சங்க காலத்தில் நான்மறை, முத்தீ ஓம்புதல், வேள்வி

சங்க காலத்தில் நான்மறை, முத்தீ ஓம்புதல், வேள்வி

இந்த முத்தீ ஓம்புதல், வேள்வி எல்லாம் பார்த்தோம். இந்த முத்தீ ஓம்புதல் எல்லாம் எப்போ தொடங்கி இங்க இருக்குனு பார்க்கலாம்.

சங்க காலத்துல வர்ணம் இருந்தது. ஆனா அது தொழில் முறைல மட்டும்தான்.

கபிலர் பாரி நட்பு நமக்கு தெரியும். அவர் பாரி பெண்களை எப்படி சொல்கிறார் என்பதும் தெரியும். ( நாம் திருக்கோவலூர் கல்வெட்டும் பார்த்தோம் ) இருந்தாலும் மீண்டும் ஒருமுறை புறநானூறு.பாடல் 201.

பாரி மகளிர்; யானே
தந்தை தோழன்: இவர்என் மகளிர்;
அந்தணன், புலவன், கொண்டுவந் தனனே;

ஒரு அந்தணனுக்கும் அரசனுக்கும் நட்பு. (கபிலரை புலன் அழுக்கு அற்ற அந்த ணாளன் என்று பாடுகிறார் மாறோக்கத்து நப்பசலையார் Puram 126) அவன் மகள்களை இவன் தன் மகள்கள் என்று கூறுகிறான்.

ஒவ்வொரு அரசனாக சென்று இறைஞ்சுகிறான். இறுதியில் ஒரு மகளுக்கு மணம் முடித்து மற்றவளை அந்தணர்கள் இடம் ஒப்படைத்து விட்டு ( அந்த காலத்தில் அதுதான் பாதுகாப்பு) நண்பனிடமே சென்று சேருகிறான்

இதில் தெரிவது வர்ணம் இருந்தது , பேதம் இல்லை

புறநானூறு பாடல் எண் 2

போரும் சோறும்! பாடியவர்: முரஞ்சியூர் முடிநாகராயர்.
பாடப்பட்டோன்: சேரமான் பெருஞ்சோற்று உதியன்
சேரலாதன்.

பாஅல் புளிப்பினும், பகல் இருளினும்,
நாஅல் வேத நெறி திரியினும்

சேரமான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன். இவன் குருக்ஷேற்ற போர்ல கௌரவர், பாண்டவர் இருவருக்கும் உணவு கொடுத்தமை வருகிறது. அவ்வளவு நடு நிலையானவன்.

பால் புளிச்சு போகலாம் , பகலிலே இரவு வரலாம் இல்ல நாலு வேத நெறி பிறழ்ந்தும் போகலாம். ( அந்த காலத்துல வேத நெறி தவரறது பகல்ல சூரியன் வராம போறதுக்கு சமம் ) ஆனா நீ நடு நிலை தவற மாட்டாய்.

அந்தி அந்தணர் அருங்கடன் இறுக்கும்
முத்தீ விளக்கிற், றுஞ்சும்
பொற்கோட்டு இமயமும், பொதியமும், போன்றே!

புலவர் சொல்கிறார் அந்தியில், அந்தணர் செய்யும் முத்தீ வழிபாட்டில் இமயமும் பொதிகையும் உறங்க செல்கின்றன. அதாவது இந்த முத்தீ ஓம்பல் இமயம் முதல் குமரி வரை இருந்தது.

புறநானூறு பாடல் எண் 6
பாடியவர்:காரிகிழார்.
பாடப்பட்டோன் : பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி.

நான்மறை முனிவர் ஏந்துகை எதிரே!
வாடுக,

பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி. இவன் பேரிலேயே இவன் பல யாகங்களை செய்தவன் என்று தெரிய வரும். புலவர் சொல்கிறார்: ” நான்மறை முனிவர் உனக்கு கை தூக்கி ஆசி கூறுகையில் , நீ அதை தலை வணங்கி ஏப்பாயாக

புறநானூறு பாடல் எண் 26

பாடியவர்: மாங்குடி கிழவர்; மாங்குடி மருதனார் எனவும் பாடம்.
பாடப்பட்டோன்: பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்.

ஆன்ற கேள்வி, அடங்கிய கொள்கை,
நான்மறை முதல்வர் சுற்ற மாக,
மன்னர் ஏவல் செய்ய, மன்னிய
வேள்வி முற்றிய வாய்வாள் வேந்தே!

நீ போரில் வென்று , அந்த நாட்டில் நான்கு மறைகளிலும் நல்ல அறிவு உடையவர்களைக் கொண்டு, தோற்ற அரசர்கள் ஏவல் செய்ய, வேள்வி செய்தாய்

பாடியவர்: தாமப்பல் கண்ணனார், பாடப்பட்டோன்: சோழன் நலங்கிள்ளி தம்பி மாவளத்தான்.( 43)

நின் முன்னோர் எல்லாம்
பார்ப்பார் நோவன செய்யலர்: மற்றுஇது
நீர்த்தோ நினக்கு?’ என வெறுப்பக் கூறி,
நின்யான் பிழைத்தது நோவாய் என்னினும்,

யாரோ புலவர்கிட்ட அரசன் பார்பனர்களை இகழ்ந்துவிட்டான் என்று கூறி விட புலவரும் அவனிடம் போய், உன் முன்னோர்கள் எல்லாம் பார்பனர்களை நோகடிக்க மாட்டார்கள் என்று வெறுப்பாக கூறி விட்டார்.அவன் நான் அப்படி சொல்லியிருந்தால் வருந்துகிறேன் என்று சொல்லி மன்னிப்பு கேட்கிறான். அவன் அவ்வாறு சொல்லவில்லை என்று பின்னாடி தெரிந்து
புலவர் மன்னிப்பு கேட்கிறார்

பாடியவர்: ஔவையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.

அறம்புரி கொள்கை நான்மறை முதல்வர்
திறம்புரி பசும்புல் பரப்பினர் கிடப்பி, (புறம் 93)

இறந்த எதிரிகளுக்கு நான்கு மறை அறிந்த அந்தணர்கள் புல் பரப்பி இறுதிச் சடங்குகள் செய்வார்கள்

பாடியவர்: ஔவையார். பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.(புறம் 99)

அமரர்ப் பேணியும், ஆவுதி அருத்தியும்,

தேவர்களுக்கு ஆஹுதிஅளித்துப் பேணி –

பாடியவர் : கபிலர்.

பாடப்பட்டோன்: மலையமான் திருமுடிக்காரி. (புறம் 122)

அழல் புறம் தரூஉம் அந்தணர் அதுவே;

வீயாத் திருவின் விறல் கெழு தானை

நெருப்பைக் காக்கும் அந்தணர்களுக்கு செல்வம் வழங்கியவன்

புறம் 166 :பாடியவர்: ஆவூர் மூலங் கிழார்.

பாடப்பட்டோன் : சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணந்தாயன்.
கௌணியன் என்று சொல்வது கௌண்டின்ய கோத்திரத்துக்காரன்

நன் றாய்ந்த நீள் நிமிர்சடை
முது முதல்வன் வாய் போகாது,
ஒன்று புரிந்த ஈரி ரண்டின்,
ஆறுணர்ந்த ஒரு முதுநூல் இகல் கண்டோர் மிகல் சாய்மார்,
மெய் அன்ன பொய் உணர்ந்து,
பொய் ஓராது மெய் கொளீஇ,
மூவேழ் துறைபும் முட்டின்று போகிய
உரைசால் சிறப்பின் உரவோர் மருக

சடை முடி தரித்த இறைவன். அவன் விரித்து உரைத்த வேதங்கள் நான்கினுக்கும், அங்கங்கள் ஆரிற்க்கும் எதிராகப் பேசி வாதிட்ட மாற்று சமயத்தவரை மறுத்து வாதாடி, உண்மையை உணரச் செய்தவர்கள் உன் முன்னோர்கள். அவர்கள் 21 துறைகள் முற்றிய யாகங்களைச செய்தவர்கள்.

வினைக்கு வேண்டி நீ பூண்ட
புலப் புல்வாய்க் கலைப் பச்சை
சுவல் பூண்ஞான் மிசைப் பொலிய;

இந்த யாகத்திற்கு வேண்டிய கலைமான் தோல் போர்த்தி, பூணூல் அணிந்து வேள்வி செய்து முடித்தாய்

மறம் கடிந்த அருங் கற்பின்,
அறம் புகழ்ந்த வலை சூடிச்,
சிறு நுதல், பேர் அகல் அல்குல்,
சில சொல்லின் பல கூந்தல், நின்
நிலைக் கொத்தநின் துணைத் துணைவியர்
தமக்கு அமைந்த தொழில் கேட்பக்;

கற்பில் சிறந்த உன் மனைவியர் ( ஆமாம், மனைவியர்- பன்மை) நீ இட்ட ஏவல்களை செய்து முடித்தார்கள்

காடு என்றா நாடுஎன்று ஆங்கு
ஈரேழின் இடம் முட்டாது,
நீர் நாண நெய் வழங்கியும்,
எண் நாணப் பல வேட்டும்,
மண் நாணப் புகழ் பரப்பியும்,
அருங் கடிப் பெருங் காலை,
விருந்து உற்றநின் திருந்து ஏந்துநிலை,
என்றும், காண்கதில் அம்ம, யாமே!

தண்ணி மாதிரி நெய் விட்டு நீ செய்த வேள்விகள் எண்ணிலடங்கா. சிறந்த விருந்தும் வழங்கினை.அதுபோல் உண்டதில்லை.

பொன்படு நெடுவரைப் புயல்ஏறு சிலைப்பின்,
பூவிரி புதுநீர்க் காவிரி புரக்கும்
தண்புனற் படப்பை எம்மூர் ஆங்கண்,
உண்டும் தின்றும் ஊர்ந்தும் ஆடுகம்;
செல்வல் அத்தை யானே; செல்லாது,
மழைஅண் ணாப்ப நீடிய நெடுவரைக்
கழைவளர் இமயம்போல,
நிலீஇயர் அத்தை, நீ நிலமிசை யானே?

எங்களுக்கு திருப்தியாக வேண்டிய பரிசில்களை நீ கொடுத்தாய். காவிரி நாடு முழுவதும்சென்று அனைவர்க்கும் இதை உரைப்பேன்.

பாடப்பட்டோன்: சோழன் கரிகாற் பெருவளத்தான்.

திணை: பொதுவியல். துறை: கையறுநிலை. (Puram 224)

அறம்அறக் கணட நெறிமாண் அவையத்து,
முறைநற்கு அறியுநர் முன்னுறப் புகழ்ந்த
பவியற் கொள்கைத் துகளறு மகளிரொடு,
பருதி உருவின் பல்படைப் புரிசை,
எருவை நுகர்ச்சி, யூப நெடுந்தூண்,
வேத வேள்வித் தொழில்முடித் ததூஉம்;

இந்தப் பாடலில் கரிகால் சோழன் தன் மனைவியரோடு வேத விதிப்படி யுப ஸ்தம்பம் அமைத்து வேள்வி செய்தது கூறப் படுகிறது.

அவனும் இவனும்!

பாடியவர்: மாற்பித்தியார் ( Puram 251)

ஓவத் தன்ன இடனுடை வரைப்பிற்,
பாவை அன்ன குறுந்தொடி மகளிர்
இழைநிலை நெகிழ்ந்த மள்ளற் கண்டிக்கும்-
கழைக்கண் நெடுவரை அருவியாடிக்,
கான யானை தந்த விறகின்
கடுந்தெறல் செந்தீ வேட்டுப்,
புறம்தாழ் புரிசடை புலர்த்து வோனே!

எவனோ ஒருத்தனைப் பற்றி இந்தப் புலவர் பாடி இருக்கார்.

சின்ன வயசுல இவனைப் பார்த்த பெண்கள் பசலை நோய் வந்து கை வளை எல்லாம் கழண்டு போறது மாதிரி இருந்தான். இப்ப காட்டுல, அருவில, ஜடை முடிய குளிச்சு காய வச்சிட்டு, யானை கொடுத்த விறகுல, வேள்வித்தீ வளர்த்துக் கொண்டு
இருக்கிறன்.

பாடியவர்: மாற்பித்தியார்

திணை: வாகை துறை: தாபத வாகை (Puram 252)
கறங்குவெள் அருவி ஏற்றலின், நிறம் பெயர்ந்து,
தில்லை அன்ன புல்லென் சடையோடு,
அள்இலைத் தாளி கொய்யு மோனே
இல்வழங்கு மடமயில் பிணிக்கும்
சொல்வலை வேட்டுவன் ஆயினன், முன்னே.’

அடுத்த பாட்டும் அவனைப் பற்றியதுதான். அருவியில் குளிச்சு குளிச்சு தலைமுடி நிறம் தில்லசெடி மாதிரி ஆயிடுச்சு.

பாடியவர்: மதுரை வேளாசான்

திணை: வாகை துறை : பார்ப்பன வாகை (Puram 305)

வயலைக் கொடியின் வாடிய மருங்கின்,
உயவல் ஊர்திப் , பயலைப் பார்ப்பான்
எல்லி வந்து நில்லாது புக்குச்,
சொல்லிய சொல்லோ சிலவே; அதற்கே
ஏணியும் சீப்பும் மாற்றி,
மாண்வினை யானையும் மணிகளைந் தனவே.

வயலைக்கொடி போல வாடிய இடுப்புடைய இளைய வயதுப் பார்ப்பான், இரவில் ஒலி எழுப்பாத வண்டியில் கோட்டைக்குள் போய் ஏதோ சில வார்த்தைகள்தான் சொன்னான். போருக்குத் தயாராக இருந்த யானைகள் எல்லாம் எப்போது தங்கள் மணியைக் கழட்டிவிட்டன. ( போர் முயற்சி எல்லாம் நின்று விட்டது)

பார்ப்பான் தூது புறத்தினில் காட்டப்பட்டுள்ளது. இந்தக் கட்டுரைக்காக தொல்காப்பியம் பார்த்தபோது அகத்தினையிலும் பார்ப்பான் தூது சொல்லப்பட்டிருந்தது.

முள் எயிற்று மகளிர்!

பாடியவர், பாடப்பட்டோர், திணை, துறை தெரிந்தில. (Puram 361)

நன்பல
கேள்வி முற்றிய வேள்வி அந்தணர்க்கு,
அருங்கலம் நீரொடு சிதறிப், பெருந்தகை

நன்கு கற்றறிந்த, முற்றிய ( ஞானம் பொருந்திய) வேள்வி செய்கின்ற அந்தணர்க்கு அருமையான பாத்திரங்களை (பொன்னால் ஆன என்றும் சொல்லலாம்) நீர் வார்த்துக் ( தத்தம் செய்து) கொடுத்தாய்.

உடம்பொடுஞ் சென்மார்!
பாடியவர்: சிறுவெண்டேரையார் ( Puram 362)

ஆக்குரல் காண்பின் அந்த ணாளர்
நான்மறை குறித்தன்று அருளாகா மையின்
அறம்குறித் தன்று; பொருளா குதலின்

புலவர் சொல்கிறார் : இந்த அரசனுங்க எல்லாம் சண்டை போடறது அந்தணர்களின் நான்கு வேதத்துல சொன்னதுக்காகவோ, இல்ல அறத்தை காக்கவோ இல்லை. எல்லாம் பொருளின் பொருட்டே. ( காசுக்குதான்)

இதுல இருந்து நான்மறைன்னு தமிழ்ல சொல்றது அறம், பொருள், இன்பம் , வீடு இல்லைன்னு தெரியுதா? அறம் வேற , பொருள் வேற, நான்மறை
வேற.

பாடியவர்: ஔவையார்.

சிறப்பு: சேரமான் மாரி வெண்கோவும், பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப் பெருவழுதியும், சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும் ஒருங்கிருந்தாரைப் பாடியது. (Puram 367)

இதுல முதல்ல பார்க்க வேண்டியது சோழன் பேர். ராஜசூயம் வேட்டன்னு பட்டம்.

ஏற்ற பார்ப்பார்க்கு ஈர்ங்கை நிறையப்
பூவும் பொன்னும் புனல்படச் சொரிந்து,
சரியான பார்ப்பார்க்கு ரெண்டு கைலயும் நீர் விட்டு, முழுவது பொன்னும், பூவும் இட்டு
ஒன்று புரிந்து அடங்கிய இருபிறப் பாளர்
முத்தீப் புரையக் காண்தக இருந்த

இரு பிறப்பாளர்- த்விஜன் என்ற கருத்து – இன் முத்தீ போல நீவர் முவரும் ஒன்றாக இருக்கிறீர்கள்.

பாடியவர்: உலோச்சனார்.

பாடப்பட்டோன்: சோழன் இராசசூயம் வேட்ட பெருநற் கிள்ளி.(377)

அவி உணவினோர் – தேவர்

புறநானூறு படிச்சிட்டு சிலப்பதிகாரம் படிச்சா , இந்த மறை வழக்கத்தின் தொடர்ச்சி தெரியும்.

சிலப்பதிகாரம் கொஞ்சம் பார்க்கலாம்.

புகார்க் காண்டம்: சாலி ஒருமீன் தகையாளைக் கோவலன்

மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத்
தீவலம் செய்வது காண்பார்க்கண் நோன்புஎன்னை.
கோவலனும் கண்ணகியும் தீ வலம் வந்து மணம் செய்து கொண்டனர்.
மாமுது முதல்வன் வாய்மையின் வழாஅ
நான்மறை மரபின் தீமுறை ஒருபால்,
மறையோர் ஆக்கிய ஆவூதி நறும்புகை
இறைஉயர் மாடம் எங்கணும் போர்த்து

தேவாரம் சொல்றா மாதிரி இங்கேயும் ஒரே புகை மயம்தான்

மதுரைக்காண்டம்

மாமுது மறையோன் வந்திருந் தோனை
யாது நும்மூர் ஈங்கென் வரவெனக்
கோவலன் கேட்பக் குன்றாச் சிறப்பின்

மாமறை யாளன்………………….தீத்திறம் புரிந்தோன் செப்பக் கேட்டு
மாமறை முதல்வ மதுரைச் செந்நெறி
கூறு நீயெனக்
தீத்திறம் – தீ வழிபாடு

அருமறை மருங்கின் ஐந்தினும் எட்டினும்

வருமுறை எழுத்தின் மந்திர மிரண்டும் வேதத்தில் சொலப்பட்ட ஐந்து, எட்டு எழுத்து மந்திரங்கள்- பஞ்சாட்சரம், அஷ்டாட்சரம்

அந்தீம் புகையும் ஆகுதிப் புகையும்
பல்வேறு பூம்புகை அளைஇ வெல்போர்
விளங்குபூண் மார்பிற் பாண்டியன் கோயிலின்
மதுரையிலும் புகைதான்
ஓத்துடை அந்தணர் உரைநூற்
முதுமறைதேர் நாரதனார்
றைநா வோசை யல்ல தியாவதும்
மணிநா வோசை கேட்டது மிலனே
வலவைப் பார்ப்பான் பராசர னென்போன்
குலவுவேற் சேரன் கொடைத்திறங் கேட்டு
வண்டமிழ் மறையோற்கு வானுறை கொடுத்த
திண்டிறல் நெடுவேற் சேரலற் காண்கெனக்
தமிழ் ஞான சம்பந்தன் போல வண்டமிழ் மறையோற்
ஒன்றுபுரி கொள்கை இருபிறப் பாளர்
முத்தீச் செல்வத்து நான்மறை முற்றி
ஐம்பெரு வேள்வியுஞ் செய்தொழில் ஓம்பும்
அறுதொழி லந்தணர் பெறுமுறை வகுக்க
வார்த்திகன் தன்னைக் காத்தன ரோம்பிப்

வார்திகம் – The definition is:–

Those who are knowledgeable say that a vArtika is a work which examines what is said, what is not said, and what is not well said in the original.

நான் ஒரே அடியா எல்லோரும் நல்லவர்னு சொல்ல வரலை.

கல்வெட்டுல கொலை செய்தவன், கோவில் நகை திருடியவன்னு
எல்லாம் கூட வருது.

திருவள்ளுவர் கூட ஒரு பக்கம் அரசனைப் பார்த்து – அறுதொழிலோர் நூல் மறப்பர்னு சொன்னாலும், அந்தணர்களைப் பார்த்து –
மறந்தாலும் ஒத்துக்கொள்ளலாம் பார்ப்பான்
பிறப்பொழுக்கம் குன்றக் கெடும் .

பயங்கர எச்சரிக்கை கொடுக்கிறாரு.

நீங்க வேதத்த மறந்துட்டாலும் திரும்ப கத்துக்கலாம். ஆனா பிறந்த
குலத்தோட ஒழுக்கம் போச்சுனா, எல்லாமே போச்சுன்னு சொல்றாரு.
அப்படினா இது ஒண்ணு அட்வான்ஸ் வார்நிங்கா இருக்கணும்.
இல்ல அப்பவே சிலபேரு இப்ப மாதிரி இருந்திருக்கணும்.

இப்ப இருக்கற நிலமைய அப்பவே சொல்லிட்டாரு.

ஆனா ஒரேயடியா இந்த தமிழ்ல வேதம், மறைனு சொல்றது வேற வேற, வேள்வி எல்லாம் பின்னாடி வந்துச்சுனு சொல்றது எல்லாம் தப்புன்னு சொல்ல வரேன்.

shankypriyan July 2010

——————————————————————————————————————–

புறநானூற்றில் அந்தணரும் வேதமும்! – 3 (Post No.3331)

BY S NAGARAJAN

8  November 2016

Contact: swami_48@yahoo.com

சங்க இலக்கிய ஆய்வு – கட்டுரை எண் 6

இந்தக் கட்டூரையில் புறநானூற்றில் உள்ள பாடல்கள் 224,361,362,400 ஆகியவை இடம் பெற்றுள்ளன

சங்ககாலத்தில் வாழ்ந்த அற்புதமான ஒரு சோழ மன்னன் கரிகாலன். இவனது அறிவுத் திறனும் சிறு வயதிலேயே நீதியை நிலை நாட்டிய நிகழ்வும் தமிழ் வரலாற்றில் பொன் ஏட்டில் பொறிக்கபட்டவை.

இவனைப் புகழ்ந்து கருங்குழல் ஆதனார் பாடிய பாடல் 224ஆம் பாடலாக புறநானூற்றில் இடம் பெறுகிறது. மன்னன் கரிகாலன் வேள்விகளை இயற்றி வேதமுறைப்படி அரசாண்டதை நினைவு கூர்கிறார் புலவர்.

பாடல் வரிகள் இதோ:

பருதி உருவின் பல் படைப் புரிசை
எருவை நுகர்ச்சி யூப நெடுந்தூண்வேத வேள்வித் தொழில் முடித்ததூஉம். (வரிகள் 7 முதல் 9 முடிய)

சூரியனைப் போன்ற வட்ட வடிவமான (பருதி உருவின்) பல சுவர்களை அமைத்து (பல் படைப் புரிசை) பருந்துகள் நுகரும்படியான (எருவை நுகர்ச்சி) பல யூபத் தூண்களை நாட்டி (யூப நெடுந்தூண்) வேதம் அறைந்த வழியில் வேள்விகளைச் செய்தவன் (வேத வேள்வித் தொழில்  முடித்ததூஉம்) என்று புலவர் இவனைப் புகழ்கிறார்.

தூய்மையான மகளிர் சுற்றி இருத்தல், அறநெறி வழுவாத நடுநிலைமையுடன் கூடிய நீதி வழங்கு நெறிமுறை கொண்டிருத்தல், வேத வேள்வியை இயற்றுதல் ஆகியவை கொண்டவன் என புலவர் சொல்வதால் சங்க கால மக்களின் வாழ்வில்  மிகுந்த மேன்மையுடையவை என கற்பு, நீதி, வேத முறை ஆகியவை போற்றப்பட்டதை அறியலாம். வேள்வியை முறைப்படி செய்து முடிக்கும் அந்தணரும் குறிப்பால் உணர்த்தப்படுகின்றனர்.

அடுத்து 361, 362 ஆகிய இரு பாடல்களைப் பார்ப்போம். கயமனார் என்னும் புலவர் பாடிய பாடலாக இடம் பெறுகிறது பாடல் எண் 361.

பாட்டுடைத் தலைவன் யாரெனத் தெரியாவிட்டாலும் கூட, அவன் கூற்றுவனுக்கு அஞ்சா நல்லவன் என்பது புரிகிறது. அவன் தாயின் நல்லன்.

வேத வேள்வியைச் செய்யும் கேள்வி முற்றிய அந்தணருக்கு  தொன்று தொட்டு இருந்து வரும் நடைமுறைப்படி கையில் நீர் வார்த்து ஏராளமான பொன்குவியலை அள்ளிக் கொடுத்தவன். அவன் பெருமையை அள்ளித் தெளிக்கிறார் இந்தப் பாடலில் பெரும் புலவர்.

நன் பலகேள்வி முற்றிய வேள்வி அந்தணர்க்குஅருங்கலம் நீரொடு சிதறிப் பெருந்தகை (வரிகள் 3 முதல் 5 முடிய)

அடுத்து வரும் 362ஆம் பாடலைப் பாடியவர் சிறுவெண் தேரையார்.

பாட்டுடைத் தலைவன் சாதாரணமானவன் அல்லன். அவனைப் புகழ வந்த புலவர் சூரியனையும் சந்திரனையும் இணைக்கிறார். ஞாயிறு அன்ன ஆய மணி மிடைந்தவன். மதி உறழ ஆரம்  மார்பில் கொண்டவன். (சந்திரனைப் போன்று திகழும் முத்து மாலை மார்பில் அணிந்தவன்.)

பாடலில் வரும் சில வரிகளைப் பார்ப்போம்: .

தாக்குரல் காண்பின் அந்தணாளர்நான்மறை குறித்தன்று அருளாகாமையின்அறம் குறித்தன்று பொருளாகுதலின்
மருள் தீர்ந்து மயக்கு ஒரீஇக்கை பெய்த நீர் கடற்பரப்ப (வரிகள் 8 முதல் 12 முடிய)

ஓ, பிராமணர்களே! தாக்குகின்ற குரல்களைக் (தாக்கி வரும் பகைவர்களின் ஒலிகளைக்) கேளுங்கள்! இது நான்கு வேதங்களிலும் குறிப்பிடப்பட்ட ஒன்று அல்ல! இது அருள் இல்லாதது என்பதால் இது அறம் சார்ந்த ஒன்று அல்ல. இது பொருள் குறித்தது. அதாவது materialism குறித்தது. அறத்திற்கும் அருளுக்கும் சம்பந்தமில்லாத ஒன்று.

அடுத்து வரும் வரி அற்புதமான வரி!

Brahmin doing Pranayama (Breathing exercise)

மருள் தீர மயக்கம் ஒழிய அந்தத் தலைவன் அந்தணர்களின் கையில் நீர் பெய்து வாரி வழங்குகிறான்.

அவன் இப்படிக் கொடுத்து கீழே விழும் நீர் எவ்வளவு தெரியுமா?

“கை பெய்த நீர் கடற் பரப்ப”

அவன் கையிலிருந்து வழிந்த நீர் கடலாக ஆயிற்று.

அடேயப்பா!எத்துணை பேருக்கு அவன் நீர் வார்த்திருந்தால் ஒரு கடல் உருவாகி இருக்கும்.!

தமிழர்களின் நெஞ்சங்களில் வேரூன்றி இருக்கும் நேர்மையான கற்பனைத் திறனைத் தூண்டி விடும் புலவர் அவன் அந்தணரை ஓம்பி அறம் காத்த பான்மையைச் சிறப்பாகச் சொல்லி விடுகிறார்!!

புலவர் ஒரு கோடிட்டுக் காட்டி அவன் அறம் வளர்த்த பான்மையைச் சொற்களால் சுற்றி வளைத்துக் காட்டுகிறார்.

வாழ்க அந்தணர்! வாழிய அறம் வளர்த்த மன்னர் குலம் !!

அடுத்து இறுதியாக 400 ஆம் பாடலைப் பார்ப்போம்.

பாடலைப் பாடியவர் மிக அற்புதமான அரும் புலவரான கோவூர் கிழார். பாடப்பட்ட பாட்டுடைத் தலைவனோ புகழ் பெற்ற சோழன் நலங்கிள்ளி!

கேட்கவா வேண்டும். சொற்கள் கும்மாளம் போட்டுக் குதித்து வருகின்றன. பாடலைப் படிப்பதே ஒரு தனி சுகம்.

சோழன் நலங்கிள்ளி இருக்கிறானே அவன் உலகு காக்கும் உயர் கொள்கையாளன். பலர் துஞ்சும் போது (உறங்குகையில்) தான் துஞ்சான் அவன் தன் எதிரிகளை மட்டும் கடிதல் அல்லன்.

அவன் தன் எதிரிகளை வெல்வதோடு பசிப்பகையையும் வெல்பவன். அவனது நாட்டில் பசி என்று சொன்னால் அந்தப் பகைவனை உடனே அவன் வென்று விடுவான். பசியைக் கொன்று விடுவான்.

இத்துணை சிறப்புடைய அவனைப் பற்றி புறநானூற்றில் மட்டும் 12 பாடல்கள் இருப்பதில் வியப்பில்லையே!!

Pranayama step 2

அவன் கேள்வி மலிந்த வேள்வியையும் செய்பவன். பாடல் வரிகள் இதோ:

கேள்வி மலிந்த வேள்வித் தூணத்துஇருங்கழி இழிதரும் ஆர்கலி வங்கம்தேறு நீர்ப் பரப்பின் யாறு சீத்து உய்த்துத்துறை தொறும் பிணிக்கும் நல்லூர்உறைவின் யாணர் நாடு கிழவோனே. (வரிகள் 19 முதல்23 முடிய)

கேள்வி மலிந்த வேள்விக்கான பல தூண்கள் நிறுவப்பட்டு யாகஙகள் நடை பெறும் நாடு.

ஆர்கலி கப்பல்கள் அகன்ற நீர்ப்பரப்பின் முகவாய் வழியே வருகின்ற நாடு.

அது தேறு நீர்ப்பரப்பை நனகு சுத்தம் செய்ய கடற்கரையில் அழகிய நகரங்கள் உள்ள நாடு.

அந்த நாட்டை ஆளும் அற்புதன் யார்?

யாணர் நாடு கிழவோன்! வளம் கொழிக்கும் நாட்டின் மன்னன் அவனே நலங்கிள்ளி!

இப்படிப்பட்ட பாடல்களை முழுதுமாக நாமே பாடிப் பொருளை நன்கு ஓர்ந்து உணர்ந்து அறிந்தால் தமிழ் நாடு வேத தேசமாக இருந்ததை நன்கு அறிந்திடுவோம்; மகிழ்ந்திடுவோம்.

இங்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை நினைவு  கூர்ந்து மகிழலாம். தென்னகத்தில் இருக்கும் ராமநாதபுரம் சேதுபதி மன்னர் முதல் கர்நாடகத்தில் இருக்கும் மைசூர் மஹாராஜாவிலிருந்து வடக்கே நெடும் தொலைவில் இருக்கும் ராஜஸ்தானில் உள்ள மன்னர்கள் வரை இன்றும் வேத வேள்விகளை வளர்த்து அந்தணர்களைப் போற்றி வருகின்றனர்.

இது அழியாத பரம்பரையின் ஒரு தொடர்ச்சி அல்லவா!

இன்னும் சில புறநானூறுப் பாடல்கள் உள்ளன. (கட்டுரைத் தொடரில் சொல்லப்பட்டு இதுவரை விளக்கப்பட்ட ஒன்பது பாடல்களைத் தவிர) அவற்றையும் பார்க்காமல் விட்டு விட முடியுமா என்ன? தொடருவோம்!

-தொடரும்

About editor 3017 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply