அனுராதபுர ஆட்சியாளர்களும் அவர்கள் நீர்ப்பாசனத்திற்கு செய்த பங்களிப்புக்களும்

அனுராதபுர ஆட்சியாளர்களும் அவர்கள் நீர்ப்பாசனத்திற்கு செய்த பங்களிப்புக்களும்

இலங்கை வரலாறு தலைநகரங்களை அடிப்படையாக கொண்டதாக காணப்படுவது சிறப்பாகும். இவ்வாறான அரசியல் வரலாற்றில் அனுராதபுரத்திற்கு தனிச் சிறப்பிடம் வழங்கப்படுகிறது. இலங்கையில் ஏற்படுத்தப்பட்ட முதலாவது இராசதானியாக அனுராதபுர இராசதானி காணப்படுகிறது. இதன் முக்கிய சிறப்பாக கூறப்படுவது நீர்ப்பாசன தொழினுட்பவியல் வளர்ச்சி மிக உன்னத நிலையினை அடைந்தமையாகும். இவ்வளர்ச்சிக்கு மிக முக்கிய பங்காற்றியவர்களாக சமகால மன்னர்களைக் கூறலாம். 

அனுராதபுரத்தினை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த மன்னர்கள் பற்றி நோக்குமிடத்து, அனுராதபுர இராசதானியானது மிக நீண்ட காலம் நிலைபெற்றிருந்தமையினால் ஏராளமான மன்னர்கள் அதனை ஆட்சி செய்தனர் என்பது நோக்கத்தக்கது. அவர்களை பற்றி அறிந்துகொள்ள எமக்கு உதவும் மிக முக்கிய வரலாற்று நூலாய் அமைவது மகாவம்சமாகும். இந்நூலின் அடிப்படையிலேயே அனுராதபுர இராசதானியின் மன்னர்களினை வரிசைப்படுத்தி நோக்கமுடியும் என்பது இந்நூலின் சிறப்பாகும். 

எமக்கு கிடைக்கின்ற மூலாதார சான்றுகளின் அடிப்படையில் நோக்குவோமாயின் அரசனே நிருவாக அதிபதியாக விளங்கினான் என்பது கண்கூடு. அரச உரிமைகள் பரம்பரை பரம்பரையாக பின்பற்றப்பட்டு வந்த மரபுகளின் அடிப்படையில் பின்பற்றப்பட்டது. அரசியல் ஸ்தாபனங்கள், அவற்றின் ஆரம்பத்தினை பார்ப்பின் அவை ஆரியரின் வருகையுடன் ஆரம்பித்ததாக கூறப்படுகிறது. ஆதியில் இங்கு குடியேறிய ஆரியரது நேரடி சந்ததி என்று கூறிக்கொண்டோரே வரலாற்றின் ஆரம்பத்தில் அனுராதபுரத்தில் ஏகத்தலைவர்களாக விளங்கினர். அனுராதபுர இராசதானியின் முதல் மன்னனாக பண்டுகாபயன் கொள்ளப்படுகிறான். பண்டுகாபய மன்னனால் தலைநகராக தெரிந்தெடுக்கப்பட்டு நிர்மாணிக்கப்பட்ட அனுராதபுரம் இலங்கையின் கோனாட்சியின் முதல் உத்தியோகபூர்வ தலைநகரம் என்று புகழப்படுவது இங்கு நோக்கத்தக்கது.

அனுராதபுரத்தினை தலைநகராக கொண்டு ஆட்சி செய்த மன்னர்களினை பட்டியல்படுத்தி நோக்குவது இலங்கை வரலாற்றின் தொடர் தன்மையினை அறிய அவசியமாகின்றது. அந்த வகையில் முதல் மன்னனாக நோக்கப்படுபவன் பண்டுகாபயனாவான். இவன் கி.மு 437இல் முதல் உத்தியோகபூர்வ தலைநகரமாக அனுராதபுரத்தினை தெரிவுசெய்து ஆட்சி செய்தான். இவனிற்குப் பின் அவனது மகனான மூத்தசிவன் கி.மு 367இலும், அவனது மகனான தேவநம்பிய தீசன் கி.மு 307 இலும், உத்தியன், மகாசிவன் சூரதீசன் ஆகியோர் முறையே கி.மு 267, கி.மு 257, கி.மு 247 ஆகிய ஆண்டுகளிலும் அதனைத் தொடர்ந்து அந்நிய நாட்டவர்களான குதிரை வியாபாரிகளாக வந்து ஆட்சியினைக் கைப்பற்றிய சேனனும் குத்திகனும் கி.மு 237இல் ஆட்சியக் கைப்பற்றினர் என்பது கூறத்தக்கது.

சேனனும் குத்திகன் என்ற அந்நிய நாட்டவர்களிடமிருந்து ஆட்சியினைக் கைப்பற்றி அசேல மன்னன் கி.மு 215 இல் ஆட்சியினைக் கைப்பற்றியாண்டான். அசேலனைக் கொன்று சோழ மன்னனான எல்லாளன் கி.மு 205இல் ஆட்சியினைக் கைப்பற்றி 44 ஆண்டுகள் இலங்கையினை ஆட்சி செய்தான். எல்லாளனைக் கொன்று துட்டகாமினி கி.மு161 இல் ஆட்சியினை முன்னெடுத்தான். இவனின் பின்னர் சத்தாதீசன், தூலத்தனன், இலஞ்சதீசன், காலாட்நாகன் ஆகிய மன்னர்களும் அதன் பின்னர் வட்டகாமினி அல்லது வலகம்பாவும் (கி.மு104) இவனிற்கு பின்னர் ஐந்து தமிழ் அரசர்களும் (கி.மு103- கி.மு088) பின்னர் தமிழ் அரசனிடமிருந்து மீண்டும் ஆட்சியினை வட்டகாமினி கைப்பற்றி கி.மு88 முதல் ஆட்சியினைத் தொடர்ந்தான். அதன் பின்னர் மகாசூளி மகாதீசன்(கி.மு76), சேரநாகன் (கி.மு62), தீசன்(கி.மு50), சிவன், வடுகன், தாருபாதிகதீசன்(கி.மு47), நிலியன், அனுலா, குடகன்னதீசன்(கி.மு42), பாதிகாபயன்(கி.மு20), மகாத்திக மகாநாகன்(கி.மு9), ஆமந்த காமினி (கி.மு21), கனிரசானுதீசன், சூலாபாயன், சீவலி முதலியோர் ஆட்சி செலுத்தினர்.

கி.மு 35 இன் பின்னரான மூன்று ஆண்டுகள் ஆட்சிசெய்த அரசர்கள் பற்றிய தகவல் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. கி.மு38 இல் இளநாகனும், பின்னர் சந்தமுகசிவன், யசலாலகதீசன், சுப்பாராசன் என்போர் ஆட்சி செய்தனர். வசபன் கி.மு 66ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தான். வங்கனாசிகதீசன் (கி.பி 110), 1ஆம் கஜபாகு (கி.பி 113), மகல்லநாகன் (கி.பி 135), பாதிகதீசன் (கி.பி 141), கனிட்டதீசன், குச்சநாகன், குஞ்சநாகன், 1ஆம் சிறீநாகன், வோகரிக்கதீசன், அபயநாகன், 2ஆம் சிறிநாகன், விஜயகுமாரன், சங்கதீசன், சங்கபோதி(சிறிசங்கபோ), கோதகாபயன், 1ஆம் சேட்டதீசன் ஆகியோர் கி.பி 165- கி.பி 277வரையும், மகாசேனன்(கி.பி 277), சிறீ மேகவண்ணன், 2ஆம் சேட்டதீசன், புத்ததாசன், உபதீசன், மகாநாமன், சோதிசேனன், சத்தகாகன், மித்தசேனன் ஆகிய மன்னர்கள் கி.பி 301- கி.பி 435 வரையும்,அதன் பின்னர் ஆறு தமிழர்கள் ஆட்சிசெய்தனர்.

கி.பி463 ஆம் ஆண்டு தமிழ் அரசனிடமிருந்து ஆட்சியினைக் கைப்பற்றி தாதுசேன்னன் ஆட்சிபுரிந்தான். அவனிற்கு பின்னர் மகனான காசியப்பன்(கி.பி 479-527 வரை கிகிரியாவை ஆட்சி செய்தான். பின்னர் 1ஆம் மொகலான(கி.பி 497), குமார தாதுசேனன், கீர்த்திசேனன், சிவன், உபதீசன், அம்பசாமநேர சிலாகால, தாதாப்பபூதி, 2ஆம் மொகலானா, கீர்த்தி ஸ்ரீமேகவண்ணன், மகாநாகன் ஆகியோர் கி.பி 515- கி.பி 561வரைக்கும் ஆட்சி செய்தனர். பின்னர் 1ஆம் அக்கபோதி(கி.பி 564), 2ஆம் அக்கபோதி (கி.பி598), சங்கதீசன், தல்லமொகலானா, சிலாமேகவண்ணன், 3ஆம் அக்கபோதி, 3ஆம் சேட்டதீசன், 3ஆம் அக்கபோதி(மீண்டும் ஆட்சி), தாதோபதீசன், 2ஆம் காசபன், 1ஆம் த்ப்புலன், 2ஆம் தாதோபதீசன், 4ஆம் அக்கபோதி, தத்தன், உண்ணனாகர அத்ததாத, மானவரம்மன், 5ஆம் அக்கபோதி, 3ஆம் காசபன், 1ஆம் மகிந்தன், 6ஆம் அக்கபோதி, 7ஆம் அக்கபோதி, 3ஆம் காசியப்பன், 2ஆம் மகிந்தன், 2ஆம் தப்புலன், 3ஆம் மகிந்தன், 8ஆம் அக்கபோதி, 3ஆம் தப்புலன், 9ஆம் அக்கபோதி, 1ஆம் சேனன், 2ஆம் சேனன், 1ஆம் உதயன், 4ஆம் காசியப்பன், 5ஆம் காசியப்பன், 4ஆம் த்ப்புலன், 2ஆம் உதயன், 3ஆம் சேனன், 3ஆம் உதயன், 4ஆம் சேனன், 4ஆம் மகிந்தன், 5ஆம் சேனன் ஆகியோர் கி.பி 608- கி.பி 1001 வரைக்கும் ஆட்சி செய்தனர் பின்னர் ஆட்சிப்பீடம் ஏறிய 5ஆம் மகிந்தன்  அனுராதபுர இராசதானியின் இறுதி மன்னனாவான். பின்னர் ராஜராஜ சோழனது ஆதிக்கம் இலங்கையில் ஏற்பட்டமையினைத் தொடர்ந்து இராசதானி பொலனறுவைக்கு இடம் மாற்றப்பட்டது.

அனுராதபுர இராசதானியில் மன்னர்கள் சிறப்பிடம் பெற காரணமாக அமைந்ததில் அம்மன்னர்கள் ஆற்றிய நீர்ப்பாசனத்திற்கான பங்களிப்பு முதன்மையானதாகும். இலங்கையில் குடியேறிய ஆரியர்கள் நீர்ப்பாசன முறைகளை அறிந்தவர்களாகவிருந்தனர். இலங்கையின் நதிக்கரைகளை மையமாக் கொண்டு ஆதி ஆரியர் குடியேற்றங்களை அமைத்தனர். இவர்கள் நெற்செய்கை முறையை அடிப்படையாகக் கொண்ட வாழ்க்கை முறையைப் பின்பற்றினர். காலப்போக்கில் ஏற்பட்ட சனத்தொகைப் பெருக்கமானது நீர்ப்பாசனம் பற்றிய எண்ணப்பாட்டினை ஏற்படுத்தியது. எனினும் ஆரியர் வழிவந்த சிங்களவர் நுட்பமும், சிக்கலும் நிறைந்த பாரிய  நீர்த்தேக்கங்களையும், பல மைல்களுக்குச் செல்லும் கால்வாய்களையும் பின்னரே இலங்கையில் விருத்தி செய்தனர். 

புராதன காலத்தில் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட நீர்ப்பாசன நடவடிக்கைகள் தொடர்பாக பார்க்கின்ற வேளையில் இலங்கை உலர் வலயம் நீர்ப்பாசன நடவடிக்கைகள் தொடர்பில் பல சிறந்த வாய்ப்புக்களைக் கொண்டிருந்தது. இலங்கையின் நதிகள் நீர்ப்பாசனத்திற்கான உயிர்நாடியாக அமைந்தன. இவை வற்றாத நதிகளாகவும், கிளை நதிகளைக் கொண்டும், இரு பருவக் காற்றுக்கள் மூலம் மழை பெறும் நதிகளாகவும் காணப்பட்டமை யானது நதிகளை அடிப்டையாகக் கொண்ட நீர்ப்பாசன விருத்திக்கு வழிசமைத்தது. சமகாலத்தில் நீர்ப்பாசன அறிவும், தரைத்தோற்ற சிறப்புக்களும் ஒன்று சேர்ந்து நீர்ப்பாசன உருவாக்கத்திற்கு வித்திட்டுக்கொடுத்தன.

அனுராதபுர மன்னர்கள் கையாண்ட இராசகாரிய முறையானது நீர்ப்பாசன விருத்தியினைத் துரிதப்படுத்தியது எனலாம். இராசகாரிய முறையில் ஒரு பிரிவாக நாட்டில் வயது வந்த ஆண்கள் ஆண்டொன்றில் குறிப்பிட்ட நாட்களுக்கு அரசுக்கு இலவசமாக சேவை செய்ய வேண்டும் என்ற முறைமை காணப்பட்டமையானது நீர்ப்பாசன விருத்திக்கு மிக முக்கிய காரணமாய் அமைந்தது. இலங்கையின் அனுராதபுர நீர்ப்பாசன வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு 2 கட்டங்களாக வகுத்து நோக்குவோருமுளர். அந்த வகையில் முந்திய அனுராதபுரக் காலம், பிந்திய அனுராதபுரக் காலம் என வகுப்பர். முந்திய காலகட்டமானது ஆரம்பம்முதல் 1 ஆம் உபதிஸ்ஸன் வரையான மன்னர்கள் நீர்ப்பாசனத்திற்கு ஆற்றிய பங்களிப்பினை விளக்கும் அதே வேளை பிந்திய அனுராதபுர காலமானது தாதுசேனன் முதல் 5ஆம் மகிந்தன் வரையிலான காலத்தினை உள்ளடக்கியுள்ளது.

ஆரம்ப காலக் குளங்கள் கால்வாய்கள் அளவில் சிறியதாக கட்டப்பட்டன. இவை பற்றி கல்வெட்டுக்களும் காலவேடுகளும் கூறுகின்றன. குளங்களும், கால்வாய்களும் பௌத்த சங்கத்திற்கு தானமாக வழங்கப்பட்டமை பற்றியும் பிராமிச் சாசனங்களில் கூறப்பட்டுள்ளது.  பண்டைய குளங்களில் விவசாயத் தேவை நிமிர்த்தம் அமைக்கப்பட்ட கிராமக் குளங்களையும் குறிப்பிடல் முக்கியமாகும். இவ்வாறான குளங்கள் அமைப்பதில் கமிக, பருமக முதலிய கிராமத் தலைவர்கள் முன்னோடியாக விளங்கினர். இவர்களது வழிநடத்தலில் சிறியளவினதான குளங்கள் அமைக்கப்பட்டன. பின்னர் கி.மு 1ஆம் நூற்றாண்டளவில் ஏற்பட்டுக்கொண்ட சனத்தொகைப் பெருக்கமானது நீர்ப்பாசன முறையின் வளர்ச்சிக்கு உந்து சக்தியாக அமைந்தது. சமகாலத்தில் கிராமக் குளங்கள், சிறியகுளங்களையடுத்து பெரிய குளங்களை வெட்டும் பணிகள் தொடங்கியது.

உலகில் முதல்தரமான நீர்ப்பாசன பொறிமுறை அமைப்பினை சீனாவே அடைந்திருந்தது. அத்துடன் இலங்கையானது 2ஆவது இடந்தினைப் பெற்றிருந்த்து என்பது இலங்கையின் மிக முக்கிய சிறப்பகும். ஊர்க்குளங்கள் ஊர்பொதுச் சொத்தாக அனுபவிக்கப்பட்டன. கி.பி முதலாம் நூற்றாண்டு காலப்பகுதி முதல் நீர்ப்பாசன பொறிமுறையானது ஒரு திட்டமிட்ட வகையில் இலங்கையில் பலபாகங்களிலும் விரிந்து வளர்ச்சி பெற்றது. இதுவரை காலமும் ஊர்க்குளங்களாக இருந்த குளங்கள் பெருங்குளங்களாக மாற்றம் பெற்றன. கி.மு முதலாம் நூற்றாண்டில் ஏற்பட்டிருந்த நீர்ப்பாசன வளர்ச்சியை விட கி.பி முதலாம் நூற்றாண்டு காலப்பகுதியில் ஏற்பட்டுக்கொண்ட வளர்ச்சியானது சிறப்பாய் அமைந்தது எனலாம்.

மிகவுயர்ந்த்ததும், பரந்த பரப்பில் அமைக்கப்பட்ட நீரியல் நுட்பங்களும் கையாளப்பட்டன. இத்தகு பரந்தளவினதான நீர்ப்பாசன பொறியியல் நுட்பத்தினை மகாசேனனே முதலில் உருவாக்கினான். குளங்களினை அமைப்பதில் அனுராதபுரகால மன்னர்கள் ஆற்றிய பணியானது விவசாயத்தில் தன்னிறைவை அடைய வழிவகுத்தது. எனவே மன்னர்களது பங்களிப்பு தொடர்பாக நோக்குவது மிகவும் முக்கியமானதாகும்.

அனுராதபுர இராசதானியின் முதல் மன்னனான பண்டுகாபயன் என்பான் நிறுவிய பசவக்குளத்துடன்(அபயவாவி) ஏற்பட்டுக்கொண்ட நீர்ப்பாசன வளர்ச்சியானது பிற்பட்ட மன்னர்களது வியத்தகு நீர்ப்பாசன தொழினுட்ப முன்னேற்றத்திற்கு அடிப்படையாய் அமைந்தது என்பதில் ஐயமில்லை. இதனைவிட காமினி வாவி, ஜயவாவி ஆகிய குளங்களை இவன் அமைத்தான். பசவக்குளத்துடன் ஏற்பட்ட இந்த வளர்ச்சி முதன்முதல் ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட நீர்ப்பாசனம் என்ற பெயரை அந்தக் குளம் பெற உதவிற்று. பண்டுகாபய மன்னன் இட்டுக்கொடுத்த வழியானது அவனது பேரன் தேவநம்பியதீசன் உள்ளிட்ட சில மன்னர்கள் சிறிய அளவில் நதிகளை ஆதாரமாகக் கொண்ட குளங்களை நிறுவுவதற்கும், பிற்பட்ட கால மன்னர்கள் பெரியளவினதான குளங்களை அமைப்பதற்கும் வழிகாட்டியது. பண்டுகாபய மன்னனது பேரனான தேவநம்பியதீசன் திஸாவாவியை கட்டினான்.

இளநாகன் காலத்தில் திஸ்ஸ வாவியும், தூரதிஸ்ஸ வாவியும் கட்டப்பட்டன. இவனின் பின்னர் நீர்ப்பாசனத்திற்கு மிக முக்கிய பங்காற்றிய மன்னனாக வசபனைக் கூறலாம். அந்த வகையில் வசப மன்னன் ஆட்சிபுரிந்த சமகாலத்தில் (கி.பி 1ஆம் நூற்றாண்டு) குடிசனப் பரம்பலில் ஒரு மாறுதல் உண்டாயிற்று. வறட்சி வலயத்தில் உள்ள சனத்தொகை அதிகரிக்கலானமைக்கு ஈரவலய மக்களது இடப்பெயர்வு (வறட்சி வலயத்திற்கு) அந்த நூற்றாண்டு நீர்ப்பாசன யுகத்தின் முக்கிய வளர்ச்சிக் கட்டத்தினை எய்த வழிவகுத்தது எனலாம். அந்த நூற்றாண்டில் கிராமக் குளங்கள், சிறிய குளங்கள் என்பவற்றையடுத்து பெரிய குளங்களை கட்டும் முறைமையானது தொடக்கி வைக்கப்பட்டது. இதனைத் தொடக்கி வைத்த மன்னனாக வசபன்(கி.பி 67-111) கொள்ளப்படுகிறான்.

இம்மன்னன் மகவிலச்சி, மானகெட்டிய, கிரிவடுன்ன, நொச்சிப் பொத்தான, அக்வதுற முதலிய பதினொரு குளங்களையும் எலகரஅல முதலிய பன்னிரு கால்வாய்களையும் கட்டுவித்தான் என்று வம்சக் கதைகள் உரைக்கின்றன. இவன் கட்டிய குளங்களில் எருவாவியே மிகப் பெரியதாகும். அதன் சுற்றளவு ஏறத்தாழ மூன்று மைல்களாகும். அத்துடன் இவனது ஆளிசார கால்வாயானது அம்பன் கங்கையில் அமைக்கப்பட்ட அணையிலிருந்து தொடங்கியது. இது மகாசேனன் காலத்தில் பெருப்பிக்கப்பட்டு மின்னேரிக்கு நீர் வசதியளிக்கப் பயன்படுத்தப்பட்டது. 

வசபனது எலகரால கால்வாயானது ஏறத்தாழ 30 மைல் தூரத்திற்கு செல்வதாக தோன்றுகிறது. இதனடிப்படையில் நோக்கின் பெருங்கால்வாயை கட்டும் திறமைமிகு மன்னனாக இவன் கொள்ளப்படுகின்றான். அதே வேளை சமகால மக்கள் பேராறுகளை மறித்து பெருங்கல்லணைகளை கட்டுதல் பற்றியும், சமவுயரக்கோடு பற்றியும், நிலத்தை சமப்படுத்தல் பற்றியும் போதிய அறிவினைக் கொண்டிருந்தனர் என்பதும் வியக்கத்தக்கது. பிற்காலத்தில் தாதுசேனனால் பெருப்பிக்கப்பட்ட கலாவாவியை முதலில் கட்டியவனும் இவனே என்ற வகையிலும் வசபனது நீர்ப்பாசன பங்களிப்பானது தெரியவருகின்றது. வசபனது மற்றுமொரு சிறப்பாக அமைவது இவன் பயன்படுத்திய சுரங்கவழி நீர்ப்பாசன முறையாகும். றண்மசு பூங்காவுக்கு சுரங்கவழியாக நீரைக் கொண்டு சென்றான். கி.பி நான்காம் நூற்றாண்டுடன் ஒப்பிட்டு நோக்குமிடத்து வசபனது குளங்களினை பெருங்குளங்கள் எனக் கொள்வது பொருந்தாது.

மின்னேரியத் தெய்வம் எனக் போற்றப்படுகின்ற மகாசேன மன்னனது நீர்ப்பாசனத்திற்கான பங்களிப்புக்கள் மிக முக்கியமாக கூறப்படவேண்டியவை. மின்னேரியாக்குளம், மாகனதராவ வாவி, குருளு வாவி, ரந்திச (கவுடுலு) நீர்தேக்கம், மாகல்ல வாவி உள்ளிட்ட பதினாறு குளங்கள் இவனது நீர்பாசனத்திற்கான பங்களிப்பினை எடுத்தியம்புகின்றன. அத்துடன் உருளு வாவி, மகாகணதர வாவி, மாகளு வாவி, என்பனவும் இவனால் கட்டப்பட்ட குளங்களே என்று தற்போது கூறப்படுகின்றது. இவனால் கட்டப்பட்ட குளங்களினை முற்பட்ட கால குளங்களுடன் ஒப்பிட்டு கூறுகையில் இவற்றினை பாரிய குளங்கள் என்று அழைப்பர். மேலும் எலகர கால்வாயின் இரண்டாவது கட்டப் பணிகள் மகாசேனனால் முன்னெடுக்கப்பட்டன என்பதும் நோக்கத்தக்கது.

அத்துடன் பப்பதன்ன கால்வாயினை அமைத்த பெருமையும் இவனையே சாரும் கவுடுலு வாவியானது மேலும் நீர் வழங்கலின் பொருட்டு ஒரு சிறு கால்வாய் மூலம் இணைக்கப்பட்டது. இவ்வாறு இணைக்கப்பட்டுள்ள எலகர-மின்னேரி-கவுடுலு திட்டமானது இலங்கை வரலாற்றில் ஒரு பெருந்திருப்பத்தை ஏற்படுத்திய திட்டமாகும். பப்பதன்ன கால்வாயானது அவனை மின்னேரியத் தெய்வமாக போற்றும் வகையிலும்  நீர்வளம் சிறக்கும் வகையிலும் அவனால் அமைக்கப்பட்டது. 

இவனிற்குப் பின்னர் 1ஆம் உபதிஸ்ஸன் நீர்ப்பாசனத்தில் சிறப்பிடம் பெறுகின்றான். இவன் 6 குளங்களை கட்டினான். அதிலே 3 குளங்களையே புதிதாக நிறுவியதாக கூறப்படுகிறது. இவன் கட்டிய குளங்களுள் சிறப்பிடம் பெறுவது தப்போவக் குளமாகும். கி.பி ஐந்தாம் நூற்றாண்டில் சிறப்பிடம் பெறும் இலங்கை மன்னனாக தாதுசேனன் காணப்படுகின்றான். இதற்குக் காரணம் அவனது நீர்ப்பாசன பங்களிப்பே என்பது மிகையாகாது. கலாவாவி, மாத்துகம வாவி, மானமது வாவி, பானண் வாவி முதலிய குளங்களை கட்டினான். இவன் கட்டிய கலாவாவியானது 6380 ஏக்கர் பரப்பினை உள்ளடக்குகின்ற மாபெரும் நீர்த்தேக்கமாகும். வடமேற்கிலுள்ள கலா ஓயாவின் நீரை இந்த நீர்ப்பாசனத்திட்டத்தின் மூலம் உபயோகப்படுத்தியமை அவனது அளப்பரிய சேவையாகும்.

மேலும் இவனது மிக முக்கிய சாதனையாக அமைவது இவன் கட்டிய ஜயகங்கைக் கால்வாயாகும். இக்கால்வாயின் சிறப்பு யாதெனில் நிலத்தில் 95ம்ம் சாய்வுகொண்டதாக நீர் விரைவாக செல்லக்கூடிய வகையில் நீர்ப்பாசனவியல் தொழினுட்பத்தினைப் பயன்படுத்தி அமைத்தமையாகும். வசபனது கலா வாவியினைப் பெருப்பித்து அதனுடன் பலலு வாவியினை இணைத்து கலா-பலலு நீர்த்தேக்கத்தை அமைத்தான் என பூஜாவளி கூறுகிறது. இவன் பதினெட்டு குளங்களை அமைத்ததாக கூறப்படுவதுடன் மகாசேனனது பப்பதன்ன கால்வாயை விரிவுபடுத்தி இருக்கலாம் என்றும் ஊகிக்கப்படுகிறது.

2ஆம் மொகல்லானன்(முகலன்) காலத்திலும் கூறத்தக்க நீர்ப்பாசன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தாதுசேனன், மகாசேனன் ஆகிய மன்னர்களைத் தொடர்ந்து நீர்ப்பாசனத் துறையில் முக்கியப்படுத்தப் படுகின்ற அனுராதபுர மன்னனாக இவன் விளங்குகின்றான். இவன் கட்டிய மூன்று குளங்கள் மல்வத்து ஓயா மூலம் நீரைப் பெற்றன. இவற்றுள் ஒன்றான நாச்சதுவக் குளம் ஜயகங்கையிலிருந்து ஒரு கால்வாயுடன் இணைக்கப் பட்டுள்ளது. அதனால் நீர்வளம் குன்றாமல் காணப்பட்டது. பின்னர் நுவரவாவி, மகாகல்கடவளை என்பவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது.

பதவியாக் குளமும் பெரியளவினதாக இவனால் நிர்மாணிக்கப்பட்ட குளமாகும்.1ஆம் அக்ரபோதி காலத்தில் குருந்து வாவி (தண்ணி முறிப்புக் குளம்), சிரிவட்டமானக வாவி, மாமடுவ வாவி முதலியன கூறத்தக்கன. இவனது குளங்களுள் முக்கியமானது குறுந்து வாவி என்ற தண்ணிமுறிப்புக் குளமாகும். இது முல்லைத்தீவிலுள்ள பெரிய குளமாகும். மேலும் மகாவலி கங்கையில் நிறுவப்பட்டுள்ள மினிப்பே திட்டத்தினை தொடக்கியவனும் இவனே. மின்னேரியாக் குளத்தினை கந்தளாயுடன் இணைக்கும் ஒரு கால்வாயினை வெட்டினான். இவன் கட்டிய மினிப்பே அணையிலிருந்தே பின்னர் மினிப்பே கால்வாய் (முதற்கூறு) ஏற்படுத்தப்பட்டு ஒரு பெரும் நீர்ப்பாசனத்திட்டம் விருத்தி செய்யப்பட்டது என்பது சிறப்பாக கூற வேண்டியதாகும்.

2ஆம் அக்ரபோதியின் நீர்ப்பாசன நடவடிக்கைகளில் பெருங்குளங்களுள் சிறப்பிடம் பெறுவது கங்காதடல வாவியாகும். இவ்வாவி இன்று கந்தளாய் என்ற பெயருடன் சிறப்பிடம் பெறுகின்றது. கண், தலை என்ற 2 பதங்களின் இணைப்பே கந்தளாய் என தட்சிண கைலாய மான்மியம் உரைக்கும் அதே வேளை பல்லவர், சோழர்களுடனான அரசியல், பண்பாட்டுத் தொடர்புகளுடன் இந்து சமய தொடர்புகளையும் இணைத்து தனித்துவமான இடத்தினை வழங்கி சிறப்பிக்கப்படுகின்றமையானது கந்தளாயின் சிறப்பாகும். இதை விடுத்து கிரித்தலைக் குளம், அத்தோட்டை அணை என்பவற்றை கூறலாம். கிரிதலைக் குளத்திற்கு ஆளிசாரக் கால்வாயிலிருந்து ஒரு கிளைக் கால்வாய் வெட்டப்பட்டது. அம்பன் கங்கையின் கிளையாறான களுகங்கையில் அத்தோட்ட-அமுன அணைக் கட்டினை நிறுவி அதிலிருந்து 28 மைல் நீளமான அத்தோட்டை அணையினை அமைத்தான் என்று கூறப்படுகிறது.

கி.பி 7 ஆம் நூற்றாண்டு முதல் 10 ஆம் நூற்றாண்டு வரையிலான காலப் பகுதியினுள் இலங்கையில் புதிய நீர்ப்பாசனங்களை அமைப்பதனை விட ஏலவே அமைக்கப்பட்டிருந்த குளங்கள், கால்வாய்களினை புனரமைக்கும் தேவை நிமிர்த்தம் கவனம் செலுத்தினர். இதற்கு காரணமாக அந்நியப் படையெடுப்புக்கள் இடம்பெற்றமையையும், அதனால் குளங்கள் பழுதடைந்தமையினையும் கூற முடியும். மானவம்மன் என்ற மன்னனது ஆட்சியில் (கி.பி 684-718) அமைதி ஏற்படுத்தப்பட்டாலும் அவனது காலமானது புனரமைப்பு வேலைகளை மேற்கொள்ளவே போதுமானதாக காணப்பட்டதே தவிர புதிய குளங்களை அமைக்கும் பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. இவனைப் போலவே பின்வந்த அனுராதபுர மன்னர்களான 2ஆம் மகிந்தன், 2ஆம் சேனன், 2ஆம் உதயன், போன்ற ஆட்சியாளர்கள் குளங்களையும் காலாய்களையும் நன்னிலையில் பேண பாடுபட்டனர்.

இத்தகு ஏராளமான குளங்கள் அனுராதபுர மன்னர்களால் கட்டப்பட்டிருப்தானது இலங்கையின் நீர்ப்பாசன வளர்ச்சியின் உன்னத நிலையினை அனுராதபுர இராசதானிக் காலம் பெற்றிருந்ததைக் காணமுடிகின்றது. அத்துடன் மன்னர்கள் கையாண்ட புதிய நீர்ப்பாசனப் பொறியியல் நுட்பங்கள் வியக்கத்தக்கன. அதற்கு சான்றாக ஜயகங்கைக் கால்வாயை கூறலாம். அதேபோல் குளமொன்றின் கட்டமைப்பினை எடுத்து நோக்கும் போது அதன் பல்வேறு பகுதிகளும் அதன் செயற்பாடுகளினையும் கருத்திற்கொண்டு குளங்கள் எவ்வளவு சிறப்பான முறையினதாக அமைக்கப்பட்டுள்ளன என்பதனை அறிந்துகொள்ளலாம்.

குளங்களை அமைக்கின்ற போது சுவடுகளை இணைத்து குளக்கட்டை அமைத்தல், சுரங்க வழி நீர்ப்பாசனம், சாய்வுத் தன்மை பயன்படுத்தப்படல், நீரின் வேகம் குறைவான இடங்களில் அணைக்கட்டு அமைக்கப்படல், குளம் பல கூறுகளுடன் அமைக்கப்படல் முதலிய தொழினுட்பங்களை பயன் படுத்தினர். குளத்தினுடைய கூறுகளாக அலைதாங்கி, கலிங்கல் தொட்டி, சுருங்கை, கலிங்கல், நீர்ப்பாசன கால்வாய் முதலியன காணப்படுகின்றன. இதில் அலைதாங்கியானது குளக்கட்டை நீர் அரிப்பிலிருந்து பாதுகாத்தலின் பொருட்டும், கலிங்கல் தொட்டி நீரின் அமுக்கத்தைக் கட்டுப் படுத்தலிற்காகவும், சுருங்கை மேலதி நீரை வெளியேற்றவும், கலிங்கலானது குளத்திலிருந்து நீரை வெளியேற்றவும் பயன்படுத்தப்பட்டன.

இலங்கையில் கட்டப்பட்ட குளங்களில் சில யாரால் கட்டப்பட்டன என்று அறியப்படவில்லை. அவ்வாரான குளங்களாக தப்போவ வாவி(புத்தளம்), வாகல்கட வாவி, பாவற்குளம், வவுனிக் குளம், ஒறிவில வாவி முதலியவற்றைக் கூறலாம். இவை சிதைவுற்ற நிலையில் காணப்படும் அதேவேளை எக்காலத்தில் யாரால் கட்டப்பட்டன என்பது தொடர்பான தகவல் எதனையும் பெற முடியவில்லை.

அனுராதபுர இராசதானின் நீர்ப்பாசனத்தின் விருத்திக்கு பல மன்னர்கள் பங்களிப்புக்களை நல்கியிருப்பினும் சிறப்பான பங்களிப்பினை வழங்கியோர் என்ற வகையில் வசபன், மகாசேனன், தாதுசேனன், 2ஆம் முகலன்(2ஆம் மொகல்லானன்), 1ஆம், 2ஆம் அக்ரபோதி முதலானோரே சிறப்பிடம் பெறுகின்றனர்.

இருப்பினும் பல மன்னர்கள் புனரமைப்பு வேலைகள் மேற்கொண்டுள்ளதையும் அடையாளப்படுத்த வேண்டும். மேலும் இவ்வரசர்கள் இட்டுக்கொடுத்த வழியானது எதிர்காலத்தில் நிலைபெறவுள்ள பொலனறுவை மற்றும் ஏனைய இராசதானிகளில் நீர்ப்பாசனம் விருத்தியடைய உதவிற்று எனலாம்.

About editor 3043 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply