அனுராதபுரம் தமிழர்களின் வரலாற்றுத் தாயகம்!
24 அக்டோபர், 2014
இலங்கைத் தீவின் புராதன நகரங்களில் ஒன்றான அனுராதபுரத்தை சிங்கள இனத்தவர்கள் தங்களது வரலாற்று நகரமாகவும் தங்களுக்கு மட்டுமே உரித்தான பௌத்த புண்ணிய பூமியாகவும் சொந்தம் கொண்டாடி வருகின்றனர்.
இதற்கு ஆதரமாக அங்குள்ள பௌத்த விகாரைகள் புனித வெள்ளரசு மரம் மற்றும் புராதன கட்டிடங்களை காட்டுகின்றனர். கிறீஸ்த்துவுக்கு முன்னர் 6ம் நூற்றாண்டில் கௌதம புத்தர் பிறப்பதற்கு முன்னர் உருவாகிய அனுராதபுர நகரத்தின் வரலாற்றை 1200 ஆண்டுகளுக்கு பின்னர் கிபி 6ம் நூற்றாண்டின் வாழ்ந்த (சிலர் அவர் கிபி4ம் நூற்றாண்டில் வாழந்ததாகவும் கூறுவர்) மகாநாபர் என்ற தேரவாத பிக்கு எழுதிய மாகாவம்சம் என்ற சார்புநிலை நூலை வைத்துக்கொண்டு அது தங்களுக்கு மட்டுமே உரித்தான வரலாற்றுத் தலைநகரம் என்று சிங்களம் பெருமை பேசிக்கொள்கிறது.
இலங்கை தமிழர்களின் வரலாற்றை இந்து சார்பு நிலையில் இருந்து நிறுவ முற்பட்ட பெரும்பாலான நமது தமிழ் வரலாற்றாசிரியர்களும் அது பௌத்த நகரமாக இருப்பதால் சிங்கள பௌத்த நகரம் என்று ஒத்தூதி மகாவம்சத்துக்கு விளக்கவுரையும் பொழிப்புரையும் எழுதிவிட்டனர்
மகாவம்சம் கிமு 505 நூற்றாண்டில் வட இந்தியாவிலிருந்து (இன்றைய ஒரிசா மாநிலம்) விஜயனும் அவனது 700 தோழர்களும் இலங்கைக்கு வந்ததில் இருந்து பௌத்த சிங்களவர்களுடடைய வரலாறு தொடங்குவதாக சொல்கிறது.
விஜயன் வந்ததாக சொல்லப்படும் காலத்தில் இருந்து 1100 வருடங்களுக்குப் பின்னர் அது பற்றி மாகாநாபர் வெறும் மரபுக்கதைகளையும் செவிவழிக் கதைகளையும் அடிப்படையாக வைத்து எழுதி வைத்துள்ள புனைவை உண்மையான வரலாறு என்று நிரூபிப்பதற்கு எந்தவித ஆதரமும் இல்லை.
அதேவேளை அந்தக்காலகட்டத்தில் 2500 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்தை 700க்கும் அதிகமானவர்கள் கடல்வழியாக கடப்பதென்பது சாதாரணவிடயமல்ல. கடற்போக்குவரத்தில் அனுபவம் உள்ளவர்களால் தான் அது முடியும்.அந்தக்கால கட்டத்தில் இந்திய பெரு நிலப்பரப்பில் இருந்த அரசுகளில் சோழர்களும் பாண்டியர்களும் மட்டுமே கடற்போக்குவரத்தில் அனுபவம் பெற்றவர்களாகவும் கடலில் ஆதிக்கம் செலுத்துபவர்களாகவும் இருந்தார்கள்.
ஓரிசாவிலிருந்து விஜயனும் அவனது தோழர்கள் 700 பேரும் உண்மையில் வங்கக் கடல் வழியாக இலங்கைக்கு பயணம் செய்திருந்தால் கூட அந்தக் கடலில் ஆதிக்கம் செலுத்திய சோழர்களின் கடற்படையின் கண்ணில் படாமல் இலங்கைக்கு சென்றிருக்க முடியாது. அந்தக்காலகட்டத்தில் காவிரிப்பூம் பட்டணம் மிகப் பெரிய கடல் வணிக நகரமாகவும் சோழர்களின் முக்கிய கடல் போக்குவரத்து மையமாகவும் திகழ்ந்தது.
எனவே விஜயன் இலங்கைக்கு வந்ததாக மகாநாபர் கூறியது தேரவாதப் பிரிவினரான தங்களை ஆரிய வம்சாவளியினர் என்று காட்டுவதற்கான முயற்சியாகும்.
இந்த இடத்திலே முக்கிய கவனிக்கப்பட வேண்டிய ஒரு விடயம் இந்த விஜயன் இலங்கைக்கு வந்ததாக சொல்லப்பட்ட காலத்திலும் சரி மகாவம்சம் எழுதப்பட்ட காலத்திலும் சரி இலங்கையிலும் இந்தியாவிலும் இருந்தது தேசிய இனச் சிந்தனைகொண்ட ஆட்சிமுறைகள் அல்ல! தமிழத்தை எடுத்துக் கொண்டால் சோழர் ஆட்சி; பாண்டியர் ஆட்சி சேரர் ஆட்சி என்றகின்ற ஆட்சி முறைகளே அங்கு இருந்தன. இந்த மூன்று அரசுகளுக்குள்ளும் மொழி பண்பாடு சமயம் என்பவற்றில் இன வழிச் சிந்தனைகள் இருந்தனவே அன்றி இனம் சார்ந்த ஐக்கியம் இருக்கவில்லை.
குறிப்பிட்டுச் சொன்னால் பண்டைய குல வழிச் சமூக ஆட்சிமுறையில் இருந்து முற்றிலும் விலகாத அதன் தொடர்ச்சியான ஆட்சிமுறைகளே இருந்தன.
அது போலவே இலங்கையிலும் மகாநாபர் காலத்தில் இதையொத்த அரசுகளே இருந்தன.சிங்கள இனம் ஒரு தனித்துவமான இனமாக தோன்றிவிட்டதாக சொல்ல முடியாது. மாகாநாபர் பாளி மொழியில் தான் செய்யுள் வடிவில் மகாவம்சத்தை ஏட்;டில் எழுதியுள்ளார்.அனுராதபுரத்தை ஆண்ட எல்லாளனையும் சேனன் குந்திகன் புலஹத்தன், பாகியன், பணயமாறன், பிலயமாறன் மற்றும் தத்திகன் ஆகியோரையும் அவர் அந்நிய ஆக்கிரமிப்பார்கள் என்று கூறுகின்றாரே தவிர தமிழர்கள் என்று குறிப்பிட வில்லை. பிற்காலத்தில மாகாவம்சத்தை மொழியாக்கம் செய்த பௌத்த சிங்கள இனவாதிகள்தான் அவர்களை தமிழர்களாகவும் எல்லாளன் துட்ட கைமுனு யுத்தத்தை தமிழ் சிங்கள யுத்தமாகவும் அடையாளப் படுத்தினார்கள்.
மகாவம்சத்தில் விஜயன் இலங்கைக்கு வந்த காலத்தில் இயக்கர் நாகர் என்ற இரண்டு பிரிவை சேர்ந்த மக்கள் அங்கு வாழ்ந்ததாகவும் அவர்களுக்கு அரசுகள் இருந்ததாகவும் இயக்கர் குல இளவரசியான குவேனியை விஜயன் மணம் புரிந்ததாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் இந்த இயக்கர்களும் நாகர்களும் நாரீகமற்றவர்களாக இருந்ததாகவும் மகாநாபர் கூறுகிறார். இதை திராவிடர்களை அரக்கர்கள் என்றும் தாசுக்கள் (இழிவானவர்கள்) ஆரியர்கள் சித்தரித்ததுடன் ஒப்பிட்டுப்பார்க்க வேண்டும்.
இலங்கையின் பூர்வீக குடிகளாக இயக்கர்களும் நாகர்களும் இருந்தார்கள் என்பதும் அவர்களுக்கான அரசுகளும் இருந்திருக்கின்றன என்பதும் இவர்கள் இருவரும் நாகர் குலம் இயக்கர் குலம் என்பதில் வேறுபட்டாலும் ஒரே இன-மொழிக்(தமிழ்) குழுமத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் உண்மையாகும்.
இது எறக்குறைய தமிழ் நாட்டில் சேர சோழ பாண்டிய அரசுகள் இருந்ததற்கு ஒப்பானது.
அனுராதபுரத்தின் வரலாறு பௌத்த மத்தத்தின் இலங்கை வருகையுடன் தான் முக்கியப்படுத்தப்படுகிறது.
பௌத்த மதத்தை இலங்கைக்கு கொண்டு வந்தவர் மெளிரியப் பேரரசர் அசோகனுடைய மகன் மகிந்தன் எனப்படும் மகிந்த தேரர் என மகாவம்சம் சொல்கிறது.
மகிந்தர் இலங்கைக்கு வந்த போது அனுராதபுர நகரத்தை ஆட்சி செய்தவன் தேவநம்பிய தீசன் (கிமு 247 – கிமு 207).
அவனுக்கு முன் பண்டுகாபன் (கிமு 437)
மூத்த சிவன் முதலான பல அரசர்கள் அந்த நகரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்திருக்கிறார்கள். அவர்கள் யாரும் பௌத்தர்கள் அல்ல.
மகாவம்சமும் அதற்கு முந்திய தீபவம்சமும் தரும் தகவலின்படி அவர்கள் மலையை வழிபடுவது கல்லை (சிவலிங்கம்) வழிபடுவது காட்டு மரங்களை வழிபடுவது வேள்வி நடத்துவது மிருங்களைப் பலியிடுவது என்று நாரிகமற்ற ஒழுங்கு படுத்தப்படாத வழிபாட்டு முறையை கடைப்பிடித்தார்கள்.
இது அந்தக் காலகட்டத்தில் ஒட்டுமொத்த தமிழகத்திலும் நிலவிய வழிபாட்டு முறையாகும். வைதீக மயப்படுத்தலுக்கு உள்ளாக சிவ (லிங்க) வழிபாடும் நடுகல் வழிபாடும் தமிழர்கள் சிறப்பாக நிலவிய வழிபாட்டு முறைகளாகும்.
அதே போல இறந்த உடல்களுக்கு சடங்குகளைச் செய்வது அவற்றை புதைத்துவிட்டு வணங்குவது முதலான மூடநம்பிக்கைகளைக் கொண்டிருந்தார்கள். இதுவும் அன்றைய காலகட்டத்தில் தமிழ் சமூகத்தில் நிலவிய சடங்கு முறையாகும். (உடலங்களை எரியூட்டுவதென்து ஆரியமயமாக்கலுக்கு பின்னர் வந்தது.)
மொத்தத்தில் இந்தக் குறிப்புகள் அனைத்தும் அந்தக் காலகட்டத்தில் இலங்கையில் இருந்த மக்கள் தமிழ் இன மொழிவழிக் குழுமத்தை சேர்ந்தவர்கள் என்பதையும் அந்த மக்களை ஆட்சி செய்த அரசர்களும் அதே குழுமத்தை சேர்ந்தவர்கள் என்பதை உறுதிப்படுத்துகின்றன.
மகிந்த தேரரும் அவரது சீடர்களும் இலங்கைக்கு வான் வழியாக பறந்து வந்ததாகவே தீப வம்சமும் மகாவம்சமும் கூறுகின்றன.
இது தமிழகத்தினுடாக பௌத்தம் தங்களுக்கு வரவில்லை, தாங்கள் நேரடியாக ஆரியத் தொடர்புடையவர்கள் என்பதற்காக புனையப்பட்ட ஒரு கூற்றாகும். உண்மையில் மகிந்த தேரர் தமிழ் நாட்டுக்கு வந்து அங்கு ஆட்சிசெய்த மன்னர்களின் ஆதரவைப் பெற்றுத்தான் இலங்கைக்குச் சென்றிருக்க முடியும்.
அந்தக்கால கட்டத்தில் ‘இறைமை என்பது கடவுளுக்குரியது. அரசு என்பது கடவுளினுடைய சொத்து. மன்னர் கடவுளின் பிரதிநிதியாக இருந்து ஆட்சி நடத்துபவர்’ என்ற வரையறையே அரசுக்கு கொடுக்கப்பட்டிருந்தது.
எனவே சர்வ வல்லமை படைத்த கடவுளையும் அவரது பிரதிநிதியான மன்னரையும் மறுதலிக்கும் மாற்றுச் சமயக் கொள்கை உடையவர்களும் அதைப் பரப்புபவர்களும் அவ்வளவு சுலபத்தில் ஒரு அரசின் ஆட்புல எல்லைக்கு ஊடாகப் பயணம் செய்திருக்க முடியாது.
தமிழகத்தில் இருந்த ஆட்சியாளர்கள் சோழர்களையே இலங்கையின் தோரவாத பௌத்த வரலாற்று ஆசிரியர்கள் ஆக்கிரமிப்பாளர்களாக சித்தரித்திருக்கிறார்கள். அதே நேரம் பாண்டிர்களும் சேரர்களும் இலங்கை அரசர்களுடன் மண உறவு வைத்துக் கொண்டதாகவும் நெருங்கிய நண்பர்களாக இருந்ததாகவும் அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
மகிந்த தேரர் காஞ்சிபுரம் வந்து தங்கியிருந்து பின் அங்கிருந்து பாண்டிய நாட்டுக்கு ஊடக நாகர்கோவில் கன்னியாகுமரி பகுதிக்கு வந்து அங்கிருந்தே இலங்கைக்கு சென்றதாக சில வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர். (இது பற்றி ஆராயப்பட வேண்டும்)
மகிந்த தேரரின் வருகையின் பின்னர் தேவநம்பிய தீசன் பௌத்த மதத்தை தழுவியதாகவும் மாகாபோதி விகாரையும் மகாசங்கமும் அமைக்கப் பட்டதாகவும் கூறப்படுகிறது.
இலங்கையின் வரலாற்றில் இது ஒரு முக்கிய நிகழ்வு என்பதில் சந்தேகம் இல்லை.எனெனில் இலங்கையில் அது வரை சைவ கடவுளின் சொத்தாக இருந்த அரசும் இறைமையும் மகா சங்கத்தின் ஆன்மீக சொத்தாக மாற்றமடைகிறது. மன்னர்கள் மகா சங்கத்தின் பிரதிநிதிகளாக இருந்தே ஆட்சி செய்ய வேண்டிய நிலை தோன்றுகிறது.
இந்த இடத்திலே முக்கியமாக குறிப்பிட வேண்டிய விடயம் கௌதம புத்தர் ஒரு போதும் தன்னை கடவுளாக சித்தரித்ததில்லை. அது போல கடவுளைப் பற்றியும் அவர் போதிக்கவில்லை. அவர் மக்களைத் துன்பங்களில் இருந்து விடுவிப்பதற்கான அவர்கள் நற்கதியடைவதற்கான ஒரு வழிகாட்டியாகவே இருந்தார்.அதற்கான வழிமுறைகள் பற்றியே அவர் போதித்தார்.
அவர் எதையும் எழுத்தில் எழுதி வைக்கவில்லை. ஆனால் அவரது மரணத்துக்கு பின் அவரது சீடர்களே பௌத்த சங்கத்தை உருவாக்கி அவற்றை தத்துவமாக மாற்றினர்.
புத்தரின் கோட்பாட்டுகளாக மூன்று புகலிடங்கள் மற்றும் ஐந்து நல்லொழுக்கம் பரிந்துரைக்கப்படுகின்றன. புத்தம் (புத்தரின் போதனைகள்), சங்கம் (பௌத்த சங்கம்), தர்மம் என்பனவே மூன்று புகலிடங்கள் எனப்படுகின்றன. ஐந்து நல்லொழுக்கங்கள் என்பன எந்த ஒரு உயிரையும் கொல்லுதலைத் தவிர்த்தல், கொடுக்காத எப்பொருளையும் எடுப்பதைத் தவிர்த்தல்.
தவறான பாலியல் உறவுகள் கொள்ளாது இருத்தல் தவறான பேச்சு உரைக்காமல் இருத்தல்; (பொய் சொல்வதும், வதந்தி கிளப்புவதும், கடுமையாகப் பேசுவதும், வம்பளப்பதும் தவிர்த்தல்)
போதையளிக்கும் எப்பொருளையும் உட்கொள்ளுதலைத் தவிர்த்தல் ஆகியவையாகும் கௌதம புத்தர் அரசுரிமையை துறந்து ஆசையே துன்பத்துக்கு காரணம் என்று கூறி துறவற வாழ்க்கை வாழ்ந்து மறைந்தார்.
ஆனால் அவருடைய கோட்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட சங்கம் அரசுகளை தங்களது செல்வாக்குக்கு உட்படுத்தி அவற்றை சார்ந்து இயங்கியது ஒரு முரண்நிலையாகும்.
தேவநம்பிய தீசனுக்குப் பின் எல்லாளன் ஆட்சிக்கு வரும் வரை
உத்தியன் (கிமு 267) மகாசிவன் (கிமு 257) சூரதீசன் (கிமு 247) சேனனும், குத்திகனும் (கிமு 237) அசேலன் (கிமு 215) ஆகிய பல மன்னர்கள் ஆட்சி நடத்தியிருக்கிறார்கள். இந்தக் காலகட்டத்தில் அனுராதபுரத்தில் இருந்த மகாவிகாரை செல்வாக்குப் பெற்ற ஒரு வழிபாட்டுத் தலமாகவும் அங்கிருந்த மகா சங்கம் அதிகாரம் பெற்ற அமைப்பாகவும் மாற்றமடைந்திருந்தது.
பௌத்தர்களுக்கும் சைவ சமயத்தவர்களுக்கும் அல்லது பௌத்தத்துக்கும் அதைக் கடைப்பிடிக்காதவர்களுக்கும் இடையிலான முரண்பாடு கூர்மையடைந்திருக்கிறது.அது தொடர்பிலான மோதல்களும் இடம்பெற்றிருக்கின்றது.மகாபோதி விகாரையில் இருந்த புத்த பிக்குகள் பௌத்தம் தொடர்பான தகவல்களை மட்டும் அட்டகத்தா என்ற பெயரில் பாளி மொழியில் செய்யுள் வடிவத்தில் எழுதி வைத்திருந்தனர்.பௌத்தம் அல்லாத ஏனைய வரலாற்றை அவர்கள் குறிப்பிடவில்லை.
எல்லாளனின் வருகையும் அவனது ஆட்சிமுறையும் மகா சங்கத்தினருக்கும் அவர்களைச் சேர்ந்த பிரிவினருக்கும் அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது. அவனது நீதி தவறாத ஆட்சிமுறை பௌத்தத்துக்கு அவன் கொடுத்த மரியாதை அனைத்து மதங்களையும் சமமாகப் பாவித்த முறை என்று அவனுக்கு மகாவம்சம் பாராட்டு வழங்குவதிலிருந்து அவன் மக்களின் செல்வாக்கைப் பெற்ற ஒரு மன்னனாக இருந்தான் என்பதை அறிய முடிகிறது.
அவனைப்பற்றி குறை கூறுவதை மக்கள் எற்றுக்கொள்ளமாட்டார்கள் என்பதை உணர்ந்த மகா சங்கத்தினர் அவனை அந்நிய ஆக்கிரமிப்பாளனாக காட்ட முற்பட்டனர் (எல்லாளன் சோழநாட்டில் இருந்து வந்தவன் என்றும் சைவ சமயத்தை கடைப்பிடித்தவன் என்று சிலரும் சமண சமயத்தை கடைப்பிடித்தவன் என்று சிலரும் கூறுகின்றனர்). எல்லாளனின் வருகையோடு ருகுணைப் பகுதிக்கு இடம்பெயர்ந்த பௌத்த அதிகார மையத்தின் (அரசு) பிரதிநிதியாக துட்ட கைமுனு இருந்தான். அந்திய ஆக்கிரமிப்பாளர்களை அகற்றி பௌத்தத்தை காப்பது அவனது கடமை என்று போதிக்கப்பட்டது.
எல்லாளனை வெற்றி கொண்டு அனுராதபுரத்தில் பௌத்த மேலாண்மையை நிலை நாட்டுவதற்காக துட்ட கைமுனு திஸ்சமாறகமவில் இருந்து படை திரட்டிக்கொண்டு புறப்பட்ட போது அவன் 32 க்கும் மேற்பட்ட சிற்றரசர்களை வெற்றி கொண்ட பின்னரே அனுராதபுரத்தை அடைய முடிந்ததாக மகாவம்சம் கூறுகிறது. இவர்கள் அனைவரும் பௌத்த மதத்தின் எதிரிகள் என்றும் எல்லாளனின் நண்பர்கள் என்றும் கூறப்படுகிறது.
கிமு 161 இல் துட்ட கைமுனுவுக்கும் எல்லளனுக்கும் இடையில் நடந்த போர் தமிழ் – சிங்களப் போர் என்றும் அதில் கிடைத்த வெற்றி சிங்களவர்களுக்கு கிடைத்த வெற்றி என்றும் சிங்கள இனவாத வரலாற்றாசிரியர்கள் இப்போது கூறுகின்றனர். ஆனால் மகாவம்ச மூல நூலில் துட்ட கைமுனு பௌத்த மன்னனாகவும் அந்த மதத்தின் காவலனாகவும் சித்தரிக்கப் படுகிறானேயன்றி எந்த இடத்திலும் அவன் ஒரு சிங்கள இனத்தவன் என்றோ குறிப்பிடப்படவில்லை. (அவன் காலத்தில் சிங்கள இனம் தோற்றம் பெறவில்லை. துட்டகைமுனு தந்தை வழியிலும் தாய் வழியிலும் நாக வம்சத்தை சேர்ந்த இளவரசனாவான்)
உண்மையில் எல்லாளனுக்கும் துட்ட கைமுனுவுக்கும் நடந்த யுத்தம் பௌத்தத்துக்கும் அதன் எதிர்ப்பாளர்களுக்கும் இடையில் நடந்த யுத்தமேயன்றி சிங்கள தமிழ் யுத்தமல்ல.
துட்ட கைமுனு அடைந்த வெற்றியைக் குறித்து மகாவம்வம்சத்தின் 25வது அத்தியாயத்திலே ஒரு குறிப்புள்ளது. அதிலே மகாசங்க பிக்குகளைப் பார்த்து துட்ட கைமுனு ‘மரியாதைக்குரியவர்களே! பல லட்சக்கணக்கான மக்கள் உயிர்கள் இழக்க காரணமாயிருந்த எனக்கு எவ்வாறு ஆறுதல் கிடைக்கும்?’ என்று கேட்கிறான்.
அதற்கு அவர்கள் ‘நீ சொர்க்கம் செல்ல இந்த ஒரு செயல் தடையாக இருக்காது. உன்னால் ஒன்றரை மனிதரே உயிரிழந்தனர். பௌத்த சமயத்தில் நம்பிக்கை இல்லாதவர்களும் தீயவர்களுமான ‘மற்றவர்கள்’ மிருகங்களைபோல கருதப்படவேண்டும் என்று பதில் சொல்வதாக கூறப்படுகிறது. இது இந்த யுத்தம் இனங்களுக்கு இடையில் நடந்த யுத்தம் அல்ல, இரண்டு மதங்களுக்கு இடையில் நடந்த யுத்தம் என்பதற்கு சிறந்த ஆதாரமாகும்.
இதிலே இன்னொரு ஆச்சரியப்படத் தக்க தகவல் என்ன வென்றால் எல்லாளனை வெற்றி கொள்வதற்கு கதிர்காம முருகனுக்கு துட்டகைமுனு நேர்த்தி வைத்தாகவும், இந்தப் போரில் வெற்றி பெற்றால் கோவில் கட்டுவதாக அவன் வேண்டிக் கொண்டதாகவும் அதன்படி கதிர்காமம் கோவிலைக்கட்டியதாகவும் கதிர்காம வரலாறு என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. (இது எந்தளவு உண்மை என்று தெரியாது.ஆனால் பதியப்பட வேண்டிய குறிப்பு)
மகாவம்ச குறிப்புகளில் இருந்தும் இலங்கையின் தென்பகுதியின் பல்வேறு பகுதிகளில் புதைபொருள் ஆராட்சியின் போது கிடைக்கப்பெற்ற இருந்தும் இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் கிமு 1000 வருடத்திற்கு முற்பட்ட காலத்தில் இருந்தே ஒரே இன மொழி பண்பாட்டை சேர்ந்த மக்களே வாழ்ந்திருக்கிறார்கள் என்ற கருத்து வலுப்பெற்றிருக்கிறது. (இது தொடர்பாக இன்னும் ஆய்வுகள் செய்யப்படவேண்டும்)
துட்டகைமுனுவின் ஆட்சிக்குப் பின்னர் அனுராதபுரம் முழுக்க முழுக்க பௌத்த தலைநகரமாக (சிங்கள தலைநகரமாக அல்ல) மாறியது. மகாபோதி விகாரையும் மகா சங்கமும் முன்னரைவிட வலிமை மிக்க அமைப்புக்களாக மாற்றம் பெறுகின்றன.
அதேவேளை இந்தக் காலகட்டத்தில் தமிழகத்திலும் பௌத்தம் காலூன்ற ஆரம்பிக்கிறது. காஞ்சிபுரம் முக்கியமான பௌத்த மையமாக மாறுகிறது.
கிறீஸ்த்துவுக்கு முன் முதலாம் நூற்றாண்டில் அனுராதபுரத்தில் மகாபோதி விகாரைக்கு இணையாக அபயகிரி விகாரை கட்டப்படுகிறது.(இந்த விகாரை அங்கிருந்த ஒரு புராதன சிவன் கோவிலை இடித்துவிட்டு கட்டியதாகவும் சிலர் கூறுகின்றார்கள்.)இந்த இரண்டு விகாரைகளுக்கும் தமிழகத்தில் இருந்தும் பௌத்த துறவிகள் வந்து தங்கியிருந்து மதப்பணியாற்றி இருக்கிறார்கள்.இந்தக் காலகட்டத்தில் அனுராதபுரத்துக்கு வடக்கிலும் தெற்கிலும் கிழக்கிலும் கூட பௌத்தர் அல்லாத அரசுகள் இருந்திருக்கின்றன.பௌத்தர்களுக்கும் பௌத்தர்கள் அல்லாதவர்களுக்கும் இடையிலான மோதல்களும் தொடர்ச்சியாக நடந்திருக்கின்றன.
இதேவேளை கிறீஸ்த்து பிறப்பதற்கு சமமான காலகட்டத்தில் இந்தியாவில் பௌத்த சங்கம் பிளபட்டு .மகாயான பௌத்தம் என்ற ஒரு புதிய பிரிவு தோற்றம் பெறுகிறது.இந்தப் புதிய பிரிவு தமிழ் நாட்டில் இருந்தே தோற்றம் பெற்றதாக பல்வேறு வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்.
மகாயான பௌத்தம் பாரம்பரிய தேரவாத பௌத்தத்தில் இருந்து பல விடயங்களில் வேறுபடுகின்றது. மகாயான பௌத்தத்தில் புத்தர் அழியாதவர், மாறாத்தன்மையுடையவர், எண்ணங்களுக்கு அப்பாற்பட்டவர், மேலும் எங்கும் நிறைந்திருப்பவர். மகாயான பௌத்தத்தில் போதிசத்துவர்கள் என்றழைக்கப்படும் பல தெய்வீக-குணங்களை கொண்டவர்கள் வணங்கப்படுகிறார்கள்.
எல்லா உயிர்களும் மோட்சமடைய வாய்ப்புள்ளவர்கள் என்பதே மகாயான பௌத்தத்தின் அடிப்படைத் தத்துவமாகும். மேலும் பல புத்தர்கள் மற்றும் போதிசத்துவர்களின் வழிபாடும், புத்தரின் அழியாத்தன்மையும் அதன் அடிப்படை தத்துவத்தினுள் அடங்கும்;. இதனால் சாதாரண மக்களை மகாயான பௌத்தம் வெகுவாகக் கவர்ந்தது.
காஞ்சிபுரத்துக்கு அடுத்தபடியாக காவிரிப்பூம் பட்டணம் நாகபட்டணம் தஞ்சாவூர் உட்பட சோழர்களின் ஆட்சிப் பிரதேசத்திலே தான் இந்த மாகாயான பௌத்தம் செல்வாக்குடன் திகழ்ந்தது. சங்ககாலத்துக்கு அடுத்தபடியாக வந்த களப்பிலர் காலத்திலே தான் சமணமும் பௌத்தமும் தமிழகத்தில் ஆளமாக வேரூன்றியது என்றும் இந்தக்களப்பிரர்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்று சிலரும் ‘இல்லை அவர்கள் சேர சோழ பாண்டிய அரச மரபுகளைச் சாராத மற்றொரு தமிழ் நிலப்பிரபுத்துவக் குழுவினர்’ என்று சிலரும் கூறுகின்றனர். (இதுவும் நீண்ட ஆய்வுக்குரிய ஒரு விடயமாகும்)
பௌத்தத்தில் ஏற்பட்ட தேரவாத மகாயான பிளவு என்பது இலங்கையிலும் எதிரொலித்தது. அபயகிரி விகாரை மகாயான பௌத்த விகாரையாகவும் மாகாபோதி விகாரை தேரவாத பௌத்த விகாரையாகவும் மாற்ற மடைகிறது. மாகாயான பௌத்தம் அனுராதபுரத்தை மையங்கொண்டு இலங்கையின் வடபகுதியிலும் தேரவாத பௌத்தம் தெற்கிலும் செல்வாக்கு செலுத்த ஆரம்பிக்கின்றன.
வடக்கில் கதிரமலை என்ற மகாயன பௌத்த தலைநகரம் உருவாகிறது.
கி.பி 171 முதல கி.பி 193வரை அனுராதபுரத்தில் இருந்து ஆட்சி புரிந்த கஜபாகு மன்னால் பத்தினத் தொய்வவழிபாடு (கண்ணகிவழிபாடு) இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதென இராஜவாளி என்ற சிங்கள நூல் கூறுகிறது. கஜபாகு ஆட்சி காலத்தில் சேரமன்னன் செங்குட்டுவன் தனது தலைநகராகிய வஞ்சியில் இமயமலையில் இருந்து கொண்டுவந்த கல்லில் கண்ணகிக்கு சிலை செய்து கோயில் அமைத்து பெருவிழா எடுத்ததாகவும் . கிபி 178ல் நடந்த அந்தவிழாவிற்கு செங்குட்டுவனின் அழைப்பையேற்று அவன் நண்பனாகிய கஜபாகு விழாவில் கலந்து கொண்டதாகவும் அந்த நூல் கூறுகிறது. இதிலிருந்து கஜபாகு மகயான பௌத்த பரிவைச் சோந்தவன் என்பது உறுதியாகிறது.அக்கால தேரவாத பௌத்தத்தில் இப்போதுள்ளது போல் பிறதெய்வ வழிபாடுகள் இருக்கவில்லை. தமிழர் மதத்தின் (ஆதி சைவம்) சில கூறுகளை உள்வாங்கியிருந்த மகாயான பௌத்தம் இதை அனுமதித்திருந்தது.
கி.பி 302 முதல் 315 வரையில் அனுராதபுரத்தை ஆண்ட கோதாபயன் என்ற, அரசன் மகாபோதி விகாரைக்கு(தேரவாதம்) ஆதரவாக அபயகிரி விகாரையில் இருந்த அறுபது பிக்குகள் மீது சமய நிந்தனைக் குற்றம் சாட்டி தமிழ்நாட்டுக்கு , நாடு கடத்திவிட்டான். அந்தக் காலகட்டத்தில் தமிழகத்தில் மகாயானபௌத்த சங்கத்தின் தலைமை பிக்குவாக இருந்த சங்கமித்திரர் இதையறிந்து அனுராதபுரத்துக்குச் சென்று அரசனின் தவறை உணர்த்தி மிண்டும் மகாயானபௌத்தத்தை அங்கு நிலைநாட்டுவதற்காக தனது சீடர்களோடு பறப்பட்டார்.
இதையறிந்த மகாபோதிவிகாரையை சேர்ந்த தேரவாத பிக்குகள் அரசனிடத்தில் முறையிட்டார்கள். அரசன் சங்கமித்திரரை அழைத்து விசாரித்த போது அவர் மகாயானபௌத்தத்தின் சிறப்புக்களை எடுத்துக் கூறி தேரவாத பௌத்த பிக்குகள் தன்னுடன் விவாதம் செய்த ஏற்பாடு செய்யும் படியும் இந்த விவாதத்தில் தான் வெற்றியடைந்தால் மகாயானபௌத்தத்தை பரப்பவும் அபியகிரி விகாரை முன்பு போல இயங்கவும் அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இதற்கிணங்க கோத்தபாயனின் அரசவையில் சங்கமித்திரருக்கும் தேரவாத பௌத்த தலைவரான சங்கபாலன் என்பவருக்கும் வாதப்போர் நிகழ்ந்தது. இந்த வாதத்தில் சங்கமித்திரரே வெற்றி பெற்றார். கோத்தபாயன் சங்கமித்திரரின் ஆழ்ந்த கல்வியறிவைப் பாராட்டி அவரை ஆதரித்ததுடன் தமது பிள்ளைகளான சேட்டதிஸ்ஸன், மகாசேனன் ஆகிய இருவருக்கும் கல்வி கற்பிக்க ஆசிரியராக நியமித்தான்.
முத்தவனான சேட்ட திஸ்ஸன் தேவரவாத பிக்குகளின் நட்பை பெற்றிருந்ததால் சங்கமித்திரரிடம் பகைமை பாராட்டி வந்தான். இளையவனான மகாசேனன் அவரிடம் அதிக அன்பு கொண்டிருந்தான்
கிபி 323 ல் கோத்தபாயன் காலமாக அரசுரிமையை மூத்த மகனான ஜேட்டதிஸ்ஸன் ஏற்றுக்கொண்டான். எற்கனவே சங்கமித்திரரிடம் பகைமை பாராட்டிய அவன் ஆட்சிக்கு வந்தததம் அவருக்கு ஆதவாக இருந்த மந்திரிகளில் சிலரைக் கொலைசெய்துவிட்டான். இதைக் கண்ட சங்கமித்திரர் அவன் தம்மையும் கொன்று விடுவான் என்று அஞ்சிச் சோழ நாட்டிற்கு திரும்பிச்சென்றுவிட்டார்.
பத்து ஆண்டுகளின் பின்னர் கிபி333ல் சேட்டதிஸ்ஸன் இறந்துவிட அனுராதபுரத்தின் அரசுரிமை சங்கமித்திரரின் அன்புக்குரிய மாணவனான மகாசேனனிடம்(கி.பி. 334-361) வந்தது.
இச்செய்தி அறிந்த சங்கமித்திரர் அங்குசென்று, தம் மாணவனாகிய அரசனுக்குத் தமது கையினாலேயெ முடிசூட்டினார். அன்று முதல் அங்கு தங்கி இருந்து மகாயான பௌத்த நெறியை பரப்பி வந்தார். இந்தக்காலகட்டத்தில் மகாபோதிவிகாரையில் இருந்த தேரவாத பிக்குகள் உண்மையான பௌத்த மதத்தைப் போதிக்க வில்லை என்று அரசனுக்கு முறைப்பாடுகள் வந்ததால் அந்தவிகாரையில் வாழும் பிக்குகளுக்கு நகரமக்கள் உணவு கொடுக்கக்கூடாதென்றும், மீறிக் கொடுப்பவர்களுக்கு நூறு பொன் அபராதம் விதிக்கப்படும் என்றும் அவன் கட்டளையிட்டான். இதன் காரணமாக அங்கிருந்த தேரவாத பிரிவு பிக்குகள் உண்ண உணவு கிடைக்கப் பெறாமல் தென்பகுதியில் இருந்த றுகுணு பிரதேசத்தக்கு போய்விட்டார்கள.
அங்கிருந்த தேரவாத பிரிவு பிக்குகள் உண்ண உணவு கிடைக்கப் பெறாமல் தென்பகுதியில் இருந்த றுகுணு பிரதேசத்தக்கு போய்விட்டார்கள்.
கைவிப்பட்ட நிலையில் இருந்த மகாபோதி விகாரையை மகாசேனன் சங்கமித்திரரிடம் ஒப்படைத்துவிட்டான்.
அவர் அந்த விகாரையை இடித்து, அந்தப்பொருள்களைக் கொண்டு தமது அபயகிரி விகாரையைக் புதுப்பித்துப் பெரியதாகக் கட்டினார். இந்த நடவடிக்கைக்கு சோணன் என்னும் மந்திரியும் துணையாயிருந்தான். இவற்றை யெல்லாம் அறிந்த அரசனுடைய மனைவியர்களுள் ஒருத்தி( தேரவாத பிரிவை சோந்தவள்;), அபயகிரி விகாரையிலிருந்த பிக்குக்களைத் துரத்திவிட்டு, அந்த விகாரையையும் இடித்தொழித்து சங்கமித்திரரையும் அவருக்குத் துணையாயிருந்த சோணனையும் கொன்றுவிடும்படிச் சிலரை ஏவியதாகவும் அவர்கள் மந்திரியையும் சங்கமித்திரரையும் கொலைசெய்துவிட்டார்கள் என்றும் மகாவம்சத்தின் 36,37 ஆம் அதிகாரங்களில் சொல்லப்பட்டிருக்கின்றன.
(ஆனால் வேறு சில தகவல்கள் சங்க மித்திரர் இந்த கொலை முயற்சியில் இருந்து தப்பி தமிழகம் சென்றுவிட்டதாக தெரிவிக்கின்றன.)
மகாசேனின் ஆட்சிப் பகுதியின் இறுதிக்காலத்தில் மகாபோதி விகாரை மீண்டும் கட்டப்பட்டதையும் மகாவம்சத்தை தொகுத்த மகாநாபர் அந்த விகாரையில் இருந்தே அதை தொகுத்ததையும் அறிய முடிகிறது.
பௌத்தம் இலங்கைக்கு வந்ததாக கூறப்பட்ட காலத்தில் இருந்து மகாநாபர் மாகாவம்சத்தை தொகுத்தாக கூறப்படும் காலம் வரை சிங்கள மொழி சிங்கள இனம் என்ற குறிப்புகள் எங்கும் இடம்பெறவில்லை. பௌத்தர்கள் – பௌத்தத்தின் எதிரிகளான அந்நிய ஆக்கிரமிப்பாளர்கள் என்ற குறிப்புகள் தான் எங்கும் விரவிக் கிடக்கின்றன.
கல்வெட்டுகள் இலக்கியங்கள் சமயக் குறிப்புகளின் கூட தேர வாதப்பிரிவினர் பாளி மொழியிலும் மகாயான பிரிவினர் சமஸ்கிரதத்திலும் எழுதியுள்ளனர். கிபி 4 ம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் கல்வெட்டொன்று அபயகிரி விகாரையிலுள்ளது.
இந்தியாவில் பௌத்த மதம் தோன்றியதில் இருந்து மகாவம்சம் எழுதப்படும் காலம்வரை சீனாவில் பௌத்த மதத்தை பரப்பிய போதி தர்மர் பௌத்த தத்துவமான திரிபீடகத்துக்கு விளக்கவுரை எழுதிய ஆச்சாரிய தர்மபாலர் உட்பட 23 க்கும் மேற்பட்ட பௌத்த பேரறிஞர்கள் தமிழகத்தில் இருந்திருக்கிறார்கள்.
இலங்கையில் இருந்த தேரவாத மாகாயான பௌத்த முரண்பாடுகளும் பௌத்தர்களும் பௌத்தர் அல்லாதோருக்கும் இடையிலான முரண்பாடும் தமிழகத்தை மையம் கொண்டுதான் இயங்கியிருக்கின்றன.
இலங்கையில் கிபி 4 ஆம் நூற்றாண்டில் கூர்மையடைந்த மகாயான தேரவாத முரண்பாடு கிபி 6ம் 7ஆ ம் நூற்றாண்டுகளில் தமிழகத்தில் பௌத்தம் வைதீக இந்து மதத்துக்குள் ஐக்கியப்பட்டுப் போய்விட கௌதம புத்தர் மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றாக கொள்ளப்பட இந்து எதிர் தேரவாத பௌத்த முரண்பாடாக கூர்மையடைகிறது.
இதனூடாக ‘தமிழக எதிர்ப்பு தமிழ் எதிர்ப்பு’ என்ற அடிப்படையில் சிங்கள இனத்துவத்துக்கான தொடக்கப்புள்ளி இடப்படுகிறது.
கிபி 7ம் நூற்றாண்டுக்குப் பின் வலுவிழந்து போன அனுராதபுரம் கிபி 10 ம் நூற்றாண்டில் இராஜ இராஜ சோழனின் ஆட்சிக்காலத்தில் அவனது படையினரால் முற்றாக அழிக்கபட்டு பெலநறுவை (சனநாத மங்களம்)க்கு அதிகார மையம் மாற்றப்பட்ட பின்பு தான் சிங்கள இனத்துவம் முழுவடிவம் பெறவதை பார்க்க முடிகிறது.
இந்தக் கால கட்டத்திலும் சிங்கள இன அடையாளத்துடன் ஆட்சிக்குவந்த
பிற்கால அரசர்கள் பாண்டியர்களுடனும் சேர நாட்டு சிற்றரசர்களுடனும் ; நெருங்கிய உறவுகளைப் பேணியிருக்கிறார்கள். சோழர்கள் மட்டுமே அவர்களுக்கு எதிரிகளாக இருந்திருக்கிறார்கள். உண்மையில் சோழர்கள் மட்டும் தான் இலங்கை மீது படையெடுத்தார்களா? சேர பாண்டியர்கள் இலங்கையின் மீது செயல்வாக்கு செலுத்த முயலவில்லையா? அப்படி முயல வில்லை என்றால் அதற்கு என்ன காரணம்? மாறக முயன்றிருந்தால் அவர்களை சிங்கள வரலாற்றாசிரியர்கள் ஆக்கிரமிப்பாளர்களாக காட்ட முயலாது ஏன் என்ற கேள்விகளுக்கு விடை காணப்பட வேண்டும்.
இன்றைக்கு அரசமரம் இருக்கும் இடம் எல்லாம் தங்களுடைய புனித பூமி என்றும் இலங்கைத் தீவும் சிங்கள இனமும் தேரவாத பௌத்த நெறியை காப்பாற்றுவதற்காக கௌதபுத்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவை என்றும் கூறிக்கொண்டிருக்கின்ற பௌத்த சிங்கள பேரினவாத பொய்களை கட்டுடைப்பதற்கு தமிழர்களாகிய நாம் 13 ம் நூற்றாண்டில் ஆரிய சக்கரவாத்திகளால் யாழ்ப்பாணத்தில் உருவாக்கப்பட்ட யாழ்ப்பாண இராட்சியம் பற்றிய ஆய்வுடன் திருப்திகொள்ளும் மனோபாவத்தை மூட்டைகட்டி வைத்துவிட்டு அநுராதபுரத்தில் இருந்தும் எமது வரலாற்றை தேட முற்பட வேண்டும். ஏனென்றால் அங்கு மதங்களுக்கு இடையில் தான் சண்டை நடந்திறது; இனங்களுக்கிடையில் அல்ல. அங்கு வாழந்த மக்கள் தமிழர்கள் தான்.அவர்கள் பேசிய மொழி தமிழ் தான்.பௌத்தர்கள் என்பதால் மட்டும் அவர்கள் சிங்களவர்கள் ஆகிவிடமாட்டார்கள். இது பற்றி நீண்ட விரிவான ஆய்வுகள் செய்யப்பட வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயமாகும்..
யாழறிவன்… Yalarivan Jackson Jackie
இடுகையிட்டது யாழறிவன் Yalarivan
Leave a Reply
You must be logged in to post a comment.