ஏப்ரில் 6 இல் தமிழ் நாட்டில் ஆட்சி மாற்றம் நிச்சயம்!

ஏப்ரில்  6  இல் தமிழ் நாட்டில்  ஆட்சி மாற்றம் நிச்சயம்!

 நக்கீரன்

தமிழ்நாடு சட்ட சபைக்கான தேர்தல் களை கட்டியுள்ளது. அரசியல் கட்சித்  தலைவர்கள் தமிழ்நாட்டைச் சுற்றி அனல் தெறிக்கும் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார்கள். 

வழக்கம் போல் போட்டி இரண்டு திராவிடக் கட்சிகளுக்கும்  இடையேதான். அதாவது திமுக மற்றும் அதிமுக  கூட்டணிக்கு இடையேதான் போட்டி. இந்த இரண்டு சூரியன்களைச் சுற்றியே மற்றக் கட்சிகள் வலம் வருகின்றன. விதிவிலக்காக கமலகாசனின் மக்கள் நீதி மையம், சீமானின் நாம் தமிழர் இயக்கம் தனித்துப் போட்டியிடுகின்றன.

1967 ஆம் ஆண்டு அண்ணா தலைமையில் திமுக மாபெரும் கூட்டணி ஒன்றை அமைத்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றது. அதன் பின்னர் இந்த 54 ஆண்டு காலமாக திராவிடக் கட்சிகளே தமிழ்நாட்டை மாறி மாறி ஆண்டு வந்துள்ளன. இப்போது நடைபெறும் தேர்தலிலும் இந்த இரண்டு கட்சியில் ஒன்றுதான் ஆட்சி அமைக்கப் போகிறது என்பது நிச்சயம் எனலாம்.

முழு இந்தியாவிலும் 1967 முதல் ஒரு மாநிலத்தைத்   தொடர்ந்து ஒரு மாநிலக் கட்சியே ஆளும் மாநிலம் தமிழ்நாடு மட்டுமே! அதேபோல் தமிழ், ஆங்கிலம் என இருமொழிக் கொள்கையை கடைப்பிடிக்கும் மாநிலமும் தமிழ்நாடுதான். இந்தியாவல் 29 மாநிலங்களும் 9 யூனியன் பிரதேசங்களும் இருக்கின்றன.

1967 இல் பதவிக்கு வந்த திமுக அதன் பின்னர் 1972, 1989, 1996 மற்றும் 2006 இல் நடந்த தேர்தல்களில் வெற்றி பெற்றது. 1977, 1980, 1984,  1991, 2001, 2011 மற்றும் 2016 இல் அதிமுக வெற்றிபெற்றது. அதாவது திமுக 5 முறையும் அதிமுக 7 முறையும்  தேர்தலில் வென்று ஆட்சி அமைத்தன.

முதல்வர் வேட்பாளர்கள்

பல திமுக தலைவர்கள் மீது, குறிப்பாக கருணாநிதியின் மகள் கனிமொழி மீது 2010 இல் சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளால் கட்சியின் புகழ் சேதமடைந்தது. 2006 ஆம் ஆண்டு திமுக தேர்தல் மாநிலத்தில் ஒவ்வொரு வீட்டிற்கும் தொலைக்காட்சிப் பெட்டிகளை வழங்குவதாக வாக்குறுதி அளித்தது. 2011 சட்டமன்றத் தேர்தலின் போது ஊழல் குற்றச்சாட்டுக்கள் காரணமாக  திமுக 31 இடங்களில் மட்டுமே வென்றது.

இம்முறை கலைஞர் கருணாநிதி மற்றும் புரட்சித் தலைவி ஜெயலலிதா போன்ற ஆளுமை மிக்க தலைவர்கள் இல்லாத சூழ்நிலையில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இன்று திமுக சார்பில்   தளபதி மு.க. ஸ்டாலின், அதிமுக சார்பில்  எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் வேட்பாளர்களாக களம் இறங்கியுள்ளார்கள்.

தேர்தல் ஆணையம் கொடுத்த தகவலின் அடிப்படையில் தமிழ்நாட்டின் வாக்காளர் தொகை 62,823,749 ஆகும். சட்ட சபைக்கு மொத்தம்  234 உறுப்பினர்கள்  தெரிவு செய்யப்பட வேண்டும். சோழிங்கநல்லூர் தொகுதிதான் ஆகக் கூடுதலாக 694,845 வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாகும்.  பல தொகுதிகளில் வாக்காளர் தொகை சராசரி 350,000 – 450,000 ஆகும். இதில் பாதிப் பேர் பெண்கள் ஆவர்.

தமிழக சட்ட சபைக்கு இப்போது நடைபெறும் தேர்தல்  பதினாறாவது  தேர்தல் ஆகும். 2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா தலைமையில் தேர்தலில் வெற்றிபெற்று வந்த அதிமுக கட்சியின் பதவிக் காலம் எதிர்வரும் மே 24, 2021 இல் முடிவுக்கு வருகிறது.

தேர்தல் ஆணையம் பின்வரும் நிகழ்ச்சி நிரலைத் தயாரித்துள்ளது.

நிகழ்வுதேதி
வேட்பு மனு தாக்கல்12 மார்ச் 2021
வேட்பு மனு தாக்கல் செய்யும் கடைசி நாள்19 மார்ச்  2021
வேட்பு மனுக்களை  சரிபார்க்கும் நாள்20 மார்ச்  2021
வேட்பு மனுவைத் மீளப்பெறுவதற்கான கடைசி நாள்22 மார்ச் 2021
தேர்தல் நாள் (ஒரேமுறையில்)6 ஏப்ரில்  2021
வாக்குகள் எண்ணப்படும் நாள்2 மே 2021
தேர்தல் நிறைவடையும்  நாள்24 மே 2021
 • இப்போது தமிழ்நாடு பற்றிய சில தரவுகளைப் பார்ப்போம்.Jungle Maps: Map Of Kerala And Tamil Nadu
 • மாநில தலைநகரம்  –     சென்னை
  மாவட்டங்கள்  –      38
  நிலப்பரப்பு   –         130,058 ச.கிமீ  (இலங்கை – 65610 ச.கிமீ)
  மக்கள் தொகை  2021 (மதிப்பீடு)  – 78.8 மில்லியன் (7.88 கோடி)
  மாநில மொழிகள்  –          தமிழ் & ஆங்கிலம்
 • சராசரி கல்வியறிவு விழுக்காடு:  80.09 %
  மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி  – அமெரிக்க $ 207.79 பில்லியன் (2016–17)
  முக்கிய நகரங்கள்: சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி, சேலம் & திருநெல்வேலி. (மக்கள் தொகைப் படி)
  தமிழ்நாடு,  இந்தியாவின் மக்கள் தொகையில் (2020)   5.96
  %.
 • எல்லைகள்     – மேற்குப் பகுதியில் கேரளா, வடக்கே ஆந்திரா மற்றும் வடமேற்கில் கர்நாடகா.  
 • திமுக மற்றும் அதிமுக அணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு பின்வருமாற அமைந்துள்ளது. திமுக   கூட்டணி
கட்சிகள்தொகுதி
திமுக 173
தேசிய காங்கிரஸ் 25
கம்யூனிஸ்ட் (மாக்சிஸ்ட்) 6
கம்யூனிஸ்ட் (இந்திய) 6
விடுதலைச் சிறுத்தைகள் 6
மதிமுக 6
இந்திய முஸ்லிம் லீக்  3
தமிழ்நாடு வாழ்வுரிமைக் கட்சி1
ஏனையோர்8
மொத்தம்234

அதிமுக கூட்டணி

கட்சிகள்தொகுதி
அதிமுக179
பாமக23
பாரதிய ஜனதா20
தமிழ் மாநில காங்கிரஸ்6
ஏனையோர்6
மொத்தம்234

தமிழ்நாடு பெரியார் மற்றும் அண்ணா பிறந்த மண்.  பெரியார்  பகுத்தறிவு, சாதி ஒழிப்பு, சுயமரியாதை இயக்கம் என வாழ்நாள் முழுதும் தமிழ்நாட்டின் பட்டி தொட்டிகள் எல்லாம்  வலம் வந்து உழைத்தவர்.  இருந்தும் தரை மட்டத்தில், சாதி உணர்வுகள்  இருக்கவே செய்கின்றன.

“சாதிகள் இல்லையடி பாப்பா” என்பது பாடபுத்தகத்தில் பாப்பாக்களுக்கு மட்டுமானதாக ஆகிவிட்டது.  குறிப்பாக தேர்தல் அரசியலில் சாதிக்குத் தனித்த இடம் உண்டு. வேட்பாளர் தேர்வு மட்டுமின்றி அமைச்சர் பொறுப்பு ஒதுக்குவதுவரை சாதிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின், கமல், சீமான், தினகரன் இன்று வேட்புமனு தாக்கல் | edappadi palanisamy Nomination Petition today | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News ...
400

இதனால் தமிழ்நாட்டில் சாதி அரசியலே நடக்கிறது எனச் சொல்லலாம்.  சில கட்சிகள் சாதிப்  பெயரிலையே இயங்குகின்றன. எடுத்துக் காட்டாக பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) வன்னிய குலத்தினரது கட்சியாகும். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலித் குலத்தைச்  சார்பு படுத்தும் கட்சியாகும்.  ஒரு தொகுதியில் ஒரு வேட்பாளரை நிறுத்தும் போது அந்தத் தொகுதியில் எந்தச் சாதி பெரும்பான்மையாக இருக்கிறதோ அந்தச் சாதியைச் சேர்ந்த ஒருவரே அநேகமாக  கட்சி வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

குடிக் கணக்கெடுப்பில்  வன்னியர் 15.1 %, பறையர் 12 %,  கொங்கு வேளாளர் 6%, பள்ளர் 4.8%, செங்குந்தர் கைக்கோள முதலியார் 4.0 %  காணப்படுகின்றனர்.  இந்து நாடார் 3.5 % உள்ளார்கள்.

மேலும் கள்ளர் 2.5%, மறவர் 1.0%, அகம்படியார் 1.2 0%   ஆகிய  மூன்று சமூகத்தினரும்  முக்குலத்தோர் என அழைக்கப்படுகிறார்கள். ஆனால் முக்குலத்தோர் என்னும் பெயருக்கு  தமிழக அரசால் இன்னும்  ஒப்புதல் அளிக்கப்படவில்லை. முக்குலத்தோர் மற்றும் தேவர் என்ற சொற்கள் ஒத்த பொருளில் பயன்படுத்தப் படுகின்றன. மதுரை காமராஜ் பல்கலைக் கழகத்தின் ஆர். முத்துலட்சுமியின் கூற்றுப்படி, தேவர் என்பது “தெய்வீக இயல்புடையவர்கள்” என்றும் முக்குலத்தோர் என்றால் “மூன்று குலங்கள் ஒன்றிணைந்தன” என்றும் பொருள் ஆகும்.

எம்ஜிஆர் அதிமுக கட்சியைத்  தொடங்கியபோது திமுகவின் சாதி ஒழிப்பு சுயமரியாதை திருமணச் சட்டம் போன்ற சீர்திருத்த நடவடிக்கைகளில் பெரிய அளவில் ஈடுபாடில்லாத சமூகங்கள் எம்ஜிஆர் பின் அணி திரண்டன. குறிப்பாக முக்குலத்தோர் (பிரான்மலை கள்ளர், கொண்டைய கொட்ட மறவர்) கொங்கு வேளாள கவுண்டர் போன்றோர்களின் வாக்குகள் எம்ஜிஆருக்கு சாதகமாகின.

பார்ப்பன எதிர்ப்பில் தீவிரம் காட்டும் சமூகங்களான தஞ்சாவூர் கள்ளர், வட தமிழகத்திலுள்ள வன்னியர், முதலியார் போன்ற சமூகங்கள் திமுக ஆதரவில் நிலைத்து நின்றன. காங்கிரசு வாக்கு வங்கியாக இருந்த ஆதிதிராவிடர்களும் கணிசமாக எம்ஜிஆருக்கு ஆதரவளித்தனர். மதுரை வீரன் படத்தில் இருந்தே எம்ஜிஆர் மீது காதல் வயப்பட்டிருந்த அருந்ததியர்கள் அப்படியே அவரது பக்கம் சாய்ந்தனர்.

எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி  பழனிச்சாமி அமைச்சரவையில் முக்குலத்தோருக்கு அவர்களது குடித்தொகைக்கு மேலாக  முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வந்தது. 2016 சட்டசபை தேர்தலில் தேவர் சமூகத்தைச் சேர்ந்த 20 பேர் எம்எல்ஏக்களாகினர். ஆனால் இவர்களில் 9 பேருக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது. 19 எம்எல்ஏக்கள் கொண்ட  வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்களில்  5 பேர் மட்டுமே அமைச்சர்கள் ஆனார்கள்.

மேலும் 31 எம்எல்ஏக்களைக் கொண்ட தலித் சமூகத்தில் 3 பேருக்கும் 28 எம்எல்ஏக்களைக் கொண்ட கவுண்டர் சமூகத்துக்கு 5 பேரும் மட்டுமே அமைச்சர்கள். அத்துடன் ஜெயலலிதாவின் முதல்வர் பதவிக்கு சிக்கல் வந்தபோதெல்லாம் தேவர் சமூகத்தைச் சேர்ந்த ஓ. பன்னீர்செல்வம்தான் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தார்.

இப்போதுள்ள தமிழக முதலமைச்சர் எடப்பாடி அமைச்சரவையில் தேவர் சமூகத்தைச் சேர்ந்த 9 பேர், கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த 5 பேர், வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த 4 பேர் இடம்பெற்றுள்ளார்கள்.

எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும் பொன், பொருள், நிலபுலம், கல்வி போன்றவற்றில் முன்னேறிய  சமூகங்கள் தமிழ்நாட்டு அரசியலில் செல்வாக்குச் செலுத்துகின்றன என்பதுதான் யதார்த்தம். தமிழக தேர்தலில் சாதி வகிக்கும் பாத்திரத்தை உணர்த்தவே சமூகக் கண்ணோட்டத்தில் இந்தத் தரவுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

இம்முறை விஜயகாந்த் அவர்களின் தேமுதிக, அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறி டிடிவி  தினகரன் தலைமை தாங்கும் அமமுக  கட்சியோடு கூட்டணி வைத்து 60 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இது அதிமுக க்கு ஒரு பின்னடைவாகக் கணிக்கப்படுகிறது. நடிகர் கருணாஸ் தலைமையில் இயங்கும் முக்குலத்தோர் புலிப்படையும் வெளியேறியுள்ளது.  வெளியேறியதோடு  நிற்காமல் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

போட்டி கடுமையாக இருக்கும் பட்சத்தில் சின்னக் கட்சிகளின் வாக்குகள் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக மாற நிறைய வாய்ப்பு இருக்கிறது.

பாரதிய ஜனதா கட்சி அதிமுக கட்சியுடன்  கூட்டணி வைத்து 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது.  இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியோடு 5 தொகுதிகளில் நேரடிப் போட்டி போடுகிறது. மத்திய அரசு இம்முறை எப்படியும் தமிழ்நாட்டு சட்ட சபைத் தேர்தலில் கால் பதித்து விட வேண்டும் எனப் பாடுபடுகிறது.

இந்தித் திணிப்பு, சமஸ்கிருதத் திணிப்பு போன்றவற்றை திணிக்கும் பாஜக,  அதிமுகவுக்கு பலமா அல்லது பாரமா என்பதைத்  தேர்தல் முடிவுகள் வெளியாகும் போதுதான் தெரிய வரும்.

வழக்கம் போல் திமுக மற்றும் அதிமுக பல இலவசங்களை அள்ளி வீசியிருக்கின்றன.  தேர்தலில் பணம், வேட்டி, சேலை சமையல் பாத்திரங்கள் மற்றும் பரிசுப் பொருட்கள் தங்கு தடையின்றி வழங்கப் படுகின்றன.

காவல்துறையின் பறக்கும் படை வாகனங்களை மடக்கி சோதனை செய்கிறது. ரூபா 50,000 க்கு மேல் தக்க ஆவணம் இல்லாமல்  கொண்டு செல்லப்படும் பணம், தங்கம் குக்கர் போன்ற பரிசுப் பொருட்கள் கைப்பற்றப் படுகின்றது.   பறக்கும் படையினர் நடத்திய சோதனைகளில், இதுவரை, 109.45 கோடி ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பிடிபட்டுள்ளன. இதில் ரொக்கப் பணம் மட்டும் 43.67 கோடி ரூபாய் சிக்கியுள்ளது. இந்தியா ஏழைநாடு என்று யார் சொன்னது? 

பிடிபட்ட பணம் மற்றும் பொருட்களுக்கு தக்க சான்றுகளைக் காட்டி,  அவை நேர்மை யானவை என்று உறுதி செய்தால் பறிமுதல் அவை    மாவட்ட ஆட்சியர்களினால் திருப்பி வழங்கப்படும்.

இதை எழுதிக் கொண்டிருக்கும் போது ஒவ்வொரு கட்சியும் எத்தனை தொகுதிகளில் யார், யார் போட்டியிடுகிறார்கள் என்ற விபரம் வந்து கொண்டிருக்கின்றன. இம்முறை வாய்ப்பு மறுக்கப்பட்ட ஒரு அதிமுக எம்எல்ஏ டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்து அந்தக் கட்சியில் போட்டியிடுகிறார்.

தமிழ்த் தேசியம் பேசும்  சீமானின்  நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. அதே போல் நடிகர் கமலஹாசனின் மக்கள் நீதிமன்றம் நடிகர் சரத்குமார் அவர்களது அகில இந்திய சமத்துவக் கட்சியோடு கைகோர்த்து தேர்தல் களத்தில் இறங்கியுள்ளது. இந்தக் கட்சிகளது வாக்கு வங்கி 3 %  மேல் உயராது என்பதுதான் யதார்த்தம் ஆகும்.

தேர்தல் முடிவுகள் வெளிவர மே 2 வரை காத்திருக்க வேண்டும்.  கருத்துக் கணிப்புக்கள் திமுக அணி ஆட்சியைப் பிடிக்கும் எனக் கூறுகின்றன.

2021 தமிழ்நாடு தேர்தல் கருத்துக் கணிப்பு

திகதிஊடகம்திமுக+
அதிமுக+அமமுகமக்கள் நீதி மையம்நாம் தமிழர்ஏனை யோர்
18 -01-2021ABP News- CVoter112-130120-1301 – 30 – 41-30 – 4
18 -01-2021IANS 751522542
27-02-2021ABP News -CVoter154-16258-661 – 52-62-52 – 5
8-03-2021Times Now – CVoter168553553
8 -03- 2021Times of India15865
15 -03-2021ABP News- CVoter161-16953-611-52-63-7

மார்ச் 15 இல் ABP News- CVoter எடுத்த கருத்துக் கணிப்பின் படி திமுக கூட்டணி 43 %வாக்குகளும் அதிமுக கூட்டணி 30.6  %வாக்குகளும் கிடைக்கும் எனச் சொல்லப்படுகிறது.

இதே சமயம் அடுத்த முதல்வர் ஸ்டாலினா அல்லது எடப்பாடி எடப்பாடி பழனிச்சாமியா என்ற கேள்விக்கு 40 % ஸ்டானில் முதல்வராக வருவார் என்றும் 29.7 % எடப்பாடி பழனிச்சாமி வருவார் என்று கருத்துத் தெரிவித்துள்ளனர்.

வாக்காளார்களின் கரிசனை என்ன? தமிழ்நாட்டில் வேலையின்மையே முக்கிய சிக்கலாக   உள்ளது என்று 32.8% மக்கள் கருத்து தெரிவித்தனர். அதேபோல மின்சாரம் மற்றும் நீர்ச் சிக்கல்  இருப்பதாக 11.6% மக்களும் சட்ட ஒழுங்கில்  சிக்கல் இருப்பதாக 10.4% மக்களும் கருத்துத் தெரிவித்துள்ளனர். யாரும் ஊழல் ஒரு சிக்கல் என்று சொல்லவில்லை!

தேர்தல் கருத்துக் கணிப்பு முற்றிலும் சரியென்று எடுக்கக்  கூடாது. கடந்த காலங்களில் கருத்துக் கணிப்பு பிழைத்திருக்கிறது. அதே நேரம் அதனைத் தள்ளவும் முடியாது.

ஆனால் அதிமுக தமிழ்நாட்டை 10 ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆண்டுவிட்டது. ஆட்சியாளர் மீது கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன. பல அமைச்சர்களின் சொத்து மதிப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.

எடுத்துக் காட்டுக்கு செல்லூர் இராஜூ (மதுரை மேற்கு): அசையும் சொத்துக் கையிருப்பு ரூ.2 லட்சத்து 45 ஆயிரத்து 650. மனைவி ஜெயந்தி கையிருப்பு ரூ.1 லட்சத்து 65 ஆயிரத்து 355. அவரிடம் 160 கிராம் தங்க நகைகள், மனைவியிடம் 400 கிராம் தங்க நகைகள், 3 கார்கள் உள்ளன. மொத்தம் சொத்து மதிப்பாக ரூ.6 கோடியே 42 லட்சத்து 73 ஆயிரத்து 355 என காண்பித்துள்ளார். கடந்த 2016 தேர்தலில் சொத்து மதிப்பு ரூ.1 கோடியே 18 லட்சத்து 89 ஆயிரத்து 415 எனவும், 2011 தேர்தலில் ரூ.51.83 லட்சம் என சொத்து மதிப்பு காண்பித்துள்ளார். கடந்த தேர்தலை விட அவரது சொத்து மதிப்பு 6 மடங்கு உயர்ந்துள்ளது!

அதே போல் விஜயபாஸ்கரின் சொத்து மதிப்பு கடந்த 2016 இல் ரூபா 8.98 ஆக இருந்தது. இன்று அது ரூபா 60.29 கோடியாக 6 மடங்குக்கு மேல் உயர்ந்துள்ளது!  (https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=663322)

பணக்காரக் கட்சி வேட்பாளர்களில் கமலஹாசன்  முதல் இடத்தில் இருக்கிறார். அவரமு  சொத்து மதிப்பு ரூபா 176.9 கோடி. யாகும். இதில்  அசையா சொத்து ரூபா 45 கோடி, அசையும் சொத்து ரூபா 131.9 கோடி. தனக்கு மனைவி பிள்ளைகள் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார். இரண்டாவது பணக்கார வேட்பாளர் அவரது கட்சியின் பொருளாளர் ஆர். மகேந்திரன். சொத்து மதிப்பு ரூபா 160 கோடி. (https://timesofindia.indiatimes.com/city/chennai/tamil-nadu-assembly-polls-kamal-haasan-richest-candidate-so-far-mnm-vice-president-a-close-second/articleshow/81522253.cms)

மொத்தத்தில் இம்முறை ஆளுமைபடைத்த ஜெயலலிதா இல்லாத அதிமுக அணி தேர்தலைச் சந்திக்கிறது. இது அந்தக் கட்சிக்குப் பெரிய பின்னடைவு. 

இவற்றைக் கூட்டிக் கழித்துப் பார்த்தால்   ஏப்ரில்  6 ஆம்  நாள்  தமிழ்நாட்டில்  ஆட்சி மாற்றம் நிச்சயம்!

About editor 3045 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply