இலங்கையின் பூர்வீக குடிகள் தமிழரே; ஆதாரம் இதோ..!
பகதன்
வட இந்தியாவில் உள்ள வங்காளம், ஒரிசா ஆகிய பகுதிகள் முந்தைய காலத்தில் லாலா தேசம் என்று அழைக்கப்பட்டது. இந்த ராஜ்ஜியத்தை ஆண்ட மன்னன் சிங்கபாகு, சிங்கத்துக்கும் ஒரு ராஜகுமாரிக்கும் பிறந்தவர்.
சிங்கபாகு, சிகாசிவாலி என்ற பெண்ணை மணந்து அவளை பட்டத்து ராணி ஆக்குகிறார். இவர்களுக்கு 16 முறை இரட்டைக் குழந்தைகள் பிறக்கின்றன. இந்தக் குழந்தைகளில் மூத்தவன் விஜயன். அவனை பட்டத்து இளவரசனாக சிங்கபாகு நியமிக்கிறார்.
இலங்கைக்கு சென்ற விஜயன்
விஜயன் மிகவும் கொடூரமானவன். அவன் செய்த அட்டூழியங்கள் பற்றி, மன்னனிடம் மக்கள் முறையிடுகிறார்கள். மகனைத் திருத்த முயற்சிக்கிறார், சிங்கபாகு. ஆனால் விஜயன் திருந்தவில்லை. நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு, மக்களைத் துன்புறுத்துகிறான்.
அவன் அட்டூழியங்கள் எல்லை மீறிப்போனதால், மன்னனிடம் மக்கள் மீண்டும் முறையிடுகிறார்கள். “விஜயனுக்கு மரண தண்டனை விதியுங்கள்” என்று வற்புறுத்துகிறார்கள்.
இதன் காரணமாக, விஜயனையும், அவன் நண்பர்கள் 700 பேர்களையும் நாடு கடத்துகிறார், மன்னர். இவர்களை மூன்று கப்பல்களில் ஏற்றி, “எங்காவது போய் பிழைத்துக் கொள்ளுங்கள். இனியாவது திருந்தி வாழுங்கள்” என்று புத்திமதி கூறி அனுப்பி வைக்கிறார். மூன்று கப்பல்களும் இலங்கையை அடைகின்றன.
குவேனி என்ற சொல், கவினி என்ற தமிழ்ச் சொல்லின் திரிபு ஆகும். கவினி என்றால் “பேரழகு படைத்தவள்” என்று பொருள்.
இலங்கையை ஆண்ட ராவணன் ராட்சதன் என்று கூறப்பட்டது போல, குவேனியையும் ராட்சத குலம் என்று வர்ணிக்கிறது, “மகாவம்சம்” . விஜயனுக்கு அடைக்கலம் கொடுக்கிறாள் குவேனி.
இருவரும் காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொள்கிறார்கள், இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தனர். விஜயனுடன் இலங்கை சென்ற அவனுடைய 700 நண்பர்களும் பல நகரங்களையும், கிராமங்களையும் உருவாக்குகிறார்கள்.
சிம்மாசனம் ஏற ஆசைப்பட்ட விஜயன், ஒரு இளவரசியை மணந்து கொள்ள வேண்டும் என்று கூறியதையடுத்து, விஜயனின் நண்பர்கள் மதுரைக்கு சென்று, அங்கு மன்னருக்கு முத்துக்கள், தங்க ஆபரணங்கள் முதலியவற்றை பரிசாக வழங்கி, தங்கள் மன்னனான விஜயனுக்கு இளவரசியை மணமுடித்து வைக்குமாறு கேட்டுக் கொள்கிறார்கள்.
இதற்கு பாண்டிய மன்னன் சம்மதிக்கிறார். பாண்டிய இளவரசியுடன், விஜயனின் 700 நண்பர்களுக்கும் 700 பெண்களை தேர்வு செய்து, இலங்கைக்கு அனுப்பி வைக்கிறார்.
பாண்டிய இளவரசி தன்னை மணப்பதற்கு இசைந்து இலங்கைக்கு வந்து விட்டதை அறிந்து விஜயன் மிகவும் மகிழ்ச்சி அடைந்து, குவேனியை அழைத்து, “நான் பாண்டிய ராஜகுமாரியை மணக்கப் போகிறேன். இங்கிருந்து போய்விடு” என்று கூறுகிறான்.
இதனால் வேதனை அடைந்த குவேனி, குழந்தைகளை அழைத்துக் கொண்டு “லங்காபுரா” என்ற இடத்துக்கு போய்விடுகிறாள். பாண்டிய ராஜகுமாரியை மணந்து கொண்ட விஜயன், அவளுடன் வந்த 700 பெண்களுக்கும் அமைச்சர்களாக உள்ள தன் நண்பர்களை அவரவர் தகுதிக்கு ஏற்ப மணம் முடித்து வைக்கிறான். 38 ஆண்டு காலம் இலங்கையை ஆண்டான். அவனது சந்ததிகளே சிங்களர்கள்.
குவேனி சாபம்
குவேனியை ஏமாற்றிவிட்டு வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டதால், ஆத்திரமடைந்த குவேனி சாபம் விடுகிறாள். இலங்கையில் சிங்கள சந்ததிகள் யாராலும் நிலையான அரியணையில் அமர முடியாது என்று சாபம் விடுகிறாள். இந்த காரணத்தினால் இன்று வரை இலங்கையில் அரசியல் ரீதியான பிரச்சனைகள் இருக்கின்றன.
சாபத்தில் இருந்து மீள ஆலயம் கட்டிய சிங்களவர்கள்
இந்த சாபத்தை போக்க வேண்டுமாயின் இளவரசர் விஜயன் – குவேனி ஆகியோரின் சிலைகள் அருகருகில் இருக்கும் வகையில் ஆலயம் ஒன்று 2014 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.
மாத்தறை புகையிரத நிலைய வீதியில் உள்ள ஸ்ரீசுப்பிரமணியர் ஆலயம் புனர் நிர்மாணம் செய்யப்பட்டு திறந்து வைக்கப்பட்ட போது அந்த ஆலயத்தில் விஜயன் மற்றும் குவேனியின் சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டன.
இலங்கையில் சிங்களவர்கள் உருவாக காரணமான விஜயன் மற்றும் இயக்கர் குல வேடுவ பெண்ணான குவேனி ஆகியோருக்கான முதல் கோயில் இதுவாகும்.
தபால் தலை வெளியீடு
1956-ல் விஜயனின் வருகை” என்ற தலைப்புடன் சிறப்பு தபால் தலை ஒன்றை இலங்கை அரசு வெளியிட்டது. குவேனி ஒரு மரத்தடியில் அமர்ந்திருப்பது போலவும், கப்பலில் வந்த விஜயன் அவளிடம் அடைக்கலம் கோருவது போலவும் இந்த தபால் தலை அமைந்திருந்தது. தபால் தலையை பார்த்த சிங்கள தலைவர்கள், அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
விஜயன் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்தவன் என்ற கருத்து ஏற்கத் தக்கது அல்ல. தவிரவும், விஜயன் வந்த போதே இங்கு குவேனி என்ற தமிழ்ப் பெண் இருந்திருக்கிறாள் என்று கூறினால், இலங்கையின் பூர்வகுடிகள் தமிழர்கள் என்பதை நாமே ஒப்புக் கொண்டது போலாகிவிடும். எனவே, இந்த தபால் தலையை வாபஸ் பெற வேண்டும்” என்று கூறினார்கள். இதன் பிறகு தபால் தலை வாபஸ் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில், புத்தமதம் பரவுவதற்கு முன் சிவ வழிபாடுதான் நடந்து வந்திருக்கிறது. பூமியில் இருந்து தோண்டி எடுக்கப்பட்ட சிவன் சிலைகளும், நந்தி சிலைகளும் இதை உறுதிப்படுத்துகின்றன. சிவனை வழிபட்டவர்கள் தமிழர்கள்தான்; சிங்களர்கள் அல்ல.
கி.மு. மூன்றாம் நூற்றாண்டுகளில், வட இந்தியாவில் ஆட்சி புரிந்த மெளரிய பேரரசன் அசோகன், கலிங்கப் போரின் முடிவில் பெளத்த மதத்தைத் தழுவினார். அவர் புத்த மதத்தை பரப்புவதற்காக, மகிந்த தேரே என்ற புத்த மத குரு தலைமையில் ஒரு குழுவை இலங்கைக்கு அனுப்பினார்.
அக்குழு இலங்கைக்கு வந்த போது, அனுராதபுரத்தை தலை நகரமாகக் கொண்டு ஆண்ட தமிழ் மன்னன் பெயர் திசையன் அல்லது தீசன் என்றும், அசோகன் விருப்பப்படி அவன் புத்தமதத்தை தழுவினான் என்றும், அவனுக்கு “தேவ நம்பி” என்ற பட்டத்தை அசோகர் வழங்கினார் என்றும், பாளி மொழியில் எழுதப்பட்ட வரலாற்று நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திசையன் இறந்த பிறகு, சேனன், குத்தன் என்ற இரு தமிழ் மன்னர்கள் 22 வருடங்கள், அனுராதபுரத்தில் நல்லாட்சி நடத்தினார்கள் என்று அதே நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
டச்சுக்காரர்கள் அரசாண்ட போது, இலங்கைக்கு வந்திருந்த அடிரியன் ரேலண்ட் என்ற ஆராய்ச்சியாளர், தமிழ், சிங்களம், மலாய் ஆகிய மொழிகளை அறிந்தவர். அவர் எழுதிய குறிப்புகளில், “இத்தீவை விட்டுப் போவதற்கு முன் தமிழர் பற்றியும், தமிழ் மொழி பற்றியும் சிறிது கூற வேண்டும்.
இந்தத் தீவின் பெரும் பகுதியில் தமிழர்கள் வாழுகிறார்கள். இந்தப் பகுதி கைலாய வன்னியன் என்ற மன்னனால் ஆட்சி செய்யப்படுகிறது. இங்கு வாழும் மக்கள், சிங்களவரின் ஆட்சிக்கு உட்பட்டவர்கள் அல்ல. டச்சுக் காரர்களின் ஆட்சிக்கும் உட்பட்டவர்கள் அல்ல.
கரை ஓரமாக உள்ள நிலம் அனைத்தும், இந்த மன்னனுக்கே உரித்தானது. கரை ஓரங்களில் வாழும் மக்கள் தமிழ் மொழி பேசுகிறார்கள். நீர்கொழும்பு பகுதிக்கு தெற்கே, தெய்வேந்திர முனைவரையுள்ள பகுதிகளில் சிங்கள மொழி பேசப்படுகிறது.”இவ்வாறு அடிரியன் ரேலண்ட் கூறியுள்ளார்.
டச்சு ஆட்சியின் போது இலங்கை வந்த மற்றொரு ஆராய்ச்சியாளர் கிறிஸ்தோபர் சுவைட்சர். இவருடைய குறிப்புகளில், “மட்டக்களப்பு, காலி, திரிகோணமலை, மன்னார், யாழ்பாணம், அரிப்பு, கற்பிட்டி, நீர்கொழும்பு முதலான பகுதிகளில் தமிழர்கள் வாழ்கிறார்கள்.
வன்னி நாட்டில் உள்ள தமிழர்கள், சுதந்திரமாக ஆட்சி நடத்துகிறார்கள். மற்ற பகுதிகளில் உள்ளவர்கள், டச்சுக்காரர்களின் ஆட்சியின் கீழ் உள்ளனர்.” இவ்வாறு சுவைட்சர் கூறியுள்ளார்.
தமிழில் கையெழுத்து
பிரித்தானியரால் 1815ல் கண்டி கைப்பற்றப்பட்ட போது மன்னன் விக்கிரம ராஜசிங்கன், “விக்கிரமராச சிங்கன் என்கிற கண்ணுச்சாமி” என்று தமிழில் கையெழுத்து இட்டார். கண்டி அமைச்சர்களாக இருந்த சிங்களவர்களும் தமிழில் கையெழுத்திட்டார்கள்.
சிங்களர் உள்பட அனைவரும் தமிழில் கையெழுத்துப் இட்டதால், அப்போது கண்டியில் தமிழ் தான் ஆட்சி மொழியாக இருந்திருக்கிறது என்பது புலனாகின்றது. கண்டி மன்னர் எழுதிக் கொடுத்த சாசனம், இன்னமும் இலங்கையில் உள்ள ஆவணக் காப்பகத்தில் பத்திரமாக உள்ளது.
மகாவம்சத்தில் காணப்படும் முரண்பாடுகள்
விஜயனும் ஏனைய 700 குழுவினரும் கப்பலில் கி.மு 247ல் வந்ததாக கூறப்பட்ட போதும் அது தொடர்பான எந்த ஆவணமும் இவர்களின் ஆட்சிப் பிரதேசத்திலோ இந்தியாவிலோ காணப்படவில்லை.
விஜயனையும் 700 தோழர்களும் கப்பலில் கி.மு247ல் வந்ததாக கூறப்பட்ட போதும் இந்தியாவில் கி.பி 6ம் நூற்றாண்டுக்கு முன்னர் அவ்வாறான பாரிய அளவிளான கப்பல் படை இருந்ததாக எந்த ஆதாரங்களும் கிடைக்கவில்லை.
மத்திய இந்தியாவில் உள்ள விஜயனின் நாட்டில் இருந்து கடற் பயணம் மேற்கொண்டு இருப்பார்களாயின் இலங்கையின் வட பகுதியை அடைவதே இலகு எனினும் மன்னார்- புத்தளத்திற்கு அருகில் உள்ள தம்பபன்னி என்ற பகுதியில் இறங்கியதாக கூறப்படுகின்றது.
இலங்கையில் தேவநம்பிய தீச மன்னன் காலத்தில் பெளத்த மதம் அறிமுகப் படுத்தப்பட்டது, எனினும் அதற்கு முன்னர் வருகை தந்த விஜயனும் சரி, அதற்கு பின்னரான இலங்கையின் முதலாவது மன்னனாகிய பண்டுகாயனின் மதம் என்ன?
அத்துடன் பண்டுகாபயன் அனுராதபுர நகரத்தின் தெற்கே ஒரு கோவிலை அமைத்தான் என்று கூறப்படுகின்றது, மாறாக விகாரை அமைத்ததாக எங்கும் கூறப்படவில்லை.
அத்துடன் இலங்கையின் தென் முனைவாகிய தெய்வேந்திர முனையிலும் ஒரு விஷ்னு ஆலயம், அம்பாந்தோட்டையில் கதிர்காமம், சிவனொளி பாதமலை, சிலாபம் முன்னேச்சரம் என நாட்டின் சகல திசைகளிலும் புராதன இந்து ஆலயங்கள் இன்றும் காணப்படுகின்றன.
இவைகளை தொகுத்து நோக்கும் போது இலங்கை வரலாற்றை கூறும் மகாவம்சம் வரலாற்றை திரித்துக் கூறும் பெளத்த நூலாகக் காணப்படுவதுடன் இலங்கையின் பூர்வீகக் குடிகள் தமிழரே, வந்தேறு குடிகள் சிங்களவர் என்ற உண்மை வெளிப்படுகின்றது.
எனவே இந்த வரலாற்று உண்மையை அறிந்து, தமிழர்களாகிய நாம் பெருமை கொள்வதுடன் இதனை பகிர்வதன் ஊடாக அனைத்து தமிழர்களும் இந்த நாட்டின் உரிமையுள்ள பூர்வீகக் குடிகள் என்ற தன்னம்பிக்கையை வளர்த்திடுவோம்…!
Leave a Reply
You must be logged in to post a comment.