யாதும் ஊரே யாவரும் கேளிர்

யாதும் ஊரே யாவரும் கேளிர்

யூன் 19, 2010

தெளிவாக இருந்த நீலவானில் கருப்பு மேகங்கள் ஒன்றோடொன்று மோதி இடி முழக்கம் செய்தன. ஈர்ப்பின் ஆற்றல், மின்னலாய், இடியாய் நீர்த்துளிகளை இணைத்தது. அந்தத் துளிகள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து நீராக மாறி மழையாகப் பெய்தன. பெருமழை; வெள்ளம் திரண்டது. மழைநீர் மலையிலிருந்து கீழ்நோக்கிப் பாய்கிறது. வேகமாகப் பாய்ந்த அருவி, மலையின் அடிவாரத்தில் ஆறாக மாறுகிறது. “சான்றோர் கவி என”ப் பாய்கின்ற பேராறாய்ப் பாய்கிறது. தன்னுடைய தாயாகிய கடலைப் போய்ச் சேரவேண்டும் என்ற துடிப்பு அதனுள். ஆதலால் வேகம் வெளியே தெரியாதவாறு, ஆழமாய், அகலமாய் தன்னுடைய பெருமைகளை வெளியே காட்டிக் கொள்ளாத சான்றோர் போல ஓடுகிறது.

அப்படி அகன்று பாயும் நீரில் ஒரு புணை – தெப்பம் மிதக்கிறது. மக்களால் அழகு செய்யப்பட்ட வடிவும் தோற்றமும் கொண்ட தெப்பம். அந்த அழகுப் பூத்தேர் ஆற்றின் கடும் வெள்ளத்தில் இழுக்கப்பட்டுப் போகிறதே, என்ன செய்ய? நீந்திப்போய்க் காப்பாற்றி ஏதேனும் ஒரு கரையில் சேர்த்து விடலாமா?

முடிந்தால் எந்தக் கரையில் சேர்ப்பது?

அதன் போக்கிலேயே விட்டுவிடலாமா?

தானே மிதந்து, தானே நகர்ந்து, தானே நீரோட்டத்தோடு தானும் செல்வதுதான் அதனால் இயலுமா?

எல்லாம் கேள்விகள் தாம். விடை சொல்ல முடியாத கேள்விகள். வாழ்க்கையும் அப்படித்தான்.

மானிட வரலாறும் அதுதான்.

இங்கு ஊழ்தான் பேராறு.

அந்த விதியின் சுழியில் அகப்பட்டுத் துன்புறும் ஆருயிர்தான் தெப்பம். வாழ்வு பேராறு. இன்ப – துன்பக் கரைகளை ஒட்டிப் பாயும் காட்டாறு. இரண்டுமே பொய்மைகள். தீதும், நன்றும் பிறரால் உன்னைத் தேடி வரவில்லை. இந்தப் பிறப்பிலோ முற்பிறப்பிலோ நீ செய்த தீமையும் நல்லதும் இப்போது தொடர்ந்து வந்துள்ளன.

அதற்காக வருந்துவதும் மகிழ்வதும் பித்தர் செயல்.

துன்பமோ இன்பமோ வாழ்வின் முடிவு என்னவாக இருக்கும்?
சாதல் புதியதன்று. பிறப்பெடுத்த எல்லா உயிரும் இறுதியில் பெறும் மிகப்பெரிய தெய்வப் பரிசு அதுவே. ஆறு கடலை நோக்கி ஓடுகிறது. வாழ்வு சாவை நோக்கி ஓடுகிறது.

பாய்வதில் ஒரு மகிழ்ச்சி. வாழ்வதில் ஒரு இன்பம். அதனோடு நிறுத்திக் கொள்; வாழ்வே இன்பமெனக் கருதிவிடாதே. அப்படியே சாவைத் துன்பமானது என்றும் எண்ண வேண்டாம். ஆறு அதன் போக்கில் பாயட்டும். வாழ்வு அதன் இயல்பில் நகரட்டும்.

இவையெல்லாம் யார் சொன்னார்கள்?

கீதையின் தத்துவம் போல இருக்கிறதே; உபநிஷத்துகள் கூறுவன போல உள்ளனவே! இவை தமிழன் கண்ட தத்துவ ஞானம். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கனிந்திருந்த ஞானப்பிழம்பில் ஒரு சிறு துளிதான் இவை. சங்க இலக்கியத்தை ஆழமாகவும், கூர்மையாகவும் நோக்கினால் இவை போன்றவை மணிகளாகச் சிதறிக் கிடப்பதைக் காணலாம்.
கணியன் பூங்குன்றனார் என்னும் சங்கப்புலவர் பாடி நமக்குக் கிடைத்திருப்பது ஒரே ஒரு பாடல்தான்.

புறநானூறில் வரும் இந்தப் பாட்டின் முதல் வரியைப் பெரும்பாலும் மேடை ஏறும் எல்லோரும் சொல்லாமல் இருப்பதில்லை.

“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்பதுதான் அந்த முதல் வரி.
ஆனால் அதைத் தொடர்ந்து வரும் பாடல் அடிகளில் ஞான நிறைவைக் கணியன் பூங்குன்றனார் பொதிந்து வைத்திருப்பதை எத்தனை பேர் உணர்வார்கள்?

*தீதோ, நன்மையோ, இன்பமோ, துன்பமோ பிறரால் பிறரிடமிருந்து வருவதல்ல; நம்மால் நம்மிடமிருந்தே வருகின்றன* என்ற தெளிவு கிடைத்தது.

ஆதலால் வருந்துவதும் மகிழ்வதும் வேண்டா; சாதலும் வாழ்வதும் இயற்கையில் என்றும் நடப்பது தான் என்ற உணர்வும் மேலிடுகிறது.

மானுடப் பிறப்பு நடந்த ஒரே காரணத்துக்காக, அந்த மண் மட்டுமே சொந்தம் என்று கொண்டாடுவது பிழை. காலடிபடும் எல்லா மண்ணும் எல்லா ஊரும் சொந்த ஊர்தான். அப்படி விரிந்த மனத்தோடு எல்லா இடங்களையும் அன்போடு நேசி. வீடு, வாசல், ஊர், ஜாதி, மொழி, இனம் என்ற எல்லைகளைத் தாண்டியும் எண்ணிப்பார்.

பலநூறு ஆண்டுகள் இவற்றை எல்லாம் எண்ணி ஆராய்ந்து தெளிந்த பேரறிஞர்கள், அருளாளர்கள் கண்ட முடிவு இது.

செயலாற்ற முற்படும்போது இரண்டு வகையான மனச்சிக்கல் உன்னை எதிர் நோக்கலாம்.

செல்வம், செயலாற்றும் தன்மை, கல்வி, அறிவு, செல்வாக்கு இவற்றால் மேம்பட்டவர்கள் “மாட்சியில் பெரியவர்கள்”.

பெரிய விளக்கின் முன்னால் கை விளக்கா?

கதிரவனின் ஒளி முன்னால் அகல் விளக்கா?

கதிரவன் அவனளவில் பெரியவன்; கை விளக்கும் தன்னளவில் பெரியதே.

“அவரவர் ஆற்றான்” என்பது பொதுவிதி. சிறியன தத்தம் எல்லைக்குள் பொலிய வேண்டும். அதுவே சிறப்பு; பெருமைக்கும் உரியது. பிறரோடு ஒப்பிட்டுத் தன்னை நிலைநிறுத்தும் பண்பு ஒவ்வாதது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆற்றல். ஒருவரை ஒருவரோடு இணைத்துப் பார்க்கும் போது செயல்படுவதில் குறைகள் தோன்ற நேரும்.

உயர்வு மனப்பான்மை பிறரை மதிக்காத செருக்கை உண்டாக்கும். பிறரை எள்ளத் தோன்றும். ஆதலால் சிறியோரை இகழ்தல் எந்த நிலையிலும் கூடாது. “மாட்சியில் பெரியோரை வியந்து நிற்பதைச்” செய்தாலும் கூட ஒரு வகையில் ஏற்றுக் கொள்ளலாம்.

ஆனால் சிறியவர்களை, நம்மிலும் தாழ்ந்தவர்களை இகழ்வது பெருங்குற்றம்.
ஆற்றில் ஓடும் நீர் எதை எதிர்பார்த்துப் பாய்கிறது?

மலையிலும் ஆறு பாய்கிறது. மடுவிலும் பாய்கிறது. அதற்கு இரண்டும் ஒன்றுதான்.

வாழ்விலும் ஏற்ற, இறக்கங்கள் உண்டு. ஏற்றம் வருவதும் இறங்கித் தாழ்வதும் நம் கையில் இல்லை. இன்ப, துன்பம், மகிழ்ச்சி, வருத்தம், வெற்றி, தோல்வி, பிறப்பு, இறப்பு, இருள், ஒளி என்ற எதிரெதிர் இணைகள், இந்த முரண்பட்டனவாகத் தோன்றும் பண்புகள், மனித நெஞ்சை எந்த வகையிலும் பாதிக்காது. அதுவே உயர்ந்த நிலை; ஒவ்வொருவரும் பெறவேண்டிய உன்னத நிலையும் ஆகும்.

இந்தத் தத்துவம் இன்று நேற்று தோன்றியதன்று. ஈராயிரம் ஆணடுகளுக்கு முன்னர் கணியன் பூங்குன்றனார் நெஞ்சில் மலர்ந்த உயர்ந்த கோட்பாடு. *இதனுள் சமய வெறி காணோம்; பணிசெய்து இன்ப நிலை காணும் மேம்பாடே ஒளிர்கிறது.*

யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோர் அன்ன
சாதலும் புதுவது அன்றே வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னாது என்றலும் இலமே மின்னொடு
வானம் தண்துளி தலைஇ ஆனாது
கல்பொருது இரங்கும் மல்லல் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆதலின் மாட்சியில்
*பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே*. (புற.192)

முனைவர் கி. சுப்பிரமணியன்
நன்றி: தமிழ்மணி (தினமணி)

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply