சர்வதேசத்தை புறந்தள்ளி சிறிலங்கா அரசினால் செயல்பட முடியுமா?

சர்வதேசத்தை புறந்தள்ளி சிறிலங்கா அரசினால் செயல்பட முடியுமா?

இரா. துரைரத்தினம்

நல்லிணக்கம், பொறுப்பு கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவிப்பதாக சர்வதேச சமூகத்திற்கு உறுதியளித்த இலங்கை அரசாங்கம் அதனை அப்பட்டமாக மீறி வருகிறது.

மனித உரிமை விடயங்களுக்கும், சுயாதீன ஆணைக் குழுக்களுக்கும் சாவு மணி அடிக்கும் 20வது திருத்த சட்டத்தை கொண்டு வருவதன் மூலம் இலங்கையின் எதிர்காலம் அச்சம் நிறைந்ததாக இருக்க போகிறது என்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நாயகம் மிச்செல் பச்லெட் அவர்களின் எச்சரிக்கையுடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 45வது கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை ஜெனிவாவில் ஆரம்பமாகியிருக்கிறது.

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் கடுமையான பிரயாண கட்டுப்பாடுகளை சுவிட்சர்லாந்து அரசு விடுத்திருக்கும் நிலையில் மனித உரிமை பேரவையின் தலைவர் எலிசபெத் டிசி தலைமையில் ஒக்டோபர் 6ம் திகதி வரையான மூன்று வாரகாலத்திற்கு இக்கூட்டம் நடைபெறுகிறது.ஐ.நா.மனித உரிமை ஆணையாளரின் குற்றச்சாட்டுக்களை சிறிலங்கா அரச பிரதிநிதி மறுத்திருக்கிறார். தேவையற்ற குற்றச்சாட்டு என ஒற்றை வார்த்தையில் அவர் இதனை தெரிவித்திருக்கிறார்.

அமெரிக்கா, பிரித்தானியா, இந்தியா, பிரேசில், ஸ்பெயின், உட்பட 51 நாடுகளை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட அதிக ஆபத்தான நாடுகளாக பட்டியலிட்டிருக்கும் சுவிட்சர்லாந்து அரசு இந்த நாடுகளிலிருந்து வருபவர்கள் இரு வார கால சுய தனிப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுத்த வேண்டும் என அறிவித்திருக்கிறது.

ஜெனிவா மாநிலத்தின் அயல்நாடாக இருக்கும் பிரான்ஸ் நாட்டின் 14 மாநிலங்களையும், சுவிட்சர்லாந்தின் மற்றுமொரு அயல் நாடான ஒஸ்ரியாவின் தலைநகரான வியன்னா மாநிலத்தையும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட அதிக ஆபத்தான பகுதிகளாக சுவிட்சர்லாந்து அறிவித்துள்ளது.

நாடுகளின் தலைவர்கள், வெளிவிவகார அமைச்சர்கள் கலந்து கொள்ளாத நிலையில் ஜெனிவாவில் உள்ள உறுப்பு நாடுகளின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதிகள் இக்கூட்டத்தொடரில் கலந்து கொண்டுள்ளனர்.சில நாடுகளின் தலைவர்கள் காணொளி மூலம் உரையாற்றினர்.

தேசிய மனித உரிமை ஆணைக்குழு உட்பட ஆணைக்குழுக்களின் சுயாதீனத்தன்மையை பறிக்கும் வகையில் 20வது அரசியல் யாப்பு திருத்தத்தை கொண்டு வர இருப்பதாகவும், 30.1 தீர்மனத்திலிருந்து விலகியதன் மூலம் சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளை மீறி வருவதாகவும் ஐ.நா.மனித உரிமை ஆணையாளர் இலங்கை அரசாங்கம் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார்.

போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட இராணுவ அதிகாரிகள் சிவில் நிர்வாக சேவைக்கு அமர்த்தப்படுதல், படுகொலை வழக்கில் மரணதண்டனை தீர்ப்பு வழங்கப்பட்ட இராணுவ அதிகாரிக்கு பொது மன்னிப்பு வழங்கியது போன்ற செயல்கள் நீதிக்கு புறம்பான செயல்கள் என்றும் அவர் அதிருப்தி தெரிவித்தார்.

இலங்கை தொடர்பான அவரின் உரை இரு நிமிடயங்களுக்கு உட்பட்டிருந்தாலும் புதிய அரசாங்கத்தின் போக்கு பற்றி தமது அதிருத்தியையும், கவலையையும் வெளியிட்டார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் உரை தொடர்பாக நாடுகளின் பிரதிநிதிகள் தமது கருத்துக்களை முன்வைத்தனர்.

2015ம் ஆண்டு இலங்கை தொடர்பான தீர்மானத்தை கொண்டு வந்த நாடுகளுக்கு தலைமை தாங்கிய அமெரிக்கா தற்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையிலிருந்து விலகி உள்ளதால் பிரித்தானியா தலைமையில் கனடா, சுவிட்சர்லாந்து, ஜேர்மனி, மசெடோனியா மற்றும் மொன்டிநீக்ரோ ஆகிய நாடுகள் இலங்கை தொடர்பான விடயங்களை ஐ.நா.மனித உரிமை பேரவையில் கையாண்டு வருகின்றன.

இந்த நாடுகளின் சார்பில் உரையாற்றிய பிரித்தானியாவின் மனித உரிமை விவகாரங்களுக்கான தூதுவர் ரீட்டா பிரென்ஞ் இலங்கையின் உள்நாட்டு நல்லிணக்க செயற்பாடுகளில் நம்பிக்கையில்லை என தெரிவித்தார்.

<p>ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தனது உரையில் இலங்கை குறித்து வெளியிட்ட கரிசனைகளை கருத்தில் எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.அடுத்த மார்ச் மாதம் நடைபெற இருக்கும் 46வது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பாக ஐ.நா.மனித உரிமை ஆணையாளர் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க உள்ளார்.

தற்போது நடைபெற்று வரும் கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான தீர்மானங்கள் முன்வைக்கப்படாத போதிலும் உண்மையை ஊக்குவித்தல், நீதி மற்றும் இழப்பீடுகள் மீள நிகழாமைக்கான ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் பப்லோ டிகிரெவ் சமர்ப்பித்திருக்கும் அறிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ஏற்கனவே இலங்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டிருக்கும் இந்த அறிக்கை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் ஒக்டோபர் 2ம் திகதி சமர்ப்பிக்கப்பட்டு உறுப்பு நாடுகளினால் விவாதிக்கப்பட உள்ளது. அன்றைய தினம் இந்த அறிக்கை தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் தமது நிலைப்பாட்டை தெரிவிக்க உள்ளது.95 விடயங்களை உள்ளடக்கிய 19 பக்கங்களை கொண்ட இந்த அறிக்கையில் நிலைமாறு கால நீதி விவகாரத்தை இலங்கை அரசாங்கம் கையாண்ட விதம் குறித்து சிறப்பு அறிக்கையாளர் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

உண்மை நீதி, மனித உரிமை விடயங்களில் இலங்கை தோல்வியடைந்த நாடு என அவர்  வர்ணித்திருக்கிறார். உண்மைத்தன்மையோடும், நேர்மையோடும் இலங்கை செயல்படத்தவறியுள்ளதாகவும் அத்தகைய சம்பவங்களையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உண்மையை கண்டறியும் நீதி விசாரணை ஆணைக்குழு ஒன்றை நியமித்து நீதியை வழங்குவதாக 2017ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இலங்கை அரசாங்கம் ஐ.நா.மனித உரிமை பேரவைக்கு உத்தரவாதம் வழங்கியிருந்தது.

இதன் முன்னேற்றம் பற்றி ஐ.நா.மனித உரிமை சபை வினவியபோது நீதி விசாரணை ஆணைக்குழுவுக்கான வரைவு சட்டம் விரைவில் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படும் என இலங்கை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில் இந்த ஆணைக் குழுவை நியமிப்பதற்கான தாமதம் ஏன் என ஐ.நா.மனித உரிமை சபையில் கேள்வி எழுப்பிய போது அதற்கு பதிலளித்த இலங்கை வெளிவிவகார அமைச்சர், இதன் வரைவு சட்டம் இன்னும் அமைச்சரவையின் பரிசீலனையில் இருப்பதாக கூறினார். இவ்வாறு சர்வதேசத்திற்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாது காலம் கடத்தியதாக அவர் அந்த அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளார்.யுத்தம் முடிந்த பின்னர் நிலைமாறு கால நீதி விவகாரத்தை இலங்கை கையாண்ட விதம் குறித்தும் ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிக்கையாளர் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

நிலைமாற்றுக் காலநீதி திட்டங்களை வடிவமைத்து முன்னெடுப்பதில் இலங்கை அரசு மிகவும் மந்தக நிலையில் செயற்பட்டதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடையாளப்படுத்தப்பட்ட 20 படுகொலை சம்பவங்கள் தொடர்பாக விசாரணை நடத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க வேண்டும் என ஐ.நா.மனித உரிமை பேரவை கேட்டிருந்தது.

திருகோணமலை 5 மாணவர்கள் படுகொலை, கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவம், மூதூரில் 17 மனித நேயப்பணியாளர்கள் படுகொலை, நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் பரராசசிங்கம், நடராசா ரவிராஜ் ஆகியோரின் படுகொலைகள், ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை உட்பட முக்கியமான 20 படுகொலை சம்பவங்கள் பற்றி பக்கசார்பற்ற நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐ.நா. கேட்டிருந்தது.

இந்த வழக்கு விசாரணைகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை, குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை என்றும் இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


<p>வன்செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள், காணாமல் போனவர்கள், தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் பல ஆணைக்குழுக்களை நியமித்து விசாரணை நடத்திய போதிலும் அந்த ஆணைக்குழுக்களின் பரிந்துரைகளை அரசாங்கம் கணக்கில் எடுக்கவில்லை என்றும் ஐ.நா.விசேட அறிக்கையாளர் தெரிவித்திருக்கிறார்.

இந்த ஆணைக்குழுக்கள் சமூகங்களிடையே குறிப்பிடத்தக்க நம்பிக்கை இடைவெளியை குறைப்பதற்கும் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளை மீட்டெடுப்பதற்கும் பங்களிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

1.இலங்கையில் 1977 ஓகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் நடந்த வன்முறைகள் பற்றி விசாரிக்க சன்சோனி ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. 1991- 1993 காலப்பகுதியில் அரசியல் பழிவாங்கல்கள் பற்றி விசாரிப்பதற்காக ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. காணாமல் போனவர்கள் பற்றி விசாரிப்பதற்காக 1994ம் ஆண்டு மூன்று மாகாணங்களில் விசாரணை ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டன. இந்த விசாரணைகளில் பெண்கள், சிறுமிகள், இளைஞர்கள் உட்பட 27 526 பேர் கடத்தப்பட்டு காணாமல் போனதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

4.இலங்கை முழுவதும் காணாமல் போனவர்கள் பற்றி விசாரிக்க 1998ம் ஆண்டு ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.

5.16 சம்பவங்களை விசாரிக்க 2006ம் ஆண்டு இறுதியில் உடலகம ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.

6.போர் முடிந்த பின் 2010ம் ஆண்டு கற்ற பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.

7.2013ம் ஆண்டு காணாமல் போனவர்கள் தொடர்பான முறைப்பாடுகள் மற்றும் போர்க்குற்றச்சாட்டுக்கள் பற்றி விசாரிக்க பரணகம ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.இந்த ஆணைக்குழுக்களின் பரிந்துரைகள் எதனையுமே சிறிலங்கா அரசாங்கம் கவனத்தில் எடுக்கவில்லை என இந்த அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.”போர்வீரர்கள் ஒருபோதும் விசாரணைக்கு வரமாட்டார்கள்” போன்ற இலங்கை அரசின் சொல்லாடல் பற்றியும் சிறப்பு அறிக்கையாளர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார்.

மனித உரிமைச் சட்டத்தை அல்லது போர் சட்டங்களை மீறிய எவரும் ஹீரோ என்று அழைக்கப்படுவதற்கு தகுதியற்றவர் என்ற உண்மையை கவனிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சில பரிந்துரைகளையும் சிறப்பு அறிக்கையாளர் இந்த அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.தெளிவான காலக்கெடுவை உள்ளடக்கிய ஒரு விரிவான இடைக்கால நீதி மூலோபாயத்தை உருவாக்குதல்,இடைக்கால நீதியின் நோக்கங்களில் ஒன்று நம்பிக்கையை வளர்ப்பது என்பதால், நம்பிக்கையை வளர்ப்பதற்கான பிற நடவடிக்கைகளை அரசாங்கம் கருத்தில் கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்துசெய்து, உடனடியாக சர்வதேச பயங்கரவாத நடைமுறைகளை கடைபிடிக்கும் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்துடன் அதை மாற்றவேண்டும்.உண்மை மற்றும் நீதியை தேடும் வழிமுறைகள் குறித்த பரிந்துரைகள்உண்மை மற்றும் நீதியை தேடுவதைப் பொறுத்தவரை, முந்தைய ஆணைக்குழுக்கள் அனைத்தின் அறிக்கைகளையும் அரசாங்கம் வெளியிட்டு அவற்றின் பதிவுகள் மற்றும் காப்பகங்களை எதிர்கால இடைக்கால நீதி பொறிமுறைக்கு கிடைக்கச் செய்ய வேண்டும்.

போர்க்கால பாதிப்புக்கள் குறித்து உண்மை கண்டறிவதற்கான விசாரணை ஆணைக்குழுவை அரசாங்கம் தாமதிக்காது நிறுவ வேண்டும்.

உண்மை ஆணையத்தை நிறுவுவதற்கான சட்டம் உடனடியாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும், மற்றும் நீதி தொடர்பான நடவடிக்கைகள் குறித்த பரிந்துரைகளும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறிலங்கா அரசிடம் இந்த அறிக்கை ஏற்கனவே கையளிக்கப்பட்டிருக்கிறது. இதற்கான பதிலை சபையில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின் சிறிலங்கா வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நாயகம், பிரித்தானியா உட்பட மேற்குலக நாடுகள், உண்மை மற்றும் நீதி தொடர்பான சிறப்பு அறிக்கையாளர் ஆகியோர் இலங்கை அரசின் போக்கு குறித்து கண்டனமும் விமர்சனமும் முன் வைத்துள்ள நிலையில் சிறிலங்கா அரசு சர்வதேசத்திற்கு எத்தகைய பதிலை வழங்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு உறுப்பு நாடுகளிடமும், மனித உரிமை அமைப்புக்களிடமும் காணப்படுகிறது.

ஐ.நா. மனித உரிமை சபை உட்பட சர்வதேச நாடுகளின் எண்ண ஓட்டத்தை உதாசீனம் செய்து விட்டு சிறிலங்கா தனிவழியில் செல்வதற்கான பொருளாதார பலம் கொண்ட நாடு கிடையாது.

உள்நாட்டு வருமானம் வீழ்ச்சியடைந்து ஆட்சியை நடத்துவதற்கு வெளிநாட்டு கடன்களையும் நன்கொடைகளையும் எதிர்பார்த்திருக்கும் சிறிலங்கா அரசினால் சர்வதேச நாடுகளை இலகுவில் தூக்கி எறிய முடியாது.


இந்த கட்டுரை ஒரு பொது எழுத்தாளர் R.Thurairetnam அவர்களால் வழங்கப்பட்டு 22 Sep 2020 எமது செய்திப்பிரிவால் பிரசுரிக்கப்பட்டது. இந்த கட்டுரையின் எந்தவொரு தயாரிப்பிலும் தமிழ்வின் செய்திப்பிரிவு பங்கேற்கவில்லை. இக் கட்டுரை சம்பந்தமான கருத்துக்களை R.Thurairetnam என்பவருக்கு அனுப்ப இங்கே
<!– <a href=”http://mail.zoftbox.com//author/rthurairetnam/message” target=”_blank”> –>

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply