சித்திரை முதல் நாள் சித்திரைப் புத்தாண்டு, தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு!
நக்கீரன்
சனவரி 1 (January 1) கிரிகோரியன் ஆண்டின் முதல் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 364 (நெட்டாண்டுகளில் 365) நாட்கள் உள்ளன.
ஐரோப்பாவில் கத்தோலிக்கத் திருச்சபையின் செல்வாக்கு நிறைந்த நடுக்காலப் பகுதியில், மேற்கு ஐரோப்பாவின் பெரும்பாலான நாடுகள் ஆண்டின் தொடக்க நாளாக டிசெம்பர் 25 (இயேசுவின் பிறப்பு), மார்ச் 1, மார்ச் 25 (இயேசு பிறப்பின் முன்னறிவிப்பு), அல்லது உயிர்ப்பு ஞாயிறு போன்ற முக்கிய கிறித்தவத் திருவிழா நாட்களைத் தேர்ந்தெடுத்தன. மரபுவழித் திருச்சபையைப் பின்பற்றிய கிழக்கு ஐரோப்பிய நாடுகள் செப்தெம்பர் முதல் நாளை ஆண்டின் தொடக்க நாளாகத் தேர்ந்தெடுத்தன.
இங்கிலாந்தில், சனவரி 1 புத்தாண்டு விழாவாகக் கொண்டாடப்பட்டது, ஆனால் 12 ஆம் நூற்றாண்டு முதல் 1752 வரை இங்கிலாந்தில் மார்ச் 25 ஆண்டுத் தொடக்கமாக இருந்தது.
இன்று கிறித்தவர்கள் மட்டுமல்ல முழு உலகத்தினரும் சாதி சமய வேறுபாடின்றி சனவரி 01 புத்தாண்டாகக் கொண்டாடுகிறார்கள்.
பல இனத்தவர் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுப் பிறப்பைக் கொண்டாடு கிறார்கள். யப்பானியர்கள் தங்கள் புத்தாண்டை சனவரி 14 இல்தான் கொண்டாடி வந்தார்கள். இப்பவும் கொண்டாடுகிறார்கள் ஆனால் இன்று சனவரி 01 முக்கிய இடத்தைப் பிடித்துவிட்டது.
தமிழர்கள் 3 புத்தாண்டைக் கொண்டாடுகிறார்கள். சனவரி 01, சனவரி 14 (தை 01) மற்றது ஏப்ரில் 14 (சித்திரை 01) புத்தாண்டாகக் கொண்டாடுகிறார்கள்.
இராசிச் சக்கரம்
தமிழர்கள் சனவரி முதல்நாள் கிறித்தவர்களின் புத்தாண்டாக இருந்தாலும் அதனையும் கொண்டாடுகின்றனர். வருமானம் வருவதால் இந்துக் கோயில்கள் சனவரி முதல் நாள் நள்ளிரவில் நடை திறக்கிறார்கள்.
சித்திரை முதல் நாளைப் புத்தாண்டாகக் கொண்டாடுவதற்குக் காரணம் அன்றுதான் தலை இராசியான மேட இராசி, அசுவனி அல்லது பரணி நட்சத்திரம் முதல்பாகத்தில் உதிக்கிறது. இந்த ஆண்டு பரணி நட்சத்திரத்தில் பிறக்கிறது.
தமிழர்களது காலக்கணிப்பு முறையின்படி ஒரு ஆண்டுக்குரிய பன்னிரெண்டு மாதங்களில் சித்திரை முதலாவது மாதமாகக் இன்று கருதப்படுகிறது.
தமிழ் மாதங்கள் சூரிய மாதங்கள் எனப்படுகின்றன. காரணம் இம் மாதங்கள் பூமிக்குச் சார்பாகத் தோற்றுகின்ற சூரியனுடைய இயக்கத்தை அடிப்படையாக வைத்தே கணிக்கப்படுகின்றன. புவி ஞாயிறை ஒரு முறை சுற்றிவர 365 நாட்கள், 6 மணி, 11 நிமிடம், 48 நொடிகள் எடுக்கிறது.
இராசிச் சக்கரத்தில் மேட இராசிக்குள் சூரியன் நுழைவதிலிருந்து அந்த இராசியை விட்டு வெளியேறும் வரையில் உள்ள காலம் சித்திரை மாதமாகும். சூரியன் மேட இராசிக்குள் நுழைவது சித்திரை மாதப் பிறப்பு எனப்படும். சித்திரை முதல் மாதம் என்பதால் இதுவே புதிய ஆண்டின் தொடக்கமும் இளவேனில் காலம் தொடக்கமும் ஆகும்.
சூரியனைச் சுற்றிவரும் பூமி, சூரியன் மற்றும் சந்திரன் இரண்டின் ஈர்ப்புவிசை காரணமாக தளம்பல் ஏற்பட்டு அதன் சுற்றுப் பாதையில் ஓர் ஆண்டில் 50.51 ஆர்க் நொடிகள் பின்னோக்கி நகர்கிறது. மொத்தம் 72 ஆண்டுகளில் 1 பாகை பின்னால் சென்று விடுகிறது. இதனால் இன்று இளவேனில் காலம் புவியின் பின்னோக்கல் காரணமாக மார்ச் 21 இல் தொடங்கிவிடுகிறது. வானியலாளர்களின் கணிப்பின்படி சூரியன் ஏப்ரில் 19 அன்றுதான் மேட இராசிக்குள் நுழைகிறது.
மங்கலரகமான பிலவ புத்தாண்டு, 13.4.21 அன்று நள்ளிரவுக்குப் பிறகு (14.4.21 அதிகாலை) 1:32 மணிக்குப் பிறக்கிறது. இதேவேளை திருக்கணித பஞ்சாங்கத்தின் படி அதிகாலை 2 மணி 31 நிமிடத்தில் பிலவ ஆண்டு பிறக்க இருக்கிறது.
சித்திரை முதல்நாளை சிங்கள மக்களும் புத்தாண்டாகக் கொண்டாடு கிறார்கள். காரணம் அவர்களது முன்னோர்களான நாகர்கள் வைதீக (இந்து) மதத்தினராக இருந்தவர்கள். மூத்த சிவனின் மகனான தேவநம்பியதீசன் (கிமு. 307 – கிமு 267 ) பவுத்த மதத்தைத் தழுவிக் கொண்ட முதல் அரசனாவான். ஆனால் இந்துக்களின் காலக் கணிப்பே தொடர்ந்து இலங்கையில் கடைப்பிடிக்கப்பட்டு வந்திருக்கிறது.
இந்து சமய தமிழர்களைப் போலவே பவுத்த சமய சிங்களவர்களும் சித்திரைப் புத்தாண்டன்று அதிகாலையில் மருத்துநீர் வைத்து நீராடி, புத்தாடை அணிந்து பவுத்த விகாரைக்குச் சென்று வழிபடுவர். மாலை வேளையில் உறவினர் வீடுகளுக்குச் செல்வதும், பலகாரங்களை பகிர்ந்துண்பதும் வழக்கத்தில் இருக்கிறது.
தொடங்குகிறது.
சித்திரை தமிழரின் மரபார்ந்த புத்தாண்டு அல்ல என்ற மாற்றுக் கருத்து தமிழ்நாட்டில் 1970, 80 களில் தோன்றியது. இக்கருத்து வலுப்பெற முக்கிய காரணம், இன்றுள்ள 60 ஆண்டு வட்டத்தில் காலத்தை சரியாகக் கணிக்க முடியவில்லை. அறுபது ஆண்டுகள் முடிந்தவுடன் மறுபடியும் முதல் ஆண்டில் இருந்து தொடங்க வேண்டும். தொடர்ச்சி இல்லை. இந்த ஆண்டுப் பெயர்கள் சாலிவாகனன் என்பவனால் அல்லது கனிஷ்ஷனால் கி.பி 78 இல் ஏற்பட்டவை. இவை வடநாட்டு அரசனால் ஏற்பட்டதனால் அவற்றின் பெயர்கள் வட மொழிப் பெயர்களாய் உள்ளன.
இந்த 60 ஆண்டுகளது பெயர்கள் தமிழில் இருக்கவில்லை. எனவே காலத்தைக் கணிக்க ஒரு தொடர் ஆண்டு தேவைப்பட்டது. 1921 ஆம் ஆண்டு பச்சையப்பன் கல்லூரியில் மறைமலை அடிகளாரின் தலைமையில் கூடிய அறிஞர் குழு ஆய்வு செய்து,
1. திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டைப் பின்பற்றுவது.
2. தை முதல்நாளே திருவள்ளுவர் ஆண்டின் தொடக்கம். அதையே தமிழ் ஆண்டு எனக் கொள்வது.
3. திருவள்ளுவர் காலம் கி.மு. 31 (வழக்கில் உள்ள ஆங்கில ஆண்டுடன் 31 யைக் கூட்டினால்) திருவள்ளுவர் ஆண்டு.
எனத் தீர்மானிக்கப்பட்டது. தமிழக அரசு அதற்கான அரசாணையை 2008 இல் பிறப்பித்தது. இப்போது நடக்கும் ஆண்டு திருவள்ளுவர் ஆண்டு 2052 ஆகும்.
ஆனால் 2011 இல் பதவிக்கு வந்த ஜெயலலிதா தலைமையிலன அதிமுக அரசு முன்னைய அரசாணையை அகற்றி சித்திரை முதல்நாளே புத்தாண்டின் தொடக்கம் எனச் சட்டம் இயற்றியது. இதனால் தமிழர்கள் இரண்டு புத்தாண்டுகளை – சித்திரைப் புத்தாண்டு, தைத் தமிழ்ப் புத்தாண்டு – கொண்டாடிவருகிறார்கள்.
தமிழ்நாட்டில் சட்டசபைக்கு நடந்து முடிந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்றால் தை முதல் நாளைத் தமிழ்த் தேசியத் திருநாள் என அறிவிப்போம் எனச் சொல்லியுள்ளது.
சித்திரைப் புத்தாண்டுக்கு வானியல் அடிப்படை இருப்பது போல திருவள்ளுவர் ஆண்டுக்கும் வானியல் அடிப்படை இருக்கிறது. சித்திரை 01 சூரியன் மேட இராசிக்குள் நுழைவது போல தை முதல் நாள் (சனவரி 14) சூரியன் தனது தென்திசைப் பயணத்தை முடித்துக் கொண்டு வடதிசைப் பயணத்தை மகர இராசியில் தொடங்குகிறது. வட மொழியில் அதனை மகர சங்கராந்தி என அழைப்பர்.
புவியில் உள்ள ஒரு இடத்தை சுட்டிக் காட்டுவதற்கு மூன்று கோடுகளை வானியலாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். முதல் கோடு புவியை வடக்குத் தெற்கென இரண்டாகப் பிரிக்கும் நடுக்கோடு (equator) ஆகும். இரண்டாவது கோடு நெடுவரை அல்லது நெடுக்கோடு (meridian or line of longitude). இது புவியின் பரப்பில் கற்பனையான பெருவட்டத்தில் பாதியாகும். இவற்றின் ஒருமுனை வட துருவத்திலும் மற்றொரு முனை தென் துருவத்திலும் முடிகின்றன. இவை ஒரே அளவிலான நெடுக்கோடுகள் அனைத்தையும் இணைக்கின்ற கோடாகும்.
மூன்றாவது கோடு குறுக்குக்கோடு (latitude) ஆகும். இந்த மூன்று கோடுகளை வைத்து உலகில் உள்ள ஓர் புள்ளியின் அமைவிடத்தைப் பெறலாம். ஒவ்வொரு நிரைகோடும் அனைத்து நிலநேர்க்கோட்டு வட்டங்களும் செங்குத்தானவை. எடுத்துக்காட்டாக இலங்கையின் அமைவிடம் நெடுக்கோடு 79.50 பாகை கிழக்கு, குறுக்குக்கோடு 6.54 பாகை வடக்கு ஆகும்.
சூரியனின் இயக்கத்தை அடைப்படையாகக் கொண்டு கணக்கிடும் முறையில் இரண்டு முக்கிய பிரிவுகள் உண்டு.
1. வெப்பமண்டல ஆண்டு
சூரியன் மேட இராசியில் நுழைந்து திரும்ப மேட இராசியில் வந்தடையும் காலம் வெப்பமண்டல (சாயன) ஆண்டு என்று அழைக்கப்படுகிறது (Tropical revolution of Earth around the sun). வெப்ப மண்டல ஆண்டு என்பது சராவரி 365 நாள், 5 மணி, 48 நாடி, 45 வினாடிகளைக் கொண்டதாகும். இது ஆண்டுக்கு ஆண்டு சிறிது வேறுபடலாம்.
2. நட்சத்திர மண்டல ஆண்டு
ஞாயிறு இயக்கம் தொடங்குவது மேட இராசியின் முதல் நட்சத்திரத்திரமான அஸ்வினியில் நுழையும் காலம். முடிவது மீனராசியின் கடைசி நட்சத்திரமான ரேவதி ஆகும். தொடக்கம் மற்றும் முடிவு ஆகிய இரண்டுக்கும் இடைப்பட்ட காலம் ஒருவருடம் ஆகும் (Sidereal revolution of Earth around the Sun). இதில் நட்சத்திர ஆண்டு என்பது ஞாயிறு என்பது சராசரியாக 365 நாள், 6 மணி, 9 நாடி, 9.5 வினாடிகளைக் கொண்டதாகும். இந்த முறையை இந்திய மாநிலங்கள் ஆன தமிழ் நாடு, பஞ்சாப், ஹரியானா, ஒரிசா மற்றும் மேற்கு வங்கம் பின்பற்றுகின்றன.
இந்தியாவில் வெளியாகும் திருக்கணித பஞ்சாங்கங்கள் எல்லாம் நாசா விண்வெளி நிறுவனம் வெளியிடும் Ephemeris கோப்புகளை வைத்துத்தான் காலத்தைக் கணிக்கின்றன. கிரகரணங்கள் பற்றிய தரவுகள் இந்தக் கோப்புகளில்தான் காணப்படுகின்றன. எத்தனை கோப்புகள் வைத்திருக்கிறார்கள்? கடந்த 9,000 ஆண்டுகளில் இராசிகள், நட்சந்திரங்கள் பற்றிய இருப்பு, ஓட்டம் பற்றிய தகவல்களை கணித்து வைத்திருக்கிறார்கள். அதாவது கிமு 5000 தொடக்கம் கிபி 3999 ஆண்டுவரை கணித்து வைத்திருக்கிறார்கள்!
வரலாற்றில் எகிப்தியர்கள்தான் ஞாயிற்றின் ஓட்டத்தை வைத்து முதன் முதலில் ஓர் ஆண்டில் 365 நாட்களைக் கொண்ட நாட்காட்டியை கிமு 4236 இல் கண்டு பிடித்தார்கள். அதனைப் பின்பற்றியே கிமு 44 இல் யூலியன் நாட்காட்டி ஒரு ஆண்டில் 365 1/4 நாட்கள் இருப்பதாகக் கணக்கிட்டது. கணக்கைச் சரிசெய்ய நாலாண்டுக்கு ஒருமுறை (Leap Year) ஒரு நாள் பெப்ரபரி மாதத்துக்குரிய நாட்களோடு கூட்டப்பட்டது.
ஆனால் உண்மையில் ஒரு ஆண்டு 365 நாட்கள், 5 மணித்தியாலங்கள், 48 மணித்துளிகள், 45.51 வினாடிகள் (365.242189) கொண்டது ஆகும். இதனால் ஒவ்வொரு ஆண்டும் யூலியன் ஆண்டு 10.8 வினாடிகள் நீண்டுவிட்டது. இந்த நேர வேறுபாட்டால் கிபி 1582 அளவில் 10 நாட்கள் (1582 – 325)/120 =10) அதிகமாகிவிட்டது. இந்த வேறுபாட்டை போப்பாண்டவர் கிறகோறி (Gregory) 4 ஒக்தோபர் 1582 க்குப் பின்னர் 15 ஒக்தோபர் 1582 எனக் குறைத்துவிட்டார். அதன் பின்னர் 400 ஆல் பிரிக்கக்கூடிய நூற்றாண்டுகளில் (1700, 1800, 1900) ஒரு நாள் கூட்டப்பட்டது. ஆனால் 2000 இல் கூட்டப்படவில்லை.
தொல்காப்பியர் ஒரு ஆண்டுக்கான ஆறு பெரும்பொழுதுகளைச் சொல்லும்போது ஆவணி மாதமாகிய கார்காலத்தையே தொடக்கமாகக் குறிப்பிடுகிறார். அதன்பிறகே கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் காலங்களை வரிசைப்படுத்துகிறார். மேலும் வைகறை, காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை. யாமம் என்பதே ஒரு நாளில் அடங்கிய ஆறு சிறுபொழுதாகும். ஒரு நாள் 60 நாளிகை கொண்டது என்று கணக்கிட்டனர். ஒரு நாளிகை 24 மணித்துளி ஆகும். இது 2500 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் கார்காலத் தொடக்கமாகிய ஆவணி மாதத்தையே ஆண்டின் முதல் மாதமாகக் கொண்டனர் என்பதை உணர்த்துகிறது.
சித்திரை முதல் நாளை புத்தாண்டு என்று கொண்டாடும் வழக்கம் பண்டைய காலத்தில் இருந்ததில்லை. இதனால் சித்திரையை ஆண்டின் முதல் மாதமாகக் கொள்ளும் வழக்கம் பிற்காலத்தில் ஏற்பட்டதாக இருக்க வேண்டும். எப்போது ஆண்டுத் தொடக்கம் சித்திரைக்கு மாறியது என்பதை அறுதியிட்டுக் கூற முடியாமல் இருக்கிறது. சிலப்பதிகாரத்தில் வரும் இந்திர விழா சித்திரை மாதம் முழுநிலா அன்று கொண்டாடப்பட்டது.
காலத்தை இவ்வளவு நுணுக்கமாகக் கணக்கிட்ட புலவர்கள், இலக்கண ஆசிரியர்கள், அறிஞர்கள் தமிழர்களுக்கென ஒரு பொதுவான தொடர் ஆண்டை வரையறை செய்யாது போயினர். அதனால் அரசர்கள் புலவர்கள் சான்றோர்கள் பிறப்பு ஆண்டு, மறைவு ஆண்டு இவற்றை ஒரு தொடர் ஆண்டோடு தொடர்பு படுத்தி வரலாற்றைப் பதிவு செய்ய முடியாமல் போய்விட்டது.
அரசர்கள் முடிசூடிக் கொண்ட ஆண்டை அடிப்படையாகக் கொண்டே அந்தந்த அரசர் 25 ஆண்டுகள், 50 ஆண்டுகள் ஆட்சி செய்தனர் எனக் குறிப்பிட்டார்கள். புலவர்களைப் பொறுத்தளவில், திருவள்ளுவர் உட்பட, பிறந்த இறந்த ஆண்டுபற்றிய எந்தக் குறிப்பும் இல்லை.
மேலே கூறியவாறு தமிழர் வரலாற்றில் காலக் குழப்பம் இருப்பதற்கு தொடர் ஆண்டு இல்லாதது முக்கிய காரணமாகும். இருக்கிற 60 ஆண்டுகளும் சுழற்சி முறையில் வருவது மேலும் குழப்பத்தை உருவாக்கவே உதவியது. இதனால் வரலாற்று நிகழ்ச்சிகளை 60 ஆண்டுகளுக்கு மேல் கணக்கிட முடியவில்லை. ஒருவர் பிரபவ ஆண்டில் பிறந்தார் என்றால் எந்தப் பிரபவ ஆண்டு என்பது தெரியாமல் இருந்தது. ஆண்டுகள் வரலாற்றைத் தொடர்ச்சியாகப் பதிவு செய்யப் பயன்பட வேண்டும். அவை குழப்பத்திற்கு இடமின்றி இருத்தல் வேண்டும்.
எனவே சித்திரைப் புத்தாண்டை கொண்டாடும் அதே வேளை தை முதல்நாளை தமிழ்ப் புத்தாண்டின் – திருவள்ளுவர் ஆண்டின் – தொடக்கம் எனக் கொண்டாடுவோம்!
———————————————————————————————————-
Leave a Reply
You must be logged in to post a comment.