திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கத்தின் கல்வி உதவி வழங்கும் விழா

திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கத்தின்  கல்வி உதவி வழங்கும் விழா

திருகோணமலை நலன்புரிச்சங்கத்தின்  பல்கலைக்கழக மாணவருக்கான நிதி உதவி மற்றும் தொண்டர் ஆசிரியர் கொடுப்பனவு  வழங்கும் நிகழ்ச்சி 2021.01.30 நாள்  முற்பகல் பதினொரு மணிக்குத் திருகோணமலை நகரசபை மண்டபத்தில் தொடக்கி நடைபெற்றது. திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கத் தலைவர் சண்முகம் குகதாசன் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார்.

திருகோணமலை வலயக் கல்வி பணிப்பாளர்  சிவானந்தம் சிறிதரன், திருகோணமலை ஓய்வுநிலை வலயக் கல்விப் பணிப்பாளர்  நடேசலிங்கம் விஜேந்திரன் , திருகோணமலை கோட்டக் கல்விப் பணிப்பாளர்  கோணாமலை செல்வநாயகம்,  தம்பலகாம்  கோட்டக்கல்வி பணிப்பாளர்  இராஜபாண்டியன் இராஜசுரேஸ், மூதூர்  கோட்டக் கல்வி பணிப்பாளர்  கணபதிப்பிள்ளை அம்பிகைபாதம், புனித மரியாள் கல்லூரி, புனித சூசையப்பர் கல்லூரி, ஸ்ரீ  சண்முகா இந்துமகளிர் கல்லூரி ,உவர்மலை    விவேகானந்தாக் கல்லூரி உட்பட பல்வேறு பாடசாலை அதிபர்கள்  மற்றும்  ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

மங்கல விளக்கேற்றலுடன் நிகழ்சிகள் தொடங்கின.முதலாவது நிகழ்ச்சியாக தமிழ் மறை ஓதல் மற்றும் தமிழ்த் தாய் வாழ்த்து இசைத்தல் ஆகியன இடம்பெற்றன. தொடர்ந்து திருகோணமலை மாவட்ட நலன்புரிச்சங்கப்  பொருளாளர் திரு.சண்முகநாதன் பாரதிநாதன்  நிகழ்ச்சிக்கு வந்த அனைவரையும் வரவேற்று வரவேற்புரை நிகழ்த்தினார்.

அதனைத் தொடர்ந்து திருகோணமலை மாவட்ட நலன்புரிச்சங்க தலைவர் திரு சண்முகம் குகதாசன், சங்கம் ஆற்றிவரும் பணிகளைப் பற்றி விரிவாக எடுத்துரைத்தார் . அவர் தனது உரையில் திருகோணமலை நலன்புரிச்சங்கமானது. பல்கலைக்  கழக   மாணவருக்கான நிதி உதவி,தொண்டர் ஆசிரியர் கொடுப்பனவு, பெண்கள் தலைமை தாங்கும்  குடும்பங்களுக்கான தொழில் வாய்ப்பு, உயிர்காப்பு உதவி,    

  மீள் குடியமர்வு உதவிகள் எனச் சங்கம் ஆற்றி வரும் பல்வேறு பணிகளை   விரிவாக எடுத்து உரைத்தார் .

பல்கலைக்கழக மாணவருக்கான நிதி உதவி:

திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கமானது,  பல்கலைக் கழக அனுமதி  பெற்றும்  பெற்றார் இன்மையால் அல்லது  பணவசதி இன்மையால் படிப்பைத்  தொடர முடியாத   நிலையில்       உள்ள நாற்பத்தொரு  மாணவருக்குக் கல்வியைத் தொடர ஒரு மாணவருக்கு மாதம் ஒன்றுக்கு  ஐயாயிரம் உரூபா வீதம் வழங்கி வருகின்றது. இத்திட்டத்தைச் செயற்படுத்த   மாதம் தோறும்   இரண்டு  இலட்சத்து ஐயாயிரம்   ஆயிரம்  உரூபாய் தேவைப்படுகின்றது.  

தொண்டர் ஆசிரியர் கொடுப்பனவு:

திருகோணமலை மாவட்டத்தின் பின்தங்கிய பகுதிகளில் உள்ள பாடசாலைகளில்    கணிதம், ஆங்கிலம் கற்பிக்க ஆசிரியர் இல்லாத சூழல் நிலவுகின்றது. அந்தவகையில்கிளிவெட்டி இலிங்கபுரம் தமிழ் வித்தியாலயம், தம்பலகாமம் ஆதிகோணேஸ்வரா மகா வித்தியாலயம், அன்புவழிபுரம் கலைமகள் மகா வித்தியாலயம், ஆத்திமோட்டை தமிழ்வித்தியாலயம், குச்சவெளி விவேகானந்தா மகா வித்தியாலயம் , திரியாய்மகாவித்தியாலயம் ஆகிய பாடசாலைகளுக்கு கணித ஆசிரியர் இல்லை. மாணவர் கல்விபாதிக்கப்படக் கூடாது என்பதற்காக கல்வித் திணைக்களத்தின் வேண்டுகோளுக்கமைய மேற்படி பாடசாலைகளுக்கு கல்வித்துறை நியமித்த கணித ஆசிரியர் ஒவ்வொருவருக்கும் திருகோணமலை மாவட்ட நலன்புரிச்சங்கம் மாதந்தோறும் 15000 ரூபாய் படிவழங்கிவருகின்றது.

  வறிய மாணவருக்கான சிறப்புக் கல்வித்திட்டம்:

திருகோணமலை மாவட்டத்தின்    பின்தங்கிய ஊர்களில் உள்ள திறமையான  ஏழாம்  வகுப்பு மாணவர்களை வெருகல் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள    சீனன் வெளி, உப்பூறல் கல்லடி,   இலங்கைத் துறை, வட்டவான்   மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள  பாட்டாளிபுரம் , நீலாங்கேணி ,வீரமாநகர் , இளக்கந்தை, நல்லூர், தம்பலகாமம்  பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள  சிவசத்தி புரம்,பத்தினிபுரம் ,கிண்ணியா  பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சின்னத் தோட்டம்  கந்தளாய்  பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கோவிற் குடியிருப்பு   மொரவேவ பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சாந்திபுரம்       குச்சவெளிப்  பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கட்டுக்குளம்,கல்லம்பத்தை,சோலை,இரணைக்கேணி,நாவற்சோலை,வாழையூத்து,கோணேசபுரி    ஆகிய ஊர்களில் இருந்து தெரிவு செய்து,உவர்மலை விவேகானந்தக் கல்லூரியில் வைத்து கணிதம்,அறிவியல் ,ஆங்கிலம்,தொழில்நுட்பம் ஆகிய பாடங்களில்  சிறப்புக் கவனம் செலுத்திப்  படிப்பித்து பல்கலைக்  கழகம் அனுப்பத் திட்டமிட்டுள்ளோம் . இதற்கு மாதம் தோறும் 325,000  ரூபா  செலவு ஏற்படும்.இத்திட்டதை  2021 மாசி மாதத்தில் தொடங்கத் திட்டமிட்டுள்ளோம்.

பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கான தொழில் வாய்ப்பு:

 திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கமானது, திருகோணமலை மாவட்டத்திலுள்ள பெண்கள் தலைமை தாங்கும் குடுபங்களுக்கு குடும்பங்களுக்கு வருவாய் தரும் தொழில் முயற்சிகளை உருவாக்கிக் கொடுக்கும் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. முதற் கட்டமாகச் சாம்பல்தீவு, தம்பலகாமம் ,வெருகல் ஆகிய  இடங்களில் சத்துமா உற்பத்தித் திட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

உயிர்காப்பு உதவி:

மருத்துவ அதிகாரிகள் அல்லது உயர்நிலை அரசாங்க அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு  இணங்க மிகவும் சிக்கலான சூழலில்  உயிர்காக்கும் சில மருத்துவ உதவிகளை வழங்கி வருகின்றோம்.

 மீள் குடியமர்வு உதவிகள்:

திருகோணமலை மாவட்டத்தின்  வடக்கு   எல்லையில் அமைந்துள்ள தென்ன மரவடிக் கிராமம்   1984 ஆம் ஆண்டில்  முழுமையாக அழிக்கப்பட்டது . இப்பொழுது, இவ்வூரில் 97 குடும்பங்கள் மீளக் குடியமர்ந்துள்ளன. இவர்களுக்குத்  தொழில் வாய்ப்பை உருவாக்கிக் கொடுக்கும் நோக்கோடு வடக்குக் கிழக்குப் பொருளாதார அபிவிருத்தி  நடுவத்தொடு இணைந்து  பண்ணை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் மூலம் தென்னன்மரவடி மக்களுக்கு வருவாய் கிடைப்பதோடு தென்னன்மரவடியின் இருப்பும் உறுதிப் படுத்தப்படும்.

இப்பணிகளைச் செய்வதற்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்துவரும்  கனடாத் திருகோண மலை நலன்புரிச் சங்கதிற்கு  இவ்வேளையில் நன்றி தெரிவித்துத் கொள்வதாகக் கூறினார்

அடுத்து வலயக்கல்வி பணிப்பாளர் சிவானந்தன் சிறீதரன், சிறப்புரை ஆற்றினார். அவர் தனது உரையில் திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கம் ஆற்றும் பணிகளைப் பாராட்டினார். அவர் அரசு செய்யவேண்டிய பல பணிகளைச் இச்சங்கம் செய்வது போற்றப்பட வேண்டியது என்று உரைத்தார்.  சிறப்பாக மாவட்டக் கல்வி மேம்பாடு கருதி சங்கம்  ஆற்றி  வரும் பல்கலைக்  கழக மாணவருக்கான நிதி உதவி,தொண்டர் 

ஆசிரியர் கொடுப்பனவு,வறிய மாணவருக்கான சிறப்புக் கல்வித்திட்டம்  ஆகிய வற்றைப் பாராட்டி உரைத்தார். 

ஓய்வு நிலை வலயப்  பணிப்பாளர் திரு.நடேசலிங்கம் விஜேந்திரன் அவர்கள் தனது உரையில் திருகோணமலை மாவட்டத்தின் தேவை அறிந்து   திருகோணமலை நலன்புரிச்சங்கம் ஆற்றப்படும் பணிகள் போற்றப்பட வேண்டும் என்று உரைத்தார் .

தொடர்ந்து  தொண்டர் ஆசிரியர்கள் மற்றும் பெற்றார் அற்ற பல்கலைக்கழக மாணவர்களுக்கான தை மற்றும்  மாசி மாதங்களுக்கான  உதவித்தொகைகள்  காசோலையாக வழங்கப்பட்டன.

இறுதியாக திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்க செயலாளர்   நன்றியுரை நிகழ்த்தினார். அவர்களது உரையில் எமது செயற்பாடுகளுக்கு பின்புலமாக இருக்கும் கனடாத் திருகோணமலை நலன்புரிச்சங்கத்துக்கு நன்றி கூறினார் . மேலும், கோவிட் 19 அச்சம் நிலவும் சூழலும் எமது அழைப்பை ஏற்று இங்கே வருகை தந்த கல்வித்துறை  அதிகாரிகள், மற்றும் பாடசாலை அதிபர்கள் ஆகியோருக்கும் மண்டபத்தைத் தந்து உதவிய திருகோணமலை நகர சபைக்கும் நன்றி கூறினார். இத்தோடு இன்றைய நிகழ்ச்சிகள் இனிதே நிறைவெய்தின. 

About editor 3188 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply