வாறாயினும், மெதுவான உலகளாவிய மீட்சி, தொடர்ச்சியான வர்த்தகக் கட்டுப்பாடுகள், பொருளாதார வடுக்கள் மற்றும் அதிக கடன் சுமை ஆகியவை தொடர்ந்து வளர்ச்சியை பாதிக்கக்கூடும்” என்றும் உலக வங்கி தெரிவித்துள்ளது.

“தொற்றுநோயால் முன் எப்போதும் இல்லாத  வகையில் பொருளாதார வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ள நாடு இப்போது மீட்புப் பாதையில் வந்துள்ளது”  என்று இலங்கை மேம்பாட்டு மேம்படுத்தல்  அறிக்கை குறிப்பிடுகிறது.

அதே நேரத்தில், தொற்றுநோய்க்கு மத்தியில் அதிகரித்த செலவுகள் மற்றும் குறைந்த வருவாய் ஆகியவை நிதி நிலைமையை  மோசமடைய செய்துவிட்டன.  பொது மற்றும் பொது உத்தரவாதக் கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 109.7 சதவீதமாக அதிகரித்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. பெப்ரவரி 2021 இல் வெளிநாட்டு நாணய இருப்புக்கள் கடந்த 11 ஆண்டுகளில் குறைந்த அளவிற்குக் குறைந்துவிட்டன, மேலும் நாணய மாற்று விழுக்காடு சனவரி முதல் 2021 மார்ச் 17 வரை 6.5 விழுக்காடு குறைந்துள்ளது. COVID-19 இல் இருந்து மீள்வதற்கும் பொருளாதாரத்தை ஆதரிப்பதற்கும் நிதி நிலைத்தன்மையை உறுதி செய்வதற்கும் இடையே சமநிலையை ஏற்படுத்துவது ஒரு முக்கிய சவாலாக உள்ளது.

இலங்கை வெளிநாட்டுக் கடன்களை அடைப்பதற்கு  பாரிய சிக்கல்களை எதிர்கொள்கிறது. இலங்கை, ஆடம்பர பொருட்கள் மற்றும் வாகனங்கள் மற்றும் சில உணவுப் பொருட்களை இறக்குமதி செய்யத்  தடை விதித்த போதிலும், வெளிநாட்டு இருப்பு பெப்ரவரி  மாதத்தில் 4.5 பில்லியன் டொலராக  இருந்தது.  

முன்னாள் சனாதிபதி மகிந்த இராசபக்ச ஆட்சியின்  கீழ் 2005 மற்றும் 2015 க்கு இடையில், இலங்கை சீனாவிலிருந்து பில்லியன்களை கடன் வாங்கியது, விலையுயர்ந்த உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக வாங்கிய கடன் மலையளவு குவிந்தது.

சீனாவிடம் இருந்து 1.4 பில்லியன் அ.டொலர்  கடனைத் திருப்பிக் கொடுக்க  முடியாது என்று கூறியதைத் தொடர்ந்து இலங்கை தனது மூலோபாய அம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 ஆண்டு குத்தகைக்கு 2017 ஆம் ஆண்டில் ஒரு சீன நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது தெரிந்ததே.

கடந்த மார்ச் மாதம்  இலங்கை சீனாவின் மக்கள் வங்கியிடம் இருந்து  1.5 பில்லியன் டொலர்களை (10 பில்லியன் யுவான்)  நாணய இடமாற்று மூலம் பெற்றுள்ளது.   இதனை இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. மேலும் அ.டொலர் 700 மில்லியனை கடனாகப் பெற சீனாவுடன் பேச்சு வார்த்தையில் இலங்கை ஈடுபட்டுள்ளது.   அ.டொலரின் பெறுமதி $ 1 = 6.5443 சீன யுவான் ஆகும்.

இலங்கை மத்திய வங்கி  கடந்த ஆண்டு யூலை 31 இல்  இந்திய இருப்பு வங்கியிடம்  (Indian Reserve Bank)  இருந்து அ.டொலர் 400 மில்லியனை நாணய இடமாற்று மூலம் பெற்றிருந்தது.  அதனை திருப்பிக் கொடுக்கும் 6 மாதக் கெடுவை இலங்கை தள்ளிப்போட நினைத்தது. ஆனால் அப்படித் தள்ளிப் போடுவதாக இருந்தால்  இலங்கை சர்வதேச நாணய நிதியத்தோடு (சர்வதேச நாணய நிதியம்) பேச்சு வார்த்தை நடத்தி  அதன் ஒப்புதலைப் பெற வேண்டும் என இந்தியா  சொல்லியது. இப்படிப் பேச்சுவார்த்தை நடத்தும் ஒழுங்கு தற்போது இலங்கைக்கு இல்லை. எனவே இலங்கை பெப்ரவரி 01 திகதி குறித்த இடமாற்று மூலம் பெற்ற தொகையை திருப்பிக் கொடுத்துவிட்டது.

இருந்தும் வெளிப்புறக் கடன்களைச் சந்திக்க நிதி வரத்து போதுமானதாக இருக்கவில்லை. பெப்ரவரியில் 2021  அந்நிய செலாவணி இருப்புக்கள் 11 ஆண்டுகளில் இல்லாத அளவிற்குக் குறைந்துவிட்டன,  வெளிநாட்டு நாணய பற்றாக்குறை காரணமாக நாணய  பரிமாற்ற விழுக்காடு சனவரி முதல் மார்ச் 17, 2021 வரை 6.5 விழுக்காடு குறைந்தது.

இன்று ஒரு அமெரிக்க டொலரின் இதன்படி நேற்று ஒரு டொலரின் விற்பனை விலை ரூபா 204.62 ஆகப் பதிவாகியுள்ளது. இதேவேளை, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி ரூபா 199.80 ஆகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன் கடந்த 12ஆம் திகதியன்று பதிவு செய்யப்பட்ட அறிக்கையின்படி டொலர் ஒன்றின் விற்பனை விலை 203.73 ஆகும்.The Panel Discussion on “Credit Ratings & Sri Lankan Economy” - USJ -  University of Sri Jayewardenepura, Sri Lanka

இலங்கை அரசு சீனா மேம்பாட்டு வங்கியுடன் (China Development Bank.) நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட 500 மில்லியன் டொலர் கடன் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்தக் கடன் இலங்கையின் அந்நிய செலாவணி இருப்பை அதிகரிக்கச் செய்யும்.

2014 முதல், இலங்கையின் வெளிநாட்டுக் கடன் அளவுகள் அதிகரித்து வருகிறது, 2019 இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 42.6 விழுக்காடு  எட்டியுள்ளன.  இலங்கையின் குறைந்தளவு  பொருளாதார வளர்ச்சி விழுக்காடு மற்றும் 2007 முதல் 2014 வரை பெறப்பட்ட முந்தைய வெளிநாட்டுக் கடன்களைத் திருப்பிச் செலுத்த சர்வதேச இறையாண்மை முறிகள் வழங்கியதன் விளைவாகும். 2015 – 2020 காலப்பகுதியில் சர்வதேச இறையாண்மை முறிகளை திருப்பிச் செலுத்துதல் ஏறக்குறைய 76.7 பில்லியனாக இருந்தது, இது தற்போதைய வெளிநாட்டு கடன் தொகையோடு (தோராயமாக 33 பில்லியன் அ.டொலர்) ஒப்பிடும் போது  20 விழுக்காடுக்கும் குறைவாகவே உள்ளது. 2025 ஆம் ஆண்டில்

 வெளிநாட்டுக் கடன் 50 பில்லியனாக அதிகரிக்கும் என நம்பப்படுகிறது!

கடனை அடைப்பதற்கு  மேலும் கடன் பெறுவதை  நீண்ட காலத்துக்கு தொடர முடியாது. ஏற்கனவே இலங்கையின் நிதி நிலைமை சரிந்த காரணத்தால் சர்வதேச நிதி நிறுவனங்களால் அதன்  கடன்  மதிப்பீடு குறைக்கப்பட்டுள்ளது. இதனால் சிறிலங்கா சர்வதேச மட்டத்தில் கடன் வாங்க நினைத்தால் வட்டி விழுக்காடு அதிகமாக இருக்கும்.

கொடுப்பனவு சமநிலையை சரிக்கட்ட இலங்கை இறக்குமதித் தடைகளை விதித்துள்ளது. இதனால் உழுந்து, பயறு, மஞ்சள், மிளகாய் வெங்காயம், உருளைக்கிழுங்கு, கடலை, சோயா பாம் எண்ணெய், கருவாடு,  சீனி போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை உச்சத்தை எட்டியுள்ளது. Daily Mirror - Mired by Multiple Loan Sharks

சந்தைக்கு தேவையான அளவு உற்பத்தி பொருட்கள் கிடைக்காமை, இந்த விலை அதிகரிப்பிற்கான காரணம் என அத்தியாவசிய உணவு பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.  வறிய மக்கள் விலை அதிகரிப்பால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.  விலைவாசி ஏற்றத்தைக் கண்டித்து ஆங்காங்கே மக்கள் ஆர்ப்பாட்டம் செய்து வருகிறார்கள். நுண்கடன் பெற்றவர்களில் சிலர் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

சனாதிபதி கோட்டாபய ஆட்சிக்கு வந்தால்  விலவாசி குறையும், வேலை வாய்ப்பு அதிகரிக்கும், ஊழல் ஒழிக்கப்படும் நாட்டில் தேனும் பாலும் ஓடும்  என்ற மக்களின் எதிர்பார்ப்பு இன்று கனவாகி வருகிறது!

About editor 3089 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply