வி.கே. சசிகலாவின் முழு பின்னணி: ஜெயலலிதா உடனான நட்பு முதல் கொரோனா தொற்று வரை

வி.கே. சசிகலாவின் முழு பின்னணி: ஜெயலலிதா உடனான நட்பு முதல் கொரோனா தொற்று வரை
  • முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பிபிசி தமிழ்

27 ஜனவரி 2021

வி.கே. சசிகலா
படக்குறிப்பு,வி.கே. சசிகலா

சொத்துக் குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு சிறையிலிருந்து விடுதலையாகும் வி.கே. சசிகலாவின் பின்னணி என்ன? ஜெயலலிதாவின் தோழி என்பது மட்டும்தான் அவரது அடையாளமா?

ஒரு சாதாரண குடும்பத் தலைவி என்ற நிலையிலிருந்து, தமிழகத்தின் சக்திவாய்ந்த பெண்மணியின் தோழி, ஆளும் கட்சியின் தலைவர் என்ற நிலைவரை உயர்ந்த சசிகலாவின் வாழ்க்கைப் பயணம் நம்ப முடியாத பல திருப்பங்களையும் ஏற்ற இறக்கங்களையும் கொண்டது.

1984ஆம் ஆண்டு ஆழ்வார்பேட்டை பீமண்ண தோட்டத் தெருவில் வினோத் வீடியோ விஷன் என்ற வீடியோ கடையை வைத்திருந்தார் சசிகலா. அவரது கணவர் ம. நடராசன் கடலூர் மாவட்ட அரசு மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்தார். அப்போது கடலூர் மாவட்ட ஆட்சியராக இருந்தவர், சந்திரலேகா ஐ.ஏ.எஸ்.

அந்த நேரத்தில் கடலூரில் நடந்த ஜெயலலிதாவின் கூட்டத்தை வீடியோ பதிவுசெய்யும் ஆர்டர், சந்திரலேகாவின் பரிந்துரையின் பேரில் வினோத் வீடியோ விஷனுக்குக் கிடைத்தது. வி.கே. சசிகலா இப்படித்தான் ஜெயலலிதாவுக்கு முதன் முதலாக அறிமுகமானார். இந்த அறிமுகம் மிகச் சாதாரணமாக இருந்தாலும், அதனைத் தொடர்ந்த சம்பவங்கள் அசாதாரணமானவை.

1956ல் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த திருத்துறைப் பூண்டியில் விவேகானந்தன் – கிருஷ்ணவேணி தம்பதியின் மகளாக சசிகலா பிறந்தார். அவரோடு உடன் பிறந்தவர்கள் ஐந்து பேர் – சுந்தரவதனன், வினோதகன், ஜெயராமன், வனிதாமணி, திவாகரன். திருத்துறைப்பூண்டியில் பிறந்து வளர்ந்தாலும் சில ஆண்டுகள் கழித்து, அவரது குடும்பம் மன்னார்குடிக்கு குடிபெயர்ந்தது. பத்தாம் வகுப்புவரை படித்தார் சசிகலா.

மன்னார்குடிக்கு அருகில் இருந்த விளார் என்ற ஊரைச் சேர்ந்த ம. நடராசனை 1973 அக்டோபர் 16ஆம் தேதியன்று, அப்போது தஞ்சை மாவட்டத்தில் செல்வாக்கு மிகுந்த தலைவராக இருந்த மன்னை நாராயணசாமி தலைமையில் திருமணம் செய்துகொண்டார் வி.கே. சசிகலா. கல்யாணத்தை நடத்திவைத்தது, அப்போதைய முதலமைச்சர் மு. கருணாநிதி!

யார் இந்த வி.கே. சசிகலா? - ஜெயலலிதா உடனான நட்பு முதல் கொரோனா தொற்று வரை

1984ல் ஜெயலலிதாவுக்கு அறிமுகமான சசிகலா, மெல்ல மெல்ல அவரது நம்பிக்கையைப் பெற்றவராக வளர ஆரம்பித்தார். ஜெயலலிதா மாநிலங்களவை உறுப்பினராக இருந்த காலத்தில் அவரோடு தில்லி செல்லும் அளவுக்கு நெருக்கமானார். முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு இந்த நெருக்கம் இன்னும் தீவிரமானது. எம்.ஜி.ஆர். மரணமடைந்து அவரது உடல் ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டிருந்தபோது, ஜெயலலிதா அவரது தலைமாட்டில் நின்றுகொண்டிருந்தார். அந்தத் தருணத்தில் அவரைச் சுற்றிவளைத்துப் பாதுகாத்தது தங்களது குடும்பம்தான் என பிற்காலத்தில் ஊடகங்களில் தெரிவித்தார் நடராஜன்.

1988யிலிருந்து ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்திலேயே நிரந்தரமாகத் தங்கிவிட்டார் சசிகலா. இந்த காலகட்டத்தில்தான் ஜெயலலிதா வெகுவாக சசிகலாவைச் சார்ந்திருப்பவராக மாறினார். எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு கட்சி இரண்டாக உடைந்த நிலையில், 1988 பிப்ரவரியில் ஜெயலலிதா அணியின் பொதுக்குழு கூடியபோது, சசிகலா தம்பதியின் நம்பிக்கைக்கு உரியவர்கள் மட்டுமே, அந்த அணியின் ஆட்சி மன்றக் குழுவில் இடம்பெற்றனர். ஆரம்ப காலத்திலிருந்து ஜெயலலிதா அணியிலிருந்த வர்களுக்கே அந்தக் குழுவில் இடம் இல்லாமல் போனது. அந்த அளவுக்கு சசிகலாவின் செல்வாக்கு போயஸ் கார்டனில் வளர்ந்திருந்தது.

1991ல் ஜெயலலிதா முதன் முறையாக தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற சமயத்தில், அவருக்கு எல்லாமுமாக மாறியிருந்தார் சசிகலா. அப்போ திலிருந்து ஜெயலலிதா, அம்மாவாகவும் சசிகலா சின்னம்மாவாகவும் அழைக்கப்பட ஆரம்பித்தார்கள். ஜெயலலிதா எங்கு சென்றாலும் நிழலாகப் பின்தொடர்ந்தார் சசிகலா. இதற்கு முன்பே, சசிகலாவின் கணவர் நடராஜன், சசிகலாவின் சகோதரர்கள், அவர்களது குடும்பத்தினரின் ஆதிக்கமும் அ.தி.மு.கவின் மீது படர ஆரம்பித்திருந்தது.

1995ல் சசிகலாவின் உறவினரான வி.என். சுதாகரனை தனது தத்துப் பிள்ளையாக தத்தெடுக்கும் அளவுக்கு சசிகலாவை நம்பினார் ஜெயலலிதா. சுதாகரனுக்கு ஜெயலலிதா செய்துவைத்த ஆடம்பரத் திருமணம், உலகில் மிகவும் செலவழித்து நடத்தப்பட்ட திருமணமாக கின்னஸ் சாதனை படைத்தது.

ஆனால், ஜெயலலிதா தனது முதலாவது ஆட்சிக் காலத்தின் இறுதியில் மக்களால் மிகவும் வெறுக்கப்பட்டதற்கு சசிகலாவின் உறவினர்கள் செய்ததாக கூறப்படும் முறைகேடுகளும் ஒரு காரணமாக அமைந்தன. இந்த காலகட்டத்தில், அ.தி.மு.கவின் மூத்த தலைவர்கள் பலர், கட்சியிலிருந்து ஒதுங்க ஆரம்பித்தனர். இதன் பின்னணியில் சசிகலா இருந்ததாகக் கூறப்பட்டது.

1996ல் ஆட்சி போன பிறகு, ஜெயலலிதாவும் சசிகலாவும் இணைந்தே சிறைக்குப் போக நேர்ந்தது. இதனால், சிறிது காலத்திற்கு சசிகலாவை ஒதுக்கிவைக்கவும் செய்தார் ஜெயலலிதா. ஆனால், இது வெகுநாட்கள் நீடிக்கவில்லை. மீண்டும் வெகுசீக்கிரத்திலேயே போயஸ் தோட்ட இல்லத்தில் தலைகாட்ட ஆரம்பித்தார் சசிகலா.

ஜெயலலிதாவுடன் வி.கே. சசிகலா
படக்குறிப்பு,ஜெயலலிதாவுடன் வி.கே. சசிகலா

அதற்குப் பிறகு, 2011வரை போயஸ் தோட்ட இல்லத்திலும் அ.தி.மு.க என்ற கட்சியிலும் சசிகலாவின் அனுமதியின்றி எதுவும் நடக்காது என்ற நிலை ஏற்பட்டது.

2011ல் மீண்டும் முதலமைச்சராகியிருந்த ஜெயலலிதா, தனக்கு எதிராக சசிகலா செயல்படுவதாகக் கருதினார். விளைவு, 2011 டிசம்பர் 19ஆம் தேதி சசிகலா உட்பட அவரது குடும்பத்தினர் அனைவரையும் கட்சியிலிருந்து நீக்கினார் ஜெயலலிதா.

இந்த நடவடிக்கையில் சசிகலா போயஸ் கார்டனிலிருந்து வெளியேற்றப்பட்டார். நடராசன், திவாகரன், தினகரன், பாஸ்கரன், சுதாகரன், டாக்டர் வெங்கடேஷ், ராமச்சந்திரன், ராவணன், மோகன் உள்ளிட்ட சசிகலாவின் உறவினர்கள் அ.தி.மு.கவிலிருந்து நீக்கப்பட்டனர்.

ஆனால், இந்தப் பிரிவும் வெகு நாட்களுக்கு நீடிக்கவில்லை. இந்த சம்பவம் நடந்து மூன்று மாதங்களிலேயே அதாவது 2012ஆம் ஆண்டு மார்ச் 28ஆம் தேதி சசிகலா எழுதியதாக ஒரு அறிக்கை ஊடகங்களில் வெளியானது. அதில் கட்சி தொடர்பாகவோ, மக்கள் பிரதிநிதி ஆவது தொடர்பாகவோ தனக்கு எந்த விருப்பமும் இல்லை; அக்காவுக்கு உண்மையான தங்கையாக இருக்கவே தான் விரும்புவதாக அந்த அறிக்கையில் சசிகலா கூறியிருந்தார்.

இதற்குப் பிறகு, மார்ச் 31ஆம் தேதி சசிகலாவை மட்டும் ஜெயலலிதா கட்சியில் சேர்த்துக்கொண்டார். இதற்குப் பிறகு, ஜெயலலிதா மரணம் வரை இந்த நட்பு நீடித்தது. 2014ஆம் ஆண்டில் சொத்துக் குவிப்பு வழக்கில், இருவருமே ஒன்றாக சிறைசென்றனர்.

ஜெயலலிதாவின் நிழலாகவே இருந்தாலும், ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை கட்சியின் முன்னணியில் ஒருபோதும் சசிகலா தென்பட்டதில்லை. ஆனால், கட்சியின் முக்கியமான தருணங்களில் முக்கியமான முடிவுகளை எடுப்பவராக சசிகலாவே இருந்தார். தேர்தல்களின்போது வேட்பாளர் தேர்வில் சசிகலாவின் செல்வாக்கு எத்தகையது என்பது அ.தி.மு.கவில் உள்ள அனைவருக்குமே தெரியும்.

2002ல் ஜெயலலிதா முதல்வராக பதவிவகிக்க முடியாமல் போனபோது, ஓ. பன்னீர்செல்வம் அந்த இடத்திற்கு முன்னிறுத்தப்பட்டது சசிகலாவின் ஆலோசனையின்பேரில்தான். அதற்குப் பிந்தைய தேர்தல்களில் எல்லாம் வேட்பாளர்களைத் தேர்வுசெய்யும்போது அதில் சசிகலாவின் பங்கும் இருக்கும். கட்சியின் அனைத்து மட்டங்களிலும் சசிகலாவின் செல்வாக்கு இருந்தது.

யார் இந்த வி.கே. சசிகலா? - ஜெயலலிதா உடனான நட்பு முதல் கொரோனா தொற்று வரை

2016ல் ஜெயலலிதா உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பிறகு, சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரைத் தவிர ஆட்சியில் இருந்த யாராலும் அவரைச் சென்று பார்க்க முடியவில்லை என குற்றம்சாட்டப்பட்டது. அந்த ஆண்டு டிசம்பரில் ஜெயலலிதா இறந்துவிட, சசிகலாவின் பரிந்துரையின் பேரிலேயே நள்ளிரவில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் புதிய அரசு பதவியேற்றது.

ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது ஒதுக்கிவைக்கப்பட்ட சசிகலாவின் உறவினர்கள், அவர் மறைந்த பிறகு ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலைச் சுற்றி நின்றது கடுமையான விமர்சனங்களுக்குள்ளானது.

விரைவிலேயே சசிகலாவின் உண்மையான விருப்பம் கொஞ்சம் கொஞ்சமாக வெளியாக ஆரம்பித்தது. ஓ. பன்னீர்செல்வம் முதல்வராக இருந்த காலத்திலேயே தினமும் போயஸ் கார்டனுக்குச் செல்லும் அமைச்சர்கள், சசிகலாவை கட்சித் தலைமை ஏற்க வலியுறுத்தும் காட்சிகள் அரங்கேறின. இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோ காட்சிகளும் ஊடகங்களுக்கு பகிரப்பட்டன.

ஜெயலலிதா மறைந்து சில நாட்களில், அதாவது டிசம்பர் பத்தாம் தேதியன்று தமிழ் காலை நாளிதழ் ஒன்றில் வெளியான முழுப்பக்க விளம்பரத்தில், “புரட்சித் தலைவி அம்மாவிற்கு காலன் தன்னை வென்றிடுவான் என்று தெரிந்திருந்தால் தனக்குப் பிறகு எல்லாமே சின்ன அம்மாதான் என்று சொல்லி இறைவனடி சேர்ந்திருப்பார்” என கூறப்பட்டிருந்தது. இந்த விளம்பரத்தை அளித்தவர் பெயர் ஏதும் இல்லாமல், “விசுவாசத் தொண்டனின் மனசாட்சி” என்ற பெயரில் அந்த விளம்பரம் வெளியாகியிருந்தது.

அன்றைய தினமே, முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் பெயரில் வெளியான அறிக்கையில், “ஜெயலலிதாவைப் போல கட்சியை ராணுவ அமைப்பைப்போல நடத்துவதற்கு சசிகலா பொதுச்செயலாளர் ஆவதுதான் ஒரே வழி” என கூறப்பட்டிருந்தது. இதற்குப் பிறகு டிசம்பர் 29ஆம் தேதி நடந்த அ.தி.மு.கவின் பொதுக் குழுக் கூட்டத்தில் வி.கே. சசிகலா அக்கட்சியின் பொதுச் செயலாளராகத் தேர்வுசெய்யப்பட்டார்.

இதன் தொடர்ச்சியாக 2017 பிப்ரவரி ஐந்தாம் தேதியன்று முதலமைச்சர் பதவியை ஓ. பன்னீர்செல்வம் ராஜிநாமா செய்தார். பிறகு அப்போதைய ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்த சசிகலா, தனக்கு பெரும்பான்மை எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருப்பதால், தன்னை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டுமெனக் கூறினார்.

வி.கே. சசிகலா

ஆளுநர் எந்த முடிவையும் தெரிவிக்காத நிலையில், பிப்ரவரியில் சொத்துக் குவிப்பு வழக்கில் விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதிசெய்தது. அதன்படி சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோர் சிறைக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. முதலமைச்சராக பதவியேற்போம் என கருதியிருந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அவரது அரசியல் வாழ்க்கைக்கு கிட்டத்தட்ட முடிவுரை எழுதியது.

இதற்குப் பிறகு, எடப்பாடி கே. பழனிசாமியை முதல்வராக்கிவிட்டு சிறையை நோக்கிப் புறப்பட்ட சசிகலா, ஜெயலலிதாவின் சமாதிக்குச் சென்று, அந்த சமாதி மீது அடித்து சபதம் செய்தார். இதற்குப் பிறகு, பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா.

அவர் சிறையில் இருந்த காலகட்டத்தில், இவரது உறவினர்கள் அனைவரும் கட்சியைவிட்டு வெளியேற்றப்பட்டுவிட்டு, டிடிவி தினகரன் அ.ம.மு.க. என்ற புதிய கட்சியையும் துவங்கிவிட்டார். சிறையிலிருந்து விடுதலையாகும் சசிகலாவை மீண்டும் அ.தி.மு.கவில் சேர்க்கும் எண்ணமே இல்லை எனத் தெரிவித்துவிட்டார் எடப்பாடி கே. பழனிசாமி. சசிகலாவும் ஜெயலலிதாவும் இருந்த போயஸ் கார்டன் இல்லம் அரசுடமையாக்கப்பட்டு, அங்கு நினைவில்லமும் அமைக்கப்பட்டுவிட்டது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சசிகலா, சென்னை திரும்பிய பிறகு அ.தி.மு.க. மீது எந்த அளவுக்கு செல்வாக்கு செலுத்த முடியும் என்பது கேள்விக்குறிதான். சட்டமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களே இருக்கும் நிலையில், அவர் என்ன செய்யப் போகிறார் என்பதுதான் அவரது அரசியல் எதிர்காலத்தை மட்டுமின்றி, அவரைச் சார்ந்தவர்களின் அரசியல் எதிர்காலத்தையும் முடிவுசெய்யும்.

https://www.bbc.com/tamil/india-55821280

About editor 3120 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply