குறள் எண் 0875
தன்துணை இன்றால் பகையிரண்டால் தான்ஒருவன் இன்துணையாக் கொள்கவற்றின் ஒன்று. (அதிகாரம்:பகைத்திறம்தெரிதல் குறள் எண்:875) பொழிப்பு (மு வரதராசன்): தனக்கு உதவியான துணையோ இல்லை; தனக்குப் பகையோ இரண்டு; தானோ ஒருவன்; இந்நிலையில் அப்பகைகளுள் ஒன்றை இனிய துணையாகக் கொள்ள வேண்டும். |
மணக்குடவர் உரை: பகையிரண்டாய்த் தான் ஒருவனாய்த் தனக்குத் துணையும் இலனாயின் அப்பகை யிரண்டினுள் ஒன்றை இனிய துணையாகச் செய்து கொள்க. இஃது இருவரோடு பகைக்கொள்ளலாகா தென்றது. பரிமேலழகர் உரை: தன்துணை இன்று – தனக்கு உதவும் துணையே எனில் இல்லை; பகை இரண்டு – நலிவு செய்யும் பகையோ எனின் இரண்டு; ஓருவன்தான் அவற்றின் ஒன்று இன்துணையாக் கொள்க – அங்ஙனமாய் நின்றவழி, ஒருவனாகிய தான் அப்பகை இரண்டனுள் பொருந்தியது ஒன்றை அப்பொழுதைக்கு இனிய துணையாகச் செய்து கொள்க. (பொருந்தியது – ஏனையதனை வேறற்கு ஏற்றது. அப்பொழுது – அவ்வெல்லும் பொழுது. திரிபின்றாகச் செய்துகொள்க என்பார், ‘இன்துணையா’ என்றார். ஆல்கள்: அசை. இவை இரண்டு பாட்டானும் நட்பாக்கற்பாலது கூறப்பட்டது.) சி. இலக்குவனார் உரை: தனக்குத் துணை இல்லை; பகைவர்களோ இருவர்; தானோ ஒருவன்; (இந்நிலையில்) அவர்களுள் ஒருவரைத் தனது இனிய துணையாக ஆக்கிக் கொள்ளல் வேண்டும். |
பொருள்கோள் வரிஅமைப்பு: தன்துணை இன்றால் பகையிரண்டால் தான்ஒருவன் அவற்றின் ஒன்று இன்துணையாக் கொள்க. பதவுரை: தன்-தனது, தனக்கு; துணை-உதவி; இன்றால்-இல்லாமல்; பகை-பகை; இரண்டால்-இரண்டாக; தான்-தான்; ஒருவன்-ஒருவன்; இன்-இனிய, நல்ல; துணையா-உதவியாக; கொள்க-அடைக; அவற்றின்-அவைகனுள்; ஒன்று-ஒன்று. |
தன்துணை இன்றால் பகையிரண்டால்: இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்: மணக்குடவர்: பகையிரண்டாய்த் தான் ஒருவனாய்த் தனக்குத் துணையும் இலனாயின்; பரிப்பெருமாள்: பகையிரண்டாய்த் தான் ஒருவனாய்த் தனக்குத் துணையும் இல்லாதான்; பரிதி: தனக்குத் துணையில்லாதபோது தன் மாற்றாற்கு இரண்டு பகை உண்டாகில்; காலிங்கர்: தன்னொடு நட்பாகிய துணை என்பது ஒன்று இலதாயின், தனக்குப் பகை இரண்டாயின்; பரிமேலழகர்: தனக்கு உதவும் துணையே எனில் இல்லை; நலிவு செய்யும் பகையோ எனின் இரண்டு; [நலிவு செய்யும்-வருத்தும்]’தன்னொடு நட்பாகிய துணை என்பது ஒன்று இலதாயின், தனக்குப் பகை இரண்டாயின்’ என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.இன்றைய ஆசிரியர்கள் ‘தனக்கோர் துணையில்லை; பகையோ இரண்டு’, ‘தனக்கு உதவும் துணை இல்லை; துன்பம் செய்யும் பகைகளோ இரண்டு உள்ளன’, ‘(துணை வலிமை இல்லாமல்) தனியனாக இருக்கின்ற ஒருவன் (போர் மூண்டுவிட்டபோது தனக்குத்) துணைவரோ, இல்லாவிட்டால்’, ‘தனக்குத் துணைவர் ஒருவரும் இல்லாதிருக்கப் பகைவர் இருவர் ஒருங்கு சேர்ந்திருப்பாரானால்’ என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர். தனக்கோர் துணையிலதாயின், தனக்குப் பகை இரண்டு ஆயின் என்பது இப்பகுதியின் பொருள்.தான்ஒருவன் இன்துணையாக் கொள்கவற்றின் ஒன்று: இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்: மணக்குடவர்: அப்பகை யிரண்டினுள் ஒன்றை இனிய துணையாகச் செய்து கொள்க. மணக்குடவர் குறிப்புரை: இஃது இருவரோடு பகைக்கொள்ளலாகா தென்றது. பரிப்பெருமாள்: பகை யிரண்டினுள் ஒன்றை இனிய துணையாகச் செய்து கொள்க. பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது இருவரோடு பகைக் கொள்ளத்தகாது என்றது. பரிதி: அவர்களில் பெலவானவனைத் தனக்குத் துணையாகக் கொள்வர் என்றவாறு. காலிங்கர்: அன்னனாகிய ஒருவன் தான் இனி யாதோ செயற்பாலது எனின், அப்பகை இரண்டின் ஒன்றை யாதானும் ஒருவாற்றான் தனக்கினிய துணையாகப் பிரித்துக்கொள்க என்றவாறு. பரிமேலழகர்: அங்ஙனமாய் நின்றவழி, ஒருவனாகிய தான் அப்பகை இரண்டனுள் பொருந்தியது ஒன்றை அப்பொழுதைக்கு இனிய துணையாகச் செய்து கொள்க. பரிமேலழகர் குறிப்புரை: பொருந்தியது – ஏனையதனை வேறற்கு ஏற்றது. அப்பொழுது – அவ்வெல்லும் பொழுது. திரிபின்றாகச் செய்துகொள்க என்பார், ‘இன்துணையா’ என்றார். ஆல்கள்: அசை. இவை இரண்டு பாட்டானும் நட்பாக்கற்பாலது கூறப்பட்டது. [திரிபின்றாக – மாறுபாடில்லாததாக; ஆல்கள் – இன்றால், இரண்டால் என்பனவற்றிலுள்ள ஆல்கள்.]’ அப்பகை யிரண்டினுள் ஒன்றை இனிய துணையாகச் செய்து கொள்க’ என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.இன்றைய ஆசிரியர்கள் ‘ஒரு பகையை நல்ல துணையாக்கிக் கொள்க’, ‘அந்நிலையில், ஒருவன் அவ்விரு பகையுள் இயைந்த ஒன்றினைத் தனக்கு இனிய துணையாகச் செய்து கொள்ள வேண்டும்’, ‘(அப்போதுற்ற) பகைவரோ, (ஆகிய இந்த) இரண்டில் ஒன்றை தனக்கு இனிய உதவியாக்கிக் கொள்ள வேண்டும்’, ‘அவர்களுள் ஒருவரைத் தனக்கு நல்ல துணையாக்கிக் கொள்ளவேண்டும்’ என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.அவ்விரு பகையுள் ஒன்றினைத் தனக்கு நல்ல துணையாகக் கொள்க என்பது இப்பகுதியின் பொருள். |
நிறையுரை: தனக்கோர் துணையிலதாயின், தனக்குப் பகை இரண்டு ஆயின் அவ்விரு பகையுள் ஒன்றினைத் தனக்கு நல்ல துணையாகக் கொள்க என்பது பாடலின் பொருள். ‘அவற்றின் ஒன்று’ குறிப்பது என்ன? |
பகைவர்களைப் பிரித்தாண்டுத் துணையாக்கிக் கொள்ளலாம். தனக்கு ஒரு துணை இல்லாதபோது, பகை இரண்டா யிருக்கும்போது, அந்தப் பகைகளுள் ஒன்றைத் தனக்கு இனிய துணையாகுமாறு செய்து கொள்ளல் வேண்டும். தனக்குத் துணை இல்லாதபோது, இரண்டு பகைவர்களை ஒரே நேரத்தில் தேடிக்கொள்ளக் கூடாது. எந்தத் துணையும் இல்லாதவன் இரண்டு பகைவர்களுக்கு இடையிலே இருக்கும் நிலை உண்டானால் துன்பம்தான். தான் துணையின்றி தனியனாக இருக்கும்போது, இருவர் தம்மேல் ஒருங்கே பகை கொள்ள நேரிட்டால் அப்பகைவர்களின் திறம் தெரிந்து யார் தாம் வெல்வதற்குத் துணை செய்வாரோ அவரைப் பகையினின்று நீக்கித் தனக்குத் துணையாகக் கொண்டு மீளலாம். இவ்வாறாக, தமக்கு ஒரு துணை கிடைக்கிறது; மற்றும் ஒரு பகையும் குறைகிறது. அதனால் மற்ற பகையை எதிர்த்து வெல்வதும் எளிதாகிறது. பகைகளைக் குறைப்பது மற்றும் தோழமைகளைக் கூட்டுவது வெற்றிக்கு வழி எனச் சொல்லப்படுகிறது. |
‘அவற்றின் ஒன்று’ குறிப்பது என்ன? தொல்லாசிரியர்களில் பரிதி ‘தன் மாற்றாற்கு இரண்டு பகை உண்டாகில் அவர்களில் வலியுள்ளவனைத் தனக்குத் துணையாகக் கொள்க’ என்கிறார். மற்றவர்கள் தன் பகையிரண்டிலொன்றை நட்பாக்கிக் கொள்ளலாம்’ என்கின்றனர். பரிமேலழகர் பகை இரண்டனுள் ஒன்றைப் போர் செய்து வெல்லுங்காலத்தில் வென்ற அப்பகையைத் துணையாகக் கொள்க என்கிறார்; இதனாலேயே அது இன்துணை என்று கூறப்பட்டது எனவும் சொல்கிறார். ‘இத்தகைய சூழலில் பகைவனை நட்பினனாகவோ அல்லது அவன் துணைவனைத் தன் துணைவனாகவோ கொள்ளுதல் சிறப்பு’ எனப பகைவனின் துணையைத் துணையாகக் கொள்ளலாம் என்று ஓர் உள்ளது. பகைவரின் துணையும் பகைவனாகவே கருதப்பெறுவதால் இவ்வுரை பொருத்தமாகாது. ‘அவற்றின் ஒன்று’ என்றதற்கு மாற்றார்க்குப் பகைவரில் ஒன்று, பகைவன்-பகைவன்துணை இவற்றுள் ஒன்று, தம் பகைவர்களில் ஒன்று என வேறுவேறு வகையாக விளக்கினர். இருவருமே தனக்கு நேர் பகைவர் எனக் கொண்டு, தானொருவனாயிருப்பவன், தனக்குத் துணையின்மையைக் கருதி தன் பகையிரண்டில் ஒன்றைத் தனக்கு இனிய துணையாகக்கொள்க என்ற பொருள் சிறந்தது. |
தனக்கோர் துணையிலதாயின், தனக்குப் பகை இரண்டு ஆயின் அவ்விரு பகையுள் ஒன்றினைத் தனக்கு நல்ல துணையாகக் கொள்க என்பது இக்குறட்கருத்து. பகை எண்ணிக்கையைக் குறைத்தல் பகைத்திறம்தெரிதல் ஆம்.தனக்கு ஒரு துணையில்லாதாயின், பகை இரண்டு ஆயின், ஒரு பகையை நல்ல துணையாக ஆக்கிக் கொள்க, |
முகப்பு
குறள் திறன் தேர்வு குறள் திறன் தேர்வு
கணிஞன் குறள் திறன் பட்டியல்
Collapse அதிகார விளக்கம் தேர்வு அதிகார விளக்கம் தேர்வு
கணிஞன் அதிகார விளக்கப்பட்டியல்
திருவள்ளுவர் திருவள்ளுவர்
வள்ளுவர்
திருவள்ளுவமாலை
குறள் குறள்
திருக்குறள்
அறம்
பொருள்
காமம்
பாட வேறுபாடு
குறளில் குறைகள்?
நறுஞ்செய்திகள்
Collapse குறளும் உரையும் குறளும் உரையும்
உரை ஆசிரியர்கள்
Collapse அதிகார விளக்கம் தேடல் அதிகார விளக்கம் தேடல்
அதிகாரத் தெரிவில்
அனைத்து அதிகாரங்கள்
Collapse குறள்-உரை தேடல் குறள்-உரை தேடல்
குறள் எண் வகை
அதிகாரம் வகை
இயல் வகை
பால் வகை
Leave a Reply
You must be logged in to post a comment.