Selected Writings V.Thangavelu, Canada
சொந்தச் சகோதரர்கள் துன்பத்திற் சாதல் கண்டும்
சிந்தை இரங்காரடி கிளியே! செம்மை மறந்தாரடி?
17 April 2009
அரசியல்வாதிகளுக்குச் சிம்ம சொன்பனமாக மாறியுள்ள ஒரு ஆயுதம் இப்போது உலகளாவிய அளவில் புகழ்பெற்று வருகிறது. அது என்ன ஆயுதம் என்றுதானே கேட்கிறீர்கள்? சப்பாத்துத்தான் அந்த ஆயுதம்.
சப்பாத்தை ஆயுதமாக்கிய முதல் மனிதர் இராக் நாட்டு தொலைக்காட்சி செய்தியாளர் முந்தசார் அல் சயிதி
(Muntaxer al-Zaidi) ஆவார். அவர்தான் கடந்த ஆண்டு டிசெம்பர் 14 ஆம் நாள் இராக்குக்கு கடைசித்தடவையாகச் சென்ற அமெரிக்க அதிபர் யோர்ஜ் புஷ் மீது தனது இரண்டு காலணிகளைக் கழட்டி ஒன்றன் பின் ஒன்றாக வீசினார். வீசும் போது நாயே! இதுதான் நான் உனக்குத் தரும் பிரியாவிடை முத்தம்
(“It is the farewell kiss, you dog,” ) என்று சொல்லியவாறுதான் சப்பாத்தை வீசியிருந்தார். அரபு பண்பாட்டில் ஒருவரைச் சப்பாத்தால் தாக்குவது மிகவும் அவமரியாதையான செயலாகக் கருதப்படுகிறது. தமிழ்ப் பண்பாட்டிலும் அதே கதைதான். அதனால்தான் தமிழ்த் திரைப்படங்களில் கையில் செருப்போடு கதாநாயகி வில்லனைப் பார்த்து செருப்பு பிஞ்சிடும் என்று உரத்து வசனம் பேசுவார்!
யோர்ஜ் புஷ் அவர்களை அடுத்துச் சப்பாத்து வீச்சுக்கு இலக்கானவர் சீனநாட்டுப் பிரதமர் அதிபர் வென் ஜியாபோ
(Wen Jiabao) ஆவார். அண்மையில் இலண்டன் கேம்பிரிச் பல்கலைக் கழகத்தில் அவர் உரையாற்றிக் கொண்டிருக்கும் போதுதான் இந்த வீச்சு இடம்பெற்றது. வியப்பு என்னவென்றால் சீன தொலைக்காட்சி அதனை ஒளிபரப்பியதுதான்
மூன்றாவது சப்பாத்து வீச்சுக்கு இலக்கானவர் மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஆவார். தில்லியில் ஏப்ரில் 7 ஆம் நாள் நடந்த செய்தியாளர் மாநாட்டில் சீக்கிய செய்தியாளரான ஜர்னைல் சிங் சிதம்பரம் மீது தனது சப்பாத்தைக் கழட்டி வீசினார். ப. சிதம்பரத்துக்கும் ஜர்னைல் சிங்குக்கும் இடையில் காங்கிரஸ் கட்சிப் பிரமுகர் ஜெகதீஷ் டைட்லர் இந்திரா காந்தி சீக்கிய மெய்காப்பாளர்களால் கொல்லப்பட்டதை அடுத்து சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் குற்றமற்றவர் என இந்திய புலனாய்வுத்துறை
(CBI) தீர்ப்பு வழங்கியது தொடர்பாக நடந்த வார்த்தை மோதலின் உச்சகட்டத்தில்தான் சப்பாத்து வீசப்பட்டது. ப. சிதம்பரம். ஜர்னைல் சிங்கைப் பக்குவமாகக் கையாளுங்கள்’ என்று பாதுகாவலர்களுக்கு கட்டளையிட்டதோடு அவரை மன்னித்துவிட்டேன்’ என்றார். ஜர்னைல் சிங் மீது காவல்துறை விசாரணை செய்த பின்னர் விட்டுவிட்டது. வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. எனினும் சீக்கியர்கள் சிலிர்த்துக் கொண்டு எழுந்துவிட்டார்கள்.
இப்போது ஜர்னைல் சிங் சீக்கிய மக்களிடையே பெரிய வீரனாக உயர்ந்துவிட்டார். சீக்கிய மாணவர் அமைப்பு அவருக்கு இரண்டு இலட்ச ரூபாய் பரிசு கொடுக்கப் போவதாக அறிவித்தது. குருத்வாரா பிரபந்தக் குழு வேலையும் கொடுத்து கைநிறையச் சம்பளமும் தருகிறோம் வாருங்கள் என்று அழைப்பு விடுத்தது. சிரோன்மணி அகாலிதளம் தேர்தலில் நில்லுங்கள்… நீங்கள் விரும்பும் தொகுதி எதுவானாலும் ஒதுக்கலாம்? என்று கேட்டது. ப. சிதம்பரத்தின் மீது சப்பாத்தை விட்டெறிந்த ஜர்னைல் சிங் என்கிற செய்தியாளருக்கு இத்தனை வெகுமதிகளும் இத்தனை வரவேற்புகளும் கிடைத்துள்ளன. அமைச்சர் ப. சிதம்பரத்தின் மீது சப்பாத்தை விட்டெறிந்த வீரன் என்று சீக்கியர்கள் ஜர்னைல் சிங்கைத் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுகிறார்கள்.
ஜெகதீஷ் டைட்லரை நிரபராதி என்று அறிவிக்க சிபிஐ க்கு அழுத்தம் கொடுத்த காங்கிரஸ் கட்சிக்கு இந்தத் தேர்தலில் தகுந்த பதிலடி தரப்படும் என்று சீக்கியக் கட்சிகள் எச்சரித்துள்ளன. இதனால் அதிர்ந்து போன டைட்லர் தேர்தல் போட்டியிலிருந்து தான் விலகிக் கொள்வதாகக் கூறிவிட்டார். விரைவில் நடக்க இருக்கும் மக்களவைத் தேர்தலில் பஞ்சாபில் காங்கிரஸ் கட்சிக்கு கடுமையான எதிர்ப்பு காத்திருக்கிறது!
1984 ஆம் ஆண்டு ஒக்தோபர் 31 இல் இந்திரா காந்தி சுடப்பட்டதை அடுத்து வெடித்த வன்முறையில் சீக்கியர்கள் கொத்துக் கொத்தாகக் கொலை செய்யப்பட்டார்கள். ஏறக்குறைய மூவாயிரம் சீக்கியர்கள் வன்முறைக்குப் பலியானார்கள். வெறியாட்டத்துக்கு இடையே பிரதமராகப் பதவிப் பிரமாணம் எடுத்திருந்த இராஜீவ் காந்தியிடம் சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டதைக் குறித்துச் செய்தியாளர்கள் கேட்டபோது அவர் சொன்ன பதிலைச் சீக்கியர்களால் இன்றளவும் செரிக்க முடியவில்லை.
ஒரு பெரிய ஆலமரம் சாயும்போது, நிலம் அதிரத்தான் செய்யும்.
இதே அமைச்சர் ப. சிதம்பரம் மீது செவ்வாய்க்கிழமை (ஏப்ரில் 14, 2009) மீண்டும் ஒரு தாக்குதல் நடாத்தப்பட்டது. சிவகங்கைத் தொகுதியில் சிதம்பரம் போட்டியிடுகிறார். காரைக்குடி அருகே சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் மகளிர் அணி மாநாட்டில் சிதம்பரம் செவ்வாய்க்கிழமை கலந்து கொண்டு உரையாற்றும் போதே உருட்டுக் கட்டை வீச்சு இடம்பெற்றது.
பெரியார் நகரைச் சேர்ந்த 35 அகவையுடைய சாயல்ராம் என்கிற இராமு திடீரென எழுந்து இலங்கை பிரச்சனைக்கு முடிவு என்ன? இலங்கை தமிழர்களுக்கு பதில் சொல் என சிதம்பரத்தைப் பார்த்துக் கேள்வி எழுப்பினார்.
உலகத் தமிழர்களின் தலைவர் பிரபாகரன் வாழ்க! விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் வாழ்க! என முழக்கம் எழுப்பியவாறு சிதம்பரத்தை நோக்கி இராமு உருட்டுக் கட்டையை வீசினார். எனினும் அது சிதம்பரம் மீது படவில்லை.
இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் இராமுவைச் சுற்றிவளைத்துப் பிடித்துக் கைது செய்தனர். அவரை மன்னித்து விட்டு விடும்படி ப.சிதம்பரம் காவல்துறையினரிடம்; கேட்டுக் கொண்டபோதும் தமிழகக் காவல்துறையினர் இராமுசை தீவிர விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றனர். அத்துடன் காரைக்குடி வடக்கு காவல் நிலையம் இராமு மீது வழக்குப் பதிவு செய்துள்ளது.
சிதம்பரத்தின் மீது முதல் தில்லி செய்தியாளர் மாநாட்டில் தாக்குதல் நடத்தப்பட்டது. பின்னர் சிவகங்கை காங்கிரஸ் மகளிர் அமைப்பு மகாநாட்டில் நடத்தப்பட்டது. தில்லியில் தாக்குதல் நடத்தியவர் சீக்கியர். சிவகங்கையில் தாக்குதல் நடத்தியவர் தமிழர்.
தில்லியில் சப்பாத்து வீசிய ஜர்னைல் சிங் என்ற சீக்கியருக்கு மாலை மரியாதை அளிக்கப்பட்டது. சிவகங்கையில் உருட்டுக் கட்டை வீசிய தமிழர் இராமு கைது செய்யப்பட்டு தீவிர விசாரணைக்குப் பின்னர் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சீக்கியர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் உள்ள வேறுபாட்டைக் காட்டவே இந்த செய்தியை சற்று விரிவாக எழுதினேன். ஒரே குற்றம் ஆனால் சீக்கியர் மீது சட்டம் பாயவில்லை தமிழர் மீது பாய்ந்துள்ளது!
இவ்வளவிற்கும் வடக்கு வாழ்கிறது! தெற்குத் தேய்கிறது! அடைந்தால் திராவிட நாடு! இல்லையேல் சுடுகாடு! தூக்கு மேடை பஞ்சுமெத்தை என்று ஒரு காலத்தில் முழங்கிய திமுக கட்சிதான் தமிழகத்தை ஆட்சி செய்கிறது.
இப்போது புரிகிறதா ஏன் இந்தியாவை காங்கிரஸ் கட்சி தமிழர்களது போராட்டத்தை துச்சமாக மதித்து – கிள்ளுக் கீரை என மிதித்து – அலட்சியப்படுத்தி விட்டதன் காரணத்தை?
சீக்கியர்களுக்கு இருக்கும் தன்மான உணர்ச்சி தமிழர்களிடம் ஏன் இல்லை என்பது தெரியவில்லை. இந்திய காங்கிரஸ் கட்சிப் பேச்சாளர் அபிஷேக் சிங்வி
(Abhishek Singhvi ) விடுதலைப்புலிகள் ஒரு தீவிரவாத இயக்கம் என்றும் அந்த இயக்கத்தைப் பல்வேறு நாடுகளும் தடை செய்துள்ளன என்றும் விடுதலைப்புலிகளுக்கு எதிராக இலங்கை இராணுவம் எடுத்துவரும் நடவடிக்கை ஸ்ரீலங்காவின் இறையாண்மைக்கு உட்பட்டது, எனவே காங்கிரஸ் அரசு அந்நாட்டைப் போர் நிறுத்தம் செய்யுமாறு வலியுறுத்த முடியாது எனச் சொலிலியுள்ளார். விடுதலைப்புலிகளின் தலைவர் போரில் தோற்கடிக்கப் பட்டால் மகா அலெச்சாந்தர் போரில் தோற்கடிக்கப்பட்ட புருஷோத்தமனைக் கவுரவமாக நடத்தியது போல நடத்தப்பட வேண்டும் என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளது பற்றிப் பதில் அளித்த அபிஷேக் சிங்கி;, சனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கருத்துத் தெரிவிக்கலாம். ஒரு தீவிரவாதி பிடிபட்டால் அரசரைப் போல் நடத்தப்பட வேண்டும் என்ற கருத்துத் தவறானது. நாட்டில் கருத்து தெரிவிக்க அனைவருக்கும் உரிமை உண்டு. இருப்பினும் இந்தக் கருத்துக்கு காங்கிரஸ் கட்சிக்கு உடன்பாடில்லை” என்றார். இது கருணாநிதியின் கன்னத்தில் சோனியா காந்தி செருப்பால் அறைந்தது போன்றது. இம் என்றால் ஆயிரமும் அம் என்றால் பததாயிரம் என அறிக்கைகள் விடும் கருணாநிதி காங்கிரஸ் தனக்கு இழைத்த அவமதிப்புப் பற்றி மவுனம் சாதிக்கிறார்.
இலங்கைத் தமிழர்களுக்காக அனைத்துக் கட்சிக் கூட்டம், மனிதச் சங்கிலி, உண்ணாவிரதப் போராட்டம், ஆர்ப்பாட்டம், சட்டப் பேரவையில் கண்டனத் தீர்மானங்கள், பிரதமரிடம் நேரடி முறையீடு, விண்ணப்பங்கள் எதற்கும் சோனியா காந்தி அசைந்து கொடுக்கவில்லை. ஆறு கோடி தமிழரின் ஒருமித்த வேண்டுகோளை அவர் துச்சமாக மதித்தார்.
இலங்கைத் தமிழர் படுகொலையைக் கண்டித்து சென்னை முத்துக்குமார், கடலூர் தமிழ்வேந்தன் உள்ளிட்ட 13 தமிழ் உறவுகள் தங்கள் இன்னுயிரை ஈந்தார்கள். தில்லி அதனைக் கண்டு கொள்ளவே இல்லை.
தேசியத் தலைவர் பிரபாகரன் உட்பட அனைத்து விடுதலைப் புலிகளும் அழியவேண்டும் என்பதில் இந்திய அரசுக்கு இருக்கும் ஆர்வம் வெளிப்படையானது.
‘விடுதலைப்புலிகளால் தமிழர்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களை அழித்தொழிப்பதில் எங்களுக்குத் தடையில்லை ……..இராஜீவ் – ஜெயவர்த்தன உடன்பாட்டுக்குப் பின் இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட 13 ஆவது திருத்தம் நடைமுறைப்படுத்தப்படும்’ என்று ஸ்ரீலங்கா சென்று திரும்பிய் பிரணாப் முகர்ஜி செய்தியாளரிடம் முகமலர்ச்சியுடன தெரிவித்தார். ஏமாளித் தமிழினத்தை ஏமாற்ற அரங்கேற்றப்படும் அவல நாடகத்தில் பிரணாப் முகர்ஸஜி ஒரு முக்கிய பாத்திரம் வகிக்கிறார்;!
நக்கினார் நாவிழந்தார் என்பார்கள். முதல்வர் கருணாநிதியின் நிலைமையும் அதுதான். காங்கிரஸ் கட்சியின் தயவில்தான் அவர் ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்.
கடந்த ஏப்ரில் 6 ஆம் நாள் சென்னையில் கலைஞர் தலைமையில் திமுக மிகப் பிரமாண்டமான ஒரு பொதுக்கூட்டத்தை நடத்தியது. இந்தக் கூட்டத்தில் கலைஞர் மிகவும் உணர்ச்சிகரமான ஒரு உரையை நிகழ்த்தினார். சிறிலங்கா அரசு தொடர்ந்தும் இனப்படுகொலையை நடத்தினால் நாம் கையைக் கட்டிக் கொண்டு சும்மாயிருக்க மாட்டோம் என்று எச்சரித்தார். ஈழத் தமிழர்களுக்காக உயிரைக் கொடுக்கவும் தயங்கோம் என மனோகரா பாணியில் பேசினார். ஆனால் பதவி விலகல் பற்றி மூச்சே இல்லை. அதை இழக்க அவர் தயாராயில்லை என்பதுதான் அதன் பொருள்.
காலையில் ஒரு பேச்சு மாலையில் இன்னொரு பேச்சு என்று முதல்வர் கருணாநிதி மாறி மாறிப் பேசிக் கொண்டிருக்கிறார். வங்காளத்தைப் பிரித்தது எப்படி? என்று தோள்தட்டிக் கேட்கும் அவரே வேறொரு நாள் இந்தியா போல் இலங்கையும் இறையாண்மை மிக்க நாடுதான். ஒரு இறையாண்மை மிக்க நாடு இன்னொரு நாட்டின் இறையாண்மையில் தலையிட முடியாது என்று முகாரி பாடுகிறார்.
எண்பதுகளில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கலைஞர் கருணாநிதிக்கும் இன்றைய முதல்வர் கருணாநிதிக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை அவரது பேச்சில் இருந்தே தெரிந்து கொள்ளலாம். அன்று
இன்றைக்கு இலங்கைத் தமிழன் பாதிக்கப் படுகிறான். தமிழ்நாட்டிலே ஓர் அரசும் இல்லை. ஆகவே படை அனுப்பப்படவில்லை. எனவே அந்த அரசு இல்லையே என்கின்ற என்னுடைய ஏக்கத்தை வெளியிடுகிறேனே யல்லாமல் வேறல்ல.
அப்படி ஓர் அரசை உருவாக்க வேண்டும். இந்தியாவிலே நாங்கள் 1962 இல் கைவிட்டு விட்ட பிரிவினை வாதத்தை இனி எடுத்து வைத்து அதற்கு ஆதாரம் தேடுகிறேன் என்று யாராவது அவசர அரசியல்வாதிகள் பேச முன் வருவார்களேயானால் அவர்களுக்கு நான் சொல்லிக் கொள்வதெல்லாம், துன்பத்தால் துயரத்தால் மகனைப் பறி கொடுத்துவிட்ட பரிதாபத்தால் அழுது கொண்டிருக்கின்ற ஒரு தாய் கண்ணீரும் கம்பலையுமாக அய்யோ பாவி போய்விட்டானே என்று சொன்னால், பாவி என்று சொன்னதற்கு அந்த நேரத்திலே அவனைத் திட்டுகின்ற பொருளல்ல. அன்பு, பாசம், பற்று இவைகளால் தான், அய்யோ! பாவி போய்விட்டாயே என்று இறந்த மகனைப் பற்றிக்கூட சொல்லுவார்கள்…..
அதைப்போலத்தான் நான். ஆதங்கப் படுகிறேன், ஏக்கமடைகிறேன், வருத்தப்படுகிறேன், வேதனைப்படுகிறேன் என்றால் இராசராசசோழன் இருந்தான்; இராசேந்திரச் சோழன் இருந்தான். அவர்களுக்குக் கீழே தமிழகத்தில் ஒரு அரசு இருந்தது.
இலங்கைத் தமிழர்கள் பாதிக்கப்பட்டால் உடனே படை சென்றது. இலங்கைத் தமிழன் காப்பாற்றப்பட்டான். இன்றைக்கு அங்கே அரசில்லை. ஆனால் டெசோ இயக்கமென்ற முரசு இருக்கிறது…..
நாம் வடநாட்டை எட்டிப் பார்த்து, வடநாட்டிற்கு நடந்து நடந்து பார்த்து, முறை யீடுகளைக் கொண்டுப்போய்க் கொடுத்து கொடுத்துப் பார்த்து, கிளர்ச்சிகளை நடத்தி நடத்திப் பார்த்து, சிறைச்சாலைகளை நிரப்பி நிரப்பிப் பார்த்து, இங்கே இருக்கின்ற திராவிடர் கழக வீரமணி தலைமையிலே ஓகஸ்டு தினத்தைத் துக்க தினம் என்றெல்லாம் அறிவித்துப் பார்த்து, மாவீரன் நெடுமாறன் அவர்கள் தியாகப் பயணத்தை நடத்திப் பார்த்து, திமுக.வினர் இரண்டு மூன்று முறை சிறைச்சாலைகளை நிரப்பி, 30,000,; 40,000 பேர் சிறைச்சாலைகளிலே அடைக்கப்பட்டு, 20 க்கும் மேற்பட்ட தமிழர்கள் தங்களுடைய தேக்குமர தேகங்களுக்குத் தீயிட்டுக் கொண்டு முடிந்த எல்லாவற்றிற்கும் பிறகு, வடக்கே இருக்கிற டெல்லிப் பட்டணம் – அங்கே அமர்ந்திருக்கின்ற மத்திய அரசு – இராஜீவ் காந்தியினுடைய அரசு இன்னமும் பேச்சு வார்த்தை, பேச்சு வார்த்தை என்று காலம் தாழ்த்திக் கொண்டிருக்குமேயானால் வேறு வழி என்ன? (கலைஞர் கருணாநிதி டெசோ கூட்டங்களில் 1985 இல் பேசியது. திமுக வெளியீடான தமிழனுக்கு ஒரு நாடு – தமிழ் ஈழநாடு நூல்.) இன்று….
இந்தியா இறையாண்மை மிக்க நாடு. அதைப் போலவே இலங்கையும் இறையாண்மை மிக்க நாடுதான். ஒரு இறையாண்மை மிக்க நாடு மற்றொரு இறையாண்மை மிக்க நாட்டிற்கு எந்த வகையான வேண்டுகோளை விடுக்கலாம். அந்த நாட்டின் மீது எத்தகைய அழுத்தத்தைக் கொடுக்கலாம்; அரசியல் சட்ட ரீதியாக இருந்துவரும் கட்டுப்பாடுகள் அனைத்தையும் மக்கள் அறிவார்கள்.
(Deccan Chronicle) ஏட்டுக்கு கலைஞர் செவ்வி முரசொலி (23.3.2009)
இவற்றைப் படிக்கும் போது பாரதியார் நடிப்புச் சுதேசிகள் என்ற தலைப்பில் பழித்து அறிவுறுத்திய பாடல் வரிகள் நினைவுக்கு வருகின்றன.
நெஞ்சில் உரமின்றி நேர்மைத் திறமு மின்றி
வஞ்சனை சொல்வா ரடி கிளியே!
வாய்ச் சொல்லில் வீர ரடீ!
மானம் சிறுதென்றெண்ணி வாழ்வு பெரிதென் றெண்ணும்
ஈனர்க் குலகந் தனில் – கிளியே!
இருக்க நிலைமை உண்டோ?
சொந்தச் சகோதரர்கள் துன்பத்திற் சாதல் கண்டும்
சிந்தை இரங்காரடி கிளியே!
செம்மை மறந்தாரடி?
தன் பாட்டுத்திறத்தால் இந்த வையத்தைப் பாலித்த பாரதியார் மறைந்துவிட்டார். ஆனால் அவரது கவிதைக்கு இலக்கணமாக இன்றும் மனிதர்கள் வாழ்கின்றனர்!
Leave a Reply
You must be logged in to post a comment.